Loading

அத்தியாயம் 31

கோவில் பட்டிக்கு வந்ததை ரஞ்சனிக்குக் குறுஞ்செய்தியாய் அனுப்பிவிட்டு, தான் இருந்த இடத்தைச் சுற்றிலும் பார்வையிட்டான் கணியன்.

தென் மாவட்டத்தின் பக்கம் அவன் வருவது இதுவே முதல்முறை. நண்பர்களுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்காக என்றே, மற்ற மாநிலங்களுக்கு பயணம் செய்து இருக்கிறான். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுற்றி வந்திருக்கிறான். இவற்றைக் கடந்து தென் திசையில், ஆடவனிற்கு அனுபவம் என்று எதுவும் இல்லை.

தற்போது அது கிடைத்து இருக்க உடனே விடுதிக்குச் செல்ல மனமின்றி, தனது புகைப்படக் கருவியைக் கையில் எடுத்துக் கொண்டான்.

மௌனிகாவின் இல்லம் இருப்பது நகரைக் கடந்த சற்றே கிராமப் பகுதி. வழியினில் பருத்தி, கம்பு, கேழ்வரகு, நிலக்கடலை போன்றை பயிரிடப்பட்டு இருந்தன.

பருத்தி ஆறுமாதப் பயிராகும். கோடை மற்றும் குளிர் இரு பருவமும் நடவிற்கு ஏற்றது. பொதுவாய் ஆவணியிலும், மாசியிலும் விதைப்பு நடக்கும். ஆடி மற்றும் தையில் அறுவடை செய்வர்.

வழியினில் பெரும்பாலான காடுகளில் அறுவடையை முடித்து இருந்தனர். சில இடங்கள் மட்டும் தவறிப்போய், வெடித்த பருத்தியை வெளிக்காட்டிக் கொண்டிருந்தன.

கோடையின் துவக்க காலம் என்பதால் மாலை நான்கு மணியைக் கடந்த பின்னரும் கூட பகலவன் பல்லிளித்துச் சிரித்தான். அதிலும் கோவில்பட்டி சற்றே வெப்பம் கூடுதலான பூமி தான். அனலின் தாக்கம் மாசி மாதத்திலேயே துவங்கி இருந்தது.

அதிகப்படியான வெளிச்சமும் வெண்மை நிறத்தில் வெடித்து நின்ற பஞ்சுச் செடிகளும் கண்களிற்கு விருந்தாக, ஒவ்வொரு இடமாய் நின்று வெவ்வேறு கோணங்களில் தனது புகைப்படக் கருவியில் உறைந்த காட்சிகளாய் பதிவு செய்து கொண்டே சென்றான் கணியன்.

பிடித்தமான மனம் நேசிக்கும் பணி என்பதால், நேரம் கடந்து சென்றது தெரியவில்லை.

கேமிராவில் கண்களைப் பதித்துக் கொண்டே தோன்றிய திசையில் உடலைத் திருப்ப, எதிர்பாராத விதமாய் பார்வையில் விழுந்தாள் அவள்.

இடையைக் கடந்த முழங்காலை நெருங்கும் படியான நீளக்குழல் பாவைக்கு. புடவை உடுத்தி சற்றே அலங்கரித்து இருந்தாள். பின்பக்க தலையை நிறைத்த ஜாதிமல்லி நான்கு சரமாய் பிரிந்து இடைவரை நீண்டு சென்றது.

முகத்தைப் பக்கவாட்டில் மட்டுமே காண முடிந்தது. வலதுபக்க மூக்கில் அணிந்திருந்த ஒற்றை வெள்ளைக் கல் மூக்குத்தி, மயங்கிக் கொண்டிருந்த கதிரவனின் கதிர் பட்டு, ஒளிக்கற்றைகளை அவளின் முகத்தில் படரவைத்து வானவில்லின் வித்தையைத் தோற்றுவித்தது.

வளர்ந்து நின்ற கேழ்வரகு செடியில் இருந்து ஒரு தட்டை அவள் பிய்த்துக் கொண்டிருக்க, ஆடவனின் கைகள் தானாய் அக்காட்சியைப் புகைப்படமாய் பதிவு செய்து கொண்டன. அத்தோடு அவளது மேலும் இரு படங்களும் இணைந்தன.

கேமிரா எழுப்பிய தொடர் ஒலியில் சட்டென்று அவன் இருந்த திசையில் திரும்பிய பாவை, “ஏய், என்ன செய்யிற.?” என்றபடி, எதிரே வந்து நின்றாள்.

அதை எதிர்பார்த்திடாதவன் சற்றே பதறி, ‘ஒன்.. ஒன்னுமில்ல. ஃபோட்டோ எடுத்தேன்!” என்றிட, கூர்ந்து நோக்கியவள், “யாரைக் கேட்டு, என்னை நீ ஃபோட்டோ எடுத்த?” என அவனது கையில் இருந்த கருவியை சட்டென்று பறித்தாள்.

‘தப்பான எண்ணத்துல எல்லாம் இல்லங்க. நான் ஃபோட்டோ எடுத்துட்டு இருந்தேன். சடனா ஃப்ரேமுக்குள்ள நீங்க வந்துட்டீங்க. அவாய்ட் பண்ண முடியாம, கிளிக் பண்ணீட்டேன்.”

“இதை நான் நம்பணுமா?”

“நான் சொல்லுறது எல்லாம் உண்மை தாங்க!”

“அது உண்மையானவே இருந்தாலும், என்னோட ஃபோட்டோ முன்ன பின்ன தெரியாத எவனோ ஒருத்தன்கிட்ட இருக்கிறதை நான் விரும்பல!” என்றவள் அவனின் புகைப்படக் கருவியோடு, சற்றுத்தள்ளி நிறுத்தி இருந்த தனது இரு சக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்றாள்.

‘என்ன நடந்தது?’ என்று புரியாமல் விழித்தவன் பின்னர்தான் உணர்ந்தான், தனது படம் பிடிக்கும் கருவியைக் கண்முன்னேயே இழந்ததை!

“அச்சச்சோ! கேமரா போச்சே? அது வாங்க பணத்துக்காக எங்க மம்மி ராணிக்கிட்ட என்ன பாடு பட்டேன் நான்! நடந்த விஷயம் மட்டும் தெரிஞ்சிச்சு, அவ்வளவு தான்! குறைஞ்சது நாலு மாசத்துக்காது சோறு கிடைக்காது!” எனப் புலம்பியவன், தான் வந்த வாடகை வாகனத்தை அவள் சென்ற திசையில் திருப்பச் சொல்லிப் பின்தொடர்ந்தான்.

ஆறு நிமிடங்களிற்கும் மேல் நீண்டது அப்பயணம்.

இதற்கிடையில் கணியன் தனக்குப் பின்னால் வருவதைக் கவனித்த அப்பெண், உறவுகளிற்குக் கைப்பேசியிலில் தகவல் தெரிவித்து விட்டாள்.

அடுத்த நான்காவது நிமிடம், அவன் பயணித்த ஆட்டோவை வழி மறித்து நிறுத்தினர், நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்கள்.

அவள் நின்று நடப்பதைக் கவனிக்க, “இவன் தானம்மா?” என வினவினான் அருண்.

“ஆமா அண்ணா, இவன்தான்.” என்று உறுதி செய்தாள்.

“யாருடா நீ? என்னோட தங்கச்சியை ஃபோட்டோ எடுத்தது மட்டும் இல்லாம, பின்னாடியே ஃபாலோ பண்ணி வேற வந்துட்டு இருக்க?”

“அச்சச்சோ! நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க. நான் அவங்களை ஃபாலோ எல்லாம் பண்ணலங்க. ஃபோட்டோ எடுத்தது தப்புதான். அதை நான் ஒத்துக்கிறேன். அதுக்காக செய்யாத தப்பை எல்லாம் செஞ்சதா சொல்லாதீங்க!”

“பின்னாடியே வந்திருக்க, அதுக்குப் பேர் என்ன? இது தப்பு இல்லன்றியா?” என வினவி பட்டென்று அறைந்து விட்டான் அருண்.

கணியன், நடந்த நிகழ்வினால் அதிர்ந்தான்.

‘தமக்கையாய் எண்ணும் மௌனிகாவின் திருமணத்திற்காக வந்த இடத்திலா, இப்படி நடக்க வேண்டும்? அவளின் செவிக்கு விசயம் போனால், பெரும் பிரச்சனை வரக்கூடுமே? இதனால், நடக்கப் போகும் சுப நிகழ்வில் ஏதேனும் தடை ஏற்பட்டு விடக்கூடாதே?’ என்று மனம் பதற, சற்று அமைதியாகவே அவர்களிடம் பேச முனைந்தான்.

“நான் என்னோட கேமிராவை வாங்கத்தான் பின்னாடி வந்தேனே தவிர, வேற எந்த நோக்கமும் இல்ல சார்.” என நிதானமாய் எடுத்துரைத்தான்.

அருண் திரும்பி அவளைப் பார்க்க, தனது வண்டியில் இருந்து புகைப்படக் கருவியை எடுத்து நீட்டினாள்.

“இதை எதுக்குமா நீ எடுத்துட்டு வந்த?”

“என் ஃபோட்டோவை அப்படியே விட்டுட்டு வரச் சொல்லுறீங்களா அண்ணா.?”

“நான் அதை டெலிட் செஞ்சிடுறேன்!” என்று இடைநுழைந்து உரைத்தான் கணியன்.

“உன்னோட வார்த்தையை எப்படி நம்புறது?” என அருண் வினவ, “உங்க முன்னாடி இப்பவே டெலிட் பண்ணிடுறேன்.”

“பேக்கப் ஃபோட்டோஸ் வச்சு இருக்கமாட்டான்னு என்ன நிச்சயம்.?” என்று அவள் வினவ, “ஏங்க மனசாட்சியோட பேசுங்க. இப்பதான நான் ஃபோட்டோ எடுத்தேன்? மெமரிகார்ட் கூட கேமரால அப்படியே தான் இருக்கு. அதுக்குள்ள பேக்கப் போட்டோஸ் எல்லாம் ரெடி பண்ண முடியாதுங்க!” எனத் தன்னிலை விளக்கம் தர முயன்றான் கணியன்.

“சரி, நீ யாரு? உன்னோட குடும்பம்? விபரம் எல்லாம் சொல்லு.” என்று அருண் விசாரிக்க, “எதுக்கு கேட்குறீங்க?”

“இது பொண்ணு விவகாரம். நாளைக்கு நீ எதுவும் பிரச்சனை செஞ்சிட்டா, நான் உன்னை ஊர் ஊரா தேடிட்டு அலையணுமா?”

“உஃப்ப்..” என ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “நான் சென்னையில இருக்கேன். இங்க ஒரு ஃபங்ஷனை அட்டன் பண்ண வந்தேன்.”

“யார் வீட்டு ஃபங்ஷன்?”

“அதெல்லாம் சொல்ல முடியாது!”

“சொன்னா, கேமரா கிடைக்கும். இல்லேனா அப்படியே கிளம்பு!”

“இதுல கொஞ்சம் கூட சம்பந்தமே படாத அவங்களோட விபரத்தை எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லணும்?”

“எங்க வீட்டுப் பொண்ணை, நீ ஃபோட்டோ எடுத்ததுக்கே, உன்னோட கைக் காலை உடைச்சு இருக்கணும். நான் வந்தனால வாயால பேசிட்டு இருக்கேன். மத்தவனுங்க வந்திருந்தா, நிலைமையே வேற மாதிரி மாறி இருக்கும். விபரத்தைச் சொல்லுறியா? இல்ல, போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கேமராவை வாங்கிக்கிறியா.?” என வினவ, மனம் நொந்தான் ஆடவன்.

சில தினங்களுக்கு முன்னர் தான் சந்துருவின் பிரச்சனையில் இருந்து வெளி வந்து இருக்கிறான். அதன் பாதிப்பே இன்னும் முழுதாய் மறைந்த பாடு இல்லை. அதற்குள் மீண்டும் ஒருமுறை காவல் நிலையம் என்றால்.?

இதற்கிடையே அவளின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு ஒலி கேட்டது.

“எங்கு இருக்கிறாய்? ஏன் இன்னும் இல்லம் வந்து சேரவில்லை?” என்று வினா எழுப்பி இருந்தனர் குடும்பத்தார்.

விரைவில் வந்து விடுவதாய் மறு செய்தி அனுப்பினாள்.

சரியாய் அந்நேரம் அருணின் கைப்பேசி ஒலித்தது. சரண் அழைத்து இருந்தான்.

“மாப்பிள்ள டைமாச்சு. எங்க இருக்க? பெண்ணை அழைக்கப் போகணும்!”

“ஒரு சின்ன பிரச்சனை மாப்பிள்ள. நீ விமலை அனுப்பு!”

“என்னாச்சு?”

“அது..” எனச் சற்றே தயங்கியவன், ‘மறைப்பதில் பயனில்லை. எப்படியும் அவனிற்குத்  தெரிந்துவிடும்’ என்பதால் நடந்த நிகழ்வினை உரைக்க, “நான் வர்றேன்!” என்று இணைப்பைத் துண்டித்த ஆடவன், சிறிது நேரத்தில் தம்பியுடன் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

“நீ, அவளைக் கூட்டிட்டுப் போ விமல்!” என்று உடன் பிறந்தவனிற்குக் கட்டளையிட, “நீங்க எல்லாம் இங்க இருக்கும் போது, என்னை மட்டும் அனுப்புறது சரியில்ல அண்ணா. நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல. எனக்கும் கடமை இருக்கு. அதான் டிரைவர் இருக்காரு இல்ல? அவர்கூட அனுப்புவோம்!” என உரைத்தான்.

புகைப்படக் கருவியை வாங்கிக் கொண்டு அவளை அனுப்பிய சரண், கணியனின் எதிரே வந்து நின்றான்.

“யார் கொடுத்த தைரியம் இது? ஒரு பொண்ணை அவளோட அனுமதி இல்லாம ஃபோட்டோ எடுக்கிறது தப்புனு தெரியாதா உனக்கு?” என்று வினவியபடி தன் பங்கிற்குத் தானும் ஒரு அறை விட்டிருந்தான்.

“பேசிக்கிட்டு இருக்கும் போதே, எதுக்குயா அடிக்கிற? நானும் பிரச்சனை வேணாம்னு பொறுமையா இருந்தா, ஊர்ல இருக்கிறதால நீங்க எல்லாம் ஒன்னு சேர்ந்துக்கிட்டு, வெளியூர் காரனான என்னைக் குற்றவாளி ஆக்குறீங்களா?” எனக் கணியன் ஆடவனின் சட்டையைப் பற்றிட, அடுத்த நொடி அவனின் இடைப்பக்கத்தில எட்டி உதைத்துக் கீழே தள்ளி விட்டிருந்தன் விமல்.

அதில் சாலையோரம் இருந்த பயண தூரத்தின் அளவை உரைக்கும் கல்லில், நெற்றி மோதி  குருதி கசிய துவங்கி இருந்தது.

“உன்னை யாரு இதுல தலையிடச் சொன்னது? நீ இப்ப படிக்கிற வேலையை மட்டும் பாரு. இதுக்கு எல்லாம் இன்னும் காலம் இருக்கு.” என்று தம்பியைக் கண்டித்த மூத்தவன், நிலத்தில் சரிந்திருந்த கணியனின் உடையைப் பற்றி எழ வைத்தான். கால் சராயில் இருந்த கைப்பேசி வெளியில் விழுந்தது.

“விமல், இந்த கேமரால இருக்க போட்டோஸ் எல்லாத்தையும் டெலீட் பண்ணு!” என இளவலிடம் உரைத்தவன் கணியனின் பக்கம் திரும்ப, நிலத்தில் கிடந்த அவளின் கைப்பேசி ஒலித்தது.

அனைவரது கவனமும் அதில் குவிய, திரையில் மௌனிகாவின் புகைப்படத்துடன் அவளின் பெயரும் மின்னியது.

சரண், அருண், விமல் மூவரும் திடுக்கிடலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “ப்ளீஸ் ஒன் மினிட்..” என்றுவிட்டு, அதன் தொடர்பை இணைத்தான் கணி.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்