
அத்தியாயம் 30
“பாஸ்… நம்ம கிட்ட இருக்க கற்கள் எல்லாம் ஃபேக்…” என்று அலைபேசியில் கேட்ட குரலில், அதிர்ச்சியுடன் கூடிய கடுப்பு அவனை ஆட்கொள்ள, “என்னடா சொல்ற? எத்தனை முறை கவனமா இருக்கச் சொல்லி எச்சரிச்சேன்… அதைக் கவனிக்காம என்ன பு**கிட்டு இருந்த?” என்று கெட்ட வார்த்தைகளால் கண்டபடி திட்டினான் ரத்தோரின் பேரன்.
அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், மறுமுனை மௌனமாக இருக்க, சற்றுத் தணிந்தவன், “எப்போலயிருந்து ஃபேக் கல்லு நம்ம கிட்ட இருக்குன்னாவது தெரியுமா?” என்று வினவ, “பாஸ், எனக்குத் தெரிஞ்சு, நாம லொக்கேஷனை மாத்துனப்போதான், இதுவும் மாறியிருக்கும். ஏன்னா…” என்று காரணத்தைச் சொல்லாமல் தயங்கினான்.
“ப்ச், முழுசா சொல்லித் தொலை!” என்று அதற்கும் அவன் திட்ட, “அது வந்து பாஸ்… டிரான்ஸ்போர்டேஷனுக்கு ஹெல்ப் பண்ண, பெரிய பாஸோட ஆளுங்க வந்தாங்க. நாங்க எவ்ளோவோ வேண்டாம்னு சொல்லியும் அவங்க பிடிவாதமா இருந்தாங்க பாஸ்.” என்றான்.
“இதை ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லல?” என்று ரத்தோரின் பேரன் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, “பாஸ், நான் கால் பண்ணப்போ நீங்க எடுக்கல…” என்றான் மறுமுனையிலிருந்தவன்.
“இடியட் ஏதாவது சாக்கு சொல்லிட்டே இரு. கற்களை மீட்டுட்டு வந்து உன்னைக் கவனிச்சுக்குறேன்.” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன், ‘தாத்தா, எனக்கே ஆட்டம் காட்டுறீங்களா? வரேன், எல்லாத்தையும் ஒரேதா செட்டில் பண்ணிடலாம்!’ என்று வன்மத்துடன் எண்ணிக் கொண்டான்.
*****
பிரேம் ரத்தோரின் நினைவுகளை மீண்டும் ஓட்டிப் பார்த்த யுகேந்திரனிற்கு அவற்றிலிருந்து பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை, ஒன்றைத் தவிர!
அந்த நினைவுகளில் ஆராவமுதன், ராகவன் ஆகியவர்களைக் கண்ட யுகேந்திரன், இறுதியாக மதுசூதனனையும் கண்டான்.
உடனே விழிகளைத் திறந்த யுகேந்திரன் கூர்ப்பார்வையில் மதுசூதனனைக் கண்டபடி, “இதுக்கு முன்னாடி நீங்க ரத்தோரைப் பார்த்துருக்கீங்களா?” என்று வினவ, பட்டென்று வந்து விழுந்த கேள்வியில் புருவம் சுருக்கி யோசித்த மதுசூதனனோ, “இல்லையே…” என்றான்.
மற்றவர்களும் யுகேந்திரனைக் கேள்வியாகப் பார்க்க, “ரத்தோரோட நினைவுகள்ல மதுவைப் பார்த்தேன்.” என்றான் யுகேந்திரன் தீவிர சிந்தனையுடன்.
அதைப் பெரிதாக எடுக்காதவர்கள், “வேற ஏதாவது தெரிஞ்சுதா?” என்று ஒருசேர வினவ, “பெருசா இல்ல, ரத்தோர் ஆராவமுதன் கிட்டயும், ராகவன் கிட்டயும் பேசுனது மாதிரியான காட்சிகள்தான் தெரிஞ்சது. அதோட, அந்தக் கற்களைப் பத்தி வேற யாருக்கிட்டயோ மொபைல்ல பேசியிருந்தான் ரத்தோர். மேபி, அவனுக்கு நம்பிக்கையானவங்களா இருக்கலாம்.” என்ற யுகேந்திரன், மென்மொழியிடம் திரும்பி, “அகரன் ரத்தோரோட கழுத்தைப் பிடிச்சு மிரட்டுறதையும் நான் பார்த்தேன்.” என்றான்.
“அப்போ அகரன் ரத்தோருக்காக வேலை செய்யலையா?” என்று சுடரொளி வினவ, “அவன் கிட்ட இருக்க சக்தி அவனை அப்படி செய்ய வச்சுருக்கலாம்.” என்றாள் மென்மொழி.
“அகரன் மிரட்டியிருக்கான்னா, அதுக்கு ரத்தோர் சும்மா இருக்க மாட்டானே…” என்று இன்பசேகரன் கூற, அதில் சற்று பயந்த யாழ்மொழி, “நான் அகரனுக்குக் கால் பண்றேன்.” என்று அலைபேசியை எடுத்தாள்.
என்னவாக இருந்தாலும், இரட்டையர்களின் உடன்பிறந்தவனாகிற்றே!
“பொறுமையா இரு யாழ். முதல்ல, அகரன் கிட்ட எதை கேட்கணும், எதை சொல்லக் கூடாதுன்னு டிஸ்கஸ் பண்ணிக்கலாம். அகரன் நம்ம அண்ணாங்கிறது எவ்ளோ உண்மையோ, அதே அளவு உண்மை அவன் ஆபத்தானவங்கிறது.” என்று மென்மொழி கூறிக் கொண்டிருக்கும் போதே அவளிற்கு அகரனிடமிருந்து அழைப்பு வந்தது.
அதை புருவச் சுழிப்புடன் பார்த்த மென்மொழி, மற்றவர்களிடமும் காட்ட, அழைப்பை ஏற்றுப் பேசுமாறு சைகை செய்தான் யுகேந்திரன்.
அழைப்பை ஏற்ற மென்மொழி, பேசுவதற்கு முன்பே, “ஹலோ மொழி… எனக்கு ரொம்ப நேரம் பேச அவகாசம் இல்லன்னு நினைக்குறேன். நீ சொன்னது சரிதான். இந்தக் கல் என்னைக் கண்ட்ரோல் பண்ணி அதுக்குத் தேவையானதைச் செய்யத் தூண்டுது. அதைப் புரிஞ்சுக்காம, நானும் சில தவறுகள் நடக்க காரணமாகிட்டேன்.” என்று அகரன் கூற, வாகனங்களின் ஹாரன் ஒலி அதற்குப் பின்னணி இசையானது.
அகரன் திடீரென்று அழைப்பு விடுத்து இப்படி பேசுவதைக் கேட்டு நம்ப முடியாமல் விழித்த மென்மொழி, கிடைத்த சந்தர்ப்பத்தில், “அகரா, நீ இப்போ எங்க இருக்க? உனக்கு எதுவுமில்லையே…” என்று வினவ, “இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது மொழி. முதல்ல, நான் சொல்ல நினைச்சதை சொல்லிடுறேன். என்னால, இப்போ நம்ம அம்மாவும், நிவியும் அந்த ரத்தோர் கிட்ட மாட்டியிருக்காங்க. அந்த ரத்தோர் பத்தி உனக்குத் தெரியும்தான?” என்று சிறு இடைவெளி விட்டவன், “என்னை விட உனக்கு நல்லாவே தெரியும்.” என்றான்.
அகரன் கூறியதைக் கேட்ட மென்மொழியுடன் மற்றவர்களும் அதிர்ந்து போக, “அகரா என்ன சொல்ற? அவங்களை எதுக்கு அந்த ரத்தோர் கடத்தனும்?” என்று மென்மொழி பதறினாள்.
“இந்தக் கல்லோட சக்தியாலயா, இல்ல என்னோட பேராசையாலயான்னு தெரியல… அந்த ரத்தோரை நான் ட்ரிக்கர் பண்ணிட்டேன். இப்போ அதுக்குப் பழிவாங்கன்னு அவங்களைக் கடத்தி வச்சுருக்குறதாவும், அவங்களைக் காப்பாத்த நான் நேர்ல வரணும்னும் சொல்லியிருக்கான் ரத்தோர்.” என்றான் அகரன்.
“இப்போ அங்கதான் போயிட்டு இருக்கியா அகரா? உனக்கு என்ன பைத்தியமா?” என்று கத்தியது யாழ்மொழி.
”யாழ், என்னை நீ பார்க்காததால என்னோட பவர் உனக்குத் தெரியல போல!” என்று லேசாகச் சிரித்தபடி அகரன் கூற, அந்தச் சிரிப்பில் முன்பு போல கர்வமோ ஆணவமோ சிறிதும் இருக்கவில்லை.
மாறாக, தவறு செய்து விட்ட குற்றவுணர்வும், வருத்தமும் மட்டுமே மிஞ்சி இருந்தது.
அது, அழைப்பின் மறுமுனையிலிருந்த மற்றவர்களிற்கும் புரிந்தே இருந்தது.
“அகரன், யாழ்மொழி சொல்றது சரிதான். கொஞ்சம் பொறுமையா இருங்க. உங்க பவர்ஸை பார்த்ததுக்கு அப்புறமும் அந்த ரத்தோர் உங்களை டார்கெட் பண்றான்னா, உங்களுக்கு எதிரா அவன் கிட்ட ஏதோ ஒண்ணு இருக்கணும். நீங்க தனியா போக வேண்டாம். நாங்களும் வரோம். பிராப்பர் திட்டத்தோட போலாம்.” என்றான் யுகேந்திரன்.
“நீங்க… அந்தப் போலீஸ்தான? யுகேன் ரைட்? நீங்க சொன்ன மாதிரி, ரத்தோர் கிட்ட என்னை எதிர்க்குற ஆயுதம் இருக்கலாம். அதுக்காக, பொறுமையா பிளான் போடுற அளவுக்கு நேரமில்ல யுகேன். ஆனா, அந்த நேரத்தை உங்களுக்கு ஏற்படுத்தி தரதுக்குதான் உங்களுக்கு இப்போ கால் பண்ணேன். பிரிஸம் டவர்ஸுக்குத்தான் என்னை வர சொல்லியிருக்கான். இன்னும் பத்து நிமிஷத்துல அங்க போயிடுவேன். நீங்க உங்க பிளானோட வாங்க. அதுவரை அங்க நேரம் கடத்த டிரை பண்றேன்.” என்றான் அகரன்.
அதைக் கூறிவிட்டு, அவன் அழைப்பைத் துண்டிக்க நினைக்க, அப்போது, “அகரா டேக் கேர்… அந்தச் சக்தியை உன்னைக் கட்டுப்படுத்த விடாத.” என்று மென்மொழி கூற, “ஸ்யூர் மொழி. உன் அண்ணன் ஒரு முறைதான் ஏமாந்து தப்பு செய்வான். திரும்ப அந்தப் பவரை என்னைக் கட்டுப்படுத்த விட மாட்டேன். அப்படி நடந்தா… ஹ்ம்ம், நடக்காது!” என்ற அகரன் அழைப்பைத் துண்டித்தான்.
உடனே, “சீக்கிரம் வாங்க கிளம்புவோம்.” என்று யாழ்மொழி ஒருபுறம் பரபரக்க, “என்னைத் தப்பா நினைக்காதீங்க, எனக்கு என்னவோ இது ஒரு டிராப் மாதிரி தோணுது. அகரனும் ரத்தோரும் சேர்ந்து இதை பிளான் பண்ணியிருந்தா? உங்களுக்கே தெரியும், அகரனோட பவர்ஸுக்கு முன்னாடி நம்மளால தாக்குப் பிடிக்க முடியாதுன்னு. அது நல்லா தெரிஞ்சவங்க, நம்மளை அவங்க முன்னாடி வர வைக்க இப்படி செய்ய மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்?” என்று சந்தேகத்துடன் வினவினான் மதுசூதனன்.
அதற்கு யாழ்மொழி மறுத்து கோபத்துடன் ஏதோ சொல்ல வர, அவளைத் தடுத்த மென்மொழி, “மதுக்கு வர சந்தேகம் நியாயம்தான் யாழ். இதுக்கு முன்னாடி நாம பார்த்த அகரன் அப்படி செய்ய சான்ஸ் இருக்குத்தான். உன்னோட எமோஷன்ஸை கண்ட்ரோல் பண்ணு.” என்றவள், மதுசூதனனிடம் திரும்பி, “இத்தனை வருஷமா அகரனைத் தெரிஞ்சவளா சொல்றேன், அவன் வாய்ஸ்ல இருந்த வருத்தம், பதற்றம் எல்லாமே உண்மைதான்.” என்றாள்.
“உங்க ஃபீலிங்க்ஸை நான் ஹர்ட் பண்ண நினைக்கல மொழி. இதுவும் ஒரு பாசிபிலிட்டின்னுதான் சொல்றேன்.” என்ற மதுசூதனனிற்கு அழைப்பு வர, அதை ஏற்க வேண்டி அங்கிருந்து சென்றான்.
“இந்த ரத்தோர் தாத்தா என்ன தைரியத்துல அகரனை வம்புக்கு இழுக்குறாரு?” என்று சுடரொளி வினவ, “அந்த ஆளு கிட்டதான முதல் செட் ஸ்டோன்ஸ் இருக்கு!” என்று நினைவு படுத்தினான் இன்பசேகரன்.
“இன்பா, நான் பெருமைக்காக இதைச் சொல்லல… இருந்தாலும், நம்மளாலேயே அகரனை சமாளிக்க முடியல. அப்புறம் எப்படி அந்த முதல் செட் கற்களை வச்சிருக்க நோஞ்சான் பசங்களால அகரனை சமாளிக்க முடியும்?” என்று கேட்டாள் சுடரொளி.
“ஹுஹும், ரத்தோரை அண்டர்-எஸ்டிமேட் பண்ணக் கூடாது சுடர். நமக்கு தெரிஞ்சதெல்லாம், ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியான ரிசல்ட்தான். ஒருவேளை, இந்த ரெண்டு வருஷத்துல, அவங்க நினைச்சதை அச்சீவ் பண்ணியிருந்தா?” என்று யோசனையுடன் கூறினான் யுகேந்திரன்.
அப்போது அவர்கள் பேசியதைக் கேட்டபடி அங்கு வந்த மதுசூதனன், “அந்தக் கற்கள் ஆக்டிவேட்டானா என்னால கண்டுபிடிக்க முடியும். அதை டிரை பண்ணிப் பார்ப்போம்.” என்று கூற, அதற்கான வேலையில் இறங்கினர் மற்றவர்கள்.
அதன்படி, மதுசூதனன் அவனிடமிருந்த சிவப்புக் கல்லை கையில் வைத்து விழிகளை மூடினான்.
யுகேந்திரனின் பார்வையோ அந்த சிவப்பு நிறக்கல்லையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்த மதுசூதனன், “அந்தக் கற்கள் ஆக்டிவேட்டாகி இருக்குறது உண்மைதான். லொகேஷன் பிரிஸம் டவர்ஸ்!” என்று கூற, அடுத்த நொடி அனைவரும் பரபரப்பாகினர்.
யுகேந்திரனும் அவனிற்குள் முளைத்த சந்தேகத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்த வேலைக்குத் தயாரானான்.
“அப்போ அந்தச் சக்திகளை வச்சு அகரனை எதிர்க்குறதுதான் ரத்தோரோட பிளான். இப்போயாவது கிளம்பலாம் வாங்க.” என்று யாழ்மொழி கூற, “போலாம் யாழ்மொழி. அதுக்கு முன்னாடி… நாம இதுவரை சந்திச்ச எதிரிகள் போல சாதாரணமானவங்களை இப்போ எதிர்க்கப் போறது இல்ல. அதே மாதிரி, வீடியோவை வச்சு, அவங்களை அண்டர்-எஸ்டிமேட் பண்ணிடவும் கூடாது. எப்பவும் ஜாக்கிரதையா இருங்க. எல்லாரும் கனெக்ஷன்லேயே இருங்க. உங்களால சமாளிக்க முடியலன்னா, சேஃப்பான இடத்துல மத்தவங்களுக்காக காத்திருங்க.” என்றான் யுகேந்திரன்.
முதல் வேலையாகக், கூட்டுத் தொலைபேசி அழைப்பில் அனைவரும் இணைந்தனர். செவிப்பொறிகளை மாட்டியபடி அறுவரும் சுற்றி நின்று கைகளைக் கோர்த்துக் கொள்ள, மறுநிமிடம் அங்கிருந்து மறைந்து, அவர்கள் செல்லவிருக்கும் பிரிஸம் டவர்ஸுக்கு முன் தோன்றினர்.
அங்கு அவர்களிற்கான சவால், அவர்களிற்காக வாயிலிலேயே காத்திருந்தது.
*****
சில நிமிடங்களிற்கு முன்பு…
அகரன் பிரிஸம் டவர்ஸிற்கு முன் வந்து நின்றிருக்க, வாயிலிலிருந்த காவலாளிகள் யாரும் அவனைத் தடுப்பதாக இல்லை.
அதைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் அகரன்.
வெளியே தைரியமாகக் காட்டிக் கொண்டாலும், அவனின் மனமோ என்னவோ பதற்றத்திலேயே இருந்தது.
காரணம் என்னவென்று சரிவரத் தெரியவில்லை என்றாலும், அவனிடமிருந்த கருப்புக் கல்லின் சக்தியை இப்போது அவனால் முழுமையாக உணர முடியவில்லை என்பதை அறிந்தே இருந்தான்.
அதன் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத காரணத்தினால், இப்போது சக்தியை வெளிப்படுத்த மறுக்கிறதோ என்று சிந்தித்துக் கொண்டே அடித்தளத்தை அடைந்தான் அகரன்.
அதே சமயம், அவனை வரவேற்பது போல மையத்தில் தோரணையாக அவனிற்காகக் காத்திருந்தார் பிரேம் ரத்தோர், அவரின் விசுவாசியுடன்.
தொடரும்…

