1,241 views

“சாரி ம்மா கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.” என்று வீட்டிற்குள் நுழையும் அக்னியை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விட்டார் பரமேஸ்வரி. 

 
அன்னையின் செய்கையில் இதழ்கள் சென்டிமீட்டர் அளவிற்கு விரிய, “அம்மா உன் மேல கோபமா இருக்காங்க.” என்றாள் திவ்யா.
 
“எதுக்கு குண்டம்மா.” என்றவன் சோபாவில் அமர,
 
“அப்பா இவன பாருங்க என்னை குண்டம்மா சொல்றான்.”  புகார் வாசித்தாள் தந்தையிடம்.
 
“அக்னி எத்தனை தடவை சொல்லி இருக்கேன் என் பொண்ண அந்த மாதிரி சொல்லாதன்னு.” என மகனை கண்டித்தவர் மனைவியை பார்த்து,
 
“என் பொண்ணு வயிற்றுல இருக்கும் போது அளவா தின்னுன்னு எவ்வளவோ சொன்னேன் அதெல்லாம் கேட்காம உங்க அம்மா கண்டபடி தின்னுட்டு என் பொண்ண இப்படி ஆக்கிட்டா.” என வம்பு இழுத்தார் .
 
கணவரின் கூற்றில் பலமாக முறைத்தார் பரமேஸ்வரி. அன்னையின் முறைப்பை ரசித்த அக்னிசந்திரன் அவர் அருகில் அமர, நகர்ந்து அமர்ந்தார் அவர். 
 
 
“அய்யோடா!” என்றவன்  அருகில் சென்று தோளில் கை போட்டுக் கொண்டான். இந்த முறை விலகாது மகனை முறைத்தார் பரமேஸ்வரி. கன்னம் கிள்ளி முத்தம் வைத்த அக்னி ,
 
  “என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க உங்க பொண்ணு தான் தின்னது பத்தாம எங்க அம்மா சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிட்டு இப்படி குட்டி மலை மாதிரி உட்கார்ந்து இருக்கா.” என்றது திவ்யா அடிக்க ஆரம்பித்தாள்.
 
“அம்மா பாருங்க உங்க பையனை அடிக்கிறா.” என்றவன் அன்னை மடியில்  தலை சாய்த்து கொள்ள, கோபம் இருப்பினும் விளையாட்டுக்கு கூட மகன் அடி வாங்குவது விரும்பாத பரமேஸ்வரி மகளை தடுத்தார்.
 
“அம்மா விடுங்க இன்னைக்கு இவன என்ன பண்றேன்னு பாருங்க.” என்றவள் அடிக்க,
 
“என் மகனே பாவம் ரெண்டு நாள் கழிச்சு இப்ப தான் வீட்டுக்கு வந்திருக்கான் அவன் கிட்ட வம்பு பண்ணாத திவ்யா.” என்றதும்  அடிப்பதை நிறுத்திய  திவ்யா பரமேஸ்வரியை முறைத்தாள்.
 
அதில் அக்னி சந்திரனுக்கு சிரிப்பு வந்துவிட, “இங்க பாரு பரமு நீ பண்ற எதுவும் நல்லா இல்ல. கிண்டல் பண்ணவன விட்டுட்டு பாதிக்கப்பட்ட என் பொண்ண தடுக்குற.” என்றார் மணிவண்ணன்.
 
“என்னத்த உங்க பொண்ணு பாதிக்கப்பட்டுட்டா.” என்றவர்  மகனின் தலையை கோத துவங்கினார்.
 
“என் பொண்ண குண்டம்மான்னு சொல்லி அவ மனசு பாதிக்கிற மாதிரி பண்ணிட்டான்.” என்றதும்,
 
“அப்பா அவ பாதிக்கப்படல அவளுக்கு சாப்பாடு போட்டு நான் தான் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டேன்.” இந்த முறை அன்னை தடுப்பதையும் மீறி அக்னிசந்திரனை அடி பின்னி எடுத்து விட்டாள்.
 
அடிகளுக்கு நடுவில், “அம்மா உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்க உள்ள எலும்பு முறியுற சத்தம் அதிகமா கேக்குது.” என்று இன்னும் அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான். 
 
அடித்து முடித்து ஓய்ந்தவள் மூச்சு வாங்கிய படி சோபாவில் அமர, “அம்மா இந்த குண்டம்மாக்கு தீனி போடுங்க டயர்ட் ஆயிட்டா போல.”என்று மீண்டும் வம்பு இழுக்க,
 
“அப்பா இவன பாருங்கப்பா.” என்ற சிணுங்கியவள் அவனிடத்தில், “அப்படி என்னடா குண்டா இருக்கேன் ஜஸ்ட் அறுபது கேஜி தான.” என்றாள் உதடுகளைப் பிதுக்கி கொண்டு.
 
“அது நீ காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கும் போது. செகண்ட் இயர்ல எழுபது கிலோ. இப்போ எண்பது. இப்படியே போனா உனக்கு கல்யாணம் ஆகும் போது சீதனமா உன்ன தூக்கி விட  நாலு பேர அனுப்பி விடணும் புகுந்த வீட்டுக்கு.” என்று முடிப்பதற்குள் தங்கையின் பாச போர்க்களம் நடந்தேறியது. 
 
 
கேலியும், சிரிப்பும் எந்த அளவிற்கு வீட்டில் ஒலித்ததோ அதே அளவிற்கு தங்கை கையால் அடி வாங்கும் அக்னியில் ஓசையும் கேட்டது. போர்க்களம் முடிந்து சமாதான உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் ஒன்றாக சாப்பிட அமர்ந்தார்கள். மகனுக்கு உணவை பரிமாறியவர் கணவனுக்கு சைகை செய்தார். 
 
“நான் சொல்றதை விட நீ சொன்னா உடனே உன் மகன் ஓகே சொல்லுவான் பரமு.” என்ற வார்த்தையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் பெற்றோர்களை பார்த்தான். 
 
“என்னம்மா என்ன விஷயம்?” என்றதும்,
 
“ஒன்னும் இல்ல  உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கும்.” என்றார் மணிவண்ணன். 
 
“அதுக்கு இப்ப என்ன அவசரம் ப்பா. திவ்யாக்கு காலேஜ் முடியட்டும் ஒரு வருஷம் கழிச்சு அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணுங்க. அதுக்கப்புறம் நான் பண்ணிக்கிறேன்.” என்றான்.
 
 
“அது என்ன நீ மட்டும் படிச்சிட்டு நல்ல வேலைக்கு போய் அம்மா அப்பாவை பார்த்துப்ப. நான் மட்டும் படிச்சு முடிச்ச கையோட கல்யாணம் பண்ணிட்டு போகணுமா.” என சாப்பிட்டுக் கொண்டிருந்த வாயோடு பேசி முடித்தவள் தந்தையிடம்,
 
“அப்பா இவன் சொல்றதை கேட்காதீங்க.  உடனே நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். படிச்சிட்டு ஒரு நல்ல வேலைக்கு போகணும். அதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம். அதுவரைக்கும் இவன வச்சிருந்தா அறுபதாம் கல்யாணம் தான் பண்ணனும். சீக்கிரம் பண்ணி முடிங்க வர அண்ணிய எப்படியாது ஃப்ரெண்ட் பிடிச்சு இவன இம்சை பண்ணனும்.” என்றவளுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி அசைத்தார்கள்.
 
அக்னி சந்திரனுக்கு அதில் விருப்பம் இல்லாமல் போக முரண்டு பிடித்தான். “அவ சொல்றதுல என்ன தப்பு இருக்கு அக்னி. படிச்ச கையோட ஒரு பொண்ணு கல்யாணம் தான் பண்ணனுமா. அவளும் கொஞ்ச நாள் ஃப்ரீயா இருக்கட்டும். உனக்கு கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சு  இனிமேலும் தள்ளிப் போட்டா நல்லா இருக்காது. நீயும் உன்னோட மனைவியும் சேர்ந்து இவ கல்யாணத்தை பொறுப்பா நடத்துங்க.” என அன்பாக புரிய வைத்தார் தன் மகனுக்கு பரமேஸ்வரி. 
 
 
பெற்றோர்களின் சாதுர்ய பேச்சில் சமாதானம் அடைந்தவன் ஒரு வழியாக கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டான். 
 
***
 
எப்பொழுதும் அலுவலகத்திற்கு சீக்கிரமாக வரும் அக்னி சந்திரனால் இன்று வர இயலாது போய்விட்டது. எப்போதும் தாமதமாக வரும் விக்ரம் இன்று சீக்கிரமாக வந்து விட்டான். இரண்டாவது நாள் பணி என்பதால் அவன் பின்னால் அன்பினி சித்திரையும் வந்து விட்டாள். 
 
 
பெற்ற பிள்ளைகள் இருவரும் அலுவலகத்தை பார்த்துக் கொள்வதாக உறுதியளிக்க, இனிவரும் காலங்களை 
ஓய்வெடுக்க முடிவு செய்த செல்வகுமார் இன்றிலிருந்து அதை நடைமுறைப்படுத்தி விட்டார். 
 
 
ஒன்பது முப்பது மணிக்கு வர வேண்டியவன் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்து விட்டான். ஐந்து நிமிட தாமதத்திற்கே அவன் ஏதோ பல மணி நேரம் கடத்தி விட்டதாக பரபரப்பாக தன் அறை நோக்கி வந்து கொண்டிருந்தான். உள்ளே வந்தவன் பணி தொடங்குவதற்காக  இருக்கையில் அமர, லன்லைன் அடித்தது.
 
“அடிமை என் கேபின்க்கு வா.”என்ற அன்பினி சித்திரை பட்டென்று அழைப்பை துண்டித்து விட, 
 
“இந்த லூசுக்கு இப்ப என்னன்னு தெரியலையே!”என புலம்பியபடி அவள் அறைக்குச் சென்றான்.
 
அவள் அறை முன்பு நிற்க, அவனுக்காகவே வாசலில் காத்துக் கொண்டிருந்தாள் அண்ணனோடு. வந்தவன், “குட் மார்னிங் மேடம் கூப்பிட்டு இருந்தீங்க.” வாழ்த்துக்களோடு அழைத்த விபரத்தை கேட்க,
 
“லேட்டா வந்துட்டு ஒரு சாரி கேட்கல இதுல குட் மார்னிங் ஒன்னு தான் குறை.” என குரல் உயர்த்தினாள் அன்பினி சித்திரை.
 
அந்த தளத்தில் வேலை பார்க்கும் ஐம்பது பேரும் அதில் தலையை திருப்பி அவர்களை பார்த்தனர். அதைக் கண்டும் காணாதது போல், “நீங்களே இப்படி லேட்டா வந்தா உங்களுக்கு கீழ வேலை பார்க்குற ஸ்டாப் எப்படி சரியான டைம்க்கு வருவாங்க மிஸ்டர்.” அடுத்த கேள்வி சுற்றை தொடங்கினாள்.
 
அனைவரும்  பார்ப்பதை உணர்ந்தவன் சிறு குரலில், “சாரி மேடம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.” என்றான்.
 
 
“எம் டி நாங்களே சரியான நேரத்துக்கு வந்திருக்கும் போது உங்களுக்கு என்ன? லேட்டா வந்ததுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்னு எழுதி கொடுத்துட்டு வேலைய பாருங்க.” என்றவள் உள்ளே நுழைந்து கொண்டு கதவை ஓங்கி சாத்தினாள். 
 
அந்த செயல் அவன் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது அக்னிக்கு. இதுவரை அனைவரும் முன்பும் தோரணையாக மட்டுமே நின்று இருக்கிறான். ஒரு வார்த்தை யாரும் சாடி பேசியதில்லை அவனை. ஓயாமல் அவன் புராணத்தையே பாடிக் கொண்டிருக்கும் செல்வகுமார் பேச்சுக்களை கேட்டு வளர்ந்த அலுவலகம் அன்பினி சித்தரையின் பேச்சுக்களை கேட்டு அதிர்ந்தது.
 
 
தவறு தன் மீது இருப்பதால் மன்னிப்பு கடிதத்தை எழுதியவன் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றான். உள்ளே வந்தவனை கண்டு கொள்ளாமல் அவள் விக்ரமோடு பேசிக் கொண்டிருக்க,
 
“மேடம்!” என்றழைத்தான் அக்னி சந்திரன்.
 
காது கேட்காதவர்கள் போல் கதை அளந்து கொண்டிருந்த இருவரையும் கண்டு கடுப்பானவன் எழுதி வந்த மன்னிப்பு கடிதத்தை டேபிளில் வைத்துவிட்டு நகரப் பார்த்தான். அதை அறிந்த விக்ரம், “ஏதோ தொறந்த வீட்டுக்குள்ள வந்த மாதிரி நீ பாட்டுக்கு வந்துட்டு போற என்னது இது?” என கேட்டதும்,
 
“உங்க அப்பா இவ்ளோ செலவு பண்ணி படிக்க வச்சும் ஒரு லெட்டர் படிக்க துப்பில்லையா உனக்கு.” உடனே பதில் கொடுத்து விட்டான் கேள்வி கேட்டவனுக்கு அக்னி சந்திரன். 
 
பொசுக்கு என்று கோபம் வந்து விட, “ஏய்!” என பாய்ந்த விக்ரம் அவன் சட்டையை பிடித்தான்.
 
சட்டையைப் பிடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் முகத்தில் அளவு கடந்த அனல் ரேகைகள் ஓடிக்கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட அக்னியின் முகத்தில் சிறு அதிர்வலைகள் கூட இல்லை. மிக சாதாரணமாக, “மரியாதையா கைய எடுத்துடு. இல்லனா புடிச்ச கை தரையில கிடக்கும்.” என்றான்.
 
“அதையும் பார்த்துடலாம்” என்ற விக்ரம் அவன் கன்னத்தில் குத்த வர, லாவகமாக தாக்க வரும் கையை உள்ளங்கையில் அடக்கி கொண்டான் அக்னிசந்திரன்.
 
“சொல்லும்போதே கேட்டுக்கோ.” என அப்போதும் சாதாரணமாக பேசியவன் அவன் கைகளை விடுவிக்க, விக்ரம் அடங்குவதாக இல்லை. மீண்டும் அடிக்க கை ஓங்க, 
 
“காலைல என்னடா காமெடி பண்ற.” என்ற அக்னிசந்திரன்  சட்டையை பற்றி இருந்த கையை வலுக்கட்டாயமாக பிரித்து, அந்த கைகளை பார்த்து, “நீ நல்லா இருக்கிறதால தான என் சட்டையை பிடிக்கிற ம்ம்!” என்று அதனோடு பேச்சுவார்த்தை நடத்தியவன் விக்ரம் அசரும் நேரம் முறுக்கி  முதுகுக்கு பின்னால் கொண்டு வந்து விக்ரமை பாதி அளவு குனிய வைத்து கைமுட்டியால் குத்தினான். 
 
 
அந்த ஒரு தாக்குதலில் மூளை நரம்பு அரை நொடியில் உயிர்வலியை உணர்ந்து விட்டது. பரபரப்பாக மற்ற உறுப்புகளுக்கு கட்டளை போட சோர்ந்து தரையில் விழுந்து விட்டான் விக்ரம். கீழே விழுந்தவனிடம்,
 
“எங்கிட்ட என்ன வருதோ அதைத்தான் எதிர்ல இருப்பவனுக்கு கொடுப்பேன். இனி உனக்கு என்ன வேணும்னு முடிவு பண்ணிட்டு என்கிட்ட வா.” என்ற அக்னி சந்திரன் இவ்வளவு கலவரங்கள் நடந்தும் அசராமல் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் அன்பினிசித்திரையை கண் இடுக்கில் முறைத்துப் பார்த்தான். 
 
 
விக்ரம் அடிக்க சென்றதிலிருந்து அக்னியின் நடவடிக்கைகளை மட்டுமே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். நிச்சயம் அதில் ரசனைகள் குவிந்திருக்கவில்லை. அவன் மீதான சந்தேகங்கள் அதிகரித்தது அவளுக்கு. 
 
***
 
உணவு இடைவேளை நேரம் வந்ததும் பணியில் மூழ்கியிருந்த அனைவரும் வயிற்றை கவனிக்க சென்றார்கள். கூடவே அக்னியும் சாப்பிட செல்ல,
 
“அடிமை ஒரு நிமிஷம்.” என செல்பவனை தடுத்தாள் அன்பினி சித்திரை.
 
பவ்வியமாக திரும்பியவன், “சொல்லுங்க மேடம்!” என்றதும்,
 
“எனக்கு லஞ்ச் ஆர்டர் பண்ணு.” என்றாள் மிதப்பாக.
 
“ஓகே மேடம்.” என்றவன், “உங்க ஃபோன் கொடுங்க மேடம் ஆர்டர் பண்ணிடுறேன்.”என கையை நீட்ட,
 
“அது எனக்கு தெரியாதா சொன்ன வேலையை செய். ” என்று எறிந்து விழுந்தாள்.
 
“கூல் மேடம் அஞ்சு நிமிஷத்துல ஆர்டர் பண்ணிட்டு வந்துடுறேன்.” தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்தவன் உணவு நிறுவன செயலியை திறந்தான்.
 
வரிசையாக பார்த்துக் கொண்டிருந்தவன், “மேடம் எந்த ஹோட்டல் வேணும்.” என கேட்க, அவள் ஒரு உணவகம் பெயரை சொன்னாள்.
 
சரி என்று தலையாட்டியவன், “வெஜ் ஆர் நான் வெஜ் மேடம்.” என்று கேட்க, 
 
“ஐ அம் பியூர் நான்வெஜ்.” பெருமைப்பட்டுக் கொண்டாள் அன்பினிசித்திரை.
 
“பார்த்தாலே தெரியுது.” என முனுமுனுத்தவனை பார்த்தவள், “என்ன சொன்ன?” என்ன கேட்டிட,
 
“ஒன்னும் இல்ல மேடம்” என்று சமாளித்தான் .
 
“பொய் சொல்லாதடா அடிமை. ஒழுங்கா உண்மைய சொல்லிடு.” என்று கைகளை கட்டியவள் அவனை மிடுக்காத பார்க்க,
 
“தப்பா ஒன்னும் இல்ல மேடம் உலகத்துல இருக்க எல்லா மிருகத்தையும் ஆட்டைய போட்டு கொழுப்பேறி போயி பார்க்கவே விஷ ஜந்து மாதிரி இருக்கீங்கன்னு சொன்னேன்.” என்றான் பார்வையை கைபேசியில் வைத்துக்கொண்டு.
 
 
“உன்னோட லிமிட் தாண்டி போகாத.” என்று பற்களை கடித்த அன்பினி சித்திரையை, “லிமிடெட் சாப்பாடு எல்லாம் உங்களுக்கு போதாது மேடம்  அன்லிமிடெட் சொல்றேன்.” என இன்னும் கடுப்பேற்றினான் .
 
 
“ஸ்டுப்பிட்” என்று கால்களை உதறியவள் அவனிடமிருந்து விடைபெற, பின்னாலே சென்றவன், “பிரியாணி ஆர் நான் வெஜ் மீல்ஸ்.” என கேள்வி கேட்க, பதில் சொல்லாதவள் கோபத்தோடு நடந்தாள்.
 
அவளின் செய்கையின் நிம்மதி அடைந்தவன் அத்தோடு விடாமல் பத்து கேள்விகளுக்கு மேலே கேட்டு விட்டான். கடுப்பில் பதில் சொல்லாதவள் ஒரு கட்டத்தில் கோபத்தில் திட்டி விட்டாள் நன்றாக. அதைக் கூட தன்னுடைய வெகுமதியாக எடுத்துக் கொண்டவன்,
 
“சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டேன் மேடம் இன்னும் டுவென்டி மினிட்ஸ்ல வந்துடும்.” என அறிக்கை விட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
 
 
விக்ரம் சைட் வேலையாக வெளியில் சென்று இருக்க, அவள் மட்டுமே அலுவலகத்தில் இருந்தாள். அவன் சொன்ன இருபது  நிமிடங்கள் கடந்த பின்னும் உணவு வரவில்லை. பொறுத்திருந்து பார்த்தவள் அவனை வசைபாட எழுந்திருக்கும் நேரம் கதவு தட்டப்பட்டது. உதடு குவித்து ஊதியவள், “உள்ள வாங்க.” என்று உத்தரவு கொடுத்தாள்.
 
 
 
உணவக ஊழியர் கையில் பார்சலோடு அவள் முன்பு நிற்க, “ஓ தேங்க்யூ!” என்று இன்முகத்தோடு வாங்கிக் கொண்டாள்.
 
பசி எடுத்ததால் உடனே கையில் வந்த உணவை பிரிக்க ஆரம்பிக்க, “மேடம் காசு.” என வந்தவர் கேட்டார்.
 
“என்ன” என்று முழித்தவளுக்கு, “ஃபுட் ஆர்டர் பண்ணதுக்கான காசு மேடம்.” என்று விளக்கினார் வந்த உணவக ஊழியர்.
 
 
‘பிச்சைக்கார பையன்  ஆன்லைன் பேமெண்ட் பண்ண காசு இல்லன்னு சொல்ல வேண்டியது தான.’  என்று உள்ளுக்குள் அக்னியை தாழ்த்தி பேசியவள், 
 
“சாரி ஒரு நிமிஷம் இருங்க.” என வெளியில் இன்முகத்தோடு கோரிக்கை வைத்தாள். வந்தவரும் தலையசைத்து காத்திருக்க, உணவுக்கான தொகையை விட அதிக காசை எடுத்துக் கொடுத்தாள். உற்சாகமான ஊழியர் தலையசைத்து விடைபெற, தலையை சிலுப்பி அக்னியின் செயலை அருவருத்தவள் உணவு உண்ண பார்சலை பிரித்தாள்.
 
 
 
வாசனை வராத உணவை சந்தேகத்தோடு திறந்தவள் அதிர்ந்து போனாள் உள்ளிருக்கும் கம்பங்கூழ் கஞ்சியை பார்த்து . இவ் உணவை அவள் கேள்விப்பட்டு பார்த்ததோடு சரி உண்டது இல்லை. அதுவும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த உணவைக் கண்டு கடுப்பானவள் கதவைத் திறந்து வெளியில் சென்றாள். 
 
 
லிப்டை திறந்து உள்ளே நுழையும் உணவக ஊழியரை அழைத்தவள் “என்ன இது” என்று விசாரிக்க, 
 
“இதைத்தான் மேடம் நீங்க ஆர்டர் பண்ணி இருந்தீங்க.” என்றார்.
 
 
மொத்த நினைவலைகளில் அக்னி சந்திரனின் முகமே தாண்டவம்  ஆடியது அவளுக்கு. ஊழியரை எதுவும் பேசாதவள் அக்னியை தேடி சென்றாள்.
 
 
அவனுக்கான அறையில் அவன் இல்லாமல் போக இன்னும் கோபம் உச்சிக்கு ஏறியது அவளுக்கு. அங்கிருந்த வேலையாட்கள் ஒருவரை அழைத்தவள் அக்னியை அழைத்து வரச் சொல்ல, அவரும் சென்றார்.
 
 
சென்ற வேகத்தில் திரும்பியவர், “மேடம் சார் சாப்பிட்டுட்டு இருக்காராம் அரை மணி நேரம் கழிச்சு வரேன்னு சொன்னாங்க.” என்றார்.
 
 
அவனின் திமிர் தனமான பேச்சு பெண்ணவளுக்கு சுத்தமாக பிடிக்காமல் போனது. கம்பெனி ஓனர் அழைத்தும் வராமல் அரை மணி நேரம் கழித்து வருவதாக கூறியவனை இன்றே கொன்று புதைக்க வேண்டும் என்ற அளவுக்கு ஆத்திரம் பிறந்தது அவளுள்.
 
 
தானே சென்று விடலாம் என்று முடிவெடுத்தவள் ஆறாம் தளத்திற்கு சென்றாள். அலுவலகத்தில் உள்ள மொத்த ஊழியர்களும் அங்கு தான் சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். அந்த இடம் அவளுக்கு பிடிக்காமல் போக முகம் சுழித்தவள்  அவன் எங்கு என்று தேடினாள்.‌
 
 
ஆறாம் தளம் மொட்டை மாடி என்பதால் சூரிய வெப்பம் கொளுத்தியது அவள் உடலை. பிறந்ததிலிருந்தே நோகாமல் பனிக்காற்றில் வளர்ந்தவள் தன்மீது விழும் அனலை தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியேற முயன்றாள். திரும்பி நான்கு அடி கூட நடந்து இருக்க மாட்டாள்…
 
“அக்னி சார் இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம்.”என்ற வார்த்தையில் அப்படியே நின்று விட்டாள்.
 
 
“தினமும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி எங்க சாப்பாட்டை சாப்பிடாம எஸ்கேப் ஆகுறீங்க.” என அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தி கூற,
 
“ஹா! ஹா! எங்க அம்மா கைருசிய உங்களுக்கு விட்டுத்தர நான் என்ன இளிச்சவாயனா.” என்றான் அக்னி.
 
 
“சார் வேர்த்து போகுது பாருங்க இங்க வந்து உட்காருங்க பேன் காத்துல.” என இன்னொரு பெண் கூற,
 
“ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்று மறுத்தவன் அங்கேயே அமர்ந்து இருந்தான். 
 
“அக்னி சார் இன்னைக்கு எதுக்கு மேடம் உங்கள அப்படி திட்டுனாங்க. எனக்கெல்லாம் செம கோவம் அவங்க மேல.” பெண்கள் கூட்டத்தில் இருந்து இவ்வார்த்தை வர,
 
“ஏன் கோபம்?” என சாப்பிட்டுக் கொண்டே வினவினான் அக்னி சந்திரன்.
 
“நீங்க எவ்வளவு சின்சியரான ஆளுன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். எப்பவும் லேட்டா வராத நீங்க இன்னைக்கு ஒரு நாள் அதுவும் அஞ்சு நிமிஷம் லேட்டா வந்ததுக்கு அப்படி பேசுறாங்க.” என்றதும் ,
 
“அது கூட பரவால்ல உங்களை லெட்டர் வேற எழுத சொன்னாங்க பாருங்க எனக்கெல்லாம் கோவம்’ன்னா கோபம் அப்படி ஒரு கோபம்.” என்றாள் மற்றொருத்தி.
 
பதில் சொல்லாத அக்னிசந்திரன் பரமேஸ்வரி கை மனதில் உருவான புளியோதரை சாதத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். என்ன தான் சார் என்று அழைத்து அங்கிருந்த பெண்கள் கூட்டம் பேசினாலும் பார்வை அளவில்லாமல் ரசித்துக்கொண்டிருந்தது அவனை. அவர்கள் எவ்வளவு நெருங்கி பேசினாலும் ஒரு லிமிட்டோடு நிறுத்திக் கொள்பவனை இன்னும் பிடித்துப் போனது அங்கிருந்தவர்களுக்கு.
 
 
“சார் இனிமே இந்த மாதிரி லெட்டர் எழுத சொன்னாங்கன்னா செய்யாதீங்க.”
 
“அது எப்படி செய்யாம இருக்க முடியும் அவங்க எம்டி.” என்றவனுக்கு,
 
“என்ன சார் எம் டி? செல்வகுமார் சாருக்கு தெரிஞ்சா போதும் அவங்களுக்கு தான் திட்டு விழும்.” என்றார்கள் ஒன்றன்பின் ஒன்றாக.
 
 
அவர்களின் அன்பில் சிரித்தவன் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருக்க, ஒவ்வொரு கண்களும் அங்குலம் அங்குலமாக அளந்தது அவனை. “சும்மா சொல்லக்கூடாது சார் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.”. என்றதும் மற்ற பெண்கள் எல்லாம் வரிசையாக சொல்ல ஆரம்பித்தார்கள்.
 
“உங்களுக்கு அழகே அந்த கண்ணு தான் சார்.” என்றும்,
 
“கண்ணு இல்லடி அந்த உதடு தான் சாருக்கு ரொம்ப அழகு.” என்றும்,
 
 
“அதெல்லாம் எதுவும் இல்லை அந்த தாடி தான் அவங்களுக்கு அப்படி ஒரு அழகு. ஏதாச்சும் டவுட் கேட்க போனா அதை நீவி விட்டுக்கிட்டு பதில் சொல்வாரு பாரு  என்ன டவுட் வந்துச்சுன்னே மறந்திடுவோம்.” என்றும் வந்து கொண்டிருந்தது.
 
 
இவர்களின் பேச்சுக்களில் அங்கிருந்த இளம் ஆண்களுக்கு லேசாக பொறாமை எட்டிப் பார்க்க அதை மேலும் சீண்டியது,
 
“எனக்கு அதெல்லாம் பிடிக்காது பா டெய்லி சார் போட்டுட்டு வர காஸ்டியும் தான் ரொம்ப பிடிக்கும் அழகுக்கு அழகு சேர்க்குற மாதிரி அம்சமா இருக்கும்” என்று நெட்டி முறித்தாள் இன்னொருத்தி.
 
 
“அய்யய்யோ சார கண்ணு வச்சுட்டா டி இவ” அவர்கள் கூட்டத்திற்கு உள்ளே சொல்லி பெண்கள் எல்லாம் சிரித்துக் கொள்ள இதையெல்லாம் அவர்களுக்காக ஏற்றுக் கொண்டவன் பதிலுக்கு நாட்டம் இல்லாத சிரிப்பை சிந்தினான். 
 
 
“இங்க பாருங்கடி அந்த சிரிப்பு தான் எல்லாத்தையும் விடவும் அழகு.” என விட்ட இடத்தில் இருந்து மீண்டும் அந்தக் கூட்டம் ஆரம்பிக்க, அதற்கு மேல் பொறுமை இல்லாத அன்பினி சித்திரை அவர்கள் முன் நின்றாள். 
 
சரியாக அக்னி சந்திரனின் முதுகுக்கு பின்னால் அவள் நிற்க, அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்த பெண்கள் அனைவருக்கும் தூக்கி வாரி போட்டது. அனைவருக்கும் பேச்சு மறந்து நாக்கு தந்தி அடிக்க, முதலில் உணராத அக்னி பேச்சு வராமல் போக பெண்கள் கூட்டத்தை பார்த்தான்.
 
 
அவர்கள் பார்வை தனக்கு பின்னால் இருப்பதை உணர்ந்தவன் ஒரு பக்கமாக தலையை திருப்ப, கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்துக்  கொண்டிருந்தாள் அன்பினி சித்திரை.
 
 
 
 
அம்மு இளையாள்.
 
 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
28
+1
4
+1
8

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  Your email address will not be published. Required fields are marked *

  1 Comment

  1. கௌசல்யா முத்துவேல்

   இவங்க கோவம் ரொம்ப சின்ன புள்ளைத்தனமா இருக்கே அம்மு அக்கா!!.. இன்னும் எதிர்பாக்குறேன் உங்கள்ட இருந்து!!!..