
காதல் -35
“என்ன வெளிய ஒரே கூச்சலா இருக்கு… நான் என்னனு போய் பார்க்குறேன்.. நீ போய் கிளம்பி வா, வேலைக்கு நேரம் ஆச்சு ” என தேனு மகளை குளிக்க அனுப்பி விட்டு வீட்டு வாசலை நோக்கி வந்தார்.
எதிர் வீட்டு வாசலில் கூ கூவென சத்தமிட்டு கொண்டிருக்க.. ‘ என்ன இந்த வீடு பூட்டி தானே இருக்கும், எதுக்கு அங்க இருந்து சத்தம் வருது.. ‘ என யோசித்த வண்ணம் எதிர் வீட்டை நோக்கி சென்றார் தேனு.
” என்ன கமலம் அக்கா இங்க என்ன பிரச்சனை ”
” அத ஏன் கேட்குற தேனு, எதிர்வீட்ல புதுசா ஒரு ஆம்பள குடி வந்திருக்காரு… ”
” அதுல என்ன பிரச்சனை ”
” அட நீ வேற , அவரு என்ன ஆளு, கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா, இல்ல வேற எதுவும் சவகாசம் இருக்கா ஒன்னுமே தெரியலை..”
” தனியாவா இருக்காரு”
” ஆமா ஒண்டியா இருக்கிற ஆம்பளைக்கு எப்படி வீடு கொடுக்கலாம், அதான் கத்திட்டு இருக்கோம், நாலு குடும்பம் இருந்தாலும் கவுரவமா வாழுற இடம், இங்க ஏதாவது தப்பு கிப்பு நடந்து போச்சுனா ”
” அப்போ விசாரிக்க சொல்லுறது தானே, அதுக்கு எதுக்கு கூச்சல் போட்டுட்டு ” என தேனு பார்வையை வீட்டின் மீது வைத்தார்.
“விசாரிக்க அந்த ஆம்பளை வெளிய வரனும்ல”
” ஓ இவ்வளவு சத்தம் போட்டும் அவரு வெளிய வரலையா ”
” அட ஆமா அதான் இங்க பிரச்சனையே” என்றதும் அந்த இடமே அத்தனை அமைதியானது அந்த வீட்டின் கதவு திறக்கும் சத்தத்தில்…
” வெளிய வரான் போல, வா ஒரு கை பார்க்கலாம் ” என கமலம் முன்னே செல்ல.. ‘ எதற்கு பிரச்சனை ‘ என தேனு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தார்.
கதவை திறந்து சோம்பல் முறித்து கொண்டே ஆசுவாசமாக வெளியே வந்த மறவனை அனைவரும் விசித்திரமாக பார்க்க… தேனுவின் நிலையை சொல்லியா தெரிய வைக்க வேண்டும்…
அதிர்ந்து போய் நின்று கொண்டிருந்தார். தான் கண்டது கனவா இல்லை உண்மையாகவே மறவன் தானா என அவருக்கே சந்தேகம் எழ, தன் மருமகனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
வீட்டு வாசலில் உள்ள கூட்டத்தை பார்த்து புருவத்தை சுருக்கியவன்… ” என்னாச்சு எதுக்கு என் வீட்டு முன்னாடி கூட்டம் போட்டு இருக்கீங்க ” என்றவனது கணீர் குரலில் , அதுவரை கத்திக் கொண்டிருந்தவர்கள் சற்று மரியாதை கலந்த பயத்தோடு ” தம்பி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் வெளிய வாங்க ” என ஒரு பெண் அழைத்தார்.
“ஒரு அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க வரேன் ” என்றவன் அவர்களது பதிலுக்கு காத்திராமல் மீண்டும் உள்ளே சென்று கதவை பூட்டிக் கொண்டான்.
” என்ன டி நம்ம பேச்சை கேட்காம இப்படி உள்ள போய் கதவை பூட்டிட்டாரு ” என பெண்கள் பேசிக் கொள்ள… ” அதான் அஞ்சு நிமிஷத்துல வரேன்னு சொல்லி இருக்காருல.. பொறுமையா இருங்க ” என மற்றொரு பெண்மணி கூறினார்.
சரியாக ஐந்து நிமிடத்தில் அவன் சொன்னது போல வெளியே வந்தான் மறவன். ” என்ன பேசனும் தாராளமா பேசுங்க ” என வீட்டின் முன் படியில் கையை கட்டிய வண்ணம் அமர்ந்து விட்டான்.
” தம்பிக்கு எந்த ஊரு ” என முதல் பெண் ஆரம்பிக்க… ” தம்பி என்ன ஜாதி, குடும்பம் எல்லாம் எங்க இருக்கு, குடும்பம் இருக்கா இல்லையா, கல்யாணம் ஏதாவது ஆகிருக்கா ” என மற்றவர் கேட்க.. அனைத்திற்கும் அமைதியாக அமர்ந்திருந்தான் மறவன்.
” என்ன தம்பி கேட்டுகிட்டே இருக்கோம் பதில் சொல்லவே இல்ல ”
” நீங்க இதை பத்தி தான் கேட்க போறீங்கன்னு தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா உங்க கூட பேச வந்திருக்க மாட்டேன்… ஏதோ பொது விஷயம்ன்னு வந்தேன் ”
” ஏன் உங்களை பத்தி சொல்ல மாட்டிங்களா ”
” எதுக்கு சொல்லனும்”
” நாங்க ஆள் யாருன்னு தெரிஞ்சு தான் குடி வைப்போம் ”
” இந்த வீட்டோட ஹவுஸ் ஓனர் எனக்கு தெரிஞ்சு இங்க இருக்குற யாருமே இல்ல, அப்பறம் ஏன் நான் பதில் சொல்லனும், அப்படியே சொல்லுறதா இருந்தா அவங்க கிட்ட சொல்லிக்கிறேன்.. இப்ப எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு ,நீங்களும் இந்த வெட்டி பேச்சை விட்டுட்டு கிளம்பி போங்க… நான் வெளிய வரும் போது என் வீட்டு முன்னாடி யாரும் நிற்க கூடாது ” என முகத்தை கடுமையாக மாற்றி கூற, அதற்க்கு மேல் அங்கு நிற்க முடியாமல் பெண்கள் கூட்டம் கலைந்தது.
” திமிர பாரேன் இவனுக்கு , என்ன ஜாதின்னு தெரியலை வந்து நடுவில குடி இருக்கான் .. கேட்டா திமிரா வேற பதில் சொல்லுறான் ” என முனங்கிய படியே சென்றனர்.
போகும் பொழுது சும்மா போகாமல்.. ” தேனு உன் வீட்டுக்கு எதிக்கே தான் இருக்கான்… நீ வேற பொம்பளை பிள்ளையை தனியா வச்சிருக்க , சூதானமா இரு… உனக்காக தான் இவ்வளவு பேசுனோம் அவன் மதிக்கவே இல்ல.. சாயாலி பத்தரம் ” என கூடுதல் அறிவுரை வேறு கொடுத்து விட்டு சென்றனர்.
தேனு ஆடவில்லை அசையவில்லை.. இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை… சாயாலி இங்கிருப்பது தெரிந்து தான் வந்தாரா இல்லை எதர்சியாக வந்தாரா என்பது புரியாமல் நிற்க… ” என்ன மா இன்னும் எவ்வளவு நேரம் தான் இங்க நிக்க போற ” என சாயாலி வெளியே வந்து அழைத்த பின்னே அவரும் மகளை யோசனையாக பார்த்து விட்டு உள்ளே சென்றார்.
உள்ளே வந்தவரிடம் வெளியே என்ன கூச்சல் என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை சாயா… ஒருவேளை மகளுக்கு தெரிந்து தான் மருமகன் வந்து இருக்கிறாரோ என்ற எண்ணம் தோன்ற…
” நம்ம வீட்டுக்கு எதிக்க உள்ள வீட்டுக்கு புதுசா ஆள் குடி வந்து இருக்காங்க சாயா ” என தேனு தோசையை வார்த்தாலும், மகளின் மீது ஒரு கண்ணை வைத்து கொண்டே கூற.. ” ஓ அதான் சத்தமா ” என சாதரணமாக கேட்டு கொண்டே வேலைக்கு கிளம்பினாள்..
” ம்ம் ஒரு ஆம்பளை மட்டும் தான் வந்து இருக்காரு, அதான் சண்டை ”
” அதுல என்ன பிரச்சனை ”
” அது யாரு என்னனு தெரியலை.. எப்படி பட்டவரு ஒன்னும் தெரியலை .. குடும்பம் குட்டி இருக்கான்னு தெரியலை.. இப்படி ஒருத்தரை வந்து நடுவுல எப்படி குடி வைக்கலாம்ன்னு தெருக்காரங்க சண்டை போட்டாங்க ”
” ஏன் குடும்பமா இருந்தா தான் வீடு கொடுக்கனுமா… அவருக்கு என்ன கஷ்டமோ… சரி அதை விடுங்க சாப்பாடு ரெடியா ” என தயாராகி வந்த மகளை வைத்தே கண்டு கொண்டார் .. ஆக இன்னும் சாயாலிக்கு விஷயம் தெரியாது என்று…
“இதோ வந்துட்டேன் ” என சமைத்ததை மகளுக்கு வைத்து பரிமாறி… பின் மதிய உணவையும் கையோடு கொடுத்து விட்டார். வழக்கம் போல ஸ்கூட்டியை எடுத்து கொண்டு எஸ்டேட்டை நோக்கி பறந்து விட்டாள் சாயாலி…. இதையெல்லாம் எதிர்வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மறவன்.. அவள் கிளம்பி செல்லவும் அவனும் தயாராகி நேராக தேனு வீட்டிற்குள் நுழைந்தான்..
வாசலில் சத்தம் கேட்டு தேனு திரும்பி பார்த்தவர்… மறவன் நிற்பதை பார்த்து .. தான் நினைத்ததை போல தன் மகளுக்காக தான் வந்துள்ளார் என்பதை உறுதி படுத்திக் கொண்டார் … மனதில் லேசான நிம்மதி பரவ ” வாங்க மாப்பிள்ளை உள்ள வாங்க ” என அமைதியாக அழைத்தார்.
தன்னை மாப்பிள்ளை என்று அழைத்ததும் , அவனுள் சிறிதாக தைரியம் எழுந்தது ..
” உட்காருங்க தம்பி… காபி போட்டு தரேன் ”
” இல்ல.. அது… வந்து.. நான் கொஞ்சம் பேசனும் அத்தை ” தயக்கமாக பேசும் மருமகனை வேதனையுடன் பார்த்தார் தேனு..
” இப்போ வரைக்கும் உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன நடந்துச்சுன்னு நான் என் மகள் கிட்ட கேட்கவே இல்ல தம்பி … ஆனால் சாயாலி உங்களை விட்டு வர அளவுக்கு முடிவு எடுத்து இருக்கானா … ” என அவர் நிறுத்த..
” தப்பு என் மேல தான் அத்தை… அதான் அவளை தேடி வந்துருக்கேன்… ”
” ஆனால் நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்க வேணாம்… அவ முடிவை என்னால மாத்த முடியாது… சின்ன வயசுல இருந்தே அவ எடுக்குற முடிவு தான்.. இப்போ நீங்க பேசி பாருங்க , நான் மறைமுகமா உங்களுக்கு உதவி செய்யுறேன்… அதுக்கு மேல அவ எடுக்கிற முடிவு தான் தம்பி… ” என தெளிவாக தன் மகளை பற்றி கூறி விட்டார்.
” இது போதும் அத்தை நான் பார்த்துக்கிறேன்… அவளை பத்தி சில விவரம் வேணும் ” என மாமியாரிடம் சில பல விவரங்களை கேட்டுக் கொண்டு தன் துணைவியை பார்க்க காரை எடுத்து கொண்டு கிளம்பினான் மறவன்.
சாயாலி வழக்கம் போல கையெப்பம் போட்டு விட்டு எம்டி அறைக்கு சென்றாள். அவரிடம் அனுமதி வாங்கி… அவர் கேட்ட புத்தகத்தை அவரிடம் கொடுக்க…
” ரொம்ப நன்றி சாயாலி.. இருக்குற வேலையில எப்படி போய் வாங்க போறோம்னு நினைச்சேன்… நீ வாங்கிட்டு வந்துட்ட ”
” ஓகே சார் பரவாயில்ல.. நான் டூட்டி போகட்டுமா… ”
” இரு மா இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, நீ எஸ்டேட் போக வேணாம்… என்னோட பார்ட்னர் கிட்ட ஒரு முக்கியமான ஃபைலை கொடுக்கனும், நீ அதை மட்டும் கொடுத்துட்டு வந்துடு.. அப்பறம் இது புதுசா நம்ம உற்பத்தி பண்ண தேயிலையோட டாக்குமெண்ட் தான்.. அவருக்கு அதை பத்தி தெளிவா சொல்லிட்டு… இது அவரோட நம்பர்.. எங்க வர சொல்லுறாரோ அங்க போய் மீட் பண்ணி கொடுத்துடு ” என்றதும் மறுக்காமல் அந்த கோப்புகளை எல்லாம் வாங்கி கொண்டு வண்டியை கிளப்பினாள்..
வழியில் அந்த உரிமையாளருக்கு தொடர்பு கொண்டு … அவர் எங்கே இருக்கிறார் என கேட்டுக் கொண்டு அவர் கூறிய வழியில் செல்ல.. அங்கே அவர் சொன்னபடி சிவப்பு வண்ண கார் நின்றது.. ஃபைலை எடுத்து கொண்டு வண்டி நம்பரை ஒரு முறை சரி பார்த்து விட்டு கார் கதவை தட்டி விட்டு உள்ளே அமர… அடுத்த நொடி கதவுகள் அனைத்தும் மூடிக் கொண்டது.
எதிரில் அவள் மணாளன்…
” நீங்க….. ” என யோசனையாக கேட்டவள் காரில் இருந்து இறங்க பார்க்க.. அவளது இரு கைகளையும் ஒரு கையில் அடக்கியவன்… அவளது கண்களையே பார்க்க.. அதில் என்ன கண்டனோ மிக மிக அருகில் மூச்சு காற்று படும் தொலைவில் அவள் முகத்தருகே நெருங்கினான்.
அதில் இமைகளை பட பட வென அடித்து கொண்டவளின் உதடுகள் அவனது நெருக்கத்தில் துடித்து அடங்க… அவனது மற்றொரு கையால் அவளது எடுப்பான இடையை இறுக்கி பிடிக்க… அவ்வளவு தான் சாயாவின் கண்கள் தானாக மூடிக் கொண்டது…
சனா💖

