
மறுநாள் மாலை நேரத்தின் இதமான வெம்மையும், குளிர் காற்றும் பாவையின் உடலை ஊசியாய் தாக்க, பாதத்தைச் சேரும் கடலலையும் காதலுடன் அவளை அணுகியது.
ஐந்தரை மணிக்கு வருவதாகச் சொன்னவன், மணி ஏழைத் தாண்டியும் வரவில்லை.
“என்ன ஆச்சு இவரை இன்னும் காணோம்… இங்க வர்றதை மறந்துட்டு படிப்ஸ் படிக்கப் போய்ட்டாரோ” என்றெண்ணியபடி அவனுக்கு அழைக்கப் போக, அந்நேரம் விஷால் அவளை அழைத்தான்.
“சொல்லுடா!” அலைபேசியைக் காதுக்கு கொடுத்தாள்.
“எங்க இருக்க?”
“இங்க பீச்ல தான். சத்யாவுக்காக வெயிட்டிங்.”
“நீ எவ்ளோ நேரம் வெயிட் பண்ணாலும் அவன் வர மாட்டான்…”
“ஏன்?” இதயாம்ரிதா புருவம் சுருக்க, “நீ கிளம்பி காலேஜுக்கு வா” என்றதும், “என்னடா ஆச்சு சத்யா ஓகே தான?” எனக் கேட்டாள் பதற்றமாக.
“நீ வா” என்று அழைப்பைத் துண்டித்ததும் பதறிப்போய் கல்லூரிக்கு விரைந்தாள்.
அங்கு இன்னும் மாணவர் கூட்டம் கலையாதிருந்ததை குழப்பத்துடன் ஏறிட்டவள், ஒரு மரத்தினடியில் நின்றிருந்த நண்பர்களை நோக்கிச் சென்றாள்.
“என்னடா ஆச்சு? ஏன் இவ்ளோ கூட்டம். இன்னும் வீட்டுக்குப் போகாம என்ன செஞ்சுட்டு இருக்கீங்க” அவள் கேட்டதும்,
“எல்லாம் உன் ப்ரொஃபியால வந்தது” என ஆரம்பித்தாள் யாமினி.
“அவருக்கு என்ன ஆச்சு?” மெல்லக் கலவரம் சூழ்ந்தது அவள் விழிகளில்.
“அவனுக்கு ஒன்னும் ஆகல. அவனால இங்க காலேஜ் பொண்ணுங்க தான் மானத்தை இழந்துருக்காங்க” ஷ்யாம் வெறுப்பாய் மொழிந்தான்.
“டேய் தேவை இல்லாம பேசாத… என்ன நடந்துச்சுன்னு முழுசா சொல்லு” என்றதும் நிலோஃபர் தொடர்ந்தாள்.
“நான் சொல்றேன். உன் ஆளு இருக்கானே… அவன் ஒரு வுமனைசர். ரொம்ப பவ்யமா இருக்குற மாதிரி காட்டிக்கிட்டு, கடந்த அஞ்சு வருஷமா, காலேஜ் ஸ்டூடண்ட் சேர்மன் போஸ்ட்ல இருந்துட்டு, பொண்ணுங்களை நிறைய தப்பான வீடியோ எடுத்துருக்கான்.
அது மட்டும் இல்ல, அவனை ஒன் சைடா லவ் பண்றேன்னு சுத்துன பொண்ணுங்களை பின்னாடி அலைய விட்டு, அவங்கள ஹைப் ஏத்திட்டு, அப்பறம் பீச்சுக்கு வா அங்க வான்னு சொல்லி அவங்களோட உல்லாசமா இருந்துருக்கான்…: என்று சொல்லி முடிக்க, அதனை அமைதியாகக் கேட்டவள்,
“இந்தக் கதையை எல்லாம் யார் சொன்னா?” என்றாள் ஒரே வார்த்தையாக.
“நாங்க சொல்றோமே அதுல நம்பிக்கை இல்லையா உனக்கு?” இம்முறை விஷால் எகிறினான்.
“யார் சொன்னாலும் நம்புற மாதிரி இருந்தா தானடா நம்ப முடியும். வுமனைசர்… அதுவும் நம்ம ப்ரொஃபி. போடா லூசு. அவரெல்லாம் ரேர் பீஸ்டா. இப்ப சத்யா எங்க?” எனக் கேட்டவளைக் கண்டு நால்வரும் ஒரு கணம் படபடத்தனர்.
“நாங்க சொன்னா கூட நம்ப மாட்ட. சரி… அவனோட ஆஸ்தான ஜூனியர்ஸ், ப்ரொஃபஸர்ஸ் சொன்னா நம்புவ தான?” என்ற விஷால், இன்னும் சில மாணவிகளிடம் விசாரிக்க, அவர்களும் சத்யாவின் குணத்தைத் தவறாகவே கூறினர்.
அவர்களில் பாதி பெண்கள் ஆடிட்டோரியத்தில் சத்யாவிடம் அன்பைப் பொழிந்தவர்கள்.
பேராசிரியர் சுஜாதாவும் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“அவனை எவ்ளோ நம்பி இந்த வேலைக்கு சேர்த்தேன். ச்சே… அவன் மேல இருந்த மரியாதையையே ஒன்னும் இல்லாம ஆக்கிட்டான். அவன் வச்சுருந்த வீடியோஸ் எல்லாம் பாக்கும்போது குமட்டிக்கிட்டு வருது…” என்று சிடுசிடுத்தார்.
“விஷால் அது என்ன வீடியோஸ், அது உண்மையா ஃபேக்கான்னு விசாரிச்சீங்களா?” அப்போதும் இதயாம்ரிதா விடவில்லை.
“ஏய் பைத்தியமா நீ… அது எல்லாம் உண்மைன்னு சொல்லி தான் போலீஸ் அவனைப் பிடிச்சுட்டுப் போச்சு…”
“போலீஸ்? ச்சு… அப்பாட்ட சொல்லி பெயில்க்கு ஏற்பாடு பண்றேன்” என்று வேகமாய் அவள் அலைபேசியை எடுக்க, விஷாலுக்கு பொறுமை முற்றிலும் குறைந்தது.
“அடிச்சுருவேன் அம்ரி. இன்னும் அவன் விஷயத்துல நீ சம்பந்தப்பட்டது யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா மீடியா உன்னை வறுத்து எடுக்குறதும் இல்லாம, அங்கிளோட மரியாதையே போய்டும்” எனக் கடிந்தான்.
“டேய் லூசா நீ. அவன் கவர்மெண்ட் எக்ஸாம்க்கு பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கான். போலீஸ் கேஸ் அது இதுன்னு ஆனா, அவனோட கேரியரே முடிஞ்சுடும். முதல்ல அவனை வெளில எடுத்துட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு அப்பறம் பாத்துக்கலாம்” என்றவள் துளியளவேனும் அவன் மீது சந்தேகம் கொள்ளவில்லை.
“சரி நீ பண்ணு. நீயாவது அவராவது… ஆனா உனக்கு ஒண்ணு தெரியுமா… நாங்க சொல்றதையும் ஏன் இந்த காலேஜ் சொல்றதையும் கூட நீ நம்ப மாட்ட. ஆனா அவனோட சொந்தக் குடும்பத்துல சொன்னா நம்புவியா…” என்றதும் தடதடத்த மனதுடன் அவனைப் பார்த்தாள்.
ஏற்கனவே உடைந்திருந்தாள். இவையெல்லாம் உண்மையல்ல என ஆணித்தரமாக மனது நம்பியது. ஆனால், சூழ்நிலைகள் அவனுக்கு எதிராக அல்லவா உள்ளது.
“அவனோட அத்தைப் பொண்ணு அவன் மேல ஃபிசிகல் அபியூஸ் கேஸ் குடுத்துருக்கா. அவனோடது ஜாயின் ஃபேமிலின்னு நீ தான சொன்ன? அதே பேமிலி மெம்பர்ஸ் அவனை வெளியவே விடாதீங்கன்னு கேஸ் குடுத்து இருக்காங்க… நீ போ… நீ தாராளமா போய் உன் பேரையும் இல்லாம அங்கிள் பேரையும் சேர்த்து கெடுத்துக்க…” எனும்போது அவளுக்கு கண்கள் கலங்கி நின்றது.
ஒரு கணம் நடுங்கி சிதைந்த உள்ளத்தை சமன்படுத்திக்கொண்டு, “சரி அவனை வெளில எடுக்க ஏற்பாடு பண்ணு” என சொன்னதையே சொன்னவளைக் கண்டு அனைவரும் முறைத்தனர்.
“என்ன? அவன் இப்போ தப்பு பண்ணிட்டான் அதான? நீ தான சொன்ன, எல்லா பசங்களுக்கும் ஒரு பிரைவேட் லைஃப்னு ஒண்ணு இருக்கும்னு” சொல்லும்போத குரலில் அத்தனை வேதனை.
“அது வெளில தெரியாத வரை அவன் நல்லவன்… இப்ப தெரிஞ்சதுனால அவன் கெட்டவனா? என் அப்பா கூட தான், இந்த விஷயத்துல ரொம்ப மோசம். அவருக்கு காசு இருக்கு, புகழ் இருக்கு, இதெல்லாம் நியாயப்படுத்திக்கிறாரு. அவர்கூட நான் பேச தான செய்றேன். அவரை வெறுத்து ஒதுக்காம பேசுறது சரின்னா இவரை சேவ் பண்ண நினைக்கிறது சரி தான். என்னைப் பொறுத்தவரை, என்கிட்ட அவர் துளி கூட தப்பா நடந்தது இல்ல.
எங்கிட்ட கரெக்டா நடந்துக்கிட்டவரை, அவர்கிட்ட நேரடியா விசாரிக்காம குற்றவாளியா மாத்த மாட்டேன்டா” எனும்போது முற்றிலும் உடைந்தாள்.
ஏனிந்த வலி உள்ளத்தை ஊசியாய் குத்தி குத்தி கிழிக்கிறதென்று தெரியவில்லை. அவன் பொய்த்துப் போய் விட்டதால் வந்த வலியா? அல்லது, அவன் தவறானவன் இல்லை என்று இதயம் ஆணித்தரமாய் இன்னும் நம்பித் தொலைப்பதால் ஏற்பட்ட காயமா என்றறியாது சுக்கு நூறாய் நொறுங்கினாள்.
“நான் டேடிட்ட பேசிக்கிறேன்” என்று தனது நம்பிக்கை முழுவதையும் அவர் மீது வைத்து அவரைக் காண சென்றாள்.
அவரோ நடந்ததைக் கேள்விபட்டு, “நீ விரும்புனதை என்கிட்ட ஏன்மா சொல்லவே இல்லை” என்று ஆதங்கமாக கேட்டார்.
“நான் வேணும்னா போஸ்டர் அடிச்சு ஒட்டுறேன் டாடி. இப்போ நீங்க சத்யாவை ரிலீஸ் பண்ண சொல்லுங்க” என்று அவசரப்பட்டாள்.
“பொண்ணுங்க விஷயத்துல மாட்டிருக்கான்மா. அதுவும் காலேஜ் பொண்ணுங்க… இதுல நான் என்ன செய்ய முடியும். நான் என்ன போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கேனா, இல்ல பொலிடிஷியனா?”
“டாடி… இவங்ககூட உங்களுக்கு ஸ்ட்ராங் காண்டாக்ட் இருக்கு தான?”
“இருக்குமா. அதுக்காக பொண்ணுங்க விஷயத்துல மாட்டுனவனை எப்டிமா வெளில விட சொல்ல முடியும். நியூஸ் பாரு இந்த விஷயம் ரொம்ப வைரலா போய்ட்டு இருக்கு. இப்ப நம்ம இதுல தலையிட்டா, ‘நிவோரா நிறுவனத்தின் முதலாளியின் மகளும் காலேஜ் புரஃபசரும்னு’ ஹெட் லைன்ஸ்ல பெருசா போடுவாங்க. இந்த மீடியா ரொம்ப டேஞ்சர் அம்ரிமா” என்றார் சாதுவாக.
அவளோ பற்களை நரநரவெனக் கடித்து, “டேடி… அந்த நியூஸ் எல்லாம் வரட்டும் வராம போகட்டும். இப்ப சத்யா ஸ்டேஷன்ல இருக்காரு. அவர் ஃபியூச்சர் ஸ்பாயில் ஆகிடும். முதல்ல அந்த வீடியோஸ் பத்தின உண்மைத்தன்மைய விசாரிக்க சொல்லுங்க… நீங்க நினைச்சா முடியும். அப்படி முடியாதுன்னா, இதுல யாரும் தலையிடாதீங்க. நான் பாத்துக்குறேன்” என்று கண்ணில் நெருப்பு மின்ன, தீ ஜூவாலையாய் தன்முன்னே நின்ற மகளை விசித்திரமாகப் பார்த்தார் ராம்குமார்.
“நான் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்மா…” என ஒப்புக்கொண்டவர் யார் யாருக்கோ அழைத்தார்.
அனைவரும் கை விரித்து விட்டனர்.
“அரசியல்வாதிகளே இதுல தலையிட பயப்படும்போது, நான் இதுல இதுக்கு மேல எதுவும் செய்ய முடியாதுமா” என ராம்குமாரும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
நேரம் அப்போதே நள்ளிரவைத் தாண்டி விட்டது.
“நீ முதல்ல போய் தூங்கு. காலைல இதுக்கு ஒரு வழி பண்ணலாம்…” என்ற ராம்குமாரை எங்கும் நகரவிட்டாளில்லை.
“என்ன டாடி பேசுறீங்க. என்னால எப்படி நிம்மதியா தூங்க முடியும்? நான் அவரைப் போய் பாக்குறேன். என்ன நடந்துச்சுன்னு கேட்டுட்டு…” எனும்போது ராம்குமார் பொறுமையிழந்தார்.
“அம்ரி… திஸ் இஸ் தி லிமிட். இந்த நேரத்துல யாரையும் ஸ்டேஷன்ல அலோ பண்ண மாட்டாங்க. வெல், இப்படி ஒரு கேஸ்ல சிக்கி இருக்குறவனை நீ போய் பார்க்க நான் அலோ பண்ண மாட்டேன்.”
“நான் யாரோட பெர்மிஷனையும் கேட்கல…” வெடுக்கென வந்தது அவளது வார்த்தைகள்.
“அம்ரி…” உமா அவளை அதட்ட, “மாம்… நடந்தது என்னன்னு தெரியாம, கண்மூடித்தனமா அவரைத் தப்பா நினைக்க முடியாது என்னால. மோர் ஓவர், இது ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா இருக்கும்” என இரவு முழுதும் வாதம் செய்தவளை அடக்குவது அனைவருக்கும் பெரும்பாடாகப் போனது.
அயர்ந்து உறங்கி விட்டால், அவனைப் பார்க்க கிளம்பி விடுவாளோ என்ற பயத்தில் அனைவரும் உறங்காது இருந்தது வேறு விஷயம்.
இந்தக் கலவரத்தில் பத்மபிரியா இல்லாதது அவளுக்கு உறைக்கவில்லை.
எண்ணமெங்கிலும் அவளவன் இருக்கும்போது, அவள் அவளைப் பற்றி கூட சிந்தித்தாளில்லை.
மறுநாளும் விடிந்திட, “இப்போ நான் போய் பாக்கட்டா…? மினிஸ்டர்கிட்ட பேசிப்பாருங்க. பெயில் எடுக்க ஏற்பாடு பண்ணலாம். சத்யாகூட ஒரே ஒரு தடவை தனியா பேச ஏற்பாடு பண்ணுங்க. நேர்ல கூட வேணாம் அட்லீஸ்ட் போன்லயாவது…” என ராம்குமாரை சில நொடிகள் கூட அவள் நிம்மதியாக இருக்கவிடவில்லை.
“சரிம்மா நான் பெயில் எடுக்குறேன். ஆனா நீ இந்த விஷயத்துல நேரடியா தலையிடக்கூடாது” என்றதும்,
“சரி டாடி நான் தலையிடல… நீங்க எப்டியாச்சு அவரை வெளில எடுங்க ப்ளீஸ்” என்று ஆமோதித்திட, அன்றைய நாளும் கரைந்தது.
அவளால் வீட்டினுள் அடைந்து இருக்க இயலவில்லை. விட்டால், காவல் நிலையதிற்கு ஓடி விடுவாள்.
அங்கு மீடியா கூட்டம் அவளைப் பிய்த்துத் தின்று விடும். அதைப் பற்றிய கவலையெல்லாம் இல்லை அவளுக்கு. அவனைப் பார்க்க வேண்டும் அவ்வளவே!
மாலை நேரம் கடந்து வீட்டிற்கு வந்த தந்தையை ஆர்வமாகப் பார்த்தவள், “பெயில் வாங்கியாச்சா டாடி… சத்யா எங்க?” என பின்னாலெல்லாம் தேடினாள்.
“நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல. இதுல நம்ம தலையிட்டா நம்ம பேர் தான் அடிபடும்னு…” என எரிந்து விழுந்தவர், “அவன் மேல கேஸ் ஸ்டிராங்கா இருக்கு. கோர்ட்ல முடிவு பண்ணிக்கலாம்னு சொல்லிருக்காங்க” என்றார்.
“கோர்ட்டு வரைக்கும் அவர் போகனுமா?” கண்ணீர் அணை உடைந்தது அவளுக்கு.
“வீடியோ எல்லாம் உண்மை தான்னு நிரூபணம் ஆகிருக்கு அம்ரி. என்னை என்ன செய்ய சொல்ற. நானும் உனக்கு ஹெல்ப் பண்ண தான் நினைக்கிறேன்” என்றதில் தான் அவளது உள்மனதில் எத்தனை கீறல்கள்.
“நான் அவரை நேர்ல பார்த்து பேசனும்…” மீண்டும் மீண்டும் ஒரே கூற்றில் நின்றவளை கோபம் பொங்க ஏறிட்டார் ராம்குமார்.
“அவனை நீ பாக்க முடியாது.”
“நான் பாப்பேன்… உங்களால முடியலைல. இனி இதுல என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்” என்று கர்வம் மிக கூறியவள், எத்தனை வழிகளில் முயன்று பார்த்தும் முடியாமல் சுவரில் அடித்த பந்தாக தந்தையிடமே வந்தாள்.
அவரோ அவளைக் கூர்மையாய் ஏறிட்டு, “விஷயம் தெரியுமா… அவன் தப்பை அவனே ஒத்துக்கிட்டான். அவனே ஒத்துக்கிட்டதுனால இதுல பெயில் எடுக்க வேலை இல்லை” என்றதும் அதிர்ந்து போனாள்.
“சரி நான் அவரை நேர்ல பார்த்து பேசுறேன்… இப்பவாவது!” என்றவளை ஆத்திரம் எழ பார்த்த ராம்குமார்,
“உனக்கு பைத்தியம் பிடிச்சுருக்கா, கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி திரும்ப திரும்ப சொல்றேன். நீ சொன்னதையே சொல்லிட்டு இருக்க…” எனக் கத்தி விட்டார்.
“டாடி… அவர்ட்ட பேசாம, அவரைப் பார்க்காம இதுல எந்தவொரு முடிவுக்கும் நான் வர மாட்டேன். சரி… அவர் தப்பே பண்ணிருக்கட்டும். ஐ டோன்ட் கேர்!” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“உனக்கு முத்திருச்சு அம்ரி” எனக் கடிந்தவர், அவளது நண்பர்களைப் பார்த்து, “இவ்ளோ டீப்பா போற வரை ஏன் எங்கிட்ட சொல்லவே இல்லை. தெரிஞ்சுருந்தா இவளை அந்த காலேஜுக்கு அனுப்பிருக்கவே மாட்டேன்” என்று கர்ஜித்தார்.
விஷாலோ, அவருக்கு கண்ணைக் காட்ட, அவரும் தன்னை சமன்படுத்திக்கொண்டு, “ம்மா அம்ரி… சொல்றதை புருஞ்சுக்கோ. இப்ப அவன் மேல கேஸ் ஸ்ட்ராங்கா இருக்கு…” என்று மெதுவாக கூற,
அவளோ சிவந்த விழிகளுடன், “உங்களால என்னை அவரை பார்க்க வைக்க முடியுமா முடியாதா!” என்று நின்றதில் அவர் கோபத்தில் அருகில் இருந்த கண்ணாடி ஜக்கை கீழே போட்டு உடைத்தார்.
“அந்த பொம்பளைப் பொறுக்கிக்கு நீ இவ்ளோ டென்ஷன் பண்ண தேவை இல்ல அம்ரி.”
“அவன் பொம்பள பொறுக்கின்னா அப்போ நீங்க யாரு?” அவருக்கு தோதாய் அவளும் உறுமினாள். அதில் ராம்குமார் திகைத்து விட்டார்.
அவளோ சுற்றம் மறந்து, அவனைக் காணாத தவிப்பின் உச்ச நிலையில், “நீங்களும் தான தினமும் ஒரு பொண்ணோட படுத்துட்டு வர்றீங்க. நீங்க என்ன ஜெயிலுக்குப் போறீங்களா? அதுனால உங்க மதிப்பும் மரியாதையும் குறைஞ்சு போச்சா. இல்லைல… நீங்க செலிபிரிட்டியா தான உலா வர்றீங்க? அப்பறம் எந்த முகத்தை வச்சுட்டு அவரைப் பொம்பளை பொறுக்கின்னு சொல்றீங்க. ஐ நீட் ஹிம் ரைட் நௌ… நான் அவரைப் பார்க்கணும் பார்க்கணும் பார்க்கணும்…” என்று வெறிப்பிடித்தவள் போல தனது கூற்றிலிருந்து சிறிதும் மாறாது அவர் உடைத்த கண்ணாடி ஜக்கிற்கு ஈடாக வரவேற்பறையில் இருந்த அத்தனை பொருள்களையும் தரையில் உடைத்து நொறுக்கினாள்.
மகளின் பேச்சில் வாயடைத்துப் போன ராம்குமார் மெல்ல மெல்ல சுயநினைவிழந்து மயங்கிச் சரிந்தார்.
புது காதல் மலரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
47
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Adutha ud ku waiting sis
Yena Achu sathya unmaya othukitara ah
Amri pavam antha vishala ah potu thala ah alu ilama ah pochu