Loading

அத்தியாயம் 25

 

 

தனக்கு எதிரே இருந்த சரணைக் கண்டதும் ரஞ்சனிக்கு இதயம் சிலநொடிகள் நின்று துடித்தது.

 

முன்னரே புகைப்படத்தில் பார்த்து இருந்ததால், உடனே அறிந்து கொண்டாள்.

 

முதல்நாள் நடந்த நிகழ்வுகளில் இருந்து இன்னும் வெளிவராமல் இருந்தவளிற்கு, முன் அறிவிப்பு இல்லாத அவனை தீடீர் வருகை சற்று அதிர்ச்சிதான். அதைவிட, ‘மௌனிகா இச்சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறாளோ?’ எனத் தவிப்பாகவும் இருந்தது.

 

“நீங்க.. சரண்..” என்று அவள் கேள்வியாய் நிறுத்த, “எஸ். ஶ்ரீசரண், மோனியோட ஃபியூச்சர் ஹஸ்பண்ட். நீங்க ரஞ்சனி தான? என்னைப் பார்க்கணும்னு ஃபோட்டோ கேட்ட, அவளோட ஃப்ரெண்ட்?”

 

ஆடவனின் மறுமொழியில் முகம் மலர்ந்தவள், “என்னைத் தெரியுமா? படி, சொல்லி இருக்காளா?”

 

சின்னதாய்ச் சிரித்தவன், “அவ சொல்லல. நானா கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். ஃப்ரெண்ட், ரெண்டை ஷேர் பண்ணிக்கிறோம்னு சொன்னா.. சோ, ஐ கெஸ்ட் இட்.”

 

“ஓகே ஓகே.. உள்ள வாங்க.. நீங்க வர்றீங்கனு படி என்கிட்ட எதுவும் சொல்லலையே?” என வினவிய படியே அவனிற்கு வழிவிட்டு, வாயிலில் இருந்து நகர்ந்து நின்றாள்.

 

“மோனிக்கே தெரியாது!” என்றான் ஆடவன்.

 

ரஞ்சனியுமே அதை அறிவாள் தான். சந்துருவின் விஷயம் எதுவும் சரணிற்குத் தெரிந்திருக்குமோ என்று லேசான சந்தேகம். அதனால் அவனின் வருகைக்கான காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு வினவினாள். 

 

“என்ன, உங்க பியான்ஸிக்கு சர்ப்ரைஸா?” என வினவிட,

 

“அப்படியும் வச்சுக்கலாம்!” என்று பதில் தந்தவனின் கண்கள் இல்லத்திற்குள் அலை பாய்ந்தது.

 

அதை கவனித்தவள், “படி, இன்னும் எழுந்திரிக்கல. நேத்து நைட் டுவல் ஓ கிளாக் வரை வொர்க் பண்ணீட்டு, லேட்டா தான் தூங்குனா.”

 

“ம்ம்..” எனத் தலை அசைத்தவன், கூடத்தில் அங்கும் இங்குமாய் நோக்கினான்.

 

“என்ன பார்க்கிறீங்க, உட்காருங்க. கிளீன்னா தான் இருக்கு.”

 

“அதுக்காக பார்க்கல. உங்களுக்கு ஓகேவா, நான் இங்க உட்காருறது? மோனி வேற இன்னும் எழுந்திரிக்கல. நீங்க, நான் வந்திருக்கிறதை அன்கம்ஃபரீட்டா ஃபீல் பண்ணக் கூடாது இல்ல?”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க முன்ன பின்ன தெரியாத ஆள் இல்லையே? என்னோட படியைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறீங்க. சோ.. எனக்கு அவளை மாதிரி தான் நீங்களும்!”

 

“தேங்க்ஸ் ம்மா.” என்றவன் இருக்கையில் அமர, “என்ன குடிக்கிறீங்க சார்? காஃபியா டீயா?”

 

“இந்த சார் எல்லாம் வேணாமே?”

 

“அப்புறம் வேற எப்படி கூப்பிடுறது உங்களை?”

 

“எனக்குக் கிட்டத்தட்ட உன்னோட வயசுல ஒரு தங்கச்சி இருக்கா.” என அவன் சட்டென்று ஒருமைக்குத் தாவிட, “ஒகே அண்ணா..” என்று சரணுடன் ஆன உரையாடலை இயல்பாகவே ஏற்றுக்கொண்டாள் ரஞ்சனி.

 

“என்ன குடிக்கிறீங்கனு சொல்லலையே?”

 

“எனக்காகனு எதுவும் செய்ய வேணாம். மோனி எழுந்திரிச்ச பின்னாடி, உங்களுக்காக என்ன பிரிபர் பண்ணுவியோ அதுவே போதும்!” என உரைத்தவன், தான் கொண்டு வந்த பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து இரு மிடறு அருந்தினான்.

 

“டூ மினிட்ஸ் அண்ணா, இப்ப வந்திடுறேன்!” என்று உள்ளே சென்றவள் பற்களைச் சுத்தம் செய்து, முகம் கழுவி அவனின் எதிரே வந்து அமர்ந்தாள்.

 

சரண் புன்னகை முகமாய் அவளைக் கேள்வியுடன் ஏறிட, “என்ன சர்ப்ரைஸ்?”

 

“மோனி வரட்டும் சொல்லுறேன்.”

 

“ப்ச்ச்.. உங்க ஆளுக்கிட்ட மட்டும் தான் சொல்லுவீங்களா?”

 

சின்னதாய்ச் சிரித்தவன், “பார்த்த அஞ்சே நிமிசத்துல ஃப்ரீயா பேச ஆரம்பிச்சிட்ட என்கிட்ட, இதை உன்னோட ஃப்ரெண்டுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம் இல்ல? நானா தான், அவக்கிட்ட ஒவ்வொன்னா கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டியதா இருக்கு.”

 

“படி, தனியாவே வளர்ந்தவ அண்ணா. அவ்வளவு சீக்கிரத்துல யார்க்கூடவும் பழக மாட்டா. ஒரே வீட்டுல இருந்தாலும், என்கூட அவ நார்மலா பேச ஆரம்பிக்கிறதுக்கே ரெண்டு மாசம் ஆச்சு. அப்புறம் உங்கக்கிட்ட நல்லாதான் பழகுறா. என்னைப் பத்தி எல்லாம் சொல்லி இருக்காளே?”

 

அவன் தலை அசைத்துப் புன்னகைக்க, “அண்ணா, எனக்கு ஒரு விஷயம் கேட்கணுமே உங்கக்கிட்ட?”

 

“கேளுமா.”

 

“உங்க மேரேஜ் எப்படி ஃபிக்ஸ் ஆச்சுனு எனக்குத் தெரியும். முன்னாடி எங்கேஜ்மெண்டை கேன்சல் பண்ண மாதிரி, இந்த கல்யாணத்தை எதுவும்.?” என அவள் கேள்வியாய் நிறுத்த, “எங்கேஜ்மெண்ட் நடக்க இருந்தது அம்மா செலக்ட் பண்ண பொண்ணுக் கூட. ஃபங்ஷன் நெருங்குற வரைக்குமே எனக்கு எமோஷனலா எந்த காண்டாக்டும் இல்ல. 

 

ஆனா, மோனி என்னோட ஓன் இன்டெண்ஸன்ல நான் செலக்ட் பண்ண பொண்ணு. இப்ப வரைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் அவக்கிட்ட நேரடியா ஓப்பீனியன் கேட்டுதான் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இந்த மேரேஜ் வேணும்கிறதால தான், இவ்வளவு மெனக்கெடலும். இல்லேனா, இதெல்லாம் தேவை இல்லையே? இப்ப, நான் இங்க வரவேண்டிய அவசியம் கூட இல்ல தான?”

 

அவனின் பதில் திருப்திகரமாய் இருக்க, சற்றே ஆசுவாச மூச்சை வெளியிட்டாள் ரஞ்சனி. சரணின் பக்கம் இருந்து அவன் எடுக்கும் முடிவுகளும் செய்யும் செயல்களும் சரி எனவே பட்டது. 

 

அதேபோல் மௌனிகா தனிமையில் வளர்ந்ததற்கும், அவள் மனிதர்களை அணுகும் முறையிலும், எவரையும் சட்டென்று நம்பவோ ஏற்கவோ தயங்கும் விதத்திலும் பெண்களுக்கே உரித்தான எச்சரிக்கை உணர்வும் பாதுகாப்பின் அவசியமுமே வெளிப்பட்டது. அவள் நடந்து கொள்ளும் விதத்திலும் பிழையேதும் இல்லை.

 

இவ்விருவரும் அதனை மனம்விட்டுப் பேசி பகிர்ந்து கொண்டாலே, உறவு சுமூகமாய் மாறிவிடும் எனத் தோன்றியது.

 

“ம்ம்..” என்று பொய்யாய் சலித்தபடி ஒரு நீண்ட மூச்சை வெளியிட்டவள், “இவ்வளவு தூரத்துக்குப் பேசுற நீங்க, அந்த சர்ப்ரைஸ் என்னனு மட்டும் சொல்ல மாட்டிறீங்க இந்த தங்கச்சிக்கிட்ட.?”

 

அவன் சிரித்திட, கைப்பேசி ஒலித்தது.

 

“ஒன் மினிட்..” என்று தொடர்பை இணைத்தாள். மறுபுறம் கணியன்.

 

“சொல்லுடா நல்லவனே!”

 

“மௌனி அக்கா ஓகேவா பிசாசு?”

 

“எல்லாம் ஓகேதான்.”

 

“ம்ம்.. ஃப்ரெண்டோட ரிலேஸன் ஃபங்ஷனுக்கு ஃபோட்டோ கிராபஃபரா போறேன். வர்றதுக்கு நைட் ஆகிடும். அந்த சந்துருக்கிட்ட பார்த்து கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க, ரெண்டு பேரும்!”

 

“அதை, நாங்க பாத்துக்குறோம். உனக்கு உடம்பு ஓகேவா, அதுக்குள்ள வேலைக்குக் கிளம்பிட்ட?”

 

“அது பரவாயில்ல. வீட்டுல இருந்தா நடந்ததைப் பத்தி அம்மா ஏதாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. இப்ப, அவங்கக்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறதுக்குத்தான் இந்த ஒர்க்கே!”

 

“கோபமா இருக்காங்களா அத்தை?”

 

“ம்ம்.. கொஞ்சமா. உன்னை யாரு இதுல தலையை நுழைக்க சொன்னதுனு என்னைத்தான் திட்டுனாங்க. உங்க ரெண்டு பேரையும் எதுவும் சொல்லல.”

 

“ஸாரிடா..”

 

“அட பிசாசு! ஸாரி சொல்லுற ஆளைப் பாரு. ச்சீ ப்பே..”

 

“ப்பே.. எருமை. உடம்பை பார்த்துக்க, கவனம்.”

 

“ஓகே ஓகே!” என்றவன் இணைப்பைத் துண்டிக்க, ரஞ்சனியும் புன்னகையுடன் கைப்பேசியை அணைத்தாள்.

 

சரண் அவளது உரையாடலைக் கேட்டும் கேட்காதது போல் இருந்து கொள்ள, “அத்தைப் பையன் அண்ணா. இங்கதான் இருக்கான் ஃபேமிலியோட. எனக்கு வாய்த்த அடிமைனு சொல்லலாம். மௌனிக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். இங்க வீட்டுக்கு வந்தான்னா, அக்கா அக்கானு அவளைத்தான் பிடிச்சுச் சுத்திக்கிட்டு இருப்பான்!” எனக் கணியனைப் பற்றிய அறிமுகத்தை உரைத்தாள்.

 

அவள் மொழிந்ததைக் கவனித்ததின் அடையாளமாக, ஆடவனின் தலை அசைந்தது.

 

“உங்க ஆளுக்கு செம தூக்கம் போல. போயி எழுப்பட்டு வர்றேன்.”

 

“ஹேய்.. வேணாம் விடு. ரெஸ்ட் எடுக்கட்டும்!” எனும் பொழுதே, அறைக்குள் கண்விழித்து இருந்தாள் மௌனிகா.

 

“அடடா! உங்களுக்குக்காக எழுப்புறேன்னு நினைச்சிட்டீங்களா? ஆஃபிஸுக்குப் போகணும் அண்ணா! இப்ப எழுந்து ரெடி ஆகலேனா லேட் ஆகிடும்.” என உரைத்திட, “படி, யார்க்கூட பேசிக்கிட்டு இருக்க?” என்றவாறே தூக்கம் மீளாத கண்களும் சோர்வு விலகாத தேகமுமாக வந்தாள் பாவை. 

 

சந்துரு அறைந்ததால் உண்டான கன்னத்து வீக்கத்தின் விளைவும், இரு தினங்களாய் நடந்த நிகழ்வுகள் மனதையும் உடலையும் பாதித்ததும், அவளை பெரும் அயர்ச்சிக்குள் தள்ளி இருந்தது. அது குரலிலும் வெளிப்பட்டு, காட்டிக் கொடுக்க தயாராய் இருந்தது.

 

கையற்ற ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து இருந்தாள். அது முழங்காலோடு நின்று பாவையின் தந்த நிற கால்களை காட்சிப்படுத்தியது. கழுத்து, காது, கை என எதிலும் எதுவும் அணிந்திருக்கவில்லை. கட்டப்படாத குழல் கன்னம் தொட்டு தோளில் சரிந்து மார்பில் படர்ந்து இடைக்கு மேல தனது வளர்ச்சியை முடித்திருந்தது.

 

பாவையின் குரலில் நிமிர்ந்து பார்த்த சரணிற்கு அவளின் இந்தத் தோற்றம் முற்றிலும் புதிது.

 

இதுவரை முழுதாய் உடை உடுத்தி, அதற்குத் தக்கபடி ஆபரணங்கள் அணிந்து, தோற்றத்தில் குறையற்ற பெண்ணாய் அவனது எண்ணத்தில் பதிந்து போனவள், இன்று ஆடை மட்டுமே அணிந்து மற்றபடி பிறப்பின் இலக்கணத்தோடு தற்போது மோகன பதுமையென புதிதாய் அறிமுகமானாள்.

 

ஆடவனை அவ்விடத்தில் எதிர்பார்த்திடாத மௌனிக்கு, பெரும் அதிர்ச்சி. அந்த அதிர்வில் தனது நிலையைக் கூட மறந்தாள்.

 

“சரண்.. நீங்க.. எப்படி..” எனத் திணறலுடன் வினவியவளிற்கு, ‘அவன் சென்னைக்கு, தான் இருக்கும் இல்லத்திற்கு வந்திருக்கிறான்!’ என்பது புரிபடவே சில நொடிகள் ஆனது.

 

“அதை அப்புறம் விசாரிக்கலாம். இப்பப் போயி, இந்த டிரஸ்ஸோட மேல் கோட்டை போட்டுட்டு வா படி!” என்ற ரஞ்சனியின் சொற்களில் தான், தான் இருக்கும் நிலையை உணர்ந்தாள்.

 

அவனை எதிர்கொள்ள இயலாது சட்டென்று வேறுபுறம் திரும்பியவள், “இப்ப வந்திடுறேன் சரண்!” என உரைத்து நகர்ந்தாள்.

 

அதுவரை பெண்ணவளின் உடல் அசைவுகளில் பதிந்து இருந்தவனது கண்கள், அவளின் திரும்பலில் முகத்திற்கு இடம் பெயர்ந்தது. கன்னத்தோடு ஒட்டிய குழலின் விலகலில் வீக்கத்தையும் தோலின் நிறமாற்றத்தையும் கண்டவன், “மோனி!” என்று அழைத்து நிற்க வைத்தான்.

 

கேள்வியாய் நோக்கியவள், “டூ மினிட்ஸ், முகத்தை மட்டும் வாஷ் பண்ணிட்டு வந்திடுறேன்!”

 

மறுமொழி எதுவும் உரைக்காதவன் அவளை நெருங்கி தாடையை விரல்களில் ஏந்தி முகத்தை ஆராய, “சரண், என்ன செய்யிறீங்க?” என ஓரடி பின் நகர்ந்து, தன்னைப் பற்றி இருந்த அவனது கரத்தை விலக்க முயன்றாள்.

 

“நாம ரெண்டு பேரும் ஹால்ல இருக்கோம். பக்கத்துல தான் உன்னோட ஃப்ரெண்ட் இருக்கா. நான் உன்னை என்ன செஞ்சிடுவேன்னு விலகி ஓட பார்க்கிற?” என நேரயடியாய் வினவிட, “நான் உங்களை அப்படி மீன் பண்ணல!” என்று தவிப்புடன் மொழிந்தாள்.

 

“இப்படி வந்து உட்காரு!” என சோஃபாவைக் கைக் காட்டிட, “சரண் டிரஸ்.?”

 

“நான் ஒன்னும் உன்னை முழுங்கிட மாட்டேன், வா!” என்று உரைத்தவனின் குரல் அழுத்தம் அவளை ஏதோ செய்திட, “நீங்க எப்படி திடீர்னு இங்க?” என எச்சில் விழுங்கியபடி கேட்டாள்.

 

கடந்த இரு தினங்களாய் நடந்த நிகழ்வுகளின் தாக்கம் அவளின் இயல்பை பறித்து, ஒருவித தயக்கத்தைத் தந்திருந்தது. அதன் நீட்சியாய் தற்போது சரணுடனான உரையாடலையும் தடுமாற வைத்தது.

 

அசையாது நின்று இருந்தவளைக் கவனித்தவன் கைப்பற்றி அழைத்து இருக்கையில் அமர வைத்து, தனது தோள் பையில் வைத்திருந்த சால்வையை எடுத்துப் போர்த்தி விட்டான்.

 

“இப்ப, ஓகே தான?”

 

“ம்ம்..”

 

“சரி சொல்லு, கன்னத்துல என்ன?” என்று கேட்டவாறே அதன் வீக்கத்தை விரல்களால் வருடிவிட, தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பதற்றத்துடன் பார்த்துக் கொண்டனர்.

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
22
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்