
அத்தியாயம் 30
மணி காலை எட்டு..
கோவில்பட்டியில் இருந்த மௌனிகாவின் இல்லம் இருக்கும் பகுதியில் நின்று, எந்த வீடு என்று தெரியாததால், இங்கும் அங்குமாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.
ஆறு மணிக்குத்தான், ராணி மற்றும் யாமினியுடன் இரயிலில் வந்து இறங்கினாள்.
சரண் நேராய் அவர்களின் இல்லத்திற்கே சென்று பேசியதும், அவன் உரைத்து வந்தது போலவே கணியனின் மீது கொடுத்திருந்த புகாரை சந்துருவே திரும்ப பெற்றதும்.. ஆடவனின் மீதான மதிப்பைக் கூட்டி இருந்தது.
மௌனிகாவின் குடும்ப நிலையையும் ஓரளவிற்கு அறிவர் என்பதால்.. நடந்து முடிந்த நிகழ்வினால் உண்டான மன வருத்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இருவருமாய் இணைந்து திருமணத்திற்கு அழைத்ததின் பெயரில், தற்போது ரஞ்சனியுடன் விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.
இரண்டு தினங்களிற்கு முன்னரே ஊரிற்கு வந்து விட்டாள் மௌனி. ஒருநாள் வளையல் அணிவிக்கும் நிகழ்வு, அடுத்த நாள் மஞ்சள் நீரில் நீராட்டி மருதாணி இடும் வைபவம் என நடந்து முடிந்திருந்தது.
பெரிதாய் உறவுகள் என்று எவரும் வருகை தரவில்லை. மாப்பிள்ளையின் குடும்பமான பாகீரதி, ரோகிணி, விமலோடு அவனது சிற்றன்னையான வசந்தி மட்டும் பெண் வீட்டிற்கு உடன் வந்து, நால்வருமாய் சடங்கை செய்துவிட்டுச் சென்றனர். திருமண வேலைகளின் காரணமாக, ஆடவன் அதில் கலந்து கொள்ளவில்லை.
“சிம்பிளா செஞ்சுக்கலாம் சரண். பெருசா எதுவும் வேணாம். என் பக்கம் பார்க்கிறதுக்கு ஆச்சி மட்டும் தான் இருக்காங்க. கெஸ்ட் அதிகமா வந்தா, அவங்களால மேனேஜ் பண்ண முடியாது!” என மௌனிதான் உரைத்து இருந்தாள்.
‘ஒரே வீட்டில் இருந்தாலும் அவளின் சிறிய தந்தையின் குடும்பத்தார் தாமரை இலை நீராய் உறவாடுவதால், யாருக்கும் எவ்வித அசௌகரியமும் ஏற்பட்டு விடக்கூடாது!’ என்பதற்காக அவனும் அதை ஏற்று, அப்பபடியே நடந்து கொண்டான்.
இதைப்பற்றி அவள் பேசிய போது கூட, “சரி மோனி!” என இரு வார்த்தைகளில் முடித்து விட்டான்.
இருவரும்நிதானமாய் மனம்விட்டுப் பேசிக் கொண்டது என்றால், சென்னை சந்திப்பின் பொழுதுதான். அதன் பின்னர் வரிசை கட்டிய பணிகளும், தொழிலைக் கவனிக்க வேண்டிய கட்டாயமும் சரணின் நேரத்தை மொத்தமாய் விழுங்கிக் கொண்டன.
பெரும்பாலும் குடும்பத்தாரிடம் கூட, விழா ஏற்பாடுகளைப் பற்றி பேசுவது இல்லை என்றானது. காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடிக் கொண்டிருந்தான்.
விமலும் சில வேலைகளைப் பார்த்தான் தான். கல்லூரிக்குச் செல்வதால், ஓரளவிற்கு மேல் அவனால் நேரத்தை ஒதுக்க இயலவில்லை. மொத்தமும் மூத்தவனின் தோளில் தான்.
மௌனி சென்னையில் இருந்து வந்து பொழுது, இளையவனான விமல் தான் அவளை அழைத்து வந்து இல்லத்தில் விட்டுச் சென்றான்.
நிச்சய விழாவிற்கு சேகரனும் அர்ச்சனாவும் உறவுகளை முன்பு அழைத்து இருந்ததால், ரெங்கநாயகி கேட்டுக் கொண்டதன் பெயரில் வேறு வழி இல்லாமல் தற்போதும் திருமண அழைப்பிதழ்களை தந்து அழைப்பு விடுத்திருந்தனர்.
இல்லத்தின் வாயிலில், விழா நடைபெறுவதன் அடையாளமாக பந்தல் கூட இடவில்லை.
“எங்களுக்கு இதுதான் வேலையா? என் பொண்ணு வாழ வேண்டியதைப் பறிச்சுக்கிட்ட, உங்க பேத்திக்கு நாங்க இதெல்லாம் செய்யணுமா? அதான் போயி பத்திரிக்கைக் கொடுத்து இருக்கோம்ல? அதைச் செஞ்சதே பெருசு. இதுக்கு மேல எல்லாம், வேற எதையும் செய்ய முடியாது!” என்று கறாராய் உரைத்து விட்டார் அர்ச்சனா.
மூத்தவரும்.. மகன் மற்றும் மருமகளை வற்புறுத்த விரும்பாது அப்படியே விட்டுவிட்டார். தான் கட்டாயப்படுத்தினால், அர்ச்சனை திருமண விழாவில் ஏதேனும் குளறுபடி செய்து விடுவாரோ? என்ற எண்ணம் வேறு.
மணப்பெண் மாறியதில் இருந்து, மாப்பிள்ளையின் குடும்பத்தாரிடம் அன்னை மற்றும் மகள் இருவருமே நடந்து கொண்டது அப்படி ஒன்றும் உவப்பானதாக இல்லை.
அர்ச்சனை சரணிடம் குத்தல் மொழிகளை உரைத்ததிலும், லாவண்யா விமலை நடத்திய விதத்திலும் மூத்தவருக்கு பெரும் வருத்தம். அவர்களை அதனைப் பெரிதாய் கருத்தில் கொள்ளாது, விட்டுவிட்டனர்.
வீட்டில் சரி.. விழா அரங்கில் அதுபோல் எதுவும் பேசிவிட்டால், சுப நிகழ்வில் வருத்தம் மட்டுமே எஞ்சும். அதனால், இளைய மகன் சேகரனின் குடும்பத்தாரை எதுவும் சொல்லாது அவர்களின் போக்கிற்கே விட்டுவிட்டார் ரெங்கநாயகி.
மணப்பெண்ணின் புறம் இருந்து விழாவைக் கவனிக்க ஆள் என்று எவரும் இல்லாததால், அனைத்தையும் சரணே ஒற்றை ஆளாய் பார்க்க வேண்டிய சூழல்.
மௌனியும் அதை உணர்ந்து இருந்ததால், தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே அவனிடம் பேசினாள்.
‘பகிர்ந்து கொள்ளாது போயினும், திருமணத்திற்குப் பின்னர்தான்.. நீண்ட காலமும் அதிக நேரமும் இருக்கிறதே!’ என இருவரும் இச்சூழலை ஏற்றுக் கொண்டனர்.
உண்மையில் சென்னையில் பார்த்துக் கொண்ட போது சரணிற்கும் மௌனிக்கும் இடையே உண்டான நெருக்கம், நீறு பூத்த நெருப்பைப் போல் மனதிற்குள் மறைந்து போனது. அதை மீண்டும் புதுப்பித்திட ஏதேனும் தூண்டுகோல் அவசியம். அப்படியான நிகழ்வுதான் எதுவும் தற்போது நிகழ்வதாய் இல்லை.
கண்மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த பெயர்த்தியைக் கண்ட ரெங்கநாயகி, “நாளைக்குக் கல்யாணம் பாப்பா. ஆனா, கல்யாண பொண்ணு மாதிரியா இருக்க.?” என மனதில் இருந்ததை வருத்தத்துடன் வினவினார்.
கரம் நிறைந்து இருந்த வளையல்களையும், உள்ளங்கையின் மருதாணி சிவப்பையும் அவரிடம் காட்டிய பாவை, “இதெல்லாம் பார்த்தும் கூடவா ஆச்சி, உங்களுக்கு டவுட் வருது?”
“பின்ன? கல்யாண பொண்ணுனா எப்படி இருக்கணும்?”
மெலிதாய் சிரித்தவள், “எப்படி இருக்கணும்?”
“நல்ல சேலையா கட்டி, காது, கழுத்து, காலுனு எல்லாத்துலயும் நகைப் போட்டு, தலைவாரி பூ வச்சு.. பார்த்தாலே தெரிய வேணாமா? ஆனா உன்னைப் பாரு? சட்டையும் பேண்டையும் மாட்டிக்கிட்டு, நகைனு பேருக்குக் கூட எதுவும் உடம்புல இல்லாம..” எனக் கவலையுடன் பெருமூச்சு ஒன்றை விட, “இப்ப என்ன ஆச்சி? உங்களுக்கு நான் கல்யாணம் பொண்ணு மாதிரி தெரியணும். அவ்வளவு தான?” என்று உரைத்து எழுந்து சென்றாள்.
அன்னை காவேரியின் ஆபரணங்களில்.. தனக்குத் தக்கபடி சிறிய அளவிலான காதணி, மெல்லியதாய் கழுத்திற்குச் சங்கிலி ஒன்றையும் அணிந்தாள். கவ்விக்குள் அடைத்து வைத்திருந்த குழலை அவிழ்த்துப் பின்னலிட்டுக் கொண்டு மூத்தவரின் எதிரே வந்து நின்றாள்.
“ஓகேவா ஆச்சி.?”
சின்னதாய் புன்னகைத்த ரெங்கநாயகி, “அப்படியே துணியையும் மாத்தலாம்ல?”
“நோ! அது மட்டும் முடியாது. சேரியை மெயிண்டெயின் பண்ணுறது எல்லாம் ரொம்ப கஷ்டம் ஆச்சி.”
சற்றே முகம் சுருக்கியவர் பெயர்த்தியை மேல் இருந்து கீழ் வரை பார்த்து, “கொலுசு இல்லயா பாப்பா, உன்கிட்ட?”
“இல்ல.”
“வாங்கி போட்டிருக்கலாம்ல.?’
“இந்த ஜீன்ஸுக்கும் டாப்புக்கும் நான் ஆங்க்லெட் போட்டு நடக்கவா? காட்.. நினைச்சுப் பார்த்தாலே ஒரு மாதிரி ஆக்வேர்டா இருக்கு.”
மூத்தவருக்கு பெயர்த்தி உரைத்த ஆங்கில வார்த்தை புரியாவிடினும், அதன் பொருளை மட்டும் உணர்ந்து கொண்டார்.
“என்ன பாப்பா நீ? அதுக்குனு கல்யாணத்துக்கு கொலுசு போடாமலா இருப்ப..?”
“சேரி கட்டப் போறேன். அது எப்படியும் காலை மறைச்சிடும். அதுக்குப் போட்டா என்ன, போடலேனா என்ன.?”
“பாப்பா..” என அவர் பாவமாய் பார்க்க, “போதும் போதும், நீங்க என்னைப் பார்த்தது. எனக்குக் கொலுசு போடுற ஐடியா இல்ல!” என்று உறுதியாய் மொழிந்தாள்.
அதற்கு மேல் அவளை வற்புறுத்த விருப்பம் இல்லாது ரெங்கநாயகி அமைதியாகி விட, மௌனியின் கைப்பேசி ஒலித்தது. ரஞ்சனி தான் அழைத்து இருந்தாள்.
“ஹலோ ரஞ்சு.”
“படி, உன் வீட்டோட கரெக்டான லேண்ட்மார்க் சொல்லு.”
“நான்தான் லொகேஷன் அனுப்பினேனே?”
“அதெல்லாம் ஓகேதான். பட் என்னால தான் கண்டுபிடிக்க முடியல.”
“அதுக்குத்தான் நான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். நீ கேட்டியா.?”
“படி, நீ கல்யாண பொண்ணு. அது ஞாபகம் இருக்கா?”
“அதெல்லாம் இருக்கு.”
“அப்புறம்? நாளைக்கு மேரேஜை வச்சுக்கிட்டு, இன்னைக்கு வெளிய ஊர் சுத்துறேன்னு அடம் பிடிச்சிட்டு இருக்க.?”
மௌனிகா சிரிக்க, “அட்ரஸ் சொல்லு படி!”
அவள் முகவரியை உரைத்துக் கொண்டே, இல்லத்திற்கு வெளியே வந்தாள்.
“நான் வாசல்லயே நிக்கிறேன். நீ வா..” என்றிட, சாலையின் இருபுறமும் பார்வையால் ஆராய்ந்தபடி, ஆட்டோ ஓட்டுனரிடம் முகவரியை உரைத்தாள் ரஞ்சனி.
“இதோ, அந்த தெரு முனையில தான்மா..” என உரைத்தவர் அழைத்துச் செல்ல, அடுத்த ஒன்றரை நிமிடங்களில் இல்லத்தை அடைந்து இருந்தனர்.
சொன்னது போலவே வாசலில் நின்றிருந்த மௌனிகா மலர்ந்த முகத்துடன், “படி..” என்று தோழியை நெருங்கி அணைத்துக் கொள்ள, மற்ற இருவரும் உடைமைகளை வாகனத்தில் இருந்து இறக்கி வாடகை பணத்தையும் கொடுத்துவிட்டு, இவர்களைப் பார்த்துப் புன்னகைத்தனர்.
பெயர்த்தி கைப்பேசியில் பேசி சென்றதை கவனித்த மூத்தவர்.. மெல்ல வாயிலிற்கு நடந்து வந்து, “வாங்கம்மா.. வாங்க.. வாங்க..” என வரவேற்க, சூழல் சற்று இலகுவானது.
ராணியையும் யாமனியையும், “வாங்கம்மா, வாங்க சிஸ்டர்..” என்று மௌனியும் தன் பங்கிற்கு அழைத்திட, புன்னகையுடன் தலை அசைத்து ஏற்றுக் கொண்டனர்.
“நீங்க வருவீங்கனு நான் எதிர்பார்க்கல. என்மேல கோபமா இருப்பீங்கனு நினைச்சேன்..” என அவள் மனதில் இருந்ததை வெளிப்படையாய் கேட்க,
“நீ என்ன தப்பு செஞ்ச, உன்மேல கோபப் படுறதுக்கு? எல்லாம் அந்த சந்துருவோட தப்பு. கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு தான். அதுக்காக எவ்வளவு நாளைக்கு முகத்தைத் திருப்பிக்கிட்டு இருக்க முடியும்? இப்பதான், எல்லாம் சரியாகிடுச்சே? அதுவும் இல்லாம வீடு தேடி வந்து கல்யாணத்துக்கு வாங்கன்னு கூப்டுட்ட? வரலேனா நல்லாவா இருக்கும்?” என்று சமாதானம் சொன்னாள் யாமினி.
“தேங்க்ஸ் சிஸ்டர்..” எனக் கைப்பற்றி நன்றி உரைக்க, “இதுல என்ன இருக்கு?” என்று அச்சூழலை இயல்பாக்க முயன்றார் ராணி.
“என்ன பாப்பா? எதுவும் பிரச்சனையா? ஏதேதோ பேசிக்கிறீங்க?” எனஸரெங்கநாயகி பதற்றத்துடன் வினவ, “ஒன்னும் இல்ல ஆச்சி. அதெல்லாம் முடிஞ்சு போன விஷயம்!” என்று சந்துருவை பற்றிய பேச்சிற்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தாள் பாவை.
வந்திருந்த விருந்தினர்களும் அதை உணர்ந்து, சூழலுக்கு தகுந்தது போல் நடந்து கொண்டனர்.
அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்திருந்த ரஞ்சனி, “படி, கல்யாணம் நடக்குது தான.?”
தோழியின் வினாவில் திகைத்த மௌனனி, “என்ன படி இப்படி கேக்குற?”
“பின்ன, ஃபங்ஷன் நடக்கிறதுக்கான எந்த சிம்டம்ஸையும் காணோம்.? வாசல்ல வாழைமரம் கூட கட்டல?”
“அது, அப்படித்தான். கணி ஏன் உங்கக்கூட வரல?” என வினவி பேச்சை மாற்றினாள்.
“ஏதோ ஃபோட்டோ ஷுட் பண்ணணும்னு, நாலு நாளைக்கு முன்னாடியே கிளம்பிப் போனான். நேத்தே வந்திடுவான்னு பார்த்தோம். ஆனா, ஆள் வரல. அதான் நாங்க கிளம்பி வந்துட்டோம். நைட் எப்படியும் வந்திடுவேன்னு சொல்லி இருக்கான்.”
“ஓகே படி, வாங்க போகலாம்!” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்ற மௌனி, “ஹோட்டல்ல உங்களுக்கு ரூம் போட்டு இருக்கேன். இப்பவே செக் இன் பண்ணிக்கிறீங்களா? இல்ல, மதியத்துக்கு மேல போறீங்களா?” என விசாரித்தாள்.
“போயி, பார்த்துட்டு வந்திடுறோம். எப்படியும் குளிச்சு ரெடியாகணும்ல?” என்ற ரஞ்சனி சிறிது நேரம் தோழியுடன் உரையாடி காலை நேர தேநீரை அருந்திவிட்டு, அத்தை மற்றும் அவரின் மகளுடன் ஒன்பது மணி அளவில் அங்கிருந்து கிளம்பினாள்.

