

KKEN-22
மலர் இதோ பிறந்தகத்தில் அமர்ந்திருந்தாள். சுவற்றில் பின் தலை சாய்த்து அமர்ந்து இருந்தவளின் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
“டேய் என்னடா ஆச்சு?” வெற்றி நண்பனை உலுக்கிக் கேட்டான்.
“அண்ணே! அக்காவை அந்தாளு நடு ரோட்டுல புடவைய உருவிட்டு அடிச்சுகிட்டு இருந்தான்னே. சவாரி விட்டுட்டு வரும்போது அக்கா வீட்டு வலி(ழி)யா தான் வந்துகினுருந்தேன். பாவண்ணே! எவ்ளோ அசிங்கமா இருந்திருக்கும்? நம்ம அக்காண்ணே! எப்டிண்ணே அப்டியே விட்டுட்டு வர முடியும்?
தோழனாய் இருந்தாலும் அவனின் வேதனைப் புரிந்தது. பெற்ற மகள் மீது ஏன் அந்த அன்பும் கருணையும் தந்தைக்கு இல்லாமல் போனது?
“ரொம்ப தேங்க்ஸ் டா!”தோழனை ஆரத் தழுவிக் கொண்டான். தன்னிடத்தில் இருந்து தான் செய்ய வேண்டியதை அவன் செய்தது மிகப் பெரிய விஷயம்தான்.
“என்னக்கா! என்ன ஆச்சு?” அக்காவின் அருகில் அமர்ந்து ஆதரவாகப் பேசினான்.
“பக்கத்து வீட்டு அண்ணன் புதுசா புடவை விக்கறாங்களாம். அதான் நீ கொஞ்சம் கொஞ்சமா காசு குடுன்னு ஒரு புடவை குடுத்தாங்க. நூத்தி அம்பது ரூவா. முதல்ல அம்பது ரூவா கொடுத்துட்டேன். இன்னும் மிச்சம் கொடுக்கல. இன்னிக்கு அவன் புடவை குடுத்தான்னு கட்டிக்குவ . நாளைக்கு அவன் உள் பாவாடை குடுத்தான்னா அதையும் கட்டிக்குவியான்னு அத்தையும் அவங்களும் அசிங்கமா பேசுறாங்க வெற்றி” தேம்பி தேம்பி அழுதாள்.
“என்ன அறுத்து விட்டுடுங்க வெற்றி. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.”
முன்பே இந்த முடிவை எடுத்திருக்கலாம். தம்பிக்கும் கண்ணில் அழுகை வந்து நின்றது.
“அய்ய! காலையிலேயே வந்து நின்னுருச்சு மூதேவி”
திட்டிக் கொண்டே உள்ளே வந்து சேர்ந்தார் தந்தை.
“என்ன இப்ப? புருஷன் பொண்டாட்டி சண்டைலாம் எல்லார் வீட்டுலையும் நடக்கறதுதானே. அதுக்குன்னு பொட்டிய தூக்கிட்டு வந்துருவங்களா ? ஆம்பளைங்க அப்டி இப்படித்தான் இருப்பாங்க. நாமதான் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்” சின்னவள் பெரிய மனுஷியாக அறிவுரை வழங்கினாள் .
“வெற்றிக்கு அத்தனை கோபம் வந்தது . அடிச்சு பல்ல ஒடைச்சுடுவேன். கல்யாணம் ஆன நாள்லேர்ந்து நீ இங்க தானே இருக்க? ஏதோ ஒரு நாள் பிரச்சனைன்னு அவ இங்க வந்தா என்னடி பிரச்சனை?”
வெற்றி எப்போதுமே வாடி போடி என்று பேச மாட்டான். அவனையே பேச வைத்து விட்டாள் அவள் .
“என்னடா யாரு கிட்ட என்ன பேசற? அவ வேற வீட்டு பொண்ணு. மரியாதை குடுத்து பேசு. நீ என்னடா அவளுக்கு பல்லை ஓடைக்கறது? நான் உன்ன அடிச்சு பல்லை ஒடைச்சுடுவேன் ராஸ்கல்” புவனாவை சொன்னதும் தந்தைக்கு அத்தனை கோபம் தலைக்கேறியது. அந்த பாசம் ஏன் தன் மீது இல்லை? மலருக்கு வெறி வந்தது. இல்லை இல்லை இத்தனை நாள் அடக்கி அடக்கி வைத்திருந்த கோபம் வெளியே வந்தது.
“நான் அவங்களுக்கு என்ன செய்யல? வயத்து பசிக்கு குடுக்கலியா? ஒடம்பு பசிக்கு குடுக்கலியா ? மாடு மாதிரி வேலை செய்யல?” எப்போதும் இல்லாத மலராக தந்தையிடம் குரல் உசத்திப் பேசினாள் .
“வாய தொறந்த பெல்ட்டு பிஞ்சுரும் …யாரு வீட்டுல வந்து என்ன பேசற? வந்துட்டா அங்கேர்ந்து, எப்ப பாரு ஒப்பாரி வச்சுக்குனு….” இது தந்தை.
“நீதான் சரி இல்ல. மாமாவுக்கு ஒரு புள்ளைய பெத்து குடித்திருந்தீன்னா ஒனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?” அன்பாக இல்லாமல் அதிகாரமாக வந்தது தங்கையின் குரல். தந்தையும் தங்கையும் மாறி மாறி அவளை குறை கூறுவதும், திட்டுவதுமாக இருந்தார்கள்.
“இப்ப புரிஞ்சுதா? எதுக்கு நான் இங்க வர்றதே இல்லனு. இங்க நான் யாருக்கும் வேணாம். ரோட்டுல படுக்கறவன் கூட தன்னோட, குழந்தை குட்டின்னு கொஞ்சமாவது அன்பு அனுசரணை இருக்கும். இங்க? நம்மள பெத்தவ இதோ இதை பெத்து போட்டு போய் சேர்ந்துட்டா. இவங்க எல்லாருக்கும் வேலை செய்ய ஒரு வேலைக்காரி தான் நானு. என்ன இவரு பெத்த பொண்ண நினச்சுருந்தா குடி போதைல என்ன வித்துருப்பாரா? என்னவோ ஆளாளுக்கு நான் புள்ள பெத்துக்கலைன்னு சொல்லறீங்களே அந்தாளுக்குத்தான் குழந்தை பொறக்காது. தெரியுமா உங்களுக்கு?”
இது வரை யாரிடமும் சொல்லாத உண்மையை போட்டு உடைத்தாள். அப்போதும் யாரும் அவள் சொல்வதை நம்பவில்லை. வெற்றியைத் தவிர.
“குடிச்சு குடிச்சு உங்க மாப்பிள்ளைக்கு குழந்தை பொறக்காதாம். எண்ணிக்கை சுத்தமா ஒண்ணுமே இல்லையாம். அப்டியே பொறந்தாலும் குழந்தைக்கு ஏக்கப்பட்ட பிரச்சனை இருக்குமாம். சொல்லிட்டாங்க. டாக்டர்.”
“ஆமா ! குறை உன்கிட்ட இருந்தாலும் அவன் மேல பழைய தூக்கி போட்டுட்டு வேண்டியதுதானே? ” இது தந்தை.
“என்னக்கா மாமாவுக்கு தகுதி இல்லன்னு சொல்லி இங்கையே வந்து உக்காந்துக்கலான்னு பிளான் பண்ணாத” இது தங்கை.
“யாரு யாரு மேல பழியத் தூக்கி போட்டா? இந்த விஷயம் உன்னோட பிரண்டுக்கும் தெரியும். உன்னோட சம்பந்திக்கும் தெரியும். அப்படியும் எதையும் உன்கிட்ட சொல்லாம நான் ஏன் தெரியுமா மலடின்னு பேரோட நிக்கறேன்?இந்த மாதிரிதான் யாரும் என்ன நம்ப மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அடியோ ஒதையோ அவன்கிட்ட வாங்கலாம். அவன் எனக்கு யாரோ. ஆனா பெத்தவங்க கிட்டையும், கூட பொறந்தவங்க கிட்டையும் என்னால வாங்க முடியாது.”
இதுவரை வெற்றி எதுவும் பேசவில்லை. அவன் ஒரு முடிவில்தான் இருந்தான்.
“எங்காக்கா இனிமே இங்க தான் இருக்கும். இந்த வீட்டுக்கு வாடகை, மளிகை சாமான் எல்லாம் நான்தான் வாங்கறேன். இனிமே மாச செலவுக்கு எல்லாரும் சரிசமமா காசு குடுக்கணும். எனக்கும் எங்க அக்காவுக்கும் மட்டும்தான் நான் செலவு பண்ணுவேன். யாருக்கு வேணுமோ அவங்க இருக்கலாம். வேண்டாதவங்க அவங்க அவங்க வழிய பார்த்துகிட்டு போய் கிட்டே இருக்கலாம்”
தந்தையையும் பாப்பாவையும் அவன் என்றுமே பாரமாக எண்ணியதே இல்லை. இருந்தாலும் புவிக்கும் அவள் கணவனுக்கும் கூட பொறுப்பு வர வேண்டும். வெற்றி இந்த முடிவை எடுத்ததற்கு முக்கிய காரணம் புவியின் ஊதாரி செலவுகள் கட்டுக்கடங்காமல் போவதுதான்.
“கிளீன் யுவர் வார்டு ரோப்” அமேசானில் விளம்பரம் வந்தது. வாங்கி இரு மாதங்கள் மூன்று மாதங்கள் கூட ஆகாத துணிகள் பழைய பாத்திரங்களுக்கு போக ஆரம்பித்தன. தோழியின் பிறந்த நாள் விழாவிற்கு நோ மேக்கப் லுக்கில் வந்தாள் வித்யா. அதை ரசித்தான். அவனுக்கு பிடித்திருந்தது. அதற்கான கட்டணம் அவன் வீட்டு வாடகையை விட அதிகம் . அதையே தங்கை செய்துக் கொண்டு வந்தபோது. லோக்கல் பார்லராக இருந்தாலும் அதன் செலவு வெட்டிதான். ஆத்திரம் பொங்கியது.
எல்லாவற்றையும் விட பெரிய விஷயம் ஏதோ ஹிமாச்சலத்தில் இருந்து வரும் தண்ணீராம் . அரை லிட்டர் நூற்று என்பதா? உப்புமாகூட ஸ்விகியில் ஆர்டர் செய்ய வேண்டுமா? எல்லாவற்றிற்கும் முடிவு கட்ட வேண்டும் என்று ஏற்கனவே அவன் நினைத்துதான். இதோ இந்த சந்தர்ப்பத்தில் வந்து நிற்கிறது. இந்த செலவுகளுக்கு ஒரு கடிவாளம் நிச்சயம் தேவை. தந்தை வாயை மூடிக் கொண்டு இருப்பது போல தானும் இருந்தால் சரி பட்டு வராது. பிரச்சனை எதுவாக இருந்தாலும் சரி. தைரியமாக போட்டு உடைத்து விட்டான். எப்போது மலரே வாயை திறந்து அறுத்து விட்டுடுங்க என்று சொல்லி விட்டாளோ இனி முடிவெடுக்கத்தான் வேண்டும். அவனுடன் இருக்க வேண்டாம். அவளுக்கு எப்போதும் தன் துணை தேவை. நிச்சயம் தன்னுடைய இந்த முடிவுக்கு வித்யா எதிர்ப்பு சொல்ல மாட்டாள். அவளுக்கும் மலர் மீது தனி அக்கறையும், பாசமும் உண்டு. யோசித்துதான் இந்த முடிவு எடுத்தான். இப்போது மலரின் அடுத்த திருமணம் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை.
அறுத்து விட்டுடுங்க சொல்லிய மலரின் வார்த்தைக்காக காலம் தன்னை தயார் செய்து கொண்டது..
எந்த நேரத்தில் வீட்டு மஹாலஷ்மி கண்ணீருடன் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டு வீட்டை விட்டு வெளியில் சென்றாளோ அப்போதே நல்லவனின், நல்ல நேரமும் முடிவுக்கு வந்து விட்டது போலும். அனைவரையும் தாங்கியவளே இங்கு இல்லை. இனி எனக்கென்ன வேலை? கடவுளும், கருணையும் சேர்ந்தே வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டது.
சூர்யாவும் அவன் தந்தையும் சென்ற வண்டி விபத்தில் மாட்டி இருவருமே இறந்திருந்தார்கள் அல்லவா? ஆம் ! அந்த விபத்திற்கு காரணமாக இருந்த ட்ரக் ட்ரைவர் வேறு யாரும் அல்ல. நம் நல்லவனே தான். போலீசில் கேஸ் எழுதினார்கள். நல்லவனின் உடல் போஸ்ட்மார்ட்டத்திற்கு சென்று வந்தது. ஐஸ் பெட்டியில் கணவனின் உடலைப் பார்த்தவளுக்கு அழுகை வந்தததுதான். தனக்காகவா? அல்லது அவனுக்காகவா ? பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும் அவனின் உடலுக்கும் வயிற்றுக்கும் பசியை போக்கியவள்.
“இந்தா உனக்காக” ஒரு முழம் பூ வாங்கி கொடுத்ததில்லை. தீபாவளி! சேர்ந்து புடவை வாங்கியதில்லை. என்னதான் சுகம் கிடைத்தது அவளுக்கு அவனிடமிருந்து? எத்தனை அடி வாங்கி இருப்பாள்? நட்ட நடு ரோட்டில் புடவையை உருவி அடி கொடுத்தவனுக்காக இனி அவள் காலமெல்லாம் விதவைப் பட்டத்தை சுமக்க வேண்டும். அவன் செய்த எல்லாவற்றிற்கும் நன்றி கடன் செலுத்த வேண்டும்.
அவன் வீட்டில் இருந்து யாரோ ஒருவன் வந்தான். கொல்லி வைத்தான். யார் என்ன உறவு எதுவும் தெரியாது. அதைப் பற்றி எல்லாம் அவள் அறிந்து கொள்ள ஆசைப்படவும் இல்லை.
ஏதோ ஒரு நாள் தாலி அறுக்கும் சடங்கு நடத்தினார்கள். பிறக்கும்போது வந்த பூவுக்கும் பொட்டுக்கும் உரிமையை யார் பறித்தார்கள் ? யாரிடமும் கேட்க முடியாது. கணவன் இருக்கும்போது வேறு மாதிரி நரகம் என்றால் இப்போது அவன் இல்லாத போது வேறு மாதிரி.
கொல்லி வைத்தவனே உரிமைக் கொண்டாடி வந்தான், மலர் மீது. கொடி போல இருக்கும் அந்த பெண் தன் மீது படர வேண்டுமாம். அந்த கொடி மலருக்கு முல்லை மலர் வாங்கித்தருவானாம் . சிரிப்பதா அழுவதா? மனதளவில் மிகவும் நொந்துப் போனாள் .
பதினாறாம் நாள் காரியம் முடிவதற்குள் இவளை யாரிடமாவது தள்ளி விட்டு பணம் சம்பாதித்து கொள்ள வேண்டும் என்று கணக்கு போட்டாள் மாமியார். மாமியார் பேசுவது காதில் விழுந்தது. நாத்தனார்தான் தனக்காக பேசிக் கொண்டிருக்கிறாள்.
“வேண்டாம்மா! இதெல்லாம் ரொம்ப பெரிய பாவம்” அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தவளின் பேச்சு, பெற்ற மகனை இழந்தவள் போல அல்ல.
அந்த நிமிடம் எப்படியாவது அந்த இடத்தை விட்டு தப்பி விட வேண்டும் என்று மட்டுமே யோசித்தவளுக்கு நேரம் காலம் தெரியவில்லை. அந்த நிமிடமே ஓட்டம் எடுத்தாள் . வந்த பேருந்தில் ஏறிக் கொண்டாள்
காதல் தொடரும் ..

