Loading

 

 

அத்தியாயம் 32

கணியன் கைப்பேசியின் தொடர்பை இணைத்துப் பேச முயல, சரண் அவனைத் தடுத்து அதனை ஒலிப்பெருக்கிக்கு மாற்றினான்.

திரையில் மௌனியின் பெயரைக் கண்டதுமே மனம் பதறிப்போனது. அத்தோடு அருணிடம் அவன் ‘விழாவிற்கு வந்திருக்கறேன்!’ என உரைத்தது வேறு சிந்தனையைத் தூண்டி இருந்தது.

கணி அவனைக் கேள்வியாய் நோக்க, “பரதேசி, எருமை எங்கடா போயத் தொலைஞ்ச? நான் ஃபோன் போட்டா, பதில் பேச மாட்டியோ? அவ மொபைல்ல இருந்து கூப்பிட்டா, காலை அட்டன் பண்ணுற.?” என கடும் சினத்தில் அத்தை மகனிடம், மறுபுறம் இருந்து வினா எழுப்பினாள் ரஞ்சனி.

சென்னைக்குச் சென்ற போது பேசிய காரணத்தால், சரண் உடனே கண்டு கொண்டான்  அவளின் குரலை!

‘எதுவோ பெரிதாய் நடக்கப் போகிறது?’ என்று உள்மனம் எச்சரிக்க, நெற்றியை இடக்கரத்தின் விரல்களால் தேய்த்துக் கொண்டான்.

அருணும் விமலும் பேச முனைந்திட.. இருவரையும் அமைதியாய் இருக்கும் படி கண் ஜாடைக் காட்டி விட்டு, கணியிடம் பேசுமாறு சைகை செய்தான்.

சரணின் திடீர் மாற்றத்தைப் புரியாமல் பார்த்தவன், “பிசாசு, எதுக்கு இப்ப கத்துற? டிராவல்ல இருந்தேன், அதான் கால் அட்டன் பண்ணல.”

அருண் அவனிடம் விசாரித்துக் கொண்டிருந்ததால், முன்னர் அமைதியாய் பேண்ட் பாக்கெட்டில் அதிர்ந்து கொண்டிருந்த கைப்பேசியை எடுத்துப் பேச முடியாமல் போனது. நடக்கும் நிகழ்வை உரைத்து குடும்பத்தாருக்கும் மௌனிகாவிற்கும் மன வருத்தத்தைக் கொடுக்க விரும்பாது, சட்டென்று தோன்றிய காரணத்தைச் சொல்லி சமாளித்தான்.

“இப்ப மட்டும் பேசுற.?”

“தெரியாம விரல் பட்டு கனெக்ட் ஆகிடுச்சு.”

“இது நம்புற மாதிரி இல்ல.”

“நம்புனா நம்பு, நம்பாட்டினா போ!”

“அட எரும!”

“பின்ன வேற என்ன செய்யிறது? சாட்சிக்கு ஆளா தேட முடியும்?”

“என்னமோ செய், போ!”

“சரி, எதுக்கு எனக்கு இத்தனை தடவை கால் பண்ண?”

“அச்சோ! அதை மறந்துட்டேன் பாரு. ஊருக்கு வந்துட்டேன்னு, நீ எனக்கு மெசேஜ் பண்ணி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு? இன்னும் வந்து சேராம, எங்கடா சுத்திக்கிட்டு இருக்க?”

“கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுக்கலாம்னு, வழியில நின்னு நின்னு வர்றேன்.”

“ஆரம்பிச்சுட்டியா உன்னோட வேலையை. இந்த மாதிரி வெளிய வர்ற சமயத்துல, கையில இருக்கிற அந்த கேமராவை முதல்ல பிடுங்கி வச்சிடணும். இந்த ஊருல என்ன இருக்குனு ஃபோட்டோ எடுக்குற? நான் வர்ற போது, நாலஞ்சு ஆடு மாடைத்தான் பார்த்தேன்.”

“கேமரா வழியா பார்த்தா, அது எல்லாம் அழகா தெரியும்!”

“என் கண்ணுக்கு, அப்படி எதுவும் தெரியலயே?’

“அதை எல்லாம் கலைக் கண்ணோட பார்க்கணும். நீ கொலைக் கண்ணோட பார்த்திருப்ப.”

“நேர்ல வாடா, உன்னைக் கவனிச்சுக்கிறேன்!”

“சரி, நான் வைக்கிறேன்.”

“கேமராவை முதல்ல பேக்ல வச்சு ஜிப்பை போட்டுட்டு, சீக்கிரம் வந்து சேரு. படி வேற உன்னை ரெண்டு மூனு தடவைக் கேட்டுட்டா.”

“வந்துடுவேன். அக்காவை என்னைப் பத்தி யோசிக்காம, நாளைக்குக் கல்யாணம் செஞ்சுக்கப் போற மாமாவைப் பத்தி யோசிக்கச் சொல்லு. பை பிசாசு!” என்று பேச்சை முடித்தவன், “இப்பவாது நம்புங்களேன், நான் தப்பான எண்ணத்துல ஃபோட்டோ எடுக்கல. ஜெஸ்ட் அப்படி நடந்திடுச்சு. நான் ஃபங்ஷனுக்குப் போயாகணும். அங்க எல்லாரும் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ப்ளீஸ்..” என சரணிடம் விளக்கம் தந்தான்.

எழுந்து நின்ற ஆடவன் அவனிற்கு கைக் கொடுத்து, “கணியனா நீ?” என்று வினவிட, “என்னோட பேரு எப்படித் தெரியும்?” என வியப்புடன் நோக்கினான்.

“வா, ஹாஸ்பிடல் போகலாம்.” என்ற சரண் தனது கைக்குட்டையால் அவனின் நெற்றியில் வழிந்த குருதியைத் துடைத்துவிட, “ஸ்ஸ்..” என எரிச்சலில் முணங்கியவன், “எதுக்கு, ஹாஸ்பிடலுக்கு?”

“அப்புறம் இப்படியே வீங்கின முகத்தோடவும் பிளட்டோடவுமா மோனியைப் பார்க்கப் போவ.?”

திருதிருவென விழித்தவன், “மோனியா.. ஹேய்… ஒன் செகண்ட்.. அப்ப நீங்க..” என்றபடி அவன் வந்த வாகனத்தை நோக்கினான்.

சிவப்பு வண்ணத்திலான சிறிய ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது, அந்த வெள்ளை நிற மகிழுந்து. புரிந்து போயிற்று கணியனிற்கு.

“நீங்க ஶ்ரீசரணா?”

‘மௌனிகாவிற்காக அத்தனை தூரத்திற்குச் சென்றவன், ஒரு பெண்ணை தவறான எண்ணத்தில் நிச்சயம் புகைப்படம் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை!’ எனக் கைப்பேசி உரையாடலின் போது அவன் ‘அக்கா’ என்று உரைத்ததை வைத்தே உணர்ந்து கொண்டான். அந்த அழைப்புதான், அவன் கணியன் என்பதையும் தெரியப்படுத்தியது.

‘எதிரே நிற்பவனின் வினாவிற்கு எப்படி பதில் சொல்வது? தானும், தன்னைச் சார்ந்தவர்களும் கடுமையாய் நடந்து கொண்டதற்கு என்ன சமாதானம் மொழிவது?’ என தவிப்புடன் நின்றிருந்தான் ஆடவன்.

அருண் நடப்பது ஒன்றும் புரியாது, “ஆமா, இவன் சரண்தான். உனக்கு எப்படி தெரியும்? மாப்பிள்ள, உனக்கு இவனைத் தெரியுமா? பேர் சொல்லி எல்லாம் கூப்பிடுற.?” என்று இருவரிடமும் விசாரிக்க, “மாம்ஸ்.. மச்சானுக்கு இப்படி கூட வரவேற்பு கொடுக்கலாமா? கும்பலா வேற கிளம்பி வந்திருக்கீங்க? செம போங்க!” எனச் சட்டென்று சிரித்தான் கணியன்.

மற்ற இருவரும் குழப்பத்துடன் பார்த்திருக்க, “ஸாரிடா. நான் உன்னைப் பார்க்காததால, யாருனு தெரியல!” என்று மன்னிப்பு வேண்டினான் சரண். குரலில் வருத்தம் தோய்ந்து இருந்தது.

“அதுசரி! எப்படி என்னைக் கண்டுபிடிச்சீங்க?”

“ரஞ்சனியோட வாய்ஸை வச்சுதான். அப்புறம் சென்னைக்கு வந்தப்ப, நீயும் அவளும் மொபைல்ல பேசுனதை ஒன் டைம் கேட்டேன்.”

“அநியாயத்துக்குக் கோபம் வருதே மாம்ஸ் உங்களுக்கு?” எனக் கணியன் உடனே இயல்பான மனநிலைக்குத் திரும்பி விட, சரணிற்குத்தான் குற்ற உணர்வில் தவித்தான்.

“என்ன அமைதி ஆகிட்டீங்க?” என்று அவன் கேட்டிட, “பெயினா இருக்கா? வா, ஒரு இன்ஜெக்ஷன் போட்டுடுவோம்!” எனக் குரூதி உறைந்த காயத்தை வருடினான் மௌனிகாவை மணக்கப் போகிறவன்.

“டைம் ஆகிடும் மாம்ஸ். அப்புறம் அந்த பிசாசு திரும்பவும் ஃபோன் போட்டு கத்தும்.”

“உன்னோட அம்மா அக்கா எல்லாரும் வந்திருக்காங்க இல்ல? கேட்டா, என்ன பதில் சொல்லுவ?”

“அது நான் சொல்லிக்கிறேன், ஜெஸ்ட் சின்னதா ஒரு ஆக்ஸிடெண்டுனு. வருத்தப்படாதீங்க. அப்புறம் மாம்ஸ், இந்த விஷயம் எதுவும் அக்காக்குத் தெரிய வேணாம்.”

“அதெப்படி சொல்லாம இருக்க முடியும்?”

“ஓ.. முதல்ல உங்களுக்குச் சொல்ல தைரியம் இருக்கா? அக்காக்காக நீங்க சந்துருவோட வீட்டுக்குப் போனீங்கனு ரஞ்சனி சொன்னப்பவே, அவங்களோட ஃபீலிங்ஸுக்கு எவ்வளவு மதிப்புக் கொடுக்குறீங்கனு புரிஞ்சுக்கிட்டேன். நடந்த விஷயம் தெரிஞ்சா, மௌனி அக்கா சந்தோஷத்தோட உங்களைக் கல்யாணம் செஞ்சுப்பாங்களா? மேரேஜ், நாளைக்குக் காலையில. அவங்களைச் சமாதானம் செய்யிறதுக்கான டைம் கூட இப்ப இல்ல.”

கணியனின் சொற்களில் உள்ள உண்மை, ஆடவனின் உணர்வை வெகுவாய்த் தாக்கியது.

தன்னை மரியாதை குறைவாய் பேசிக் கொண்டதை கூட பொறுத்துக் கொண்ட மௌனி, தம்பி உறவில் இருப்பவனை அடித்ததும் அதைத் தாங்கிட இயலாது மனம் இறுகிப் போனாள். அதையே தற்போது தன்னை மணம் முடிக்கப் போகிறான் எனத் தெரிய வந்தால், எப்படியான எதிர்வினை இருக்குமோ என்று சரணிற்குச் சற்று கலக்கமாக இருந்தது.

தம்பியைத் திரும்பிப் பார்த்தவன், “உன்னோட அண்ணிக்குக் கால் பண்ணி, கணியன் நம்மக்கூட இருக்கிறதை இன்ஃபார்ம் பண்ணிட்டு, நாங்களே மண்டபத்துக்கு கூட்டிட்டு வந்துடுறோம்னு சொல்லிடு!” எனக் கட்டளையிட, “மாப்பிள்ள?” என்றான் அருண்.

விமல் குழப்பத்துடன், “என்ன அண்ணா, நீதான் வந்ததும் முதல்ல அடிச்ச. இப்ப என்னடானா, ஸாரி கேட்டுட்டு இருக்க. முதல்ல, இவன் யாருனு சொல்லு!” என்று வினவ, “மோனியோட தம்பி. நான் இதுவரை நேர்ல பார்க்கல, பட் இவனைப் பத்தி எல்லாமும் தெரியும். கணி தப்பு செஞ்சிருக்க வாய்ப்பு இல்ல. நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோம்.

அப்புறம் அவன் இவன்னு பேசுறதை நிறுத்து. அவன், உனக்கு மாமா முறை வேணும். மரியாதையோட பேசிப் பழகு. அண்ட் ஒரு முக்கியமான விஷயம், அடிச்சதுக்கு முதல்ல ஸாரி கேளு!”

“அண்ணிக்குத் தம்பியா.?” என இளையவன் வியப்பும் அதிர்ச்சியுமாய் வினவ, “அப்ப.. சென்னையில தங்கச்சிக்காக சண்டைப் போட்டது?” என்று கேள்வியாய் நோக்கினான் அருண்.

சரண் ‘ஆம்’ என்பது போல் தலை அசைக்க, “ஏன்ப்பா? நான்தான்.. யார் வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்க, நீ யாருனு விசாரிச்சேன் இல்ல? ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, இவ்வளவு ஹார்ஷா நடந்துட்டு இருந்திருக்க மாட்டேனே?”

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்