33. கண்களும் காதல் பேசியதே

Loading

காதல் -33

 

“மிஸ்டர் தினேஷ் ” என்ற குரலில் சாயாலி வியர்த்து விறுவிறுத்து போனாள்…

 

சாயாவிற்கு பின்னால் பார்த்த தினேஷ்… ” ஹலோ நீங்க இன்னும் கிளம்பலயா.. ” என்றதும் … பின்னால் இருந்து இல்லை என்ற தலையாட்டால் வந்தது…

 

“நீங்க வந்தது ரொம்ப நல்லதா போச்சு, இப்போதானே பேசிட்டு இருந்தோம் .. இவங்க தான் அது.. நான் லவ் பண்ணுற பொண்ணு, கூடிய சீக்கிரம் கல்யாணமும் பண்ணிக்க போறேன்.. ” என சட்டென்று சாயாலியை திருப்ப… தன் முன்னே நிற்கும் சாயாலியை எந்த வித ஆர்ப்பாட்டாமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ் மறவன்…

 

குரலை வைத்தே அவன் தான் என கண்டுகொண்ட சாயாலி , அவனை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தலை குனிந்த வண்ணம் நிற்க…

 

” ஓ சூப்பர் … பெயர் என்ன ?” என்றான் எதுவும் தெரியாதவன் போல..

 

” சாயாலி, நல்லா இருக்குல்ல ” என தினேஷ் பேசிக் கொண்டிருக்கும் போதே கோவிலில் இருந்து வெளியே வந்தாள் பிரீத்தி.

 

அங்கு எதிர்பாராத வண்ணம் சாயாலி நிற்பதை பார்த்து ஆவலோடு அவள் அருகே வர… அதற்கு முன்பு ” வா பிரீத்தி… இவங்க யாருன்னு தெரியுதா.. இப்போதான் தினேஷ் சொன்னாரு.. அவரோட லவ்வர் சாயாலி ” என மறவன் பிரீத்திக்கு அறிமுகம் செய்ய… அவ்வளவு தான் கண்களை உருட்டி மூவரையும் பார்த்து வைத்தாள் பிரீத்தி.

 

அவளுக்கு இங்கு நடப்பது எதுவும் புரியவில்லை.. இருந்தாலும் மறவன் புதிதாக அறிமுகம் செய்தது அவளுக்கு எச்சரிக்கை மணி அடிக்க.. அவனது அணுகுமுறையை புரிந்து கொண்டு அவளும் புதிதாக அவளிடம் நடந்து கொண்டாள்..

 

” ஹாய் சாயாலி நைஸ் டூ மீட் யூ ” என கை குலுக்க.. தயக்கமாக கையை கொடுத்தாள் சாயாலி..

 

அதிர்ச்சியில் பேச்சு வராமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள் மங்கை … ஒரு வருடத்திற்கு பின்பு அவளது கணவனை காண்கிறாள் அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையில் .. மறுத்து பேசவும் , எதிர்த்து பேசவும் வாய் வரவில்லை அவளுக்கு.

 

ஆணி அடித்தார் போல நின்று கொண்டிருக்கும் சாயாலியை பார்க்க தினேஷிர்கே சற்று அதிர்வாக தான் இருந்தது.. அவளை காதலி என்று முன்ன பின்ன தெரியாதவன் முன்பு கூறி இருக்கிறான், இருந்தும் அவள் அமைதியாக நிற்கும் தோரணை அவனை யோசிக்க வைத்தது…

 

சாயாலியும் அமைதியாக விடும் ரகம் இல்லையே.. இதே வார்த்தையை வேறு யார் முன்பாவது கூறி இருந்தால் இந்நேரம் கன்னம் பழுத்து இருக்கும்… இப்பொழுது கணவனை பார்த்த அதிர்ச்சியில் மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது.

 

” அவங்களும் இந்த ஊர் தானா ” மறவனே பேச்சை ஆரம்பித்தான்..

 

சாயாலி அமைதியாக இருப்பது சற்று தைரியத்தை கொடுக்க, ” ஆமா மிஸ்டர் மறவன், இந்த ஒரு வருஷமா தான் இவங்களை எனக்கு தெரியும்.. அப்போ இருந்து இந்த ஊர்ல தான் இருக்காங்க, இதுக்கு முன்னால வேற ஊர்ல இருந்துருக்காங்க ”

 

” ஓ கல்யாணத்துக்கு அப்பறம் இந்த ஊர்ல தான் செட்டில்லா ” என்றதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் சாயாலி…

 

அப்போது தான் சுய நினைவிற்கு வர, பல்லை கடித்தவள் தினேஷை வெறியாக முறைத்தாள்… அவள் கோபம் மொத்தமும் மறவன் மீது தான்… நெற்றி வகுட்டில் குங்குமம் வைத்திருக்கிறேன்.. இன்னும் அவன் கட்டிய தாலியை சுமந்து கொண்டிருக்கிறேன் , இதெல்லாம் அவன் கண்களுக்கு தெரியவில்லையா ! என ஆத்திரமாக வந்தது.

 

” ஆமா மறவன்… இந்த ஊரை விட்டு போக மனசு வருமா சொல்லுங்க… ஒரு நாள் வந்த உங்களுக்கே ரொம்ப பிடிச்சு போச்சுல ” என்றதும் அதை அமோதிப்பதாக தலை அசைத்தான் மறவன்.

 

சட்டென்று அவர்களுக்கு இடையில் இருந்து திரும்பி ரோட்டை பார்த்து நடக்க ஆரம்பித்தாள் சாயாலி. திடீரென்று அவள் போவாள் என எதிர் பார்க்காத தினேஷ்.. ” தப்பா நினைக்காதீங்க மறவன், அவ அனுமதி இல்லாம அவளை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு அறிமுக படுத்திட்டேன் அந்த கோவத்துல போறா.. நம்ம ரிஜிஸ்டர் பண்ணும் போது மீட் பண்ணலாம் ” என அவசரமாக அவனிடம் இருந்து விடை பெற்று சாயாலியின் பின்னே ஓடினான் தினேஷ்.

 

அவர்கள் இருவரும் சென்றதும்… ” என்ன சார் நடக்குது இங்க ” என பிரீத்தி கலக்கமாக கேட்க…

 

” ஏன் நீயும் பார்த்திட்டு தானே இருந்த, புரியலையா என்ன, நமக்கு டைம் இல்ல சீக்கிரம் ஊருக்கு போகனும்… கார்ல ஏறு ” என அடுத்த நொடி அவன் காரில் எறி அமர, மறவனை புரிந்து கொள்ள முடியாமல் குழப்பத்துடன் அவளும் ஏறி அமர கார் சிறுமலையை விட்டு இறங்க தொடங்கியது..

 

” சாயாலி.. கொஞ்சம் நில்லு.. இதுக்கு மேல என்ன கெஞ்ச விடாத பிளீஸ் ” என அவள் பின்னே நடையாக நடக்க, அதை சற்றும் காதில் வாங்காமல் அவள் கோபத்தின் உச்சியில் நடக்க… விடாமல் அவளை பின் தொடர்ந்தான் தினேஷ்.

 

” இதுக்கு மேல நீ நடந்தா … உன் கையை பிடிச்சு நான் ஸ்டாப் பண்ண வேண்டியது இருக்கும் ” என்றதும் சட்டென்று நின்று விட்டாள் சாயாலி..

 

அதில் பெரும் மூச்சை விட்டவன்… அவள் முன்னே வந்து நின்று ” தப்பு தான் உன் அனுமதி இல்லாம அவர் கிட்ட உன்ன அறிமுகம் பண்ணது தப்பு தான், இருந்தாலும் அது நடந்தா நல்லா இருக்கும்ல.. உன் வாழ்க்கையும் நல்லா இருக்கும்… கொஞ்சம் யோசி சாயாலி.. ” என அவன் கடைசி வரியை கூட முடிக்கவில்லை.. சப்பென்று அவன் கன்னத்தில் இடியாக அடியை இறக்கினாள்..

 

இந்த அதிரடியை அவளிடம் இருந்து எதிர்பாராதவன் கன்னத்தை பிடித்து கொண்டு அதிர்ச்சியாக அவளை பார்க்க.. ” என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல, ஏதோ படிச்ச பையன் எதுவும் தப்பா பண்ண மாட்டன்னு நானும் பொறுமையா இருந்தா, ஊர் பேர் தெரியாதவன் கிட்ட எல்லாம் என்ன உன் காதலின்னு சொல்லிட்டு இருக்க, நெத்தில குங்குமம் வச்சுருக்கேன், கழுத்துல இன்னும் என் புருஷன் கட்டுன தாலியை சுமந்துட்டு இருக்கேன், அது எல்லாம் இருக்கும் போது உன்னோட காதலின்னு சொன்னா , என்ன பார்க்கிறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க ” என காளியாக அவதாரம் எடுக்க.. அவளது பேச்சில் முதல் முதலாக செயலற்று போனான் தினேஷ்..

 

அவனுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் சுக்கு நூறாக உடைந்து போனது. ” இப்ப சொல்லுறேன் கேட்டுக்கோ, இந்த ஜென்மத்துல உனக்கும் எனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்காது… இதுவே உன்ன பார்க்கிறது கடைசி முறையா இருக்கட்டும் ” என விரல் நீட்டி எச்சரிக்க…

 

” அப்போ நீ உன் புருஷன் கூட வாழ போறியா சாயாலி ” என மனம் தாங்காமல் கேட்டு வைத்தான். அவனும் என்ன தான் செய்வான் காதல் வைத்து விட்டு அவளை விட மனமும் இல்லாமல் கடைசி முறையாக கேட்டு பார்த்தான்.

 

இன்னொருவரின் மனைவி என்று ஒதுங்கி போகும் ரகம் தான் தினேஷ்.. அடுத்தவனின் மனைவியை அபகரிக்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை.. தேனு கூறிய விஷயங்கள் எல்லாம் அவனை இப்படி மாற்றி விட்டது. சாயாலிக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் அவனுக்கு தெரிந்து விட , இனியும் அவளது வாழ்க்கையை தளர விட மனம் வராமல் முழுவதுமாக அவளது கணவனிடம் இருந்து அவளுக்கு விடுதலை கொடுத்து , புது வாழ்கையை தொடர எண்ணினான்.

 

இப்போதும் கூட சாயாலியை தனித்து விட மனம் இல்லை.. அவள் கணவனிடம் சேரவில்லை என்றால் முறையாக அவனிடம் இருந்து விடுதலை செய்து அவளை திருமணம் செய்து வாழ்கையை ஆரம்பிக்க நினைக்கும் அவனது எண்ணத்தை என்னவென்று சொல்ல…

 

” என் புருஷன் கூட வாழ போறதும் போகாததும் என் இஷ்டம்… என் வாழ்க்கையில தலையிட உனக்கு எந்த உரிமையும் கிடையாது … இனிமே என். வழியில குறுக்க வந்தா கண்டிப்பா கம்பிளைன்ட் கொடுப்பேன் ” என மிரட்டி விட்டு வீட்டை நோக்கி ஓடி விட்டாள் சாயாலி… போகும் அவளையே இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ்.

 

வீட்டிற்குள் வந்தவளுக்கு மூச்சடைப்பது போல இருந்தது. ஒரு வருடம் கழித்து பார்த்தவன் எப்படி இத்தனை சாதாரணமாக இருக்கிறான்.. இந்த ஒரு கேள்வி தான் அவள் மண்டையை குடைந்து கொண்டிருந்தது.

 

‘ஒருவேளை அவருக்கு வேற பொண்ணு கூட கல்யாணம் ஆகி இருக்குமோ… அப்படி பார்த்தா எனக்கும் அவருக்கும் இன்னும் விவாகரத்து ஆகளையே ‘ என தவிக்கும் மனதை அடக்க வழி அறியாமல் தமிழ் காதலன் புத்தகத்தின் மீது தலையை வைத்து படுத்தாள்.

 

” என்னாச்சு சாயா… ஏன் மா வந்ததுல இருந்து ஒரு மாதிரி இருக்க ” என சரியாக மகளை கவனித்த தேனுவிற்கு பதில் கூறாமல் கண்களை மூடி இருந்தாள்..

 

மூடிய விழிகளுக்கு வந்து வழுந்தான் அவளது கணவன் தமிழ் மறவன்… ஒரு வருடத்தில் தான் எத்தனை மாற்றம்… முன்பு இருந்ததை விட கருத்து .. முகம் முழுக்க சவரம் செய்யாத தாடியும், இழைத்த உடலும் , உயிரே இல்லாத கண்களும், வற்றி வறண்ட இதழ்கள் என எதுவும் அவளது கண்களில் இருந்து தப்பவில்லை..

 

‘இல்ல சாயாலி உனக்கு என்ன ஆச்சு, உன்ன அவன் கேட்ட கேள்வி எல்லாம் மறந்து போச்சா, பெண்ணை மதிக்க தெரியாதவன்… அன்னைக்கு உன்னைய என்ன கேள்வி கேட்டுட்டான்… இவனை நினைச்சு நீ ஏன் கவலை படனும்.. இல்ல மாட்டேன் ‘ என சட்டென்று எழுந்து கொண்டு முகத்தில் தண்ணீரை அடித்து கழுவினாள்.. நெற்றியில் இருந்த குங்குமம் தண்ணீரில் கரைந்து ஓடியது. அதே போல கரைய துடித்த மனதை இறுக்க பற்றிக் கொண்டாள்.

 

ஊர் வந்து சேர்ந்ததும் மறவன் முகத்தில் எந்த வித மாற்றமும் தெரியவில்லை .. பிரீத்தியும் அவனை விடாமல் பார்த்து கொண்டு தான் வந்தாள். சற்றும் முகம் மாறாமல் எப்படி வந்தானோ அப்படியே திரும்பி இருந்தான்..

 

வாய் வரை வந்த கேள்வியை கேட்டு விடலாமா என உள்ளுக்குள் பட்டிமன்றம்  நடத்திக் கொண்டிருந்தவளை கலைத்தது ஆனது குரல்.

 

” பிரீத்தி வீடு வந்துருச்சு… இறங்குற எண்ணம் இருக்கா இல்லையா ” என்றதும்… சுற்றி முற்றி பார்த்தவள் வீடு வந்து விட்டதை உணர்ந்து.. ” சாரி சார் … இதோ போறேன் ” என அவசரமாக காரை விட்டு இறங்கினாள்.

 

கதவை அடைத்து விட்டு,” ஓகே சார் நாளைக்கு மார்னிங் பார்ப்போம் ” என திரும்பி நடந்தவளை… ” இன்னைக்கு சிறுமலை போனது யாருக்கும் தெரியக்கூடாது பிரீத்தி ” கட்டளையாக வெளி வந்தது அவன் குரல்.

 

குழப்பமாக நின்று அவனை பார்த்து தலையாட்ட… கார் அவள் வீட்டை விட்டு பறந்திருந்தது… ” இப்ப இவரு என்ன சொல்லிட்டு போறாரு, சிறுமலைக்கி போனதை சொல்ல கூடாதா … இல்ல அங்க மேடத்தை பார்த்ததை சொல்ல கூடாதா ” என தானாக புலம்பிக் கொண்டிருந்தாள்.

 

காரில் சென்று கொண்டிருந்த மறவனின் இதழ்கள் மெலிதாக விரிந்தது… ” வந்துட்டேன் யாழி ” அவனுக்கே கேட்காத வண்ணம் மெல்ல உச்சரித்தான்…

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்