சிவாவிற்கு ஒரு வேலையும் ஓடவில்லை. அவனிடம் நின்று கூட பேசாமல் சென்ற பிரியாவை என்னவென்று நினைப்பது?
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவள் காதலை வீட்டில் சொல்ல வேண்டும் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் அவனது பிரச்சனைகளை அவள் சொன்ன விதம்?
அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவள் பணக்கார பெண் தான். அதை அவன் மறுத்தது இல்லை. அதனால் தான் அவனும் நன்றாக சம்பாதித்து பணம் சேர்க்கும் வரை பொறுமை காக்க முடிவு செய்தான்.
ஆனால் இப்படி அவனது பிரச்சனையை குறையாக பேசுவாள் என்று நினைக்கவில்லை. பணப்பிரச்சனையில் அவன் இருக்கும் போது காதலை சொல்ல மாட்டாளாம்.
சிவாவிற்கு கோபமும் ஆற்றாமையுமாக இருந்தது. அவனது காதல் மெல்ல மெல்ல விலகி மனம் இருண்டு கொண்டே போனது. அவனை அமரோடு ஒப்பிட்டுப் பார்த்தான்.
அமரிடம் எத்தனையோ தொழில்கள் உண்டு. எக்கச்சக்கமாக பணமும் உண்டு. அவனோடு பழக ஆரம்பித்ததும் தான் பிரியா மாறி விட்டாள் என்று அவன் மீது மனம் பழி சுமத்தியது.
இப்போது கூட மணிக்கணக்காக இருவரும் அறையில் ஒன்றாக அமர்ந்து வேலை செய்கின்றனர். அவனால் சென்று பிரியாவை உரிமை கொண்டாட முடியுமா?
அமர் பிரியாவை அழைத்து வேலை சொல்கிறான். எதாவது பேசுகிறான். ஒன்றாக காரில் வெளியே செல்கின்றனர். எல்லாம் தானாக நடக்கிறது. ஆனால் யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. கண்டு கொள்ளப்போவதில்லை.
சிவாவோடு பேசும் போது மட்டும் பிரியா சுற்றி ஆட்கள் இருக்க கூடாது என்று நினைக்கிறாள். அவனை பகிரங்கமாக காதலனாக அறிமுகப்படுத்த தயங்குகிறாள். அவனோடு வெளியே செல்ல யோசிக்கிறாள். பேசிக் கொண்டிருந்தாலும் யாரும் பார்த்தால் தப்பித்து ஓடுகிறாள்.
அவனை முழுக்க முழுக்க தள்ளி வைத்து விட்டு அமரோடு மட்டுமே ஒட்டிக் கொண்டு அலைவதில் என்ன நியாயம்? பொறாமையும் அகங்காரமும் தலைவிரித்தாட சிவா முடிவு செய்தான்.
பிரியா தங்களது காதலை எல்லோரின் முன்பும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவளை பிரிந்து விட வேண்டியது தான். வெறும் கைபேசி செய்திகளில் மட்டும் காதலை வளர்ப்பதில் இனி அவனுக்கு உடன்பாடில்லை.
எல்லாவகையிலும் பிரியா அவனுக்கு சொந்தமாக வேண்டும். இல்லாவிட்டால் மொத்தமாக பிரிந்து போகட்டும்.
சண்முகியை போல் சிவா முட்டாள் அல்ல. நமக்கானது தான் என்று நம்பியிருக்கும் போது அடுத்தவனும் பங்கு போடுவானாம். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஏமாற வேண்டுமாம்.
சண்முகி வீட்டுக்குள் அடைந்து கிடந்ததால் சுப்பிரமணி அலுவலகத்தில் லீலைகளை நடத்தினான். சிவா கைபேசியில் காதலித்தால் அமரோடு பிரியா ஊரறிய சுற்றுவாளா?
நடக்காது. சண்முகியை போல் அவன் ஏமாற மாட்டான். அவனுக்கு முடிவு வேண்டும். இப்போதே வேண்டும். வேலை நேரம் முடிந்து எல்லோரும் கிளம்பிய பின்னும், சிவா காத்திருந்தான். பிரியாவிடம் பேசாமல் செல்லக்கூடாது என்று முடிவு செய்தான்.
அதே நேரம் அமருக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது.
“வர்ரேன் டாக்டர்..” என்றவன் உடனே அனைத்தையும் மூடி விட்டு எழ பிரியா, “என்னாச்சு?” என்று கேட்டாள்.
“தாத்தாவ பார்க்க கூப்பிடுறாங்க.. நீ வீட்டுக்கு போ.. நான் ஹாஸ்பிடல் போயிட்டு மிச்சத்த ஃபோன்ல சொல்லுறேன். அண்ட்.. உன் அப்பா கிட்ட இத காட்டு.. இன்னைக்குள்ள இத முடிக்கனும்…” என்று அவசரமாக பேசியவன், அனைத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்ப பிரியாவும் மூடி வைத்தாள்.
அமர் முதலில் வெளியேறி விட பிரியா பொறுமையாக வெளியே வந்தாள்.
சிவா வேகமாக அவளை நோக்கி வர ஆச்சரியமாக பார்த்தாள்.
“நீ இன்னும் வீட்டுக்கு போகலயா?”
“உன் கிட்ட பேச தான் வெயிட் பண்ணேன்”
“என்னது?”
“காலையில சொன்னத மறந்துட்டியா?”
“அதுக்கு தான் அப்பவே சொன்னேனே.. நீ முடியாதுனு சொல்லிடுனு..”
“சுகந்தபிரியா எப்ப தான் நம்ம லவ்வ உன் வீட்டுல சொல்லலாம்னு இருக்க?”
“டைம் வரும் போது தான் சொல்ல முடியும்”
“அந்த டைம் எப்ப வரும்? எப்பவும் இதையே சொல்லுற? என் நிலைமை புரியலயா?”
“நீ தான் புரிஞ்சுக்காம பேசுற.. இப்ப லவ் சொன்னா என்னாகிடும்? புதுசா ஒரு பிரச்சனை வரும். இருக்கது சரியாகாது”
“ஆகும்.. லவ்வ சொன்னா தான் கல்யாண பேச்ச நிறுத்துவாங்க”
“நீ பிடிக்கலனு சொன்னாலும் நிறுத்துவாங்க. உங்க மாமா வீட்டுல இருந்து ஹெல்ப் வேணும்ங்குறதுக்காக உன் வாழ்க்கைய நீ ஏன் பணயம் வைக்க பார்க்குற? பிடிக்கலனு சொல்லு.. அதுக்கு மேல ஹெல்ப் பண்ணா அவங்க நல்லவங்க.. இல்லனா உன்னை டார்கெட் பண்ணி தான் வந்துருக்காங்கனு அர்த்தம். அவ்வளவு தான் விசயம்”
“நான் ஏன் பிடிக்கலனு சொல்லனும்?” என்று கேட்டு விட பிரியா கோபமாக பார்த்தாள்.
“அப்படினா? உனக்கு பிடிச்சுருக்கா?”
“பிடிச்சுருக்குனு எப்ப சொன்னேன்? ஏன் பிடிக்கலனு சொல்லனும்னு கேட்குறேன்”
“கன்ஃபியூஸ் பண்ணாம பேசு சிவா”
“நீ என்னை பிடிச்சுருக்குனு சொல்ல தயங்குற.. நான் பிடிக்கலனு சொல்ல தயங்குறேன். புரியுதா?”
“ரெண்டும் ஒன்னா?”
“ஆமா.. நீ உன் பேரன்ட்ஸ் மனச பார்க்கும் போது நான் பார்க்க மாட்டனா? நான் முடியாதுனு சொன்னா என் பேரண்ட்ஸ் வருத்தப்படுவாங்க”
“சோ? பிடிச்சுருக்குனு சொல்ல போறியா?”
“அப்படி ஒன்னும் நான் சொல்லலயே”
“நீ வேணும்னே என்னை ட்ராப் பண்ண பார்க்குற”
“அப்படியே வச்சுக்கோ.. ஆனா நீ செய்யுறதும் தப்பு தான். நான் ஒன்னு கல்யாணத்துக்கு ஓகே சொல்லனும். இல்லனா உன் பேர சொல்லனும். ரெண்டுல ஒரு ஆப்ஷன நீயே செலக்ட் பண்ணு”
பிரியா அதிர்ந்தாள். இப்படி மிரட்டுவான் என்று எதிர்பார்க்கவில்லை.
“இவ்வளவு தூரம் என்னை கார்னர் பண்ணுவனு எதிர்பார்க்கல” என்றவளுக்கு மனதின் வலி கண்ணீராக மாற ஆரம்பித்தது.
“உடனே அழுது சமாளிக்காத. உன்னால என்னை ஏத்துக்க முடியாது. ஆனா உனக்காக நான் மட்டும் தியாகம் பண்ணனும்னு எதிர்பார்க்குற இல்ல?”
பிரியாவின் தொண்டை அடைத்தது. அவளது மனதிலும் கீறல் விழுந்தது. இப்படி ஒரு வார்த்தையை சிவாவிடமிருந்து கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.
“ஏன் சிவா இப்படிலாம் பேசுற?”
“நீ தான் பேச வைக்கிற.. நம்ம லவ்வ உன்னால பப்ளிக்கா ஏத்துக்க முடியல.. அதுக்காக இப்படி தட்டி கழிச்சுட்டே இருக்க…”
“சிவா..”
“உனக்கு ஒரு நாள் டைம் தர்ரேன்.. உன் வீட்டுல விசயத்த சொல்லு.. சொல்ல முடியலனா என்னை மறந்துடு..” என்றவன் அவள் கண்ணீர் விடுவதை கூட பொருட்படுத்தாமல் கிளம்பி விட்டான்.
பிரியாவின் மனதில் விழுந்த கீறல் ஆழமானது. அவளை மிரட்டி விட்டுச் செல்கிறான். அவள் காதலை சொல்லாவிட்டால் அவனை மறக்க வேண்டுமா?
மனம் வலியில் துடிக்க அங்கிருந்து வீட்டுக்குச் சென்றாள். வேலைகள் நிறைய இருந்தது. அவளை பார்த்ததும் வளவன், “என்னமா இவ்வளவு சோர்ந்து போய் வர்ர?” என்று அக்கறையாக கேட்டார்.
“வேலைப்பா”
“அமர் இப்ப தான்மா சொன்னார்.. உன் கிட்ட நிறைய வேலைய கொடுத்துட்டதா.. என்னைய பார்க்க முடியுமானு கேட்டாரு.. நீ ஃபைல என் கிட்ட கொடு.. போய் சாப்பிட்டு தூங்கு.. நான் பார்த்துக்கிறேன்” என்று அனுப்பி வைத்தார்.
மனதில் அமருக்கு நன்றி சொல்லி விட்டு, உணவை மறுத்து விட்டு அறைக்குள் சென்று படுத்து விட்டாள். சிவாவிடம் பேச வேண்டும் போல் இருந்தது. அவனை சமாதானம் செய்ய வேண்டும். உண்மையிலேயே இப்போது காதலை சொல்லும் நேரமல்ல. இப்போது சொன்னால் சிவாவை எதற்காகவும் பெற்றோர்கள் ஏற்க மாட்டார்கள்.
அவனிடம் அதிக பணமில்லை என்பது பெரிய பிரச்சனையில்லை. ஆனால் பணப்பிரச்சனையை அறிந்தால் அவனது மதிப்பு குறைந்து போகும். அவளை பற்றியே பேசுகிறானே.. அவர்களது குடும்பத்தில் மட்டும் எப்படி ஏற்பார்கள்?
மாமன் மகள் ஒருத்தி காத்திருக்க, அவளால் அந்த குடும்பம் நிறைய நன்மைகளை அடைய காத்திருக்கும் போது பிரியாவை ஏற்பார்களா? இங்கே அவளது பெற்றோரும் ஏற்க மாட்டார்கள். அது தெரிந்தால் அங்கே அவனுடைய பெற்றோர்களும் மறுப்பார்கள்.
இதற்கு வேறு வழி கண்டு பிடிக்காமல் இப்படி சிவா அவளை காயப்படுத்துவது தான் அவளுக்கு பிடிக்கவில்லை. சிவா எதாவது பேசுவானா? என்று கைபேசியை பார்த்துக் கொண்டே படுத்திருந்தவள், அதீத அயர்ச்சியில் உறங்கி விட்டாள்.
காலையில் வழக்கத்துக்கு மாறாக தாமதமாக எழுந்தவள் கிளம்ப நினைக்க கயல் வந்தார்.
“பிரியா.. அமரோட தாத்தா இறந்துட்டாராம்” என்றதும் அதிர்ந்து போய் கீழே இறங்கினாள்.
“எப்போமா?”
“காலையிலயே இறந்துட்டாராம். இப்ப வீட்டுக்கு கொண்டு வந்துட்டு இருக்காங்களாம். உன் அப்பா கிளம்புறாரு..”
“நானும் போறேன்..”
“நீ எதுக்குடி?”
“ம்மா.. அமர் என்னோட நல்ல ஃப்ரண்ட்.. போகாம எப்படி இருக்க?” என்றவள் உடனே கிளம்பினாள்.
தந்தையும் மகளும் மாலையை வாங்கிக் கொண்டு அமரின் வீட்டை அடைந்தனர்.
அப்போது தான் பலர் வந்து சேர்ந்தனர். எல்லோரும் மாலை போடுவதும் பார்த்து விட்டு கிளம்புவதுமாக இருக்க, அமர் வாசல் பக்கம் திரும்பினான்.
அதே நேரம் பிரியா காரை விட்டு இறங்கினாள். அவளை பார்த்ததுமே அமரின் கண்கள் கலங்கி விடும் போல் இருந்தது.
‘தாத்தா.. உங்க பேத்தி வந்துருக்கா.. பார்க்க மாட்டீங்களா?’ என்று கேட்டவனுக்கு தொண்டை அடைக்க திரும்பிக் கொண்டான்.
வளவன் மாலையை போட்டு விட்டு அமரிடம் வந்தார். அமர் தரையை பார்த்த வண்ணம் நிற்க தட்டிக் கொடுத்து விட்டு நகர்ந்தார்.
பிரியா முதன் முறையாக அமரை இப்படி பார்க்கிறாள். அவனது கண்கள் கலங்கியிருப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது. எப்போதும் சிரித்த முகமாக வேலை செய்பவன் அவன்.
அருகே செல்ல நினைத்தாலும் கால்கள் மறுத்தது. வந்தவர்கள் மாலை போட்டு விட்டு இடத்தை காலி செய்தனர். வளவன் வெளியே தெரிந்த ஆட்களிடம் பேச சென்று விட, பிரியா கூட்டத்தை விட்டு தூரமாக சென்றாள்.
அவளை கவனித்த அமர் கேள்வியாக பார்க்க அருகே வருமாறு சைகை செய்தாள்.
பெருமூச்சோடு அருகே சென்றான்.
“என்ன?”
“அழாதீங்க அமர்..”
“நா.. நான் அழலயே” என்று தடுமாற, தன் கைக்குட்டையை எடுத்துக் கொடுத்தாள்.
“தெரியும்.. அழாதீங்க.. தைரியமா இருங்க..” என்க அவனை மீறி கண்ணீர் நிறைந்து விட்டது.
உடனே கைக்குட்டையை பறித்து கண்ணீர் கண்ணை தாண்டும் முன்பு அழுத்தி துடைத்தான்.
“தாங்க்ஸ்..” என்க பிரியா தலையாட்டலோடு கிளம்பிச் சென்று விட்டாள்.
அந்த கைக்குட்டையை அமர் உற்றுப் பார்த்தான்.
‘மேபீ.. நான் அனாதை இல்ல தாத்தா..’ என்று சொல்லிக் கொண்டான்.
தொடரும்.