Loading

இரு நாள்கள் கடந்திருக்க, பத்மபிரியாவின் தாயைத் தேடுவதில் வெகு தீவிரமானாள் இதயாம்ரிதா.

அவளுக்கு ஈடாக ஸ்ரீராம், தனக்கு தெரிந்த அத்தனை வழிகளிலும் அவரைப் பற்றிய தகவலைப் பெற முயற்சி செய்தான்.

பத்மப்ரியா ஏனோ அதை பற்றி யாரிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. அவளே ஒரு தீர்மானத்திற்கு வந்திருந்தாள்.

இதற்கிடையில், காஸ்மெடிக்ஸ் சம்பந்தமான தரத்தின் அளவை சோதிக்கவும், சரியான பதங்களில் ஒவ்வொரு ப்ராடக்டும் வெளிவருவதிலும் அதிக கவனம் கொண்டாள்.

சமூக ஊடங்களில் அமைச்சரின் ஆள்கள் புகுந்து, விஷாலின் ஆட்டத்தைக் கலைத்து விட்டதுடன், தவறான கருத்துகளை பரப்பியவர்களைக் கைது செய்தனர்.

உண்மை புரியாமல் வாய்க்கு வந்த கருத்துகளை பரப்பியவர்களைக் கைது செய்யும் வரை சத்ய யுகாத்ரன் ஓயவில்லை. அமைச்சருக்கு அவரது கருப்பு பணத்தை வைத்தே குடைச்சல் கொடுத்து கொண்டிருந்தான்.

ஆனால், விஷாலை மட்டும் இப்போதைக்கு கைது செய்ய வேண்டாமென இதயா கூறிவிட, பத்மப்ரியா எகிறினாள்.

சத்ய யுகாத்ரனும் ஸ்ரீராமும் வெளியில் சென்றிருக்க, உற்பத்தி சம்பந்தமான மீட்டிங் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தாள் இதயாம்ரிதா.

மீட்டிங் முடிந்தபின் மற்ற பணியாளர்கள் நகர்ந்து விட, பத்மபிரியா, விதுரன் மிதுனா பூமிகா அகில் மட்டும் அங்கே மிஞ்சி இருந்தனர்.

அப்போது தான் பத்மபிரியா, “ஏன் அம்ரி? அந்த பரதேசியை அட்டாக்கும் பண்ண மாட்டேங்குற. அரெஸ்ட் பண்ணவும் விட மாட்டுற?” எனக் காய,

“இப்ப அரெஸ்ட் பண்ணுனா, அவன் மேல பரிதாபம் தான் கிரியேட் ஆகும். ஜஸ்ட் வெய்ட்!” என்று முடித்துக் கொண்டாள்.

“அது சரி மேம்…  எப்ப இருந்து ஆட் ஷுட் ஆரம்பிக்கலாம்” என்று கடமையே கண்ணாக கேட்டான் அகில்.

“நீ மார்க்கெட்டிங் தவிர மத்த எல்லா வேலையும் நல்லா பண்ணுடா” இதயாம்ரிதா முறைத்து வைக்க,

“உலகத்துலயே மொக்கை வேலை இந்த மார்க்கெட்டிங் தான்” என இளித்தான்.

அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த பூமிகா, “பாத்தீங்களா மேம். உங்க முன்னாடியே வேலை செய்ய பிடிக்கலைனு சொல்றான். இவனை டெர்மினேட் பண்ணுங்க மேம்” என்று கோர்த்து விட,

“அப்படி பார்த்தா முதல்ல உன்னை தான் பண்ணனும்” என்றான் அவன்.

“ஏன் ஏன் ஏன்?” பூமிகா பொங்கிட,

“ஆமா, நீ விதுரன் தான் சத்யா சாரோட தம்பின்னு மறைச்சு, அவங்க செய்த சதி திட்டத்தை மறைச்சதுக்கு” என்றவனை புஜத்தில் கிள்ளினாள்.

“அவ்வா… விதுரா சத்யா சார் தம்பின்னு எனக்கே கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும். அதுவும் அவங்க சதி திட்டம் செஞ்சதுலாம் எனக்கே தெரியாது” என்றதில் விதுரனும் விழித்து விட்டு “எனக்கும் தான் தெரியாது” என்றான் பரிதாபமாக.

அகிலோ பூமிகாவிடமே வாக்குவாதத்தைத் தொடர்ந்தான்.

“அவனை விடு, நீ ஏன் எங்ககிட்ட சொல்லல?”

“டேய் என்னை மட்டும் சொல்ற… இதயா மேம், மிதுவோட அக்கான்னு உனக்கும் தான ஏற்கனவே தெரியும் அப்போ அதை ஏன் என்கிட்ட சொல்லல?” எனப் பொருமினாள்.

“ஹே ஒரு தடவை காலேஜ் படிக்கும்போது, அம்ரி அக்கா இவளை பாக்க வந்தாங்க. அப்போ இவ சோகமா இருந்தாளேன்னு என்ன ஏதுன்னு விசாரிச்சேன். அவளும் சோகத்துல இருந்ததனால எல்லாத்தையும் கொட்டுனா. அப்போதைக்கு அதை யார்ட்டயும் ஷேர் பண்ற ஐடியால அவள் இல்லைன்னு சொன்னா. என்னை நம்பி அவளைப் பத்தின ஒரு விஷயத்தை சொன்னப்ப நான் எப்படிடி ப்ரெண்டா இருந்தா கூட உங்க கிட்ட சொல்ல முடியும்?” அகில் நியாயமாய் கேட்க,

“ஹான்… அதே மாதிரி தான், விதுரா என்னை நம்பி அவன் கஷ்டத்தை சொல்லிருக்கும்போது, ப்ரெண்டாவே இருந்தாலும் உங்கிட்ட எப்படி அவனோட ரகசியத்தை சொல்ல முடியும்?” என்று அவனை லாக் செய்திருந்தாள்.

“ரைட்டு விடு! பழிக்கு பழி சரியாப்போச்சு” என அழகு காட்டிய அகில், மிதுனாவின் வாடிய முகத்தைக் கண்டு “என்ன நம்ம ரெண்டு பேரும் இவங்களை பத்தி டிஸ்கஸ் பண்ணிருந்தா ஒரு காதல் ஜோடியோட ரெண்டு காதல் ஜோடியை அப்பவே சேர்த்து விட்டு ப்ரோக்கர் வேலை பார்த்துருக்கலாம்…” என்று நமுட்டு நகையுடன் கூறினான்.

அதில் விதுரனும் மிதுனாவும் அவனை ஒன்றாய் முறைக்க, இதயாம்ரிதாவிற்கு தான் இந்த மாதிரி ஒரு நாள் கூட அவளது நட்புகள் நம்பிக்கையின் அடிப்படையைக் காட்டியதில்லை என்ற உண்மை சுட்டது.

அவர்கள் அவர்களுக்கே உண்மையாய் இல்லாதபோது அவளுக்கு மட்டும் எப்படி உண்மையாக இருப்பார்கள்?

———-

யாமினியின் உடல்நிலை இனி முன்னேற வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கையை விரித்து விட, அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்த செயற்கை சுவாசத்தை நிறுத்துவதே உசிதம் என்ற முடிவுக்கு வந்தனர்.

நிலோபர் அழுது தீர்த்தாள். இந்தக் கலவரத்தில், சத்ய யுகாத்ரன் வெளியிட்ட வீடியோக்களை அலசி ஆராய்ந்த போது நிலோபரும் ஷ்யாமும் அவர்கள் காதலுக்கும் உண்மையாக இல்லை என்பது புரிய இருவரும் ஒருவரை ஒருவர் ஏறிட இயலாமல் தவித்தனர்.

இதில் விஷாலுக்கு பெரிய இடியாக அமைந்தது, தனது திட்டத்தை எல்லாம் பாழாக்கி நிவான் சத்யாவை அடக்க செய்த முயற்சிக்கு எதிராக, நிவான் மீது போதைப்பொருள் வழக்கை பதிவு செய்திருந்தான் சத்யா. அது உண்மையான வழக்கும் கூட.

அதில் நிவான் சிக்கித் திணறி இருக்க, தற்போது அமைச்சரும் அவனுக்கு எதிராக இருப்பதை புரிந்து கொண்டவனுக்கு, சத்ய யுகாத்ரனிடம் அடி வாங்கியது வேறு கடுங்கோபத்தைக் கொடுத்தது.

அவனை யோசிக்க விடாதவாறு நிவோராவின் பெரும்பங்கு அவன் செய்த குளறுபடியில் மீண்டும் இதயாம்ரிதாவிற்கே கிடைத்தது.

ஒளிராவின் உற்பத்தியில் இதயாம்ரிதா கவனம் செலுத்த, அதனை சரியான முறையில் பிராண்டிங் செய்வதற்கு வெகு நேர்த்தியாய் அடிகளை எடுத்து வைத்தான் சத்ய யுகாத்ரன்.

ரவிச்சந்திரனுக்கு பெரும் அதிர்வு. திடீரென அமைச்சர் அவரை நம்பாமல் பணத்தை கை மாற்றியதில்!

அலுவலகத்திற்கு வந்த ஸ்ரீராமை சரமாரியாகத் திட்டி விட்டார்.

அவனோ, “என்னைக்கு நீங்க சத்யாவோட வாழ்க்கைல விளையாட நினைச்சீங்களோ அப்பவே உங்களுக்கு சோதனை காலம் ஸ்டார்ட் ஆகிடுச்சு டாடி. அதுவும் இல்லாம, ஒரு நல்ல பொண்ணோட மானத்தை விலை பேசி குடுத்துருக்கீங்க… இமேஜஸ் வச்சு கேவலமான வீடியோஸ உருவாக்குனது உங்க டீம் வச்சு தான?” என சீறினான்.

“அவள் நல்ல பொண்ணுன்னு நீ சர்டிபிகேட் குடுக்கத் தேவையில்லை. எப்ப என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். உன்னை தான் நான் ஆபிஸ் பக்கம் வர கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல” என அவரும் கொந்தளித்தார்.

மேலும், “இங்க வந்து பெத்த தகப்பனை வேவு பார்த்துட்டு போய் அங்க சொல்றதுலாம் கேவலம் இல்லையா?” என எகிறினார்.

“நீங்க என்னைப் பெத்த பையனா பாக்கல. ஏதோ உங்க பிசினஸ்கு ஒரு வாரிசா பார்த்தீங்க. அன்னைக்கு நைட்டு சத்யா மட்டும் வந்து நான் செஞ்ச குளறுபடியை சரி செய்யலைன்னா, அன்னைக்கே நீங்க என்னைத் துரத்தி இருப்பீங்க தான?” என்றவனின் குரலில் வெறுப்பு பரவியது.

“பின்ன, ஒண்ணுத்துக்கும் உதவாதவனை வச்சு என்ன செய்றது?” வார்த்தைகளை அள்ளி வீசிய தந்தையை உணர்வற்று பார்த்தவன், “அப்போ உங்களுக்கு உதவிகரமா இருக்குற ஆளுங்களையே வச்சுக்கோங்க. எனக்கு இப்ப உண்மையாவே நிவோரா உங்க ஐடியாவான்னு டவுட்டா இருக்கு. நீங்க ஏதோ வேணும்னு வெஞ்சன்ஸ் வச்சுட்டு அந்த ஆளு இறந்தப்பறமும் இதயாவை டார்ச்சர் பண்றீங்க!

இது புரியாம, என்னையும் சத்யாவையும் அவளுக்கு எதிரா வேலை பாக்க விட்டுருக்கீங்க. பெத்தவங்க கூடபிறந்தவங்க , கூடவே வளர்ந்தவங்களை நம்புனோம்பா. அது எங்க தப்பா?” எனும்போதே அவன் விழிகள் நீரால் சிவந்தது.

அதற்கு மேல் பேச ஒன்றுமில்லையென, “எனக்கு சேர வேண்டியது எனக்கு வந்தாகணும்” என்று திட்டவட்டமாக மிரட்டி விட்டே அங்கிருந்து சென்றான்.

அந்நேரம் சரியாக இதயாம்ரிதா அவனுக்கு அழைக்க, தொண்டையை சரி செய்து கொண்டவன், அழைப்பை ஏற்று “ம்ம்” என்றான்.

“சத்யா இருக்காரா? கால் பண்ணேன் எடுக்கல” எடுத்ததும் அவள் வினவ, “இல்ல…” இன்னும் தந்தை கொடுத்த வலியில் வராதவனாக கலங்கிய குரலை கட்டுப்படுத்திக்கொண்டு கூறினான்.

“ஓ…” சரி ஓகே என அழைப்பைத் துண்டிக்க எத்தனித்தவள், “அண்ட் பத்மா அம்மா பத்தி விசாரிக்கிறேன் சொன்னியே? அது என்னாச்சு?” என வினவ, “எந்த லீடும் கிடைக்கல. விஷால் வாயை திறந்து சொன்னா தான் உண்டு…” என்றவனின் குரலில் எப்போதிருக்கும் நக்கல் தன்மை இல்லாததை அப்போது தான் உணர்ந்தாள்.

“ஹ்ம்… வில் ஸீ! ஆபிஸ்க்கு வா உங்கிட்ட பேசணும்” என்று அழைப்பைத் துண்டித்து விட, சுருங்கிய புருவத்துடன்  காரை எடுத்தான்.

சிறிது நேரத்தில் சத்யாவே இதயாம்ரிதாவை அழைக்க, அத்தனை நேரமும் ஏதோ யோசனையில் கழித்தவளின் இதழ்கள் தானாய் மலர்ந்தது.

“எங்க ப்ரொஃபி போனீங்க?”

“வேலையா வந்தேன் இதயா. தேடுனீங்களா மேடம்?” அவன் குரலில் சிறு குறும்பு.

“பின்ன தேட மாட்டோமா!” அவளது வார்த்தைகளிலும் சிறு கிறக்கம்.

அதன் பிறகு சில நிமிடங்கள் தேவையற்ற எதை எதையோ அவசியமானது போல பேசி புன்னகைத்துக் கொண்டார்கள்.

பின் பணியின் நிமித்தம் இருவரும் விருப்பமின்றி அழைப்பைத் துண்டிக்க, அகில் சத்யாவையே முகத்தைச் சுருக்கிப் பார்த்தான்.

இதயாம்ரிதாவின் அழைப்பில் சாலையில் காரை நிறுத்தி விட்டுத் தனியே நின்று பேசியவனின் கால்கள் தரையிலேயே இல்லை. ஒற்றைக் கல் ஒன்றை எத்தி விட்டபடி, புது மலர்வில் முகம் விசுகிசுக்க கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டிருந்தான்.

பேசி விட்டு மீண்டும் மீண்ட கம்பீரத்துடன் காரில் ஏற, அகிலோ “ஏதோ நீங்க யாருக்கும் தெரியாம கள்ளக்காதலிட்ட பேசுற மாதிரி ஏன் சார் இப்படி தனியா போய் பேசுறீங்க. என் முன்னாடி பேசுனா நான் என்ன கண்ணா வைக்க போறேன்” என்று சிலுப்பினான்.

“நீ லவ் பண்ணும்போது வேணும்னா, ஊரையே கூட்டி வச்சு பேசு” என்ற சத்யாவிடம், “பேசுவேனே நமக்கு இந்த வெ. மா. சு எல்லாம் இல்லை!” என்றான் இளித்து. பின் சத்யாவின் முறைப்பில் வாயை மூடிக்கொண்டான்.

இங்கோ, புத்தம் புது நாணம் பாவையின் கன்னங்களை சிவக்க செய்தது.

அவனை நினைத்தாலே தானாய் நாணம் ஒட்டிக்கொள்வது ஏனோ!

அப்போது தான், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர் மாலதியும் கீர்த்தனாவும்.

அவர்கள் கையில் மிகப்பெரிய உணவு கேரியர் இருந்தது.

“என்ன அத்தைகளா, டூர் எதுவும் போறீங்களா? இவ்ளோ பெரிய பேக்கிங்கா இருக்கு” எனக் கேலியாய் கேட்டவளை முறைத்த மாலதி, “நீயும் அவனும் தான் வீட்டுக்கு வர மாட்டுறீங்க. அதான், நாங்களே உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தோம்… வா சாப்பிடலாம்” என்று மாலதி டிபனை பிரிக்க இதயா விழித்தாள்.

“அத்தை மணி ஒன்னு தான் ஆகுது.”

“எனக்குத் தெரியுமே உமா உன்னை பத்தி சொல்லிட்டாங்க” கீர்த்தினா குறுக்கே புகுந்தார்.

தாடையை தடவிக்கொண்டவள் “என்ன சொன்னாங்க?” எனக் கேட்க,

“நீ அவங்களை ஆபிசுக்கே வர விட மாட்டியாம். லன்ச் கொண்டு வரேன்னு சொன்னாலும் வெளில இருக்கேனு சொல்லிடுவியாம், அப்படியே வம்படியா லன்ச் கொண்டு வந்தாலும், வச்சுட்டு கிளம்ப சொல்லிட்டு அதை சாப்பிடாம அப்படியே வச்சுடுவியாம். ஓவர் கம்பளைண்ட் வந்துச்சு. அதான் இன்னைக்கு மாமியார் பவரை காட்டலாம்னு நாங்க வந்துட்டோம்” என்றார் மாலதி.

இருவரும் விறைப்பாய் நிற்பதைக் கண்டு அவளுக்கே சிரிப்பு வந்தது.

அகத்திலிருக்கும் மென்மை அவர்களது முகத்திலும் தெரிந்தது.

“உங்க பையன்கிட்ட எல்லாம் காட்ட மாட்டீங்களா?” இதயா கேட்க,

“அவனுக்கும் போன் பண்ணியாச்சு, வந்துட்டு இருக்கான் நீ போய் கையை கழுவிட்டு வா, போ!” என்று அதட்டலாக கூறியதில், “ஹ்ம்ம் நமக்கு வாய்க்கிற மாமியாரெல்லாம் சோறை தூக்கிட்டு வர்றதுல கரெக்ட்டா இருக்காங்க” என தனக்கு தானே கிண்டல் செய்து கொண்டாள்.

———–

இதயாம்ரிதா வரக்கூறியதில் ஸ்ரீராம் அலுவலகத்திற்கு வர, சத்யாவும் வந்து விட்டான்.

வரவேற்பறையிலேயே ஸ்ரீராமைப் பார்த்து விட்டாள் பத்மபிரியா.

இதயாம்ரிதா அறைக்குள் அவன் நுழைந்த சில நிமிடத்தில் அவளும் எதோ வேலை விஷயமாக கேட்க வருவது போல அங்கு வந்தாள்.

நண்பனின் முக சோர்வே நடந்ததை எடுத்துரைக்க, “என்னாச்சு மச்சி” என சத்யா கேட்க, “ஒன்னும் ஆகலையே. உன் பிளவ்ட் லவர் தான் ஏதோ பேசணும்னு சொன்னா…” என்றான்.

இதயாம்ரிதாவோ கீர்த்தினாவின் சமையலில் தன்னை மறந்து மூழ்கி, “அத்தை சாப்பாடு வேற லெவல் போங்க” என்றிட, கீர்த்தனாவிற்கு பெருமையாய் இருந்தது.

மாலதி, “தம்பி நீங்களும் சாப்பிட வாங்கப்பா” என்றிட,

இதயாம்ரிதா அவரை முறைத்தாள்.

“அத்தை என்னை மட்டும் மிரட்டி சொன்னீங்க. அவங்ககிட்ட மட்டும் கெஞ்சிட்டு இருக்கீங்க. இப்டி எல்லாம் பார்ஷியாலிட்டி பார்த்தா, அப்பறம் மிச்சம் வைக்காம நானே எல்லாத்தையும் சாப்புட்ருவேன் பாத்துக்கோங்க” என்று விழிகளை உருட்டி மிரட்டினாள்.

மாலதி அடக்கப்பட்ட புன்னகையுடன், “சாப்பிடுமா உன்னை யாரு வேணாம்னு சொன்னா. ஆனா அதுக்கு அப்பறம், நீ நடந்து போக முடியாது. உருண்டு தான் போகணும்” என்றதில் கிளுக்கென சிரித்தான் சத்ய யுகாத்ரன்.

“ஹலோ ப்ரொஃபி… என்ன சிரிப்பு அங்க?” எனக் கண்ணை சுருக்கி முறைக்க,

“சும்மா சிரிச்சு பிராக்டிஸ் பண்ணேன் பொண்டாட்டி” என்று கண் சிமிட்டி கரைத்தான்.

“நல்லா கூஜா தூக்குற சத்யா!” கீர்த்தனா வாரிட,

“தட்ஸ் மை டியூட்டி சித்தி” என்றான் பணிவாக.

அவளுக்கு தான் வெட்கம் பிய்த்து தின்றது.

ஸ்ரீராமிற்கு நண்பனே புதிதாக தெரிந்தான்.

அவன் முகம் காட்டும் மலர்ச்சியும் நளினமான புன்னகையும் ரசிக்கவே வைத்தது.

அதற்கு தீயிட எண்ணிய தந்தையை  எண்ணி ஆத்திரமும் எழுந்தது.

ஸ்ரீராமை வம்படியாக உண்ண வைத்து அன்பாய் பேசிய மாலதியையும் கீர்த்தனாவையும் வெகுவாய் பிடித்துப் போனது அவனுக்கு.

சத்யாவின் கடினமான நேரத்தில் உடன் இருந்த உற்ற தோழன் அவன் என்றறிந்த பின், சத்யாவின் குடும்பமே அவனைத் தூக்கி வைத்து கொண்டாடியது தான்.

ஆனாலும் தந்தையால் வெளியேற்றப்பட்ட பின்பு, யாரோ ஒருவரால் கிடைக்கும் அன்பு அவனை நெகிழ்த்தியது.

அவனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த பத்மப்ரியாவிற்கும் அவனது அமைதி உறுத்தியது.

மாலதியையும் கீர்த்தனாவையும் கிளப்பி விட்ட பின்பு, மூவரும் ஸ்ரீராமை ஒரு சேர பார்த்தனர்.

அப்போது தான் அவர்கள் பார்வையை உணர்ந்த ஸ்ரீராம், “ஏன் இப்படி பாக்குறீங்க எல்லாரும்?” எனக் குழம்பினான்.

“என்னாச்சு?” சத்ய யுகாத்ரன் கேட்டதும், “ஒன்னும் ஆகலையே” என்றான் வேகமாக.

அப்படியும் நண்பனின் பார்வை தன்னைக் குளிராய் ஊடுருவியதில் திணறியவன், “உன் பொண்டாட்டி எதுக்கு வர சொன்னான்னு கேளு” என்றான் ஈகோவை பிடித்துக்கொண்டு.

இதயாவோ ஸ்ரீராமை பார்த்தபடி, “ப்ரொபி உங்க ஆருயிர் தோழனை அவங்க அப்பா ‘நீ மாடு மேய்க்க தான் லாயக்கு’ன்னு துரத்தி விட்டதா கேள்வி பட்டேனே உண்மையா?” எனக் கிண்டலாய் கேட்க, ஸ்ரீராம் அவளைத் திரும்பி முறைத்தான்.

“அம்ரி கொஞ்சம் சும்மா இரு” பத்மப்ரியா வேகமாய் அவனுக்கு ஆதரவிற்கு வர, “நீ என்ன அவனுக்கு சப்போர்ட்டா? நம்ம எதிரி அவன்…” என்று கண்ணை சுழற்றியதில், “ஸ்கூல்ல தான் அப்டி சொல்லி சொல்லி என்னை பயமுறுத்தி வச்சீங்க. இப்பவுமா?” என நொந்தாள் பத்மபிரியா.

“நான் எப்ப உன்னை பயமுறுத்துனேன்?” இதயா முறைக்க, ஸ்ரீராம் பொங்கினான்.

“இவளை சைட் அடிக்கும்போதெல்லாம் நீ என்னை முறைச்சுட்டு போவ தான?”

பத்மபிரியாவிற்கு ஐயோ என்றிருந்தது.

இதயாவோ “என்னது சைட் அடிச்சியா? ஓ! பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்த மாறி ஒரு லுக்கு விடுவியே. அதுக்கு பேர் தான் சைட்டா? நான் கூட நீ எனக்கு எதிரா திட்டம் போட தான் பாக்குறன்னு நினைச்சுல்ல முறைச்சுட்டுப் போவேன்” என்று வாயில் கை வைக்க, பத்மபிரியா வாயை பொத்திக்கொண்டு நகைத்தாள்.

“இந்த அசிங்கம் தேவையா?” சத்யா நண்பனை பரிதாபமாய் பார்க்க, ஸ்ரீராம் குமுறினான்.

“அடிப்பாவி… இவளை கரெக்ட் பண்ண வேற வழி தெரியாம, லவ்வ எப்படியாவது சொல்லலாம்னு நினைச்சு ஒரு நாள் இவளை லாக் பண்ணேன்…” என்றதும் பத்மாவோ “இந்தக் கதை இப்ப எதுக்கு?” என நெளிந்தாள்.

“உண்மை உலகத்துக்கு தெரியனும்ல” ஸ்ரீராம் சலித்து விட்டு தொடர்ந்தான்.

“அப்போ உன் வீணாப்போன ப்ரெண்ட்ஸ் கூட வந்து, ஆட்டத்தை கலைச்சு விட்டதோட இல்லாம, ஏதோ அப்போ அப்போ என்னை பார்த்து சைட் அடிச்சுட்டு இருந்தவளை மொத்தமா பார்க்க விடாம பண்ணிட்டீங்க…” என சோகமே உருவாய் அமர்ந்தான்.

“நான் எப்ப உன்னை சைட் அடிச்சேன்?” பத்மப்ரியா வேகமாய் மறுக்க,

“க்கும்… பட்டிக்காட்டான் மிட்டாயை பார்த்த மாறி நீ பார்த்ததுக்கு என்ன அர்த்தம்?” என்றதில் அசடு வழிந்தாள்.

“அது அது… உன்னைப் பாக்கணும்னு தோனும். ஆனா அது என்ன பீலிங்ன்னு புரியாது” என்றாள் மெல்லமாக.

“இப்ப வரைக்குமா?” ஸ்ரீராம் கேட்டதில், அவளுள் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

தன்னையே பள்ளிக்காலத்தில் சுற்றி வந்த விழிகள் அவனது. சேட்டையும் சண்டையுமாக நகர்ந்த நாள்கள் அவை. இன்னதென்று புரியும் முன்னே தனது மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தவனாகிற்றே. ஆனாலும், அதனை வெளிக்காட்ட பயம். அவன் பன்னிரண்டாவது முடித்து பள்ளி விட்டுப் போகும்போது உள்ளுக்குள் நொறுங்கி போன தருணங்கள் எல்லாம் அவள் அடி நெஞ்சில் பதுங்கிப் போன நினைவுகள்.

இதயாம்ரிதாவோ யோசித்து விட்டு, “எனக்கு அப்படி எதுவுமே ஞாபகம் இல்லையே. ஏதோ பிரச்சினைனு சொல்லி தான் எல்லாம் கும்பலா வந்தாங்க. சரி நம்மளும் அதே ப்ளோல போவோம்னு வந்தேன்” என்றவளை உறுத்து விழித்தான் ஸ்ரீராம்.

சத்யாவோ “அது இருக்கட்டும். அப்படி உங்களுக்குள்ள என்ன தான் பிரச்சினை” எனக் கதையாக கேட்க,

“அதை நான் சொல்றேன் ப்ரொஃபி” என வேகமாக எழுந்து சத்யாவிற்கு மறுபுறம் அமர்ந்து கொண்டாள்.

“இவன் எப்ப பார்த்தாலும் என்கிட்ட வம்பிழுப்பான் ப்ரொஃபி” என அவள் குறை கூற, அவளது குண்டு விழிகளில் தொலைந்து போனது அவன் இதயம்.

“ஏய் நிறுத்து… நான் என்னைக்காவது உங்கிட்ட வாண்டடா வந்து வம்பிழுப்பேனா? என் ப்ரெண்ட்ஸ் கலாய்ப்பாங்க. உன் ப்ரெண்ட்ஸ் அதுக்கு சண்டைக்கு வருவாங்க…” என்றவன், “மச்சி இவ தான் நான் ஸ்கூல் படிக்கும்போது என் அசைன்மென்ட்டை எல்லாம் கிழிச்சு விடுவா என் கிளாசுக்கு வந்து…” என்றான் மூச்சிரைத்து.

“அவ்வா… நான் எப்போடா அதெல்லாம் செஞ்சேன். ப்ரொஃபி அவன் பொய் சொல்றான். நான் அப்பல்லாம் என் அப்பா மேல பைத்தியமா இருப்பேன். அவரை பத்தி தப்பா ஒரு வார்த்தை சொன்னா கூட செம்ம கடுப்பாகிடுவேன். ஆனா இவன் ப்ரெண்ட்ஸ் என்ன செய்வாங்க தெரியுமா, வேணும்னே இவன்கிட்ட பேசுற மாதிரி, ‘டேய் ராம், டேய் பிராடு ராம்’னு கெட்ட கெட்ட வார்த்தை கூட பேசி என் அப்பாவை திட்டுவானுங்க…” என்று குமுறினாள்.

இந்தப்பக்கம் சத்யாவைப் பிடித்து இழுத்த ஸ்ரீராம், “மச்சி அவளை நம்பாத, நான் பிறக்குறதுக்கு முன்னாடியே எங்க அம்மா அந்த பேரை வச்சுட்டாங்க. அதுக்கு அப்பறம் தான், என் அப்பாவுக்கும் இவள் அப்பாவுக்கும் பிரச்சினை ஆகிடுச்சு. அதுனால அப்பா என் பேரை மாத்த சொல்லி சண்டை போட்டும் என் அம்மா மாத்தவே இல்லையாம். அதை வச்சு இவளை வெறுப்பேத்துறேன்னு என் ப்ரெண்ட்ஸ் தான் செய்வாங்க. நான் கம்முனு தான் இருப்பேன்…” என்றான் கோபத்துடன்.

இம்முறை சத்யாவை இழுத்த இதயாம்ரிதா, “நிவோரா ஸ்டார்ட் பண்ணது என் தாத்தா. அதுக்கு அப்பறம் தான் என் அப்பா உள்ள வந்தாரு. இவன் சொல்றது பார்த்தா இவன் பிறக்குற வரைக்கும் என் அப்பாவுக்கும் இவன் அப்பாவுக்கும் எந்த கனெக்ஷனும் இல்லை தான. அப்பறம் எப்படி நிவோரா ஐடியாவை திருடுனதா அந்த ரவிச்சந்திரன் உருட்டிட்டு இருக்காரு?” என்றதில் ஸ்ரீராம் முறைத்து வைத்தான்.

சத்யா தான், “அடச்சே நிறுத்துங்க… என்ன பிரச்சினைன்னு கேட்டா, எல்லா பிரச்சினையையும் சொல்றீங்க. இப்ப என் கேள்வி உங்க ரெண்டு பேருக்குள்ள எக்ஸாக்ட்டா என்ன பிரச்சினை?” என அழுத்திக் கேட்க, இருவரும் தலையை சொறிந்தனர்.

“அது இத்தனை வருஷம் ஆச்சுல்ல மறந்து போச்சு” இளித்து வைத்த ஸ்ரீராமை வெறியாய் முறைத்தவன், “ஈகோ க்ளாஷ் தான் உங்க பிரச்சினை. ஒழுங்கா ஓடிடுங்க” என்று வெறியானவன், “பத்மா ஈவ்னிங் ஒரு மீட்டிங் அரேஞ்சு பண்ணு…” என்று அவளுக்கு உத்தரவு கொடுத்தபடி வெளியில் செல்ல, அவளும் ஸ்ரீராமை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியில் சென்றாள்.

ஸ்ரீராமும் இதயாம்ரிதாவும் ஒருவரை ஒருவர் முறைத்தவாறு இருக்க, “உன் அசைன்மென்ட் நான் கிழிக்கல…” என்றாள் அவள்.

“நானும் உன்னை கலாய்க்கல” அவனும் உர்ரென உரைத்தான்.

பின் அவனும் எழுந்து வெளியில் செல்ல போக, “பத்மா அம்மா என்ன ஆனாங்க?” எனக்கேட்டாள்.

“அதான் சொன்னேனே விஷால் தான் சொல்லணும்னு…”

“அவன் சொல்லட்டும். நீ சொல்லு முதல்ல?” என்றவளை கண்டு விழித்தவன், “வேணாமே… அவங்களை கடைசி வர தேடிட்டு மட்டுமே இருக்குறது நல்லது…” என்றான் இளகி.

“சோ அவங்க இப்ப உயிரோட இல்ல” இறுக்கத்துடன் கேட்டவளை வருத்தமாய் பார்த்தான்.

அவள் முகத்தில் வேதனை வழிந்தோடியது. “இதை எப்படி அவள் அக்செப்ட் பண்ணிக்குவா…” நெற்றியில் கை வைத்துக்கொண்டாள் சோர்ந்து.

“சொல்ல வேணாம்… இப்படியே விட்டுடலாம்” ஸ்ரீராம் சொன்னதில், “ப்ச் இருக்குற குற்ற உணர்ச்சில இது வேறயா. வேண்டாம் ராம். சொல்லிடலாம்” என்றாள் பெருமூச்சுடன்.

“அதுசரி இது உனக்கு எப்படி தெரியும். சத்யா உங்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னானே” ஸ்ரீராம் வினவ,

“நீங்க என்ன பண்றீங்க? எப்படி தேடுறீங்கன்னு எனக்கு தெரியாதா? தெரிஞ்சுகிட்டேன். அவங்களை கடத்தி ஒரே மாசத்துல இறந்து போய்ட்டாங்கன்னு… பத்மாவை தப்பா வீடியோ எடுத்த அந்த வாட்ச்மேன மரண அடி அடிச்சு போலீஸ்ல ஒப்படைக்கிறதுக்கு முன்னாடி உங்ககிட்ட சொன்னது ரைட்?” என்றதும்

“எங்களை வேவு பாக்குறதை முழு நேர வேலையா வச்சுக்காத சரியா” என்று முறைத்தான்.

அதில் லேசாய் புன்னகைத்தவள், “அவள்கிட்ட விஷயத்தை சொல்லிடு” என்றதும் அவன் சிந்தித்தான்.

“எனக்குத் தெரிஞ்சு அவளே இதை கெஸ் பண்ணிருப்பா இதயா.”

“உன் லவ்வ சொல்ற ஐடியா இல்லையா?”

“லவ் எல்லாம் ஸ்கூல்லயே சொல்லியாச்சு. இப்ப வரை பதில் தான் வரலை…”

“டேய்ய்ய் ஸ்கூல் லவ்வை பிடிச்சுட்டு தொங்காம போய் லவ்வ சொல்லி தொலை” என்று கடிந்ததில், “கொஞ்சம் நிலைமை சரியானதும் சொல்றேன்…” என்று பலவீனமாய் கூறியவனை கூர்ந்து பார்த்தாள்.

“பெரிய சூர்யவம்சம் சரத்குமாரு, அவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தை வேணாம்னு தூக்கி போட்டுட்டு வர்றாரு. உன் அப்பாவை அடிச்சு அனுப்பிட்டு பிசினஸை பாக்குற வழியை பாரு ராம்” என்று கண்டித்தாள்.

“இது உனக்கு எப்படி தெரியும்?” மீண்டும் அதிர்வாய் கேட்டான்.

“உன் ப்ரெண்டு என் புருஷன்!” அலட்டலாய் உரைத்தாள் இதயா.

“அதுசரி…”

“நம்ம உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தேவை இல்ல. அப்பறம் நம்மளை விட்டுக்குடுத்துட்டு போய்டுவாங்க” இதயாவின் கூற்றில் “புரியுது… பாக்கலாம்” என்றவன் அங்கிருந்து நகன்றான்.

பத்மாவை வீடியோ எடுக்க உதவியாக இருந்த வாட்ச்மேனை பிடித்து அடித்து நொறுக்கி விட்டனர் சத்ய யுகாத்ரனும் ஸ்ரீராமும். நெஞ்சில் மிதித்தே உதைத்து பாதி உயிராக அவனிடம் வாக்கு மூலம் வாங்கி காவல் நிலையத்திற்கு அனுப்பி விட்டனர். அவர்களுடன் அப்போது விதுரன் இருந்தான்.

அவன் தான் தற்போது எது நடந்தாலும் தனது அண்ணியிடம் ஒப்பித்து விடுகிறானே!

——–

மடிக்கணினியில் வேக வேகமாய் எதையோ தட்டிக்கொண்டிருந்தான் விதுரன். மதிய உணவு வேளை தாண்டியதில் வயிறு மணி அடித்தது.

தற்போது உற்பத்திகளும் சரியான முறையில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

சொல்லப்போனால், அலுவலக வாழ்க்கை தற்போது தான் சீராக இயங்கத் தொடங்கியது.

அகில் வழக்கம்போல வெளியில் சென்று விட்டாலும், மதிய வேளையில் நால்வரும் உணவகத்தில் கூடி விடுவர்.

பூமிகாவும் அகிலும் வளவளத்துக் கொண்டாலும், மிதுனாவும் விதுரனும் அமைதியின் சிகரமாக அமர்ந்திருப்பார்கள்.

அன்றும் உணவகத்திற்கு சென்றவன், அங்கு மிதுனா மட்டும் அமர்ந்திருப்பதைக்கண்டு ஒரு நொடி தயங்கிப் பின் அவளை நோக்கி நடந்தான்.

“யாரையும் காணோம்” அவளைக் காணாது கேட்டபடி அவளுக்கு எதிரில் அமர்ந்தவனிடம், “தெரியல…” என்றாள் பட்டும் படாமல்.

“ம்ம்!”

அவனுக்கு முன்னே அவள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த உணவு வீற்றிருக்க, அவளும் உண்ணவில்லை என்பது இன்னும் கலையப்படாத தட்டிலேயே தெரிந்தது.

அவன் உண்ண ஆயத்தமானதும் அத்தனை நேரமும் அவனைத் தவிர்க்க உபயோகித்த அலைபேசியை ஓரமாய் வைத்தவள், தானும் உண்டாள்.

முயன்ற அளவு முகம் பார்ப்பதை தவிர்த்தாலும், ஒரு கட்டத்தில் இருவரின் விழிகளும் ஒன்றாய் தீண்டிக்கொள்ள, ஏனோ மனமும் அடிபட்டுப் போனது.

அதற்கு மேல் உண்ண இயலுமென்று தோன்றவில்லை மிதுனாவிற்கு.

அவள் எழ எத்தனிக்கும்போதே அவனும் வேகமாய் எழுந்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

“தெரியாம கூட உன்னை பாக்கல போதுமா. சாப்பிடு” தொண்டை அடைக்க கூறியவனை வெடுக்கென திரும்பி பார்த்தவளிடம், “இப்ப நீ தான் என்னை வச்ச கண்ணு வாங்காம பார்த்து வைக்கிற? நான் என்ன எந்திரிச்சா போறேன்” என முணுமுணுத்தான்.

லேசாய் தளர்ந்தவள், சில நொடிகள் அமைதி காக்க, இம்முறை “சாரி மிது. அண்ணியை தப்பா பேசுனதுக்கு” என மனமுவந்து மன்னிப்பு வேண்ட, அவனது ‘அண்ணி’ என்ற வாசகமும் உணர்ந்து கொண்ட தவறும் அவளுக்கு சட்டென நிம்மதியைப் பரப்பியது.

தானாய், “நானும் சாரி, சத்யா மாமாவை பத்தி வாய்க்கு வந்ததை பேசுனதுக்கு” என்றிட, அவனிடமும் இறுக்கம் தளர்ந்து போனது.

சடுதியில் அவள் கையைப் பிடித்துக் கொண்டவன், “என் குடும்பம் மொத்தமும் பட்ட அடி தான் எனக்கு இந்த பணக்காரங்க மேல நல்ல அபிப்ராயத்தை குடுக்காம விட்டுச்சு மிது. ஆனா அதுக்காக கூட பழகுன உன்னை பத்தி எனக்கு தெரியாதா? நீ வேணும்னே தான என்கிட்ட உன்னை பத்தி சொல்லாம மறைச்ச?” என்றதும் அவள் கலங்கிய விழிகளுடன் அவனைப் பார்த்தாள்.

அதுவே அவளது வலியை பறைசாற்றிட துடித்து போனான்.

“மிது” அவளது கையில் வாகாய் முத்தமிட்டு கன்னத்தில் உரசிக்கொண்டான்.

அதனை கண் மூடி அனுபவித்தவள், “எனக்குன்னு முதல் முதல்ல கிடைச்ச ப்ரெண்ட்ஸ் நீங்க தான். அம்மா, அப்பா இறந்து, என் பெரியப்பா கூட என்னை அவமானப்படுத்தி அனுப்புனதும் எனக்கு தனிமையே கொடுமையா இருந்துச்சு விதுரா.

இதுல அம்ரியோட நிலைமையை பார்த்தா, இன்னும் அதிக பயம். என்னோட பயம் அழுத்தமெல்லாம் கண்ட்ரோலா இருந்ததுக்கு காரணமே உங்க மூணு பேரோட ப்ரெண்ட்ஷிப் தான்.

நீ எனக்கு எப்பவும் ஸ்பெஷல் விதுரா. அகில்கிட்ட சொன்னப்ப இருந்த தைரியம் சுத்தமா உங்கிட்ட சொல்லணும்னு நினைக்கும் போது வரவே இல்லை. நீ என்னை வெறுத்துட்டா? என் ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டா… அதை நினைக்கும்போதே ரொம்ப பெயின்னா இருக்கும். அதுக்காக மறைச்சே வைக்க முடியாதுல… அதான் அம்ரி என்னை இங்க வந்து ஆபிஸ்ல ஜாயின் பண்ணிக்க சொன்னப்ப, உங்களையும் சேர்த்து இழுத்துட்டு வந்தேன். பட் என்னன்னவோ ஆகிடுச்சு…

என்னவோ, நீ என்னை தப்பா நினைக்கிறதை மட்டும் ஏத்துக்க முடியல விதுரா…” எனும்போதே தனது முட்டாள்தனம் உணர்ந்து அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான் விதுரன்.

அதில் திகைத்து விழித்தவள், “டேய்… கேன்டீன்ல இருக்கோம்” எனக் கன்னத்தை துடைத்துக்கொண்டு வெட்கப்புன்னகை பூக்க,

“ஒன்ஸ் அகைன் சாரிடி” என்றான் தவிப்பாக.

“ப்ச் விடுடா. ஏதோ ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். நானும் இடைல ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிட்டேன்.”

“ம்ம்… அதுக்கும் நான் தான காரணம்” சுண்டிய முகத்துடன் கூறியதில், “இல்லடா… நானுமே ஒரு காரணம் தான். விஷயம் தெரிஞ்ச பின்னாடியும் உங்கிட்ட கோபத்தை காட்டிட்டேன்” என்றாள்.

“நீ கோபப்படுறன்னா உங்கிட்ட பேசி அடி வாங்கியாவது சரி பண்ணிருக்கணும். நான் தான் காரணம் மிது” என மாறி மாறி பேசிக்கொள்ள,

“டேய்ய்… நீங்க பேசுறதுக்கே இப்ப நாங்க தான் காரணம்!” என்று அவர்கள் முன்னே கையை கட்டிக்கொண்டு நின்றாள் இதயாம்ரிதா.

அவளுடன், சத்ய யுகாத்ரனும் அகில் பூமிகாவும் நிற்க, இருவரும் திருதிருவென விழித்தனர்.

சத்யா நமுட்டு நகை புரிய, பூமிகா “சத்யா அண்ணா செம்ம ஐடியா குடுத்தீங்க…” என்று சிலாகித்தாள்.

“எதுக்கு ஐடியா?” விதுரன் தமையனைக் கண்டு நெளிய,

அகிலோ, “ஹான் ஒரு நாளைக்கு எங்க ப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணிட்டு போக சொன்னாரு. அதுனால எங்களோட லன்ச் டைமை தியாகம் பண்ணிட்டோம்… அது ஒரு ஜோடிக்கிளியை சேர்த்து வச்சுருச்சு” என்று ராஜ்கிரண் தோரணையில் பேசியதில், மிதுனாவிற்கு வெட்கம் பெருகியது.

சத்யா அகில் தோள்மீது ஒரு கையை போட்டு ஸ்டைலாக நின்று, “இதுல இருந்து என்ன தெரியுது…” என்றான் கேள்வியாக.

“என்ன தெரிகிறது?” அகில் கேட்க,

“ம்ம் உங்க ப்ரெண்ட்ஷிப்பை எப்பவோ கட் பண்ணிருந்தாவே அவங்க கபில் ஆகிருப்பாங்கன்னு” என வாரியதில், மிதுனாவும் விதுரனும் வெடித்து சிரித்தனர்.

“அட துரோகிங்களா” என இருவரையும் வெறித்த அகிலும் பூமிகாவும் அவர்களை அடிக்க துரத்தினர்.

அவர்களை சுவாரசியமாய் கண்டு நகைத்த இதயாம்ரிதாவும் சத்ய யுகாத்ரனும் ஒருவரை ஒருவர் ஆழமாய் பார்த்துக்கொண்டனர்.

இப்போதெல்லாம், அவள் மடியில் பாதி இரவுஅவனும், அவன் மடியில் பாதி இரவு அவளுமாக உறக்கத்தையே பகிர்ந்து கொள்கின்றனர்.

அதனால் தானோ என்னவோ, இதயாம்ரிதாவின் எண்ணங்களும் நேர்மறையாகவே இருந்தது.

எதையும் எண்ணி கசந்து போவதில்லை. முடிந்த வரை கடக்க முயற்சிக்கிறாள்.

———–

அன்றும், பால்கனியில் அமர்ந்து தனது மடிமீது படுத்துக்கொண்டு சில்மிஷம் செய்து கொண்டிருந்த ஆடவனை ரசனையாகப் பார்த்திருந்தாள் இதயாம்ரிதா.

ஒற்றை விரலால் அவளது கன்னத்தை அளவெடுத்து கொண்டிருந்த சத்ய யுகாத்ரனிடம், “உங்களுக்கு என்ன பிடிக்கும்?” எனக் கேட்டாள்.

“என்ன பிடிக்கும்னா, உன்னை பிடிக்கும்” என்றான் குறும்பாக.

“அது தெரியுமே… வேற என்ன பிடிக்கும்னு கேட்டேன். லைக் கலர், சாப்பாடு இப்படி…” என்றவளிடம், “நம்ம லவ் பண்ண ஆரம்பிச்சு ஐ மீன் பர்ஸ்ட் டைம் மீட் பண்ணதுல இருந்து கிட்டத்தட்ட 4 வருஷம் இருக்குமா?” அவன் கேட்டதும் “இருக்குமே” என தலையாட்டினாள்.

“லவர்க்கு பிடிச்ச கலர் கூட தெரியாம லவ் பண்ணிருக்கா…” மூக்கை சுருக்கி கொண்டவனைக் கண்டு சிரித்தவள், “இவ்ளோ பேசுறீங்களே உங்களுக்கு தெரியுமா எனக்கு என்ன கலர் பிடிக்கும்னு” எனக் கேட்டதும் அவன் திருதிருவென விழித்தான்.

பின் இருவரும் ஒன்றாய் நகைக்க, அவளையே குறுகுறுப்பாக ஏறிட்டான் சத்யா.

உனக்கு எது பிடித்தால் என்ன?
உன் சித்தத்தில் பித்தானது
உன்னவன் மட்டும் தானே!

கவிதையாய் காதலை கொட்டியவனை விழி விரித்து பார்த்தவள், “பாருடா… இந்த ப்ரொபஸருக்கு பாடம் சொல்லிக்கொடுக்க மட்டும் தான் தெரியும்னு நினைச்சேன்…” என்று நக்கலடித்தாள்.

“பாடம் சொல்லிக்கொடுக்கவும் தெரியும் பொண்டாட்டி. இப்ப நான் ஆஃப் டியூட்டில இருக்கேன்” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு வேறு அர்த்தத்தில் கூற அவள் சிவந்தாள்.

மீண்டும் சில நொடி கொஞ்சல்களுக்குப் பிறகு, அவனே கேட்டான்.

“உன் பர்த்டே எப்போ?” என்று.

“அட ப்ரொஃபி… உங்களுக்கு இது கூட தெரியாதா?” எனப் போலியாய் முறைக்க, “உனக்கு மட்டும் தெரியுமாடி” என்றான் கேலியாக.

“ஹி ஹி தெரியாது. சொல்லுங்க” என்றதும் சற்றே நிதானித்தவன், “கேள்வி கேட்டது நான்…” என்றான்.

“அப்போ பதில் சொல்லுங்க…” என்று குறும்பாய் கண்ணடித்தாள்.

“நீ பர்ஸ்ட் சொல்லுடி”

“நோ நீங்க தான்…”

இருவரும் மாறி மாறி பேசிக்கொண்டாலும் மறந்தும் பிறந்த தேதிகளை பகிர்ந்து கொள்ளவில்லை.

சீண்டல் கொஞ்சலாக மாறி இருவரும் அணைப்பின் பிடியில் கழிந்து பின் மீண்ட பிறகு, இருவரின் முகமும் மெல்ல மெல்ல கசங்கிப் போக, இம்முறை அவள் தீவிரமாய் கேட்டாள்.

“பர்த்டே டேட் சொல்லுங்க ப்ரொஃபி” என்று.

“மார்ச் 12…” வெறுமையாய் உரைத்தவனைத் திகைத்து பார்த்தாள்.

அவளுக்கும் விஷாலுக்கும் திருமணம் நிகழ்ந்த தினம்.

சுண்டிப்போன பெண்ணவளின் நாடியை நிமிர்த்தி “உன்னோடது?” எனக் கேட்க,

“நவம்பர் 4” என்றாள் முணுமுணுப்பாய்.

இம்முறை திகைத்தது அவன் முறையாகிற்று.

அன்று தான், அவனை கடற்கரைக்கு அழைத்திருந்தாள். இருவரும் காதலைப் பகிர வேண்டிய நாள் அதுவே!

இருவரின் வாழ்விலும் மறக்க கூடிய நாள்கள் கருப்பு நாளாக தொடர்ந்து வருவதில் அவனுக்கு உடன்பாடில்லை.

அதனால், “சரி இனிமே நம்ம ஒரே பர்த்டே செலெப்ரெட் பண்ணலாமா?” எனக் கேட்டான் வேகமாக.

“ஒரே பர்த்டேவா?”

“ஹ்ம்ம்… ஆகஸ்ட் 1” என்று புன்னகைத்தான்.

அன்று தான் இருவரும் நேருக்கு நேராய் ஒருவரை ஒருவர் கல்லூரியில் பார்த்து கொண்ட தினம்.

அதை கேட்ட பெண்ணின் முகம் பூவாய் மலர்ந்தது.

“டீல்!: என்று அவன் நெற்றியில் முட்ட, அவனோ இதழ் நோக்கி குனிந்தான் இளநகையுடன்.

புது காதல் மலரும்
மேகா

டியர்ஸ்… அடுத்த எபிசோட் பைனல் episode… ரொம்ப சாரி எனக்கே தெரியுது. இந்தக் கதை ரொம்ப லேட்டுன்னு… மன்னிச்சூ 🥺

அடுத்த கதைக்கு எக்ஸ்பிரஸ் ஸ்பீட்ல எபிசோட் போடுறேன் 😁

அண்ட், ஒன் மோர் திங்… என்னோட தனிப்பட்ட ஆப் லான்ச் பண்ணிருக்கேன்.  நீங்க குரோம்ல போயிட்டு pen2page.com nu search pananum. உங்களுக்கு வரலை அப்படின்னா, Megavani.writer@gmail.com என்ற மெயில் ஐடில காண்டாக்ட்  பண்ணுங்க. நான் லிங் அனுப்புறேன். அங்க தான் என்னோட எல்லா கதைகளும் பெய்ட் வெர்ஷன் ல வரும்.

இப்ப உன் ரசிகன் நானல்லவா கதையை அங்க முழு கதையா போட்டிருக்கேன். ஒரு மாசம் ட்ரையல் . அதுக்கு அப்பறம் subscription ஸ்டார்ட் ஆகும்.

இப்போ தீரா காயங்களும் தீர்ந்திடும் இனி ரிரன் பண்ண போறேன் டியர்ஸ்
..உங்களோட அன்பும் ஆதரவும் எதிர்பார்த்தே என்னோட இந்த புதிய முயற்சி. With your love and blessings 🥰🥰🥰😍🫰🏻

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 124

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
14
+1
140
+1
5
+1
5

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சத்யா ரிதா அழகு . அகில் நட்புகள் செம. ராம் பத்மா சூப்பர்.