Loading

சிவாவை பார்க்கக் கூடாது என்பதற்காக பிரியா அலுவலக பக்கமே தலை வைத்து படுக்கவில்லை. ஆனால் இனி அப்படி ஓட வழியில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அமர் வேலை முடிந்து கிளம்பி விடுவான் என்பதால், அனைத்தையும் அவளிடம் ஒப்படைக்க முடிவு செய்து விட்டான்.

மனத்தை திடப்படுத்திக் கொண்டாள். அழுதது எல்லாம் போதும். இனி அழ ஒன்றுமே இல்லை. ஒரே ஒரு பிரச்சனை வந்ததும், அடுத்த பெண்ணை திருமணம் செய்ய அவன் தயாராகி விட்டான் என்றால் அவனது காதல் அவ்வளவு தான்.

காதல் உறுதியாக இருந்திருந்தால் அவளை அவன் விட்டிருக்க மாட்டான். அவள் எப்போதடா பிரிவாள்? என்று காத்திருந்தது போல், அவள் சண்டை போட்ட பிறகு அவன் அடுத்து பேசவே இல்லை. நேராக சென்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டான். சீக்கிரமே திருமணமும் நடந்து விடும்.

இதோடு சிவாவின் பகுதி அவளது வாழ்வில் இருந்து அழிந்து போனது என்ற எண்ணத்துடன் மனதை திடப்படுத்தினாள். எத்தனையோ பேர் காதல் தோல்வியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடப்பது போல் அவளாலும் கடக்க முடியும்.

காலையில் நல்ல எண்ணத்துடனே அலுவலகம் சென்றாள். குவிந்து கிடந்த வேலைகளில் தலையை நுழைத்திருக்க, அன்று வேலைக்கு புதிதாக சேர்ந்தவனிடம் மேனேஜர் பேசுவது தெரிந்தது.

என்னவென்று அழைத்து விசாரித்தாள். சிவா இருந்த பதவிக்கு புதிய ஆள் வந்திருப்பதாக தெரிய அதிர்ந்தாள். சிவாவே வேலையை விட்டு விட்டானாம். புது வேலை கிடைத்து விட்டதாம். அதுவும் அவனது மாமனாரின் பரிந்துரையில் கிடைத்ததாம். அதனால் கிளம்பி விட்டான்.

பிரியாவிற்கு மனம் கசந்து விட்டது. அப்படியென்றால் அவனது அத்தனை பிரச்சனைகளையும் அவனது திருமணம் சரி செய்து விட்டது. சண்முகியின் விவாகரத்து, பணப்பிரச்சனை, இப்போது வேலையும் நல்ல வேலை கிடைத்து விட்டது.

சிவாவின் கடைசி மின்னஞ்சலை படித்தாள். விரக்தியாக ஒரு சிரிப்பு வந்தது.

‘இனி நான் ஓட வேணாம். என் சொந்த ஆஃபிஸ விட்டு ஓடுற நிலைமை போயிடுச்சு. அவனாவே கிளம்பிட்டான்.. குட் பை’ என்றவள் அதோடு அவனுக்கு மனதிலிருந்தும் விடை கொடுத்தாள்.

அமர் கணேஷிடம் கடைசி பணத்தை கொடுத்து செட்டில் செய்தான்.

“வேலை முடிஞ்சது.. இனி எதுவும் செய்ய தேவையில்ல”

“உன் கல்யாணம் நடந்தா கண்டிப்பா கூப்பிடு” என்று விட்டு கணேஷ் கிளம்பி விட்டான்.

அவனது தொழில் முடிந்தது. பணமும் வந்தது. இனி யாரிடமும் அவன் வாயைத்திறக்க மாட்டான். வாயைத்திறந்தால் அவனது தொழில் மொத்தமும் போய் விடும். தொழில் தர்மம் யாருக்கு எது செய்தாலும் பணம் வாங்கியதும் அதை மறந்து விடுவது. இப்போதும் மறந்து விட்டு அடுத்தவர்களின் வேலையை பார்க்கச் சென்று விட்டான்.

அமர் பல நாட்களுக்குப்பிறகு நிம்மதியாக உணர்ந்தான். சிவாவை பற்றி தெரிந்ததில் இருந்தே அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இத்தனை நாட்களுக்குப் பிறகு ஓரளவு மனம் அமைதியடைந்திருந்தது.

சிவா வேலையை விட்டு போய் விட்டான். அவனது திருமணம் இந்த மாதக்கடைசி முகூர்த்தத்தில் வைத்திருக்கிறார்களாம். அதுவும் நடந்து விட்டால் பிரியா அவனுக்கு மட்டுமே சொந்தம். இனி பிரியாவை நம்பி அலுவலகத்தில் தனியாக விட்டு கிளம்பலாம்.

அத்தனை சந்தோசம் மனதில் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் பிரியாவோடு எப்போதும் போலவே பழகினான். திடீரென தன்னை வெளிப்படுத்திக் கொள்வது கூட ஆபத்தான விசயம் தான்.

பிரியாவின் மனம் இப்போது காயப்பட்டிருக்கும். அதை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் பின்பு தான் அவனது அன்பை அவளிடம் காட்ட வேண்டும்.

சண்முகியை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது மொத்த குடும்பமும்.

“என்னடி பேசுற? எதுக்கு இப்படி ஒரு முடிவு? எங்க கூட இருக்க பிடிக்கலயா?” என்று கல்யாணி அதிர கோதாவரி அமைதியாக பார்த்தார்.

அவரது மனம் ஓரளவு சண்முகியின் பேச்சை புரிந்து கொண்டது.

“ம்மா.. கூட இருக்க பிடிக்காம இல்ல.. நான் தனி வீட்டுக்கு போகனும்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன்”

“அதான் ஏன்? தனியா போய் என்ன செய்ய போற?”

“வாழத்தான் போறேன். நானும் குருவும் தனியா இருக்கது தான் நல்லதுமா..”

“அப்படி என்னடி நல்லது? நீங்க ரெண்டு பேரும் தனியா இருந்தா இங்க நாங்க உங்கள நினைச்சு பயந்துட்டே இருக்கதா?”

“பயப்பட என்ன இருக்கு? நான் என்ன ஊர விட்டேவா போறேன்? மில்லு பக்கத்துலயே நல்ல வீடு இருக்காம். இங்க இருந்து பத்து நிமிஷத்துல வந்துடலாம். அங்கயே தங்குனா எனக்கு வேலைக்கு போக வசதியா இருக்கும்” என்று சண்முகி சமாளித்தாள்.

“உண்மையா அதான் காரணமா சண்முகி?” என்று கோதாவரி அமைதியாக கேட்டார்.

சிவாவுக்கு அக்காவின் திடீர் முடிவு சுத்தமாக பிடிக்காவிட்டாலும் அமைதியாக இருந்தான். பெரியவர்களே பேசி முடிக்கட்டும். பிறகு நாம் பேசலாம் என்று காத்திருந்தான்.

“அது மட்டுமில்ல அத்த.. நான் இங்க இருக்கது தேவையில்லாத பிரச்சனை தான் வரும்”

“என்ன பிரச்சனை வரும்?” என்று கல்யாணி பொங்கினார்.

சண்முகி சில நொடிகள் தரையை பார்த்து விட்டு நிமிர்ந்து தாயை பார்த்தாள்.

“எனக்கு நீ கல்யாணம் பண்ணி வைக்கும் போது, என் புருஷன் வீட்டுல ஒரு நாத்தனார் இப்படி வீட்டோட பிள்ளையோட தங்குனா கட்டி வைப்பியாமா?” என்று கேட்டு விட கல்யாணிக்கு அதிர்ச்சியில் தொண்டை அடைத்து விட்டது.

“சண்முகி” என்று கோதாவரி பேச வர, “இருங்க அத்த.. நான் உங்கள குறை சொல்லல..” என்று தடுத்தாள்.

“நான் யாரையுமே குறை சொல்லல அத்த.. சொல்லவும் மாட்டேன். இப்ப இந்த நிமிஷம் நாம சொந்தக்காரவங்க.. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் நாம சம்பந்தம் பண்ணவங்க. ரெண்டு பக்கமும் மரியாதை முக்கியம். அந்த மரியாதை என்னைக்குமே கெட்டுப்போக கூடாது”

கல்யாணி மகளை அதிர்ச்சியோடு பார்த்தாரே தவிர வாயை திறக்கவில்லை.

“இந்த வீட்டுக்கு நாதினி வந்து நல்லா வாழனும். அவள சின்ன பிள்ளையில நான் பார்த்தது.. அப்புறம் பேசுனதும் இல்ல.. பார்த்ததும் இல்ல. ஆனா அவ நல்லா வாழனும்னு தான் எனக்கும் ஆசை. அம்மா அப்பா சிவா எல்லாரும் அவள நல்லா பார்த்துப்பாங்க. நான் இங்க இருக்கது சரி வராது”

“ஏன்?” என்று சிவா கோபமாக கேட்டான்.

“இந்த நிமிஷம் நான் இப்படி நினைப்பேன்.. நாளைக்கே நீயும் நாதினியும் சந்தோசமா வாழுறத பார்த்து எனக்கு பொறாமை வந்துட்டா? எனக்கும் புருஷன் இருந்தான்.. என்னை இப்படித்தான் பார்த்துட்டான். ஆனா துரோகியாகிட்டான்.. என்னால இப்படி குடும்பமா வாழ முடியலனு ஏக்கம் வந்துட்டா?”

“க்கா..”

“மனுச மனம் சிவா.. எப்படி வேணா மாறும்.. நல்லா வாழ்ந்த வாழ்க்கை அழிஞ்சு போச்சேனு அழுறதா? இல்ல நல்லா வாழ்ந்ததா நினைச்சதே பொய்னு நினைச்சு அழுறதானு தெரியாம மனசு வெந்துட்டு இருக்குடா.. புதுசா கல்யாணம் ஆகப்போற உங்க வாழ்க்கைய பார்த்து நான் கொஞ்சமா பொறாமை பட்டுட்டா கூட அது உங்கள தான் பாதிக்கும்.”

கலங்கிய கண்ணோடு சண்முகி பேச மற்றவர்களுக்கு வார்த்தை வரவில்லை.

“நான் கூடவே இருந்தா தேவையில்லாத எல்லா பிரச்சனையும் வந்து சேரும். இதுவே நான் தனி வீட்டுல இருந்தனா.. நீ உன் பொண்டாட்டியோட வந்து அக்கா வீடுனு சந்தோசமா விருந்து சாப்பிடலாம். என் புள்ளையும் நாளைக்கு உனக்கு பிறக்க போற பிள்ளையும் எந்த பொறாமையும் இல்லாம நல்லா வளருவாங்க. நானும் தாய் வீடுனு நாலு நாள் வந்துட்டு திரும்ப என் வீட்டுக்கு போயிடுவேன். எலி வலைனாலும் தனி வலைனு சும்மா சொல்லலடா.. தனியா இருக்கத்தான் எனக்கு ஆசை. அதுக்காக நான் மொத்தமா பிரியலயே.. மாமா மில்லுல தான் வேலையே பார்க்குறேன். பக்கத்துல தான் வீடு.. வந்து பார்க்க எத்தனை நேரம் ஆகும்? ஆனா தனியா இருக்கனும். அவ்வளவு தான்”

சண்முகி பேசி முடித்த போது பேரமைதி நிலவியது. யாரும் வாயைத்திறந்து எதுவுமே பேசவில்லை. எல்லோரின் மனமும் விதவிதமாக யோசித்துக் கொண்டிருந்தது.

முதலில் தெளிந்த கோதாவரி “பாதுகாப்பு பத்தி யோசிக்கலயே சண்முகி.. அவ்வளவு தூரம் போகாம.. பக்கத்துல கூட இருக்கலாம்ல?” என்று கேட்டார்.

“இல்ல அத்த.. பக்கத்துல இருக்கதும் இந்த வீட்டுல இருக்கதும் ஒன்னு தான். மில்லு பக்கத்துல தான் குரு ஸ்கூல் கூட இருக்கு. பஸ்ஸே தேவையில்ல. அவன நானே கொண்டு போய் விட்டுட்டு மில்லுக்கு போயிடுவேன். பாதுகாப்புல பெருசா பிரச்சனை வராது அத்த.. அது நல்ல மெயின் ஏரியா தான். அந்த துரோகி ஊர் மேயும் போது நானும் குருவும் பல நாள் தனியா தான் இருந்துருக்கோம். இப்பவும் இருந்துப்போம்.”

“போறதுனே முடிவு பண்ணிட்டியா?” என்று சிவா ஆதங்கமாக கேட்க, “ஏன்டா கோச்சுக்கிற? இத்தனை வருசமும் வேற இடத்துல தான வாழ்ந்தேன். இனியும் வாழப்போறேன் அவ்வளவு தான். பொண்ணுங்க பிறந்த வீடே கதினு வாழ முடியாது. இந்த நாட்டுல பிறந்தவங்க விதி அப்படி.” என்று சிரித்தாள்.

மற்றவர்களுக்கு மனம் ஏற்கவில்லை. கல்யாணி எத்தனையோ விதமாக பேசிப்பார்த்தும் சண்முகி மசியவில்லை. இப்போது இருந்து விடலாம். ஆனால் பின்னால் எத்தனையோ பிரச்சனைகள் வரும். நாதினி இங்கே நிம்மதியாக வாழட்டும். அவளும் தன் வாழ்வு பிள்ளையின் படிப்பு என்று நிம்மதியாக வாழ வேண்டும்.

இதற்கு முன்பு அவள் சம்பாதிக்கவில்லை. இப்போது சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறாள். அதை வைத்து அவள் தன்னையும் பிள்ளையையும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும் என்று நம்பினாள்.

விருப்பமே இல்லை என்றாலும் சண்முகியின் பேச்சுக்கு எல்லோருமே சம்மதிக்க வேண்டியதானது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்