Loading

காதல் -24

 

வென்பணிகள் ஊர்வலம் செய்து கொண்டிருப்பதை ரசிக்கும் தன்மையற்று  அமர்ந்திருந்தாள் சாயாலி.. நடந்த ஒவ்வொரு சம்பவங்களும் அவளை ஈட்டியாய் குத்த அதிலிருந்து வெளி வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது பாவி மனம்..

 

ஆறுதல் படுத்த தமிழ் காதலன் புத்தகமும் இல்லை.. இப்போதெல்லாம் அந்த புத்தகத்தை பத்தி நினைத்தாலே.. அதற்கு பின்னால் ஒளிந்து இருக்கும் மர்மம் என்னவென்று மனம் சிந்தித்து சோர்ந்து போகிறது.

 

இவர்கள் எல்லாம் வெறுப்பாக பார்க்கும் அளவிற்கு அந்த புத்தகத்திற்கு பின்னால் அப்படி என்ன இருக்கிறது என ஒவ்வொரு நாளும் சிந்தித்து அவளது தலை வலித்தது தான் மிச்சம்..

 

இதோ இந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. மூர்த்தியும் அவரது உடமைகளை எடுத்து கொண்டு வந்து சிந்தாமணியுடன் ஒரே அறையில் தங்கிக் கொண்டார். தன் மனைவிக்கு நடந்திருக்கும் அவலத்தை கேட்டதில் இருந்து அவர் அவராகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

 

அந்த சூழலில் கண்டிப்பாக சிந்தாமணி தன்னை தான் தேடி இருப்பாள்.. அந்த நேரத்தில் அவளை காப்பாற்ற இயலாத பாவியாகி விட்டேனே.. என மனம் ஊமையாக அழுதது.. ஆனாலும் சிந்தாமணியிடம் நடந்த எதையும் தனக்கு தெரிந்ததை போல காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்து விட்டார்.

 

இந்த ஒரு வாரத்தில் சிந்தாமணி ஓரளவிற்கு உடல் நிலையில் முன்னேறி இருந்தார்.. படுக்கையில் இருந்ததால் அவர் முதுகில் இருந்த புண் எல்லாம் சிறிது சிறிதாக ஆர தொடங்கியது.

 

கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள் சாயா.. அவருக்கு வேண்டிய பணிவிடைகளை எல்லாம் செய்து வந்தாள்.. மற்றவர்கள் பார்வைக்கு அவள் மருமகளாக செய்தாலும்.. மறவனது பார்வைக்கு அவள் வீட்டு வேலைக்காரியாக மட்டுமே தெரிந்தாள்..

 

இந்த எழு நாட்களில் ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேசவில்லை சிந்தாமணி.. நடப்பது அனைத்தையும் கண்களால் பார்ப்பதோடு சரி.. மறுப்புக்கு தலையை ஆட்டி விடுவார். இவருக்கு பேச்சு வரவில்லையா… இல்லை பேச்சு இருந்தும் பேசாமல் இருக்கிறாரா… ? என்பது யாருக்கு தெரியவில்லை… இந்த அளவிற்கு அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டதையே அனைவரும் மன நிம்மதியுடன் பார்த்து வைத்தனர்.

 

அன்றும் தனது அன்றாட வேலைகளை முடித்து விட்டு தான் அவள் அறையில் இருக்கும் பால்கனியில் அமர்ந்திருந்தாள் சாயாலி.. ஒரு வாரமும் அவளது படுக்கை மறவன் அறையில் மாற்றப்பட்டு இருந்தது.. அவன் மட்டும் இருந்திருந்தால் அடுக்களையில் உறங்க வைத்திருப்பான்.. தற்போது மூர்த்தியும் இந்த வீட்டிற்கு வந்து விட, அவர்களுக்குள் நடக்கும் பூசல் தெரியாமல் இருக்க, அவளை அவனது அறைக்குள் அனுமதித்தான்.

 

இந்த ஒரு வாரமும் அவள் அறை ஓரத்தில் இருக்கும் சுவற்றோடு சுவராக ஓட்டிக் கொண்டு தன் இரவை கழித்தாள்.. இவள் அறைக்குள் வந்ததில் இருந்து மறவன் இரவு வீடு வருவதில்லை .

 

அதுவே அவளுக்கு சற்று நிம்மதியாக இருந்தது . அறைக்கு வந்து ஏதேனும் அவளை செய்து விட்டால் என்ன செய்வது என்ற பயமே அவளை பல நாட்கள் தூங்க விடாமல் செய்திருக்கிறது..  அன்று முத்தம் கொடுத்ததில் இருந்து அவன் மேல் இருந்த நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்து விட.. கன்னி மனது அவனது வருகையை அறிந்தாலே ஓடி ஒளிகிறது..

 

ஆனால் இன்று மாலையில் இருந்தே அவள் மனது படபடப்பாக இருக்க.. ஏதோ தவறாக நடக்க போகிறது என உள் மனம் எச்சரிக்கை செய்தாலும் .. மனதை திடப்படுத்திக் கொண்டு இருள் படரவிருக்கும் மேகங்களை பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது கதவு திறக்கும் சத்தம்..

 

மணி இரவு எழு இருக்க.. இந்த நேரத்தில் அவனை தவிர அறைக்குள் யாரும் வர மாட்டார்கள் என அறிந்து இருந்தவள்.. பால்கனி கம்பியை இறுக்கப் பற்றிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

அவனது காலடி சத்தம் அவளுக்கு மிக அருகில் கேட்பதை வைத்து, அவன் தன்னை நோக்கி வருகிறான் என்பதை உணர்ந்து கொண்டவள்.. வேகமாக பால்கனியில் இருந்து எழுந்து தலையை குனிந்த வண்ணம் அமைதியாக அவனை கடந்து செல்ல முயல… அவளது கரத்தை இறுக்கப் பற்றி இருந்தான் மறவன்.

 

” எங்க போக போற யாழி… நான் உன்ன பார்க்க தானே இன்னைக்கு இவ்வளவு தூரம் வந்துருக்கேன் ” என்றவனது குழைவான பேச்சில் திடுக்கிட்டு அவன் முகத்தை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.

 

என்றும் இல்லாமல் அவனது இந்த குழைவாக பேச்சிற்கான காரணத்தை நொடிப் பொழுதில் அறிந்து கொண்டாள் சாயாலி.. கண்களில் உள்ள சிவப்பு அவன் அளவுக்கு அதிகமாக மதுவை உட்கொண்டதை வெளிச்சம் போட்டு காட்டியது..

 

அதோடு அவன் நிற்க முடியாமல் தல்லாடுவதும், அவன் பார்வை எப்போது போல அல்லாது மாறாக வேறு செய்தி கூறுவதையும் அறிந்து கொண்டவள் இதற்கு மேல் இந்த அறையில் இருந்தால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்த.. வெடுக்கென்று அவன் கரங்களில் இருந்த தன் கரத்தை விடுவித்துக் கொண்டவள் வாசலை நோக்கி ஓட அவளுக்கு முன்பாக கதவருகில் வந்து நின்று இருந்தான் மறவன்..

 

” உன்ன தான் பார்க்க வந்தேனு சொல்லுறேன்.. அப்பறம் இப்படி ஓடினா எப்படி யாழி ” என அவளது பட்டுக் கன்னத்தை தீண்டி இருந்தான் மறவன்..

 

அதில் எரிச்சல் அடைந்து அவனது கைகளை தட்டி விட்டு , அவனை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள் சாயாலி..

 

” நான் தொடக் கூடாதா யாழி… இல்ல எனக்கு அந்த உரிமை இல்லையா ”

 

” இல்லை ” வெடுக்கென சைகை செய்தாள்.

 

” ஏன்… நான் சட்டப்படி உன் புருஷன் தானே ”

 

” ஆனால் நமக்குள்ள நடந்தது ஒப்பந்த திருமணம் ” என மீண்டும் அவனுக்கு தன் கைகளை ஆட்டி நினைவு படுத்த…

 

” ஒப்பந்தம் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வருமா யாழி… என்ன தான் உன்ன ஒப்பந்தம் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என் மனசு என்ன சொல்லுது தெரியுமா… உள்ளே இருக்குறது வேற யாரும் இல்ல நீதான்… யாழி யாழினு சொல்லுது ” என திரைப்பட வசனம் பேசினான்.

 

ஒரு நிமிடம் அதிர்ந்த சாயாலி.. அதன் பின்னே அவன் குடித்து விட்டு உலருகிறான் கிறுக்கன் என தவறாக நினைத்து கொண்டாள்.

 

ஆனால் மறவன் மனதில் சாயாலி இருப்பது உண்மையே… ‘ யாழி ‘ என்ற அழகான பெயரில் அவனது மனதை ஆட்சி செய்ய வந்த தேவதை அவள்..

 

இதோ மனதில் இருக்கும் அவனது எண்ணத்தை எல்லாம் வெளியே கொட்டிக் கொண்டு இருக்கிறான் மறவன். ஆனால் அதை எல்லாம் நம்பும் நிலையில் தான் அவள் இல்லை..

 

” என்ன பார்க்குற யாழி, மலை உச்சில என்னைக்கு உன்ன பார்த்தேனோ , அன்னைக்கே என் மனசுல நீ வந்துட்ட… ஆனால் சொல்ல விடாம ஈகோ தடுத்திருச்சு.. அதுக்கு அப்பறம் எனக்கு கிடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணி உன்ன கல்யாணமும் பண்ணிக் கிட்டேன்.. உன்கிட்ட காதலை சொன்னா கண்டிப்பா நீ என்னைய ஓகே சொல்லிருக்க மாட்ட.. அதான் ஸ்கெட்ச் போட்டு உன்ன தூக்கினேன் ” என விளக்கவுரை கொடுத்ததும்… ஒரு நிமிடம் அப்படி இருக்குமோ என நம்பி விட்டாள் சாயாலி..

 

” இன்னும் என்ன நம்ப மாட்டிற தானே… என் காதலை உனக்கு நிருபிச்சு காட்டவா… ” என ஒரு மாதிரி குரலில் கேட்க.. அவன் எண்ணத்தை அறிந்து கொண்டவள்.. இத்தனை நேரம் அவன் கூறியது உண்மையாக இருக்குமோ என மனக் கோட்டை கட்டி இருந்தவளின் மனம் நொடியில் சரிந்து போனது…

 

” வா யாழி ” என அடுத்த நிமிடமே அவளை இறுக்க அணைத்து தன் தோளில் தூக்கி கொண்டு போனவன் மெத்தையில் சரித்து அவள் மீது படர…

 

நொடி பொழுதில் நடந்து விட்ட நிகழ்வில் … என்ன செய்வது என தெரியாமல் தன் மானத்தை காக்க போராடினாள்..  “என்னால முடியலை யாழி உன்கூட இப்படியே இருக்கணும்னு என் மனசு ரொம்ப ஏங்குது டி… ஆனால் நீ விட மாட்ட.. என நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்… ”

 

அவன் கொடுக்கும் முத்தத்தை கண் மூடி வாங்கிக் கொண்டவள் மனதிலும் மறவன் இருக்கிறானோ ????

 

” என்ன விட்டு நீ போயிட கூடாது யாழி… எப்பவும் நீ வேணும் ” என அவள் மீதே படுத்து துயில் கொள்ள.. தனது நெஞ்சின் மீது படுத்துறங்கும் தன் கணவனை கண்ணீர் மல்க பார்த்து வைத்தாள் சாயாலி…

 

யார் இவன்… எங்கிருந்தோ வந்து தன் வாழ்க்கையின் பாதியாகி போனான்… ஆனால் அவன் மனதில் இருப்பது காதலா, காமமா, வன்மமா என பிரிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறாள்.

 

இரவு வேளை எப்படி சென்றது என்றே தெரியவில்லை… மறவனுக்கு ஆழ்ந்த உறக்கம் என்றால் அதற்கு மாறாக சாயாலி சிறிதும் கண் அசரவில்லை..

 

பொழுது புலர்ந்ததும் கண்ணை திறந்தவனுக்கு தலை வலி இலவச இணைப்பாக வந்து சேர… தலை பிடித்துக் கொண்டு கீழே வந்தான். அவன் மாடியில் இருந்து இறங்குவதற்கும்.. சாயாலி ஒரு ரோலிங் சேரில் சிந்தாமணியை வைத்து தள்ளி கொண்டே வீட்டிற்கு வெளியே செல்வதற்கும் சரியாக இருந்தது.

 

இத்தனை நாளும் படுக்கையில் இருந்தவரை இத்தனை காலையில் எங்கே அழைத்து செல்கிறாள்.. யாரும் இவளை கண்டு கொள்ளவில்லையா.. என்ற கேள்வி உதித்தாலும் அமைதியாக அவள் பின்னே சென்றான் மறவன்.

 

தலை வலி வேறு வேதனையை கொடுக்க.. இரவில் நடந்தது எல்லாம் அரசல் புரசலாக அவன் நினைவிற்கு வந்து போனது.. சாயாலியுடன் ஒரே படுக்கையில் அவள் மேல் துயில் கொண்டது நினைவு வர, ஆத்திரத்துடன் வெளியே சென்றான்.

 

வெளியே உள்ள நீச்சல் குளத்தருகில் அவரை இருக்க வைத்து விட்டு .. அதற்குள் உள்ள குட்டி குட்டி மீன்களுக்கு எல்லாம் இரைகளை போட ஆரம்பித்தாள் சாயாலி..

 

சாப்பாட்டை கொடுத்து விட்டு அவரது ரோலிங் சேர் பின்னே வந்து நின்று கொண்டவள்… இரு பக்க கம்பியையும் பிடித்து கொண்டு சிந்தாமணியுடன் சேர்ந்து அவளும் மீன்களை பார்க்க ஆரம்பித்தாள்.

 

பின்னே வந்த மறவன் ரோலில் சேரில் இருக்கும் தன் அன்னையை தண்ணீருக்குள் தள்ளி கொலை செய்ய போகிறாள் என தப்பு கணக்கு போட்டவன்…

 

” அம்மா……. ” என வேகமாக ஓடி வந்தான்.. அவனது சத்தத்தில் இரு பெண்களுமே ஒரு சேர திரும்பி பார்த்தனர்.

 

அவள் தள்ளி விடுவதற்குள் தன் அன்னையை காப்பாற்றி விட்டோம் என்ற எண்ணத்தில் , வந்த வேகத்தில் அவள் கையில் இருக்கும் தன் அன்னையின் பிடியை அவன் கைகளுக்குள் மாற்றிக் கொண்டவன்..

 

” அடுத்த கொலை என் அம்மாவ பண்ண போறீயா டி ?” என அனல் கக்கும் விழிகளுடன் அவன் கேட்க… அதிர்ந்து போனாள் சாயாலி…

 

” நான் இருக்கிற வரைக்கு அது நடக்காது . அம்மா இவளை நம்பாதீங்க ..இவ ஒரு கொலைகாரி மா, இப்போ என்னையும் ஏமாத்தி கல்யாணம் பண்ணி நம்ம குடும்பத்துக்குள்ள வந்து… நேத்து …. சீ… சொல்லவே அசிங்கமா இருக்கு .. நான் குடிச்சு இருக்கேன்னு தெரிஞ்சும் என் கூட ஒரே பெட்ல… உடம்புக்கு ஆசை படுறா ” என முகத்தை சுழித்தவனை கன்னம் பழுக்க அறைந்து இருந்தாள் சாயாலி..

 

அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க சிந்தாமணி .. சினம் மேலோங்க… ” மறவா………. ” என அதிர்ந்து கத்தினார்.

 

அமைதியாக இருந்தவரையும் ஆக்ரோஷ படுத்தும் வார்த்தைகளை அல்லவா விட்டு இருந்தான். சாயாலி அடித்தது ஒரு பக்கம் அதிர்ச்சி என்றால், சிந்தாமணி வாய் திறந்து பேசியது மற்றொரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தது.

 

வார்த்தைகள் தடம் புரண்டால்… வாழ்க்கையும் தடம் புரளும் என்பதை மறவன் அறிவானா ?

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்