Loading

ஒரு வருடத்திற்கு பிறகு…

பிரியா தன் வேலையில் மூழ்கி இருக்க வளவன் அவளருகே வந்து அமர்ந்தார்.

“என்னமா பார்க்குற?”

“ஆஃபிஸ் வொர்க் தான்பா”

“முதல்ல எல்லாம் வேலை பார்த்து ரொம்ப டயர்டா வருவ.. உன்னை வேலைக்கு அனுப்பிருக்க கூடாதோனு நினைப்பேன். இப்ப வீட்டுல உட்கார்ந்து கூட வேலை தான் பார்க்குறனு உன் அம்மா திட்டுறா”

பிரியா இதைக்கேட்டு புன்னகைத்தாள்.

“எனக்கு வேலை பிடிச்சுருக்குபா”

“இதையே பார்த்துட்டு இருந்தா வீட்டு வேலைய எப்ப கத்துக்கிட்டு கல்யாணம் பண்ணலாம்னு இருக்க?” என்று கேட்டுக் கொண்டே கயல் வந்து அமர்ந்தார்.

“கல்யாணம் பண்ணாலும் வீட்டு வேலைக்கு ஆள் வைக்க சொல்லிட்டு நான் ஆஃபிஸ் வேலைய தான் பார்ப்பேன்மா” என்று சிரித்தாள் பிரியா.

“இப்படியே சொல்லிட்டு இரு.. உன் புருஷன் உன்னை குனிய வச்சு கொட்டி சமைக்க சொல்ல போறான்.. அப்ப நீ என் கிட்ட தான் அழுதுட்டு வந்து நிப்ப”

“அப்படி கொட்டுறவனா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா கண்டிப்பா வந்து நிக்க தான் செய்வேன். எனக்கும் சேர்த்து சமைச்சு போடுறவனா பாருங்க.. வர மாட்டேன்ல?”

பிரியா விளையாட்டாக பேசிக் கொண்டிருக்க “அப்போ மாப்பிள்ளை பார்த்துடலாம்ங்குற?” என்று விசயத்துக்கு தாவினார் கயல்.

பிரியா கணினியை விட்டு பார்வையை திருப்பினாள்.

“என்ன?” என்று இருவரையும் சந்தேகமாக பார்த்தாள்.

“உனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கோம் பிரியா..” என்று கயல் நேரடியாக சொல்ல பிரியாவின் மனம் சுனங்கியது.

இப்போது அவசியம் திருமணம் வேண்டுமா?

“மாப்பிள்ளை உனக்கு பிடிச்ச மாதிரி தான்”

“யாரு அது?” என்று சாதாரணமாக கேட்டாள்.

கயல் கணவனை பார்க்க “அமரன்பன் தான்” என்று உடைத்தார் அவர்.

பிரியா அதிர்ச்சியில் நிமிர்ந்து அமர்ந்தாள்.

“அமரா? அ.. அவரா?”

அவளது குரலில் தெரிந்த அதிர்ச்சி பெற்றவர்களுக்கு புரியவில்லை.

“ஆமா.. அவர தான் உனக்கு கட்டி வச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சு.. ஏன் உனக்கு வேற எதாவது நினைப்பிருக்கா?”

“என் நினைப்ப விடுங்க.. இதுக்கு அமர் ஓகே சொன்னாரா?”

“அவர் கிட்ட கேட்டப்போ பிரியா கிட்ட கேளுங்க.. இல்லனா நானே பேசுறேன்னு சொன்னாரு.. அவரு பேசுறதுக்கு முன்னாடி விசயத்த சொல்லி வைப்போம்னு சொல்லுறோம்”

பிரியா பேச்சற்று அமர்ந்து விட்டாள். திடீரென இது என்ன புதுத்திருப்பம்? அமர் அலுவலகத்தை பிரியாவிடம் கொடுத்துச் சென்ற பிறகு எப்போதாவது வந்து பார்ப்பான். பல நேரம் பிரியா அவனைத்தேடிச் சென்று பேச வேண்டியிருக்கும்.

எவ்வளவோ வேலைகள் குவிந்து கிடந்தாலும் அவளிடம் பொறுமையாகவே பேசுவான். புதுப்புது விசயங்களை சொல்லிக் கொடுப்பான். இரண்டு முறை அவனோடு வெளி மாநிலங்கள் சென்று வந்தாள். அவ்வளவு தான். அவ்வளவே தான்.

இதில் திருமண பேச்சு எப்படி திடீரென வந்தது?

“முதல்ல இந்த ஐடியா எப்படி வந்துச்சு உங்களுக்கு?”

வளவன் கயலை பார்த்தார்.

“நான் தான் சொன்னேன். அந்த பையனுக்கு உன் மேல பாசம் அதிகம்.. அவர் பார்க்குற பார்வையிலயே தெரிஞ்சுடுச்சு..”

“ம்மா.. இது டூ மச்சா இல்ல?”

“நீ தா டூ மக்கா இருக்க.. ஒருத்தருக்கு நம்ம மேல எவ்வளவு பாசம் இருக்குங்குறத பார்க்குற பார்வையிலயும் பழகுற விதத்துலயும் கண்டு பிடிச்சுடலாம். நான் அடிச்சு சொல்லுறேன்.. அமருக்கு உன் மேல அன்பு இருக்கு.. நீ பேசிப்பாரு.. உனக்கே புரியும்”

பிரியா யோசனையில் ஆழ “நீங்க பேசிட்டு சீக்கிரமா நல்ல முடிவா சொல்லுங்க” என்றதோடு இருவரும் அறையை விட்டுச் சென்று விட்டனர்.

பிரியா வேலையை போட்டு விட்டு தாய் சொல்லிச் சென்றதை யோசித்துக் கொண்டே அமர்ந்து விட்டாள்.

அமர் நல்லவன் தான். அழகானவன். அன்பானவன். அவளிடம் நன்றாக பழகுவான். நண்பன் எனும் வகையில் அவனை அவளுக்கும் பிடிக்கும். பரமேஸ்வரியின் மகன் என்பது கூடுதல் பலம்.

எல்லாம் ஒரு ஓரமிருக்க திருமணம் செய்து கொள்வது சரியாக வருமா? ஏனென்றால் அவளது பழைய காதலைப்பற்றித் தெரிந்தவன் அவன் ஒருவனே. அதைப்பற்றி அவன் வெளியே எங்கும் சொல்லவில்லை.

அவள் காதலை சொன்ன போதும் பிரிந்ததை சொன்ன போதும் அவளை தேற்றினான் அவ்வளவு தான். இப்போது என்ன முடிவெடுப்பது?

அவனிடமே பேசி விட முடிவு செய்தவள் கைபேசியை எடுத்து அழைத்து விட்டாள்.

“ஹலோ பிரியா?”

“அமர்.. நாளைக்கு உங்கள மீட் பண்ண முடியுமா?”

“நாளைக்கா? ஏன்?”

“பர்ஸ்னலா பேசனும்”

ஒரு நொடி அமைதிக்குப்பிறகு “ஈவ்னிங் ஃப்ரீ ஆகிட்டு சொல்லு.. நானே வந்து உன்னை ஆஃபிஸ்ல பிக் அப் பண்ணிக்கிறேன்” என்றான்.

அடுத்த நாள் வரும் வரை பிரியா பல விதமாக யோசித்தாள். அவனுக்கு உண்மையில் அவள் மீது விருப்பம் எதாவது இருக்கிறதா? இல்லை கயல் தெரியாமல் எதோ சொல்கிறாரா?

வேலை முடிந்ததும் அமரை அழைத்துச் சொல்ல, பத்து நிமிடங்களில் வந்து சேர்ந்தான்.

காரில் ஏறியதும் அமர் அவளை திரும்பிப் பார்த்தான்.

“பசிக்குதா? எங்கயாவது சாப்பிட போகலாமா?” என்று கேட்க தலையாட்டினாள்.

இருவரும் நேராக ஒரு இடத்திற்குச் சென்று உணவை வாங்கிக் கொண்டனர். அமர் மீண்டும் காரை எடுக்க பிரியா கேள்வியாக பார்த்தாள்.

“சாப்பிடு.. சாப்பிட்டுட்டே பேசு” என்றவன் வேறு எதுவும் சொல்லவில்லை.

அவளும் பசியில் சாப்பிட ஆரம்பித்தாள். பிறகு அவனை திரும்பிப் பார்த்தவள் “என் அம்மா அப்பா உங்க கிட்ட பேசுனாங்களா அமர்?” என்று கேட்டாள்.

“ஆமா..”

“என்ன சொன்னாங்க?”

“பிரியாக்கு கல்யாணம் பண்ணலாம்னு யோசிச்சுருக்கோம்னு சொன்னாங்க”

பிரியா ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.

“அப்படியா சொன்னாங்க?”

பதிலாக தலையாட்டினான்.

“அப்புறம்?”

“அப்புறம் நான் சொன்னேன்.. ‌எனக்கும் அதான் ஆசை.. பிரியாவ கல்யாணம் பண்ணிக்கட்டுமானு கேட்டேன்”

இதைக்கேட்டு அதிர்ந்த பிரியா திறந்த வாய் மூட மறந்தாள். அவளிடமிருந்து பதில் இல்லாததால் திரும்பிப் பார்த்தவன் புன்னகையுடன் திரும்பிக் கொண்டான்.

“நீங்க கேட்டீங்களா? அவங்க கேட்டதால சொன்னாங்க?”

“நான் தான் அப்படி கேட்டு உன் மனச தெரிஞ்சுக்க சொன்னேன்.”

“ஓ…” என்றவள் நேராக அமர்ந்து சாலையை பார்த்தாள்.

சில நொடிகளில் வாயில் இருந்த உணவை மென்று விழுங்கி விட்டு திரும்பிப் பார்த்தாள்.

“நீங்க கேட்டப்போ அவங்க என்ன சொன்னாங்க?”

“உன் அம்மா.. இத எதிர்பார்த்து தான் உன் கிட்ட பேச வந்தேன்னு சொன்னாங்க. உன் அப்பாக்கு கூட ஓகே போல”

“அப்புறம்?”

“என் வீட்டுல பேசுறதுக்கு பெரிய ஆளுங்க யாரும் கிடையாது. எனக்குனு சில சொந்தங்கள் இருந்தாலும் அவங்கள நம்பி என் வாழ்க்கைய விடவும் என்னால முடியாது. அதான் நானே கேட்டுட்டேன். நீங்களே பெரியவங்களா இருந்து என்ன செய்யனுமோ செய்ங்கனு சொன்னேன்.”

பிரியா இமைக் கொட்டி வேடிக்கை பார்த்தாள்.

“அப்புறம் உன் கிட்டயும் கேட்டுட்டு சொல்லுறதா சொன்னாங்க. நான் என் விசயத்த சொல்லாம கேளுங்க. நானே என் விருப்பத்த சொல்லிக்கிறேன்னு சொன்னேன்”

அதோடு அமர் பேச்சை நிறுத்த பிரியா யோசனையில் மூழ்கி விட்டாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு “உங்களுக்கு என்னை பிடிக்குமா அமர்?” என்று நேராக கேட்டாள்.

கேட்கும் போதே மனம் படபடத்தது. உதட்டைக்கடித்துக் கொண்டே அவனை பார்த்தாள்.

“இது என்ன கேள்வி? பிடிக்காம எப்படி கல்யாணம் பேசுவேன்?”

“இல்ல.. என் பழைய லவ் பத்தி உங்களுக்கு தெரிஞ்சும்…”

“நோ.. பழைய விசயம் முடிஞ்சு போனது.. அண்ட் எனக்கு உன்னை இப்ப இருந்து பிடிக்கல.. பல வருசமா பிடிக்கும்”

பிரியா புரியாமல் பார்க்க காரை அவனது வீட்டில் நிறுத்தினான். அப்போது தான் பிரியா திரும்பிப் பார்த்தாள். பேசிக் கொண்டே வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான்.

“உள்ள வா.. உனக்கு காட்டுறேன்” என்றவன் காரை விட்டு இறங்கி விட பிரியா கையிலிருந்த உணவை வைத்து விட்டு கையை துடைத்தாள்.

அவன் கதவை திறந்து விட கீழே இறங்கியவள், வீட்டை நிமிர்ந்து பார்த்து விட்டு அவனையும் பார்த்தாள்.

“வா” என்று புன்னகைத்தவன் அவளோடு உள்ளே சென்றான்.

அங்கே ஒரே ஒரு பெண்மணி மட்டும் இருந்தார். அவரும் அமரை புரியாமல் பார்த்தார்.

“நீங்க வேலைய பாருங்க” என்று விட்டு அமர் பிரியாவோடு அறைக்கு சென்றான்.

கதவை திறந்து அவளுக்கு வழி காட்ட, தயக்கத்தோடு உள்ளே சென்றாள். அறை சுத்தமாக இருந்தது. மெத்தை, மேசை, அது நிறைய ஃபைல்கள் என்று இருக்க அவளது கண்கள் அறையை வட்டமிட்டது.

கடைசியாக மெத்தையின் அருகே இருந்த படத்தில் பார்வை நிலைத்தது. உடனே முன்னால் சென்றவள் எடுத்துப் பார்த்தாள். அது அவளுடைய படம். பரதநாட்டியம் ஆடும் போது எடுத்த படம். அரங்கேற்றத்தின் போது அணிந்திருந்தது அல்லவா?

அவள் பின்னால் வந்து நின்ற அமர், “இப்ப தெரியுதா எப்ப இருந்து உன்னை எனக்கு பிடிக்கும்னு?” என்று கேட்டான்.

பிரியா பேச்சற்று அந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அமர் அவள் தோளைப்பற்றி தன் பக்கம் திருப்பினான்.

“எதாவது சொல்லலாமே?”

“எப்படி அமர்? எனக்கு தெரியலயே..”

“நான் காட்டிக்கிட்டா தான தெரியும்..? எல்லாம் ஒன் சைட் தான்” என்று புன்னகைக்க, பிரியா அவனை இமைக்க மறந்து பார்த்தாள்.

“என்னமா? சாக்கா இருக்கா?”

“ஆமா.. நீங்க.. அப்பவே என் கிட்ட சொல்லிருக்கலாமே?” என்று கேட்டவளுக்கு வருத்தம்.

சிவாவை அவள் பார்க்கும் முன்பிருந்தே அமர் அவளை காதலித்திருக்கிறான். இவன் வந்திருந்தால் சிவாவை அவள் சந்தித்திருக்க மாட்டாள். தேவையில்லாத வலியையும் சுமந்திருக்க மாட்டாளே.

நாதினி சிவாவை காதலித்த அதே நாட்களில் தான் அமரும் பிரியாவை காதலித்தான். அமரும் நாதினியும் தங்களது காதலை நேரம் வரும் வரை வெளிப்படையாக சொல்லவே இல்லை. அதனாலேயே என்னவோ அவர்களது காதலை நிறைவேற்றும் வேலையை விதி கையில் எடுத்துக் கொண்டது.

அல்லது அமரின் உதவியோடு விதி நிறைவேற்றிக் கொண்டது.

அமர் அவளது சோகத்தை பார்த்து விட்டு முகத்தை இரண்டு கைகளாலும் தாங்கினான்.

“நீ அப்போ மைனர் சுகி.. அப்ப நான் லவ் சொல்லிருந்தா என் அம்மா என்னை வீட்ட விட்டு துரத்திருப்பாங்க தெரியுமா?”

பிரியாவுக்கு சிரிப்பு வர அவனது உள்ளங்கைக்குள் கன்னத்தை பதித்தாள்.

“இருந்தாலும் நீங்க சொல்லிருக்கனும்..”

“அதான் இப்ப சொல்லிட்டேனே..”

“இல்ல.. முன்னாடியே சொல்லிருக்கனும்.. தேவையில்லாம என் மனச வேற ஒருத்தன் கிட்ட கொடுத்து…”

“ஸ்ஸ்.. சுகி.. அது பழைசுடா.. அத மறந்துடு”

“இல்ல.. நான் உங்க கிட்ட என் பழைய லவ் பத்தி சொன்னப்போ எப்படி தாங்குனீங்க? எனக்கே அத இப்ப நினைச்சா கஷ்டமா இருக்கு” என்றவளின் குரலில் எல்லையில்லாத சோகம்.

உடனே அவளை அணைத்துக் கொண்டவன், “அத பத்தி பேசக்கூட வேணாம்னு நினைக்கிறேன் சுகி” என்றான்.

அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் கையில் இருந்த படத்தை உற்றுப் பார்த்து விட்டு நிமிர்ந்து அமரின் முகத்தை பார்த்தாள்.

“அ.. அத்தைக்கு இது தெரியுமா?” என்று படத்தை காட்டினாள்.

அவள் அத்தை என்றதுமே அமரின் மனம் வானில் பறக்க ஆரம்பித்து விட்டது. முகம் முழுவதும் பரவிய சந்தோசத்தில் பளிச்சென புன்னகைத்து தலையாட்டினான்.

“அம்மாக்கு என்னை பத்தி கவலை.. லாஸ்ட் கொஞ்ச நாள்ல.. எனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம போறாங்கனு ரொம்ப வருத்தப்பட்டாங்க.. அது வரை எனக்குள்ள இருந்த லவ்வ அம்மா கிட்ட சொல்லிட்டேன்.”

பிரியா ஆர்வமாக கேட்டுக் கொண்டு அவன் கைகளுக்குள் நின்றாள்.

“இந்த ஃபோட்டோவ அது வரை அம்மா கிட்ட காட்டாம ஒளிச்சு வச்சுருந்தேன்.. இது அம்மாவோட ஆல்பத்துல இருந்து சுட்டது. அத காபி பண்ணி எனக்கு ஒன்னு வச்சுட்டு அம்மாவோடத அம்மா கிட்டயே வச்சுட்டேன். அவ்வளவு திருட்டுத்தனமா வச்சு பாதுகாத்த படம்..” என்றதும் பிரியாவுக்கு சிரிப்பு வந்தது.

அவளது மனதில் மூடிக்கிடந்த மலர் மெல்ல விரியவும் ஆரம்பித்தது.

“அம்மா கிட்ட காட்டி.. இந்த பொண்ண நான் லவ் பண்ணுறேன்மானு சொன்னப்போ அம்மா சாக் ஆனாங்க. அவங்க ஸ்டூடண்ட்ட நான் லவ் பண்ணா சாக் ஆக தான செய்வாங்க? ஆனா நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன். சுகி இப்ப காலேஜ்ல படிச்சுட்டு இருக்காமா.. நானும் பிஸ்னஸ பார்க்குறேன். அவ படிச்சு முடிக்கிற வரை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னேன்”

பிரியாவின் கைகள் உயர்ந்து அவனை அணைத்துக் கொண்டது. கண்களில் ஆர்வம் கடலாக பொங்கியது.

“படிச்சு முடிச்சு கல்யாண வயசு வந்ததும் அவ கல்யாணத்துக்கு ரெடியானதும் கல்யாணம் பண்ணி உங்க மருமகளா கூட்டிட்டு வர்ரேன்னு சொன்னேன்”

“அத்த என்ன சொன்னாங்க?”

“எதுவும் சொல்லல.. சந்தோசமா என் தலைய தடவிக் கொடுத்தாங்க”

“இப்படியா?” என்று கேட்டவள் கையை உயர்த்தி அவனது முடியை வருட, ஒரு நொடி ஆச்சரியப்பட்டவன் உடனே அவளது கையைப்பற்றி உள்ளங்கையில் முத்தமிட்டான்.

“இதே மாதிரி தான்..” என்று முணுமுணுத்தான்.

“தெரியும்.. நான் அரேங்கற்றம் முடிஞ்சு வந்தப்போ அத்த இதே மாதிரி தான் பண்ணாங்க” என்றவள் அவனை புன்னகையுடன் ரசித்தாள்.

“அம்மாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் சுகி.. நீ மருமகளா வர்ரங்குறதே அவங்களுக்கு சந்தோசம். உன்னை சும்மாவே பாராட்டுவாங்க. நான் லவ்வ சொன்னதும் ரொம்ப சந்தோசமா சம்மதிச்சுட்டாங்க..”

பிரியா மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“எனக்கும் அத்தைய ரொம்ப பிடிக்கும்”

“அப்ப நான்?” என்று அவன் சிரிப்போடு கேட்க, பிரியாவின் இதழ்களும் விரிந்தது. ஆனால் ஒன்றும் சொல்லாமல் அவனோடு ஒன்றிக் கொண்டாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்