34. கண்களும் காதல் பேசியதே

Loading

காதல் -34

 

” ஒரு வாரமாவே நீ எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்க… என்னனு கேட்டாலும் வாயை திறக்க மாட்டிர… நீ மனசுல நினைக்கிறது எனக்கு எப்படி டி தெரியும்.. உன்னால நான் பைத்தியம் ஆக போறது உறுதி , இந்தா இந்த காபியை குடிச்சுட்டு கிளம்பி போ” என மகளை வேலைக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தார் தேனு.

 

அமைதியாக அவர் கொடுத்த சாப்பாட்டை வாங்கி கொண்டு எஸ்டேட்டை நோக்கி பயணித்தாள் சாயாலி.. இங்கே வந்ததில் இருந்து ஒரு சின்ன ஸ்கூட்டியை மாத சந்தாவின் மூலம் வாங்கிக் கொண்டாள்.. அங்குள்ள அரசாங்க பள்ளி மைதானத்தில் அந்த ஸ்கூட்டியை ஓட்டி கற்றுக் கொண்டாள்.. அதன் பின் மலை பிரதேசத்தில் ஓட்டி செல்ல கடினமாக இருந்தாலும்.. இருமுறை கீழே விழுந்து தற்போது நன்றாக ஓட்ட தொடங்கி விட்டாள்..

 

இதோ அந்த வண்டியில் முன் பக்கம் சாப்பாட்டை தொங்க விட்டு அதில் ஏறி எஸ்டேட்டை நோக்கி பயணித்தாள்.. இந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட தினேஷ் கண்ணில் தென்படவில்லை.. அதை பற்றி அவளும் பெரிதாக ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை.. அன்று பேசியதற்கு பின்பு அவன் பின் தொடராமல் இருப்பது அவளுக்கு சற்று மன ஆறுதலாக இருந்தது.

 

சரியாக எட்டு மணிக்கு அங்கு சென்று கையெப்பம் இட்டு , அன்று அவர்களுக்கான வேலையின் பட்டியலை பார்த்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் ..

 

இதோ கூட்டமாக ஒவ்வொருவராக கையெழுத்து போட்டு கொண்டிருந்தனர். வரிசையில் சாயாலியும் நின்று கொண்டிருந்தாள். அவள் முறை வரவும் கையெழுத்தை போட்டு விட்டு எம்டியின் அறையை நோக்கி அவரை பார்க்க வேண்டி அனுமதிக்காக நின்று கொண்டிருக்க.. அவள் வருகையை உணர்ந்து உள்ளே அழைத்தார் எஸ்டேட்டின் ஓனர்.

 

” சொல்லுங்க சாயாலி”

 

” சார் எனக்கு வர வெள்ளிக்கிழமை லீவ் வேணும்.. ” தயக்கமாக கேட்டவளை…கூர்ந்து பார்த்தவர்.. ” நான் நினைச்சேன் என்ன இன்னும் வெள்ளிக்கிழமை பத்தி நீங்க பேசாம இருக்கீங்கன்னு .. இதோ ” என சிரித்தவர்.. ” ஓகே எடுத்துக்கோங்க பட் ஒரு கண்டிசன் இருக்கு”

 

” சொல்லுங்க சார் ”

 

” வரும் போது எனக்கு வேண்டிய ஒரு புத்தகம் வாங்கிட்டு வரனும்” என்றதும் பளிச்சென்ற புன்னகை அவள் முகத்தில்..

 

” கண்டிப்பா ”

 

” அப்போ லீவ் கண்டிப்பா எடுத்துக்கலாம் ” என்றதும் நன்றி கூறி விடை பெற்றாள் சாயாலி..

 

வருகிற வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல்லில் நடக்கிற புத்தக கண்காட்சிக்கு செல்வதற்கு தான் இந்த விடுமுறையே… புத்தக கண்காட்சியில் புதிதாக வெளியாகி உள்ள தமிழ் காதலன் புத்தகம் ஒன்று வர இருப்பதால் அதை ஆர்வமாக வாங்கி படிக்க விடுமுறையே எடுத்து விட்டாள் சாயாலி.

 

” மா டூ டேய்ஸ் நான் வெளிய போறேன்… என்ன தேட வேணாம் ” என்றதும் சிந்தாமணி அவன் முன் அன்றைய நாளிதழை வைத்தார்.

 

“இதுல என்ன மா இருக்கு ”

 

” ஏன் மறவா உனக்கு படிக்க தெரியும்னுல நான் நினைச்சேன்… ” எனவும் பேப்பரை எடுத்து அவர் கொடுத்த பக்கத்தை ஆராய்ந்தான்..

 

” 2023 ஆம் புத்தக கண்காட்சியில் பிரபலமான தமிழ் காதலனின் புதிய நாவல் ஒன்று வெளியாகி உள்ளது.இந்த நாவலை வாங்குவதற்கு என்றே மக்கள் கூட்டம் கூட்டமாக கண்காட்சியில் கலந்து கொள்கின்றனர்.. மேலும் விரிவான செய்திகள் உள்ளே.. ” என பேப்பரில் இருக்க உணர்வில்லமல் அந்த பேப்பரை போட்டு விட்டு வாசலை நோக்கி சென்றான் மறவன்.

 

” நில்லு மறவா… இன்னைக்கு நீ பதில் சொல்லாம போக கூடாது ”  என்றதும் வாசல் வரை சென்றவன் நின்று தன் தாயை திரும்பி பார்த்தான்.

 

” என்ன டா இது… ”

 

” இப்ப என்ன மா பண்ண சொல்லுறீங்க.. ”

 

” உன்னால எப்படி டா இப்படி இருக்க முடியுது”

 

” வாழ்க்கையே போச்சு… இதெல்லாம் எனக்கு பெரிய வலி இல்ல மா ”

 

” என்னால சத்தியமா தாங்க முடியலை டா ”

 

” நீங்களும் பழகிக்கோங்க மா… ”

 

” நான் வேணும்னா… ஒரு வார்த்தை… ”

 

” அம்மா….. ” என்றவனது கர்ஜனையில் கப் சிப் என வாயை மூடிக் கொண்டார் சிந்தாமணி. ” என்னைய மீறி இந்த வீட்ல ஏதாவது நடந்துச்சு அதுதான் நான் இந்த வீட்டுக்கு வரது கடைசி நாளா இருக்கும் ” என காரை எடுத்து கொண்டு ஜெட் வேகத்தில் பறந்து விட்டான்.

 

இதோ வெள்ளிக்கிழமை காலை….. அழகிய மயில் கழுத்து வண்ண சல்வார் அணிந்து .. தலையில் மல்லிகை சூடி பிறை நெற்றியில் குங்குமம் இட்டு மிதமான ஒப்பனையில் தயாரானாள் சாயாலி..

 

” என்ன காலையிலேயே இவ்வளவு சீக்கிரம் எங்க போற”

 

” புத்தக கண்காட்சிக்கு ” என மெல்லமாக கூறினாள்.. சிறுமலை வந்த ஒரே மாதத்தில் சாயாலிக்கு பேச்சு வந்தது தேனுவிற்கு தெரிந்து விட்டது. இருந்தும் மகளின் பிடிவாதத்தால் வெளியே சொல்லாமல் அவள் ஊமை என்றே ஊருக்கு சொல்லி வைத்தார்.

 

அதன் பின்பு மூன்று மாதத்திற்கு முன்பு தான்… அவரது எம்டிக்கு அவளுக்கு பேச்சு வரும் என்பதே தெரியும்… அதுவும் எதனால்  என்றால்.. பேச்சு திறன் அற்ற சலுகை அவள் கம்பெனியில் இருந்து சாயாலிக்கு கொடுக்கப்பட்டது.. பேச்சு வந்தும் அதை வாங்க மனம் இல்லை அவளுக்கு.. அதனால் பேப்பரை வாங்கி கொண்டு நேராக எம்டியிடம் சென்று உண்மையை கூறி விட்டாள்.

 

முதலில் அவள் மேல் கோவம் இருந்தாலும் … அவளது தன்னிலை விளக்கத்தில் அந்த வயதான மனிதரும் அதை புரிந்து கொண்டு மன்னித்து விட்டார்.. இல்லையென்றால் இதுவரை ஊமை என்று வேலை செய்ததற்கு தக்க தண்டனையை கொடுத்திருப்பார்.

 

” எங்க டி நடக்குது ”

 

” திண்டுக்கல்”

 

” சீக்கிரம் வீடு வந்து சேரு… புக்கை பார்க்கவும் அங்கேயே குடி இருந்துறாத ” என புலம்பிக் கொண்டு சமைக்க சென்றார் தேனு.

 

புத்தகம் வாங்க பணத்தை எடுத்து கொண்டு ஆர்வமாக திண்டுக்கல்லை நோக்கி பயணம் செய்தாள் சாயாலி…

 

முதல் நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது… கூட்டத்தை பார்த்து சற்றும் முகம் சுளிக்காமல் அவள் தேடி வந்த புத்தகத்தை தேடி சென்றாள் சாயாலி.

 

” நீ தேடி வந்த புத்தகம் இதுதானே ” என அவளது பின்னால் கேட்ட குரலில் கண்களை மூடி கோபத்தை கட்டுப் படுத்தியவள்.. முன்னேறி செல்ல..

 

” ஹேய் உனக்காக தான் இவ்வளவு தூரம் வந்துருக்கேன் சாயா.. நீ என்ன கண்டுக்காம போற ” என தினேஷ் பின்னால் ஓடினான்.

 

” உன்னைய நான் வர சொல்லவே இல்லையே ”

 

” சரி அத விடு இந்தா நீ தேடி வந்த புத்தகம் ” என சரியாக அவன் தமிழ் காதலன் புத்தகத்தை எடுத்து வைத்திருக்க.. அவன் கைகளில் இருந்த புத்தகத்தை ஆசையாக பார்த்தவள்.. ” நானே போய் தேடி வாங்கிக்கிறேன்” என கூட்டத்திற்குள் புகுந்து விட்டாள்..

 

அப்போது தினேஷின் அலைபேசி அழைக்க.. அதில் கவனம் சிதற கூட்டத்தில் சாயாலியை தவறவிட்டான்.

 

கிட்ட தட்ட பதினைந்து நிமிட தேடலுக்கு பின்னே.. தமிழ் காதலன் புத்தகம் இருக்கும் ஸ்டாலை கண்டு பிடித்தாள்.. வேகமாக ஸ்டாலுக்குள் நுழைந்து தமிழ் காதலன் புத்தகத்தை கையில் எடுத்து தடவிக் கொண்டே அதற்கான பணத்தை செலுத்தி விட்டு வெளியே வந்தாள்.

 

முகப்பு படத்தை பார்க்கவே அத்தனை வித்தியாசமாக இருந்தது.. “மஞ்சத்தில் சிதறிய நெஞ்சம் ” என்ற தலைப்பில் அட்டை பக்கத்தில் நடுவில் ஒரு இதயமும் .. அந்த இதயத்திற்கு ஒரு பக்கம் ஒரு பெண்ணும் மறுபக்கம் ஒரு ஆணும் இருப்பது போல அட்டை பக்கம் வடிவமைக்க பட்டிருந்தது.. அதற்கு கீழே பெரிய எழுத்துக்களில் ‘ தமிழ் காதலன் ‘ என்ற பெயர் அச்சடிக்கப்பட்டிருக்க.. முகத்தில் மலர்ந்த புன்னகையுடன் அந்த பெயரை வருடினாள்..

 

என்னவென்றே தெரியாத பந்தம்.. அந்த பெயருக்கும் அவளுக்கும்.. அவள் வாழ்க்கை முழுவதும் அவனது எழுத்துக்களை வைத்து தானே பயணிக்கிறது… இதோ இந்த புத்தகத்தை உடனே படிப்பதற்காக கிளம்பும் நேரத்தில் தான் அவளது எம்டி கூறிய புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற நினைவு வந்தது..

 

அந்த புத்தகத்தை தேடி அலைந்து ஒரு வழியாக அதையும் வாங்கி விட்டாள்.. ஸ்டாலை விட்டு தினேஷ் கண்ணில் படாமல் சென்று விட வேண்டும் .. என வேகமாக சென்றவள் யார் மீதோ முட்டி நிற்க…

 

” ஐயோ சாரி ” என்ற பின்பே நிமிர்ந்து பார்த்தாள்… அவ்வளவு தான் கையில் இருந்த புத்தகங்கள் தானாக அவள் கைகளில் இருந்து நழுவ தொடங்கியது.

 

நழுவிய புத்தகத்தை கடைசி நொடியில் பிடித்தவன்… ” என்ன சாயாலி மேடம் பிடிச்ச புத்தகத்தை இப்படி தவற விடலாமா ” என நக்கலாக கேட்டவனை முறைத்து பார்த்தாள்.

 

“நீங்க என்ன தனியா வந்து இருக்கீங்க, உங்க லவ்வர், சாரி நீங்க கல்யாணம் பண்ணிக்க போற தினேஷ் எங்கே ” என வீம்புக்கு தேடினான்.

 

” புத்தகத்தை கொடுங்க ” என கை நீட்டினாள்..

 

” பாரு டா பேச்சு கூட வருது, எப்போ இருந்து வந்திருக்கும் ” என்று யோசிப்பது போல பாவனை செய்தவன்.. ” ஒருவேளை அங்க இருக்கும் போதே வந்து இருக்குமோ, எனக்கு தான் தெரியலையோ ” என நக்கல் கேள்வி கேட்டான் மறவன்.

 

” ஹலோ நீங்க யாரு, முதல்ல வழிய விடுங்க ” என அவனை தெரியாததை போல ஒதுங்க நினைத்தாள்…

 

” அடடே என்ன யாருன்னு தெரியலையா…. அப்போ தெரிய வைக்கனுமே… ம்ம் ” என அவளை மேல் இருந்து கீழ் வரை பார்த்தவன்… சட்டென்று அவளது நெற்றியில் வைத்திருக்கும் குங்குமத்தை காட்டி, “இந்த குங்குமத்துக்கு சொந்தக்காரன் நான் இல்லை “, அப்பறம் என சட்டென்று அவளது கழுத்தில் கை வைக்க போக.. அதிர்ந்து பின்னே ஓர் அடி எடுத்து வைத்தாள் சாயாலி.. ” இந்த தாலிக்கும் சொந்தக்காரன் நான் இல்ல ” என வீம்பாக பேச…

 

” அதான் இல்லைன்னு தெரியுதுல அப்போ வழிய விடுங்க ” என அவன் கைகளில் இருக்கும் புத்தகத்தை பறித்து விட்டாள்.

 

” ஆமா சொந்தக்காரன் இல்ல தான், ஆனால் இனிமே சொந்தம் கொண்டாட தான் வந்தேன் ” என தாடியை தேய்த்து கொண்டே அவளை ரசனையாக பார்க்க… அவனை வெறியாக முறைத்தாள் சாயாலி.

 

” என்ன கொண்டாடிடுவோமா??” என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க… அதற்க்கு மேல் அவன் முன்னே நிற்க முடியமால் புத்தகத்தை தூக்கி கொண்டு கண்காட்சியை விட்டு வெளியே ஓடி விட்டாள் சாயாலி…

 

அவள் ஓடுவதையே தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தவன்.. ” உன்ன நெருங்கிட்டேன் யாழி… இனி நீயா நினைச்சாலும் என்ன விட்டு போக முடியாது.. ” என்றவன் காரை எடுத்துக் கொண்டு சிறுமலை கிராமத்தில் சாயாலியின் வீட்டின் முன்பே புதிதாக தான் வாங்கிய வீட்டிற்கு குடி வந்தான்…

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்