
காதல் -40
இதோ சரியாக ஐந்து மணிக்கு அவர்கள் வீட்டில் அனைவரும் கூடி இருந்தனர். சிந்தாமணி தன் கணவன் மூர்த்திக்கு ஜுஸ் போட்டுக் கொடுத்து அவரை படுக்க வைத்தார். நடுக்கூடத்தில் மறவன் , அகரன் சாயாலி மூவரும் அமர்ந்திருந்தனர்.
மூர்த்தி மெல்ல கண் அசரவும் அறை கதவை மூடி விட்டு வெளியே வந்தார் சிந்தாமணி. அகரன் முன்னே கம்பீரமாக அமர்ந்தவர்… ” சொல்லு அகரா இந்த முறை எங்க கிட்ட இருந்து எதை எல்லாம் பறிச்சுட்டு போக வந்துருக்க ” என நிதானமாகவே கேட்க….அவரது பேச்சில் அதிர்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்.. ” வாவ் மாம் நீங்க தான் என்ன நல்லா புரிஞ்சு வச்சு இருக்கீங்க… கண்டிப்பா எனக்கு தேவையானது இங்க இருக்கு, அதை வாங்கிட்டு போக தான் வந்தேன் ” என்றதும் மறவன் வெறுமையாக அவனை பார்த்தான்.
” உன்னைய வளர்த்த மாதிரி தானே டா இவனையும் வளர்த்தேன்… நீ மட்டும் ஏன் டா இப்படி இருக்க ” ஆதங்கமாக வெளி வந்தது அவரது குரல்…
“நீ என்னைக்கு அவன் உழைப்பை எடுத்துட்டு போனியோ அப்போ இருந்து வெறும் கூடா வாழ்ந்துட்டு இருக்கான் டா ” என மறவனை காண்பித்தார்.
” அப்படி ஒன்னும் தெரியலையே மாம், நல்லா தானே இருக்கான், இப்போ கல்யாணம் வேற ஆகிடுச்சு, பொண்டாட்டி கூட சந்தோஷமா குடும்பம் நடத்துறான் இதுக்கு மேல அவனுக்கு என்ன வேணும் ” என கொஞ்சமும் இரக்கமில்லாமல் பேசும் பெரியவனை பார்க்க பார்க்க சிந்தாமணிக்கு கொலை வெறியே வந்தது..
அதுவரை அமைதியாக இருந்த சாயா… ” அப்போ அந்த தமிழ் காதலன் விருது விழாவுக்கு வந்தது நீங்க இல்லையா ” என தன் சந்தேகத்தை கேட்க…
அவளை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன்… ” நீங்க பார்த்தது சரி தான்… அது நானே தான் ”
” அப்போ தமிழ் காதலன் ” என தவித்து போய் அவள் கேட்க… அகரனது பார்வை மொத்தமும் மறவன் பக்கம் திரும்பியது..
ஏற்கனவே கவிதை கூறி அவளை அதிர செய்தான் மறவன்.. தற்போது இவன் வேறு தமிழ் காதலன் யாரென்று கேட்டால் இவரை பார்க்கிறான் என அதிர்ச்சியில் மறவனை பார்க்க.. அவன் அப்போதும் அமைதியாக அமர்ந்திருந்தான்..
“உனக்கு என்ன தெரியனும் சாயாலி ” என சிந்தாமணி கேட்க..
” தமிழ் காதலன் ” என படபடப்போடு முடித்தாள்.
” இவ்வளவு நடந்ததுக்கு அப்பறம் கூடவா உனக்கு யாருன்னு தெரியலை , தமிழ் காதலன் புத்தகத்தை முழுக்க முழுக்க எழுதினது உன் புருஷன் தமிழ் மறவன் தான் ” என முழு உண்மையையும் போட்டு உடைத்தார்.
சாயாவிற்கு இதை சற்றும் ஜீரணிக்க இயலவில்லை… இத்தனை நாளும் அந்த புத்தகத்திற்கு சொந்தக்காரனை அருகில் வைத்து கொண்டா இத்தனையும் பேசினோம்.. இந்த புத்தகத்தை எழுதியதற்கும் இவனுக்கும் சம்மந்தமே இல்லையே… என குழப்பிக் கொண்டே… ” ஆனால் தமிழ் காதலன் பெயர் அறிவிச்ச அப்போ இவர் தானே அத்தை வந்தார் ” என அகரனை காட்ட… அகரனோ அட்டகாசமாக சிரித்தான்.
சிந்தாமணி பெரும் மூச்சை விட்டவள்… “அந்த புத்தகத்தில இருக்குற ஒவ்வொரு வரிக்கும் சொந்தக்காரன் மறவன் தான், ஆனால் பெயர் புகழ் எல்லாம் இவனுக்கு ” என வெறுப்பாக தன் மூத்த மகனை காட்டினார்.
அதில் மேலும் சாயா அதிர தன் கணவனை பார்த்தாள்.. ” அவனோட படைப்பை எல்லாம் திருடி தமிழ் காதலன் பெயருக்கு அடையாளமா இவன் கலந்துகிட்டான் மா … கூட பிறந்த பிறப்புக்கு துரோகம் பண்ண துரோகி மா இவன் ” என தலையில் அடித்து கொண்டு அழுதார் சிந்தாமணி.
தற்போது தான் சாயாவிற்கு அனைத்தும் விளங்கியது.. அவர்களுடைய முதல் சந்திப்பில் மறவன் ஏன் புத்தகத்தை தூக்கி எறிந்தான் என தெளிவாக விளங்கியது.. யாரால் தான் பொறுக்க முடியும் .. இத்தனை தூரம் கடினப்பட்டு அலசி ஆராய்ந்து ஒரு புத்தகத்தை வடிவமைக்க ஒரு எழுத்தாளர் எந்த அளவிற்கு பாடு படுகிறார் என்பது திருட்டு கொட்டுகளுக்கு எங்கே தெரிய போகிறது..
அதுவும் தமிழ் காதலன் பிரபலமான எழுத்தாளர், அவரது புத்தகங்கள் யாவும் காணக் கிடைப்பவையாக இருக்க, அப்படி ஒரு பெயரை தன் அண்ணனுக்கு தாரை வார்த்து விட்டு அமைதியாக அமர்ந்திருக்கும் கணவனை பார்க்க பார்க்க நெஞ்சம் வலித்தது..
” ஏன் அப்படியே விட்டீங்க, நீங்கதான் அந்த புத்தகத்துக்கு சொந்தக்காரன்னு கேஸ் கொடுக்க வேண்டியது தானே ” என தன் மாமியாரிடம் கேட்க…
” என்ன மா கொடுக்க சொல்லுற , கூடப் பிறந்தவனே அவனோட உழைப்பை திருடி பெயர் வாங்கிட்டு இருக்கானு கொடுக்கவா… அப்படியே இந்த கேஸ் வெளிய வந்தாலும் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் இந்த புத்தகத்தில சம்மந்தம் இல்லைனு , இன்னொருத்தன் கொண்டு போக மாட்டான்னு என்ன நிச்சயம் , இந்த உலகமே எப்போ என்ன கிடைக்கும் , யாரோடதை நமக்கு சொந்தாமாக்கிக்களாம் அப்படினு தான் இருக்காங்க.. ஏன் உலகத்துக்கு போகனும், இங்க சொந்த அண்ணனே அப்படி தானே இருக்கான் ” என தன் மகனை குத்திக் காட்டினார் சிந்தாமணி.
இதற்கெல்லாம் நான் அசருபவன் இல்லை என்பதை போல, ஏதோ தன்னை பற்றி பெருமையாக கூறுவது போல அமர்ந்திருந்தான் அகரன்..
தமிழ் காதலன் தான் தன் கணவன் என்று தெரிந்ததில் இருந்து சாயாவின் பார்வை தன் கணவனை விட்டு சற்றும் விலகவில்லை…
“உங்க ஃபிளாஷ் பேக் முடிஞ்சதுனா.. இப்ப எனக்கு தேவையானதை நான் கேட்கட்டுமா.. ” என அவன் வந்த நோக்கித்தில் சரியாக இருக்க…
” கேளு ” என்றார் சிந்தாமணி.
” பெருசா ஒன்னும் இல்ல, அப்பா பார்க்குற பிஸ்னஸ் எல்லாத்தையும் என் பேருல மாத்தனும் ” என கூறிவிட்டு அவன் கூலாக அமர்ந்து விட… சிந்தாமணிக்கு தான் வந்த கோபத்திற்கு இவனை அடித்து கொன்றால் என்ன என்று தோன்றியது.
” விளையாடாத அகரா… நீ அவன் புத்தகத்தை திருடிட்டு போனதுக்கு அப்பறம், அவன் அதுல இருந்து வெளிய வந்து உன் அப்பா பிஸ்னஸை தான் பார்த்து இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கான்.. இது எல்லாம் அவனோட உழைப்பு.. நீ திரும்பவும் அவனோட உழைப்பை தான் திருட பார்க்குற , எனக்கு ரெண்டு பேரும் பிள்ளை தான் டா , அதுக்காக நீ ஒருத்தனோட வாழ்க்கையை அழிசுட்டு தான் வாழனும்னு முடிவு எடுத்தா அப்படி ஒரு பிள்ளையே எனக்கு தேவையில்லை டா ” என ஆணித்தரமாக சிந்தாமணி தன் முடிவை கூறி விட்டார்.
” சோ அப்போ எழுதி வைக்க முடியாது ”
” ஆமா கண்டிப்பா முடியாது, அது முழுக்க முழுக்க மறவனுக்கு சொந்தம் ”
” ஓகே அப்போ ” என அகரன் ஆரம்பிக்கும் முன்பே… ” அந்த பிஸ்னஸ் மொத்தத்தையும் உனக்கு எழுதி வைக்கிறேன்… எல்லா பார்மாலிடிஷும் முடிச்சுட்டு நான் சொல்லுறேன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்போ வா ” என மறவன் கூற சிந்தாமணி சாயாலி இருவருமே அதிர்ந்து போனார்கள்…
” டேய் மறவா ”
” அம்மா பிளீஸ்… அது இப்போ என் பேருல தானே இருக்கு, நான் அவனுக்கு கொடுக்குறேன்… இதுல யாரும் தலையிட வேணாம் ” என அதற்குமேல் முடியாமல் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டான் மறவன்..
” நீயெல்லாம் என் வயித்துல வந்து பொறக்கணுமா டா.. என் பிள்ளையை ஏன் டா இப்படி அணு அணுவா சித்திரவதை பண்ணுற ” என சிந்தாமணி அழுக… சிந்தாமணியை அழுத்தமாக பார்த்தவன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
உள்ளே இருக்கும் தன் கணவனை பார்ப்பதா, இல்லை வெளியே அழுகும் தன் மாமியாரை பார்ப்பதா என தெரியாமல் .. முடிவாக தன் மாமியார் பக்கம் செல்ல .. ” சாயா அவனை போய் பாருமா ரொம்ப ஒடைஞ்சு போயிட்டான்… அவன் இதை எப்படி தாங்கிக்க போறான்னு தெரியலை ” என சிந்தாமணி கூற… தலையை ஆட்டிக் கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தாள் சாயாலி…
மெத்தையில் விட்டத்தை பார்த்து படுத்திருந்தான் மறவன்… கரு விழிகள் அங்கும் இங்கும் ஆட, அவனது எண்ண ஓட்டத்தை அறிய முடியாமல் அவன் அருகில் வந்து அமர்ந்தாள் சாயாலி..
” மறவன்… ” என மெதுவாக அழைக்க… ஏனோ இந்த அழைப்பிற்காகவே காத்திருந்தவன் போல அவள் மடியில் தலை வைத்து அவளது இடுப்போடு கட்டிக் கொண்டவன் தன் உணர்ச்சிகளால் எல்லாம் அதற்குள் அடக்க பார்க்க… அவனையும் மீறி அவன் கண்களில் இருந்து வந்த கண்ணீர் அவளது இடுப்பை நனைத்தது.
மறவன் அழுவது அவளுக்கு மேலும் பாரத்தை கூட்ட… இதற்கு ஒரே தீர்வு அது தான் என முடிவெடுத்து அவனை தன்னிடம் இருந்து பிரித்து நேராக எதிரில் இருக்கும் அவள் வீட்டிற்குள் சென்றவள் தமிழ் காதலன் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவனது அறைக்குள் வந்தாள் சாயா.
” எப்போ நான் உடைஞ்சு போய் வாழ முடியாம விரக்தியா இருப்பனோ அப்போ எல்லாம் எனக்கு இந்த தமிழ் காதலன் புத்தகம் தான் ஆறுதல்.. சொல்ல போனா இப்ப நான் உயிரோட இருக்கிறதுக்கு காரணமே இந்த புத்தகம் தான்… நீங்க எழுதுன வரிகள் தான் … ஆனால் அது தேவையான நேரத்துல கிடைக்கும் போது ரொம்ப ஆறுதலா இருக்கும் ” என பேசிக் கொண்டே அவனது புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தை பிரித்தாள் சாயாலி….
பக்கம் எண் 256 …அதில் இருந்த வரிகள் ..
மீளா துயரத்திலிருந்து
மீண்டு வா …
மீண்டும் வா ….
மீதம் உள்ள வாழ்வில்
மின்னலாய் ஜொலிக்க…!
நான்கே வரிகள் தான்… சாயாலி அந்த வரிகளை வாசித்ததும் தலையை உயர்த்தி அவளை பார்த்தான்.
” நீங்க எழுதின வரிகள் தான் மறவன்… ஆனால் இப்போ படிக்கும் போது கொஞ்சம் ஆறுதலா இருக்கும் ” என்றதும்…
” உனக்கு இந்த வரிகள் தான் ஆறுதல்… ஆனால் எனக்கு இந்த வரிகளை படிக்கிற நீ தான் ஆறுதல் யாழி ” என படுத்த வண்ணம் அவனது கைகளை விரிக்க… சாயாவிற்கு தான் நடுக்கம் பிறந்தது.
” ம… மறவன்… நீங்க… ”
” மறவன் இல்ல சாயா… உன்னோட தமிழ் காதலன் ” என்றதும் அவனை வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தாள் சாயா.
தன் கணவன் மறவன் மீது தானே அவளுக்கு கோபம்.. ஆனால் அவளது உயிர்நாடி தமிழ் காதலன் அப்படி இல்லையே… அவன் அழைத்தவுடன் அவனது மார்பில் தலை சாய்த்து படுத்து கொண்டவளை தன் நெஞ்சிற்குள் வைத்து பூட்டியவன் நிம்மதியாக நித்திரையை தேடினான்.
வாழ்வதா வேண்டாமா என்ற முடிவு தெரியாமல் அவன் மீது சுகமாக துயில் கொள்கிறாள் சாயாலி… இதற்கு மேலும் வா
ழாமல் போய் விடுவாளா ??? இல்லை மறவன் விட்டாலும் அவளது தமிழ் காதலன் விட்டு விடுவானா ???
சனா💖

