Loading

அத்தியாயம் 3

 

காலை நேர நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, வீட்டை வந்து அடைந்தான் நவநீதன். இன்னும் நான்கு தினங்களில் திருமணம். 

 

முன்தினம் தான் அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள், குடியிருப்பில் பழக்கமானவர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்திருந்தான்.

 

“கல்யாணமா? என்ன திடீர்னு சொல்லுறீங்க?” என்பது தான் பலரின் வினாவாக இருந்தது. எனினும் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லை.

 

பொதுவாகவே நவன் எவரிடமும் நெருங்கிப் பழகிடாதவன். தனக்கென்று ஒரு எல்லை வைத்திருப்பான். அதைக் கடந்து மற்றவரின் வாழ்க்கைக்குள் நுழைய மாட்டான். அதேபோல், தன் வாழ்விலுமே எவரையும் அனுமதிக்க மாட்டான். தாய் தந்தை உட்பட.

 

என்றாலும் குணத்தாலும், தனது நடவடிக்கையாலும் சுற்றி இருப்போரின் மனதில் நன்மதிப்பைப் பெற்றிருந்தான்.

 

“ஆள் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஆனா நல்ல மனுஷன்பா!” என்பது தான் அவனை அறிந்த பலரின் அபிப்பிராயமாக இருக்கும்.

 

குளிர்சாதனப் பெட்டியில் இருந்தவற்றை காலி செய்து, அழுக்குத் துணிகளை இயந்திரத்தில் போட்டு துவைத்து உலர்த்தி, வேண்டாதவற்றை குப்பையில் அள்ளி என மதியம் வரை நேரம் ஓடியது தெரியவில்லை. 

 

கடையில் வாங்கி உண்டு, சிறிது நேரம் உறங்கி, பயணத்திற்கான பையைத் தயார் செய்து நண்பகலிற்குப் பின்னரான பொழுதையும் கடத்திவிட்டு, தனது புது வாழ்விற்கான மாற்றத்தை எதிர்நோக்கிக் கிளம்பினான்.

 

உடைமைகளோடு வந்தவனைக் கண்டு குடியிருப்பின் காவலாளி நாராயணன் புன்னகைக்க, வீட்டின் திறவுகோலை நீட்டினான்.

 

வாங்கிக் கொண்டவர், “வாழ்த்துகள் தம்பி, உங்க கல்யாணத்துக்கு. விசேஷத்தை ஊருல வச்சிட்டீங்க. என்னால தான் அவ்வளவு தூரம் வர முடியாது‌.”

 

மெலிதாய் புன்னகைத்தவன், “கல்யாண முடிவு என் பேரண்ட்ஸோடது. அதுல நான் தலையிட முடியாது. எனக்குத் தெரியும் வாட்ச்மேன், இங்க இருக்கிற யாரும் அங்க வர வாய்ப்பு இல்லனு‌. நான்‌ அதை எதிர்பார்க்கவும் இல்ல. அதான் விஷ் பண்ணீட்டீங்களே? எனக்கு அது போதும். மேரேஜ் முடிஞ்சு இங்க தான வரப் போறேன்? பார்த்துக்கலாம்.”

 

அவனின் நேரடியான சொற்களில் பல கூராய் இருந்தாலும்‌ அனுபவப்பட்ட அவர், அதனை இயல்பாகவே ஏற்றுக் கொண்டார்.

 

“பொண்ணு என்ன செய்யிது தம்பி?”

 

“நோ ஐடியா. வீட்டுல இருக்கிறதா தான் சொன்னாங்க.”

 

“அப்ப, நீங்க பேசலயா.?”

 

“எனக்கு ஏது அதுக்கு எல்லாம் நேரம்.? சரி பார்த்துக்கோங்க. வாசுகி அம்மாக்கிட்ட, டூ டேஸுக்கு ஒன்ஸ் வீட்டைக் கிளீன் பண்ண சொல்லி இருக்கேன். அவங்க வரும் போது மட்டும் கீ கொடுத்து வாங்கிக்கோங்க.”

 

“சரி தம்பி!” என்றிட, தலையை அசைத்துவிட்டுக் கிளம்பினான்.

 

வழியிலேயே தோழி ரம்யாவிற்குப் புறப்பட்டு விட்டதாய் புலனத்தின் வாயிலாய் குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டி விட்டான்‌. 

 

“ஓகேடா. சேஃப் ஜெர்னி. நல்லபடியா போயி, சந்தோஷமா கல்யாணத்தை முடிச்சிட்டு வா. என்னால தான் உன்னோட மேரேஜுக்கு வர முடியல. சரி‌, நீ கிளம்பும் போது ஸ்டேஷன் வந்து செண்ட் ஆஃப் பண்ணலாம்னு நினைச்சா, இன்னைக்குனு பார்த்து ஹாஸ்பிடல்ல இருந்து கால் பண்ணீட்டாங்க. ஸாரிடா..” எனப் பதிலிற்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள் அவள்.

 

மருத்துவமனையில் சிகிச்சைப் பிரிவில் இருந்தால், அழைப்பு விடுத்துப் பேச இயலாத சூழல்.

 

நவனுமே அதை உணர்ந்து இருந்ததால், “லூசு! எனக்கு என்ன வழி தெரியாதா? நான் போய்க்க மாட்டேனா? செண்ட் ஆப் பண்ணுற, ஆளை பாரு.‌ முதல்ல உன்னோட உடம்பை கவனி!” என்று மறுசெய்தி அனுப்பி உரையாடலை முடித்தான்‌.

 

அடுத்ததாய் மின்சார இரயிலில் ஏறி எக்மோர் தொடர் வண்டி நிலையத்தை அடைந்த போது, ஒன்றரை மணி நேரம் கரைந்து இருந்தது.

 

எட்டு பத்திற்கு வண்டி புறப்படும்‌. இரவு நேரத்திற்கான உணவோடு ஏழரை மணிக்கே முன்பதிவு செய்து இருந்த தனது இருக்கையில் வந்து அமர்ந்து விட்டான் நவன்.

 

அதற்காகவே காத்திருந்தது போல் ஒலித்தது கைப்பேசி‌.

 

மறுபுறம் அவனது அன்னை செல்வாம்பிகை. குடும்பத் தலைவரும் பேசுவதற்கு வசதியாய், கைப்பேசி ஒலிப்பெருக்கிக்கு மாற்றி வைக்கப்பட்டு இருந்தது.

 

“ஹலோ..”

 

“நவநீ, கிளம்பிட்டியா?”

 

“ம்ம்.. டிரைன்ல இருக்கேன் ம்மா. காலையில ஊருக்கு வந்துடுவேன்.”

 

“சரிப்பா. அப்படியே அம்மாக்காக ஒன்னு செய்யிறியா.?”

 

“என்னம்மா, சொல்லுங்க?”

 

“பொண்ணு வீட்டுக்குப் போயி, அந்தப் பிள்ளைய ஒரு தடம் பார்த்துட்டு வந்துடேன்.”

 

“அம்மா?”

 

“நிச்சயத்துக்கும் நீ வரல. சம்பந்தி அம்மாவும் அந்த அண்ணனும், அப்பா மேல இருக்கிற மரியாதைக்காக எதுவும் சொல்லாம இருக்காங்க. அதுக்குனு, நீ இப்படியே ஒவ்வொரு தடவையும் நடந்துக்கிறது நல்லா இல்ல. போயிட்டு வந்தா, அவங்களுக்கும் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்ல.?”

 

“இது, நீங்களா பேசுறது மாதிரி இல்ல. இன்ஸ்ட்ரெக்ஷன் அவரோடது, டோன் உங்களோடதா.?”

 

“நவநீ.?”

 

“நான் ஆல்ரெடி சொல்லிட்டேன், எனக்கு மேரேஜ்ல இண்ட்ரெஸ்ட் இல்லனு‌. உங்க மேல வச்சிருக்கிற பாசத்தையும் மரியாதையையும் வெப்பனா யூஸ் பண்ணி, இதை செய்ய வைக்கிறீங்க. இதுக்கு மேலயும் என்கிட்ட எதையும் எதிர்பார்க்காதீங்க!”

 

“நாம, இனி எதிர்பார்க்க என்ன இருக்கு‌? ஆனா அந்தப் பிள்ளையோட நிலைமை? தாலி கட்டிக் கூட்டிட்டுப் போயி வீட்டுல பொம்மை மாதிரி வச்சுக்கப் போறானா? அதுக்குக் கல்யாணமே செஞ்சுக்காம இருக்கலாம்ல.?” என இடைநுழைந்து வினவிய ராஜகணபதியின் குரலில் அத்தனைக் கடுமை.

 

“அதைத்தான நானும் சொன்னேன், கல்யாணம் வேண்டாம்னு. நீங்கதான் கேட்கல!” என்று அம்பை தந்தையின் பக்கமே திருப்பினான் நவன்.

 

“வேண்டாம்னா என்ன அர்த்தம்? வயசு இருபத்தொன்பது ஆகுது‌. வேற எப்பதான் கல்யாணம் செஞ்சுக்கிறதா இருக்கானாம்?”

 

“என் வாழ்க்கையை எனக்குப் பார்த்துக்கத் தெரியாதா.?”

 

“ஹோ! அவ்வளவு பெரிய மனுஷன் ஆகிட்டானாமா? அப்ப, பெத்த நாங்க உனக்குத் தேவை இல்ல.‌ உன்னைப் பத்தி யோசிக்கக் கூடாது. உனக்காக எதுவும் செய்யக் கூடாது, அப்படித்தான?”

 

தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடாது பேச, “நாலு நாள்ல விசேஷம். இப்பப் போயி ரெண்டு பேரும் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க.?” என அவர்களின் பேச்சிற்குத் தடை விதித்தார் அம்பிகை‌.

 

புயல் அடித்து ஓய்ந்தது போலான அமைதி.

 

“நீ ஊர் பக்கமே வர்றது இல்ல, நவநீ. நமக்கு இடையில இருக்கிற உறவே விட்டுப் போனது மாதிரி தோணுது. இப்படியே இருந்தா, எங்களுக்கு அப்புறம் சொந்தம்னு யாரும் இல்லாம தனி மனுஷனா ஆகிடுவியோனு பயம். அதான் கல்யாணம் செஞ்சு வச்சா, அந்தப் பொண்ணு மூலமா உனக்குள்ள மாற்றம் வராதானு தான் இப்படிச் செய்யிறோம்.”

 

“நான் ஊருக்கு வராததுக்குக் காரணம் உங்களுக்குத் தெரியாதா அம்மா? நீங்க சொல்லுற அந்த சொந்தம் ஒன்னுக்கும் உதவாது. இது அனுபவப் பாடம். ஏன் நீங்களும் அதைப் படிச்சீங்க தான? ஆனா, உங்களுக்குப் புரிய மாட்டிதுனு தான் கவலையா இருக்கு.

 

சொந்தம், பேரு, கௌரவம்னு யோசிக்கிறதை முதல்ல நிறுத்துங்க. இப்ப இருக்கிற நிலைமையை பாருங்க. வாரி வாரிக் கொடுக்க அன்னைக்கு மாதிரி இன்னைக்கு எதுவும் குவிஞ்சு கிடக்கல. அதுனால, தான் ராஜாங்கிற நினைப்புல இருந்து முதல்ல வெளிய வரச் சொல்லுங்க அவரை. கூடப் பிறந்தவங்க, கேட்டு வர்றவன்னு எல்லாருக்கும் செஞ்சாரே அந்த மனுஷன், பெத்தப் பிள்ள எனக்கு என்ன மிச்சம் வச்சாரு?

 

என்னைப் பத்திக் கொஞ்சம் சிந்திச்சு நடந்து இருந்தாருனா, இன்னைக்கு நான் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியது இல்லேல.? காலேஜ் ஃபீஸ் கட்டுறதுக்கு எப்பக் காசு இல்லனு சொன்னாரோ, அப்பவே முடிவு செஞ்சிட்டேன் நான் அவரை மாதிரி இருக்கவே கூடாதுனு.

 

எல்லா பிள்ளைகளுக்கும் அவங்க அப்பா தான் ஹீரோ. எங்கப்பா, ஊருக்கு எல்லாம் ஹீரோ. ஆனா எனக்கு இல்ல. தேவையான நேரத்துல வந்து நிக்கல. ஆதரவா, கை‌ கொடுக்கல. நானே தான் கீழ விழுந்து விழுந்து எழுந்திரிச்சு வந்தேன். இதுக்கு மேல எப்படி நடந்துக்கணும்னு நினைக்கிறீங்க?”

 

மகனாய் அவன் இடத்தில் இருந்து அந்த வலி புரிந்தாலும் கணவனை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல், “எனக்குப் புரியிதுப்பா. அதுக்காக நீ இப்படிப் பேசுறது சரியில்ல. அன்னைக்கு அவரு அப்படிச் செய்யப் போயிதான், இன்னைக்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும்‌. 

 

யாராவது, இதுவரைக்கும் ஒரு வார்த்தை குறைவா பேசி இருக்காங்களா.? ஏன் ராஜகணபதியோட மகன்னு பேரு இருக்கு தான உனக்கு.? ஒன்னும் செய்யாம இருந்திருந்தா, ஏமாத்துக்காரன்னு பட்டம் கொடுத்திருக்கும் இந்த ஊரு‌. உன்னையும் என்ன எல்லாம் பேசி இருப்பாங்க.?”

 

“உண்மை தான்! ஏமாத்துக்காரன்ற பேர் வந்துடக் கூடாதுனு, ஏமாளிப் பட்டம் வாங்கிக்கிட்டாரு. அவரைச் சொல்லிக் குத்தம் இல்லம்மா. கடிவாளத்தை இழுத்துப் பிடிக்காம இஷ்டத்துக்கு விடுற இப்படி ஒரு மனைவி அமைஞ்சா, எந்த ஆம்பளையும் வாழ்க்கையில ஜெயிக்கிறது அதிசயம் தான்.”

 

“நவநீ! அவ உன்னோட அம்மா, ஞாபகம் இருக்கட்டும்!‌” என ராஜா எச்சரித்திட, தான் சற்று அதிகமாய் பேசி விட்டதை உணர்ந்து அமைதி ஆனான் ஆடவன்.

 

அம்பிகை இம்முறை மகனிற்கு ஆதரவாய் கணவனின் கைப்பற்றி, ‘மேலும் பேச வேண்டாம்!’ என்பதைப் போல் கண்களால் செய்தி பரிமாறினார்.

 

இவ்விடத்தில் இந்நிகழ்வு ஆக்கிரமித்து இருந்த நான்கு நொடிகள் நான்கு மணித்திலாயங்களைப் போல் அவனிற்குப் பெரும் வலியைக் கொடுத்திட, “ஸாரிம்மா..” என்று மன்னிப்பை வேண்டினான்.

 

“பரவாயில்ல, அம்மா தான? இதுல என்ன இருக்கு.?” என அம்பிகை சமாதானம் உரைத்திட,

 

“தப்பா நினைக்காதீங்க ம்மா. நான் அவரை மாதிரி தோக்க விரும்பல. ஏமாளியாவும் இருக்க இஷ்டம் இல்ல எனக்கு. அதுக்கு, இப்படித்தான் இருந்தாகணும். என்ன.. திமிர் பிடிச்சவன், தலைக்கனம் ஏறிடுச்சுனு பேசும் இந்த உலகம். பேசிட்டுப் போகுது. அதுக்கு எல்லாம் நின்னு பதில் சொல்லவோ, எதையாவது செஞ்சு என்னை நிரூபிக்கவோ நேரம் இல்ல‌. அதோட, அப்பா மாதிரி அதுக்கான திறனும் இல்ல.”

 

“ம்ம்.. எங்க மேல இருக்கிற கோபத்தை, அந்தப் பொண்ணு மேல காட்டுறது நியாயம் இல்ல. பாவம் இல்லையா‍? அதுக்கும் தனக்கு வரப் போற புருஷனைப் பத்தி, எதிர்பார்ப்பு இருக்கும்ல.?”

 

“இதுவரை கல்யாணம்னு ஒன்னைப் பத்தி நான் நினைச்சதே இல்லம்மா. நீங்கதான் பிடிவாதமா எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டீங்க. இப்பக்கூட இன்னும் வீட்டுக் கடன் முடியலயே? கல்யாணத்துக்கு வேற எக்ஸ்ட்ரா கடன் வாங்குறோமேனு அதுதான் மைண்டல ஓடிக்கிட்டே இருக்கு.

 

அதுக்குனு நான் மனசாட்சி இல்லாதவன் இல்ல. என்னை நம்பி வர்ற பொண்ணை, நல்லாவே பார்த்துக்குவேன். அதுக்கு முதல்ல நான் பிரிபர் ஆகணும்ல.? சட்டுனு இதை அக்செப்ட் பண்ணிக்க முடியல, அவ்வளவு தான். சரி, நான் அவங்க வீட்டுக்குப் போய் பார்த்துட்டே வர்றேன்.”

 

“சரி சரி! இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு எனக்கு!” என ஆசுவாசப் பெருமூச்சு விட்ட அன்னையின் சொல்லில், தானாய் புன்னகை மலர்ந்தது நவனிற்கு.

 

மனதில் இருந்ததைப் பேசி விட்டதால், பெரும் பாரம் குறைந்தது போலான உணர்வு. 

 

“சும்மா போகாத. அந்தப் பிள்ளைக்கு ஏதாவது வாங்கிட்டுப் போ.”

 

“ம்ம்..”

 

“ஃபோன் நம்பர் கொடுத்தோமே, பேசுனியா.?”

 

“இல்ல. ஒன் டைம் கால் பண்ணி இருந்துச்சு அந்தப் பொண்ணு, அப்ப நான் மீட்டிங்ல இருந்ததால பேசல. அப்புறம் கூப்பிடணும்னு நினைச்சிருந்தேன்.”

 

“ஆனா, மறந்துட்ட என்ன.?”

 

அவன் சிரித்திட, “எங்களுக்கே பத்து நாளைக்கு ஒரு தடம் ஃபோன் போடுறவன் தான நீ? உன்னைப் பத்தித் தெரிஞ்சு இருந்தும் கேட்டேன் பாரு. யாரோடவும் ஒட்டாம எதுலயும் கலந்துக்காம இப்படி இருக்காத நவநீ. கொஞ்சம் உன்னை நீ மாத்திக்க!”

 

“ஓகேம்மா. கிளாஸ் எடுத்து முடிச்சிட்டீங்களா? நான் இப்ப ஃபோனை வைக்கவா‌?”

 

“சரி சரி. பார்த்து கவனமா வா.” என்று அம்பிகை பேச்சை முடிக்க, கைப்பேசியை சட்டைப் பையில் போட்டுக் கொண்டு வெளிப்பக்கம் பார்வையைப் பதித்தான் நவநீதன்.

 

இரயில் நிலையம் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. 

 

‘அடுத்து என்ன செய்வது?’ என்று தெரியாமல் அங்கு வந்து அமர்ந்து,‌ போவோர் வருவோரை எல்லாம் மணிக்கணக்கில் வேடிக்கைப் பார்த்த கடந்த காலம் நினைவிற்கு வந்தது.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்