
அத்தியாயம் – 27
புதிய ஆண்டின் முதல் மாதமான ஜனவரியின் தாள்கள், அமுதினியின் நாட்காட்டியில் மிக மெதுவாக, நகராமல் அடம் பிடித்தன. ஒவ்வொரு விடியலும் அவளுக்கு ஒரேவிதமான சவாலைத்தான் தந்தது.
காலையில் எழுவது, சமையல் செய்வது, கல்லூரிக்குச் செல்வது, அங்கே தன் உலகின் மையமாக இருக்கும் ஆரவைப் பார்ப்பது, அவரோடு ஆய்வறிக்கைகள் பற்றிப் பேசுவது, ஆனால் உள்ளுக்குள் எரிமலையாகப் பொங்கும் காதலை ஒரு சிறு புன்னகைக்குள் அடக்கிக்கொள்வது.
இன்னும் நான்கு மாதங்கள்! மே மாதம் அவள் பட்டம் பெறும் வரை பொறுமை அவசியம்!
அதுவரை இந்தக் காத்திருப்பு தொடர்ந்தே ஆக வேண்டும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, பொறுமை மெல்லிய நூலாக இழைத்துக்கொண்டிருந்தது.
அவனைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும், அவன் அருகாமையை உணரும் ஒவ்வொரு கணமும், அவனைத் தொட முடியாமல் தவிக்கும் தவிப்பு, அவளை உள்ளுக்குள் உருக்கியது.
அவள் கழுத்தில் இருந்த அந்த முடிவிலி சங்கிலி, அவளது ஒரே ஆறுதல். அதைத் தொடும்போதெல்லாம், கிறிஸ்துமஸ் இரவின் அந்த ரகசிய நிமிடங்களுக்குள் அவள் மீண்டும் ஒருமுறை சென்று வருவாள். அது அவளுக்கு நம்பிக்கையைத் தந்தாலும், அதே சமயம் அவனது அருகாமையின் ஏக்கத்தையும் பன்மடங்கு அதிகரித்தது.
*******
ஒரு வெள்ளிக்கிழமை மாலை, கல்லூரியின் வருடாந்திர விளையாட்டுப் போட்டி மைதானம் ஆரவாரத்தில் மூழ்கியிருந்தது. உளவியல் துறைக்கும் சமூகவியல் துறைக்கும் இடையேயான கைப்பந்து இறுதிப் போட்டி. அமுதினி, உளவியல் துறையின் நட்சத்திர வீராங்கனையாகக் களத்தில் இருந்தாள்.
ஆரவ், பார்வையாளர்கள் வரிசையில் மற்ற பேராசிரியர்களுடன் அமர்ந்திருந்தான். ஆனால், அவன் கண்கள் களத்தில் புயலெனச் சுழன்றுகொண்டிருந்த அமுதினியை மட்டுமே பின்தொடர்ந்தன. விளையாட்டு உடையில், தலைமுடியை உயரத் தூக்கிக் கட்டிய கொண்டையுடன், முகத்தில் வியர்வைத் துளிகள் பளபளக்க, அவள் ஆற்றலின் மொத்த உருவமாகத் தெரிந்தாள். அவன் இதயம் பெருமிதத்தில் துள்ளியது.
ஆட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. மூன்றாவது செட், மேட்ச் பாயிண்ட். பந்து உயரமாக அவள் பக்கம் வர, அமுதினி மின்னல் வேகத்தில் மேலே எழும்பி, தன் மொத்த சக்தியையும் திரட்டி அதை அடித்தாள்.
ஆனால், அவள் தரையிறங்கியபோது, ஒரு நொடி நிலைதடுமாற, அவளது கணுக்கால் பயங்கரமாகத் திரும்பியது. “ஆ!” என்ற வலியின் அலறலுடன் அவள் மைதானத்தில் சரிந்தாள்.
விசில் சத்தம் ஓங்கி ஒலிக்க, ஆட்டம் நின்றது. ஆரவாரமாக இருந்த மைதானம் ஒரு நொடியில் மயான அமைதிக்குத் தாவியது.
ஆரவின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. அவன் காதுகளில் அவள் அலறல் மட்டுமே எதிரொலித்தது. அவன் மூளை செயலிழந்தது; இதயம் மட்டுமே கட்டளையிட்டது.
அடுத்த நொடி, அவன் பார்வையாளர் வரிசையிலிருந்து பாய்ந்து, மைதானத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான். ‘ப்ரொஃபசர்’, ‘மென்டர்’ என்ற அத்தனை முகமூடிகளும் நொறுங்கி விழுந்தன.
இப்போது ஆரவ் என்பவன், தன் காதலி வலியால் துடிப்பதைப் பொறுக்க முடியாத ஒரு காதலன், அவ்வளவுதான்.
“அமுதினி!” அவன் குரல், பயத்தாலும் பதற்றத்தாலும் உடைந்து ஒலித்தது. அவள் அருகில் மண்டியிட்டு, அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான்.
அவள் வலியிலும், அவனை அங்கே கண்ட அதிர்ச்சியில் திகைத்தாள். “சார்…”
“உனக்கு எங்க வலிக்குது? கணுக்காலா? காட்டு அமுதினி” என்று அவன் அவளது கணுக்காலை மிக மென்மையாகப் பரிசோதித்தான். அது வீங்கத் தொடங்கியிருந்தது.
“நாம உடனே மருத்துவ அறைக்குப் போகணும்…” என்றவன்,
ஒரு நொடியும் யோசிக்காமல், அவன் அவளைத் தன் கைகளில் அள்ளினான். பூவை எடுப்பது போல, மிக இலகுவாக, அவளைத் தன் மார்போடு சேர்த்து, குழந்தையை தூக்குவது போல தூக்கிக்கொண்டான்.
“சார்… வேண்டாம்… எல்லாரும் பார்க்குறாங்க… ப்ளீஸ் கீழே இறக்கி விடுங்க…” என்று அமுதினி பதற்றத்தில் கிசுகிசுத்தாள்.
“பார்க்கட்டும் அமுதினி… எனக்குக் கவலையில்ல… இப்போ நீ மட்டும்தான் எனக்கு முக்கியம்…” என்றான் அவன் உறுதியான குரலில். அவன் பார்வை நேராக இருந்தது.
அதிர்ச்சி, ஆச்சரியம், குழப்பம் எனப் பல உணர்ச்சிகளுடன் நூற்றுக்கணக்கான கண்கள் அவர்களைப் பார்த்தன.
அவன் அவளைத் தூக்கிக்கொண்டு மைதானத்தைக் கடந்து நடந்தது, ஒரு சாதாரண செயல் அல்ல; அது ஒரு அறிவிப்பு. ‘இவள் என்னுடையவள்’ என்று அவன் உலகுக்குச் சொல்லாமல் சொன்னான்.
அவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள், கல்லூரி முழுவதிலும் தீயெனப் பரவின.
“ஆரவ் சார் அமுதினியைத் தூக்கிட்டுப் போறார்… அவர் முகத்தைப் பார்த்தியா? எவ்வளவு பதற்றம்…” என்று பலவிதமாக பேசப்பட்டன.
டாக்டர் சரண்யா மட்டும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் புரியாத புதிரை கண்டுக்கொண்டார்.
மருத்துவ அறையில், செவிலியர் அவளுக்கு முதலுதவி செய்து, “பெரிய காயமில்லை, லேசான சுளுக்குதான்… ஒரு வாரம் ஓய்வெடுத்தா சரியா போய்டும்..” என்று கூறிவிட்டுச் சென்றார்.
அறையில் இப்போது அவர்கள் இருவர் மட்டும்! ஆரவ் அவள் அருகில் அமர்ந்து, அவள் கையை இறுகப் பற்றிக்கொண்டான்.
“சார், நீங்க இப்படிப் பண்ணியிருக்கக் கூடாது. இப்போ பாருங்க… நம்ம ரகசியம்…”
“எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை அமுதினி… நீ வலியால துடிச்சப்போ, என் உலகம் ஒரு நொடி இருண்டு போச்சு… உன்னைத் தனியா விட எனக்கு மனசு வரல… நான் உன்னைக் காதலிக்கிறேன்… அதை இனியும் என்னால மறைச்சு வாழ முடியாது…”
“ஆனால், இனி என்ன ஆகும்? வதந்திகள், கிசுகிசுக்கள்… உங்க பேர் கெட்டுப்போகும்…” அவள் குரல் தழுதழுத்தது.
“போகட்டும். எது நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன். என் ஒரே கவலை நீதான்… நீ மட்டும் எனக்கிருந்தா போதும்…”
அவள் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. அது வலியில் வந்த கண்ணீர் அல்ல.
அவனுக்காக எதையும் சந்திக்கத் துணிந்த அவன் காதலைக் கண்ட ஆனந்தக் கண்ணீர்.
“என்னை இவ்வளவு லவ் பண்றீங்களா சார்?”
“நான் உன்னை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு காதலிக்கிறேன் அமுதினி… அந்த காதல் என் உயிருக்கும் மேல! நீ காயப்பட்டதைப் பார்த்ததும், என் இதயம் நொறுங்கிப்போச்சு… நம் ரகசியம் வெளிப்பட்டதற்காக நான் வருத்தப்படல… நீதான் என் உலகம். நீதான் எனக்கு முக்கியம்…”
அந்த வார்த்தைகள் அவளை உடைத்தன. மாதக்கணக்கில் அவள் அடக்கி வைத்திருந்த அத்தனை வலிகளும், ஏக்கங்களும், பயங்களும் கண்ணீராக உடைப்பெடுத்துக் கொட்டின.
ஆரவ் அவளைத் தன் அருகே இழுத்து, இறுக்கமாக அணைத்துக்கொண்டான். அவள் அவன் மார்பில் சாய்ந்து, ஒரு குழந்தையைப் போல விம்மி அழுதாள்.
அவன் அவளது தலையை மென்மையாக வருடிக்கொடுத்து, “அழாதே அமுதினி… நான் இருக்கேன்… இனி எது நடந்தாலும், நாம ஒன்னா சேர்ந்து சமாளிப்போம்…” என்று அவள் காதருகே முணுமுணுத்தான். அந்த அணைப்பு, புயலுக்கு நடுவே கிடைத்த பாதுகாப்பான துறைமுகம் போல அவளுக்கு இருந்தது.
********
அன்று இரவு, அமுதினி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். அவளது கணுக்கால் வலியை விட, மனதின் வலி அதிகமாக இருந்தது.
அவளது அலைபேசி ஒரு இசைக்கருவி போல இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு குறுஞ்செய்தி சத்தமும், அவளது இதயத்தில் ஒரு குண்டூசி குத்துவது போல இருந்தது.
“அமுது, முதல்ல இந்த போனை சைலன்ட்ல போடு… நியூஸ் சேனல் மாதிரி பிரேக்கிங் நியூஸ் கேட்டுட்டே இருக்காங்க… இதைப்பத்தி விட்டுத்தள்ளு… உங்க காலை சரி பண்ணும் வழியைப் பாரு… ” என்று அவள் போனைப் பிடுங்கி வைத்தாள்.
அமுதினி கண்ணீருடன் அவளைப் பார்த்து, “எப்படி சுருதி? ப்ச்! எல்லாமே நாசமா போச்சு… மொத்த காலேஜும் எங்களை பத்திதான் பேசுது… என் ஃபோனுக்கு வர்ற மெசேஜ்ல பாதி பேரு, ‘நிஜமாவா?’னு கேக்குறாங்க. மீதி பேரு, ‘எப்படி?’னு கேக்குறாங்க… என்ன பண்றது?” என்று புலம்ப,
“கேட்டுட்டுப் போகட்டும்,” சுருதி அலட்சியமாக சொல்லி,
“நீ என்ன தப்பு பண்ண? அவர் உன்னைக் காதலிக்கிறார்… நீ அவரைக் காதலிக்கிற… நடுவுல இந்த ஊர் பேசி என்ன ஆகப்போகுது? இன்னைக்கு கிரவுண்ட்ல நடந்ததை நானும் பார்த்தேனே… அது ஒரு சினிமா சீன் மாதிரி இருந்துச்சுடி! அவர் ஓடி வந்தது, உன்னைத் தூக்கினது… ப்பா! நம்ம ஆரவ் சாருக்குள்ள இப்படி ஒரு ஹீரோயிசம் ஒளிஞ்சிருக்குனு நான் கனவுல கூட நினைக்கல… அவர் உன்னைத் தூக்கிட்டுப் போனப்போ, அவர் முகத்துல தெரிஞ்சது வெறும் அக்கறை இல்லை… அது காதல்… இல்ல, இல்ல, வெறித்தனமான காதல்…”
“அதனாலதான் பயமா இருக்கு. அவர் ஒரு பேராசிரியர்… அவர் பெயருக்குக் களங்கம் வந்திடும்… அவருக்குப் பிரச்சனை வந்திடும்…” என்று அமுதினி விசும்பினாள்.
சுருதி அவள் தோளைப் பற்றி உலுக்கி, “ஏய் லூசு, இப்படி ஒப்பாரி வைக்குறத நிப்பாட்டிட்டு, நல்லா யோசி… அவர் உன்னைக் கைகள்ல தூக்கிட்டுப் போனப்போ, சுத்தி இருந்த ஆயிரம் பேரைப் பத்தியோ, வரப்போற பிரச்சனையைப் பத்தியோ ஒரு செகண்ட் கூட யோசிக்கல… அவர் கண்ணுக்கு நீ மட்டும்தான் தெரிஞ்ச… அதுதான்டி உண்மையான காதல்… உன்னை ஒரு ராணி மாதிரி அவர் பார்த்துப்பார்… நீ அவரை நம்பு…”
அந்த வார்த்தைகள் அமுதினிக்கு ஒருபுறம் தைரியத்தைக் கொடுத்தாலும், பயம் அவளை விடவில்லை. அப்போது அவள் அலைபேசி மீண்டும் ஒலித்தது. ஆரவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி.
“உன் கணுக்கால் வலி எப்படி இருக்கு? உடனே கிளம்பி வர என் மனம் சொல்லுது… ஆனா, அது உனக்கு இன்னும் சிக்கலை உருவாக்கிடும்… கொஞ்சம் பத்திரமாக இரு… நாளைக்கு வந்து பார்க்கறேன்… ஐ லவ் யூ டா அமுதினி…” என்று படித்துவிட்டு கண்ணீரின் ஊடே புன்னகைத்தாள் அமுதினி.
“நான் நல்லா இருக்கேன் சார்… வலி இருக்கு… ஆனா, நீங்க என் கூட இருக்கீங்கங்கிற நினைப்பே, எல்லா வலிக்கும் மேலான மருந்து… உங்களுக்காக நான் காத்திருக்கேன்… ஐ டூ லவ் யூ சார்…” என்று பதில் அனுப்பினாள்.
********
அடுத்த நாள் மதியம்.
கிசுகிசுப் பேர்வழிகள், இன்னுமும் நிறுத்தாமல், தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்துகொண்டிருந்தனர்.
அமுதினி வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.
‘யாராக இருக்கும்?’ என்று அவள் யோசித்தபடியே, ஊன்றுகோலின் உதவியுடன் சென்று கதவைத் திறந்தாள்.
வாசலில், ஆரவ் நின்றிருந்தான். ஒரு பெரிய பூங்கொத்தை கையில் பிடித்திருந்தான். இன்னொரு கையில் பழக்கூடை, மருந்துகள் அடங்கிய பை என, ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டையே சுமந்து வந்திருந்தான்.
“சார்! நீங்க… இங்க?” அவள் குரலில் அதிர்ச்சியும் ஆனந்தமும் சரிபாதியாகக் கலந்திருந்தது.
அவன் உள்ளே வந்தபடியே, “ம்ம்… நேத்துதான் ஊருக்கே நீ என் ஆளுன்னு தெரிஞ்சுடுச்சே. அப்புறம் வந்து பார்க்காம இருந்தா நல்லாவா இருக்கும்? ஒரு பாய்ஃபிரண்டா என் கடமையைச் செய்ய வேண்டாமா?” என்று குறும்பாக பேசி கண்ணடித்தான்.
அவன் கொண்டு வந்த பொருட்களை மேசையில் வைத்துவிட்டுத் திரும்பியபோது, அமுதினியின் கண்களில் நீர் நிறைந்திருந்தது. அவள் உணர்ச்சிப்பெருக்கில் தள்ளாட, அவன் அவளைத் தன் கைகளுக்குள் தாங்கிக்கொண்டான்.
“சார், எனக்காக நீங்க… எல்லாத்தையும் பணயம் வைக்கிறீங்க…”
அவர்களுக்குள் இடைவெளியே இல்லாமல், அவன் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான்.
“பணயம் வைக்கிற அளவுக்கு, நீ ஒன்னும் சாதாரண பொருள் இல்லை அமுதினி… நீ என் பொக்கிஷம்… உனக்காக நான் எதை வேணும்னாலும் இழப்பேன்… எனக்கு ஒளிஞ்சு விளையாடி ரொம்ப அலுத்துடுச்சு… இந்த உலகத்துக்குத் தெரியட்டும்… நான் உன்னைக் காதலிக்கிறேன்… அதுல எந்த அவமானமோ, பயமோ எனக்கில்ல…” என்றான்.
அவள் அவன் சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள். அவனது அணைப்பில் இருந்த பாதுகாப்பு, அவளது அத்தனை பயத்தையும் விரட்டியடித்தது.
“நானும் ரொம்ப களைச்சுப் போயிட்டேன் சார். ஆனா இன்னும் கொஞ்ச நாள்… என் படிப்பு முடியுற வரைக்கும்… அதுவரைக்கும் நாம தனியாவே இருக்கலாம்… நம்ம எல்லாருக்கும் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டனும் சார்…”
“நிச்சயமா மா… அதுவரைக்கும், நாம கொஞ்சம் கவனமா இருக்கலாம்… ஆனா, இனிமே பயந்து ஒதுங்கத் தேவையில்லை… தைரியமா இருக்கலாம்…”
அவன் அவளை அணைப்பிலிருந்து விலக்கி, அவள் கண்களைப் பார்த்தான்.
அதற்கு, “ஆனா, இது ரொம்ப அநியாயம் அமுதினி… உன்னைப் பார்க்க இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்து வந்திருக்கேன்… உன்னை இப்படிப் பக்கத்துல வெச்சுக்கிட்டு, ஒரு முத்தம் கூடக் கொடுக்க முடியலைன்னா, இது என்ன காதல் வாழ்க்கை?” என்று அவன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான்.
அவன் கேட்ட விதத்தில் அவளுக்குச் சிரிப்பு பொங்கியது. இவ்வளவு பதற்றமான சூழலிலும், அவனுக்கு அவளை சிரிக்க வைக்கத் தெரிந்திருந்தது.
அவளது புன்னகை முகத்தை திருப்தியுடன் கண்டு, “நீ எப்பவும் சந்தோஷமா இருக்கணும்…” என்றவன்,
மேலும்,
“போதும் அமுதினி. இனி ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தக்கூடாது… நேத்து வரைக்கும் நாம ஒளிஞ்சு விளையாடினோம்… ஆனா, இன்னையிலிருந்து, நாம தைரியமா இருக்கப்போறோம்… பேசுறவங்க பேசட்டும்… ஒருநாள் அவங்களே பேசிப் பேசி ஓய்ஞ்சு போவாங்க…” என்றான் ஆறுதலாக!
“ஆனா உங்க வேலைக்கு…”
அவன் அவள் உதடுகளில் தன் விரலை வைத்துத் தடுத்தான்.
“என் வேலையை விட, என் வாழ்க்கையை விட, நீதான் எனக்கு முக்கியம்… இதை நான் வெறும் வாய் வார்த்தையா சொல்லல… என் செயலால நிரூபிச்சிருக்கேன்… நீ என்னை நம்புறியா?”
அவள் ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தாள்.
“குட் கேர்ள்…” என்று அவன் அவள் கன்னத்தைத் தட்டி,
“ஆனா ஒரு கண்டிஷன்… உன் பட்டமளிப்பு விழா அன்னைக்கு, நான் ஸ்டேஜ் ஏறி உன்னைத் தூக்குவேன்… அப்போ மட்டும் ‘ஐயோ சார், எல்லாரும் பார்க்குறாங்க’ன்னு எதையும் சொல்லக்கூடாது… ஓகேவா?” என்று அவளை சீண்டினான் ஆரவ் கிருஷ்ணா.
அவன் சொன்ன விதத்தில் அவள் வெடித்துச் சிரித்தாள் அமுதினி.
அத்தனை வலி, பயம், கவலை அனைத்தும் அந்தச் சிரிப்பில் கரைந்து போனது. ரகசியம் அம்பலமானது ஒருவகையில் நல்லதாகவே போனது.
அது அவர்களது காதலின் மீதிருந்த அத்தனை சந்தேகங்களையும், பயங்களையும் நீக்கி, அதை இன்னும் பலமானதாகவும், உண்மையானதாகவும் மாற்றி இருந்தது.
அவர்கள் அப்பொழுது ஒன்றாக மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தார்கள். அது மட்டுமே இப்போது உண்மையாக இருந்தது!
********
இன்னும் மூன்று அத்தியாயங்களில் கதை முடிந்து விடும்… உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க நண்பர்களே 🥰
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
+1
1
