Loading

இசை ஆராதனா கண்ணைக் காட்டிய திசையில் இருந்த ‘ஸ்னேக்ஸ்’ மூட்டையை பார்த்த தேவா அவளை முறைக்க, விஷ்வாவோ “என்ன தேவா? ஒரு ஊருக்கே தின்பண்டம் இருக்கு!” என்று மிரண்டான்.

அருண், “ஒருவேளை சைடு தொழிலா ட்ரெயின்ல நொறுக்கு தீனி எதுவும் விக்கிறாளோ?” என யோசனையாகக் கேட்க, நிஷாந்த், “இல்ல டா… நீ இந்தப் படத்துல எல்லாம் பார்த்தது இல்லையா? இதுலலாம் மயக்க மருந்து கலந்து, ட்ரெயின்ல இருக்குறவங்க கிட்ட ரொம்ப சாதாரணமா பேசி சாப்பிட வைச்சு, அவங்க நகை, பணத்தை எல்லாம் திருடுவா போல!” என்று அவனின் அபிப்ராயத்தை கூறினான்.

ஆரு வேக வேகமாகத் தலையை ஆட்டி ‘ம்ம்’ என முனங்க, தேவா அவள் வாயில் இருந்த துணியை எடுத்து விட்டு “என்ன?” என்றான் அழுத்தமாக. “டேய், என்னைப் பார்த்தா, பெட்டிக்கடை போட்டு நொறுக்கு தீனி விக்கிறவ மாதிரி இருக்கா?” என்று அருணை முறைத்தவள், நிஷாந்தை நோக்கிக் காலை எத்தி, “ஏன்டா! என்னைப் பார்த்தா உனக்குத் திருடி மாதிரி இருக்கா? நீங்க தான்டா திருட்டு பசங்க, தீவிரவாதிங்க… இப்படி வெட்கம் இல்லாம ஒரு பொண்ணை கடத்தி, நாலு தடி மாடு இருந்தும், இப்படி கட்டி போட்டு வச்சிருக்கீங்க.” எனப் பேசிக்கொண்டே போக, தேவாவிற்கு கடுங்கோபம் வந்து விட்டது.

அவள் கழுத்தை நெறித்து “என்னடி ரொம்ப ஓவரா பேசுற? எங்களைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ஹான்?” என்று அனல் பறக்கக் கத்தியவனிடம் “கடத்தல் கும்பல் தானடா நீங்க…? அந்த மினிஸ்டரோட கையாளு. பெரிய சுதந்திர போராட்ட தியாகி மாதிரி பேசுற?” என்றவள் கோபமாக மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்தாள்.

தேவா, அவள் கழுத்திலிருந்து கையை எடுத்து, “என்ன மினிஸ்டரா ?” என்று குழப்பமாக வினவ, அவனின் குழப்பத்தை உணராதவள், “டேய் நீங்கக் கடத்தி தொலைச்சுட்டீங்க, சரி… சோறு தான் போட மாட்ரீங்க. அட்லீஸ்ட் நான் கொண்டு வந்த ஸ்னாக்ஸயாச்சு எனக்கு குடுங்க டா! உங்ககிட்ட கத்தி குத்து வாங்கி செத்தாலாவது பேப்பர்ல என்னை வீர மரணம்னு பெருமையா போடுவாங்க… பசியால செத்து போய்ட்டேன்னு சொன்னா ரொம்ப இன்சல்டிங்கா இருக்கும் டா…” எனப் பாவமாக விழிகளை உருட்டிச் சொல்ல, அதில் மற்ற மூவரும் சிரித்து விட்டனர்.

“நீ மட்டும் என்ன, காந்தி கூட உப்பு சத்தியாக்கிரகமாடி போன? வீர மரணம்னு நியூஸ்ல போட…! பசியிலேயே சாவு!” என்றவன் சிரித்த அவனின் நண்பர்களைக் கடுமையாக முறைத்து விட்டு, வெளியில் சென்றான்.

அவனைப் பின் தொடர்ந்து மற்றவர்களும் வெளியில் வர, விஷ்வா, “மச்சான் பாவம்டா அவளுக்குப் பசிக்குது போல…” என்க,

தேவா “என்னடா நீ? அவள் எவ்ளோ பெரிய வேலையைப் பார்த்துருக்கா… அவளை நினைச்சாலே கொலை பண்ற அளவு வெறி தான் வருது.” என்றிட, நிஷாந்த், “எங்களுக்கும் அதே மாதிரி தான் தேவா இருக்கு. ஆனால், பசிக்குதுன்னு சொல்றா அதான்…” என இழுத்தான்.

தேவா, “ப்ச் எத்தனை பேரோட வாழ்க்கையில விளையாடி இருக்கா? அவளுக்கு இதெல்லாம் தேவை தான்.” என்று கோபமாகப் பேசிட, அருண், “ப்ச் ஆமாடா. அவ தப்பு பண்ணிருக்கா தான்… ஆனால் பசிச்சாலும் பசிக்குதுன்னு கூட மத்தவங்க கிட்ட சொல்ல முடியாம, கிடைக்கிற சாப்பாடை அது கெட்டுப்போயிருந்தாலும் பசியை பொறுக்க முடியாம சாப்பிட்டு, எவ்ளோ நாள் கஷ்டப்பட்டுருப்போம். அந்தக் கொடுமை எதிரிக்குக் கூட வரக் கூடாது!” என்றதில் தேவாவிற்கும் அதே நினைவு தான்.

‘ஸ்னாக்ஸ் ஆவது குடுங்கடா’ என்று அவள் கேட்கும் போதே இளகிய மனதை அடக்கிக்கொண்டு, அங்கிருந்தால் தானே பாவம் பார்த்து விடுவோமோ என்றெண்ணி, அங்கிருந்து வந்து விட்டான். இப்போது மூவரும், அவளுக்குப் பாவம் பார்க்கவும், “ம்ம்” எனத் தலையை மட்டும் ஆட்ட, அவர்கள் வேகமாக அவள் அறைக்குச் சென்றனர்.

ஆராதனா என்னவென்று பார்த்ததும், அவர்கள் அந்த மூட்டையிலிருந்து, ஒரு முறுக்கு பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க, அவள் வாங்காமல் பார்த்தாள்.

விஷ்வா “இங்க பாரு உன்மேல பாவம் பார்த்துலாம் நாங்க இதைக் கொடுக்கல… நீ பாட்டுக்கு சாப்பிடாம, செத்து கித்து போய்ட்டா அது வேற தலைவலி. அதான் கொடுக்குறோம்” என்று சிலிப்பிக்கொண்டான்.

அவள் அதே பார்வையை தொடரவும், அருண் “போனாப் போகுதுன்னு குடுத்தா, நீ வாங்காம எங்க மூஞ்சியை பார்த்துகிட்டு இருக்க…” எனக் கடுப்படித்திட, “டேய் முட்டாப்பசங்களா…! கையைக் கட்டிபோட்டுட்டு சாப்பிடு சாப்பிடுன்னா, எப்படிடா சாப்பிட முடியும்? கட்டை அவுத்து விடுங்கடா!” என்றதும், மூவரும் அசடு வலிந்து விட்டு, அவள் கட்டை அவிழ்த்து விட்டனர். பின், அவள் அந்த முறுக்கு பாக்கெட்டை பிடுங்கி, சேரில் காலைத் தூக்கி வைத்து யாரையும் கண்டுகொள்ளாமல் அவள் பாட்டிற்கு சாப்பிட ஆரம்பித்தாள்.

அப்போது அறைக்குள் கையில் சாப்பாடு தட்டுடன் நுழைந்த தேவா, மற்றவர்களை வெளியில் போகச் சொல்ல, விஷ்வா “அதான டயலாக் மட்டும் நாங்க பேசணும். ஃபிகரை கரெக்ட் பண்றதுலாம் இவனுங்க பார்ப்பானுங்களே” என முணுமுணுக்க, நிஷாந்தும், அருணும் அவன் தலையில் அடித்து வெளியில் அழைத்துச் சென்றனர்.

ஆராதனா அவனைக் கண்டுகொள்ளாமல் முறுக்கில் கவனமாக, அவன் அந்த முறுக்கு பாக்கெட்டை பிடுங்கினான். அவள் “ப்ச், உனக்கு வேணும்னா அந்த மூட்டைல இருக்கும்… வேணும்னா எடுத்துக்க. இது என்னோடது!” என்று முறுக்கின் மேல் உரிமையை நிலைநாட்ட,

தேவா அந்த சாப்பாடு தட்டை அவள் முன் நீட்டினான். அவள் அந்தத் தட்டையும் தேவாவையும் மாறி மாறிப் பார்த்து, “என்னடா, சோத்துல விஷம் வச்சு என்னைக் கொல்ல பார்க்குறியா?” என்று கேட்டவளை முறைத்தவன், “உன்னைக் கொலை பண்ணனும்னா நீ மயக்கத்துல இருக்கும் போதே பண்ணிருப்போம். வேணும்னா சாப்பிடு இல்லைனா பட்டினி கிடந்து போய்ச் சேரு!” என்று விட்டு நகர எத்தனித்தான்.

‘ரோஷமா? சோறா?’ என்று ஒரு நொடி யோசித்தவள், ‘முதல்ல சோறு தான், அப்போதான் இவனுங்ககிட்ட இருந்து தப்பிக்க தெம்பு வரும்.’ என நினைத்து, தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தவள், சாப்பிட்ட வேகத்தில் அதனை ‘த்தூ த்தூ’ எனத் துப்பினாள்.

தேவா அவளைப் புரியாமல் பார்க்க, “கருமம் புடிச்சவனே! இதுக்கு விசம் வச்ச சாப்பாட்டையே குடுத்துருக்கலாம். சாம்பாராடா இது? இல்ல சாம்பாரான்னு கேட்குறேன்? கழனித்தண்ணில பருப்பை போட்டு, அதை வேகக் கூட வைக்காம அப்படியே கொண்டு வந்துருக்க…” என்றதுமே அவனுக்கு சுறுசுறுவென கோபம் வந்து விட்டது.

“சாப்பாட்டோட அருமை தெரியாத, உன்கிட்ட எல்லாம் வந்து குடுத்தேன்ல, என்னைச் சொல்லணும்… உனக்குப் பாவம் பார்த்த அவனுங்களை தூக்கி போட்டு மிதிக்கணும்.” என அவளின் சத்தத்தில் அங்குக் கூடி இருந்த மற்ற மூவரையும் கடுமையாக முறைத்தான்.

விஷ்வா தான் “உனக்கு நாங்க பார்த்தோம் பாவம்! உன்னால இவன்கிட்ட அடி வாங்கி சாவோம்!” என்று மிரள, தேவா அவளை அடிக்கவே சென்று விட்டதில் அருணும், நிஷாந்தும் அவனை இழுத்துக்கொண்டு வெளியில் வந்தனர்.

இதில் ஆரு தான், ‘இப்போ நம்ம என்ன சொல்லிட்டோம்னு நம்ம மேல இவ்ளோ காண்டாகுறான்? உண்மையிலேயே சாம்பார் கொடூரமா தாண்டா இருந்துச்சு’ எனப் புலம்பி விட்டு, மீதி இருந்த மற்ற முறுக்கை பதம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பின், அப்படியே அந்த ஜன்னல் வழியே வெளியில் பார்த்தவள், அந்த சூழலைக் கண்டு விழி விரித்தாள். ‘வாவ்! வாட் அ ப்ளேஸ்! ஹஸ்பண்ட் கூட ஹனி மூன் வரவேண்டிய ப்ளேஸ எல்லாம் கடத்தல் பிளேஸா மாத்திட்டானுங்க’ என நொந்து கொண்டு, கீழே சென்றாள்.

அவளைக் கண்டதும், தேவா “எதுக்குடி இங்க வந்த? டேய் அவளை போய்க் கட்டிப்போடுங்கடா!” என நண்பர்களுக்கு உத்தரவு கொடுக்க, அவள் ‘என் பக்கத்துல வந்து பாருங்கடா!’ என்று கையை முறுக்கினாள்.

விஷ்வா மிரண்டு மற்ற இருவரிடமும், “வேணாம்டா அவ பக்கத்துல போனா அவ பறந்து பறந்து அடிப்பா… எதுவா இருந்தாலும் அவனே டீல் பண்ணட்டும்” என்று எச்சரிக்கை செய்ய, அவர்களும் உள்ளே ஓடி விட்டனர்.

தேவா தலையில் அடித்து விட்டு, அவளை இழுத்துக் கொண்டு உள்ளே செல்லப் போக, அவன் கையை உதறியவள், “இப்போ என்ன பிரச்சனை உனக்கு? நான் என்ன தப்பிச்சா, போகப் போறேன்? வெளிய அட்மாஸ்பியர் செம்மயா இருக்கு… அப்படியே ஒரு வாக் போயிட்டு வரேன். வேணும்னா நீயும் கூட வா!” என்றாள்.

அதில் அதிர்ந்தவன், “என்ன! வாக்கிங் போறியா? இதென்ன உன் வீடுன்னு நினைச்சியா, ஒழுங்கா உன் ரூம் க்கு போய்டு” என மிரட்டிட, “நான் வெளிய போயே ஆவேன்.” என்று அடம்பிடித்தாள்.

அவன் “ச்சை” என நொந்து விட்டு, ஒரு கயிற்றில், அவள் இரண்டு கையையும் கட்டி, கயிற்றுடன் அவளை இழுத்துக்கொண்டு போனான். அதில் முகம் சுருங்கி, அவனை மனதில் வறுத்துக்கொண்டு வெளியில் சென்றவள், அப்படியே நின்று விட்டாள்.

அவளும் ஆராய்ச்சி சம்பந்தமாக நிறைய காட்டிற்கு சென்று ஆராய்ச்சி செய்வாள் தான். ஆனால் இப்படியொரு அழகை அவள் பார்த்ததே இல்லை. காட்டின் அழகை ரசிக்கும் அளவு, அவளுக்கு நேரமும் இருந்ததில்லை. ஏனெனில், அவள் கவனம் முழுதும் காட்டினுள் புதைந்திருக்கும் பழங்கால பொருட்களை அகழ்வாராய்ச்சி செய்து, அது எத்தனை வருடம் பழமையானது என்றும்,

மேலும், அந்தப் பொருட்கள் எதனால் செய்யப்பட்டது என்றும் ஆராய்ச்சி செய்வது தான். அவளின் மற்ற மூன்று தோழிகளும் இவளுடன் தான் வேலை செய்கின்றனர். கல்லூரியில் இருந்தே நால்வரும் நெருங்கிய தோழிகள்.

பல காடுகளுக்கும், பல்வேறு பட்ட இடங்களுக்கும் சென்றிருந்தாலும் அவளின் பார்வை ஆராய்ச்சியாகத் தான் இருக்குமே தவிர, ரசனையாக இருக்காது. ஆனால் இப்போது, சிலுசிலுக்கும் அந்த மரங்களின் காற்றும், காற்றில் மிதந்து வரும் மண் வாசனையும், முகம் பார்க்கும் கண்ணாடிபோல் பளபளவென அங்கு ஓடும் அந்தத் தெளிந்த நீரோடையும், அவளை வேறொரு லயத்திற்கு கூட்டிச் செல்ல, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவள், “எப்படிடா உங்களுக்கு இப்படி எல்லாம் ப்ளேஸ் கிடைக்குது?” எனக் கேட்டாள் வியப்பாய்.

அவள் முகத்தில் தோன்றிய பாவனையில் தன்னை தொலைத்திருந்த தேவா, அவள் பேசியதும் தான் நிகழ்வுலகிற்கு வந்து, அவள் என்ன பேசினாள் எனப் புரியாமல் அவளைப் பார்க்க, ஆருவோ “உன்னையெல்லாம் நம்பி அந்த மினிஸ்டர் கடத்தல் வேலையைக் குடுத்தா… நீ பொறுப்பு இல்லாமல் சைட் அடிச்சுட்டு இருக்க?” என்று ஒரு மாதிரி பார்த்தாள்.

அதில் “ஹே, நான் எப்போடி உன்னை ‘சைட்’ அடிச்சேன்? இவள் பெரிய உலக அழகி…” என்று முறைத்தவன், ‘சே, இப்படியா ஒரு ஃபிராடை போய் வச்ச கண்ணு வாங்காம பார்ப்போம்! நமக்குக் கிறுக்கு தான் பிடிச்சுருச்சு’ எனத் தன்னையே திட்டிக்கொண்டான்.

பின் ஏதோ யோசித்தவன், “அதென்ன மினிஸ்டர் மினிஸ்டர்ன்னு சொல்ற, உன்னை மினிஸ்டர் கடத்த சொன்னான்னு நான் சொன்னேனா?” என்று நக்கலாக வினவும் போதே, அவள் திடீரென, “ஹே கம் கம்” என ஒரு இடத்தை நோக்கி ஓடினாள்.

அதில் அவள் கையில் மாட்டி இருந்த கயிற்றைப் பிடித்திருந்தவன், நிலை தடுமாறி அவள் மேலேயே விழ, அது சற்று சரிவான பகுதியாக இருந்ததால் இருவரும் கட்டிக்கொண்டு உருள ஆரம்பித்தனர். சில நொடிகளில் சமவெளி பகுதியில் சென்று நின்றதும், அவனின் மூச்சுக்காற்று அவளை மெலிதாகத் தீண்ட, இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் தழுவிக்கொண்டிருந்தது.

“ஹைய்யோ இன்னும் எவ்ளோ நேரம்டி காட்டுது? முடியல… ரிசர்ச் பண்ண கூட நம்ம காட்டுக்குள்ள இவ்ளோ தூரம் போனது இல்லை… இந்த லூசுக் கிறுக்கச்சியை கடத்தி வச்சு, எவன் என்ன பாடு படுறானோ தெரியலையே!” என அம்மு நொந்து போக,

தமயந்தி, “ஆமாண்டி… கண்மணி அத்தை வேற, நமக்கு ஸ்னாக்ஸ்லாம் குடுத்து விட்டதா சொன்னாங்க… இவனுங்க அதையும் சேர்த்து கடத்துனானுங்களா? இல்ல குப்பைல போட்டானுங்களான்னு தெரியல?” என்று அவளின் கவலையைக் கூறியதில், வைஷு இருவரையும் முறைத்தாள்.

“கொஞ்சமாவது சீரியஸ் ஆ பேசுங்க! ஹே அதோ தெரியுது பாரு… அந்த மர வீடு. அங்க தான் அவள் போன் லாஸ்ட்டா சுவிட்ச் ஆஃப், ஆகியிருக்க இடம்.” எனக் காட்ட, மற்ற இருவரும் திகிலாகி, “அப்போ அங்க தான்டி அவளும் இருக்கணும்… ஆனால், உள்ள எத்தனை பேர் இருக்கானுங்கன்னு தெரியலையே?” என்று பூனைபோல் பதுங்கி ஆளுக்கொருவர் கையில் கத்தியை வைத்துக் கொண்டு, அந்த வீட்டினுள் நுழைந்தனர்.

ஏதோ தோன்றி வெளியில் வந்த அருணை கண்ட தமயந்தி பயத்தில் அவன் தோள்பட்டையில் கீற, அவன் “ஆ” என அலறி அவள் கையைப் பிடித்தான். அவன் அலறலில் வெளியில் வந்த நிஷாந்த், வைஷுவை பார்த்து அதே இடத்தில் வேரோடி சிலையாக, அவளோ கண்ணில் வழிந்த நீரோடு அவனைப் பார்த்திருந்தாள்.

‘என்ன ஆச்சு? வெளிய போன ரெண்டு பேரையும் ஆளைக் காணோம்…!’ என நினைத்து வெளியில் வந்த விஷ்வா அம்முவை பார்த்துத் திகைத்து, ‘ஆத்தி! இந்த அரை லூச இன்னுமா மெண்டல் ஹாஸ்பிடல்ல சேர்க்காம இருக்காங்க?’ என்று புரியாமல் விழிக்க, அவளோ விஷ்வாவை, ‘இந்த ஜொள்ளு பார்ட்டி இங்க என்ன பண்றான்?’ என்ற தீவிர சிந்தனையுடன் பார்த்தாள்.

தேவா, “அறிவிருக்கா உனக்கு? எதுக்குடி இப்போ இப்படி ஓடுன? உன்னால நானும் மண்ணுல உருண்டுட்டேன். முதல்ல எந்திரிடி!” எனக் கத்தியவனை அமைதியாகப் பார்த்தவள்,

“முதல்ல நீ எந்திரிடா. நீ தான் என் மேல படுத்துருக்க” என்றதும், அவன் தன்னையே திட்டிக்கொண்டு சட்டென்று அவளை விட்டு எழுந்தான்.

இருவர் உடையிலும் மண் ஒட்டி இருக்க, கையிலும் காலிலும் சிறு சிறு சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்க, அவனோ அவளைப் பார்வையால் சுட்டு விட்டு, “எதுக்குடி ஓடுன?” எனக் கேட்க, “ப்ச் அங்க மண்ணுக்கு கீழ ஏதோ இருந்துச்சு. அதான் ஒரு ஆர்வத்துல ஓடுனேன்…” என்றதும், அவன் “என்ன மண்ணுக்கு கீழ ட்ரக்ஸ் இருந்துச்சா? இல்லை யூஸ் பண்ணாம இருக்க முடியலையா?” என்று நக்கலாகக் கேட்க, அதில் நெற்றிக்கண்ணை திறந்தாள் ஆராதனா.

“யாருடா ட்ரக்ஸ் யூஸ் பண்றா? நீ தாண்டா வந்ததுல இருந்து கஞ்சா அடிச்சவன் மாதிரி பேசிகிட்டு இருக்க. ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்ட, அதுவும் ஒரு கவர்ன்மென்டன் ஸ்டாஃப்பை கடத்திட்டு வந்துட்டு, என் மேல ட்ரக்ஸ் பழி போடலாம்னு நீயும், அந்த மினிஸ்டரும் பிளான் பண்றீங்களா?” என்று உச்ச பட்ச கோபத்தில் கத்திட, “என்னது ஆர்கியாலஜிஸ்ட் ஆஆஆ” எனத் திகைத்து உறைந்து விட்டான்.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
0
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்