Loading

ஐசியூ வாசலில் ஷ்யாமும் நிலோபரும் கண்ணில் நீருடன் தலைகுனிந்து அமர்ந்திருக்க, விஷால் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தான்.

வெறி கொண்ட வேங்கையாய் அவனது முகம் ஜிவ்வென ஆத்திரத்தில் சிவந்திருந்தது. கையில் யார் கிடைத்தாலும் பொறுமையின்றி கொன்றே விடுவான். அத்தனை சினம்!

தன்னை காவல் நிலையத்திற்கு அலைய வைத்ததுமில்லாமல், தன்னை வைத்து அசிங்கமான காணொளி ஒன்றை தயாரித்து ஊர் முழுக்க நாறடித்து, தரக்கட்டுப்பாடு அதிகாரிகளை வைத்து தனது தொழில் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவனின் மீது கொள்ளை ஆத்திரம்.

தான் காவல் நிலையத்தில் இருந்தும் கூட உடனடியாய் தன்னை மீட்க வராமல் பத்மபிரியாவை மட்டும் அனுப்பி வைத்த இதயாம்ரிதாவின் மீது கடுங்கோபம். அவனுக்கு ஒன்றென்றால் மட்டும் துடித்துக்கொண்டு உடனடியாய் செயல்பட்டாள் தானே!?

அவனது சீறலை பன்மடங்காக்கியது சத்யாவுடன் ஜோடி போட்டுக்கொண்டு இதயா அவனை நோக்கி வந்தது.

சத்யாவைக் கண்டதும் அவனது சட்டையைப் பிடித்தவன், “என்னடா என்கிட்டயே விளையாடி பாக்குறியா?” எனும்போதே இதயாம்ரிதா விஷாலைத் தடுத்தாள்.

சத்ய யுகாத்ரன் அவனைத் தடுக்காமல் பேண்ட் பாக்கெட்டினுள் கையை நுழைத்து திமிராய் நிற்க, இதயாம்ரிதா தான் “டேய் அவன் ஏற்கனவே தப்பா புருஞ்சுட்டு என்னன்னவோ செஞ்சுட்டு இருக்கான். தயவு செஞ்சு அமைதியா இரு. முதல்ல அவன் மேல இருந்து கையை எடு” என்றதும் தான் தாமதம் புயலாய் அவனை விட்டுவிட்டு இதயாம்ரிதாவின் கழுத்தை நெறித்தான்.

அதனை எதிர்பாராதவள் திகைத்து “டேய் பைத்தியமா நீ?” என மொத்த பலத்தையும் திரட்டி அவன் கையை எடுத்து விட்டவள், அவனை சப்பென அறைந்து விட,

“அடிடி… நல்லா அடி. கையால எதுக்கு அடிக்கிற உன் செருப்பை கழட்டி அடி. போயும் போயும் உன்னை லவ் பண்ணுனேன்ல… உன் பிஞ்ச செருப்பால அடி. உனக்கு என்ன தான்டி பிரச்சினை. அப்படி அவன்கிட்ட என்ன பார்த்தன்னு இத்தனை வருஷமாகியும் அவன் பின்னாடியே பித்து பிடிச்சு அலையுற? அவனை விட்டுருக்க கூடாதுடி. அரை உயிரோட அனுப்புனது தான் நான் செஞ்ச பெரிய தப்பு. ஜெயில்லயே அவன் எலும்பு கூட கிடைக்காம எரிச்சு சாம்பலாக்கி அனுப்பியிருக்கணும். செத்த பாம்பு தான, இனி அடிக்க என்ன இருக்குன்னு வெறும் பழியை மட்டும் போட்டு அனுப்புனேன்ல… தட் இஸ் மை மிஸ்டேக்!” என மூச்சிரைக்க கத்தியதும் இதயாம்ரிதா அசையக்கூட பலமற்று உறைந்திருந்தாள்.

ஷ்யாமும் நிலோபரும் அவனைத் தடுக்க முயன்றும் அவன் நிதானத்திலில்லை.

பத்மபிரியா சிலையாகி போனாள். “என்னடா உளறுற? நீ… நீயா…” எனப் பேச இயலாமல் தடுமாற,

“ஆமா நான் தான். நாங்க நாலு பேரும் தான், அங்கிளோட ஹெல்ப் வச்சு இவன்மேல அபியூஸ் கேஸ் கொடுத்தோம். அதான் அவன் பொம்பள பொறுக்கின்னு முத்திரை குத்தியாச்சுல, சும்மா நொய் நொய்யுன்னு இந்த விளங்காதவனுக்கு பெயில் எடுக்க சொல்லி எங்களை டார்ச்சர் பண்ணதும் இல்லாம, இந்த பைத்தியக்காரனுக்காக குடிச்சுட்டு ரோட்டுல புரண்டு, எங்க மானத்தையும் சேர்த்து வாங்குன…

நீ குடிச்ச நியூஸ் எல்லாம் மீடியாவுக்கு வராம இருக்க, அங்கிள் எவ்ளோ கஷ்டப்பட்டாரு தெரியுமா? நீ பேசி பேசி அவரையும் சாகடிச்சுட்ட. என்கூடவாவது ஒழுங்கா குடும்பம் நடத்துனியா… அதுவும் இல்ல. நீ அப்போ மாறுவ இப்ப மாறுவன்னு வெய்ட் பண்ணி பண்ணி… இப்ப உன்னால இவனால மொத்தத்தையும் இழந்துட்டு நிக்கிறேன்.

நீ இப்பவும் அவன் சட்டையைப் பிடிச்சதுக்கு தான் சண்டைக்கு வர்றீல? அவன் உன் கூட படுத்த வீடியோவை சோஷியல் மீடியால போட்டா கூட இன்னும் கொஞ்சம் அவுத்து வேணும்னா காட்டுவ… ஆனா அந்த பரதேசியை விட்டு தொலைய மாட்ட அப்படி தான?” எனப் பொறுமையிழந்து மானம் மரியாதை காற்றில் பறந்த விரக்தியில் வார்த்தைகளை விஷமாய் தவற விட்டான், அதற்கான பலனை பல மடங்காய் பெறப்போவதை அறியாமல்.

“ஸ்டுப்பிட் விஷால். வாயை மூடு… நீ என்ன எல்லாத்தையும் கன்ஃபெஸ் பண்ணிட்டு இருக்க?” என்று ஷ்யாம் கண்டித்து சற்றே நடுக்கத்துடன் இதயாவைப் பார்த்தான்.

இனி சுரக்க கண்ணீரும் இல்லையென்பது போல அதிர்வின் உச்ச நிலையில் இதய நாளங்கள் வெடிக்க சிலையாய் சமைந்து இருந்தாள் இதயாம்ரிதா.

துரோகம். பச்சைத் துரோகம்! தலைக்குள் என்னன்னவோ நினைவுகள் ஓடி ஓடி அவளை அலைக்கழித்து, அவளை முட்டாளாக்கியது.

வாழ்வின் பெரும்பகுதி நட்பின் பிடியில் அல்ல, முட்டாள்களின் பிடியில் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் எனப் புரிந்தாலும் உடனே அவனது கூற்றை எல்லாம் மூளை ஏற்கவேண்டுமே! மெல்ல மெல்ல உள்ளிழுக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் அவளை அதிகமாய் அச்சுறுத்தியது.

கால்கள் லேசாய் பின்னால் தள்ளாட, பத்மபிரியா விஷாலின் பேச்சைக் கேட்டு நாற்காலியில் தொம்மென அமர்ந்தாள்.

பேச வார்த்தைகளின்றி தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.

சத்ய யுகாத்ரனின் மேனியும் அதிர்ந்து அடங்கியது. தனக்காக அவள் முயன்றிருக்கிறாளென்பதே அவனது உள்ளத்தை உளி கொண்டு உடைத்தது. தன்னை மறக்கவே மது பழக்கத்தையும் தூக்க மாத்திரையையும் பழக்கப்படுத்திக்கொண்டாளோ என்று எண்ணவே இதயம் துடி துடியென துடித்தது.

‘இல்ல வேணாம். அவள் எனக்காக எதுவும் செஞ்சுக்க வேணாம்!’ என்றே ஆசைப்பட்டு அவதிப்பட்டது அவனது ஒவ்வொரு அணுவும்.

விஷாலின் கோபம் மெல்லத் தணிந்த பிறகே, தான் செய்த முட்டாள்தனம் உறைத்தது.

பின் மெல்லக் கனிந்து, “அம்ரி… நான் ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ்ல பேசிட்டேன். உன் லவ் எனக்கு இல்லன்னு என்னால ஏத்துக்க முடியலன்னு தான்…” எனும்போதே அவன் முகத்தில் நங்கென குத்தினாள் இதயாம்ரிதா.

அவனது மூக்கு உடைந்து இரத்தம் கொப்பளிக்க, இத்தகைய துரோகத்தின் கனத்தை தாங்க இயலாதவளாய் உயிரற்று அங்கிருந்து வெளியே நடந்தாள்.

பத்மப்ரியா வேகமாய் இதயாம்ரிதாவின் பின் செல்ல, சத்ய யுகாத்ரன் மற்ற மூவரையும் அருவருப்பாய் ஏறிட்டான்.

தற்போது இதயாம்ரிதாவிடம் பேசி தெளிவு பெறுவதே உசிதமென எண்ணி, நடுங்கிய கைகளுடன் வெளியே செல்ல, அங்கோ தனக்குப் பின்னே வந்த பத்மபிரியாவை சிவந்த விழிகளுடன் எரித்த இதயாம்ரிதாவைக் கண்டு அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.

பார்வையிலேயே அவளைத் தள்ளி நிறுத்தியவள் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட, பத்மபிரியாவிற்கு விஷாலின் மீது கொலைவெறியே எழுந்தது.

விறுவிறுவென மீண்டும் மருத்துவமனைக்கு சென்றவள், ஷ்யாம் நிலோபர் விஷால் என மூவரையும் படபடவென அடித்தாள்.

“யூ சீட்டர்ஸ்… உங்களை போய் ப்ரெண்ட்ஸ்னு கூட வச்சதுக்கு அவ வாழ்க்கையவே நாசம் பண்ணிட்டீங்களேடா!” எனக் குமுறி அழுதிட, நிலோபர் “வாயை மூடு பத்மா. எல்லாம் அவ நல்லதுக்கு தான செஞ்சோம்? அவ லைஃப்ல அவளுக்கு ஃபிட்டே இல்லாத பெர்சன் வர்றதை எப்படி ஏத்துக்க முடியும்?” என நியாயம் கேட்க,

“நீங்க அடங்க மாட்டீங்க… சத்யா சாரும் அம்ரியும் உங்களை சும்மா விடவே மாட்டாங்க. எப்டியோ செத்து தொலைங்க! உங்க கூட பழகுன பாவத்துக்கு எனக்கு என்ன தண்டனையோ!” என்று தேம்பியவள், அவர்களை வெறுப்பாய் பார்த்துவிட்டு நகன்றாள்.

சத்யா இதயாம்ரிதாவின் காரின் பின்னே செல்லும்போதே அவனை மறித்து நின்றது மற்றொரு கார்.

உள்ளிருந்து ஸ்ரீராமின் துள்ளல் குரல் தான் கேட்டது.

“டேய் மச்சி அதான் உன் வேல முடிஞ்சுதுல. வா வா… இன்னைக்கு நம்ம பிஸினஸோட சக்ஸஸ் மீட் நடக்குது. உனக்காக தான் நாங்க வெயிட்டிங்!” என்று குதூகலத்துடன் அழைக்க, சத்யா செய்வதறியாது இறுகினான்.

ஸ்ரீராமோ “என்னடா… என்னமோ உன் சொந்த கம்பெனியை மூடி வச்சுட்டு வேலை இல்லாம நிக்கிற மாதிரி பாக்குற. நீ ஒளிராவோட பார்ட்னர் கிடையாது மேன். அபிஷியலி நீங்க ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸோட ஜி. எம். அதை மறந்துட்டீங்களோ உன் எக்ஸை பார்த்துட்டு” என எப்போதும் போல கிண்டலடித்தவன், “கார்ல ஏறுடா. அப்பா பிரெஸ் மீட்ல நீ இருக்கணும்னு ஆசைப்படுறாரு… கம் கம்” என்று வம்படியாக அழைத்ததில் அவனும் காரில் ஏறினான்.

“அப்பா இன்னைக்கு செம்ம ஹேப்பி மச்சி. சொன்ன மாதிரியே எல்லாருக்கும் செம்மயா செஞ்சுட்ட. நிவோராவும் நிவோராவோட தங்கச்சி ஒளிராவும் இனி பீல்டு அவுட்! ஆடிய ஆட்டமென்ன!!! டொன் டொன் டொயிங்…” என உல்லாசமாக பாட்டு பாடியபடி, ஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் என மிகப்பெரிய எழுத்துகள் பொறித்த ஒன்பது மாடி கண்ணாடி கட்டடத்தினுள் காரை செலுத்தினான் ஸ்ரீராம்.

———————

இங்கு, விதுரன் குழுவினருக்கு விமானப்பயணம் தாமதமாக பாரிஸ் எக்ஸ்போவினுள் நின்று அவர்கள் மேலும் பேசத் தடை செய்தனர் அங்குள்ள நிர்வாகத்தினர்.

அதில் அவர்களது பேச்சும் தடைபட, அனைத்தையும் அப்புறப்படுத்திக்கொண்டு அறைக்கு வந்தனர்.

நால்வரிடமும் கடும் அமைதி நிலவியது. மிதுனாவிற்கோ தலை வெடிக்காத குறை தான்.

அகில் அவர்களைக் கலைக்க, “எதுக்குடா இப்படி சைலண்டா இருக்கீங்க… ஏதாச்சு பேசுங்க” என்றிட, பூமிகாவும் “மிது… காலைல இருந்து நீ ஏதாவது சொல்லுவன்னு வெய்ட் பண்ணிட்டே இருக்கோம். நீ வாயே திறக்காம இருந்தா எப்படிடி?” என வருத்தமாய் கேட்டாள்.

“அதான் தப்பு பண்ணோம்னு முத்திரை குத்தியாச்சே. இனி விளக்கம் சொன்னா அது வெறும் சமாளிப்பா தான இருக்கும்…” என்று சீறினாள்.

விதுரன் அவளை முறைத்திட, “ஈஸியா அவளை அசாசினேட் செஞ்சியே… அவள் இதுல இருந்து ஓவர்கம் ஆக எவ்ளோ கஷ்டப்பட்டும் முடியாம, இப்பவரை சஃபர் ஆகிட்டு இருக்கான்னு தெரியுமா” எனும்போதே கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.

அவளது கண்ணீர் நெஞ்சைப் பிழிந்தாலும் இறுக்கத்துடன் அமர்ந்திருந்தான் விதுரன்.

கண்ணைத் துடைத்துக்கொண்ட மிதுனா, “என் அம்மாவும் அம்ரியோட அம்மாவும் சிஸ்டர்ஸ். என் அப்பா தான் நிவோரா கம்பெனியோட மார்க்கெட்டிங் டீம் ஹெட். மலேஷியா, சிங்கப்பூர்னு வெளிநாட்டுல நிவோராவை ரீச் பண்ணதுல பெரும்பங்கு அவரோடது. நான் சின்ன வயசுலயே அப்பா, அம்மாகூட சிங்கப்பூர் போய்ட்டேன். அங்க தான் வளர்ந்தேன்.

நான் காலேஜ் படிக்கும்போது என் அப்பாவை பிசினஸ் எனிமிஸ் வேணும்னே ஆக்சிடென்ட் பண்ணி கொன்னுட்டாங்க. அது பெரிய போலீஸ் கேஸ் ஆகிடுச்சு. அம்மாவுக்கும் எனக்குமே நிறைய மிரட்டல் கால்ஸ் வரும். ஒரு கட்டத்துல அம்மாவால அந்த ப்ரெஷர தாங்க முடியல. ஒரு நாள் அவங்களும் இறந்துட்டாங்க…” எனும்போதே அவளிடம் தேம்பல் அதிகமாக விதுரன் வேகமாய் அவள் கையைப் பிடித்தான்.

அதனை உதறி விட்டவள், அவன் முகம் பாராது விழிகளைத் தாழ்த்திக்கொண்டதில் அவனுக்கு அடிபட்ட உணர்வு!

——-

சத்யாவை எத்தனை முயன்றும் வெளியில் எடுக்க இயலாமல் திண்டாடினாள் இதயாம்ரிதா.

இதற்கிடையில் ராம்குமாருக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்க, தான் அவரை அவமதிப்பாக பேசியதில் தான் தந்தைக்கு இந்த தொய்வு என்ற குற்ற உணர்ச்சி வேறு அவளைக் கொன்றது.

விஷால் அவளது கைபிடித்து ஆறுதல் செய்தான்.

“கவலைப்படாத அம்ரி. அங்கிள்க்கு ஒன்னும் ஆகாது…”

“நான் பேசுனதுல அப்பா ஹர்ட் ஆகிட்டாராடா?” என வேதனையுடன் கேட்க,

“அதெல்லாம் இல்ல அம்ரி. நீ எல்லாத்தையும் யோசிச்சு பீல் ஆகாத. சத்யாவோட நீ அவரை கம்பேர் பண்ணலாமா?” என்றதும் அவனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்திட அவன் சட்டென பேச்சை மாற்றினான்.

“நான் முடிஞ்ச வரை அவனை வெளில எடுக்க ட்ரை பண்ணேன் அம்ரி. ஆனா அவன் மேல கேஸ் ஸ்ட்ராங்கா இருக்கு. அங்கிள் எந்திரிச்சு வர்ற வரை நீ இதுல நேரடியா தலையிடாத… ப்ளீஸ்” என்றான்.

“எப்படிடா?” இதயா ஆதங்கத்துடன் வினவ, “அட்லீஸ்ட் அங்கிள்காக செய்யேன். நாங்க உனக்கு ஹெல்ப் பண்ணிட்டு தான இருக்கோம்… நீயே பாக்குற தான? நானும் பெரிய பெரிய ஆள்களோட பேசிட்டேன். என்னை நம்பு அம்ரி” என்றதில், அவளும் அவனை நம்பி தந்தையை நம்பி அமைதி காத்தாள்.

ராம்குமார் உடல்நிலை தேறி வந்த பின்னால், மீண்டும் சத்யா புராணத்தை ஆரம்பிக்க ராம்குமாருக்கு கோபத்தை அடக்குவது பெரும்பாடாகிப் போனது.

அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது என ராம்குமார் கைவிரித்து விட, இதயாம்ரிதா நொடிந்து போனாள்.

“நான் அவரை ஒரே ஒரு தடவை மீட் பண்றேன் டாடி. நான் பேசுனா கண்டிப்பா என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுடும்” எனக் கெஞ்சினாள்.

“நீ ஜெயிலுக்குப் போறது மீடியாவுக்குத் தெரிஞ்சா, பெரிய பிரச்சினை ஆகிடும்மா…”

“இல்ல டாடி. யாருக்கும் தெரியாம… ஒரே ஒரு தடவை அவரை மீட் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றதில் சற்றே சிந்தித்தவர் “சரிம்மா… விஷாலை கூட்டிட்டுப் போ” என்றிட, வெகு நாள்களுக்குப் பிறகு அவள் முகம் மலர்ந்தது.

விஷாலை அழைத்துக்கொண்டு சிறைச்சலைக்கு சென்றவள், சத்ய யுகாத்ரனை பார்ப்பதற்காக காத்திருக்க, அவனோ வரவே இல்லை. இறுதியில் காவலாளி தான் வந்தார்.

“அந்த அக்கியூஸ்ட் ஜெயிலுக்கு வந்தும் திருத்தல மேடம். திருட்டு போன் வச்சு, இங்க இருக்குற லேடிஸ வீடியோ எடுத்து வச்சிருக்கான்” என்றிட, அவளோ அதனைக் காதில் வாங்கியது போல தெரியவில்லை.

“அவரை நான் பாக்கணுமே!” என விடாப்பிடியாய் நின்றதும், “நீங்க வந்துருக்குறதா சொன்னேன் மேம். அவன் உங்களை பார்க்க விருப்பம் இல்லன்னு சொல்லிட்டான். அவனுக்கு பொதுவா பணக்கார பொண்ணுங்க, வெள்ளைத்தோல் பொண்ணுங்க எல்லாம் பிடிக்காதாம்… சும்மா சும்மா வந்து நிக்க வேணாம்னு ஓவரா பேசுறான் மேம். அவனுக்காக நீங்க ஏன் உங்க தரத்துல இருந்து இறங்கி வர்றீங்க. கிளம்புங்க மேம்…” என்று விட்டு விஷாலுக்கு கண்ணை காட்ட, அவனும் ஒற்றை புருவம் உயர்த்தி வெற்றி நகை புரிந்தான்.

இதயாம்ரிதாவிற்கு தேவையே இன்றி, அவனது இறுதி வேலை நாள் நினைவு வந்தது.

ஆடிட்டோரியத்தில் அவனை சுற்றி நின்ற பெண்களெல்லாம், மாநிற அழகிகள் தான்.

சட்டென தலையை உலுக்கிக் கொண்டவள், அங்கிருந்து நகராமல் அப்படியே நிற்க, விஷால் தான் “அம்ரி மீடியா மோப்பம் பிடிச்சா உன் பேர் நாறிடும். ப்ளீஸ் வா!” என்று அவளை வம்படியாக இழுத்துச் செல்ல, அதீத அழுத்தத்தின் பலனாய் அவளிடம் பெரும் அமைதி.

பித்து பிடித்தவள் போல இருந்தவளை சரி செய்ய நண்பர்கள் நால்வரும் பீச், மால், பப் என எங்கெங்கோ அழைத்து சென்றனர்.

விஷால், அலுவலகத்திற்கு வரச் சொன்னான். அங்கு வந்தும் அவள் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்ததில், “இன்னைக்கு நைட்டு யாமினியோட பர்த்டே பார்ட்டி இருக்கு அம்ரி. நீ இப்படி இருந்தா அவளும் பீல் பண்ணுவா. கொஞ்சம் ரிலாக்ஸ்சா இரு ப்ளீஸ். எவனோ ஒருத்தனுக்காக எங்களை ஏன் கஷ்டப்படுத்துற…” எனப் பேசி பேசி அவளை பார்ட்டிக்கு வரவழைத்தான்.

எப்போதும், அங்கு மதுபானங்களை கடைவிரித்து வைப்பது வழக்கம். சிரிப்பை தொலைத்திருந்த இதயாம்ரிதாவிடம், பார்ட்டிக்கு வந்த மற்றொரு நண்பன் “ஹே அம்ரி ஒரு ஷாட் அடி” எனக் கொடுக்க, யாமினி “அவளுக்கு பழக்கம் இல்லடா” என்று சொல்லும்போதே சிறிய குடுவையில் ஊற்றி வைக்கப்பட்ட மதுவை ஒரே மிடறாக குடித்து முடித்தாள்.

அவளை நண்பர்கள் அதிர்ந்து பார்க்க, விஷால் “ஹே… இது என்ன புதுசா?” என்றான்.

“ஏன் நீங்க ட்ரின்க் பண்ணும்போது நான் பண்ண கூடாதா?”

“அதில்ல… உனக்கு பழக்கம் இல்லைல” எனும்போதே நான்கு ஷாட்டை மொத்தமாக குடித்து விட்டாள்.

“அம்ரி போதும். உனக்கு இது அளவு தெரியாது. நம்ம வீட்டுக்குப் போகலாம்…” என்று விஷால் வலுக்கட்டாயமாக அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

ஆனால், அப்போது தொடங்கிய அந்தக் குடிப்பழக்கம் அவன் வசிக்கும் தன்னை மறக்க வைக்க பெரும்பங்கு வகித்ததில், தினமும் குடிக்கத் தொடங்கினாள்.

அதற்கு தோதாய் ராம்குமார் வீட்டினில் ஒரு மினி பாரே வைத்திருக்க, தினம் ஒரு பாட்டிலை தனது அறைக்கு எடுத்துச் சென்று விடுவாள்.

மற்றவர்களுக்கு அது சோஷியல் ட்ரிங்கிங். அவர்களுக்கு அளவு தெரியும். ஆனால் இவள் அப்படியல்லவே! எந்த க்ளாசில் மொத்தமாய் மறந்து தன்னை மீறி உறங்குகிறாளோ அதுவரையிலும் குடிப்பாள்.

அவனை மறக்கவா? அல்லது அவன் தவறிழைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் குடிக்கிறாளா? அவளுக்கே காரணம் தெரியாது.

தாய் தந்தை இறந்தபின்பு இதயாம்ரிதா வீட்டிற்கே வந்து விட்ட மிதுனாவிற்கு தமக்கையின் நிலையை எண்ணி வேதனை பிறந்தது.

“உன்னை இப்படி பார்த்ததே இல்லகா… கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் இதை விட்டுடேன்” என்றிட,

“எனக்கும் புரியுது மிது. என்னால முடியல!” என்று தலையைப் பிடித்துக்கொண்டாள்.

“நம்ம வேணும்னா சைக்காட்ரிஸ்ட்ட பாக்கலாமா?” என்றதும் விஷால் இடைபுகுந்து மறுத்தான்.

“அவள் ஏதோ லவ் பெயிலியர்ல இப்படி பண்ணிட்டு இருக்கா. கொஞ்ச நாள்ல அவளே சரியாகிடுவா. நீ பிஜி சேரணும்னு சொன்னல்ல. எந்த காலேஜ்னு டிசைட் பண்ணிட்டியா?” எனப் பேச்சை மாற்றினான்.

“இன்னும் எவ்ளோ நாள் தான் அண்ணா இவள் இப்படி உடம்பை கெடுத்துக்க போறா… பெரியப்பாவும் பெரியம்மாவும் இவளை பார்த்து எவ்ளோ வருத்தப்படுறாங்க…” என்றிட,

“அந்த அறிவு அவளுக்கு இருக்கணும். இவளை ஒரு பொருட்டாவே மதிக்காதவனுக்காக இருக்குற எல்லாரையும் கஷ்டப்படுத்துறா…” என சொல்லி விட்டுச் செல்ல இதயாம்ரிதாவிற்கு சுருக்கென தைத்தது.

மிதுனா, “விஷால் அண்ணா சொல்றது நியாயம் தானக்கா. தப்பு பண்ணவனுக்காக நீ ஏன் உன்னை வருத்திக்கிற…” எனக் கேட்க,

“ஹே மிது… அவன் தப்பு பண்ணிருக்கான்னு என்னால நம்பவே முடியலடி. வெறும் ஒன் சைட் லவ் தான். ஆனா, அவன் கண்ணுல சின்னதா நான் உணர்ந்த அந்த… அந்த சம்திங்… அது என்னன்னு எனக்கு சொல்ல தெரியலடி… அது என்னை நிம்மதியா இருக்க விடமாட்டேங்குதுடி. அவனை பொய்யானவனா ஏத்துக்க மறுக்குது. அவனை வெறுக்கவும் முடியல. மறக்கவும் முடியல. அக்செப்ட் பண்ணிக்கவும் முடியல. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்குடி…” என்றவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது மிதுனாவிற்கு.

“அக்கா… நீ யார்ட்டயும் சொல்லாத. நம்ம மட்டும் ஒரு தடவை சைக்காட்ரிஸ்ட்ட பாத்துட்டு வரலாம். யூ பீல் பெட்டர்கா!” என்று கெஞ்சிட, “ம்ம்” என்றாள்.

அவளுக்கும் இதனை விட்டு வெளிவர வழி தெரியவில்லை.

சிலபல சோதனைகளுக்குப் பிறகு மனநல மருத்துவர் ஷாந்தினி இதயாம்ரிதாவிடம் வெகு நேரம் பேசினார்.

பின் மிதுனாவையும் அழைத்தார்.

“ஸீ மிஸ் இதயாம்ரிதா, ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழுற பெர்சன்ஸ் லைக், அப்பா, அம்மா, ரெண்டு மூணு நண்பர்கள்… அந்த வட்டத்தை தாண்டி வேற ஒருத்தர் உள்ள வந்தா, சிலருக்கு அது ஜஸ்ட் ஒரு ஈர்ப்பா கடந்து போயிடும்.

ஆனா சிலருக்கு… அது கடக்க முடியாத வலி ஆகிடும்.

அந்த பெர்சனோட நடை, பார்வை, பேசும் விதம், ஏன் ஒரே ஒரு வார்த்தை கூட மனசுக்குள்ள ஆழமா பதிஞ்சிடும்.

அந்த ஆள் தப்பே பண்ணிருந்தாலும், அந்த தப்பை ஏத்துக்கற மனநிலை எல்லாருக்குமே உடனே வராது.

நீங்க சத்யா தப்பு பண்ணுறதை உங்க கண்ணால நேர்ல பார்க்கல.

நீங்க கேட்டது எல்லாமே செய்திகள், பிறர் சொன்ன விஷயங்கள்.

ஆனா உங்க மனசுக்குள்ள இருக்குற சத்யாவோட இம்ப்ரெஷன், அவர் மேல இருந்த பாதுகாப்பு உணர்வு,
இதெல்லாம் உடையல.

அதனால தான் அவர் தப்பு பண்ணிட்டார்னு உங்க மூளை சொல்லியும்,
உங்க மனசு அதை மறுக்குது.

நீங்க குடிக்கிறது அவரை மறக்க இல்ல. உங்க உணர்ச்சியை உணர மறுக்குறதுக்காக. ஏதோ ஒரு விதத்துல அவர் மேல வெறுப்பு வந்துடுமோன்ற பயம்! அவர் இருந்த லைஃபை வெறுத்துடுவோமென்ற ஒரு காம்ப்ளெக்ஸ். அது தான் உங்களை குடிக்க வைக்குது. குடிச்சா தூக்கம் வந்துடும்னு உங்களுக்கா ஒரு நம்பிக்கை…

இதை மெடிக்கல் ரிலேட்டடா பல பேரால குறிக்கலாம். டிராமா பாண்ட், எமோஷனல் பிக்ஸேஷன். ஒரு வலி நிறைந்த பிணைப்பு. ஒரு முடிக்கப்படாத துக்கம். அதுனால தான் உங்களால அதை ஓவர்கம் பண்ண முடியல. மனச ரிலாக்ஸ்சா வச்சுக்கோங்க. இப்போ இருக்குற நிலைமைக்கு தினமும் செஷன்ஸ் அட்டென்ட் பண்ணுங்க. உங்களுக்கு தூக்க மாத்திரையும் எழுதி தரேன். குடிக்கிறதை கண்ட்ரோல் பண்ணுங்க…” என்று பல விதத்தில் அவளுக்குப் புரிய வைத்து அனுப்பினார்.

விஷால் மிதுனாவைக் கடிந்து கொண்டாலும், இதயாம்ரிதாவிடம் சின்னதாய் ஒரு மாற்றம் தெரிந்ததில், அடுத்தடுத்த அமர்வுகளுக்கு அவனே அழைத்துச் சென்றான்.

மெல்ல மெல்ல குடிப்பழக்கத்தை விட்டவளுக்கு உறக்க மாத்திரையின்றி உறக்கம் வர மறுத்தது.

“இப்போதைக்கு அது பிரச்சினை இல்லை. நீங்க முழுசா மனசுல இருக்குற கசடை எடுத்துடுங்க…” என்று மருத்துவர் அறிவுரை கூறிட, இந்நிலையில் தான் ராம்குமார் விஷாலை திருமணம் செய்ய சொல்லி அவள் தலையில் இடியை இறக்கினார்.

“டாடி அவன் என் பிரெண்டு. அவனைப் போய்…” என அவள் மறுத்துவிட,

“நான் இருக்கும்போதே உனக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறது தப்பாமா…” என்று தனது கண்ணீரை பிரம்மாஸ்திரமாக கையில் எடுத்தார்.

அவரைக் கண்டு அதிர்ந்தவள், “என்னை கார்னர் பண்ணாதீங்க ப்ளீஸ். என்னால முடியாது டாடி…” என திட்டவட்டமாக மறுத்து விட்டாள்.

விஷாலோ அவளிடம், “எனக்கும் இந்த மேரேஜ் சுத்தமா பிடிக்கல அம்ரி. ஆனா என் அப்பாவும் அங்கிளும் ரொம்ப போர்ஸ் பண்றாங்க” என எரிச்சலுறுவது போல காட்டிக்கொண்டான்.

“அவங்களுக்காக மேரேஜ் பண்ணிக்க முடியாதுடா. நீ ப்ரீயா விடு” என்று விட, அவனோ அவளை ஓரக்கண்ணில் பார்த்தபடி, “எப்படியும் அங்கிள் உன்னை விடுவாருன்னு எனக்கு நம்பிக்கை இல்ல. என்னை வேணாம்னு சொன்னதும் அவர் வேற மாப்பிள்ளை பாத்துட்டு இருந்தாரு” என்று தூண்டிலிட்டான்.

“நான் தான் மேரேஜ் வேணாம்னு சொல்றேன்ல. ஏன் இப்படி செய்றாரு” என்ற எரிச்சல் அவளுக்கு.

“நீ இன்னும் சத்யாவை மறக்கலையா?” விஷால் கடுப்பை மறைத்தபடி கேட்க,

“நான் எப்போ மறப்பேன்னு சொன்னேன்?” என மறுகேள்வி கேட்டவளை திகைத்துப் பார்த்தான்.

புது காதல் மலரும்
மேகா!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 111

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
113
+1
3
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments