
தேவா, அவள் ஆர்க்கியாலஜிஸ்ட் என்றதும், திருதிருவென விழித்து, “என்ன சொல்ற நீ ஆர்க்கியாலஜிஸ்ட் ஆ? உன் பேர் நிஷிதா தான…?” என அதி முக்கியமான கேள்வியைக் கேட்க,
ஆராதனாவோ, “டேய் நல்லா வாயில வந்துடும்… என்ன? கவர்ன்மெண்ட் ஸ்டாஃப் ன்னு சொன்னதும் பயந்து, அப்படியே சமாளிக்கிறியா? அந்த மினிஸ்டர் நாசமா போனவன் அரசியல்வாதியா இருந்தா என்ன வேணாலும் பண்ணலாம்னு நினைச்சுட்டு இருக்கானா? மொத்த பேரையும் நான் உள்ள தூக்கி போடுறேனா இல்லையான்னு பாரு?” என சாபம் கொடுத்தாள்.
அதில் தேவா, தலையில் கை வைத்து, “காட்… நீ எந்த மினிஸ்டர் பத்தி பேசுற?” என்று கடுப்பாகக் கேட்டான். அவள் பதில் பேசும் முன், அருண் அலறும் சத்தம் கேட்க, தேவா பதறிக்கொண்டு அவளையும் இழுத்துக்கொண்டு குடிலை நோக்கி ஓடினான். ஆருவோ, “டேய் என்னை விட்டுட்டு ஓடித் தொலைடா… ஏதோ உன் லவ்வரை கூட்டிகிட்டு ஊரை விட்டு ஓடுற மாதிரி ஓடுற” என்று கத்த, அவன் அவளைக் கண்டுகொள்ளாமல் குடிலை அடைந்தான்.
அங்கு அருண், “ஆஆஆ” என்று கை வலியில் கத்த, கையில் கத்தியை வைத்துக்கொண்டு, தமயந்தி தான் ‘ஐய்யோய்யோ ஃபர்ஸ்ட் மர்டர்… எப்படியும் ஆயுள் தண்டனை கன்ஃபார்ம்’ என மிரண்டு போக, தேவா வேகமாக அருணை பிடித்து, “மச்சான் என்னடா ஆச்சு?” எனப் பதறி அவசரமாகத் துணியை வைத்து வெட்டுப்பட்ட இடத்தில் சுத்தினான். பின், ஒவ்வொரு யோசனையில் நின்றிருந்த நிஷாந்த் மற்றும் விஷ்வாவை “ப்ச், டேய் என்னடா பண்றீங்க? போய் ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் எடுத்துட்டு வாங்க!” என்றதும் தான் இருவரும் பூவுலகத்திற்கு திரும்பி வந்து, அருணை பார்த்து அதிர்ந்து அவசரமாக ஓடினர்.
வைஷு அதே இடத்தில் அசையாமல் நிற்க, அம்மு, “ஆரு உனக்கு ஒண்ணும் இல்லைல டி? யாருடி இவனுங்க உன்னைக் கடத்தி வச்சுருக்கானுங்க?” என்று கேட்க, தேவா அவர்கள் நால்வரையும் முறைத்து, அதிலும் தமயந்தியை அதிகமாக முறைத்து விட்டு, அருணுக்கு கட்டு போட…
தமி, “சாரி நான் வேணும்னு பண்ணல, தெரியாம பண்ணிட்டேன்.” என்று மிரண்டவளுக்கு கண்ணெல்லாம் கலங்கி விட்டது. அவளுக்கு இந்த வன்முறை எல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. கத்தியைக் கூட ஒரு பாதுகாப்பிற்கு தான் வைத்திருந்தாள். திடீரென, அவள் முன்னாள் ஒருவன் வரவும் பயத்தில் அப்படி செய்து விட்டாள்.
அம்முவோ, “அடியேய்! இந்தக் கடத்தல்காரனுங்க கிட்ட போய், நீ சாரி, சுடிதார்லாம் கேட்டுகிட்டு இருக்க…” என அதட்ட, அவளோ மிரண்டு அருணை பார்த்திருந்தாள். ஏனோ அவளுக்கு அவனைப் பார்த்தால் கடத்தல்காரன் போல் எல்லாம் தெரியவே இல்லை.
அவள் முகத்தில் என்ன கண்டானோ, உடனே “தட்ஸ் ஓகே” என்று விட, தேவா அவனை முறைத்து “இப்போ ரொம்ப முக்கியம்… போ! போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. விஷ்வா இவனை உள்ள கூட்டிட்டு போ!” என்றான். பிறகு நிஷாந்திடம், “இவளுங்களை கொண்டு போய்க் காட்டுக்கு வெளிய விட்டுட்டு வா…” என்று உத்தரவிட்டவன்,
ஆருவிடம் பல்லைக்கடித்துக் கொண்டு, “இங்க பாரு, எங்க டார்கெட் நீ இல்ல… இங்க இருந்து எல்லாரும் வெளிய போய்டுங்க! அண்ட் இங்க நடந்ததையும் சரி, எங்களைப் பத்தியும் சரி, யார்கிட்டயும் மூச்சு விடக் கூடாது!
நான் உங்களை வாட்ச் பண்ணிட்டு தான் இருப்பேன். ஏதாவது வில்லத்தனமா பண்ணுனீங்கன்னு தெரிஞ்சுது… சங்கை அறுத்துருவேன்.” என்று மிரட்டினான்.
அருண் “எதுக்கு டா இவளை விடச் சொல்ற? நம்ம பிளான்…” என ஆரம்பிக்க, தேவா “போடாங்… ஆள் மாத்தி கடத்திட்டு பிளானாம் பிளான்…” என்று நொந்தவன், ஏதேதோ தீவிர சிந்தனையில் இருக்க, ஆண்கள் மூவருக்கும் முகத்தில் ஈ ஆடவில்லை. ஆரு, “என்னாது மாத்தி…?கடத்தி???ட்டீங்களா??? அப்டி போடு அருவாள! ஹா ஹா ஹா ஹைய்யோஓஒ… மாத்தி கடத்திட்டு தான், நான் சிங்க்கா டயலாக் பேசிகிட்டு இருந்தியா… ஹா ஹா” என வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தவள்,
அம்மு “இவன் பேசுன டயலாக்கையும், குடுத்த பில்டப்பையும் பார்க்கணுமே! ஐயய்யோ… ஆரம்பத்துல இருந்தே இவனுங்க மூஞ்சை பார்த்தா இதுக்குலாம் சரி பட்டு வர்றவனுங்க மாதிரி தோணவே இல்ல… ஆனால், இப்போதான் தெரியுது, இவனுங்க எதுக்குமே சரிபட்டு வரமாட்டானுங்கன்னு! ஹாஹா” என அவள் பாட்டிற்கு சிரித்துக்கொண்டே இருக்க, தேவா கோபத்தில் அங்கிருந்த, மர டேபிளை தூக்கி போட்டு உடைத்து விட்டு உள்ளே சென்றான்.
தமயந்தி அதில் மேலும் அரண்டிருக்க, அம்மு, ‘அடி நாசமா போனவளே! அவனே நம்மளை விட்டுடறேன்னு சொன்னான். நீ தேரை இழுத்து இப்படி நடுக்காட்டுல விட்டுட்டியேடி…’ எனப் புலம்பிக் கொண்டு,
“தோழி நகைத்தது போதும்! யாம் விடை பெறலாமா?” என தேவாவின் கோபத்தில் பயந்து உளற, நிஷாந்திற்கு, அவன் தான் அவர்களைக் கூட்டி செல்ல வேண்டும் என்று தேவா சொன்னதில், இன்னும் அதிர்ந்து போய் வைஷுவை பார்த்தான். அவள் சுற்றி நடக்கும் எதையும் உணராமல் அவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆரு சற்று யோசித்து விட்டு, “கைஸ் வாங்க ஒரு மீட்டிங் இருக்கு” எனத் தோழிகளை இழுத்துக்கொண்டு வெளியில் செல்ல, விஷ்வா, “நம்மளே மொத தடவை பண்ணோம் ஒரு கடத்தலு! அது ஆள் மாறி ஆகிருச்சு சொதப்பலு!” என நேரம் காலம் தெரியாமல் பன்ச் அடித்தான்.
அருண், “ப்ச் டேய்! நீ தான அந்தப் பொண்ணு தான் அவள்ன்னு சொன்ன?” என்று முறைக்க, விஷ்வா “நான் எங்கடா சொன்னேன்? நீ தான் s3 ல இருந்து இறங்குவா, அவள் தான் கடத்த வேண்டிய ஆளுன்னு சொன்ன… அதுக்காக யாரு s3 ல இருந்து இறங்குனாலும் கடத்திடுறதா? இப்ப, இந்த ஜாக்கி சானி என்ன பண்ணப் போறாளோ, தெரியலையே!! இப்போவே லேசா அடி வயிறு கலங்குது.” என வயிற்றை பிடிக்க, அருண் புரியாமல் “அதென்னடா ஜாக்கி சானி?” எனக் கேட்டான்.
விஷ்வா பெருமையாக, “அதாவது மச்சான்… ஜாக்கி சான் என்பது ஆண் பால் பெயர். ஜாக்கி சானி என்பது பெண் பால் பெயர். எப்புடி என் தமிழ் புலமை?” என்று சட்டைக்காலரை தூக்கி விட்டுக் கொள்ள, அருண் அவன் முதுகில் சப்பென்று அடித்தான்.
வெளியில் ஆரு, “நான் இருக்குற இடம் எப்படிடி தெரிஞ்சுது? கடத்தி வச்சுருக்க இடத்துக்கு மூணு பேரும் ஏன் தனியா வந்தீங்க? இவனுங்க டம்மி பீஸா இருந்ததனால சரியா போச்சு. அறிவிருக்கா?” எனக் கடிந்து கொள்ள, தமி, “அட ஆரு, இது எந்த இடம் னு உனக்குத் தெரியலையா?” என்றாள் கேள்வியாக.
ஆரு புரியாமல் தலையை ஆட்ட, அம்மு, “இது தான் ‘கன்னி வனக்காடு’. நம்ம ஏற்கனவே ஆராய்ச்சி பண்ணி, இப்போ மறுபடியும் விஷப்பரீட்சையில இறங்க வேண்டிய இடம்.” என்றதும், ஆரு “வாட்?” என அதிர்ந்தாள்.
பின், “இந்த இடத்துக்குலாம் நம்ம வந்தோமா? எனக்குப் பார்த்த மாதிரியே இல்ல?” எனத் தலையைச் சொரிய, வைஷு, “இல்ல ஆரு… நம்ம இந்த இடத்துக்கு வரல. இங்க இருந்து ஒரு 10 கிலோ மீட்டர் வடக்குப்பக்கம் நடந்து போனா தான், அந்த இடம் இருக்கு. அது தான் கன்னி வன காட்டோட மையப் பகுதி.” என்றதும், அவள் அவளுக்குப் பதில் சொல்லாமல் மற்ற இருவரிடமும், “இங்க யாருமே உள்ள வரமுடியாத மாதிரி தானடி அந்த மினிஸ்டர் பண்ணிருந்தான்… இவனுங்க மினிஸ்டர் ஆளு இல்லைன்னா எப்படிடி இவனுங்க மட்டும் இங்க இருக்கானுங்க?” என்று புரியாமல் கேட்டாள்.
வைஷு, ‘அவளிடம் பேசாமல் தவிர்ப்பது புதிதா என்ன’ என வருத்தத்துடன் எண்ணிக்கொண்டு, “நான் ரிசர்ச் பண்ணது வரை… இந்த இடம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இங்க மரம், ஓடையைத் தவிர வேற எதுவுமே இல்லை. அது போக, இங்க இருந்து வடக்கு பக்கம் யாரும் போகமாட்டாங்க. ஏன்னா அந்தப் பாதையே முள்ளும், குண்டும் குழியுமா இருக்கும். அதுனால தான், நம்ம போன தடவை வந்தப்போ கூட, வெறும் அந்த இடத்துல மட்டும் ரிசர்ச் பண்ணிட்டு கிளம்பிட்டோம்” எனப் பேசி முடிக்க,
அம்முவும் தமியும், “இந்த இடம் அந்த மினிஸ்டர்க்கு கூட எப்படி தெரியாம போச்சு? இந்நேரம் இங்க ஒரு ரிசார்ட் கட்டிருப்பானே” என நக்கலடித்தனர். ஏதோ யோசித்த ஆராதனா மெலிதாகச் சிரித்துக்கொண்டு, “சோ நம்ம பண்ண போற ரிசர்ச்க்கு, இந்த இடம் தான் டிரம்ப் கார்டுனு சொல்றீங்க. அப்படித் தான?” என ஏதோ விடை கண்டுபிடித்த வெற்றி மிதப்பில் கேட்க,
அம்மு, “நாங்க எங்கடி சொன்னோம்? நீ தான், ஏதோ உளறுற…” என ஒரு மாதிரியாகப் பார்க்க, ஆராதனா அவளின் திட்டத்தைப் பற்றிக் கூறினாள். அதில் வைஷு திகைத்து நிற்க, மற்ற மூவரும் ஹை ஃபை கொடுத்துக்கொண்டனர்.
அந்த நேரம் அங்கு வந்த நிஷாந்த், “சாரி தெரியாம உன்னைக் கடத்திட்டோம். வாங்க நான் விட்டுடறேன்.” என்று அமைதியாகச் சொல்ல, வைஷு, ‘சே இந்த வேலையும் நீ பார்க்க ஆரம்புச்சுட்டியா’ என உறுத்து விழித்து அவனை முறைக்க, அவன் தலையை, குனிந்து கொண்டான்.
ஆரு, “அதெல்லாம் எங்களால வர முடியாது. நீ போய் உன் பாஸ வரச்சொல்லு…” என்று விட்டு உள்ளே செல்ல, அவன் பெக்க பெக்க வென விழித்து விட்டு, தேவா அறைக்குள் சென்றான். அங்கு அவனோ, ‘சே எப்படி மிஸ் ஆச்சு? அவளை எப்படியாவது தூக்கியே ஆகணும். என்ன பண்ணலாம்…?’ என நெற்றியை குழப்பமாகத் தேய்க்க, நிஷாந்த் “மச்சான்” என்றழைத்தான்.
“அந்த லூசு கும்பலைக் கொண்டு போய் விட்டுட்டியா? ச்சை! சரியான தலைவலி அவளோட…” என்று கடுப்படிக்க, நிஷாந்த், “இல்லடா அந்தப் பொண்ணு உன்னைப் பார்க்கணும்னு சொல்றா…” என்று தயங்கி கொண்டு கூற,
தேவா, “வாட்? இன்னும் அவ போகலையா…? ஆமா அவள் கூட வந்ததுலாம் யாரு?” எனக் கேட்க, “அவ பிரெண்ட்ஸ் போல” என்றான் எங்கோ வெறித்துக்கொண்டு. கூடவே, அவனுக்குப் பயம் வேறு தேவாவிடம் வைஷு பற்றிச் சொன்னால், அவன் அவளைக் கொலையே செய்து விடுவானோ என நினைத்து. அதனாலேயே, சாதாரணமாக இருப்பது போன்றே அவனிடம் நடித்தான். வெளியில் வந்த தேவா, சேரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஆருவை கண்டு, “ஏய் இன்னும் கிளம்பாம இங்க என்னடி பண்ற?” என்க, “ம்ம் பொறந்த வீட்டுக்குப் புருஷன் கூட விருந்துக்கு வந்துருக்கேன்… உன் இஷ்டத்துக்கு போறதுக்கும் வாரதுக்கும், நான் என்ன உன் அடிமையா? வெளிய போனா சும்மா இருக்க மாட்டேன்…! உன்னைப் பத்தி மீடியால சொல்லித் தீவிரவாதின்னு முத்திரை குத்தி, உன் கையில விலங்கை மாட்டித் தரதரன்னு இழுத்துட்டு போவேன்.” என்று பயமுறுத்த, அவன் அவளை அமைதியாகப் பார்த்தான்.
அம்மு, “ப்ச், வெறும் தீவிரவாதின்னு மட்டும் இல்ல ஆரு, ஈவ் டீசிங் கேஸ்ளையும் சேர்த்து உள்ள தள்ளலாம்.” என்று விஷ்வாவை பார்த்துச் சொல்ல,
அவன், ‘ஊர்ல கொலை பண்றவன், ரேப் பண்றவனை எல்லாம் விட்டுடுங்கடி… கடத்தல் கூட சரியாப் பண்ணாம, மாத்திக் கடத்துற எங்களை மாதிரி அப்பாவிங்களை வச்சு செய்ங்க. கையில வளருது நெயிலு! நான் போகப் போறேன் ஜெயிலு!’ என்று உள்ளுக்குள் உதறல் எடுக்க,
அருண் வந்தவன், “ஆமா மச்சான்… அப்படியே கொலை பண்ண பார்த்ததுக்கு, இவளுங்க மேல கேஸ் போடு எல்லாரும் ஒண்ணா ஜெயிலுக்கு போகலாம்.” என்று தேவாவிடம் தமியை பார்த்துக்கொண்டு சொல்ல, அவள் ‘ம்ம்ஹும்!’ என்று சிலுப்பிக் கொண்டாள்.
தேவா, எதுவும் பேசாமல் மெல்ல ஆருவின் அருகில் வந்து அவள் அமர்ந்திருந்த சேரின் இரு புறமும் கை வைத்து, “ஒழுங்கா இங்க இருந்து ஓடிப் போய்டு… நீ யார்கிட்ட வேணாலும் கம்பளைண்ட் பண்ணிக்கோ. எந்தப் பிரச்சனையை எப்படி ஃபேஸ் பண்ணனும்னு எனக்குத் தெரியும்” என்றவன், அவளை அப்படியே அலேக்காகத் தூக்கி வீட்டின் வெளியில் விட்டான்.
அவள் துள்ளி எழுந்து, அவனிடமிருந்து நகர்ந்து நின்று, “டேய் என்னைத் தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத! என்னால போக முடியாது.
நான் உன்னைப் பத்தி யார்டையும் சொல்லக்கூடாதுன்னா நான் சொல்றதை நீங்க எல்லாரும் கேட்டே ஆகணும். இல்லை… கண்டிப்பா நான் சொன்னதை செய்வேன்.
நீங்களாம் திருட்டு பசங்க தான? இந்தா இந்தக் கம்பியூட்டர்லாம் திருடிட்டு தான வந்தீங்க? உங்களுக்குத் தேவை பணம் தான…? பணத்துக்காகத் தான இவ்ளோவும் பண்றீங்க? அது எவ்ளோ வேணாலும் நான் தரேன். நான் சொல்றதை நீங்க எல்லாரும் கேட்டே ஆகணும்…” என அழுத்தமாகச் சொன்னதில், தேவா கையை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு இருக்க, அருணும் விஷ்வாவும், அவன் கையைப் பிடித்து அமைதியாக்கினர்.
அருண், “தேவா இப்போ நமக்கு நம்ம டார்கெட் தான் முக்கியம். இவள் பாட்டுக்கு எதையாவது பண்ணா நம்ம இத்தனை நாள் பண்ணுன பிளான் எல்லாமே வேஸ்ட்டா போய்டும்… அதும் போக, நாளைக்கு வேற நம்ம ஒரு பல்க் சரக்கைக் கடத்தியாகணும்.” என்று, அவன் காதினுள் முணுமுணுக்க, அம்முவும் தமியும், ‘அட திருடனுங்க வேறையா இவனுங்க’ என முழிக்க, வைஷு நிஷாந்தை பார்வையாலேயே சுட்டெரித்தாள். தேவா தன்னைத்தானே கடினப்பட்டு அமைதியாக்கி விட்டு, “இப்போ என்ன வேணும் உனக்கு?” என்றான். அவள் “தட்ஸ் சௌண்ட்ஸ் குட். உள்ள போய் உட்காந்துகிட்டே பேசலாமா? கம் கம்…” என மீண்டும் உள்ளே சென்றவள், “நீங்க ஒண்ணும் பெருசா எதுவும் பண்ண வேண்டாம். இங்க நாங்க ஒரு ரிசர்ச் பண்ணப் போறோம். அந்த ஆராய்ச்சி முடியிற வரை, நாங்க இங்க தான் இருப்போம்.
வேற யாரும் இங்க வராம பார்த்துக்கணும்! தட்ஸ் யுவர் ஃபர்ஸ்ட் ஜாப்” என்று நிறுத்தியவளை கூர்மையாகப் பார்த்த தேவா, புருவத்தை உயர்த்தி அடுத்து என்ன எனப் பார்வையாலேயே கேட்க,
அவள், ‘இந்த லுக்குக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…’ என மனதில் திட்டிக்கொண்டு, “நெக்ஸ்ட்… அப்போ அப்போ எங்களுக்காக சில திருட்டு பண்ணனும். அப்போ அப்போ கடத்தலும் பண்ணனும்!” என்று அழுத்தமாகச் சொல்ல, மற்ற மூவரும் அவளை ‘நீ பொண்ணா என்னாடி’ எனப் பார்க்க, தேவா சுவாரஸ்யமாக “என்ன திருடனும் என்ன கடத்தணும்?” எனக் கேட்டான் புருவத்தைச் சுருக்கி.
அவள், மெதுவாக அவன் அருகில் வந்து தீவிரமாக “முதல்ல, இந்தக் காட்டுல இருக்குற காய்கறியைத் திருடி ஒரு நல்ல சாம்பார் வைக்கணும்.” என்றவள், “பசியில காது அடைக்குதுடா…” என்றாள் பாவமாக.
அவள் என்ன தான் திருடச் சொல்லப் போகிறாளென ஆர்வமாக அவளைப் பார்த்திருந்தவன், அவளின் பாவமான முகத்தைக் கண்டு, சட்டென்று புன்னகைத்து விட்டான். அவன் முதல் முதலில் சிரித்ததில், அவன் கன்னத்தில் தோன்றிய சிறு குழியில் தொம்மென்று விழுந்தவள், அவனின் வசீகர புன்னகையில் தொலைந்தே விட்டாள்.
அவனோ, ‘என்ன மாதிரியான பெண் இவள்? சில நேரம் நெருப்பாகச் சுடுகிறாள், சில நேரம் பனியாகக் குளிர்கிறாள், சில நேரம் தென்றலாக சீண்டுகிறாள், சில நேரம் மழையாகக் குறும்பில் நனைக்கிறாள்… ஒரே நாளில் எப்படி இவளால் இத்தனை பாவங்களை முகத்தில் காட்ட முடிகிறது!’ என வியந்தவன், அவளை அவனறியாமல் ரசிக்க ஆரம்பித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
18
+1
1
+1
4
