24 – காற்றிலாடும் காதல்கள்
“மிரு.. மிரு.. ஒரு நிமிஷம் நில்லு.“ என கீதன் முன்னால் ஓடி வந்து அவளைத் தடுத்து அவளைத் தன் பக்கமிழுத்தான். கிருபாவும் மிருணாவுடன் அவனருகே வந்தாள்.
அதை இந்திரனும், யுகேந்தரும் பார்த்துவிட்டு கீதனை இழுக்க, அவனோடு மிருணாவும் இழுபட என நால்வரும் சுற்றிச் சுற்றி நடந்தபடி ஒரே வட்டமாக நகர்ந்துக் கொண்டிருந்தனர்.
“எனக்கு தலை சுத்துது. எதுக்கு இப்படி ஆளாளுக்கு இழுக்கறீங்க? என்ன வேணும்? கையவிடுங்க எல்லாரும் மொத.” என மிருணா கத்தவும் அனைவரும் மூச்சு வாங்கவும் பயந்தபடி, நண்பர்கள் மூவரும் ஒருபக்கமும், மிருணா ஒரு பக்கமென நின்றனர்.
“உன்கூட… உன்… உன்கூட… பின்னாடி… பாரு…”, என இந்திரன் மூச்சு வாங்கியபடிக் கூறினான்.
“என் பின்னால என்ன?” எனக் கேட்டு மிருணா பார்க்க அங்கே சிரித்தமுகமாக, கண்களில் குளம்கட்டிய நீரோடு கிருபாலினி அவளைப் பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்தாள்.
“ஹேய் கிருபா…” என மிருணா அவளை அணைக்க முற்பட காற்றாகத் தான் கைகளில் கரைந்தாலே தவிர மிருணாவின் கைகளில் தட்டுப்படவில்லை.
“நான் உனக்கு தெரியறேனா மிரு? என்னை மன்னிச்சிடு மிரு. நீ என்கிட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்லியும் நான் வழக்கம் போல ஏமாந்து தான் போயிட்டேன். என்னால உங்க எல்லாருக்கும் தான் பிரச்சனை. அப்பா அம்மா கோவமா இருக்காங்களா?” எனக் கேட்டாள்.
“என்னால நம்பவே முடியல கிருபா. நீ தானா இது? எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.” என மிருணா அவள் அருகே சென்றாள்.
“இந்தா புள்ள மிருதங்கம் நீ என்ன உன் அக்காவ கொஞ்ச போறியா? அதுவே ஆவியா வந்து நிக்குது. எதுக்கு உன்கூட அது கையப்புடிச்சிட்டு சுத்தது?”என இந்திரன் அவளைத் தன் பக்கம் இழுத்தான்.
“பயப்படாதீங்க… நான் உங்கள ஒண்ணும் பண்ணமாட்டேன். நீங்க குகை திறக்க தானே முயற்சி பண்ணிட்டு இருக்கீங்க? மிரு கண்டிப்பா திறந்திடுவா. நீங்க எல்லாரும் என்கூட ஒரு எடத்துக்கு இன்னிக்கி ராத்திரி 2 மணிக்கு வரணும்.” எனக் கூறிவிட்டு கீதன் அருகே வந்தாள்.
கீதன் யுகேந்தர் பின்னால் சென்று ஒளிந்தான். கிருபா அவனை அருகே சென்றுப் பார்த்துவிட்டு இந்திரன் அருகே வந்து, “நீ உன் குடும்பத்த ரொம்ப மிஸ் பண்ற தானே? அவங்களும் உன்ன ரொம்ப மிஸ் பண்றாங்க. உன் குட்டி தங்கச்சி உன்மேல ரொம்ப பாசமா இருக்கா இன்னும். அவள பாக்கணும்ன்னு உனக்கு ஆசை இல்லையா?”என கிருபா கேட்டதும் இந்திரன் கண்களில் நீர் கோர்த்து நின்றது.
“என்ன சொல்ற நீ? நீ ஏன் மிருதங்கம் கூடவே சுத்தற? அவள ஒண்ணும் பண்ணமாட்டா தானே?”
“உனக்கு மிருவ ரொம்ப பிடிச்சிருக்கா? உன் குட்டி தங்கச்சி மாதிரி அவ பேசறதும் நடந்துக்கறதும் இருக்குன்னு தானே அவக்கூடவே இருக்க நீ?” எனக் கேட்டு அவன் மேலும் தனது கையை வைக்க, இந்திரனின் குடும்பம் அவனது கண்களுக்கு மெல்ல மெல்லப் புலப்பட்டது.
“அப்பா… அம்மா… கோத… அண்ணே… டேய் சந்திரா.. அக்கா…” என அனைவரும் அவர்கள் இறந்தபோது இருந்த அதே உருவத்தில் தெரிந்தனர்.
“கண்ணு.. ஏண்டா அழுதுட்டே இருக்க நீ? உன்னைய தான் மாலாம்மா தன் புள்ளையாட்டம் பாத்துக்குதே. உன்னைய இவ்ளோதூரம் படிக்க வச்சது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷம்டா. நான் இருந்திருந்தா கூட இவ்ளோ நல்லா உன்னைய வச்சிருந்திருக்க மாட்டேன்.”
“ஆனாலும் நீங்க யாரும் இல்லயேப்பா.. உங்களயெல்லாம் ரொம்ப தேடறேன்.. தனியா ராவுல தூங்கறப்ப தான் ரொம்ப மனசு தேடுதும்மா.” என இந்திரன் கூறிக் கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடி கீதனின் தந்தையைத் தேடினான்.
“அதுக்கு என்ன சாமி செய்ய? எல்லாம் விதி நம்ம அத ஏத்துக்கணும் தானே? நீ கவலப்படாம வாழு தங்கம். நாங்க உன்கூடவே தான் இருப்போம்.” என தாய் கூறியதும் அவரின் அருகே சென்றுக் கையைப் பிடிக்க முயன்று காற்றில் கையசைத்துக் கொண்டிருந்தான்.
அவன் குடும்பத்தார் அனைவரும் சிரித்தபடி அவனைச் சுற்றி நின்றுப் பேசி, அவர்களின் ஸ்பரிசத்தை உணரவைத்தனர்.
“ப்பா.. கீதனோட அப்பா எங்கப்பா?” என இந்திரன் கேட்டதும், யுகேந்தர், “டேய் என்னடா விருந்துக்கு வந்த மாதிரி காத்த பாத்து பேசிட்டு இருக்க.. அவர் வரலியா? இவரு வரலியான்னு கேட்டுட்டு இருக்க.” யுகேந்தர் கேட்டதும் மிருணாளினி வாய்விட்டுச் சிரித்தாள்.
“மாப்ள.. என் மொத்த குடும்பமும் இங்க நிக்குது டா.” எனத் தனக்கு முன்னால் காட்டினான்.
“எனக்கு கிட்னி இங்க வந்து நிக்குது டா… தயவு செஞ்சி நார்மல் ஆவுங்கடா. எனக்கு கல்யாணம் வச்சிருக்காங்கடா. கருமாதி செய்ய வச்சிராதீங்க.” அவன் கூறியதும் கிருபாலினி அவனருகே சென்று அவனதுக் கையைப் பிடிக்க, அவனது கண்களுக்கும் அங்கு காற்றாய் நின்றிருந்தவர்கள் கண்களுக்குத் தெரியத் தொடங்கினர்.
“மாப்ள.. என் கண்ணுக்கு என்னென்னமோ தெரியுதுடா.. எனக்கு பயமா இருக்கு.. என்னைய பத்ரமா வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டுருடா..” என கீதனின் கையைப் பிடித்துக் கொண்டுக் கூறினான்.
“கம்முன்னு இருடா.. எனக்குமே உள்ள உதறுது.. திடீருன்னு இப்படியெல்லாம் தெரிஞ்சா எனக்கும் பக்குன்னு தான்டா இருக்கு. இத்தன வருஷமா ஒண்ணுமே தெரியல. இன்னிக்கி ஏண்டா இப்படி எல்லாம் கண்ணுக்கு தெரியறாங்க. கால் எல்லாம் நடுங்கிட்டே இருக்கு.” எனக் கீதனும் புலம்ப மிருணாளினி அவர்கள் அருகே சென்று நின்று அவர்களைப் பார்த்தாள்.
அவளோடு கிருபாவும் அப்படி நெருங்கிப் பார்க்க, நண்பர்கள் இருவரும் பயத்தில் மூர்ச்சையாகி விழுந்தனர்.
“டேய் மச்சா… டேய் மாப்ள…”என இந்திரன் அவர்களை எழுப்ப இருவரும் அசையாமல் தரையில் கிடந்தனர்.
“இந்தா புள்ள மிருதங்கம்.. என்னாச்சி? ஏன் விழுந்துட்டாங்க?”என இந்திரன் அவர்களை எழுப்ப முயற்சித்தபடிக் கேட்டான்.
“நம்ம இன்னும் மயங்கி விழாம இருக்கறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. இவங்க விழுந்தது தான் நார்மல். நம்ம தான் வித்தியாசமா இருக்கோம். நம்ம ஏன் மயங்கி விழல?”என மிருணாளினி கேட்டபடி இந்திரனின் தோளைத் தொட்டாள்.
அவன் உடலும் அவளின் கைகளுக்கு அகப்படவில்லை. மிருணா அதிர்ந்துத் தன்னுடலைத் தொட அதுவும் அவளின் கைகளுக்கு அகப்படவில்லை.
“டேய் இந்திரண்ணா.. நம்ம செத்துட்டோமா? உன் உடம்பும் கைக்கு கிடைக்கல என் உடம்பும் கிடைக்கலடா. உன்னால என்னை தொடமுடியுதா?” என மிருணா அதிர்ந்துக் கேட்டாள்.
அவள் சொன்னதைக் கேட்டதும் இந்திரனும் அவளைத் தொட காற்றில் தான் கை அலைந்ததே தவிர உடல் கைக்கு அகப்படவில்லை. அவனது உடலும் கைகளுக்குக் கிடைக்கவில்லை எனவும் அவனும் மயக்கம் வந்து விழுந்தான்.
மிருணாளினி பயந்தபடி கிருபாவைப் பார்க்க, அவள் அமைதியாக சொல்வதைக் கேள் என்றாள்.
“நாங்க செத்துட்டோமா கிருபா?”, எனக் கேட்டாள்.
“இல்ல.. அவங்க மூணு பேரையும் எழுப்பு இன்னிக்கி ராத்திரி 2 மணிக்கு மலைக்குகைக்கு வடக்கு பக்கம் இருக்க வைரமுனியப்பன் கோவிலுக்கு வாங்க. கயல்விழியவும் கூட்டிட்டு வரணும். அங்க எல்லாமே தெளிவா சொல்றேன்.” எனக் கூறிவிட்டு அவள் மறைய, மற்றவர்களும் அவளை மறக்காமல் வந்துவிடும்படிக் கூறி, இந்திரனைப் பார்த்துக் கொள்ளக் கூறிவிட்டு மறைந்தனர்.
“எனக்குன்னு வந்து வாயிக்குதுங்க பாரு. ஆம்பள சிங்கமெல்லாம் மயங்கி கடக்குது. இவனுங்கள எப்டி நான் எழுப்பறது?”என யோசித்தவள் அருகே வாய்க்கால் செல்வதைப் பார்த்துவிட்டு தனது துப்பட்டாவை நீரில் நனைக்க, அது ஈரமாவதைக் கண்டதும், நனைத்துக் கொண்டு வந்து மூவரின் முகத்திலும் நீரை அடித்தாள்.
மெல்ல மூவரும் சுயவுணர்வுப் பெற்று எழ மூவரின் உடலிலும் நீர் துளிகள் தெளித்த தடம் தெரியவில்லை. ஆனால் நீர் அடித்து எழுப்பிய உணர்வு மட்டும் தெரிந்தது. தனது உடையில் இருக்கும் நீரின் தடம் தன் உடலுக்கு தெரியவில்லையே, ‘என்ன விந்தையான நிகழ்வு இது?’ எனச்சிந்தித்தபடி மிருணா அங்கிருந்த ஆலமரவேரில் அமர்ந்தாள்.
“டேய் இந்து.. எங்கடா உன் குடும்பம்? நீ ஏண்டா மயங்கின? வேற யாரையும் ஆவியா பாத்து மயங்கினியா?”யுகேந்தர் கேட்டான்.
“என்னைய பாத்து தான்டா பயந்து மயங்கிட்டேன். என்னால என்னைய தொடமுடியலடா…”, இந்திரன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டுக் கூற அவர்கள் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
“என்னடா உளர்ற? உன்ன தொட முடியலையா?“, கீதன் கேட்டான்.
“ஆமாடா.. என் கைய புடி..“ என இந்திரன் கையைக் காட்டினான். கீதன் தொட முயன்று காற்றில் தான் அலைந்தது அவனது கைகள்.
“டேய் இந்து..“ கீதன் கண்கள் தெறித்து கீழே விழுந்துவிடும் போல பார்த்தான்.
“உன் உடம்ப தொடு.” இந்திரன் சொல்ல கீதன் தன்னுடலைத் தொட முயற்சித்து முடியாமல் போகவும், யுகேந்தரை அதே போல செய்யச் சொல்லி அவனுக்கும் அதே போல ஆகவும் நண்பர்கள் மூவரும் ஓவென ஒப்பாரி வைத்தனர்.
“அய்யய்யோ அய்யய்யோ… இப்டி அல்பாயுசுல அநியாயமா செத்து போயிட்டேனே. எனக்கு கல்யாணம் பண்ண முன்னாடி கருமாதி பண்ண வச்சிட்டாணுங்களே… அய்யோ கயலு.. உன்னைய இனிமே நான் எப்டிடி கல்யாணம் பண்ணுவேன்? எப்டிடி உன்கிட்ட பேசுவேன்.. போச்சே போச்ச.. எல்லாம் போச்சே.. அம்மா.. அம்மா.. உன்புள்ள அல்பாயுசுல போயிட்டானே மா..” என யுகேந்தர் ஒப்பாரி வைத்தான்.
அவனைத் தொடர்ந்து இந்திரனும், கீதனும் கூட குழம்பியபடி பேசிக்கொண்டு இருந்தனர்.
“டேய் படுபாவிங்களா.. உங்களாலதான்டா நான் செத்துபோயிட்டேன்.. இந்த உலகத்துல ஒண்ணுமே பாக்கல அனுபவிக்கலாடா நான் இன்னும்.. அதுக்குள்ள என்னைய ஏண்டா சாவடிச்சீங்க?” யுகேந்தர் பயத்தில் கண்டபடி உளறினான்.
“வாய மூடுடா.. நம்ம இன்னும் சாகல” கீதன் கத்தவும் சற்று அமைதியானான்.
“அப்பறம் ஏன் நம்ம உடம்ப நம்மலாள தொட முடியல?” இந்திரன் கேட்டான்.
மிருணாளினி தீவிர சிந்தனையில் அமர்ந்திருந்தாள். இந்த மாற்றம் அவர்களுக்கு எப்போது ஆரம்பித்திருக்கும்.? கயல்விழியும் ஏன் இதில்வரவேண்டும்? மாண்டவர்கள் இன்னும் இங்கேயே இருக்கும் காரணமென்ன? ஒரு குகையின் திறப்பிற்கு எதற்கு இத்தனை உயிர் பலிகள்? இன்னும் நீளுமா இந்த மர்மம்? பலிகள் தொடருமா?
இப்போது தனது வலதுகையைப் பார்த்தால் அங்கே கிருபா பிடித்திருக்கும் கதகதப்பு இல்லை. ஆனால் அவள் உடலில் ஏதோ நிகழ்கிறது என்று மட்டும் உணரமுடிந்தது.
நிமிடங்கள் செல்ல செல்ல உடலின் பருமன் குறைவதைப் போல தோன்றியது. மெல்ல மெல்ல காற்றில் பரப்பதை போல உணரத் தொடங்க, தரையில் இருந்த கால்கள் காற்றில் நின்றது. ஒரு மில்லிமீட்டர் அளவு அவளின் காலுக்கும் பூமிக்கும் இடைவெளி ஆரம்பித்து, நேரம் செல்ல செல்ல அது அதிகமாவது போலத் தோன்றியது.
கீதன், இந்திரன், யுகேந்தரும் அதே போல காற்றில் நிற்கத் தொடங்கினர். நால்வரும் ஒருவரையொருவர் பார்த்து விக்கித்து நின்றனர்.