
அத்தியாயம் 2
“இப்ப நீ வர்றியா இல்லையா?” எனத் தமக்கை கொடுத்த அதட்டலில், நண்பர்கள் உடனான விளையாட்டில் இருந்து விலகி வந்தான் செல்வா.
“லீவ் நாளுல கூட பசங்களோட விளையாட விடாம, இப்படித் துரத்திட்டு வர்ற.?”
“காலையில இருந்து கஞ்சி குடிக்கல. வயிறு என்னத்துக்குடா ஆகும்?”
“ஒரு நாள் தான.?”
“இதே பதிலை உன்னோட அம்மாக்கிட்டயும் சொல்லுவியா.?”
“ஐயையோ! முதுகு பழுத்துடும்.”
“உனக்குப் பழுத்தா பரவாயில்ல. அவனைச் சாப்பிடக் கூட வைக்காம அப்படி என்னடி செஞ்சனு கேட்டு, எனக்கும் சேர்த்து இல்ல பழுக்கும்?”
அவன் சிரித்திட, “சிரிப்பு வருதா உனக்கு?” என்று தலையில் லேசாய் கொட்டினாள் கனி.
“இரு, நீ கொட்டுனனு அம்மாக்கிட்ட சொல்லுறேன்.”
“நீ விளையாடிக்கிட்டு காலையில சாப்பிடக் கூட வரலனு நானும் சொல்லுவேன்.”
செல்வா முகத்தைச் சுருக்கி முறைக்க, கனியும் பதிலிற்கு அதைப் போலவே செய்தாள்.
“நானும் சொல்லல, நீயும் சொல்லாத! சரியா.?”
“சரி சரி, வா..” எனக் கைப்பற்றிக் கொண்டு நடக்க, உடன் சென்றான் அவனும்.
காலையே கருணைக்கிழங்கு மற்றும் தட்டாம் பயிறை போட்டு குழம்பு வைத்துச் சென்று இருந்தார் காளீஸ்வரி. அவருக்கான உணவாய் மீந்த முதல் நாள் சோறோடு, குழம்பை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
எப்பொழுதும் காலையே சோறை வடித்து விடுவார். இன்று விடுமுறை தினம் என்பதால், பிள்ளைகள் மதியம் சூடாய் சமைத்து உண்ணட்டும் என்று, அப்பணியை கனியிடம் விட்டுச் சென்றார்.
குழம்பு ஏற்கனவே இருக்க, சோறை வடித்து சிற்றன்னை சொல்லிச் சென்றபடி முருங்கைக் கீரையை ஆய்ந்து பொரித்து இருந்தாள் இளையவள்.
“கீரையா? எனக்கு வேண்டாம்பா. அதுவும் முருங்கைக் கீரை வயித்தைக் கலக்கும்!’ என ஓடப் பார்த்த தம்பியை அழுத்திப் பிடித்து நான்கு வாயை திணித்து, தனக்கும் வேண்டிய மட்டும் சாப்பிட்டாள்.
உண்ட மயக்கத்தில் இருவருமே தரையில் அப்படியே மல்லாந்து படுத்து இருந்தனர்.
“அக்காவா நீ! கொலைகாரி! இப்படியா கீரையைத் திணிப்ப? இந்நேரம் தொண்டை அடைச்சு செத்துப் போயிருப்பேன். ஜஸ்ட் மிஸ்!”
“செத்து எல்லாம் போக மாட்ட. நல்லா படிச்சு பெரிய உத்தியோகத்துக்குப் போவனு ஜோசியக்காரன் சொன்னான். நீ செத்தா, அது எப்படி நடக்கும்.?”
“யாரு, கிளி ஜோசியக்காரன் சொன்னானா?”
“அதெல்லாம் பழசு. இப்ப, அணில் ஜோசியம் பல்லி ஜோசியம்னு புதுசா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க தெரியுமா?”
“உனக்கே தெரியுது இல்ல, எல்லாருமே டுபாக்கூர் பசங்கனு. அப்புறம் ஜோசியக்காரன் சொன்னானாம்?”
“அவன் சொல்லுறது இருக்கட்டும். நல்லா படிச்சா நல்ல உத்தியோகத்துக்குப் போகலாம்கிறது, அனுபவப் பாடம். இத்தனை வருசத்துல எத்தனை பேரைப் பார்த்திருக்கேன் நான்? நீ எப்பவும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர்றவண்டா. இதே மாதிரி காலேஜ் போயும் படிச்சா, நல்ல வேலைக் கிடைக்காதா என்ன?”
“இவ்வளவு தெரியிது இல்ல உனக்கு? அப்புறம் ஏன் படிக்கல நீ.?”
“நான் எங்கடா படிக்க மாட்டேன்னு சொன்னேன்? அந்தப் படிப்புக்குத் தான் என்னைப் பிடிக்கல. அதான் சுத்தமா மண்டையில ஏறல!”
“இது ஒன்னைச் சொல்லு!”
“உண்மையைத் தான சொல்லுறேன்?” எனும் பொழுதே, வெளியே மணிச் சத்தம் கேட்டது.
“செல்வா, ஐஸ் வண்டிடா.”
“அதுக்கு என்ன இப்ப?”
“வா, போய் வாங்கலாம்.”
“காசு வச்சிருக்கியா.?”
“வாடா, அக்கா வாங்கித் தர்றேன்.”
“பாருடா, கனி பணக்காரி ஆகிட்ட போல?”
“ஆமா ஆமா. போய் முதல்ல வண்டியை நிப்பாட்டு. இல்லேனா அவன் ஓடிடுவான். நான் காசை எடுத்துட்டு வர்றேன்.” என்றிட, மாடியில் இருந்து குரல் கொடுத்த படியே வேகமாய் இறங்கினான் சிறுவன்.
விற்பனையாளன், “என்ன ஐஸ் வேணும்?” என வினவிட, தலையைத் திருப்பி மேல் மாடியைப் பார்த்தான்.
“என்னடா, எதுவும் சொல்லாம நிக்கிற?”
“எங்க அக்காக்கிட்ட தான் காசு இருக்கு.” எனும் பொழுது, மூச்சு வாங்க ஓடி வந்தாள் கனி.
இருபது வயது பருவ மங்கை. மெலிந்த தேகம். பதினேழு அகவை போல் தென்படும் தோற்றம்.
‘உண்பதை எல்லாம் குழலே உறிஞ்சி எடுத்துவிடும் போல்!’ என எண்ணும் படியாய் தடித்த மற்றும் இடையைக் கடந்த நீள பின்னல்.
எந்த விதத்தில் அசைந்தாலும் வெளியே எட்டிப் பார்க்கும் கழுத்து எலும்பு. புடலையை விட ஒரு சுற்று அதிகமான கரங்கள். கால்களிற்கும் இதே உவமையைச் சொல்லலாம். ஆனால் அவளிற்கு அழகான கண்கள். பெயரைப் போலவே கனிவு சொட்டும் பார்வையில்.
சின்னஞ்சிறு தாழை மடலாய் மிருதுவான செவிகள். அதில் அணிந்திருந்த காதணி, விரிந்த தாழை மலராய் காட்சி அளித்தது. சற்று நீள மூக்கு. பேரிச்சையின் விதையைப் போன்ற இதழ்கள். நிறமும் அதை ஒத்தே இருந்தது. இன்னும் வெகுளித்தனம் மாறாத உடல் மொழி.
உடலோடு ஒட்டாத தளர்வான உடை. கழுத்தில் திருப்பதி டாலர் கோர்த்த பாசி. நிறம் மங்கிய பிளாஸ்டிக் வளையல்கள். இடது கால் நடுவிரலில் இரும்பு வளையம். இதுதான் ஆசைக்கனி.
பால் முகத்தைக் கண்டால் எவருக்கும் ஆசை கொள்ளத்தான் தோன்றும்.
ஓடி வந்ததால் வேக மூச்சுகளை எடுத்துக் கொண்டவளின் தேக அசைவு, ஐஸ் விற்பவனின் கண்களை இழுத்துக் கட்டிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
நான்கைந்து ஆண்டுகளுக்கும் மேலாய் அப்பகுதிக்கு வந்து சென்றாலும் இதுவரை கனியை கண்டது இல்லை. அத்தெருவில் குடி இருப்பவர்களைத் தவிர, வேறு எவரிற்கும் அவளைத் தெரியாது. அந்த அளவிற்கு கணவனின் மூத்த தாரத்து மகளைப் பாதுகாத்து வைத்திருந்தார் காளீஸ்வரி.
“ரெண்டு, கப் ஐஸ் அண்ணே!” என்றவளின் சொல்லில் விற்பனையாளனின் முகம் சட்டென்று வாடி விட்டது.
முப்பது வயதை எட்டாத இளைஞன். என்ன குடும்ப சூழலோ? ஐஸ் விற்று வாழ்வை ஓட்டிக் கொண்டு இருக்கிறான். ஏனோ கனியைக் கண்டதுமே ஆசை தோன்றிட, அதில் அடுத்த நொடியே அமிலத்தை ஊற்றி அழித்து விட்டாள் பாவையானவள்.
‘பாவி! இப்படிப் பட்டுனு அண்ணேனு சொல்லி, சைட் கூட அடிக்க விடாம பண்ணிட்டாளே.?’ என மனம் வெதும்பிட, இரண்டு ஐஸ்களை எடுத்துக் கொடுத்தான்.
செல்வா அதை வாங்கிக் கொள்ள, ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினாள்.
மீதம் இருபது ரூபாய் தந்தவனிடம், “என்ன இருபது தான் தர்றீங்க? இன்னும் ஆறு.?”
“என்ன ஆறு?”
“கப் ஐஸ் பன்னெண்டு ரூபா தான.?”
“பதினஞ்சுமா.”
“ஏது, பதினஞ்சா? பொய் சொல்லாதீங்க. போன வாரம் எதிர்த்த வீட்டு அக்கா வாங்குனாங்க. பன்னெண்டு தான்.”
“அது போன வாரம். இந்த வாரம் வரி எல்லாம் கூட்டிட்டாங்க. அதுனால ஐஸ் விலையும் கூடிடுச்சு!” என்றவன் மணியை ஆட்டி ஒலி எழுப்பிய படியே வண்டியை நகர்த்திச் செல்ல, அவளோ இதழ்களைப் பிதுக்கிக் கொண்டு நின்றிருந்தாள்.
உண்மையில் விலை பன்னிரெண்டு ரூபாய் தான். அவள் ‘அண்ணே’ என்று அழைத்ததை ஏற்க இயலாது ஆறு ரூபாயை அதிகமாய் வாங்கிச் சென்றிருந்தான் விற்பனையாளன்.
அருகே இருந்த செல்வா, “என்னக்கா?”
“ஏண்டா, எதுக்கு இவ்வளவு விலை வாசி விக்கிது?”
“என்னைக் கேட்டா.? அது தினமும் ஏறத்தான் செய்யிது.”
ஒரு பெருமூச்சை விட்டவள், “சரி, ஐஸ் சாப்பிடு.”
“ஆமா, உன்கிட்ட ஏது காசு? அம்மா அஞ்சு பைசாக் கூட கண்ணுல காட்டாதே?”
“இது என்னோட காசு!” என அவள் புன்னகைக்க, “ஏய், உண்மையைச் சொல்லு. திருடுனியா.? உனக்கு ஏன் இந்த வேலை? அம்மாக்குத் தெரிஞ்சா தோலை உரிச்சிடும்.”
“டேய் டேய்! எதுக்குடா இப்படிக் கத்துற? திருடுற அளவுக்கு எல்லாம் எனக்குத் தைரியம் பத்தாது. தெரியாதா உனக்கு?”
“ஆமா இல்ல? நீ வேற தொடை நடுங்கி ஆச்சே? அம்மா சத்தமா பேசுனாலே பொல பொல கண்ணீரா வரும்.”
“அக்காவை இப்படி எல்லாம் டேமேஜ் பண்ணாதடா.”
“அது இருக்கட்டும், ஏது காசு.?”
“கீழ் வீட்டு கல்யாணி அத்தை கோலம் போட கூப்பிட்டாங்க. சாக்பீஸ்ல போட்டு, அப்புறம் அது மேலயே பெயிண்டால வரைஞ்சு கலர் எல்லாம் அடிச்சுக் கொடுத்தேனா, இருநூறு ரூபா தந்தாங்க வச்சிக்கோனு. நான் சம்பாதிச்ச காசாக்கும்.”
“அடேயப்பா! கனி கலக்குற? அதுக்குத் தான் இந்த ஐஸ் டிரீட்டா.?”
“ஆமா ஆமா..” என அவள் வேகமாய் தலையை ஆட்டிட, “சரி வா, உருகுறதுக்குள்ள சாப்பிடுவோம்!” என்று தமக்கையை மேலே அழைத்துச் சென்றான் செல்வா.
*
மதிய உணவைக் கடினப்பட்டு தொண்டைக்குள் இறக்கிக் கொண்டிருந்தான் விஜயன். பசி இல்லை. உணவும் பிடிக்கவில்லை அவனிற்கு. ஆனாலும் உடலைக் காப்பது அவசியம் ஆயிற்றே?
அரை பாட்டில் நீரைக் குடித்து அனைத்தையும் காலி செய்து, பார்சல் வாங்கி வந்த பைகளைத் தூக்கிப் போட்டான்.
‘சிறிது இனிப்பாக ஏதேனும் உண்டால் நன்றாக இருக்குமே?’ என நா வேண்டியது.
பிடித்தவையை எல்லாம் வாங்கி உண்ணும் பழக்கத்தைக் கைவிட்டு ஐந்து வருடங்கள் ஆயிற்று. அவனது பொருளாதார சூழல் அதற்கு அனுமதி தராததால், இந்த நிலை.
என்று தந்தையின் சொல்லை ஏற்க மறுத்து தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ, அன்றே வீட்டிற்கு வேண்டாத பிள்ளையாய் ஆகிப் போனான். அதனால் தன்னைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம்.
கடந்து போன நிகழ்வுகளை எண்ணிப் பெருமூச்சு ஒன்றை வெளிவிட, “என்ன விஜி, லஞ்ச் முடிஞ்சுதா?” என வினவியபடி வந்தார் சேகரன்.
“ம்ம்.. முடிஞ்சது அண்ணே. நீங்க.?”
“இனிமேல் தான்பா. வீட்டுக்குப் போயிக்கிட்டு இருந்தேன். சரி, உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே? போற வழி தான, அப்படியே பேசிட்டுப் போகலாம்னு தான்.”
அவன் தலை அசைத்துச் சிரித்திட, “வேலை எல்லாம் ஓகேவா?”
“ம்ம்.. ஸ்ட்ரெஸ் இல்ல. சோ, எனக்கு வேண்டியதை செஞ்சிக்க முடியிது.”
“ஓகே விஜி.”
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணே, இந்த வேலையை வாங்கித் தந்ததுக்கு.”
“இதுல என்ன இருக்கு? வந்து போறது தான் சிரமம். வீட்டுல இருந்து ரொம்ப தூரம்.”
“இல்ல அண்ணே! அப்படி ஒன்னும் சிரமம் இல்ல. நான் வீட்டை விட்டு வெளிய வந்துட்டேன். இங்க பக்கத்துல தான் ஒரு மேன்சன்ல தங்கி இருக்கேன்.”
சற்றே திகைத்த சேகரன், “என்னடா சொல்லுற.?”
“எதுக்கு அண்ணே இவ்வளவு ஷாக் ஆகுறீங்க?”
“அப்புறம் வீட்டை விட்டு வந்துட்டேன்ற?அப்பா?”
“அவருக்கு என்ன.? ரெண்டு நகைக்கடை இருக்கு. நல்லாதான் வசதியா இருப்பாரு.”
“ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி! இப்படி வந்து கஷ்டப்படுறியே டா?”
அவன் சிரித்திட, “ஏன் உங்க அப்பாக்கு அவ்வளவு பிடிவாதம்?”
“குடும்பத் தொழிலைப் பார்க்க ஆள் வேணும்ல.? என்னைக் கடையில உட்கார வைக்கப் பார்த்தாரு. நான் முடியாதுனு மறுத்துட்டேன். சோ…”
“ஏண்டா, உனக்கு அந்த தொழில் பிடிக்கலயா.?”
“ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருந்தா, அது கத்திக்கும் பாதிப்பு. உறையும் சேதாரம் ஆகிடும். அதைவிட இன்னொன்னு இருக்கு. எதிரி தாக்க வரும் போது, ரெண்டும் முன்னாடியே உறைக்குள்ள மோதி மோதி கூர் மங்கி, அவசியமான நேரத்துல பயன் இல்லாம போயிடும். நான் அந்த மழுங்குன கத்தியா இருக்க விரும்பல அண்ணே.”
“அது சரி, இன்னொரு கத்தி யாரு.?”
“அக்கா வீட்டுக்காரரு!”
சின்னதாய் சிரித்த சேகரன், “மாமனுக்கும் மச்சானுக்கும் முட்டிக்கிதா?”
“அப்படிச் சொல்ல முடியாது. அந்த சுச்சுவேஷன் வந்துடக்கூடாதுனு நானே ஒதுங்கிட்டேன். அதோட, அது இல்லண்ணே நான் ஆசைப்படுற வாழ்க்கை.”
“புரியிது புரியிது. சரி, நீ கேட்ட புக்ஸைப் பத்தி பசங்கக்கிட்ட பேசி இருந்தேன். ஒருத்தன் தர்றேன்னு சொல்லி இருக்கான். அனேகமா சனிக்கிழமை கொண்டு வருவான். நீ வந்து வாங்கிக்கிறியா.? இல்ல, நானே எடுத்துட்டு வரவா.?”
“ஏற்கனவே, ஞாயித்துக்கிழமை உங்க மெக்கானிக் கடைக்கு வரணும்னு நினைச்சு இருந்தேன். வந்து, வாங்கிக்கிறேன் அண்ணே!”
“சரிடா! வேலையைப் பாரு!” என்றுவிட்டு அவர் கிளம்ப, பணியைக் கவனிக்கத் தொடங்கினான் விஜயன்.

