முதல் நாள் வேலையை முடித்து வீட்டுக்கு வந்த பிரியா, அனைத்தையும் தந்தையிடம் ஒப்பித்தாள்.
“உனக்கு தான் எதுவும் தெரியாதே.. கத்துக்கிட்டு போறதுல தப்பில்ல” என்றார் தாய் கயல்.
“தப்புனு சொல்லல.. ஆனா ஒன்னுமே தெரியாத என்னை அவர் தலையில கட்டிட்டீங்களேனு நினைச்சுடக்கூடாதேனு கவலை அவ்வளவு தான்” என்று கூறினாள்.
வளவன் மகளை புன்னகையுடன் பார்த்தார். அவருக்கு மகளின் கவலை புரியாமல் இல்லை. ஆனால் அவளுக்கும் உலகம் தெரிய வேண்டுமல்லவா?
“அவரு உனக்கு எல்லாமே சொல்லிக்கொடுத்துடுவாரு. கவலையே படாத” என்று கூறி தட்டிக் கொடுத்து தேற்றினார்.
பிரியா அதை கேட்டு நல்ல பெண்ணாக தலையாட்டி விட்டு அறைக்குச் சென்றாள். கதவை அடைத்ததும் உடனே கைபேசியை எடுத்துக் கொண்டு மெத்தையில் விழுந்தாள்.
அதில் வந்திருந்த குறுஞ்செய்திகளில் முக்கியமான ஒருவனின் செய்தியை மட்டுமே எடுத்தாள்.
சிவராமன். அவளுடைய காதலன். அவளுடைய கல்லூரி சீனியர். அவர்களிடமே வேலையும் செய்கிறான்.
“இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க” என்று காலையிலேயே செய்தி அனுப்பியிருந்தான்.
பார்த்ததும் வெட்கம் வந்தது. காலையில் அவனை பார்த்தாலும் அவள் காட்டிக் கொள்ளவில்லை. தந்தை இருந்தார். புதிய ஆட்களும் இருந்தனர். அதனால் எப்போதும் போல் தெரியாதது போலவே கடந்து விட்டாள்.
பிரியா இனி அங்கே தான் வேலை செய்ய போகிறாள் என்று சொன்ன போது, சிவா துள்ளி குதித்தான். அவளை சந்திக்க நிறைய வாய்ப்புகள் இருக்கும் அல்லவா? அது போதும் அவனுக்கு.
ஆனால் பிரியா அது போல நினைக்கவில்லை. இது வரை தன் காதலை வீட்டில் சொல்லும் அளவு அவளுக்கு தைரியம் வரவில்லை. சரியான நேரமும் வரவில்லை.
அதனால் முடிந்த வரை அவர்களது காதலை கைபேசியோடு நிறுத்திக் கொண்டனர். சிவாவின் நண்பன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த காதல் விசயம் தெரியும். பிரியா யாரிடமும் சொல்லவில்லை.
கல்லூரியில் அவள் சேர்ந்த போது, அவன் முதுகலை பட்ட முதலாம் ஆண்டு படித்தான். ஒரு வருடம் வரை வெறும் நண்பர்களாக இருக்க, சிவா கடைசி வருடத்தில் தான் தன் காதலைச் சொன்னான்.
முதலில் தயங்கி விட்டு, பிறகு மெல்ல அவனது காதலில் கரைந்து சம்மதம் சொன்னாள் பிரியா. அதிலிருந்து இருவரும் காதலர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை. கைபேசி ஒன்றே வழியாக இருக்க, அதில் காதலை வளர்த்தனர்.
தந்தைக்கு உதவுவதாக சொல்லி அலுவலகம் சென்ற போதெல்லாம், அவனை தான் சந்திக்கச் சென்றாள் பிரியா. அதனால் தான் நிறுவனத்தை விற்பதாக தந்தை சொன்ன போது, அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
முடிந்தவரை பேசினாள். எல்லா ஏற்பாடும் முடிந்ததாக சொன்ன பிறகு, அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் அதற்கு பரிகாரமாக வளவன் அவளை அதே நிறுவனத்தில் வேலையில் சேரச் சொல்லி விட்டார். இது போதுமே அவளுக்கு. சந்தோசமாக ஏற்றுக் கொண்டாள்.
பிரியாவுக்கு இந்த நிறுவனத்தை விற்பதில் விருப்பமில்லை என்று வளவன் நினைத்திருக்க, அவளுக்கு காதலனை பிரிய மனமில்லை என்பது தான் உண்மை. அது யாருக்கும் தெரியாமல் போனது.
இன்று காலையில் செல்லும் போதே தன்னிடம் வந்து பேச வேண்டாம் என்று சிவாவிற்கு எச்சரிக்கை செய்து விட்டாள். ஆர்வக்கோளாறில் மாட்டிக் கொள்ளக்கூடாது அல்லவா?
அதனால் அவனை கண்டும் காணாமல் சென்று வேலையை மட்டும் பார்த்து விட்டு திரும்பி விட்டாள். இப்போது சந்தோசமாக அவனோடு குறுஞ்செய்தியில் பேச ஆரம்பித்து விட்டாள்.
✦
அமர் ஒரு பாடலை ஹம் செய்து கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். அவனது தாத்தா பூபதி இந்நேரம் உறங்கியிருப்பார்.
அதை பற்றிக் கவலைப்படாமல் சூ வை கலட்டி போட்டு விட்டு, பூஜை அறைக்குச் சென்றான். அங்கே படமாக தொங்கிக் கொண்டிருந்தார் அவனை பெற்ற பரமேஸ்வரி.
“ம்மா.. இன்னைக்கு அவள பார்த்தேன்.. பார்த்து பேசிட்டேன்” என்று சிரிப்பு நிறைந்த குரலில் சொன்னான்.
பரமேஸ்வரி படத்தில் புன்னகைத்ததை தவிர பதில் ஒன்றும் சொல்லவில்லை.
“ஐ நோ ஐ நோ.. அவளுக்கு நான் யாருனே தெரியாது.. பட் சீக்கிரமே அவளுக்கு என்னை பிடிக்க வச்சுடுவேன். இதே இடத்துல உங்க மருமகளா வந்து அவ விளக்கேத்துவா. பார்த்துட்டே இருங்க..” என்று சொல்லி விட்டு சிரிப்பு குறையாமலே அங்கிருந்து ஓடினான்.
காலையில் வேலையில் விரைப்பாக இருந்த அமர் இப்போது இல்லை. துள்ளி குதிக்கும் சிறுவனாக மாறியிருந்தான்.
தன்னுடைய அறைக்கு ஓடிச் சென்றவன், மேசையில் சட்டமிடப்பட்டு அழகாக இருந்த சுகந்த பிரியாவின் படத்தை எடுத்தான்.
“என்னோட சுகம்..” என்று மீண்டும் ஒரு முறை ரசித்தான்.
தினமும் ஆயிரம் முறையாவது அந்த படத்தை பார்த்து விடுவான். பார்க்கா விட்டால் அவனது பொழுது போகாது.
அந்த படத்தில் பிரியா புடவை கட்டியிருந்தாள்.
அவள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது எடுத்த புகைப்படம். ஆனால் அந்த படத்தில் அவள் பெரிய பெண்ணாக தான் தெரிந்தாள்.
புடவையோடு பரதநாட்டியம் ஆடியபோது எடுத்த படம். அவளது குரு தான் பரமேஸ்வரி.
பள்ளியில் கடைசி வருடத்தில் அவளது அரங்கேற்றம் நடந்த போது பார்த்து, அப்போதே மனதை பறி கொடுத்து விட்டான். ஆனால் அவளது வயதை கேட்ட போது, மனதை சொல்ல தயக்கமாக இருந்தது. பதினெட்டு வயதைக் கூட அவள் தொடவில்லை.
அவனது காதல் பற்றிப்பேசினால், பரமேஸ்வரிக்கு கோபம் வந்து விட வாய்ப்புண்டு என்று மனதில் மறைத்துக் கொண்டான். அப்போது இருந்த தடை இப்போது இல்லை. திருமணத்திற்கான வயதை இருவருமே தொட்டு விட்டனர்.
“அம்மா கிட்ட சொன்னது தான் உன் கிட்டயும் சொல்லுறேன்.. சீக்கிரமா வந்து, இந்த வீட்டுல என் மனைவியா வாழனும். வாழ வைக்கிறேன்..” என்று அந்த படத்தை விரல்களால் வருடி பேசினான்.
எடுத்த இடத்தில் மீண்டும் சரியாக வைத்து அழகு பார்த்து விட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.
✦
அடுத்த நாள் காலை…
பிரியா சீக்கிரமே கிளம்பி காரை ஓட்டி அலுவலகத்தை அடைந்தாள். இன்று சீக்கிரமாக வரச்சொல்லி சிவா கேட்டிருந்தான். அவளிடம் நேற்று நேரில் பேச முடியாத வருத்தம் அவனுக்கு.
அதனால் அரக்கபரக்க அவள் கிளம்பி ஓட, பெற்றவர்கள் பெண்ணுக்கு பொறுப்பு வந்து விட்டதாக நினைத்து விட்டனர்.
காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, வெளியே எட்டிப் பார்த்தாள். இன்னும் பாதி ஆட்கள் கூட வந்திருக்கவில்லை. அவ்வளவு விரைவாக வந்து விட்டாள்.
கைபேசியில் சிவாவின் பெயரை எடுக்க, அவனது பைக் கண்ணில் பட்டது. துள்ளி குதித்து காரை விட்டு இறங்கினாள்.
அவளை பார்த்ததும் சந்தோசமாக பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினான் சிவா. தலைக்கவசத்தை கழட்டி வைத்து விட்டு, அவளை நோக்கி நடந்தான்.
“ஹாய்…”
“வாவ்! நேத்த விட இந்த டிரஸ் சூப்பரா இருக்கு..” என்று அவன் புகழ, பிரியாவிற்கு சந்தோசத்தில் உள்ளம் துள்ளியது.
“டிரஸ் மட்டும் தான் நல்லா இருக்கா?” என்று தலை சாய்த்து கேட்டாள்.
“நீ அத விட அழகா இருக்க” என்றதும் அவளுக்கு மனம் நிறைந்தது.
“நேத்து ரொம்ப வேலையா? ரொம்ப நேரமா மேனேஜர் கூட பேசிட்டே இருந்தியே.. அதான் நானும் உன்னை டிஸ்டர்ப் பண்ணல”
“இல்ல.. எனக்கு தெரிஞ்சத சொல்ல வேண்டியிருந்தது அவ்வளவு தான்” என்று புன்னகைத்தாள்.
தலையாட்டியவன் அமைதியாக நிற்க, இரண்டு நொடிக்குப்பிறகு சிரித்து விட்டாள் பிரியா.
“ஏன் சிரிக்கிற?”
“இல்ல.. நாம ஃபோன்ல நிறைய பேசி பேசி.. நேர்ல பார்த்தா என்ன பேசுறதுனே தெரியாம அமைதியாகிடுறோம் இல்ல?”
சிவாவும் இதைக்கேட்டு சிரித்தான்.
“ஆமா.. உன்ன நேர்ல பார்த்தா, பார்க்க மட்டும் தான் தோணுது.. பேசனும்னு எதுவும் தோண மாட்டேங்குது.”
“ஓ.. ரொம்ப ஐஸ் வைக்கிற நீ”
“நிஜம்மா.. உன்னை பார்த்தா மட்டும் போதும்னு இருக்கு”
“இருக்கும் இருக்கும்” என்றவள் கேலியில் தனது சந்தோசத்தை மறைத்துக் கொண்டாள்.
“உள்ள போகலாமா? நிறைய பேர் வர ஆரம்பிச்சுட்டாங்க” என்று அவன் சொன்னதும், உடனே தலையாட்டி விட்டு நடந்தாள்.
துள்ளிக் கொண்டு ஓட கால்கள் துடித்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு நடந்தாள். இருவரும் லிஃபிடில் நுழைய, அந்த கட்டிடத்தில் இருக்கும் பல அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் அதனுள் நுழைந்தனர்.
எல்லாம் தெரியாத முகம் உறுதி செய்த பிறகு, சிவா பிரியாவின் கையைப்பிடித்து விரல்களை கோர்த்துக் கொண்டான். ஒரு நொடி அதிர்ச்சியடைந்தாலும், உடனே புன்னகைத்து உள்ளே குமிழிட்ட சந்தோசத்தோடு அவளும் கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
லிஃப்ட் சீக்கிரமே கதவை திறந்து விட, இருவரும் இறங்கி விட்டனர்.
“இப்பவே வேலைய ஆரம்பிக்க போறியா?” என்று சிவா கேட்க, “ஆமா.. நீ?” என்று கேட்டாள்.
“எனக்கு இன்னும் டைம் இருக்கு. ஒரு டீ குடிச்சுட்டு வந்து தான் ஆரம்பிப்பேன்”
“மறுபடியும் கீழ போறியா?”
“எஸ்”
“அப்ப ஏன் மேல வந்த?”
“உன்னை விட தான்”
அவளுக்கு பேச்சு வரவில்லை. சிரிப்பு தான் வந்தது.
“ரொம்ப அக்கறை தான்.. போ.. போய் உன் டீய குடி” என்று அவனது தோளை பிடித்து தள்ளி விட்டு நடந்தாள்.
அவன் சிரிப்போடு சென்று விட, அவளும் உள்ளே சென்றாள். ஒரு சிலர் மட்டுமே வந்திருக்க, யாரும் அவளை கவனிக்கவில்லை. முகம் முழுவதும் பிரகாசிக்க நேற்று அவளுக்கு காட்டிய கணினியின் முன்பு சென்று அமர்ந்து கொண்டாள்.
உடனே வேலை செய்ய கைகள் பரபரத்தாலும், மனம் சோர்வாக காதலின் மயக்கத்தில் மூழ்கிக் கிடந்தது. அவள் மதிமயங்கி அமர்ந்திருந்த நேரம், அமர் வந்து விட்டான்.
‘வாவ்! சீக்கிரமா வந்துட்டாளா? இவள பார்க்கலாம்னு தான் நான் ஓடி வந்தேன். எனக்கு சர்ப்ரைஸா இவ இருக்காளே’ என்று துள்ளியது அமரின் மனம்.
உடனே அவளை நெருங்கிச் சென்றவன், “பிரியா?” என்று அழைத்தான்.
உடனே திடுக்கிட்டு கனவிலிருந்து விழித்தவள், அவனை பார்த்ததும் பளிச்சென புன்னகைத்து, “குட் மார்னிங் சார்” என்று எழுந்தாள்.
“குட் மார்னிங்.. சீக்கிரமே வந்துட்ட?”
“இன்னைக்கு ட்ரைனிங் ஆரம்பிக்கிதே அதான்” என்று வாய்க்கு வந்தது சொல்லி வைத்தாள்.
‘அதுக்காகவா வந்த?’ என்று அவளது மனம் செல்லமாக அவளை கிண்டல் செய்தது.
“தட்ஸ் குட்.. பட் அவங்க வர லேட் ஆகும். நாம சில விசயம் பேசனும்.. உள்ள வா” என்று விட்டு நடந்தான்.
உடனே அவள் பின்னால் சென்றாள்.
அவளுக்கு நாற்காலியை காட்டி விட்டு எதிரில் அமர்ந்தவன், தன் கணினியை உயிர்ப்பித்தான்.
அவளது ஆடை அலங்காரம் எல்லாம் அவனுக்குப்பிடித்திருந்தது. அதை வாய் விட்டு சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் மனதிலேயே சொல்லிக் கொண்டான்.
‘சீக்கிரமே என் மனசுல இருக்கத உன் கிட்ட சொல்லுற நாள் வரும். அன்னைக்கு இப்படி மனசுக்குள்ளயே உன்னை ரசிக்கிற கொடுமை நின்னுடும்’ என்று பெருமூச்சு விட்டான்.
அவள் அவன் பேசக்காத்திருக்க, உடனே சுதாரித்து வேலையை பற்றிப்பேச ஆரம்பித்தான். அவளுக்கு எவ்வளவு தூரம் தெரியும் என்பதை பேச்சிலேயே கணித்தான். பேச்சும் நீண்டது.
தொடரும்.