Loading

அத்தியாயம் 28

 

பிரேம் ரத்தோர் வரும் தகவல் அறிந்த யுகேந்திரன், கணினியில் இருக்கும் ஆதாரங்களை அப்படியே விட மனமில்லாதவனாக, வன்தட்டை (ஹார்ட்டிஸ்க்) எடுத்துக் கொண்டு யாழ்மொழி மற்றும் இன்பசேகரனுடன் இணைந்து கொண்டான்.

 

மூவரும் அங்கிருந்து மறையும் இறுதி நிமிடத்தில், கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் ரத்தோர்.

 

மூவரையும் நோக்கி அவர் கத்த, அவர் நெருங்கும் சமயத்தில் அவர்கள் அங்கிருந்து மறைய என்று அந்த நொடிப் பொழுது களேபரமாக முடிந்திருந்தது.

 

கிடைத்த அரை நொடியில் ரத்தோரைக் கண்டிருந்த யுகேந்திரன், அவரின் சில நினைவுகளை பார்த்திருந்தான்.

 

நொடிக்கும் குறைவான நேரமென்பதால், ரத்தோரின் நினைவுகளைத் தெளிவாக அவனால் பார்க்க முடியவில்லை.

 

சில காட்சிகள், சில மனிதர்கள் என்று அவற்றை தன் நினைவில் சேமிக்க முயன்ற நேரம், மூவரும் அவ்விடத்தை விட்டு சற்றுத் தள்ளி மறைந்திருந்த மதுசூதனனை உடனழைத்துக் கொண்டு மென்மொழியின் இல்லத்திற்கு வந்திருந்தனர்.

 

நால்வரையும் கண்ட தோழிகள் இருவரும், “என்னாச்சு? ஏதாவது தெரிஞ்சுதா? உங்களுக்கு எதுவுமில்லையே?” என்று வினவ, “அந்த ரத்தோர், நாங்க அவனோட ரூம்ல இருந்ததைப் பார்த்துட்டான்.” என்று மூச்சிரைக்க உரைத்தான் இன்பசேகரன்.

 

“ஹையையோ, அப்போ அவனுக்கு நம்ம கிட்ட இருக்க கற்களைப் பத்தியும் தெரிஞ்சுருக்கும்ல?” என்று சுடரொளி வினவ, யாரும் மறுத்து எதுவும் கூறவில்லை.

 

அங்கு நிலவிய மௌனத்தை ஆமோதிப்பாக எடுத்துக் கொண்ட மென்மொழி, “அங்க இருந்து ஏதாவது தகவல் கிடைச்சுதா?” என்று யுகேந்திரனிடம் வினவ, அங்கு அவன் தெரிந்து கொண்டவற்றைக் கூறியவன், கையோடு எடுத்து வந்திருந்த வன்தட்டையும் காட்டினான்.

 

அடுத்த சில நொடிகளில், அந்த வன்தட்டில் இருந்தவற்றை ஆராய்வதற்காக, அதைக் கணினியில் பொருத்தி, அதன் முன்பு அனைவரும் அமர்ந்திருந்தனர்.

 

அதில், யுகேந்திரன் முன்பு பார்த்த ஒப்பந்த பத்திரத்தைக் காட்டியவன், அதிலிருந்த காணொளிகளை ஒவ்வொன்றாக ஓட விட்டான்.

 

அவற்றுள் சில, பிரேம் ரத்தோரிடமிருந்த கற்களின் சக்திகளைச் சோதிக்கும் காட்சிகளைக் கொண்டிருந்தது. அதாவது அந்தக் கற்கள் எதனால் உருவாக்கப்பட்டது என்றும், அவற்றைப் புறவிசைகளால் அழிக்க முடியுமா போன்ற ஆராய்ச்சிகளிற்கான காணொளிகள் அவை.

 

அதிலிருந்து, அந்தக் கற்கள் பூமியைச் சார்ந்தவை அல்ல என்ற உண்மை அறுவருக்கும் தெரிய வந்தது. அத்துடன், அவற்றை எவ்வித புறவிசைகளாலும் அழிக்க முடியாது என்ற தகவலையும் தெரிந்து கொண்டனர்.

 

பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில், அந்தக் கற்கள் பல ஆயிர வருடங்களிற்கு முன்னர் பூமியில் விழுந்த விண்கற்களின் துகள்களாக இருக்கலாம் என்று யூகிப்பதாகக் கூறப்பட்டது.

 

“இந்தச் சின்ன சின்ன கற்கள் எல்லாம் விண்கல்லோட பார்ட்டா?” என்று சுடரொளி ஆச்சரியமாக அவளிடமிருந்த கல்லை நோக்க, “இந்தக் கற்களோட தன்மையையும் இயல்பையும் அந்தக் காலத்துலயே ஆராய்ஞ்சு, அதுக்குள்ள சக்திகளை செலுத்தி இருக்காங்கன்னா, அங்க வாழ்ந்த மக்களோட அறிவியல் எவ்ளோ டெவலப்டா இருந்துருக்கும்ல.” என்று திகைப்புடன் கூறினாள் மென்மொழி.

 

யுகேந்திரன் அடுத்த காணொளியை ஓட விட, அதிலிருந்ததைக் கண்டவர்கள் அதிர்ந்து போயினர்.

 

அந்தக் கற்களிலுள்ள சக்திகளை ஆராய்வதற்காக, அவற்றை சில மனிதர்களிடம் பயன்படுத்த கொடுத்திருக்க, அவற்றின் ஆற்றலைத் தாங்க முடியாதவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இறப்பதைப் படம்பிடித்த காணொளியே அது!

 

அவர்களின் இறப்பைக் காணொளியில் கண்டவர்களால் அதைச் சற்றும் ஜீரணிக்கவே முடியவில்லை. அத்தகைய கொடூரச் சாவு!

 

உடல் கருகி, எலும்புகள் முறிந்து, உயிர்சக்தி முழுதாக உரியப்பட்டு, உடல் முழுவதும் குருதி பெருகி, உடல் வெந்து, உடல் உருகி – இப்படி அங்கு ஏற்பட்ட இறப்பிற்கானக் காரணங்கள் பல!

 

சிலவற்றை அவர்களால் பார்க்கக் கூட முடியவில்லை. அத்தனை கோரமாக இருந்தன அந்தக் காட்சிகள்!

 

காணொளியிலிருந்து வெளிவந்த கதறல் சத்தம் மட்டுமே அங்கு எதிரொலித்துக் கொண்டிருந்தது.

 

அதிலும், பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது.

 

அந்தக் காணொளி ஓட ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சுடரொளிக்கு குடலைப் பிரட்டிக் கொண்டு வர, அவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

 

அவளைப் பின்தொடர்ந்து யாழ்மொழியும் சென்று விட, அந்தக் கொடூரச் சம்பவங்களை நெஞ்சில் ஏறிய பாரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மென்மொழி.

 

அந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்தவர்களும், அதன் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தத்தளித்தனர்.

 

அந்தக் காணொளி முடிந்த பின்னரே அங்கு வந்தனர் சுடரொளியும் யாழ்மொழியும்.

 

“ச்சே, இவ்ளோ கொடுமையான சாவை நான் பார்த்ததே இல்ல.” என்று கண்களின் விளிம்பில் முட்டிக் கொண்டு நின்ற கண்ணீருடன் சுடரொளி கூறினாள்.

 

ஒரு பெருமூச்சுடன், “ஆராவமுதன் தாத்தா சொன்னது ஞாபகம் இருக்குல… ஒரிஜினலா சக்தி பெற்ற மக்களோட வாரிசுகளால மட்டுமே அந்தக் கற்களோட சக்திகளை உபயோகிக்க முடியும்.” என்று நிர்மலமான குரலில் யுகேந்திரன் கூற, “உபயோகிக்க மட்டும் இல்ல… அந்தக் கற்களோட சக்திகளைத் தாங்கிக்கவும் முடியும் போல.” என்றாள் மென்மொழி.

 

அப்போது மற்றவர்கள் அவர்களிடமிருந்த கற்களைப் பார்க்க, “அப்போ நாம… சப்போஸ் நாம சரியான ஆளுங்களா இருந்துருக்கலைன்னா… நமக்கும் அதுதான் நிலைமையா?” என்று பயத்துடன் வினவினாள் யாழ்மொழி.

 

மீண்டும் அங்கு அமைதி நிலவ, குரலைச் செருமிய யுகேந்திரன், “இது அவங்களோட முதல் எஸ்பிரிமெண்ட் போல. இது டோட்டல் ஃபெயிலியர்னு ஆராவமுதன் தாத்தா சொன்னாரு. சோ, இதுக்கபுறமும் அவங்க ஆராய்ச்சியைத் தொடர்ந்துருக்கணும்.” என்று மற்ற காணொளிகளைப் பார்த்தபடி கூறினான்.

 

உடனே, “நோ நோ… இது அந்த எப்ஸ்டீன் ஃபைல்ஸ் மாதிரி இருக்கு. இதைப் பார்க்கிற அளவுக்கு என் மனசுல தெம்பில்ல.” என்று மறுத்த சுடரொளி, மற்றவர்களை நோக்க, அப்போதுதான் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட மதுசூதனனைக் கண்டாள் அவள்.

 

பிரிஸம் டவர்ஸிலிருந்து வந்ததிலிருந்து அனைவரும் பரபரப்புடன் இருந்திருக்க, யாரும் மதுசூதனனைக் கண்டு கொள்ளவில்லை.

 

அவன் மயங்கி விழும் தருவாயில் இருந்ததைக் கண்ட சுடரொளி, “ஹையோ மது…” என்று கத்தியபடி அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள்.

 

அவனது உடலில் முன்பு போல நரம்புகள் புடைத்துக் கொள்ள, “என்னாச்சு உங்களுக்கு? நிறைய பவர்ஸ் யூஸ் பண்ணிட்டீங்களா என்ன?” என்று சுடரொளி வினவ, அவனைக் குணப்படுத்த அருகே வந்தாள் மென்மொழி.

 

மதுசூதனனோ மென்மொழியை நோக்கி, ‘வேண்டாம்’ என்பதாகத் தலையசைக்க, “நீங்க ரொம்பவே டையர்ட்டா இருக்கீங்க மது.” என்றபடி அவனது கரத்தைப் பிடித்தாள் மென்மொழி.

 

அடுத்த நொடியே புடைத்துக் கொண்ட நரம்புகள் இயல்பாகி விட, மதுசூதனனும் சோர்விலிருந்து மீண்டவனாகக் காணப்பட்டான்.

 

உடனே, மென்மொழியிடமிருந்து கரத்தைப் பிரித்துக் கொண்டவன், “ஏன் மொழி… உங்க பவரை வீணாக்குறீங்க? கொஞ்ச நேரத்துல நானே தெளிவாகி இருப்பேன். ஏற்கனவே, சுடரோட பவர்ஸ் திடீர்னு ஒர்க்காகாம போச்சு. நமக்கு எப்படி என்னன்னு இன்னும் தெரியல. அதனாலதான் சொல்றேன்…  தேவையில்லாம உங்க பவர்ஸை யூஸ் பண்ணாதீங்க.” என்றான்.

 

“சரி சரி, எல்லாருமே எக்சாஸ்ட்டாகி இருப்பீங்க. ஒரு பத்து நிமிஷம் பிரேக் எடுத்துப்போம். நான் போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன்.” என்று சமையலறை நோக்கிச் சென்றாள் சுடரொளி.

 

“நீங்க கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க மது.” என்று அவனைத் அவளது அறைக்கு அனுப்பி வைத்த மென்மொழி, சுடரொளிக்கு உதவ எண்ணி அமர்ந்த இடத்திலிருந்து எழ, அடுத்த நிமிடமே தள்ளாடினாள் விழச் சென்றாள்.

 

அவளருகே இருந்த யுகேந்திரன், அவளைத் தாங்கிப் பிடித்தபடி, “ஆர் யூ ஆல்ரைட்?” என்று வினவ, “ஹ்ம்ம், திடீர்னு தலை சுத்திடுச்சு.” என்றவளை மீண்டும் அமர வைத்தவன், சுடரொளி கொண்டு வந்த பழச்சாறைப் பருக வைத்தான்.

 

கூடத்திலிருந்தவர்களிற்குப் பழச்சாறைக் கொடுத்து, தானும் பருகிய சுடரொளி, “மது முழிச்சுருந்தா, அவருக்கும் ஜூஸ் குடுத்துட்டு வரேன்.” என்று அங்கிருந்து நழுவப் பார்க்க, “நீ எதுக்குப் போறன்னு எங்களுக்குத் தெரியவே தெரியாது சுடர்.” என்று வம்பிழுத்தான் இன்பசேகரன்.

 

அவனிற்கு ஒழுங்கு காட்டிவிட்டு மென்மொழியின் அறைக்குச் சென்ற சுடரொளி, கட்டிலில் படுத்து அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்த மதுசூதனனிடம் பழச்சாறை நீட்டியபடி, “உங்களை ரெஸ்ட் எடுக்க அனுப்பினா, மொபைல் நோண்டிட்டு இருக்கீங்களா?” என்று கேட்டாள்.

 

“எனக்குத்தான் எதுவுமே இல்லையே!” என்று உதட்டைப் பிதுங்கிய மதுசூதனனிடம், “ஹ்ம்ம், எங்களை விட நீங்கதான் ரொம்ப வீக்கா இருக்கீங்க. பொசுக்கு பொசுக்குன்னு மயங்கி விழுத்துடுறீங்க.” என்று குறைபாட்டாள் சுடரொளி.

 

கூடத்திலும் அதே பேச்சுதான் ஓடிக் கொண்டிருந்தது.

 

“நம்மளை விட மது வீக்கா இருக்காரா? இல்ல அவரால பவர்ஸை ஹேண்டில் பண்ண முடியலையா?” என்று அவனின் சந்தேகத்தைக் கேட்டான் இன்பசேகரன்.

 

கணினியில் பார்வையைப் பதித்திருந்த யுகேந்திரனோ, “மது, ஒரிஜினலா சக்தி பெற்ற மக்களோட வாரிசா இல்லாம இருந்திருந்தா, இவ்ளோ நாளா அவரால பவர்ஸை யூஸ் பண்ணியிருக்க முடியாது.” என்று கூற, “அப்போ… மதுவோட ஆன்செஸ்டர்ல ஒருத்தர் அந்த குரூப் ஆளா இருக்கலாம். அதாவது, அவரு முழுசா அவங்களோட வாரிசா இல்லாம இருக்கலாம்.” என்றாள் யாழ்மொழி.

 

அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை யுகேந்திரன். அவன் ரத்தோர் தலைமையில் நடந்த ஆராய்ச்சியை மதுசூதனனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கத் துவங்கினான்.

 

அதே சமயம், மதுசூதனனும் சுடரொளியும் வந்து விட, அந்தப் பேச்சு அத்துடன் நின்றது.

 

*****

 

பிரிஸம் டவர்ஸ்…

 

சில மணித்துளிகளிற்கு முன்பு…

 

கண்முன் மறைந்து சென்றவர்களைக் கண்டு கோபத்தில் கொந்தளித்த பிரேம் ரத்தோர், முதல் வேலையாக அவரது பேரனிற்கு அழைத்தார்.

 

அவரது பேரன் அழைப்பை ஏற்காமல் இருக்க, அவரது விசுவாசியை உடனழைத்துக் கொண்டு, அந்த அறையின் சிசிடிவி காட்சியைப் பார்த்தார்.

 

அதில், நால்வர் அங்கு வந்ததும், அவர்கள் காவலாளிகளை தாக்குவதும் தெளிவாகத் தெரிந்தது.

 

அதைக் கண்ட அவரின் விசுவாசி, “அப்போ இவங்க கிட்டயும் கற்கள் இருக்கா?” என்று வாயைப் பிளந்து கொண்டு பார்க்க, அதற்கு எவ்வித பதிலும் கூறாமல், அவர்களையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ரத்தோர்.

 

சில நொடிகளிற்குப் பின், “நம்ம கிட்ட இருக்குறவங்களை மாதிரி இவங்க இல்ல. சம்திங் ஸ்பெஷல்…” என்று சற்று யோசித்த ரத்தோர், “இவங்களால அந்தக் கற்களோட ஃபுல் பவரை யூஸ் பண்ண முடியுதுன்னு நினைக்கிறேன்.” என்று கூறி வினோதமாகச் சிரித்தார்.

 

அதே சமயம், அவருக்கு அழைத்திருந்தான் அவரின் பேரன்.

 

அழைப்பை ஏற்றதும், “அவங்க இங்க வரப் போறாங்கன்னு உனக்கு முன்னாடியே தெரியும்தான? அப்புறம் ஏன் எனக்கு முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணல. இப்போ அவனுங்க ஹார்ட்டிஸ்க்கையே தூக்கிட்டுப் போயிட்டானுங்க.” என்று சில பல கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தார் ரத்தோர்.

 

“ஹார்ட்டிஸ்க்தான? எங்கேயும் போயிடாது. அவங்களும் எங்கேயும் போயிட மாட்டாங்க. எப்பவும் என்னோட ரேடார்குள்ளதான் இருப்பாங்க.” என்று அலட்சியத்துடன் கூறியவன், “நான் கொஞ்சம் லேட்டா சொன்னதுக்கே இவ்ளோ கோபம் வருதே… என்கிட்ட சொல்லாம நீங்க சிலது பண்றீங்களே… அதுக்கு நான் பண்ண?” என்று கடுமையாக வந்து விழுந்தன அவனது வார்த்தைகள்.

 

புருவ மத்தியில் உண்டான முடிச்சுடன் அலைபேசியை வெறித்த ரத்தோர், அமைதியாக இருக்க, “என்னதான் நீங்க மறைச்சாலும், எனக்குத் தெரியாம இருக்காது தாத்தா.” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டான் அவன்.

 

“என்னையே வேவு பார்க்க ஆரம்பிச்சுட்டானா?” என்று கேலியாகக் கூறிய ரத்தோரிடம், “சின்னவருக்கு தெரிஞ்சுடுச்சே… இப்போ என்ன பண்றது?” என்று கேட்டான் அவரின் விசுவாசி.

 

“நாம என்ன பிளான் பண்ணோமோ அது அப்படியே நடக்கட்டும். பொடிப்பையன் என்ன பண்ணிடுவான்?” என்று ரத்தோர் கூற, “சின்னவரையா சொல்றீங்க?” என்று பயத்துடன் வினவினான் மற்றவன்.

 

அதற்குப் பதில் சொல்லாமல் மர்மமாகச் சிரித்தவர், “அகரனை வாட்ச் பண்ண சொன்னேனே… இப்போ எங்க இருக்கான்?” என்று விசாரிக்க, “அவன் வீட்டுலதான் இருக்கான். எல்லாம் நார்மலாதான் இருக்கு.” என்றான் அவன்.

 

“அவன் வீட்டுலேயே இருந்தா, மத்தவங்களைத் தூக்குறது கஷ்டம். அவனோட ஆஃபிஸ்ல ஏதாவது செஞ்சு அவனை வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டு ஃபேமிலியை தூக்கிடுங்க.” என்றார் அவர்.

 

“இன்னைக்கேவா?” என்று விசுவாசி மிதமான அதிர்ச்சியுடன் வினவ, “ஹ்ம்ம், எப்போ அவனுக்கு நாம ரகசியமா பண்றது தெரிஞ்சுதோ, இனி தாமதிக்க முடியாது. அவன் இங்க வரதுக்கு முன்னாடி, எல்லாம் நம்ம கையில இருக்கணும்.” என்றார் ரத்தோர்.

 

அவரின் இந்த திடீர் மாற்றம் நல்லதற்கா கெட்டதற்கா என்பது புரியாமல் அவர் சொன்ன வேலையைப் பார்க்கச் சென்றான் அவன்.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்