24. நெஞ்சுக்குள்ளே காதல் விழா

Loading

 

அத்தியாயம் 24

 

“நான் அன்னைக்குச் சும்மா கையைப் பிடிச்சதுக்கு, எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு. வுட்பிக்குத் தெரிஞ்சா, செயலால தான் பதில் சொல்லுவாருனு பெரிய பத்தினி மாதிரி என்னென்னமோ சொன்ன? இப்ப நீயும் உன்னோட ஃப்ரெண்ட்டும் ஒருத்தனை தினமும் வீட்டுக்கு வர வச்சுக் கூத்தடிக்கிறீங்களே? இது உன்னைக் கட்டிக்கப் போறவனுக்குத் தெரியுமா?” என வரைமுறை இன்றி வார்த்தைகளை இறைத்தான் சந்துரு.

 

அவனுள் இருக்கும் மிருகம் மெல்ல வெளி வருவதைக் கண்டு, மனம் கசந்தது மௌனிக்கு.  

 

அதனை வெளிக் காட்டிடாது மெலிதாய்ப் புன்னகைத்தவள், “யாரு இந்த மாதிரி அடுத்தவங்க கேரக்டரைத் தப்பா பேசுவா தெரியுமா? சுய ஒழுக்கம் இல்லாதவனுக்குத் தான், மத்தவங்களோட ஒழுக்கத்தையும் சந்தேகப்படத் தோணும். நேர்வழியில நேர்மையா யோசிக்கிறவன், எதிர்ல இருக்கிற ஆள் எப்படிப் பட்டவனா இருந்தாலும், அவன்கிட்ட இருக்கிற நல்லதை மட்டும் தான் பார்ப்பான். சோ, இங்க தப்பு யார் மேல?”

 

“ஏய்.. உன்னோட கேவலமான நடத்தையை பத்தி சொன்னா, என்னையே அசிங்கப் படுத்துவியா நீ?” என்று அவன் கை ஓங்க, சரியாய் இவ்விடத்திற்கு வந்த கணியன், சந்துருவின் பின்னால் இருந்து எட்டி உதைத்தான்.

 

“எவன்டா அது?” என எழுந்தவன் ஆடவனைக் கண்டதும், “அட் எ டைம்ல ரெண்டு பொண்ணுங்களோட சுத்துற பொருக்கி நீ. என்னை அடிக்கிறியா?” என்று பதிலிற்குத் தாக்கினான்.

 

கணியன் எதுவும் பேசாது, இம்முறை தாடையில் முழங்கையால் குத்தி கழுத்திலும் அடிக்க, அடிதடி தீவிரமானது.

 

“அது எப்படிடா ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரையும் கரெக்ட் பண்ண?” எனச் சண்டைக்கு இடையே சந்துரு கேட்ட வினாவில், ஆடவன் மொத்தமாய் சுயத்தை இழந்தான்.

 

‘தங்களிற்கு இடையேயான உறவைப் பற்றி விளக்கம் உரைத்தாலும் இவனைப் போன்ற ஆட்கள் அதனைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்!’ என உணர்ந்ததால், கணியன் எவ்வித விளக்கத்தையும் கொடுக்க முற்படவில்லை.

 

அதேநேரம் தரமற்ற அவனின் வார்த்தைகளைக் கேட்கச் சகியாது தான், அடித்து விட்டான்.

 

குடியிருப்பு பகுதி ஏன்பதால் சுற்றி இருந்தவர்கள் வேடிக்கைப் பார்க்கத் துவங்கி விட்டனர். நடக்கும் நிகழ்வு இரு பெண்களின் உணர்வுகளையும் வெகுவாய் தாக்கிட, கணியனை தடுத்து சண்டையை நிறுத்த முயன்றனர். 

 

“டேய், வேண்டாம். விடு!” எனக் கரத்தைப் பற்றி இழுத்து உரைத்த மௌனியின் சொல்லில் இளையவன் சற்றே நிதானம் அடைய, ‘இதுதான் வாய்ப்பு!’ என்று தனது மொத்த திறனையும் ஒன்றாய் திரட்டி கணியனைத் தாக்கினான் சந்துரு.

 

அதில் அவன் நிலைக் குலைந்து சரிய, அத்தை மகனைக் கண்டு தாங்கிட இயலாதவளாய்  பட்டென்று அறைந்து இருந்தாள் ரஞ்சனி.

 

மற்றவர் பார்க்க ஒரு பெண் தன்னை அடித்தது, ‘ஆண்!’ என்ற சந்துருவின் ஈகோவை வெகுவாய் சீண்டி இருக்க, இம்முறை ரஞ்சனியை நோக்கிக் கைநீட்டி விட்டான்.

 

கை வீச்சின் வேகத்திற்கு ஒரு நொடி முந்திக் கொண்ட மௌனிகா, தோழிக்குப் பதிலாய் அவனது அறையை தனது கன்னத்தில் வாங்கிக் கொள்ள, அவ்விடமே கப்சிப் என்றானது.

 

குருதி வெளியேறும் அளவிற்கு அடி வாங்கிய கணியனும், ரஞ்சனியும் அதிர்ந்து நோக்கினர்.

 

“நான், உனக்கு ஏன் நோ சொன்னேன்னு தெரியுமா? இதுக்குத்தான். நாம ஒருத்தரை உண்மையா நேசிச்சா, நம்மளால அவங்களைக் காயப்படுத்த முடியாது. ஆனா.. நீ? எந்த அளவுக்கு என்னை அசிங்கப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்குச் செஞ்சிட்ட. உனக்கு, என்மேல இருக்கிற உணர்வு லவ் இல்ல. லஸ்ட்! 

 

இனிமேலும் என்னை டிஸ்டர்ப் பண்ணாத. நீ இந்த அளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்கிட்ட பின்னாடியும் நான் அமைதியா இருக்க காரணம், எனக்காக வந்த ரஞ்சனியும் கணியனும் இந்த விசயத்தால அஃபெக்ட் ஆகக் கூடாதுனு தான். நீ என்கிட்ட வந்து பேசுனது இதுவே லாஸ்ட் டைமா இருக்கட்டும். இன்னொரு தடவை அந்தமாதிரி செஞ்சிடாத. அப்புறம் நான் அமைதியா இருக்க மாட்டேன். பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்!” என முகத்தில் எவ்வித மாற்றத்தையும் காட்டாது குரலில் அழுத்தத்தை கூட்டி விரல் நீட்டி அவள் எச்சரிக்க, சரியாய் இவ்விடத்திற்குக் காவல் துறையினர் வந்து சேர்ந்தனர்.

 

அங்கிருந்த அனைவரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்க்க, “ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஏதாவது பிரச்சனை ஆச்சுனா   அப்பார்ட்மெண்ட் ஓனருக்கு நான் தான்மா பதில் சொல்லணும்! அதான், போலீஸுக்கு ஃபோன் போட்டுட்டேன்!” என்றார் அக்குடியிருப்பை நிர்வாகிக்கும் பொறுப்பாளர். 

 

புரிந்து கொண்டது போல் தலை அசைத்த பாவை, அவர்களது விசாரணையின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள்.

 

நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

விபரம் அறிந்து வந்து சேர்ந்தனர், கணியனின் அன்னை ராணியும் தமக்கை யாமினியும்.

 

“ஸாரிம்மா.. எனக்கு ஹெல்ப் பண்ணத்தான் பார்த்தான் கணி. ஆனா, அது வேற மாதிரி ஆகிடுச்சு! நான் சீக்கிரமே இதைச் சரிசெய்ய முயற்சி பண்ணுறேன்.” என அவள் மன்னிப்பை வேண்ட, மேலும் சூழலைச் சிக்கலாக்க விரும்பாது அதனை ஏற்றுக் கொண்டனர் அவர்கள்.

 

காவல் நிலையத்தில் கேட்ட வினாக்களிற்குப் பதில் தந்து, கணியனை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல, தோழிக்காக அங்கேயே நின்று கொண்டாள் ரஞ்சனி.

 

“ஏம்மா இவ்வளவு தூரம் ஆகி இருக்கு? உங்க வீட்டூல இருந்து யாரும் வரல? அவங்களுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா? இப்படித்தான் பொண்ணைப் பத்திக் கவலைப்படாம இருக்கிறதா?” எனக் காவல் அதிகாரி.. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடுவதற்காக அவளைப் பற்றிய விபரங்களை கேட்டுக் கொண்டிருக்க, “எனக்கு அப்படி யாரும் இல்ல. நான், தனியா தான் இருக்கேன்!” என்று பதில் தந்த, மௌனி தனது பொறுப்பை தானே ஏற்றுக் கொள்வதாய் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டு கிளம்பி வந்தாள்.

 

ரஞ்சனியும் கணியனின் குடும்பத்தாரும், சந்துருவின் தவறான நடவடிக்கைக்காக அவன்மீது புகார் கொடுத்து இருந்தனர்.

 

“அவன் தான் என்னை முதலில் தாக்கினான். பாதுகாப்பிற்காக நான் மீண்டும் தாக்கி நான் எதிர்வினை செய்தேன்!” என சந்துருவும் தன் பங்கிற்கு கனியனின் மீது புகார் அளித்தான்.

 

விசாரணை ஒருபுறம் இருக்க.. இருவருமே ஆளிற்கு ஒரு வழக்கறிஞரை வைத்து, ஜாமின் பெற்றிருந்தனர் மறுநாளில்.

 

இரவெல்லாம் தோழியுடன் இணைந்து, கணியனை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கான பணிகள் அனைத்தையும் செய்துவிட்டு, அடுத்த நாளின் நண்பகல் பொழுதில் இல்லம் வந்து சேர்ந்தாள் ரஞ்சனி.

 

கூடத்தில் இருந்த இருக்கையில் மொத்தென்று அமர்ந்து கண்களை மூடியை மௌனியைக் கண்டவள், “ஏன் படி, இப்படிச் செஞ்ச?”

 

இமைகளைத் திறந்த பாவை, “எதைக் கேட்கிற ரஞ்சு?”

 

“உனக்கு, யாரும் இல்லனு சொல்லிட்டு வந்திருக்க?”

 

“வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற?”

 

“முதல்ல சரி! இப்பதான் எங்கேஜ்மெண்ட் ஆகிடுச்சே? நீ கல்யாணம் செஞ்சிக்கப் போற ஆள் இருக்காரு இல்ல? அவரு, உன்னோட ஃபேமிலி தான?”

 

“இன்னும் எங்களுக்கு மேரேஜ் ஆகல படி!”

 

“சோ வாட்? அவருக்கிட்ட இந்த விஷயத்தைப் பத்தி சொல்லுறதுல, என்ன பிரச்சனை உனக்கு?”

 

“பிரச்சனையா? என்னை ஒருத்தன் அசிங்கமா பேசிட்டான்னு சரண்கிட்டச் சொல்லச் சொல்லுறியா?”

 

“சொல்றதுல என்ன தப்புனு தான் கேட்கிறேன்!”

 

“சரி சொல்றேன்னே வச்சுப்போம். என்ன நடக்கும்?”

 

ரஞ்சனி தோழியைப் புரியாமல் பார்க்க, “மேரேஜ் அரேஞ்ச்மெண்ட்ஸ் ஃபுல்லா அவர் தான் பார்க்கிறாரு படி. என்னாலயோ ஆச்சியாலயோ எதுவும் செய்ய முடியல. இந்த சுச்சுவேஷன்ல இங்க இந்த மாதிரி பிரச்சனை. வாங்கனு கூப்பிட சொல்லுறியா?

 

கூப்பிட்டா, அங்க எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு அவர் உடனே கிளம்பி வந்துடுவாரா என்ன? லாவண்யாவோட நடவடிக்கை பிடிக்கலனு தான, கல்யாணத்தை நிறுத்தினாரு. இப்ப நான் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்த விஷயம் தெரிஞ்சா, என்னை ட்ரபுள் மேக்கரா நினைக்க மாட்டாரா? ஒருவேளை  இந்த கல்யாணத்தையும் நிறுத்திட்டா? அப்படி செஞ்சா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் மேனேஜ் பண்ணிப்பேன், ஆனா ஆச்சி.?”

 

“அவருக்கிட்ட இருந்து இந்த விஷயத்தை மறைக்கிறது சரின்னு நினைக்கிறியா?”

 

“நான் மறைக்கல படி. சொல்லல, அவ்வளவு தான்! இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.”

 

“சரி, சொல்லல. அவருக்கு பின்னாடி தெரிய வந்தா?”

 

“வரட்டுமே? என்னை எதுவும் கேட்டா, அப்ப நான் பதில் சொல்லிக்கிறேன்.”

 

“இதுனால ஃபியூச்சர்ல உங்களுக்கு இடையில ஏதாவது பிரச்சனை வந்திட போகுது படி?”

 

“பிரச்சனை இல்லாத லைஃப் ஏது. பார்த்துக்கலாம்.”

 

“ம்ம்.. நீ நல்லா இருந்தா ஓகேதான்!”

 

“நல்லா இல்லாம என்ன?” என உரைத்து மெலிதான பெருமூச்சை வெளியிட்டவள், “ஸாரி படி! என்னால நீயும் கணியும் தேவை இல்லாம இதுல சிக்கிட்டீங்க‍!”

 

“ஹேய்.. உனக்காக ஒன்னைச் செய்யிறது எப்படித் தேவை இல்லாததுனு ஆகும்? இதை பத்தி ரொம்ப யோசிச்சு வொரி பண்ணிக்காத விடு!”

 

“உன்னோட வீட்டுக்குத் தெரிஞ்சா, பிரச்சனை ஆகிடுமே?”

 

“தெரியாது. நான் அத்தைக்கிட்டயும் சொல்ல வேணாம்னு சொல்லி இருக்கேன்.”

 

“ம்ம்.. நான் சீக்கிரமே கணி மேல இருக்கிற போலீஸ் கம்பிளைண்டை என்ன செய்யிறதுனு பார்க்கிறேன்!”

 

“சரி படி! கொஞ்சம் ரெஸ்ட் எடு, போ. நேத்து நைட் இருந்து ஜாமினுக்காக லாயரைப் பார்க்கிறது அங்க இங்கனு ரொம்ப அலைஞ்சிட்ட. இன்னைக்கு லீவா போட்ட? மேரேஜுக்கு மொத்தமா லீவ் எடுக்கணும்னு சொல்லி, வெயிட் பண்ணிட்டு இருந்தியே?”

 

“நீயும் தான என்கூட அலைஞ்ச?” எனத் தோழியின் அக்கறையில் சின்னதாய் சிரித்தவள், “லீவ் இல்ல படி! வொர்க் ஃப்ரெம் ஹோம், கேட்டிருந்தேன். போயி வேலையைப் பார்க்கணும். எனக்கு ஒரு காஃபி மட்டும் போட்டு தர்றியா ப்ளீஸ்?”

 

“எனக்குமே தலை வலிக்கிது. ஏதாவது சூடா குடிச்சா தான் நார்மல் மூடுக்கு வர முடியும். வெயிட், ரெண்டு பேருக்கும் சேர்த்தே போட்டுக் கொண்டு வர்றேன்!” என்றவள் சமையல் அறைக்குச் செல்ல, மௌனி தனது அறையை நோக்கி நடந்தாள்.

 

இருவருமே குளித்து தயாராகி வந்தனர். தோழியைத் தனியே விட விருப்பம் இன்றி, அன்றைய தினம் அலுவலகத்திற்கு முன்னரே விடுப்பு சொல்லி இருந்தாள் ரஞ்சனி.

 

அவள் தயாரித்து தந்த காஃபியை அருந்திய மடிக்கணினியைத் திறந்து பணியில் மூழ்கிப் போய்விட, அன்றைய மிச்சப்பொழுது அப்படியே கழிந்து போனது.

 

மறுநாளைய விடியல் பல வியப்புகளை தன்னுள் ரகசியமாய் வைத்துக் கொண்டு புலர்ந்தது, இரு பெண்களிற்கும்.

 

முதல் நாள் இரவில் நெடுநேரம் பணி செய்துவிட்டு தாமதமாய் உறங்கியதால் மௌனி இன்னும் எழாமல் இருக்க, காலை ஏழு மணக்குக் கேட்ட அழைப்பு ஒலியில், ‘இந்த நேரத்துக்கு யாரு? அந்த சந்துரு திரும்பவும் பிரச்னை செய்ய வந்துட்டானா என்ன.?’ என்ற சிந்தனையுடனே எழுந்து வந்தாள் ரஞ்சனி.

 

கதவில் இருந்த கண்ணாடி வில்லையின் வழியாய் பார்த்தவளிற்கு, வெளியே இருப்பது அவன் இல்லை என தெரிந்தது. ஆனால் புதிதாய் யாரோ நின்றிருந்தார்.

 

பக்கவாட்டு தோற்றம் மட்டுமே தெரிந்ததால் ‘யாராய் இருக்கும்?’ என்ற யோசனையுடனே கதவைத் திறந்தாள்.

 

வாயிலில் பளீரென்ற புன்னகையுடன் நின்று இருந்தான் ஶ்ரீசரண்.

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 64

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
63
+1
3
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்