Loading

அத்தியாயம் 29

அகரனின் வீடு, டெல்லி…

 

பிரிஸம் டவர்ஸிலிருந்து வீட்டிற்கு வந்த அகரன், தாய் விசாரித்ததிற்குக் கூட எந்த பதிலும் சொல்லாமல் அவனது அறையில் சென்று அடைந்து கொண்டான்.

 

வந்ததிலிருந்து அவனது மனம் தளம்பலான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

 

அவனது பார்வை அவன் கொண்டு வந்த ஓலைச்சுவடிகளை நோக்கிக் கொண்டிருக்க, அவனது யோசனை முழுவதும், அவனைக் கட்டுப்படுத்தும் அந்தக் கல்லின் சக்தியை சுற்றியே வலம் வந்து கொண்டிருந்தது.

 

அவனிடமிருந்த கருநிறக் கல், அவனைக் கட்டுப்படுத்துவது, இது முதல் முறை அல்ல. மும்பையில் யுகேந்திரனின் குழுவை சந்தித்த போதே, அது அவனைக் கட்டுப்படுத்துவதை உணர்ந்திருந்தான் அகரன்.

 

அன்று, அந்த மூவரும் தப்பிக்கக் காரணமாக இருந்த, அகரனிற்கு ஏற்பட்ட வலியே அதற்கு உதாரணம்!

 

அப்போதிருந்த மனநிலையில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அகரன்.

 

இப்போது யோசித்துப் பார்த்தால், அந்தக் கல்லிலுள்ள சக்தியின் கட்டுப்பாட்டை மீறியதாலேயே வலி ஏற்பட்டதோ என்ற எண்ணம் வலுப்பெற, அன்றைய நாளின் நிகழ்வுகளை வரிசைப்படுத்திப் பார்த்தான் அகரன்.

 

சில நிமிடங்களில் அந்தக் காரணத்தையும் தெரிந்து கொண்டான் அவன்.

 

மும்பையில், தங்கையிடமிருந்த சக்தியைக் கண்டு அதையும் அடைய வேண்டும் என்று அகரன் எண்ணிய போதுதான், அவனிற்கு வலி ஏற்பட்டது.

 

அதுவும், கருநிறக் கல் மற்ற கற்களை அழிக்க வேண்டும் என்ற செய்தியை அகரனிற்குள் புகுத்த முயற்சி செய்ய, அதற்குக் கட்டுப்படாமல் அகரன் செயல்பட்டவுடனே அவனிற்கு வலியை உண்டாக்கி இருந்தது.

 

விளைவு, அந்த மூவரும் அகரனிடமிருந்து தப்பித்திருந்தனர்.

 

அதே போல, இப்போது அந்த ஓலைச்சுவடிகளைப் பத்திரப்படுத்த அகரன் நினைக்க, அந்தக் கல்லோ அவற்றைக் கையோடு அழித்து விட செய்தியை அனுப்பி இருந்தது.

 

இம்முறை, அதன் கட்டுப்பாட்டை எப்படியோ மீறி, அந்தக் ஓலைச்சுவடிகளை எடுத்து வந்திருந்தான் அகரன்.

 

அந்தக் கல் கிடைத்ததிலிருந்து அவன் செய்த செயல்களை எல்லாம் சிந்தித்துப் பார்த்தவனிற்கு, முதலிலிருந்தே தான் அந்தக் கல்லின் கட்டுப்பாட்டிலேயே இருந்துள்ளோம் என்பது தெளிவானது.

 

தனது மறைமுக ஆசையைத் தூண்டி, அதன் கட்டுப்பாட்டில் வைத்து, அது செய்ய நினைத்ததை செய்துள்ளது என்பதையும் புரிந்து கொண்டான்.

 

மேலும், மென்மொழி கூறியதும் நினைவுக்கு வர, அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தவனின் அலைபேசி ஒலி, அவனது எண்ணத்திலிருந்து வெளிவரச் செய்தது.

 

அலுவலகத்தில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த அழைப்பில் செய்தி வர, கையிலிருந்த கருநிறக் கல்லை சட்டைப்பையில் போட்டுக் கொண்டு விறுவிறுவென்று அங்கிருந்து கிளம்பினான்.

 

செல்லும் வழியில், “இப்போதான வந்தீங்க… அதுக்குள்ள எங்க போறீங்க?” என்று மனைவி கேட்டதையோ, “பார்க்கவே சோர்வா தெரியுற அகரா. ரெஸ்ட் எடுத்துட்டுப் போ.” என்று அன்னை கூறியதையோ அவன் மதித்ததாகத் தெரியவில்லை.

 

அடுத்து அவர்களைக் காணும் வாய்ப்பு குறைவு என்பதை அறிந்திருந்தால், அப்படியே சென்றிருக்க மாட்டானோ என்னவோ!

 

*****

 

மென்மொழியின் வீட்டில்…

 

பிரேம் ரத்தோரிடமிருந்து எடுத்து வந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இன்னமும் அவற்றில் பாதியைக் கூட கடக்கவில்லை.

 

முதல் காணொளியைப் போலவே பல காணொளிகளில் காட்சிகள் இருக்க, ஒருவித பயத்துடனே அதைப் பார்க்க ஆரம்பித்தனர்.

 

ஆனால், முதல் காணொளியைப் போல அத்தனை கொடூரமானதாக அவை இருக்கவில்லை என்பது சற்று ஆறுதலாக இருந்தது.

 

அதை வைத்துப் பார்க்கும் போது, அந்தக் கற்களிலுள்ள சக்திகளைப் பயன்படுத்தும் முறை பற்றி அவர்களும் அறிந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய யுகேந்திரனின் கருத்தை மற்றவர்களும் ஆமோதித்தனர்.

 

அதன்படி, அந்தக் கற்களிலுள்ள சக்திகளைத் தாங்கி, அவற்றை வெளிப்படுத்த ஏதுவான சிலரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருந்தனர்.

 

முதலில், அவர்களின் எண்ணம் ஈடேறினாலும், அந்த நபர்களால் கற்களிலுள்ள முழுமையான சக்திகளைப் பயன்படுத்த முடியவில்லை. ஒரு சிறு பகுதியை மட்டுமே அவர்களால் அணுக முடிந்திருந்தது.

 

மேலும், நாட்கள் செல்லச் செல்ல, அந்தக் கற்கள் சம்பந்தப்பட்டவர்களின் உயிர் சக்தியை உரிய ஆரம்பித்திருந்தது. மிகுந்த சோர்வுடன் காணப்பட்டவர்கள், ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல், சுருண்டு விழுந்து இறந்து போயிருந்தனர்.

 

அதைக் கண்ட சுடரொளியோ, “அடக்கடவுளே, இதென்ன பொத்து பொத்துன்னு விழுந்துட்டு இருக்கானுங்க. அப்போ நம்ம நிலைமை!” என்று அவளிடமிருந்த கல்லைக் கண்டவள், “இது திடீர்னு ஒர்க்காகாம போனது கூட அதோட சிம்ப்டமா இருக்குமோ?” என்று வினவினாள்.

 

அதற்குப் பதில் சொல்லாதவர்கள், மீண்டும் காணொளியில் மூழ்கினர்.

 

சில நாட்கள் மட்டுமே அந்தக் கற்களிலிருந்த சக்திகளைத் தாங்கி இறந்தவர்களை பிரிஸம் டவர்ஸிற்குக் கீழேயே புதைத்திருந்தனர்.

 

இப்படி புதைக்கப்பட்ட சடலங்கள் பல!

 

“அடப்பாவிங்களா, ஒரு மினி சுடுக்காட்டையே காலுக்குக் கீழ உருவாக்கி வச்சுருக்கானுங்களே!” என்று சுடரொளி திகைக்க, “இதை இவ்ளோ சர்வசாதாரணமா செய்யுறாங்கன்னா, பெரிய இடத்து சப்போர்ட் இல்லாம இருக்காதுல.” என்றான் இன்பசேகரன்.

 

“சோ, இதை நாம போலீஸ் கம்ப்லைன்ட்டும் பண்ண முடியாதா?” என்று கூறிய யாழ்மொழி யுகேந்திரனைக் கண்டு அமைதியாக, “பண்ணாலும், பெருசா எதுவும் நடக்காது. இதுக்கு முன்னாடி ஆர்க்கைவ்ஸ்ல நடந்ததுக்கே பெருசா ஆக்ஷன் எடுக்கலையே!” என்றான் யுகேந்திரன் ஒரு பெருமூச்சுடன்.

 

அத்தனை நேரம் அமைதியாக இருந்த மென்மொழியை உசுப்பிய சுடரொளி என்னவென்று சைகை செய்ய, “அந்தக் கற்களோட பவர்ஸ் எல்லாம் வித்தியாசமா இருக்கு. அதைக் கவனிச்சியா?” என்றாள்.

 

“ஆமா, நானும் சொல்லணும்னு நினைச்சேன். நெருப்பைக் கட்டுப்படுத்துறது, காத்தைக் கட்டுப்படுத்துறது, வெளிச்சத்துல இருந்து ஆயுதத்தை உருவாக்குறதுன்னு புது புது பவர்ஸ் இருக்குல. பார்க்க வேற செம கூல்லா இருந்துச்சு.” என்று சுடரொளி கூற, “ஆரஞ்சு கல்லுக்கு ஃபயர் கண்ட்ரோல், டார்க் ப்ளூ கல்லுக்கு ஏர் கண்ட்ரோல், ப்ளூ கல்லுக்கு லைட்ல இருந்து வெப்பன்ஸ் உருவாக்குறதுன்னு பவர்ஸ் இருக்கு. க்ரீன் கல்லுக்கும் ரெட் கல்லுக்கும் என்ன பவர்?” என்று வினவினாள் யாழ்மொழி.

 

“ரெட் கலர் கல்லுக்கு பேஸ் ஷிஃப்டிங் பவர்னு நினைக்கிறேன். அதாவது மூடியிருக்க கதவுக்குள்ள புகுந்து வரது, சுவத்துக்குள்ள புகுந்து வரது மாதிரியான பவர். க்ரீன் கலர் கல்லு… எனக்கு என்ன பவர்னு சரியா தெரியல. மேபி, யாரையும் நகர விடாம செய்யுற பவரா இருக்கலாம்.” என்று இன்பசேகரன் கூற, “கிராவிட்டியை கண்ட்ரோல் பண்ற பவரா இருக்கும்னு போல.” என்றான் மதுசூதனன்.

 

“இதுல வர எல்லோ கலர் கல்லுக்கும், மது கிட்ட இருக்குற மாதிரி டெலிகைனனிஸ் பவர்தான்.” என்று சுடரொளி கூறி மதுசூதனனைக் கண்டாள்.

 

“ஹ்ம்ம், ஒவ்வொரு கலர் கல்லுக்கும் காமனான பவர் இருக்கும்னு நினைச்சேன்.” என்ற மென்மொழி, “நம்ம கிட்ட இருக்க ரெண்டாவது பவர் மாதிரி அங்க யாரு கிட்டயும் இல்லையே!” என்றாள்.

 

“ஹ்ம்ம், முதல் பவரைத் தாங்குற சக்தியே அவங்களுக்கு இல்லையே!” என்று பதிலளித்தாள் சுடரொளி.

 

அந்தக் காணொளியிலிருந்து பார்வையை விலக்காத யுகேந்திரனோ, “அதோட இங்கேயும் வயலட் கலர் கல்லு மிஸ்ஸிங். ஆறு கற்கள்தான் இருக்கு. அதோட மொழியோட நினைவுகளை பார்த்தப்போ, ஆராவமுதன் தாத்தா வயலட் கல்லு அழிஞ்சதா சொன்னாரு. அப்போ ரெண்டு செட்ல இருந்த வயலட் கற்களுமே அழிஞ்சுடுச்சா?” என்று வினவினான்.

 

பதிலில்லா கேள்வி என்பதால் கேள்வியை மட்டும் குறித்துக் கொண்டு, அடுத்த காணொளிக்குத் தாவினர்.

 

கிட்டத்தட்ட முப்பத்தி ஏழு முறை இப்படிப்பட்ட ஆராய்ச்சியை நடத்தி இருந்ததற்கான காணொளிகள் இருந்தன.

 

காணொளியாகப் பதியப்படாமல் எத்தனை ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டனவோ!

 

“இந்த வீடியோஸ் வச்சு பார்க்கும்போது, லாஸ்ட்டா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை நடந்த ரிசர்ச்சோட ரெக்கார்டிங்தான் இருக்கு. அதுக்கப்புறம் ரிசர்ச் நடக்கலையா? அப்போ அந்தக் கற்கள் எங்க?” என்று மென்மொழி வினவ, “பிரிஸம் டவர்ஸ்ல அந்தக் கற்கள் இல்ல. வேற எங்கயாவது மாத்தி வச்சுருக்கணும்.” என்றான் யுகேந்திரன்.

 

“வேற எங்கயாவதுன்னா… ஒருவேளை மும்பைல இருந்துருக்குமா? அகரன் அந்தக் கற்களை எடுத்துருந்தா?” என்று சுடரொளி வினவ, “அப்படி எடுத்திருந்தா, இந்நேரம் அந்தக் கற்களை யூஸ் பண்ணியிருக்கணும். அப்படி யூஸ் பண்ணியிருந்தா மதுக்கு தெரிஞ்சுருக்கும்.” என்றான் யுகேந்திரன்.

 

“அப்போ எங்கதான் இருக்கு? அந்தக் கற்களை பிளாக் மார்க்கெட்ல விக்கிறதுதான பிளான்…” என்று யாழ்மொழி வினவ, சற்று யோசித்த யுகேந்திரன், “பிரிஸம் டவர்ஸ்ல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி கிடைச்ச சின்ன கேப்ல, ரத்தோரோட மைண்டை ரீட் பண்ண டிரை பண்ணேன். என்னால தெளிவா எதையும் சொல்ல முடியல. அங்க நான் பார்த்ததைத் திரும்ப ரீகலெக்ட் பண்ணப் பார்க்குறேன்.” என்றான்.

 

அப்போது, “சுடர், உனக்குத்தான் பொருளைத் தொட்டா அதோட ஹிஸ்டரி தெரியுமே… இந்த ஹார்ட்டிஸ்க்கை தொட்டுப் பார்த்து சொல்லேன்.” என்று யாழ்மொழி கூற, “ஹ்ம்ம், ஹார்ட்டிஸ்க்கை தொட்டுப் பார்த்து கம்ப்யூட்டரோட ஹிஸ்டரியை வேணும்னா சொல்லவா?” என்று நக்கலாக உரைத்தாள் சுடரொளி.

 

அதற்குள் எதையோ கண்டு கொண்டவன் போல கண்களைத் திறந்த யுகேந்திரன் மதுசூதனனைக் கூர்ப்பார்வையுடன் நோக்கினான்.

 

*****

 

அலுவலகத்திற்குச் சென்ற அகரன், அது எப்போதும் போல் இயங்குவதைக் கண்டு குழம்பிப் போனான்.

 

தீவிபத்து என்று தகவல் வந்ததும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களிடம் விசாரிக்காமல் பதறியடித்து வந்த மடத்தனத்தை எண்ணி நொந்தவன், அவனிற்குத் தவறான தகவலை சொன்னது யார் என்று அலைபேசி எண்ணைப் பார்க்க முயன்றான்.

 

அப்போதே அவனின் மூளை ஏதோ தவறாக இருக்கிறது என்பதாக எச்சரிக்க, இம்முறை உடனே மனைவிக்கு அழைத்திருந்தான்.

 

நிவேதிதா வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருக்க, அவளை மனதிற்குள் அர்ச்சித்தபடி அன்னைக்கு அழைக்க முயன்றான்.

 

பல அழைப்புகள் சென்றும் அவர் அழைப்பை ஏற்காமல் இருக்க, மனதில் தோன்றிய சந்தேகம் உறுதிபெற ஆரம்பிக்க, வேகவேகமாக வாகனத்தைக் கிளப்பினான்.

 

மீண்டும் அவன் வீட்டிற்கு வரும் வழியெல்லாம் மனைவிக்கும் அன்னைக்கும் அழைத்துக் கொண்டே வர, இருவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாகவே தகவல் கிடைத்தது.

 

வீட்டிற்கு வந்தவன், இருவரின் பெயரையும் அழைத்துக் கொண்டே அனைத்து இடங்களிலும் தேட, அவர்கள் அங்கிருப்பதற்கானத் தடயமே இல்லாமல் காணாமல் போயிருந்தனர்.

 

அப்போதே அவனைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் வலையை உணர்ந்தான் அகரன்.

 

அவனது முதல் சந்தேகம் பிரேம் ரத்தோரின் பக்கம் திரும்ப, கடும் கோபத்துடன், அவரின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தான்.

 

அவனது அழைப்பை எதிர்பார்த்ததைப் போலவே ஏற்ற பிரேம் ரத்தோர், “அட, அதுக்குள்ள கால் பண்ணிட்ட? ரொம்ப வேகமாகத்தான் இருக்க. குடும்பம் மேல அவ்ளோ பாசமா?” என்று நக்கலாக வினவ, “அவங்களை எதுக்குக் கடத்தி வச்சுருக்கீங்க?” என்று கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வினவினான் அகரன்.

 

“அட, இது கூட தெரியலையா? எவ்ளோ தைரியம் இருந்தா என்னையே மிரட்டுவ? அதான் என்னால என்ன செய்ய முடியும்னு ஒரு சேம்பில் காட்டுனேன்.” என்று ரத்தோர் கூற, பல்லைக் கடித்த அகரனோ, “எங்க இருக்க?” என்று வினவ, “எங்க வச்சு என் கழுத்தைப் பிடிச்சியோ, அதே இடத்துலதான்!” என்றார் ரத்தோர்.

 

“என்னோட சக்தி தெரியாம மோதிட்ட. போன முறை உன்னை விட்டதே, எனக்கு இந்தக் கல்லைப் பத்தின தகவல்களை நீ சொன்னதாலதான்! இந்த முறை அதே தப்பை பண்ண மாட்டேன். உன் சாவுக்கு காத்திரு ரத்தோர். வந்துட்டே இருக்கேன்.” என்று கர்ஜித்த அகரன், அழைப்பைத் துண்டித்தான்.

 

அலைபேசியைப் பார்த்தபடி, “உன்னை வர வைக்கத்தான இது எல்லாமே.” என்று ஆர்ப்பாட்டமாகச் சிரித்த பிரேம் ரத்தோர், அவரின் விசுவாசியிடம் திரும்பி, “எல்லாம் ரெடிதான?” என்று விசாரித்துக் கொண்டார்.

 

*****

 

எப்போதும் தானாக அழைக்காத ரத்தோரின் பேரனிற்கு, இப்போது அவனாகவே அழைத்தவன், மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், “பாஸ் பாஸ்… நம்ம கிட்ட இருந்த கற்கள் எல்லாம் ஃபேக் பாஸ்.” என்று கத்தினான்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்