
அத்தியாயம் – 26
டிசம்பர் 24, கிறிஸ்துமஸ் ஈவ். ஒட்டுமொத்த கல்லூரி வளாகமும் ஒரு குட்டி சொர்க்கம் போல ஜொலித்துக்கொண்டிருந்தது.
வண்ண வண்ண விளக்குகள், நட்சத்திரங்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் என எங்கு பார்த்தாலும் கொண்டாட்ட மனநிலை. மாணவர்கள் அனைவரும் விடுமுறைக்கான உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தனர்.
உளவியல் துறை சார்பில் அன்று மாலை 6 மணிக்கு மொட்டை மாடியில் ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமுதினி தன் வீட்டில், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து அழகாக தயாராகிக் கொண்டிருந்தாள்.
அவள் தன் மனதிற்கு மிகவும் பிடித்த மரகதப் பச்சை நிறப் புடவையைத் தேர்ந்தெடுத்திருந்தாள். காதுகளில் ஜிமிக்கி, கழுத்தில் மெல்லிய சங்கிலி, விரிந்த கூந்தல், லேசான ஒப்பனை. அவள் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்.
‘அமுதினி, என்னம்மா இது? வெறும் டிபார்ட்மென்ட் பார்ட்டிக்கு எதுக்கு இவ்ளோ பில்ட்-அப்? ஆரவ் சார் வருவார், பார்ப்பார், அவ்வளவுதான். எதுக்கு அவரை இம்ப்ரெஸ் பண்ண இப்படி மெனக்கெடுற? ஞாபகம் இருக்கட்டும், ரெண்டு பேரும் வெயிட்டிங் பீரியட்ல இருக்கீங்க,’ என்று அவளது மூளை கண்டிப்புடன் அறிவுரை கூறியது.
ஆனால் அவளது இதயமோ, ‘சும்மா இரு! அவருக்காகத்தான் இந்த அலங்காரமே… அவர் என்னைப் பார்த்துட்டு, ஒரு ரெண்டு செகண்ட் பேச்சை மறந்து ஸ்தம்பிச்சு நிக்கணும். அப்போதான் எனக்கு நிம்மதி,’ என்று துள்ளிக் குதித்தது.
அமுதினிக்கு, தன் நிலையை எண்ணி, அவளுக்கே சிரிப்பு வந்தது.
*****
கொண்டாட்டம் நடக்கும் மொட்டை மாடி, அவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அனைத்து இடங்களிலும் வண்ண வண்ண விளக்குகள் மின்னின, மூலையில் ஒரு பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம், மெல்லிய இசையில் ஒலிக்கும் கிறிஸ்துமஸ் பாடல்கள், விதவிதமான உணவு வகைகள். பேராசிரியர்களும் மாணவர்களும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
அமுதினி, தன் உயிர்த்தோழி சுருதியுடன் உள்ளே நுழைந்தாள். அவள் உள்ளே நுழைந்த நொடியில், பல தலைகள் அவளை நோக்கித் திரும்பின. அந்த மரகதப் பச்சை நிறப் புடவை அவளது நிறத்திற்கு அவ்வளவு அழகாகப் பொருந்த, அவள் கண்கள் நட்சத்திரங்களைப் போல மின்னின.
சுருதி அவள் காதில், “அமுது, செம்மயா இருக்கடி… இன்னைக்கு ஆரவ் சார் உன்னைப் பார்த்து ஐஸ் க்ரீம் மாதிரி உருகப் போறார் பாரு…” என்று கிசுகிசுக்க,
அமுதினி அவளது தோளில் அடித்து, “ஏய், சத்தமா பேசாதே சுருதி… யாராவது கேட்கப்போறாங்க…” என்று சிணுங்கினாள்.
அவள் கண்கள் இயல்பாகவே கூட்டத்தை ஆராய்ந்தன, தன் காந்தத்தை ஈர்க்கும் இரும்பைத் தேடுவது போல பார்க்க, ஆரவ் கிருஷ்ணா அங்கேதான் இருந்தான்.
ஒரு மூலையில், டாக்டர் சரண்யா மற்றும் சில பேராசிரியர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். கருப்பு நிறச் சட்டை, ஜீன்ஸ் என மிக சாதாரணமாக இருந்தாலும், அவனைச் சுற்றி ஒரு தனி ஒளிவட்டம் தெரிந்தது.
அவன் எதேச்சையாகத் திரும்ப, அமுதினியைப் பார்த்தான். அவ்வளவுதான். அவன் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் பாதியிலேயே நின்றன. அவன் கண்கள் விரிந்தன, சுவாசம் ஒரு நொடி நின்றது. அவள் அழகில் அவன் உறைந்துபோனான். அந்தப் பச்சை நிறப் புடவை, அசைந்தாடும் கூந்தல், ஒளிரும் முகம்… அவள் ஒரு தேவதை போலத் தெரிந்தாள்.
அவர்கள் கண்கள் சந்தித்துக்கொண்டன. நேரம் உறைந்தது. சுற்றியிருந்த இரைச்சல், இசை, மனிதர்கள் என அனைத்தும் காணாமல் போயின. அந்தப் பரந்த மொட்டை மாடியில் அவர்கள் இருவரும் மட்டுமே இருப்பது போன்ற ஒரு மாய உணர்வு.
“ஆரவ், நான் பேசுறது காதுல விழுதுதா? ஏதோ அமானுஷ்ய சக்தியைப் பார்த்த மாதிரி நிக்கிறியே?” என்று டாக்டர் சரண்யா அவன் தோளைத் தட்டிக் கேட்க, ஆரவ் சுயநினைவுக்கு வந்தான்.
“சாரி மேம், நான் கவனிக்கல… ஏதோ யோசனை,” என்று சமாளித்தான்.
டாக்டர் சரண்யா புன்னகைத்தார். அவர் பார்வை அமுதினியின் பக்கம் சென்று மீண்டது. எல்லாம் அவருக்குப் புரிந்துவிட்டது. “சரி சரி ஆரவ், நீ போய் ஸ்டூடண்ட்ஸ்கூட ஜாலியா பேசு. நாம அப்புறம் பேசலாம்,” என்று அவனுக்கு வழிவிட்டார்.
*******
அடுத்த ஒரு மணி நேரம், ஒரு விசித்திரமான கண்ணாமூச்சி ஆட்டமாகவே இருந்தது. அமுதினியும் ஆரவும் ஒரே இடத்தில் இருந்தும், இரு துருவங்கள் போல விலகி இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கிடையே ஒரு சக்திவாய்ந்த ஈர்ப்பு விசை வேலை செய்வது போல் உணர்ந்தார்கள்.
அமுதினி நண்பர்களுடன் சிரித்துப் பேசினாலும், அவளது முழு கவனமும் ஆரவின் மீதே இருந்தது. அவளது உள்மன ‘ராடார்’ அவன் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தது.
ஆரவின் நிலையும் அதுவே. அவன் மற்ற மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவனது கண்கள் திருட்டுத்தனமாக அமுதினியையே சுற்றி வந்தன.
அவள் சிரிக்கும்போது, அவன் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. அவள் தன் கூந்தலை ஒதுக்கிவிடும்போது, அந்த நொடியே சென்று அவளைத் கட்டித்தழுவ ஆசை எழுந்து அடங்கியது.
திடீரென இசை மாறியது. ஏ.ஆர். ரஹ்மானின் “உயிரே உயிரே…” பாடல் ஒலிக்கத் தொடங்கியது. ஜோடிகள் மெதுவாக நடனமாட ஆரம்பித்தனர்.
அமுதினி தன் இதயத்தில் ஒரு வலியுடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளும் ஆரவுடன் இப்படி நடனமாட வேண்டும், அவன் கைகளுக்குள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று ஏங்கினாள்.
அப்போது அவள் கைபேசி அதிர்ந்தது. ஆரவிடமிருந்து குறுஞ்செய்தி.
“யாரும் பார்க்காம, மொட்டை மாடியின் மறுபக்கத்தில் இருக்கும் ஸ்டோரேஜ் ரூமுக்கு சீக்கிரம் வா… சரியா 5 நிமிஷத்துல வந்திரு அமுதினி…”
அமுதினியின் இதயம் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டது. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். சுருதி பனீர் டிக்காவுடன் போரில் ஈடுபட்டிருந்தாள். மற்றவர்கள் நடனத்தில் மூழ்கியிருந்தனர். இதுதான் சரியான சமயம்.
அவள் மெதுவாக கூட்டத்திலிருந்து நழுவி, மொட்டை மாடியின் இருட்டான பகுதிக்குச் சென்றாள். அங்கே, பயன்படுத்தப்படாத ஒரு ஸ்டோரேஜ் அறை இருந்தது. விளக்குகள் அதிகம் இல்லாத, தனிமையான இடம்.
அவள் அங்கே காத்திருக்க, சில நொடிகளில், ஆரவ் அங்கே வந்தான்.
அந்தத் தனிமையான மூலையில் அவர்கள் இருவரும் நின்றார்கள். பார்ட்டியின் இரைச்சல் எங்கோ தூரத்தில் கேட்டது.
ஆரவ் அவளைப் பார்த்தான், அவன் கண்களில் அத்தனை காதல்.
“அமுதினி… நீ… நீ இன்னைக்கு ரொம்ப… ரொம்ப அழகா இருக்க. என்னால… என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. சாரி, உன்னை இப்படி தனியா கூப்பிட்டிருக்கக் கூடாது… ஆனா, உன்னைப் பார்த்ததும் எல்லா கட்டுப்பாடும் போயிடுச்சு…”
அமுதினி ஆனந்தக் கண்ணீருடன் புன்னகைத்தாள்.
“நானும்தான் சார்… நீங்க என்னைப் பார்த்தப்போ, என் உலகமே நின்னுடுச்சு… நானே உங்ககிட்ட வரணும்னு நினைச்சேன்… ஆனா, நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் இருக்குல்ல?” என்று தயங்க,
“தெரியும்… ஆனா, இந்த சில நிமிஷங்கள் மட்டும்… நமக்காக… ப்ளீஸ்…” என்று ஆரவ் சொல்லவும், அவள் சம்மதமாகத் தலையசைத்தாள்.
ஆரவ் ஒரு அடி முன்னே வந்தான். அவர்களுக்குள் சில அங்குல இடைவெளி மட்டுமே. அவனது மூச்சுக்காற்றின் வெப்பத்தை அவளால் உணர முடிந்தது. அவளது மல்லிகை வாசம் அவனை மயக்கியது.
“அமுதினி, உனக்கு ஒரு கிறிஸ்துமஸ் பரிசு…”
“எனக்கா?”
அவன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்னப் பெட்டியை எடுத்தான். “திறந்து பாரு அமுதினி…”
அவள் வாங்கித் திறந்தாள். உள்ளே, ஒரு மெல்லிய பிளாட்டினச் சங்கிலி. அதன் மையத்தில் ஒரு முடிவிலி சின்னம் (Infinity symbol) பதித்த பதக்கத்துடன் மின்னியது.
அவள் திகைப்புடன் நிமிர்ந்து, “சார், இது…”
“முடிவிலி… நம் காதலை போல எல்லையில்லாத காதல்… நாம காத்திருக்கலாம், ஆனா, என் காதல் உனக்காக எப்போதும் இருக்கும்… நீ இதை உன் கழுத்தில் எப்பவும் போட்டுக்கோ. நானே உன்கூடவே இருக்கிறதா நினைச்சுக்கோ…”
அமுதினிக்குக் கண்கள் குளமாகின. “சார்… இது ரொம்ப அழகா இருக்கு… தாங்க் யூ சார்…”
“நான் போட்டு விடட்டுமா?” அவன் குரல் மென்மையாக ஒலித்தது.
அவள் பேச்சிழந்து தலையசைத்தாள்.
அமுதினி முதுகைக் காட்ட, ஆரவ் அந்தச் சங்கிலியை அவள் கழுத்தைச் சுற்றிப் போட்டான். அதை மாட்டும் போது, அவன் விரல்கள் அவள் கழுத்தில் லேசாக உரின. அந்த ஸ்பரிசத்தில் அமுதினியின் உடல் முழுவதும் ஒரு மினி பூகம்பம் உண்டானது. ஆரவுக்கோ, அவள் சருமத்தைத் தொட்ட நொடியில் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது.
சங்கிலியைப் பூட்டியதும் அவள் திரும்பினாள். இப்போது அவர்கள் முன்பை விட நெருக்கமாக நின்றார்கள். அவன் பார்வை அவள் கண்களிலிருந்து மெல்லக் கீழ் இறங்கி, அவள் இதழ்களைச் சந்தித்தது. அவளை முத்தமிட வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எரிமலையாக வெடித்தது.
அவன் தன்னை மீறி மெல்லக் குனிய, அமுதினி தாமாகவே கண்களை மூடினாள்.
அவர்கள் இதழ்கள் தொடும் தூரத்தில் இருந்தபோது, பார்ட்டியில் யாரோ பலூனை உடைக்க, ‘டமார்’ என்ற சத்தம் கேட்டது.
அதில் அமுதினி கண்களை மூடிக் கொண்டே மெல்ல, “சார்… நம்மளோட வாக்குறுதி…” என்று முனகினாள்.
அந்த ஒரு வார்த்தை, அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்தது. அவன் கண்களை மூடி, தன்னை அடக்கிக்கொண்டான்.
“சாரி… இது ரொம்பக் கஷ்டமா இருக்கு…” என்கவும்,
“எனக்கும் தான்,” என்றாள் அவள் தழுதழுத்த குரலில்.
இறுதியாக, ஆரவ் மெதுவாகப் பின்வாங்கி, “நாம இங்கிருந்து போகணும் அமுதினி… யாராவது தேட ஆரம்பிச்சிடுவாங்க…” என்றான்.
அமுதினி திரும்பிச் செல்ல எத்தனிக்கும் வேளையில், அவன் சட்டென்று அவள் கையைப் பிடித்தான். அவள் உள்ளங்கையை மென்மையாகத் திறந்து, தன் இதழ்களால் அதில் முத்தமிட்டான். “ஐ லவ் யூ அமுதினி… மெர்ரி கிறிஸ்துமஸ்…” என்றான் புன்னகையுடன்!
அந்த நொடியில், அமுதினியின் அத்தனை வலியும் கரைந்து போனது.
அவன் கைவளைவிற்குள் நின்றபடி, “ஐ லவ் யூ டூ சார்… அண்ட், மெர்ரி கிறிஸ்துமஸ்…” அதே மகிழ்ச்சியுடன் சொன்னாள்.
ஒருவர் பின் ஒருவராக, யாருக்கும் சந்தேகம் வராதபடி, அவர்கள் மீண்டும் பார்ட்டிக்குள் கலந்தார்கள்.
பார்ட்டி தொடர்ந்தது. ஆனால் அமுதினிக்கு, உலகம் புதியதாகத் தெரிந்தது. தன் கழுத்தில் இருந்த சங்கிலியை ரகசியமாகத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள்.
தூரத்தில் நின்ற ஆரவ், அவள் கழுத்தில் தன் காதல் சின்னம் மின்னுவதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான். அவள் கூடிய விரைவில் முழுமையாக அவனுடையவள் என்ற நினைப்பே தித்திப்பாய் இருந்தது.
*******
அன்று இரவு, அமுதினி தன் அறையில், இன்றைய நிகழ்வுகளில் மூழ்கி இருந்தாள்.
கழுத்தில் தவழ்ந்த அந்த பிளாட்டினச் சங்கிலி, வெறும் ஆபரணமாகத் தெரியவில்லை; ஆரவின் காதலுக்கு சாட்சியாக, அவன் அவளுக்கு மட்டும் கொடுத்த ரகசிய வாக்குறுதியாக மின்னியது. தன் விரல்களால் அந்த முடிவிலி சின்னத்தை அவள் மென்மையாக வருடினாள்.
அவன் விரல்கள் தன் கழுத்தில் பதிந்த அந்த இடம் இன்னும் சூடாக இருப்பது போல ஒரு பிரமை. அந்த மெல்லிய ஸ்பரிசத்தின் சிலிர்ப்பு அவள் உடல் முழுவதும் மீண்டும் ஒருமுறை பரவியது.
அவள் தன் நாட்குறிப்பை எடுத்தாள். இன்று வார்த்தைகள் அவளைத் தேடி வரவில்லை, அவளது இதயத்திலிருந்து கவிதையாகவே கொட்டின.
“டிசம்பர் 24. இன்று என் வாழ்வில் மறக்க முடியாத கிறிஸ்துமஸ்… அவர் எனக்கு ஒரு முடிவிலி சங்கிலியைப் பரிசளித்தார். ஆனால், அவர் எனக்குத் தந்த உண்மையான பரிசு அந்தத் திருடப்பட்ட சில நிமிடங்கள்… இரைச்சலான உலகிலிருந்து விலகி, இருளின் அரவணைப்பில், நாங்கள் மட்டும் இருந்த அந்தத் தனிமை… எங்க வாழ்க்கையின் அருமையான தருணம்!
அவர் மூச்சுக்காற்றின் வெப்பம் என் முகத்தில் பட்டதும், அவர் இதழ்கள் என் கைகளை முத்தமிட்டதும்… ஆ! அந்த ஒரு முத்தத்தில், அவர் சொல்லாத ஆயிரம் வார்த்தைகள் இருந்தன… என் விரல்களில் அவர் பதித்த முத்தம், ஒரு நட்சத்திரத்தைப் போல இன்னும் பிரகாசிக்கிறது…
காதல் ஒரு காத்திருப்பு என்று யாரோ சொன்னார்கள்… ஆனால், இப்போது புரிகிறது, எங்களுடைய காத்திருப்பு ஒரு தவம்… ஒவ்வொரு நாளும் எங்களை நாங்களே செதுக்கிக்கொள்ளும் ஒரு உன்னதமான சிற்பக்கலை…
இந்தக் காத்திருப்பு எங்களைப் பலவீனப்படுத்தவில்லை, எங்கள் காதலின் வேர்களை இன்னும் ஆழமாகப் பதிக்கிறது… இன்னும் சில மாதங்கள்… என் வாழ்வின் வசந்தத்திற்காக, ஒரு ஆயுள் காலம் கூட நான் காத்திருப்பேன்… அவருக்காக, அவரது காதலுக்காக, நான் என்றென்றும் காத்திருப்பேன்…” என்று மனதில் நிறைந்திருந்த காதலுடன் எழுது முடித்தாள்.
*********
அதே நேரம், தன் வீட்டு பால்கனியில் நின்றிருந்தான் ஆரவ். அந்த இரவின் குளிர் அவனைத் தீண்டவில்லை. அவன் நினைவுகள் முழுவதும் அமுதினி என்ற அக்னியில் காய்ந்து கொண்டிருந்தன.
அந்த மரகதப் பச்சைப் புடவையில், கழுத்தில் அவன் அணிவித்த சங்கிலியுடன், நிலவைப் போன்ற புன்னகையுடன் அவள் நின்ற காட்சி, அவன் இதயத்தின் ஆழத்தில் ஒரு ஓவியமாய் செதுக்கப்பட்டிருந்தது.
அவன் முழுமையாக, மறுக்கமுடியாதபடி, மீள முடியாதபடி காதலில் விழுந்திருப்பதை அந்த நொடி உணர்ந்தான். இதுவும் காதல்தான், ஆனால் இது வேறு. இது புயலுக்குப் பின் வரும் அமைதி. இது பாலைவனத்தில் கிடைத்த சோலை. இது இருண்ட குகைக்குள் பாய்ந்த ஒளிக்கீற்று.
ரியா அவனைத் துண்டு துண்டாய் உடைத்தெறிந்தாள். ஆனால், அமுதினி, அந்த ஒவ்வொரு உடைந்த துண்டையும் தன் அன்பெனும் விரல்களால் பொறுமையாய் எடுத்து, மீண்டும் ஒரு முழுமையான மனிதனாக அவனை உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். அவனை அவனுக்கே மீட்டுத் தருகிறாள்.
முதன்முறையாக, அவன் எதிர்காலத்தைப் பற்றி யோசித்தான். அந்த எதிர்காலத்தில், அவனும் அமுதினியும் மட்டுமே இருந்தார்கள். ஒளிவுமறைவின்றி, எல்லைகளின்றி, கைகோர்த்து நடக்கும் ஒரு அழகான எதிர்காலம். அந்தக் கனவு, அவன் காயங்களுக்கான மருந்தானது. அவன் அவளுக்காகத் தயாராக வேண்டும். அவளது தூய்மையான அன்பிற்குத் தகுதியான ஒருவனாக மாற வேண்டும்.
இனிவரும் நாட்கள் அவளுக்கானது. அவளுக்காகத் தன்னை முழுமையாய் செதுக்கிக்கொள்ளப் போகும் நாட்கள். உடைந்த ஒருவனாக அல்ல, அவளுக்குத் தகுதியான ஒரு முழுமையான காதலனாக அவன் தன்னைத் தயார்படுத்துவான். இது அவன் அவளுக்குத் தெரியாமல் செய்துகொண்ட சத்தியம்.
காத்திருப்பு தொடர்ந்தது. ஆனால், அது இனி வலி மட்டுமில்லை. அது ஒரு நம்பிக்கை. இரு ஆன்மாக்கள் இணையும் அந்தப் புனித நாளுக்கான பயணம்.
அவர்களின் காதல் கதை வலியுடன் தொடங்கினாலும், தற்போது அனைவரும் வியக்கும் வண்ணம் மிக மிக அழகாக எழுதப்பட்டுக்கொண்டே இருந்தது.
********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
1
+1
