
காதல் -42
பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் இந்த கண்களுக்கு முத்தத்தை தவிர்த்து என்ன பரிசு கொடுக்க முடியும்… கொடுத்து விட்டான் அமைதியாக, அழுத்தமாக, மென்மையாக, வன்மையாக என அனைத்தையும் ஒன்று திரட்டி அவளது கண்களில் தன் முதல் முத்திரையை பதித்தான் மறவன்..
சிறகே இல்லாமல் பறந்தது சாயாவின் மனம்… முதல் முறையாக அவன் கொடுத்த முத்தத்தில் ஆழ்ந்து போய் அதனை உள்வாங்கி கொண்டிருக்கிறாள்.
இரு கால்களும் கீழ் இல்லை.. அவன் வசதிக்கு இவள் கால்கள் எவ்வி ஒத்துழைப்பு கொடுக்க.. அனைத்தையும் கண்டும் காணாதது போல அவனது வேலையை செவ்வென செய்தான் மறவன்.
” முதல் முறையா உன்ன பார்க்கும் போது இந்த கண்ணுல தான் எத்தனை படபடப்பு சாயா… உனக்கு பிடிச்ச பொருளை நான் மலை உச்சியில இருந்து கீழே போட போறேன்னு தெரிஞ்சு.. என்ன ஒரு பார்வை பார்த்த பாரு.. இப்பவும் என்னால மறக்கவே முடியாது… ஒரு பக்கம் என்னோட தீவிர ரசிகையா பார்த்தேன்… இன்னொரு பக்கம் உன்னோட அந்த கோபம் ,வீம்பு மொத்தத்தையும் யாருனு தெரியாத என் மேல காட்டுன ” என இரு கைகளையும் அவளது கன்னங்களில் அழுத்தி பிடித்து அவளது முகத்தை பார்த்து கொண்டே பேச… கண் சிமிட்ட வில்லை மாது.
” ஏன் எதுவுமே பேச மாட்டிற சாயா…” என அவளது மௌனத்தை கலைக்க பார்க்க… அவளோ சிறிதும் விழியை அகற்றாமல் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆழ்ந்து பார்த்து கொண்டிருக்கும் தன் மனைவியை அதற்க்கு மேல் சும்மா பார்த்துக் கொண்டிருக்க அவன் என்ன மடையனா.. கண்களில் பதித்த உதட்டை அடுத்த அத்தியாயம் கொண்டு சென்றான்
மூச்சு காற்று அவள் மேல் உறவாடும் வண்ணம்… கோபம் வந்தால் சிவந்து நிற்கும் அவளது சின்ன மூக்கில் தனது அடுத்த அச்சாரத்தை இட… அதுவரை திறந்திருந்த இமைகள் தானாக மூடிக் கொண்டது… இமை மூடி அவன் கொடுத்த முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள் சாயா.
கொஞ்சமும் அவளிடம் விலகல் இல்ல.. மறுப்பு இல்ல.. முக சுழிப்பு இல்ல.. இது மறவனுக்கே ஆச்சரியம் தான்.. இத்தனை தூரம் அமைதியாக நின்று ஒத்துழைப்பு கொடுப்பது தன் மனைவி சாயா தானா என்று..
மூக்கில் பதித்த இதழ்கள்… அதன் துணை சேர துடிக்க.. கண் மூடி நிற்கும் மனைவியை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவன்… மெதுவாக அவனது இதழை கொண்டு அவளது சிவந்த இதழை உரசி பார்க்க… ஜிவ்வென்று இருந்தது இருவருக்கும்…
அதுவரை கீழே இருந்த சாயாவின் கைகள் மேல் எழும்பி மறவனது முதுகை இறுக்க கட்டிக் கொண்டது. அதில் இன்னும் தைரியம் வந்தவனாக உரசி பார்த்த இதழ்களில் உறவாட விரும்பி.. மென்மையாக அதே சமயம் மிகவும் ரசனையான அவளது கீழ் உதட்டை மட்டும் முதலில் மையம் கொண்டவன்… கொஞ்சம் கொஞ்சமாக மேல் உதட்டிற்கு தன் உதடுகளை தாரை வார்க்க.. சாயாலியின் மொத்த இதழ்களும் அவனுள் அடங்கி போனது… இதழ்கள் மட்டுமா பெண்ணவளும் மொத்தமாக அவனுள் அடங்கித் தான் போனாள் ..
எவ்வளவு நேரம் நீண்டதோ… இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்த வண்ணம் இதழ் முத்தத்தில் மூழ்கி இருக்க.. கதவு தட்டும் சத்தத்தில் முதலில் தன்னிலை அடைந்தது சாயா தான்…
மறவனோடு இவ்வளவு தூரம் தான் ஒன்றி இருப்பதை பார்த்து கண்களை அகல விரித்தவள்.. அவனது பிடியில் இருந்து விலக பார்க்க.. மறவனது பிடி கிடுக்கு பிடியாக இருந்தது..
விலகி விலகி பார்த்தவள் ஒரு கட்டத்தில் முடியாமல் அவனது இடுப்பில் கிள்ளி வைக்க… துள்ளி குதித்து அவளிடம் இருந்து விலகினான் மறவன். ஏதோ தன் சொத்ததையே எழுதி வாங்கியதை போல அவன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே….
அவனது முக பாவனையில் சிரிப்பு வந்தாலும்… ” கதவு தட்டுறாங்க மறவன் ” என அவன் முகம் பார்க்காமல் கூறினாள் சாயா.
இத்தனை நேரம் நடந்த முத்த போரில் அவளது இதழ் செக்க சிவந்து காணப்பட… ” நீ போய் முகத்த கழுவிட்டு வா சாயா.. நான் யாருன்னு பார்க்குறேன் ” என கூற அமைதியாக குளியலறைக்குள் நுழைந்தாள் சாயா.
தன்னையும் ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டவன் , அதன் பின்பே சென்று கதவை திறந்தான்…
” எவ்வளவு நேரம் டா கதவை தட்டுறது.. உன்ன பார்க்க யாரோ வந்திருக்காங்க வெளிய வா ” என சிந்தாமணி கடிய…
” அது… மா… சாயா இங்க தான் இருக்கா” என குரல் மெலிய கூற… அதில் மகிழ்ந்த சிந்தாமணி.. ” சரி நீ போய் பாரு, நான் அவளை கூட்டிட்டு வரேன் ” என சிந்தாமணி அறைக்குள் சென்றார்.
மெத்தை விரிப்பை பார்த்தால் அப்படியே தான் இருந்தது… எதுவும் நடந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் போக….மருமகள் வரும் வரை காத்திருந்தவர்… வெளியே வந்த சாயாவின் முகத்தை பார்த்து பூரித்து போனார்.
முகம் எல்லாம் சிவந்து.. உதடுகள் முகத்திற்கு போட்டியாக மின்ன .. ஒரு வித தயக்கத்துடன் வெளியே வந்தாள் சாயா.. முழுதாக நடக்காவிட்டாலும் ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது..
” சாயா… ” என சிந்தாமணி அழைக்கவும்… சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள்… தன் முகத்தை மறைக்க இயலாமல் கையை பிசைந்து கொண்டு நிற்க.. சிறு சிரிப்புடன் அவள் அருகே சென்றவர்.. ” என்னாச்சு ஏன் ஒரு மாதிரி டென்ஷனா இருக்க … ” என்றதும்.. ” ஐயோ அதெல்லாம்… ஒன்னும் இல்ல அத்தை.. கொஞ்சம் தூங்கிட்டேன்.. ” என சமாளிக்க பார்க்க..
” சரி மா முகத்தை துடைச்சுட்டு வெளியே வா.. மறவன் வெளியே பேசிட்டு இருக்கான் ” என அவர் வெளியேறி விட.. அவர் சென்றதும் வேகமாக கண்ணாடியின் முன்பு நின்று தன் முகத்தை பார்த்தவள் வெட்கி போனாள்.
பின் வேகமாக தலை வாரி… முகத்தில் எதுவும் தெரியாமல் இருக்க சிறு பவுடரை பூசி கொண்டு சமாளித்த நிம்மதியில் வெளியே வந்தவள்… கூடத்தில் அமர்ந்திருக்கும் நபரை பார்த்து அதிர்ந்து போனாள்..
சிந்தாமணி அங்குள்ள மூவருக்கும் காபியை கொண்டு வர, அதிர்ந்த வண்ணம் அங்கு வந்து நின்றாள் சாயா..
” ஹேய் சாயா இங்க என்ன பண்ணுற நீ ” என அங்கே அமர்ந்திருக்கும் தினேஷ் கேட்க.. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள் சாயா.
” என்ன தினேஷ்.. சாயா என் வீட்டுக்கு எதிர் வீட்டு பொண்ணு, அதான் அம்மாக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்கா ” என மறவன் கூறவும் சாயா அவனை தீயாக முறைக்க.. சிந்தாமணி புரியாமல் பார்த்து வைத்தார்.
” ஓ ஓகே மிஸ்டர் மறவன்.. அப்போ நம்ம நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம்… அதை உங்க கிட்ட சொல்லிட்டு போக தான் வந்தேன்… நாளைக்கு நீங்க ஃப்ரீ தானே ”
” நான் ஃப்ரீ தான்.. பட் லேன்ட் என் மனைவி பேருல வாங்கனும்.. அவங்க ஃப்ரீயான்னு கேட்டு சொல்லுறேன் ” என நமட்டு சிரிப்புடன் சாயாவை பார்க்க அவளோ முகத்தை திருப்பி கொண்டாள்.
தன் மகன் ஏதோ விளையாடுகிறான் என்பதை புரிந்து கொண்டு சிந்தாமணியும் அமைதியாக வேடிக்கை பார்த்தார்.
” அப்பறம் மாம் இவரு யாருன்னு தெரியுதா.. நாளைக்கு நான் இங்க ஒரு இடம் வாங்க போறேன்.. அதோட ஓனர் இவர் தான் ”
” ஓ ரொம்ப சந்தோஷம் தம்பி , கல்யாணம் ஆகிடுச்சா ” என சிந்தாமணி பேச்சை தொடங்க… தினேஷ் சட்டென்று சாயாவை தான் பார்த்தான்.
அவள் பார்வையில் மிரட்டல் தெரிய… எச்சிலை விழுங்கி கொண்டவன்… ” இன்னும் இல்ல மா… இனிமே தான் பண்ணனும் ”
” பொண்ணு எல்லாம் பார்த்தாச்சா பா ”
” ஹான் அதெல்லாம் பாத்துட்டாரு மா… பொண்ணு யாருன்னு கேளுங்க ” என முந்திக் கொண்டான் மறவன்…
” யாரு பா ”
” அது மா.. பொண்ணு எல்லாம் பார்க்கல.. லவ் பண்ணுறேன் மா ” என தலையை சொரிந்தான் தினேஷ்.
” ம்ம் யாருன்னு கேளுங்க மா ” என மேலும் மறவன் பேசி விட… கொலை வெறியுடன் அவனை பார்த்து வைத்தாள் சாயா.
” பொண்ணு இந்த ஊரா பா ”
” ஆமா மா ”
” அப்போ வீட்ல சொல்லி பொண்ணு கேட்க சொல்ல வேண்டியது தானே… நடக்க வேண்டியது எல்லாம் கால காலத்துல நடக்கனும் இல்லையா ”
” அதுக்கு அந்த பொண்ணு ஓகே சொல்லனுமே ” என மறவன் சிரிக்க.. தினேஷ் தயக்கமாக சாயாவை பார்த்தான்.
” ஓ பொண்ணு கிட்ட இன்னும் லவ் பண்ணுற விஷயத்தை சொல்லலையா ”
” அதெல்லாம் சொல்லியாச்சு மா… பொண்ணு ஓகே சொல்லல… அதான் இப்ப நம்ம கிட்ட உதவி கேட்டு இருக்காரு ” என மறவன் கூற… ” அப்போ நீ பேசி பாரு மறவா… ஏதோ நம்மனால இந்த புள்ளைக்கு ஒரு நல்லது நடக்கட்டும் ” என சிந்தாமணி வெகுளியாக பேச… மறவன் அதிர்ந்து சிரித்தான்.
இதற்கு மேல் முடியாது என்பதை போல டீ டம்ளரை நிச்சென்று அங்கு வைத்து விட்டு அவளது வீட்டை நோக்கி சென்று விட்டாள் சாயா…
” ஏன் டா என்னாச்சு அவ ஏன் கோவமா போறா.. ”
” பின்ன என்ன மா… நான் லவ் பண்ணுற பொண்ணே அவ தான்… அவ முன்னாடியே மறவன் சார் இப்படி சொல்லவும் கோவம் வந்துடுச்சு ” என தினேஷ் அப்பாவியாக கூற… இம்முறை சிந்தாமணி தன் மகனை வெறியாக முறைக்க ஆரம்பித்தார்.
” மறவா ” என பல்லை கடிக்க.. ” சாரி மா… நான் போய் அவளை சமாதானம் பண்ணுறேன் ” என எதிர் வீட்டை நோக்கி ஓட… தினேஷ் புரியாமல் இருவரையும் பார்த்தான்.
இதற்குமேல் இவனிடம் மறைக்க வேணாம் என்று ” தினேஷ் மன்னிச்சுக்க பா… சாயா வேற யாரும் இல்ல மறவன் பொண்டாட்டி தான்… இப்போதான் அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்து இருக்காங்க ” என சிந்தாமணி எந்த ஒளிவு மறைவும் இன்றி சட்டென்று போட்டு உடைத்து விட… தினேஷ் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டான்.
” மறவன் சார் தான் புருஷனா ” என நம்பாமல் கேட்க..
” ஆமா அவங்களுக்குள்ள சின்ன சண்டை அதுல ஒரு வருஷம் பிரிஞ்சு இருந்தாங்க… இப்போதான் என் மருமகள் அவன் கூட வாழ ஒத்துகிட்டு இருக்கா” என்றதும் அமைதியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறினான் தினேஷ்… என்ன இருந்தாலும் உண்மையாக அல்லவா காதலித்து விட்டான்.. இனி சாயாலி தனக்கில்லை என்பது உறுதியாக தெரிந்து விட்டது…
**
நாளை இதே நேரம் சாயாலி இவர்களை எல்லாம் விட்டு செல்ல போகிறாள் என்பது தெரியாமல் அனைவரது மனதிலும் ஒவ்வொரு மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தனர்.

