Loading

அத்தியாயம் 27

“அப்போ நீ அவனை மறக்குறதுக்காக சைக்கியாட்ரிஸ்ட்கிட்டப் போகல?” விஷாலின் குரலில் இருந்த எரிச்சலை உணராதவளாக, “ட்ரிங்க் பண்றதை கண்ட்ரோல் பண்றதுக்காகப் போனேன்!” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டாள்.

நாள்கள் கரையத் தொடங்க, தினம் தினம் ராம்குமாரின் வற்புறுத்தல் அதிகம் ஆனது.

அவரது உடல்நிலையும் சீர்கெட்டதில், அவளும் விஷாலுடன் இணைந்து தொழிலைப் பார்க்கத் தொடங்கினாள்.

விஷாலின் தாயான அனுபமாவும், நித்தமும் அலுவலகத்திற்குப் படையெடுத்து, இதயாம்ரிதாவிற்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைத்துக் கொடுத்துச் சிறிது நேரம் பேசி விட்டுச் செல்வார்.

அதில் பெரும் வாரியான பேச்சுகள் அவளது திருமணத்தைப் பற்றித் தான்.

“எனக்கு அப்புறம் நீங்க தான என் தொழிலைப் பார்த்துக்கணும்… உனக்காக சத்யாவை வெளில எடுக்க நான் எவ்ளோ முயற்சி செஞ்சேன்னு தெரியும்ல. எனக்காக நீ விஷாலைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டியாமா?” எனக் கேட்டு அவளைக் கரைத்தார் ராம்குமார்.

“எனக்கு இது சுத்தமாய் பிடிக்கல விஷால். அப்பாவை ஹர்ட் பண்ணவும் முடியல.” இதயாம்ரிதா வருத்தத்துடன் கூற, “எப்படியும் அங்கிள் உன்னை வேற யாருக்கோ மேரேஜ் பண்ணப் போறாரு. அதுக்கு நம்மளே பண்ணிக்கிட்டா என்ன?” எனத் தட்டுத் தடுமாறிக் கூறிவிட, அவனை முறைத்து வைத்தாள்.

“நம்ம எப்படிடா? சான்ஸே இல்ல!” என மறுத்ததும் அவன் முகம் கறுத்து விட்டது.

“என்னைப் பிடிக்காதா உனக்கு?”

“இதுக்குப் பிடித்தத்தைத் தாண்டி உள்ளுணர்வு ஒத்துக்கணும் விஷால்!”

“சத்யாவுக்குச் சொன்ன மாதிரியோ?” பட்டென அவன் கேட்டதில், அவளிடம் சிறு அமைதி.

விஷால் சொன்னதுபோல, ராம்குமார் வேறு மாப்பிள்ளைகளைப் பார்க்கத் தொடங்கியதில் அவளுள் கலவரம் எழும்பியது.

மருத்துவரும், ராம்குமாருக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாமெனக் கூறியதில், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி விஷாலைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டாள்.

“நம்ம மேரேஜ் பண்ணிட்டுக் கொஞ்ச நாள்ல டிவோர்ஸ் பண்ணிடலாம் விஷால். ரெண்டு பேருக்கும் விருப்பம் இல்லாம கம்பல்ஷன்க்கு வாழ முடியாது.” என்றதும்,

“மேரேஜ் பண்ணிட்டு டிவோர்ஸ் பண்ற ஐடியா எனக்கு இல்ல. பிடிக்குதோ, பிடிக்கலையோ நம்ம லைஃப் லாங் டிராவல் பண்ணனும் அம்ரி…” என்றான் விஷால்.

அதில் அரைமனத்துடன் தலையசைத்தவள், அவனைத் திருமணமும் செய்து கொண்டாள்.

மேடையில் உர்ரென்ற முகத்துடன் நின்றிருந்தவளை விஷால் தான் ஏதேதோ பேசி சிரிக்கச் செய்திருந்தான்.

அதைப் புகைப்படக் கலைஞர் தேவையின்றிப் புகைப்படம் எடுத்திருக்க, அதுவே செய்தித்தாள் வரையில் பிரபலமானது.

அந்தச் சிரிப்பின் பின்னாலிருக்கும் வலிதனை வெறும் புகைப்படம் எப்படி உரைக்குமோ?

இருவருக்குமான முதலிரவிலும், இதயாம்ரிதா திட்டவட்டமாகக் கூறிவிட்டாள்.

“இப்போதைக்கு இதெல்லாம் வேண்டாம் விஷால். ஐ நீட் டைம். உனக்கும் தேவைப்படும் தான?” என்றதில், அவனாலும் வற்புறுத்த இயலவில்லை.

அதான் திருமணம் நடந்து விட்டதே… இனி அவள் தன்னை விட்டுப் போக வாய்ப்பே இல்லை என்ற கர்வம் உருவானது.

மாதங்கள் உருண்டோட, விஷாலின் வீட்டிற்கு மருமகளாய் அடியெடுத்து வைத்த தருணம் முதல், விஷாலும் விஷாலின் குடும்பத்தினரும் அவளைத் தங்கத் தட்டில் தாங்காத குறை தான்.

எப்போதும் வந்து போகும் வீடு தான் என்பதால், அவளுக்கும் வித்தியாசமாகத் தெரியவில்லை.

“ஆண்ட்டி… தினமும் எனக்குப் பிடிச்சதே செய்யறீங்களே… மாமாவும் விஷாலும் பாவம்!” எனக் குறும்பாய் வார விஷாலின் தந்தையும், “என்னமா செய்யறது. மருமக வந்ததும் நாங்கள்லாம் ரெண்டாம் பட்சமா ஆகிட்டோம்…” என்று போலியாய் வருந்தினார்.

“என்னை மட்டும் சொல்றீங்களே, உங்க பையன் மட்டும் என்னவாம்… சும்மாவே அவள் பேச்சைக் கேட்டுத் தான் ஆடுவான். இப்போல்லாம் அவனுக்கு நம்ம கண்ணுக்கே தெரியறது இல்ல…” என்று அனுபமா மகனைக் கிண்டல் செய்ய, விஷால் அசடு வழிந்தான்.

“அவனுக்குக் கண்ணுல கோளாறு போல ஆண்ட்டி!” எனக் கிண்டல் செய்தவளை விஷால் செல்லமாய் அடிக்க, இருவரது அன்னியோன்யத்தையும் கண்டு விஷாலின் பெற்றோர் பூரித்தனர்.

மெல்ல மெல்ல அவனது அன்பின் எதிரொலிப்பில், தூக்க மாத்திரையையும் கைவிட்டாள்.

சத்யாவின் நினைவுகள் நெஞ்சின் ஆழத்தில் மறைக்கப்பட, புது வாழ்வைப் புதுப் பயணத்தை விஷாலுடன் இணைந்து தொடர்ந்தாலும், இவருக்குள்ளும் இல்லற வாழ்க்கை தொடங்கப்படாமலே இருந்தது.

அருகிலேயே இருந்தவளின் மீதுள்ள ஆசையை அடக்குவது அவனுக்கும் கடினமாக, “நம்ம வேணும்னா ஹனிமூன் போயிட்டு வரலாமா அம்ரி…” எனக் கேட்டான்.

மடிக்கணினியில் வேலையாக இருந்தவள், அவனை அர்த்தத்துடன் திரும்பிப் பார்க்க, “அது… அப்பா ஸ்விஸ்க்குப் போயிட்டு வாங்கன்னு சொன்னாரு…” என இழுத்ததில், “பக்கத்துல எங்கயாவது போயிட்டு வரலாம். ஜஸ்ட் ஒரு ட்ரிப்பா” என முடித்துக் கொண்டாள்.

அந்த ஒரு விஷயத்தைத் தவிர, விஷாலின்றி அவள் எதையும் செய்வதில்லை.

காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்குவது வரை, அவனை அதிகம் நாடத் தொடங்கினாள்.

நட்பு, காதல் என்ற இரண்டைத் தாண்டி, தனக்கு உரிமையானவன் என்ற உணர்வு அவளிடம் அதிகம் வளரத் தொடங்கியது.

பிசினஸ் மீட்டிங், உறவுகளின் விசேஷங்கள் என எதிலும் அவனின்றிக் கலந்து கொள்ள மாட்டாள்.

ஒரு முறை விஷாலே கேட்டான். “இன்னைக்கு அங்கிளோட ரிலேட்டிவ் யாருக்கோ மேரேஜ்னு சொன்னாரே, நீ போகலையா அம்ரி…” என்றதில்,

“நான் அவ்ளோ தூரம் சொன்னேன்டா. உங்கிட்டச் சொல்லச் சொல்லி… அவங்க மறந்துட்டாங்களாம். அப்புறம் நான் மட்டும் எதுக்குப் போகணும். அங்க போறதுக்கு நம்ம அவுட்டிங்காவது போகலாம்…” எனக் கண் சிமிட்ட, அவனுக்கும் ஜிவ்வெனத் தான் இருக்கும்.

அவளது சின்னச் சின்ன அன்பில் தான், அவன் மீதான ஒட்டுமொத்தக் காதலையும் வெளிக்கொணர இயலும் எனப் புரியாதவனாய், அவளிடம் நெருங்கும் நாளை மட்டுமே எதிர்பார்த்திருந்தவனுக்கு, அவளது ஒட்டுதலும் கூட ஒதுக்கத்தையே கொடுப்பது போலொரு பிரம்மை.

ஒரு கட்டத்தில் அனுபமாவும், “பேபிக்கு பிளான் பண்ணலையா?” எனக் கேட்டு விட்டார்.

“பண்ணும்போது சொல்றோம் ஆண்ட்டி!” என அவள் முடித்து விட்டதில் அவருக்கு அதிருப்தி.

“நீ இன்னும் அந்தப் பையனை மறக்கலையா?” அவர் பங்கிற்குச் சத்யாவின் நினைவைக் கிளறி விட்டார்.

“இந்தக் கேள்வி இப்போ அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன் ஆண்ட்டி. எங்களை ஃபோர்ஸ் பண்ணி மேரேஜ் பண்ண வச்சுட்டு, எல்லாத்துக்கும் ஃபோர்ஸ் பண்றது நியாயம் இல்ல.”

“நான் என்ன அடுத்த மாசமே வந்து கேட்டேனா? உங்களுக்கு கல்யாணம் ஆகிப் பத்து மாசம் ஆகுது.”

“பத்து வருஷம் ஆனாலும், இந்தக் கேள்வியைக் கேக்குறது தப்பு தான்!” அவரைப் பார்வையாலேயே எரித்தாள் இதயாம்ரிதா.

“எனக்கு இருக்குறது ஒத்தப் பையன். அவனுக்குக் குழந்தை வேணும்னு நான் நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு அம்ரி?” அவர் ஆதங்கமாகக் கேட்க,

“தப்பே இல்ல ஆண்ட்டி. நான் என்ன அவன் கூட வாழ மாட்டேன்னா சொன்னேன். எங்களுக்கு டைம் வேணும்…”

“அப்போ நீ அவன் கூட இன்னும் வாழவே இல்லை?” அனுபமாவிற்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“வாட் நான்சன்ஸ், நான் இப்போ அவன்கூட தான வாழ்ந்துட்டு இருக்கேன்?” எரிச்சலாய் மொழிந்தவளை அறையத் தோன்றியது அவருக்கு.

“நான் அதைக் கேட்கல!” என்றதும் அவளுக்கும் புரிந்தது.

“ஆண்ட்டி… யாரா இருந்தாலும் எங்க பெர்சனல் ஸ்பேஸ்ல நுழையிறதுல எனக்கு விருப்பம் இல்ல. எங்களுக்கு எப்பத் தோணுதோ, அப்போ பேபிக்கான பிளான் பண்ணிக்கிறோம்…” என்று வெடுக்கெனச் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டாள்.

அன்று, நிலோபர் மற்றும் ஷ்யாமின் திருமண வரவேற்பு இருந்தது.

விஷால் ஒரு முக்கியமான மீட்டிங்கில் மாட்டிக் கொள்ள, விசேஷத்திற்கு அழகாய் தயாராகி இருந்தவள், காரிலேயே வெகு நேரம் காத்திருந்தாள்.

விஷாலும் வேலையை முடித்து விட்டுக் காரில் ஏறியபடி, “நீ பர்ஸ்ட் போயிருக்கலாம்ல…” என்றிட,

“கபிளா போக வேணாமா?” என்றாள் குறுநகையுடன்.

வலுக்கட்டாயமாகப் புன்னகைத்து வைத்தவனுக்கு, அவள் காட்டும் உரிமையெல்லாம் வெறும் கண் துடைப்பாகவே தெரிந்தது. அனுபமாவிடம் அவள் எதிர்த்துப் பேசியது அவன் காதிற்கும் எட்டி இருந்தது. அதை அவளிடம் கேட்கவும் இயலவில்லை.

அன்றுத் திருமண வரவேற்பில், யாமினியும் நிலோபரும் அவளைப் பிடித்துக் கொண்டனர்.

“மேரேஜ் லைஃப் எல்லாம் எப்படிப் போகுது அம்ரி?” யாமினி வினவ,

“ஓ! நல்லாப்போகுதே!” என்றாள் சிறு புன்னகையுடன்.

“உண்மையாவா?” நிலோபர் அவளைக் குறுகுறுவெனப் பார்த்தபடி கேட்க, “இதுல பொய் சொல்ல என்ன இருக்கு?” எனப் புருவம் சுருக்கினாள் இதயாம்ரிதா.

“அப்புறம் ஏன்டி ரெண்டு பேரும் பிஸிக்கல் ரிலேசன்ஷிப் இல்லாம இருக்கீங்க?” என யாமினி காட்டத்துடன் கேட்டதும், “இதை உனக்கு யார் சொன்னது?” எனக் கேட்டாள் அழுத்தத்துடன்.

“அனுபமா ஆண்ட்டி தான் சொல்லி வருத்தப்பட்டாங்க. நீங்க இன்னும் லைஃப் ஸ்டார்ட் பண்ணாம இருக்குறது விஷாலுக்கும் கஷ்டம் தான?” யாமினியின் கூற்றில்,

“எனக்குப் புரியல… நாங்க ஆல்ரெடி லைஃப் ஸ்டார்ட் பண்ணிட்டோம். வீ லைக் ஈச் அதர், வீ லிவ் டுகெதர், ஒருத்தரை ஒருத்தர் கேர் பண்ணிக்கிறோம், அவனுக்காக, அவனுக்குன்னு நான் எப்பவும் இருப்பேன்… நீங்க சொல்லற பிஸிக்கல் ரிலேசன்ஷிப் மட்டும் தான் மேரேஜ் லைஃபை பில்ட் பண்ணும்னு இல்ல…” என எரிச்சலானாள்.

“அதுவும் மேரேஜ் லைஃப்ல ஒரு பார்ட் தானடி? இப்ப நானும் ஷ்யாமும் மேரேஜ் பண்ணதும், அவனைத் தள்ளி வச்சா அவனுக்கும் பீலிங்ஸ் இருக்கும்தான?” என்று நிலோபர் வினவ,

“அப்போ என் பீலிங்ஸ் பத்தி யாருக்கும் கவலை இல்லை?” என இறுக்கத்துடன் கேட்டாள் இதயாம்ரிதா.

“உன் பீலிங்ஸ்க்கு மதிப்புக் குடுத்து தான, அவன் உன்னை ஃபோர்ஸ் பண்ணாம இருக்கான்…” யாமினி பொங்கியதும், எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

புகுந்த வீட்டிற்குச் செல்ல விருப்பமற்றுத் தனது வீட்டிற்குச் சென்றவளைப் புன்னகை முகத்துடன் வரவேற்றார் உமா.

“என்ன அம்ரி, சொல்லாம கொள்ளாம வந்துருக்க… ஷ்யாம் நிலோ பங்க்ஷன் நல்லபடியா முடிஞ்சுதா? ஏன் இப்படி இளைச்சுப் போயிருக்க. ஒழுங்கா சாப்புடுற தான?” என்றபடி அவளுக்காகப் பழச்சாறு தயாரிக்கத் தொடங்கிய தாயின் அன்பில் மெல்ல மட்டுப்பட்டது அவளது கோபம்.

“நீங்க எப்படி இருக்கீங்க மாம்?” சோர்ந்த நகை இதழ்களில் மின்னக் கேட்டாள்.

“எனக்கு என்ன? இருக்கேன்…” என்றவர் அவளை உபசரித்திட, “நான் அப்பாவைப் பார்த்துட்டு வரேன்” என்று தந்தையின் அறைக்குச் சென்றாள்.

“ஹாய் டாடி…” என உற்சாகமாக வந்த பெண்ணை, நிமிர்ந்து ஏறிட்டவரின் முகத்தில் துளியளவும் புன்னகை இல்லை.

“ஏன் ஃபேஸ் டல்லா இருக்கு டாடி… டேப்லட் எல்லாம் கரெக்டா எடுத்துக்குறீங்க தான?” அவள் அக்கறையாய் வினவ,

“உன்னை வச்சுக்கிட்டு எக்ஸ்ட்ரா டேப்லட் போட்டுத் தானம்மா ஆகணும்…” என்றார் எரிச்சல் கலந்த நகையுடன்.

அதில் அவளது முகம் செத்தே விட்டது.

“டாடி?”

“நீ இன்னும் அந்த சத்யாவை மறக்கலைல? நீ மாறுவன்னு நம்பி விஷாலைக் கல்யாணம் பண்ணி வச்சதுக்கு, அவனை யூஸ் பண்ணிட்டு சத்யாவோட நினைப்புல சுத்திட்டு இருக்கியா? அவன் கூட வாழுறதுக்குத் தான உன்னைக் கல்யாணம் பண்ணி வச்சேன்…” எனக் காட்டத்துடன் கேட்டுவிட, அவளுக்குக் கண்கள் கலங்கி விட்டது. கூடவே அதீத கோபமும்.

“ஜஸ்ட் ஸ்டாப் திஸ் டாடி!” அவள் கத்தியதில் உமாவும் பதறிக்கொண்டு வந்தார்.

“என்னை என்ன உங்களை மாதிரி நினைச்சீங்களா? பிஸிக்கல் ரிலேசன்ஷிப் உங்களுக்கு உடல்ரீதியான ப்ளஷர். எனக்கு அப்படி இல்ல… அவனோட ரிலேசன்ஷிப்பை நான் மதிக்கிறேன். எங்களுக்குத் தெரியும், எப்போ என்ன புடுங்கனும்னு! அண்ட் பெர்சனல் லைஃப்ல என் அம்மாவுக்கு லாயலா இருக்கத் தெரியாத நீங்க, என் பெர்சனல் லைஃப்ல லாயலா இருக்குறதைப் பத்தி லெக்சர் எடுக்கத் தேவையில்லை. அதுக்கு உங்களுக்குத் தகுதியும் இல்ல…” என்று கர்ஜித்ததில் ராம்குமார் அரண்டு விட்டார்.

“அப்ப அந்தச் சத்யாவுக்கு மட்டும் தகுதி இருக்கோ?” கேட்கும்போதே நெஞ்சைப் பிடித்தார்.

“என்னங்க…” என உமா சரிந்தவரைப் பிடித்துக் கொள்ள, “நீ நீ… சத்..சத்யா” எனச் சொல்லும்போதே அவர் உயிர் நொடியில் பிரிந்து விட்டது.

“ஐயோ என்னங்க… அம்ரி ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணு!” எனப் பதறிட, கண் முன்னே கண்ணிமைக்கும் நொடியில் உயிரிழந்து போன தந்தையை, ஆடாமல் அசையாமல் அதிர்ந்து பார்த்திருந்தாள் இதயாம்ரிதா.

அதன்பிறகு என்ன நடந்தது, தந்தையை எப்போது அடக்கம் செய்தார்கள் என்பது கூட அவளுக்குப் புரிபடவில்லை.

அழுத்தத்தின் உச்ச நிலையில் இருந்தவளை, மிதுனா தான் நிகழ்விற்குக் கொண்டு வர முயன்று கொண்டே இருந்தாள்.

வீட்டு வேலைக்காரர்களின் தயவில், இதயாம்ரிதா தவறாகப் பேசியதில் மனமுடைந்து முதலாளி இறந்து விட்டார் என்ற விஷயம் தீயாகப் பரவ, விஷாலின் தந்தை குமுறி அழுதார்.

“உனக்காகன்னு பார்த்துப் பார்த்து எல்லாம் செஞ்சவரைப் பேசியே கொன்னுட்டியேமா…” என்றதில் அவள் கண்ணில் துளிக் கண்ணீர்.

மிதுனாவிற்கு நடப்பது எதுவும் புரியவில்லை. அவள் ஒரு முறை ராம்குமாரிடம், “அக்கா அந்த சத்யா ஞாபகத்துலயே இருக்கா பெரியப்பா… இன்னும் ஒரு தடவை அவளுக்காக நீங்க ட்ரை பண்ணலாமே” என்றதில் ராம்குமார் அவளைத் திட்டி விட்டார்.

“என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நீ சொல்லத் தேவை இல்ல. ஓசி சோறு சாப்பிட வந்தா, அதை மட்டும் முடிச்சுட்டு ஓரமா இரு…” என்று விட்டு மனையாளை முறைத்ததில் அவள் திகைத்து விட்டாள்.

நிவோரா நிறுவனத்திற்காக, எதிரிகளின் கையால் தனது உயிரை விட்டவர் அவளது தந்தை. ஆனால், அவர் தன்னை அவரது மனைவியின் தங்கை பெண்ணாக மட்டுமே பார்த்ததில் மனம் வலித்தது.

அங்கிருக்கப் பிடிக்கவும் இல்லை. அடுத்த நாளே, உமாவின் வற்புறுத்தலை மீறி விடுதியில் சேர்ந்து விட்டாள். இதயாம்ரிதா எத்தனை அதட்டிக் கேட்டும் அவள் காரணம் சொல்லவில்லை.

“ரொம்பப் பண்ணாத மிது. என் கூட இருக்கலாம்ல? ஐ நீட் யூ!” என்ற தமக்கையிடம், “உனக்குத் தேவைப்படும் போதெல்லாம் சிட்டாய் பறந்து வருவேன்கா… டோன்ட் வொரி…” என்று சமாதானம் செய்தாள்.

இப்போதோ, இதயாம்ரிதாவின் மீது இத்தகைய பழி வருவதை அவள் விரும்பவில்லை.

அவளுக்கே தெரியும், இதயாவிற்குத் தந்தையின் மீது எத்தகைய அன்பு இருக்கிறதென்று…

யாமினியும் நிலோபரும் கூட, அவளைத் திட்டினர்.

“எப்பேர்ப்பட்ட மனுஷன், கொஞ்சம் பொறுமையாய் போயிருந்தா என்னடி உனக்கு? உன்னைக் கேள்வியே கேட்கக் கூடாது… உனக்கு நல்லது பண்ண நினைக்கிறதுக்கு எங்களை எடுத்தெறிஞ்சு பேசிட்டுப் போவ அப்படித்தான?” எனும்போதே உடைந்து விட்டாள்.

விஷால் தான், “அவள் என்ன வேணும்னேவா பேசிருப்பா… இனி இதைப் பத்தி அவள்கிட்டப் பேசாதீங்க யாரும்…” என்று பொதுவாய் அதட்டினான். அவர்களைத் தூண்டி விட்டதே அவன் தான் என்ற உண்மை புரியாமல், அவனது அக்கறையில் மனம் கனிந்தாள் இதயாம்ரிதா.

ஆனாலும், தாயைப் பார்க்கையில் எழும் குற்ற உணர்வைத் தடுக்க இயலவில்லை.

“சாரிமா…” கீழுதட்டைக் கடித்தபடி உமாவிடம் நின்றவளை, அவர் ஒரு கணம் புரியாமல் பார்த்து விட்டுப் பின் மெல்ல முகம் மாறினார்.

“எதுக்கு சாரி?”

“நான் அப்படிப் பேசுனதுனால தான…” அவள் பேச இயலாமல் தடுமாற,

“நீ பேசுனதுல தப்பு இல்லை தான? தேங்க்ஸ்… எனக்காக முதல் தடவை உன் அப்பாகிட்டப் பேசுனதுக்கு.” என்றவரின் குரலில் உள்ள ஏக்கம் புரிய, உண்மையான குற்றவுணர்வை இப்போது தான் உணர்ந்தாள்.

அது தந்தைக்காக அல்ல, தாய்க்காக!

“மாம்!” கேவியபடி அவரை அணைத்துக் கொண்டவள், “நான் உங்களுக்காக எப்பவும் இருந்தது இல்லையோ?” எனக் கேட்டாள் வருத்தமாக.

“அப்படியெல்லாம் இல்ல அம்ரி. நானும் கூட உனக்காக இருந்தது இல்ல. உன் அப்பா விட்டதும் இல்ல.” என்றவரிடம் சிறு விரக்தி.

அனுபமா, இதயாம்ரிதா பேசியதை ராம்குமாரிடம் கூறியதும், அவர் மீது தான் உமாவிற்குக் கோபமே வந்தது.

ஆனால், மகளுக்கு ஆதரவாகப் பேசிட இயலா நிலை!

யாமினி தான் விடவில்லை. “பார்த்தியா, இப்பக் கூட விஷால் உனக்கு தான் சப்போர்ட் பண்றான். உன்னை லவ் பண்ண பாவத்துக்கு இன்னும் அவனை எவ்ளோ தான் கஷ்டப்படுத்துவ?” என்றதும் இதயாம்ரிதா அவளைக் கூர்மையாய் பார்த்தாள்.

அதில் திணறிய யாமினி, “அது வந்து… அவன் உன்னைப் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான். உனக்காக அவன் நிறைய சாக்ரிஃபைஸ் பண்ணிருக்கான். நீ அவனுக்காக கன்சிடர் பண்ண மாட்டியா…” எனச் சமாளித்து விட்டுச் செல்ல அவளிடம் சிறு யோசனை.

மற்றவர்களுக்காக இல்லையென்றாலும், விஷாலுக்காக இந்த உறவை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென உறுதி எடுத்துக் கொண்டாள்.

தந்தை இறந்த துக்கத்தை மெல்லக் கடந்து வந்தவள், ஆழ்மனத்தில் புதைந்திருந்த சத்யாவின் நினைவையும் தூர விரட்டினாள்.

ஒரு முறை விஷால், ‘தேனிலவுக்கு ஸ்விஸ் போகலாமா’ எனக் கேட்டது நினைவு வந்து, இம்முறை அவளே ஸ்விஸ் செல்வதற்காக ஏற்பாடுகளை விஷாலுக்குத் தெரியாமல் செய்தாள்.

டிக்கட்டும், விசாவும் கையில் கிடைத்ததும் விஷாலுக்கு அழைத்தாள்.

அழைப்பை ஏற்றவன், “ம்ம்” என்க, “எங்கடா இருக்க?” எனக் கேட்டாள் உற்சாகமாக.

“ஆபிஸ்ல…” என்றிட, “ரைட்டு, சீக்கிரம் வீட்டுக்கு வா… உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.” எனச் சொல்லி விட்டு வைக்க, அவனிடம் கடுப்புத் தான் எழுந்தது.

‘என்ன பெரிய சர்ப்ரைஸ்… ஒரு இத்துப்போன கிப்ட் வாங்கி வச்சுட்டு உனக்காக வாங்குனேன்னு உருட்டுவா…’ என்றவனுக்கு அவளுடன் இன்றளவும் இணைய விடாத சத்யாவின் மீது தான் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

‘அந்தப் பரதேசியால என் வாழ்க்கையும் சேர்ந்து பாழாகுது.’ என்ற எண்ணத்தில் தலைவலியே வந்து விட, அப்போது தான் அவனிடம் அலுவல் சம்பந்தமாகப் பேச வந்தாள் சுனைனா என்னும் ஸ்வேதா.

அலுவலகத்தில் இணைந்தது முதல், அவனை ஒரு தலையாகக் காதலிக்கிறாள்.

அவனுக்குத் திருமணமானதும் களையிழந்து சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு, விஷாலுக்கும், இதயாவிற்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் தெரிய, உள்ளம் குதூகலித்தது.

விஷால் அழுத்தம் தாளாமல் மதுவை உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான்.

“என்ன சார், ஆபிஸ்ல இருந்துக்கிட்டு…” என ஸ்வேதா தயங்க,

“வேற என்ன செய்யச் சொல்ற? ஏன்டா அவளைக் காதலிச்சோம்னு இருக்கு. லைஃப்ல ஒரு ஹேப்பினஸும் இல்ல. எப்பப் பார்த்தாலும், கேரிங் மட்டுமே பண்ணிட்டு இருந்தால் போதுமா? லவ் டயலாக்ஸ் எல்லாம் ஒரு அளவுக்கு தான். பிஸிக்கல் ப்ளஷர் அதை விட இம்பார்ட்டண்ட்னு அவளுக்குப் புரியவே புரியாது…” என்று அரை போதையில் உளறினான்.

தன்னிடம் முதன்முறையாக, மனத்தைத் திறந்து பேசியவனை விழி விரித்துப் பார்த்தவள், கண்ணாடி ஜன்னலின் வழியே பார்வையைப் பதிக்க, அங்கு இதயாம்ரிதாவின் கார் வந்தது.

சடுதியில் ஒரு திட்டம் உருவானது அவளுள். ‘என் மாமாவை ஜெயிலுக்கு அனுப்பிட்டு, நீ நல்லா வாழ்ந்துடுவியா?’ என்ற வஞ்சத்தின் தீர்வாய் அன்றைய நாளைச் செதுக்கிக் கொண்டாள் ஸ்வேதா.

தானாய் சத்யாவைக் காவலர்கள் பிடித்துச் சென்ற நாள் நினைவிலாடியது.

அன்று வீட்டினர் பயந்திருக்க, ஸ்வேதாவும் அழுது தீர்த்து விட்டாள்.

அப்போதே நிவோராவில் வேலைக்குச் சேர்ந்து விட்டவளுக்கு, விஷாலின் மீது ஒரு க்ரஷ் இருந்தது. அதன் வெளிப்பாடாய் அவன் மீது சிறு நம்பிக்கையும். அவனை நம்பி, இதற்குக் காரணகர்த்தாவே அவன் தானெனத் தெரியாமல், விஷாலிடம் சென்றாள்.

“சார், என் மாமா எந்தத் தப்பும் பண்ணிருக்காது சார். எப்படியாச்சும் அவரை வெளில கொண்டு வந்துடுங்க…” எனும்போது தான் விஷாலுக்கு அவள் சத்யாவின் அத்தை பெண் என்றே தெரிந்தது.

விஷமப் புன்னகை வீசியவன், “நான் என்ன செய்ய முடியும் ஸ்வேதா… நிவோராவோட முதலாளி இதயாம்ரிதா, அவளே பெர்சனலா அவன் மேல கம்ப்ளைண்ட் குடுத்து இருக்கா…” என்றதும் அதிர்ந்தாள்.

அவளுக்கு ஏற்கெனவே, சத்யா அந்தக் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தது ஒரு பெண்ணிற்காகத் தான் என்று தெரியும்.

ஸ்வேதாவும், விதுரனும் விசாரித்த வரையில் அந்தப் பெண் இதயாம்ரிதா என்பதும் தெரியும்.

ஆனால், பெரியவர்களிடம் மூச்சுக் காட்டவில்லை.

இப்போது ஸ்வேதாவோ, “ஆனா அந்தப் பொண்ணு தான மாமாட்ட ப்ரொபோஸ் பண்ணுனா?” என்றதில், “பெரிய இடத்துல அப்படி இப்படி தான் இருப்பாங்க. நம்ம தான வளைவு சுளிவுகளைத் தெரிஞ்சு போகணும். உன் மாமாவும், அவள்கிட்டே வழிஞ்சுருக்கான். அவ வேலையைக் காட்டிட்டா…” என்றதில் அவளுக்குப் பயம் வந்து விட்டது.

“சார், ஏதாச்சும் செஞ்சு என் மாமாவைக் காப்பாத்துங்க… ப்ளீஸ்! அவர் இல்லாம வீடே சுடுகாடு மாதிரி ஆகிடுச்சு.” எனக் கெஞ்சினாள்.

“நான் ஒன்னும் செய்ய முடியாதே ஸ்வேதா?” விஷால் கை விரித்து விட, “எவ்ளோ காசு வேணும்னாலும் நான் ஏற்பாடு பண்றேன் சார். ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!” என அவன் காலில் விழுந்துவிட, “ஹே நீ ஒரு திறமையான ஆர்ட்டிஸ்ட், இப்படியெல்லாம் பண்ணலாமா? எந்திரி!” என்று அவள் கையைப் பிடித்துத் தூக்கி விட்டான்.

சிறிது நேரம் யோசிப்பது போலப் பாவனை செய்தவன், “சரி… நீ இதுல டைரக்டா இன்வால்வ் ஆனா அம்ரி உன்னைச் சும்மா விட மாட்டா. நீ ஒரு பேப்பர்ல சைன் பண்ணிக் குடு. நான் அதை லாயர்கிட்டக் குடுத்து ஜாமீன்க்கு ஏற்பாடு பண்றேன்.” என்றதும், “சரிங்க சார்… நான் பண்றேன்.” என்று அவனைக் கண்மூடித்தனமாக நம்பிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள்.

அடுத்த ஒரு வாரமும், அவனை நச்சரித்ததில் விஷால் சோர்ந்த முகத்துடன், “சாரி ஸ்வேதா… அவனை ஜாமின்ல எடுக்க முடியல. என்ன தான் என்கிட்டப் பணம் இருந்தாலும், அவளை மாதிரி பவர் இல்ல… கவலைப்படாத… என்னால முடிஞ்சதைச் செய்யறேன்…” என்று அவளைத் தேற்றி விட்டுச் செல்ல உடைந்து அழுதாள் ஸ்வேதா.

அப்போதே இதயாம்ரிதாவின் மீது ஆத்திரம் பன்மடங்காகப் பெருகியது. அந்த நிறுவனத்தின் தயவே வேண்டாம் என, விதுரன் அவளை வேலையை விடச் சொல்ல, அவள் கேட்கவில்லை. நேரம் வரும்போது அந்த இதயாவிற்குப் பாடம் கற்பித்துக் கொடுக்க வேண்டுமென்ற பேராசையில், அங்கேயே வேலையைத் தொடர்ந்தாள்.

அதுவே விதுரனுக்கும் அவள் மீது மனஸ்தாபமாக உருவெடுத்தது.

தற்போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள எத்தனித்தவள், “தலைவலிக்குதா சார், நான் தைலம் தேய்ச்சு விடவா…” எனத் தானாக முன்வந்து விஷாலின் தலையைப் பிடிக்க, அவனும் அவளை இடையுடன் அணைத்துக் கொண்டதில் அவள் மனத்தில் இடி மழை.

“ச… சார்…”

“ஐ லைக் யூ சோ மச் ஸ்வேதா… செம்ம பிரஷர்ல இருக்கேன். நீ கூட இருந்தா கொஞ்சம் பெட்டரா இருக்கு.” என்றதும், அவளும் அவன் தலையைக் கோதி விட்டாள்.

ஏற்கெனவே அவளுக்கு அவனைப் பிடிக்கும். அவனது திருமண வாழ்வும் சரி இல்லை. அதோடு தனது கடினமான நேரத்தில் தனக்காக எவ்வளவோ செய்திருக்கிறான்… இதுவே அவன் அவளிடம் உரிமை எடுத்ததையும், காதலெனத் தப்புக் கணக்குப் போட வைத்தது.

நேரம் செல்லச் செல்ல அவனது அணைப்பு இறுகிட, அவள் முகம் முழுதும் முத்தமிடத் தொடங்கினான்.

இதயாம்ரிதாவைப் பழி வாங்கும் எண்ணமெல்லாம் மறந்து போக, அவனது நெருக்கத்தில் தன்னையும் மறந்து போனாள்.

அவனது அலுவல் அறையை ஒட்டியே இருந்த ஓய்வெடுக்கும் அறைக்குள், அவளை முத்தமிட்டபடியே இழுத்துச் சென்றவன், கட்டிலில் அவளுடன் படர, அதில் வெடுக்கென அவனைத் தட்டி விட்டாள்.

“சார் வேணாம்…” ஸ்வேதா பலவீனமாக மறுக்க,

“ப்ளீஸ் ஸ்வேதா… ஐ நீட் யூ பேட்லி! உனக்கும் என்னைப் பிடிக்கும் தான?” என அவள் காதோரம் உருகி, அவளையும் உருக வைத்தான்.

இருவரும் மோனநிலையில் ஒருவரை ஒருவர் மறந்த நேரம், “மச்சி…” என அழைத்தபடி அவனது அலுவல் அறையை எட்டிப் பார்த்தாள் இதயாம்ரிதா.

அங்கு அவன் இல்லை என்றதும், லேசாய் திறந்திருந்த ஓய்வு அறையைச் சற்று அதிகமாய் திறந்தவள் அதிர்ந்தே போனாள்.

புது காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 143

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
155
+1
10
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. Cha yevalo periya thorogam ambutukum Karanam Avan than ethaya pavam

  2. எல்லோருக்கும் ஓரு காரணம் சூப்பர்

  3. Vishal tha ellaraium ymathirukan.. waiting next epi sis…