
அத்தியாயம் 2
இதயாம்ரிதா பூசி இருந்த உயர் ரக, செம்மையான ஜாஸ்மின் நறுமணம் அறை முழுதும் வியாபித்து இருக்க,
“பத்மபிரியா…” எனக் கூறியபடி அந்த நால்வரையும் பார்த்தாள் அவள்.
ஒற்றை விரலை அவர்கள் முன் காட்டி, யாரென சைகையிலேயே கேட்க, அவளது சிறு செயலிலும் ஆளுமை ததும்பி இருந்தது.
அவளது விழிமொழியிலேயே அவள் கேட்க வந்ததைக் கண்டுகொண்ட பத்மபிரியா, “இன்டெர்ன்ஸ் மேம். ஒரு மாசம் ஆகுது ஜாயின் பண்ணி” என்றாள்.
“ஓ! குட். எந்த காலேஜ்?” நால்வரையும் பார்த்து அவள் வினவ,
மிதுனா அடக்கமாக, “எம். ஜி காலேஜ் மேம்…” என்றாள்.
நொடிப்பொழுதில் சுருங்கிப்போன பாவையின் முகம், மறுநொடியே நிமிர்வாகி “தட்ஸ் ஃபைன்… நீ?” என அகிலைப் பார்த்துக் கேட்க, “நாங்க நாலு பேருமே ஒரே காலேஜ் தான்” என்றான் விதுரன்.
“ம்ம்ஹும்…” என ஒற்றைப்புருவத்தை உயர்த்தியவள் அங்கிருந்து நகர்ந்திட, பூமிகாவிற்கு அவளது இருப்பே பயத்தைக் கொடுத்தது.
‘ப்பா… செம்ம கெத்தா இருக்காங்க…’ என மற்றவர்களிடம் முணுமுணுக்கும்போதே அவர்களைத் தாண்டிச் சென்ற இதயாம்ரிதா திரும்பாலேயே சொடுக்கிட்டாள்.
“ஹே… ஜூனியர்ஸ். கம் டு மை ரூம்” என உத்தரவிட்டு அறைக்குச் சென்றதில், பூமிகாவிற்கு வேலைப் போக போகிறதென்ற பயத்தில் கண்ணில் நீரே வந்து விட்டது.
விதுரனோ, “இவங்க எதுக்கு ஜூனியர்ஸ்னு சொல்றாங்க எங்களை?” எனப் பத்மபிரியாவிடம் வினவ, “அதுவா… மேடமும் உங்க காலேஜ்ல தான் படிச்சாங்க. மேடம் மட்டும் இல்ல விஷால் சாரும் அங்க தான். நானும் அங்க தான் படிச்சேன்” எனச் சின்ன சிரிப்புடன் கூற, நால்வரும் மெல்ல அதிர்ந்தனர்.
“என்னது விஷால் சாரும் மேமும் காலேஜ் மேட்ஸ்ஸா?” அகில் திகைப்பாய் கேட்க,
“நாட் ஒன்லி காலேஜ் ப்ரெண்ட்ஸ்… ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ் தான்” என்றதும், “அப்பறம் ஏன் டைவர்ஸ் பண்ணுனாங்க?” என மிதுனா அதிகப்பிரசங்கித் தனமாக கேட்க, பத்மபிரியா அவளை முறைத்து விட்டு, “ரொம்பத் தேவையா இப்போ. முதல்ல மேடம் ரூம்க்குப் போங்க…” என்று கண்டித்து விட்டுச் சென்றாள்.
தேவையா உனக்கு? என மற்றவர்கள் அவளை நக்கலாய் பார்க்க, “ஹி ஹி ஒரு கியூரியாசிட்டி தான்” என நெளிந்தவள் அங்கிருந்து ஓடியே விட்டாள்.
நால்வரும் இதயாம்ரிதாவின் அறைக்குள் நுழைய, அவள் சுழல் நாற்காலியில் அமர்ந்து பேனாவை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வருவதைக் கண்டவள், “சிட்” என்றிட, “இட்ஸ் ஓகே மேம்” என மறுத்தனர்.
“ஐ செட் சிட்” அவள் தீவிர முக பாவனையுடன் சொன்னதும் நால்வரும் தானாக அமர்ந்து விட்டனர்.
அதில் மெல்ல இளகியவள், “சோ நீங்க நாலு பேரும் ஒரே டிபார்ட்மென்ட்டா?” எனக் கேட்டதும், “இல்ல மேம்…” என்ற மிதுனா, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு “நான் எம். பார்ம் படிச்சிருக்கேன். காஸ்மெட்டிக் சைன்ஸ் மேம்” என்றாள். அவளை போல மற்றவர்களும் அறிமுகம் செய்து கொண்டனர்.
“நான் விதுரன். எம். எஸ். சி ஐ. டி அண்ட் மாஸ் கமியூனிகேஷன்.”
“ஐ ஆம் அகில் மேம். எம். பி. ஏ”
“மைசெல்ப் பூமிகா மேம். நான் எம். டெக் படிச்சிருக்கேன்.”
“குட்… வேற வேற டிபார்ட்மெண்ட், எப்படி கனெக்ட் ஆனீங்க?” இதயாம்ரிதாவின் கேள்விக்கு பூமிகா பதில் அளித்தாள்.
“நான் – எலக்டிவ் (Non – elective) எங்களுக்கு ஒன்னு தான் மேம். அது மூலமா தான் ப்ரெண்ட்ஸ் ஆனோம்” என்றாள் பெருமையாக.
“ஓ!” உதடு குவித்த பெண்ணவளின் இதயத்தில் என்னென்ன கலவரங்களோ அவள் மட்டுமே அறிவாள்.
“இந்த நான் – எலெக்டிவ்க்கு யார் உங்களுக்கு க்ளாஸ் எடுத்தா?” ரோலிங் நாற்காலியில் சுற்றியபடி கேள்வியாய் வினவ,
அகிலோ “ரங்கன் சார் ஒரு சப்ஜெக்ட் எடுத்தாரு மேம். மத்த எல்லாரும் புதுசா வந்தவங்க தான்…” என்றதும்,
“ரங்கன் சார்…” என்று நெற்றி தட்டி சிந்தித்தவள் மெலிதாய் புன்னகைத்து, “ஓ… எது பேசுறதுனாலும் போர்ட்ல கை வச்சு ஒரு பொசிஷன்ல நின்னு பேசுவாரே அவரா?” எனக் கேலியாய் கேட்க, மற்றவர்களும் சிரித்தனர்.
“அவரே தான் மேம்… தூக்கம் வர்ற மாதிரி க்ளாஸ் எடுத்துட்டு தூங்க கூடாதுன்னு டார்ச்சர் பண்ணுவாரு” அகிலின் கேலியில் அவளும் புன்னகைத்தாள்.
“கேன்டீன்ல இப்பவும் அதே ஆறிப்போன பப்ஸ் தானா?”
“ஐயோ அதை ஏன் மேம் கேக்குறீங்க. அந்த காஞ்சு போன பப்ஸ தான் எல்லா பங்க்ஷனுக்கும் கொடுக்குறாங்க” என சலித்துக் கொண்டாள் பூமிகா.
“இண்டக்ஷன் ப்ரோக்ராம் அப்போ பிரியாணி போட்டுருப்பாங்களே பூமிகா?” இயல்பாய் இதயாம்ரிதா வினவ, “ம்ம் போட்டாங்க போட்டாங்க. பிரியாணின்னு எழுதி ஒட்டிருக்கணும் போல” எனக் கிண்டல் செய்ததில், மேலும் சில விஷயங்களை எளிமையாய் பேசியவளை விதுரனைத் தவிர மற்றவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.
“ஓகே… ஆல் தி பெஸ்ட். கிளம்புங்க” என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு, பத்மபிரியாவை அறைக்கு அழைத்தாள்.
மிதுனாவோ புன்னகை முகத்துடன், “அம்ரிதா மேம் செம்ம ஸ்வீட்ல விது” என்றதில், “ஏய் லூசு, இப்ப அவங்களுக்கு நம்மள மாதிரி இன்டெர்ன் தான் தேவை. அப்ப தான் ஆபிஸை நடத்த முடியும். அதுக்காக ஏதோ ஐஸ் வச்சு பேசுறாங்க. அது புரியாம என்னவோ சிலிர்த்துட்டு இருக்க… மொதோ வேற நல்ல வேலை தேடணும்” என முணுமுணுத்து விட்டு அவன் கிளம்பி விட்டான்.
“அந்த மேம் ஒன்னும் ஐஸ் வைக்கிற மாதிரி பேசுனாப்ல தெரியல… இல்லடா அகி” என அகிலிடம் அபிப்ராயம் கேட்க, அவனோ வெட்கத்தில் நெளிந்தான்.
“என்னை நாலு தடவ மேம் பேர் சொல்லிக் கூப்பிட்டாங்க தெரியுமா. ஒரே ஜில்லுன்னு ஆகிடுச்சு” என்று தரையில் கோலமிட, பூமிகா தலையில் அடித்துக்கொண்டாள்.
பத்மபிரியாவைக் காட்டத்துடன் ஏறிட்ட இதயாம்ரிதா, “எனக்கு பி. ஏ கேட்டேன்ல. இன்னும் ஆள் எடுக்கலையா?” எனக் கேட்க,
“அது மேம்…” எனத் தயங்கினாள்.
“என்ன? இவ பிசினஸை நடத்துவாளா நட்டாத்துல விடுவாளான்னு தெரிஞ்சதும் பிக்ஸ் பண்ணிக்கலாம்னு விட்டுட்டியா?” மனதை ஊடுருவி குளிரூட்டும் பார்வைதனை அவள் மீது செலுத்த, அவள் நடுங்கி விட்டாள்.
“என்ன அம்ரி இது?” வருத்தம் தோயக் கேட்டவள், “நடக்குற ப்ராபளம்ல எம்பிளாயிஸ் கேதர் பண்றது கஷ்டமா இருக்கு மேம்… எக்ஸ்பீரியன்ஸ் ஆளுங்க எல்லாம் ஒரிஜினல் நிவோரா கம்பெனிக்கு தான் போறதா சொல்றாங்க. புதுசா ஆள் எடுத்தா, ஃப்ரெஷர் அப்படி இல்லனா இந்த பி. ஏ போஸ்ட்க்கு சம்பந்தம் இல்லாத ஆள்களை எடுக்க வேண்டியதா இருக்கு மேம்” என்றாள்.
“ம்ம்…” விழி இடுங்க சில நொடிகள் சிந்தித்தவள், “ஓகே… எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் எல்லாம் முக்கியம் இல்ல. உழைக்கணும். எனக்கு உண்மையா உழைக்கணும். தட்ஸ் இட்” என்றதும், “ஓகே மேம்… அப்போ சில ஆப்ஷன்ஸ் இருக்கு. நான் ஃபைனலைஸ் பண்ணிட்டு உங்களுக்கு ரெசியூம் சென்ட் பண்றேன்” என்றாள்.
“ம்ம்ஹும்… நீ பேக்ரவுண்ட் வெரிஃபிகேஷன் முடிச்சுட்டு நீயே ஆளை சூஸ் பண்ணி எனக்கு அனுப்பு. நாளைக்கே!” என்று கண்டிப்பாய் கூறிட, உடனடியாய் அதற்கான வேலையில் இறங்கினாள் பத்மபிரியா.
மறுநாளே, தனது தந்தை சுயமாக உருவாக்கிய இந்த அலுவலகத்தின் வாயிலில் இருந்து மிகப்பெரிய அளவில் பொறித்திருந்த நிவோரா என்ற பெயரை நீக்க வைத்திருந்தாள் இதயாம்ரிதா.
அவளது பிரிவில் சென்னையின் கிளை மட்டுமே வந்திருந்தது. மேலும் தந்தையின் சில கோடிகள் பெறுமானமுள்ள சொத்துக்கள் அவள் வசம்.
அலுவலகத்தினுள் நுழைந்ததுமே பத்மபிரியா உதவியாளரைத் தேர்வு செய்து விட்டதாகக் கூறிட, தலையாட்டிக்கொண்டாள்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு தனது பணியில் மூழ்கிப்போன இதயாம்ரிதா, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள்.
“எஸ் கமின்!” கம்பீரக் குரல் தேயும் முன்னே, அதே கம்பீரத்தில் சிறிதும் பிசிறில்லாது உள்ளே நுழைந்தான் சத்யா. சத்யா யுகாத்ரன். அவளுக்கு உதவியாளராக பத்மபிரியா மூலமாகத் தேர்வானவன்.
அவனை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தது பாவையின் விழிகள்.
ஆறடிக்கு ஒரு அங்குலம் கூட குறையாத உயரம். அடர்ந்த புருவங்களின் கீழே அழுத்தமான கருவிழிகள். முகத்தில் எப்போதும் குடிக்கொண்டிருக்கும் போலான இறுக்கம். இள நீல நிறச் சட்டையும் கருப்பு நிற பேண்ட்டும் அணிந்திருந்தவன், அழகாய் சட்டையை இன் செய்திருக்க, அவனது கேசம் கண்களைத் தொடாமல் அளவாய் வெட்டப்பட்டு இருந்தது.
பார்த்ததும் கவரும் வசீகரம் நிறைந்தவன்.
“குட் மார்னிங் மேம். ஐ ஆம் சத்யா யுகாத்ரன்” என அவள் முன்னே ஒரு கோப்பை நீட்ட, அவனது குரலும் காந்தமாய் ஈர்த்தது.
அவனை பார்வையால் ஊடுருவி விட்டு, கோப்பை வாங்கிப் பார்வையிட்டவள், “நிறைய கோர்ஸ் முடிச்சு இருக்கீங்க… அதோட சர்டிபிகேட்ஸ் இருக்கு. ஓகே… பட் வேர் இஸ் யுவர் காலேஜ் சர்டிபிகேட்ஸ்” என்றதும் அத்தனை நேரம் மிடுக்கு மறையாது நின்றிருந்தவனின் சின்னதொரு தடுமாற்றம்.
“சர்டிபிகேட்ஸ் இல்ல மேம்”
“இல்ல மீன்ஸ் மிஸ் ஆகிடுச்சா?” வில்லாய் வளைந்த அழகு புருவம் இன்னும் வளைவது அழகியவள் அவளுக்கு.
அப்புருவத்தின் வழியே அவனது விழிகளும் ஒரு நொடிக்கும் குறைவாய் வளைந்து விட்டு, “ஆமா…” என்றான்.
“ம்ம்… ஓகே! ஃபர்ஸ்ட் ஒன் வீக் உங்களுக்கு ட்ரையல். அந்த ஒன் வீக் சாலரி ஆட் ஆகாது. எவ்ளோ சீக்கிரம் வேலையைக் கத்துக்கிட்டு என் வேலையைக் குறைக்கிறீங்களோ, அவ்ளோ சீக்கிரம் பெர்மனண்ட்டா அப்பாய்ண்ட் பண்ணுவேன். காட் இட்?” எனக் கண்டிப்பாய் கூற, “எஸ் மேம்” என அட்டென்ஷனில் உரைத்தான்.
பைலை எடுத்துக்கொண்டு வாசல் கதவு நோக்கிச் செல்லும்நேரம், பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் அவளது முகம் எதிரொலித்ததில் அதனை ஒரு கணம் கூர்மையுடன் பார்த்து விட்டுச் செல்ல, அவளோ அவன் சென்ற திசையை நாற்காலியில் சுற்றியபடி பார்த்திருந்தாள்.
“கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியெல்லாம், ‘பி. ஏ’ ன்ற பேர்ல வயசான ஆளுங்களை எடுத்துட்டு இருந்தா இந்த பத்மா… இப்ப போய் அம்சமா இருக்குறவனை எடுத்து வச்சுருக்கா” என மானசீகமாக பத்மபிரியாவிற்கு திட்டும் விழுந்தது.
இதயாம்ரிதா சொன்னதுபடி, சத்யா யுகாத்ரனுக்கு முதல் ஒரு வாரம் பயிற்சியாகத் தான் சென்றது.
அழகு சாதனப் பொருள்கள் பற்றிய விவரங்கள், அதன் ஏற்றுமதி இறக்குமதி, அயல்நாட்டு தொடர்பு, அந்த அழகு சாதனங்களை உற்பத்தி செய்ய அடிப்படைத் தேவையான துறைகள் எனப் பலவிதமான விஷயங்களைத் தெரிந்து கொண்டான். இந்தத் துறை அவனுக்கு முற்றிலும் புதிது.
அழகுப் பொருள்களை உபயோகிக்க மாடல்களையும் அவனே அப்ரோச் செய்யவும் பணி வழங்கப்பட்டது. சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் இதயாம்ரிதாவிற்கு ஏ டூ இசட்டாக அவன் இருத்தல் அவசியம்.
நிவோரை காஸ்மெட்டிக்ஸ் பற்றி பெரிய ஞானமெல்லாம் அவனுக்கு இல்லை. பல வருடமாய் தொழிலில் உச்சத்தில் இருப்பவர்கள். தற்போது இரண்டாகப் பிரிந்திருப்பது புரிந்தது.
“சத்யா…” தனது அறையின் ஓரத்திலேயே சத்யா யுகாத்ரனுக்கும் கேபின் அமைத்திருந்தாள்.
அவளது குரலில் அடுத்த நொடி அவள் முன் நின்ற சத்யா, எஸ் மேம் என்க,
“மாடலிங் பண்ண நியூ ஃபேசஸ் எடுக்க சொன்னேன். என்ன ஆச்சு?” என்றாள் புருவம் சுருக்கி.
“ரெண்டு மூணு ஆப்ஷன்ஸ் இருந்தது மேம். நீங்க அதெல்லாம் ரிஜெக்ட் பண்ணிட்டீங்க.”
“ப்ச்… அது எதுவுமே சாட்டிஸ்ஃபைடா இல்ல. ஹீரோஸ், ஹீரோயின்ஸ் இந்த மாதிரி அப்ரோச் பண்ணுனா?”
“பட் அவங்க டிமாண்ட் அதிகமா இருக்கே மேம்” சத்யா எடுத்துரைத்ததும், “ஹ்ம்ம்…” என அவள் யோசிக்கும்போதே, “ஒரு டாப் ஹீரோ மாடலிங் பண்ண ஓகே சொன்னாங்க. பட்…” என இழுத்தான் சத்யா.
“பட்?” நெற்றியில் வரிகள் எழுந்தது பெண்ணவளுக்கு.
“அட்ஜஸ்ட்மெண்ட்க்கு பொண்ணு ரெடி பண்ண சொல்றான் மேம்” சத்யாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
“ஊஃப்… இந்த ஃபீல்டுல இது எல்லாம் சகஜம் மேன். நீ என்ன பண்ணுன?” என்றவளின் கேள்வியில் ஆத்திரம் மிக,
“என்ன பண்ணனும். நானே ரிஜெக்ட் பண்ணிட்டேன்” என்றான் கடுப்பாய்.
“ரிஜெக்ட் பண்ற வேலையை உங்களுக்கு யாரு குடுத்தது சத்யா?” காட்டத்துடன் இதயாம்ரிதா கேட்க,
“கூட்டிக் குடுக்குற வேலைக்கு நான் இங்க சேரல மேம்…” அவனும் அடங்காத காட்டத்துடன் பதில் அளித்தான்.
இருவரின் விழிகளும் ஒரு நொடி அனலாக தீண்டிக்கொண்டது.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

சத்யா செம