சுப்பிரமணியை சிறைக்கு அனுப்பி விட்டு சந்தோசமாக நிச்சயதார்த்த வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சுப்பிரமணியின் தாய் புயல் போல வந்து நின்றார்.
“ஏன்டி.. உனக்கு மூளையில்லயாடி? என் புள்ளைய இப்படி ஜெயில்ல தள்ளிட்டியே.. நீயெல்லாம் நல்லா இருப்பியா? நாசமாத்தான்டி போவ” என்று அவர் போக்கில் சாபம் விட சண்முகி அவரை முறைத்து வைத்தாள்.
கல்யாணி பதிலுக்கு சண்டைக்கு போக சில நிமிடங்கள் அந்த வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது. இரண்டு ஆண்களும் வேலைக்கு போயிருக்க குருவும் பள்ளியில் இருந்தான்.
“ஆம்பளனா அப்படி இப்படிதான்டி இருப்பான்.. நீ தான் சகிச்சுட்டு போகனும்..” என்று அறிவுரை சொன்னார் மாமியார்.
சண்முகிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“அப்படி அவன சகிச்சுக்கிற அளவு அவன் பெரிய இது இல்ல.. மரியாதையா வெளிய போ”
“இப்ப கேஸ வாபஸ் வாங்க போறியா இல்லையா?”
“அத போய் அவன் வப்பாட்டி கிட்ட கேளு.. என் கிட்ட கேட்காத”
“பேசுவடி.. பேசுவ.. பெத்தவ என்னை பகைச்சுட்டு உன்னை தனியா கூட்டிட்டுப்போய் சந்தோசமா வாழ வச்சதுக்கு இதுவும் பேசுவ.. என் கிட்ட இருந்து புள்ளைய பிரிச்சதுக்கு தான்டி நீ இப்படி வாழா வெட்டியா இருக்க” என்று வார்த்தைகளை இரைத்தார்.
“இனி உன் புள்ளைய நீயே மடியில போட்டு கொஞ்சு.. போ”
“கொஞ்சுவேன்டி.. கண்டிப்பா என் புள்ளைய இனி உன் கிட்ட விட மாட்டேன்.. ஆனா நீ ஒரு மகன பெத்து வச்சுருக்கல? அவன் உனக்கு காட்டுவான் எல்லாம்” என்று கடைசியாக சாபமிட்டு விட்டு கிளம்பி விட்டார்.
கல்யாணிக்கு மனம் மீண்டும் சோர்ந்தது. மகனது வாழ்வில் நல்லது நடக்க மகளின் வாழ்வின் பிரச்சனைகள் தீரும் என்று காத்திருக்க விரைவில் முடிவு வராது போலவே?
“நீ ஏன்மா இப்படி உட்கார்ந்துருக்க? அவ கிடக்குறா.. பிள்ளை பெத்து ஒழுங்கா வளர்க்க துப்பில்லாதவ.. ரெட்டை வேசம் போட இவளே தான் அவனுக்கு சொல்லி கொடுத்துருப்பா.. இவ போட்ட வேசத்தையும் நான் பார்த்தேனே. இதுங்க எல்லாம் வாழும் போது நான் மட்டும் அழிஞ்சு போவனா? விடுமா” என்று தாயை தேற்றினாள்.
மறுபக்கம் சுப்பிரமணி சிறையில் இருப்பது “அவளுக்கு” தெரிய அதிர்ந்தாலும் அவனை வந்து பார்க்கவில்லை. அவளுக்கு வேலை தேடுவது முக்கியமாக இருந்தது.
அடுத்த நாள் நீதிமன்றத்தில் அவனை ஒப்படைக்க, வக்கீல் தன் தரப்பு விதமாக பதினைந்து நாட்களாவது சிறையில் வைத்து தண்டனை தருமாறு கேட்டுக் கொண்டார்.
நீதிபதி விசாரித்து விட்டு பத்து நாட்கள் சிறையில் இருக்கச் சொல்லி தீர்ப்பு வழங்கினார். அதோடு இவர்களது விவாகரத்தையும் சீக்கிரமே முடித்துக் கொடுக்கும் படி சொல்லி விட்டார்.
சண்முகி சந்தோசமாக வீடு திரும்ப சுப்பிரமணி சிறைக்குச் சென்றான்.
✦
இரண்டு வாரங்களும் கடந்து போனது. நிச்சயதார்த்த நாள் வந்தது. அன்று காலையிலேயே சிவாவிற்கு மனம் வருந்தியது. அவனது காதலை கொன்று விட்டான். அவன் கையாலேயே கொன்று விட்டான்.
பிரியா அவனுக்கு இல்லை. இனி நாதினி தான் எல்லாம். மனம் பிரியாவை மீண்டும் மீண்டும் நினைத்து வருந்தினாலும் நாதினியின் காதலை கண்டு அவன் மெய்மறந்தான்.
ஐந்து வருடங்களாக தனக்குள் காதலை புதைத்து வைத்து விட்டு குடும்பப் பகையை மீறி அவளது காதலை சேர்த்து வைக்கிறார்கள்.
நாதினிக்கு உண்மையாக இருக்க வேண்டும். நிச்சயமாக அவளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதற்கு முதல்படியாக பிரியாவின் எண்ணை அழித்தான். அவளோடு பேசிய அனைத்தையும் அழித்து தன் கைபேசியை வெறுமையாக்கினான்.
அவனது மனதைப்போலவே கைபேசியும் வெறுமையானது. இனி இரண்டிலும் நாதினிக்கு மட்டுமே இடம்.
அலுவலக வேலையை கூட விட முடிவு செய்து விட்டான். அடுத்த வேலையை தேட அதே சம்பளத்தோடு நிறைய இருந்தது.
குறிப்பாக அமருக்கு சொந்தமான அனைத்தையும் தவிர்த்து விட்டு தேடி வைத்தான்.
நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு விசயத்தை நாதினியிடமும் மற்றவர்களிடமும் சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.
பெரியவர்கள் சூழ நிச்சயதார்த்தம் நன்றாகவே நடந்தது. சிலர் சண்முகியின் வாழ்வை பற்றி பேசினாலும் அதை எல்லாம் சண்முகி கண்டு கொள்ளவில்லை.
“இப்படி ஒருத்தி வீட்டோட வந்தப்புறம் உன் மகள அதே வீட்டுக்கு அனுப்புறியே.. நல்லா இருக்குமா?” என்று கேட்டவர்களுக்கு கோதாவரியே நன்றாக கொடுத்தார்.
யார் பேச வந்தாலும் “என் நாத்தனார பத்தியோ அவ மகள பத்தியோ பேசுறதா இருந்தா வாய திறக்காதீங்க” என்று அதட்டி அடக்கினார்.
நிச்சயதார்த்தம் பற்றி அறியாமல் பிரியா அன்று அலுவலகம் வந்தாள். அமரை சந்தித்துப்பேசி விட்டு கிளம்ப முடிவு செய்தாள். இன்னும் சில காலம் தான் அமர் இங்கு இருப்பான். பிறகு அவனது வேலையை பார்க்க அவன் நிறுவனத்துக்கு சென்று விடுவான். மொத்த பொறுப்பும் பிரியாவிடம் வந்து விடும்.
பிரியா வந்து நிற்க அலுவலகத்தில் பலர் சிவாவின் நிச்சயதார்த்தம் பற்றித்தான் பேசினர். காதில் வாங்கியவளுக்கு நெஞ்சம் வெடித்து விட்டது.
கண்கள் கலங்க வேகமாக அமரின் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டாள். அவன் இன்னும் வரவில்லை. அதனால் தனிமையில் சில நிமிடங்கள் அழுது கரைந்தாள்.
இத்தனை நாளும் சிவாவை பார்க்கும் தைரியம் இல்லாமல் தான் அலுவலகம் வராமல் வெளியே சுற்றினாள். இன்று அவனுக்கு நிச்சயதார்த்தமே நடந்து விட்டது. அடுத்தது திருமணம் நடந்து விடும்.
இனி சிவாவை வேறு ஒருத்தியின் கணவனாக அவளால் பார்க்க முடியுமா? அதை அவளால் தாங்க முடியுமா?
முடியவே முடியாது. இந்த வேலையே வேண்டாம். அலுவலகம் வேண்டாம் என்று ஓடத்தோன்றியது. அமரிடம் சொன்னால் சிவாவை வேலையை விட்டு துரத்தி விடுவான். ஆனால் சிவாவை அவ்வளவு தூரம் தண்டிக்கும் அளவு இன்னும் அவளது மனம் கடினப்படவில்லை.
அழுது கொண்டே இருந்தவள் கதவைத்திறந்து அமர் வரவும் அவசரமாக முகத்தை துடைத்தாள்.
“பிரியா? ஆர் யூ ஓகே?” என்று கேட்டு அமர் அருகே வந்து அமர்ந்தான்.
“ம்ம்.. கொஞ்சம் பழசு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு..”
“அவன் உன் கிட்ட பேசலயா? நீங்க பேட்ச் அப் ஆகலயா?”
மறுப்பாக தலையசைத்தவள் “இனி ஆகவும் தேவை இல்ல” என்றாள் முடிவாக.
“நான் எதாவது?”
“எதுவும் வேணாம் அமர்.. அவன் அவ்வளவு வொர்த் இல்ல”
“அப்ப ஏன் கண்ணீர் விடுற? உன் கண்ணீருக்கும் அவன் வொர்த் இல்ல பிரியா.. ஸ்ட்ராங்கா இரு”
“இனிமே இருக்க ட்ரை பண்ணுறேன்.. இப்ப வேலைய பார்க்கலாம். எனக்கு மைண்ட் சேஞ்ச் ஆகனும்”
அமர் உடனே வேலையை பற்றி பேச பிரியா சற்று மனம் மாறினாள்.
✦
அடுத்த நாள் சிவா தன் வேலையை விடுவதைப் பற்றிச் சொன்னான்.
“ஏன்டா விடப்போற?”
“நிர்வாகம் மாறிடுச்சுமா.. அவங்களாவே சிலர துரத்தி விட்டு புது ஆளுங்கள சேர்ப்பாங்க.. அப்படி என்னை துரத்துறதுக்குள்ள நல்ல வேலை தேடிக்கலாம்னு பார்க்குறேன்” என்று சிவா சொல்ல மற்றவர்களுக்கு மறுக்க முடியவில்லை.
நாதினிக்கு அவன் என்ன செய்தாலும் சரி தான். சம்மதமாக தலையாட்டி விட்டாள்.
ராமமூர்த்தி மட்டும் அவருக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக சொன்னார். அவரிடமே மருமகனை வேலைக்கு அழைக்கலாம் தான். ஆனால் மூத்த மருமகன் ஒருவன் இருந்தான். அவன் பாரபட்சம் பார்ப்பதாக எதுவும் நினைக்கக் கூடாது.
அதனால் சிவாவுக்கு வேறு இடத்தில் வேலை தேட முடிவு செய்தார். இரண்டு நாட்களில் வேலை உறுதியும் ஆகி விட சிவா தன் ராஜினாமாவை மின்னஞ்சல் செய்து விட்டான்.
இனி இங்கே வேலை பார்த்து தினம் தினம் பிரியாவை பார்க்கும் வேதனை இருக்கப்போவதில்லை. நிம்மதியாக நாதினியோடு வாழுவான்.
தொடரும்.