Loading

திமிர் 2

 

மலையே விழுந்தாலும் நொறுங்காத திடமான கண்ணாடி மேஜையில், அவள் முகம் பளபளத்துக் கொண்டிருந்தது. முக பளபளப்பைத் தாண்டி அவள் கண்களில் தெரிந்த ரௌத்திரம், எதிரில் இருப்பவர்களின் ஆடையை எரித்துக் கொண்டிருந்தது. அதன் அனல் தாங்காது நடுங்கி நின்று கொண்டிருந்தனர் நால்வர். ஆண் என்பதற்கு அர்த்தமில்லாது தொடை நடுங்கிக் கொண்டிருக்கும் நால்வரையும், குத்திக் கொலை செய்யும் அளவிற்கு வெறி கொப்பளித்துக் கொண்டிருந்தாலும், தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள் அவனது விவரம் தெரிய. 

 

மனிதக் கண்களை விட, ஓராயிரம் பலம் பொருந்திய ரகசியக் கண்கள் அவள் முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சிசிடிவி கேமராவில் தென்பட்ட அவன் உருவத்தை, அப்படியே நிறுத்தச் சொல்லியவள் புருவங்களைச் சுருக்கினாள். காட்டு யானை கால் தடம் பதித்தது போல், அழுத்தமாக நின்றிருந்தவன் விழிகளைக் காண இன்னும் புருவத்தைச் சுருக்கினாள். அவ்வளவு தெளிவாக அவள் கண்களுக்குப் புலப்படவில்லை. ஆனாலும், அதில் இருக்கும் கூர்மை அவள் கண்ணைக் கத்தியாகக் குத்தியது போன்று விழி சிமிட்டினாள். 

 

“எக்ஸ்க்யூஸ் மீ மேடம்!”

 

வாய் வார்த்தையாக உத்தரவு கொடுக்காமல், அருகில் இருந்த பேனாவை இரு விரல்களில் சுழற்றிக் கண்ணாடி மேஜையில் இருமுறை தட்டினாள். கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த அந்த நபர், மிடுக்கான வணக்கத்தை வைத்து விட்டுக் காகிதக் குவியலை அவள் முன்பு வைத்தார். 

 

“அதுக்குள்ள அவனைப் பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டீங்களா?”

 

“ஒரு மினிஸ்டரோட பையனப் பத்தித் தெரிஞ்சுக்க, நான் எடுத்துக்கிட்ட இந்த மூணு மணி நேரம் ரொம்ப அதிகம் மேடம்.”

 

“மினிஸ்டரோட பையனா!” 

 

“எஸ் மேடம். பொழுதுபோக்குத் துறை அமைச்சர் நவரத்தினம் சாரோட ரெண்டாவது பையன்!” என்றதும் தான் தாமதம், மலையாலும் உடைக்க முடியாத அந்தக் கண்ணாடி மேஜையைத் தன் இரு கையை அழுத்தப் பொருத்தி விரிசல் விட வைத்தாள். ஆத்திரம் அடங்காது எழுந்து நின்று மேஜையைத் தட்டியவள் செயலில், கதி கலங்கிப் போன அந்த நான்கு பேர் எச்சில் விழுங்கத் திராணி இன்றி அவளையே பார்த்துக் கொண்டிருக்க, 

 

“அறிவு கெட்ட நாய்களா! என்ன வேலடா பார்த்து வச்சிருக்கீங்க. நீங்க எல்லாம் எதுக்கு மெடிக்கலுக்குப் படிச்சீங்க. யாரு என்னன்னு கூடத் தெரியாம இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி வச்சிருக்கீங்க. உங்களால என்னோட ஹாஸ்பிடல் தான் இப்போ சிக்கி சிதையப் போகுது.” உரக்கக் கர்ஜித்தாள். 

 

சுவரோடு சுவராக நான்கு நபர்களும் உயிர் பயத்தில் நின்று கொண்டிருக்க, “என் ஹாஸ்பிட்டலுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு, குடும்பத்தோட பொதகுழிக்குப் போயிடுவீங்க.” என்றவளின் விழிகளில் பொங்கி இருந்த உக்கிரத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தவரிடம் கண்ணசைத்தாள்.

 

வராத பேச்சைத் தொண்டையைச் செருமி வர வைத்தவர், “மினிஸ்டரோட பையன் மட்டும் இல்ல மேடம், இந்தியாவுக்கு ரெண்டு முறை தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுத்த வில் அம்பு வீரன். அவங்க அப்பாவோட அரசியலுக்குப் பின்னாடி முழுக்க முழுக்க இருக்கிறது இவன்தான். திருச்சில இவங்க ஆட்சின்னு சொல்றத விடத் திருச்சியே இவங்க ஆட்சின்னு சொல்லலாம். திவஜ் அண்ட் கோன்னு எல்லாத் துறையிலும் கால் பதிச்சு இருக்காங்க.” என்றதும் “தொப்” என்று இருக்கையில் அமர்ந்தாள்.

 

“விசாரிச்ச வரைக்கும், அவன் ரொம்பத் திமிரு புடிச்சவன். யாருக்கும் எதுக்கும் பயப்பட மாட்டானாம். அவன் வச்சது மட்டும்தான் சட்டம். மினிஸ்டரே அவன் பேச்சைக் கேட்டுத்தான் எல்லாத்தையும் பண்ணுவாராம். இவனோட தந்திரத்தால தான் சுகாதாரத் துறையும், இப்ப மினிஸ்டர் கைக்கு வந்திருக்கு. இவன் அனுமதி இல்லாம ஒரு சின்னக் கையெழுத்துக் கூட மினிஸ்டர் கிட்ட வாங்க முடியாது. சுருக்கமா சொல்லணும்னா இவன் தான் மினிஸ்டர்!” 

 

“இப்படிப்பட்ட ஒருத்தன், எதுக்காக நம்ம ஹாஸ்பிடலுக்கு வரணும்?”

 

“என்னதான் இவனுக்குக் கட்டுப்பட்டு எல்லாம் நடந்தாலும், இவனோட தனிப்பட்ட விருப்பம் வில், அம்பு. ரெண்டு முறை தங்கம் வாங்கிக் கொடுத்தவன் போன முறை மிஸ் பண்ணிட்டான். ரெண்டு முறை இவனைச் சுத்தி வந்த பேரும், புகழும் கிடைக்காத கோபத்துல ரொம்பத் தீவிரமா பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்திருக்கான். அப்போதான் மயங்கி விழுந்து இருக்கான். திருச்சில இருக்க ஹாஸ்பிடல்ல அதுக்கான ட்ரீட்மென்ட் எடுத்திருக்கான். திரும்ப அதே பிராப்ளம் வந்திருக்கு. வீட்ல இருக்கற யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு வந்து நம்ம ஹாஸ்பிடல்ல செக்கப் பண்ணி இருக்கான்.”

 

“இங்க வந்ததுக்குப் பின்னாடி ஏதாவது மோட்டிவ்?”

 

“அப்படி எதுவும் இருக்கற மாதிரித் தெரியல மேடம். யாருக்கும் தெரியக் கூடாதுன்னு இங்க வந்திருக்கலாம்.”

 

“இப்ப அவன் எங்க இருக்கான்?”

 

“அது ரொம்ப சீக்ரெட்டா இருக்கு மேடம். நம்ம ஹாஸ்பிடல்ல இருந்து நேரா திருச்சிக்குப் போய் இருக்கான். அங்க ரெண்டு நாள் இருந்திருக்கான். ப்ராக்டிஸ் இருக்கு, நானா வர வரைக்கும் யாரும் என்னை காண்டாக்ட் பண்ணாதீங்கன்னு இன்பார்ம் பண்ணிட்டுக் கிளம்பி இருக்கான். இப்ப வரைக்கும் எங்க இருக்கான்னு யாருக்குமே தெரியல.”

 

“அப்போ எப்படி…” என அவள் கேட்க வருவது புரிந்து, 

 

“இங்க இருக்கிறவங்களுக்குத் தான் அவன் எங்க இருக்கான், என்ன பண்றான்னு தெரியல. ஆனா, அவனுக்கு எல்லாமே தெரியுது மேடம். மெயில் மூலமா, மினிஸ்டர் முதல் கொண்டு யார் யார் என்ன பண்ணனும்னு இன்ஸ்ட்ரக்சன் குடுத்துட்டு இருக்கான்.” 

 

“நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது மணி. அவன் எங்க இருக்கான்னு உடனே தெரிஞ்சாகணும். அவன் கையிலதான் நம்ம ஹாஸ்பிடலே இருக்கு. சாதாரண ஒருத்தனா இருந்தாலே பெரிய பிரச்சினை பண்ணுவான். அவன் வேற ரொம்பப் பெரிய இடம். அதுவும் மினிஸ்டரோட பையன். அம்பது வருஷமா கட்டிக் காப்பாத்திட்டு வர இந்த ஹாஸ்பிட்டலோட பெருமை நொடியில சிதைந்து போயிடும். அவன் கையில இருக்க ரிப்போர்ட்ட எப்படியாவது வாங்கி ஆகணும்.” 

 

“ஒரு நாள் டைம் கொடுங்க மேடம். அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சுச் சொல்றேன்.” என அவர் மீண்டும் வணக்கத்தை வைத்து விட்டு வெளியேற, 

 

“அவன் பேரச் சொல்லவே இல்லையே.” குரல் கொடுத்தாள் மதுணிகா. 

 

“அகம்பன் திவஜ்!” 

 

அவன் பெயரைச் செவி வழியே உள்ளத்துக்குள் சேமித்துக் கொண்டவள் திரையில் தெளிவில்லாது நின்று கொண்டிருக்கும் அவன் உருவத்தையும் சேமிக்கக் கண்களை அகற்றினாள். 

 

***

 

“ஹலோ!”

 

கரகரத்த குரலில் உடல் உதற, “சொல்லுங்க சார்.” என்றான் கமல். 

 

“நான் சொன்னதையும் மீறி, அந்தக் கான்ட்ராக்ட்ல எதுக்காக அப்பா சைன் பண்ணாரு?”

 

“தெ…தெரியல சார். நீங்க சொன்னதை அப்பாகிட்டச் சொன்னேன். அவர் சரின்னு தான் சொன்னாரு. அப்புறம் எப்படின்னு தெரியல சார்.”

 

“தெரியலன்னு சொல்றதுக்காடா உன்ன வேலைக்கு வச்சிருக்கேன். இனி ஒரு தடவை என் பேச்சை மீறி அங்க ஏதாச்சும் நடந்துச்சு, தந்தியடிக்க நாக்கு இருக்காது. லைன அப்பாக்கு மாத்தி விடு.”

 

தன் கட்சி ஆள்களோடு கலந்துரையாடிக் கொண்டிருந்த நவரத்தினம், மகன் அழைப்பைச் செவிக்குக் கொண்டு செல்ல, “இன்னும் பத்து நிமிஷத்துல நீங்க சைன் பண்ண காண்ட்ராக்ட் பேப்பர் உங்க கைக்கு வரும். கிழிச்சுக் குப்பையில போடுங்க. நான் சொல்லாம இனி எதுலயும் சைன் போடக்கூடாது.” தந்தைக்கே அதிகாரத்தைக் காட்டிக் கொண்டிருந்தான் அகம்பன் திவஜ். 

 

“அது இல்லப்பா. அதுல ரொம்ப லாபம் வரும்னு சொல்றாங்க. ஆட்சி வேற இன்னும் ரெண்டு வருஷத்துல முடியப்போகுது. அடுத்து என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.‌ இந்த கான்ட்ராக்ட் கிடைச்சா நல்லது தான.” 

 

“அப்படின்னு உங்க மண்டையக் கழுவி இருக்காங்க. ஆட்சியில இல்லனாலும், எப்படிச் சம்பாதிக்கணும்னு இத்தனை வருஷ அனுபவத்துல கத்துக்காம விட்டது உங்க தப்பு. அதே தப்ப நானும் பண்ணுவேன்னு நினைக்காதீங்க. ஆட்சியில இருந்தா நேரடியான அதிகாரம். இல்லன்னா மறைமுகமான அதிகாரம். அவ்ளோதான் வித்தியாசம்!” 

 

அதற்கு மேல் என்ன பேச முடியும் நவரத்தினத்தால். வலைக்குள் சிக்கிக் கொண்ட எலியாக, முழித்துக் கொண்டிருந்தவரைக் கட்சி ஆள்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்க, அவர்களைப் பற்றி எல்லாம் கருத்தில் கொள்ளாது மகன் குரலில் இருக்கும் கோபத்தை எப்படித் தணிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார். அதற்கு இடம் அளிக்காத அகம்பன், 

 

“நான் அங்க இல்லனாலும்…” என ஒரு நொடி நிறுத்தினான்.

 

புருவம் நெளிய வியர்த்த முகத்தை, வெள்ளைத் துண்டால் துடைத்தார் நவரத்தினம். கூர்மையான கண்களுக்குச் சொந்தக்காரன் அதைச் சுற்றி வளர்ந்து உயர்ந்திருந்த கருநிறப் புருவங்களைச் சிமிட்டாது, “நானே இல்லனாலும்…” என்றான். 

 

“அகம்பா!”

 

“பயப்படாதீங்க. எது நடந்தாலும் நம்ம அதிகாரத்தை மட்டும் விட்டுடக் கூடாது. சாகுற வரைக்கும் அது நம்மகிட்ட தான் இருக்கணும். செத்தாலும் அதிகாரத்தோடதான் சாகணும். பாம்புக் கூட்டத்துக்கு நடுவுல இருக்கோம் அப்பா. எப்ப எந்தப் பாம்பு கொத்தும்னு தெரியாது. கடிக்க வரதுக்கு முன்னாடியே உள்ளங்கால்ல வெச்சி நசுக்கிடனும்.”

 

“அதெல்லாம் சரிடா. நீ இப்ப எங்க இருக்க? போன் கூடப் பண்ண வேண்டாம்னு சொல்லிட்ட. உங்க அம்மா ஓயாம உன்னைக் கேட்டு டார்ச்சர் பண்றா. எப்ப வீட்டுக்கு வருவ?” 

 

அதுவரை, தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த அவன் விழி தணிந்து சுருங்கியது. அன்னையை நினைத்து ஒரு நிமிடம் தன் இயல்பைத் தொலைத்தவன், “வருவேன். எப்படி வருவேன்னு தான் தெரியல. நான் வரவரைக்கும் அண்ணன் எல்லாத்தையும் பார்த்துப்பான். நம்ம கட்சியோட ஃபுல் டீடைல்ஸ் அவன்கிட்டச் சொல்லிட்டேன். இனி அவன்தான் உங்க கூட இருந்து எல்லாத்தையும் பார்த்துப்பான்.” என்றவனின் குரலில் விரக்தி. 

 

“அப்போ நீ?”

 

“இந்தக் கேள்விக்கான விடை இப்போ உங்களுக்குக் கிடைக்காதுப்பா. காலம் பதில் சொல்லும்.” என அழைப்பைத் துண்டித்தவன் முற்றிலும் அணைத்து வைத்துக் கண் மூடினான். 

 

***

 

மதுணிகா முன்பு பவ்வியமாக நவநாகரீகப் பெண் ஒருத்தி நின்றிருந்தாள். அவளைப் பார்வையால் அரை மணி நேரமாக எடை போட்டுக் கொண்டிருந்தவள், “உன் பேர் என்ன?” கேட்க, “அம்மு!” என்றாள்‌.

 

“இவன்தான் உன்னோட டார்கெட். இவன்கிட்ட இருக்கற அந்த பைலைத்தான் நீ வாங்கணும். எக்காரணத்தைக் கொண்டும் உன்னப் பத்தின எந்த விஷயமும் அவனுக்குத் தெரியக்கூடாது. ஒருவேளை நீ மாட்டிக்கிட்டா, என் பெயரைச் சொல்லவே கூடாது. அப்படிச் சொல்லிட்டா…” எனக் கையில் வீற்றிருந்த பேனாவை அவளை நோக்கித் திருப்பி, 

 

“அடுத்த செகண்ட் உன் உயிர் போயிடும். உன்னச் சுத்தி எப்பவும் என் ஆள்கள் இருப்பாங்க. நீ பண்ற எல்லாத்தையும் வாட்ச் பண்ணிட்டு இருப்பாங்க. எங்க பார்வையில இருந்து நீ தப்பவே முடியாது.” என்றாள். 

 

பணத்திற்காக, இங்கு வந்து இவளிடம் சிக்கிக் கொண்ட அந்தப் பெண், செய்வதறியாது மௌனமாகத் தலையாட்ட, “நீ சந்திக்கப் போறது ஒரு காட்டு மிராண்டியை. அதுக்குப் புத்தியும், கோபமும் ரொம்ப ஜாஸ்தி. 

 

உன்ன அவ்ளோ சீக்கிரம் நெருங்க விட மாட்டான். அவனோட நம்பிக்கையை சம்பாதிச்சா மட்டும் தான் எதுக்காகப் போறியோ அதை முடிக்க முடியும். உனக்கு ரெண்டு பக்கமும் கத்தி. எந்தப் பக்கம் சிக்கினாலும் சொருகிடுவோம். பார்த்து ஜாக்கிரதையா உயிரோட அந்த பைலை எடுத்துட்டு வா…” என்ற மதுவின் வாக்கியத்தில் பயத்தின் அளவு உச்சத்தைத் தொட்டிருந்தது.

 

 

“இவ்ளோ ரிஸ்க் தேவையா மது?”

 

“இந்தப் பன்னாடைங்க பண்ண வேலைக்கு, வேற என்ன பண்ணச் சொல்றீங்க?”

 

அவள் வார்த்தைக்கு, சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் தலை குனிந்து நிற்க, “ஒரு நாலு பேரை அனுப்பி வச்சா வேலை முடிஞ்சுது.” அவனைப் பற்றித் தெரியாமல் கூறினார் மதுணிகாவின் தந்தை முரளி. 

 

“அவனை ரொம்பக் குறைச்சி எடை போட்டுட்டீங்கப்பா. நான் கேள்விப்பட்ட வரைக்கும், இவளை ஒரு மணி நேரம் கூடத் தன் பக்கத்துல வச்சிருக்க மாட்டான். இதுல நாலு பேர…” 

 

“இந்தப் பொண்ணு சொதப்பிட்டா என்ன பண்ணுவ? நீ ரொம்பப் பெரிய ரிஸ்க் எடுக்கறன்னு தோணுது.” 

 

“அவன மாதிரி ஒருத்தனைச் சமாளிக்க ரிஸ்க் எடுக்கறதுல தப்பு இல்லப்பா. நீங்களே அவனப் பத்திச் சொன்னதெல்லாம் கேட்டிங்க தான. அவன்கிட்டப் போய், இப்படி ஒரு தப்பு நடந்து போச்சு. சாரின்னு சொன்னா சும்மா விடுவானா? சிசிடிவி கேமராவுல பார்க்கும் போதே அவன் திடம் என்னன்னு தெரியுது. தேவை இல்லாம நாலு பேரை அனுப்பி நம்மளே நம்ம தலையில மண்ண அள்ளிப் போட்டுக்கக் கூடாது.” 

 

“ஒருவேளை அவனுக்கு உண்மை தெரிஞ்சிட்டா என்ன பண்றது?”

 

“தெரியுறதுக்கு முன்னாடி அந்த டாக்குமெண்ட் மட்டும் நம்ம கைக்கு வந்துடனும். அதுக்கப்புறம் அவன் என்ன வேணா பண்ணட்டும். இந்த மதுணிகா கிட்ட அவன் ஆட்டம் செல்லாது.” என்றவளுக்குத் தெரியாது, அவன் ஆட்டம் இவள் ஆட்டத்தை நிறுத்தப் போவதை.

 

அமர்த்தலாகச் சிரிக்கும் மகள் மீது பார்வை இருந்தாலும் எண்ணமெல்லாம் அகம்பனே நிறைந்திருந்தான். இவளுக்குத்தான் அவன் புதிதே தவிர முரளிக்கு இல்லை. நான்கு வருடங்களுக்கு முன்பு திருச்சியில் மருத்துவக் கலந்தாய்விற்குச் சென்றிருந்தார். அங்கு நடந்த கலந்தாய்வில் கிடைத்த நண்பர்கள் வட்டாரத்தின் பரிந்துரையின் பெயரில் திருச்சியில் கிளை ஒன்றை உருவாக்க இடம் பார்த்தார். 

 

இடம் தொடர்பான அனைத்தும் முடிந்து, மருத்துவமனை கட்டுவதற்காகப் பூமி பூஜை நடைபெறும் நேரம் அங்கு வந்தது நான்கு வெள்ளைக் கார்கள். படபடவென்று பட்டாசாய் இறங்கியவர்கள், “இந்த இடம் மினிஸ்டருக்குச் சொந்தமானது. இந்த இடத்துல நீங்க ஹாஸ்பிடல் கட்ட முடியாது.” என்றனர். 

 

“என்ன உளறிட்டு இருக்கீங்க? சட்டப்படி இந்த இடத்துக்குச் சொந்தமானவர் கிட்ட இருந்து வாங்கி இருக்கேன். இது எப்படி மினிஸ்டருக்குச் சொந்தமான இடமாகும்.” 

 

“நீங்க ரிஜிஸ்டர் பண்றதுக்கு ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடி இருந்து இது எங்களோட நிலம்.” 

 

தன்முன் இருந்த ஆள்களிடம் பேசிக் கொண்டிருந்த முரளி, குரல் வந்த திசைப் பக்கம் திரும்பினார். பின்பக்கக் கார் கதவைத் திறந்து இடது காலை நிலத்தில் உறவாட விட்டவன், ரகசியப் புன்னகையோடு தரிசனம் கொடுத்தான். 

 

“என்னடா? வேணும்னே பிரச்சினை பண்றீங்களா? இந்த இடத்தோட பத்திரம் என் பேர்ல என்கிட்ட இருக்கு. மினிஸ்டர் மட்டுமில்ல, யாரு வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது.” 

 

பதில் எதுவும் கொடுக்கவில்லை அகம்பன் திவஜ். இடது கையைத் திறந்திருந்த கார் கதவின் மீது வைத்து உதட்டை மட்டும் ஏளனத்தோடு வளைத்தான். அவன் செய்கைகளைப் புரிந்து கொண்ட கமல், 

 

“உங்க கையில இருக்க டாக்குமெண்ட் இருக்கட்டும். இந்த டாக்குமெண்டைக் கொஞ்சம் பாருங்க.” எனப் பத்துப் பக்கம் அடங்கிய பத்திரத்தைக் கையில் திணித்தான். 

 

முரளி வாங்கி இருந்த அதே இடத்திற்குச் சொந்தக்காரராக நவரத்தினம் இருந்தார். அதுவும் முரளி சட்டப்படி பதிவு செய்த இரண்டு நிமிடத்திற்கு முன்னதாக அந்த இடத்தை வாங்கி இருப்பதாக விவரங்கள் அடங்கியிருந்தது. படித்தவருக்கு முகம் வேர்த்துக் கொட்டியது. ஏளனத்தோடு சிரித்துக் கொண்டிருந்தவன், வெற்றி பெற்ற மிதப்பில் இரு இதழ்களையும் மெல்ல விரித்து,

 

“ரொம்ப நாளா இந்த இடத்தை வாங்கணும்னு ட்ரை பண்ணிட்டு இருந்தேன். இடத்தோட ஓனர் பெரிய பிஸ்தா மாதிரி, நான் கொடுக்கிற காசுக்கு ஒத்து வர மாட்டேன்னு சொல்லிட்டான். போடா வெண்ணெய்னு காசே வாங்காம இந்த இடத்தை ஆட்டையப் போடத்தான், உன்ன மாதிரி ஒரு கிறுக்கன் வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” என்றவன் கமலுக்குக் கண்ணைக் காட்டி அந்தப் பத்திரத்தை வாங்கிக் கொண்டான். 

 

ஒன்றும் புரியாமல் மதுணிகாவின் தந்தை நின்றிருக்க, “என்னமோ மினிஸ்டர்லாம் ஒரு ஆளான்னு இந்த இடத்தோட ஓனர்கிட்டப் பேசுனியாமே. இப்போ எவ்ளோ பெரிய ஆளுன்னு தெரிஞ்சிடுச்சா. நீ இல்லடா, எந்தக் கொம்பாதி கொம்பன் வந்தாலும், இந்தத் திருச்சி எங்க கட்டுப்பாட்டுல. உன்னோட ஆணவமான பேச்சுக்கு அம்போன்னு வீடு போய் சேருடா.” என்றவன் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்துப் பறந்தான். 

 

அதன்பின், எவ்வளவோ போராடிவிட்டார் முரளி. எங்குச் சென்றாலும் தோல்வி மட்டுமே அவருக்கு மிஞ்சியது. இந்த இடத்தை வாங்கும் பொழுதே மினிஸ்டரின் கண் பார்வை இதில் இருப்பதாகச் சிலர் கூறி இருந்தனர். பணம் இருக்கும் மிதப்பில் அவரால் என்ன செய்ய முடியும் என்று ஆணவத்தோடு வாங்கியவருக்குப் பலத்த அடி. மதுணிகா, அப்போதுதான் பொறுப்புகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டதால், இதைப் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. 

 

***

 

இயற்கையின் அற்புதத்தை அந்த இடம் பறைசாற்றியது. உடல் நடுங்கும் மிதமான குளிரும், கண்ணுக்கெட்டும் தூரம் வரை காட்சி அளித்த பசுமையும் கொள்ளை கொண்டது அவள் மனத்தை. எட்டாத தூரத்தில் இருக்கும் மேகம் கூட வளைந்து நெளிந்து அவள் அருகில் வருவது போன்ற பிரம்மை. எப்போது வேண்டுமானாலும் உன்னைத் தொடுவேன் என எச்சரித்துக் கொண்டிருந்தது மழை. இவை அனைத்தையும் விட அவள் கண்களைக் கொள்ளை கொண்டது அந்த மலை தான். அடுக்கடுக்காக நான்கு மலைகள், ஒட்டிப்பிறந்த உடன்பிறப்புகள் போல் மிளிர்ந்து கொண்டிருந்தது. வழுக்கும் பாறைகளுக்கு நடுவில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து வந்தவள், நடையை நிறுத்திவிட்டு இந்த நான்கில் எவை அழகென்று ரசித்துக் கொண்டிருந்தாள். 

 

ஊதக்காற்றும், குளிர் காற்றும் அவளைத் தள்ளியது. கால் சட்டைப் பாக்கெட்டில் மறைந்திருந்த கைகளைத் தன் மார்புக்கு நடுவில் குறுக்கிக் கட்டிக் கொண்டாள். இரு மல்லி அளவுள்ள இதழைக் குவித்துக் குளிர் காற்றை வெளியிட, சில்லென்ற தாக்கம் அவளுக்குள். கண்ணிற்குக் குளிர்ச்சியாகக் காட்சியளித்த இயற்கை அழகை ரசித்தவள் ஒரு அடி எடுத்து வைக்க, ஈரமான பாறை வலுவில்லாத அவள் கால்களை வழுக்கிவிட்டது. அதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் அதிர்ந்து உருண்டோடினாள். 

 

அழகாகக் காட்சி அளித்த செடி கொடிகளை உரசிக்கொண்டு உருண்டு கொண்டிருந்தவள், ஒரு சிறு பாறையில் மோதி நின்றாள். கண்கள் விரிந்து அகண்ட மூச்சுகளை வெளியிட்டவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை, தான் உயிரோடு இருப்பதை. துடிதுடிக்கும் இதயத்தை அடக்க முடியாது சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். உயிர்பெற்ற நிம்மதியில், அந்தச் சிறு பாறையைப் பிடித்துக் கொண்டு எழுந்தமர முயற்சிக்க, மீண்டும் அவள் கால்கள் வழுக்கி உருண்டது. 

 

விழுந்த அதிர்வை விடக் கண்முன் தெரியும் அந்தப் பெரிய பள்ளத்தாக்கு தான் மிரள வைத்தது. அவளுக்கும், அந்தப் பள்ளத்திற்கும் இடைவெளி குறைவு. வழுக்கிய உடல் பள்ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தவளுக்கு, உயிர்கூடு தன்னை விட்டுப் பிரியப் போவது நன்றாகத் தெரிந்தது. எமனைப் பள்ளத்தின் ரூபமாகப் பார்த்தவள், உருண்டோடும் உடலைக் கட்டுப்படுத்த வழி தெரியாது கண்களை இறுக்கமாக மூடினாள். பள்ளத்தின் விளிம்பில் விழுந்தவள், “அம்மா…” எனப் பிறப்பெடுக்கும் பொழுது கொடுத்த அதே ஓசையைத் தன் இறப்பிற்கும் கொடுக்கக் கத்தினாள். 

 

ஒரு கரம், அவள் கைகளைப் பற்றியது. கதை முடிந்ததாகக் கண்களை மூடிக் கொண்டிருந்தவள், தான் அந்தரத்தில் தொங்குவதை உணர்ந்து அளவு கடந்த அச்சத்தோடு, பெரு மூச்சு வாங்க விழி திறந்தாள். கண் திறந்தவளை அவன் கண்கள் சந்தித்தது. தன்னைத் தள்ளிய பாறையின் திடத்தை அவன் கண்களில் கண்டவளால் இமைக்க முடியவில்லை. எப்படியான கற்பனைக்குள் அந்த விழிகளைக் கொண்டு வருவது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு காந்தம் கட்டி இழுத்தது. கடுமையான கண்களைச் சுற்றிப் படர்ந்திருந்த ஒவ்வொரு இமை முடியும், ஆணி அடித்தார் போல் நின்றிருந்தது. விழிகளுக்குள், நான்கு ஐந்து சிகப்பு நிறக் கோடுகள் காட்சியளிக்க, கருவிழிக்குள் அவள் உருவம் அழகாகக் காட்சி கொடுத்தது. 

 

தொங்கிக் கொண்டிருந்தவளைச் சிரமம் இல்லாமல் ஒரு கையில் தூக்கியவன், ஒரே சுழற்றாகச் சுழற்றிப் பாறையில் தள்ளினான். உயிர் பிழைத்ததற்கு மகிழ வேண்டிய அவளின் பார்வை, அவன் பார்வையைக் கடக்க முடியாமல் தள்ளாடியது. இமை தாழ்த்திச் சுருண்டு விழுந்தவளை அலசி ஆராய்ந்தவன், 

 

“யார் நீ? இங்க என்ன பண்ற” பாறைகள் அதிரக் கேட்க, அவன் மீதான பார்வையை மாற்ற மனமில்லாமல் அப்படியே இருந்தாள். 

 

தன்னைத் தோலுரிக்கப் பார்த்துக் கொண்டிருப்பவள் முன்பு சொடக்கிட்டவன், “இங்க என்ன பண்றன்னு கேட்டேன்?” என்றான் அழுத்தமாக.

 

அந்த அழுத்தம் அவள் வாயைத் திறக்க வைத்தது. இருந்தும் அவன் கண்கள் மீதான கவனத்தை மாற்றாமல், “வெக்கேஷன் வந்தேன்.” என்றிட, அடுத்த நொடி, விழுந்தவளை அலேக்காக அள்ளிப் பள்ளத்தாக்கில் தொங்க விட்டான் ஒரு கையால். 

 

மூன்றாவது முறையாக உயிர் பயத்தைப் பார்க்கிறாள். இந்த முறை தன் உயிரைக் காப்பாற்றியவனையே எமனாகப் பார்க்க, “உண்மையைச் சொல்லலைன்னா, உன் பிணம் கூடக் கிடைக்காது.” கொந்தளிக்கும் கோபத்தோடு கூறினான் அகம்பன் திவஜ். 

 

“நா..நான் வந்து… இங்க” 

 

பயத்தில் வார்த்தைகளை விட மறுத்தவளை இன்னும் பயமுறுத்தினான் கைகளை அசைத்து. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அகம்பன் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டவள், “நான் சாக வந்தேன்.” என்றாள். 

 

கோபத்திற்கு நடுவில், சந்தேகமெனும் ஆயுதத்தை நொடியில் அவள் கண்களுக்கு இடம் மாற்றியவன் கூர்ந்த பார்வையை மாற்றாது மெல்ல மேலே தூக்க, பிழைத்த நிம்மதியில் அங்கிருந்த சிறுபாறையில் தலை சாய்ந்து கண் மூடினாள். 

 

“சாகறதுக்கு வந்தியா?”

 

“ம்ம்!”

 

விழி திறக்காதவள் மீது நிலை குத்திய பார்வையைச் செலுத்திய அகம்பன், “இவ்ளோ உயிர் பயத்த வச்சிக்கிட்டு சாக வந்தியா. ஒழுங்கா வீடு போய் சேரு. இன்னொரு தடவை நான் உன்ன இங்கப் பார்க்கக் கூடாது.” என்று விட்டுத் திரும்பியவன் செவியில், 

 

“என்னை யாரும் பார்க்கக் கூடாதுன்னு தான் இங்க வந்தேன். என்னைக் காப்பாத்துனதுக்காக ரொம்ப தேங்க்ஸ். தினம் தினம் பயந்து சாகறதுக்கு உயிர் பயத்தோட இங்கயே செத்துப் போறேன்.” வார்த்தைகள் விழுந்தது. 

 

“சாகுறதா இருந்தா வேற எங்கயாவது போய் சாவு. இது என்னோட இடம், இங்க தேவையில்லாத பிணத்துக்கு இடமில்லை.” 

 

அதுவரை பதட்டமான மனநிலையில் இருந்தவள் “களுக்!” என்று சிரித்து விட, விழிகள் கூர்மையானது அகம்பனுக்கு. அதைக் கண்டவள் வாயை மூடிக்கொண்டு சத்தத்தை அடக்கினாள். சத்தத்தின் அளவு குறைந்ததே தவிர சிரிப்புக் குறையவில்லை. கோபமெனும் அரக்கனை முகமூடியாக அணிந்து கொண்டவன், 

 

“ஸ்டாப் இட்!” கர்ஜித்தான். 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்