Loading

பூமிகாவும் விதுரனும் பேசிக்கொண்டிருந்த நேரம், வேலையை முடித்து விட்டு வெளியில் வந்த மிதுனா இருவரையும் வியப்பாகப் பார்த்தாள்.

“ஹே! நீங்க வீட்டுக்கு கிளம்பலையா?” மிதுனாவைக் கண்டதும் கலங்கிய முகத்தை அழுந்த துடைத்துக்கொண்ட விதுரன், “நீ இன்னும் ஹாஸ்டலுக்குப் போகாம என்ன செய்ற?” என எதிர்கேள்வி கேட்டான்.

“கொஞ்சம் ஒர்க் இருந்துச்சு அதான்…” மிதுனாவின் கூற்றில் முறைத்தவன்,

“உரிமைப்பட்டவங்களே ஒன்பது மணி ஆனதும் எனக்கென்னன்னு கிளம்பியாச்சு. உனக்கு என்ன தேவை ஓவர் டைம் பார்க்கணும்னு…” என்று கடிந்து கொண்டான்.

“ஒரு ஆர்வ மிகுதில உக்காந்துட்டேன்டா. சரி நீங்க என்ன செய்றீங்க” என்றதும் பூமிகாவே சமாளித்தாள்.

“சும்மா அப்டியே உக்காந்து நம்ம காலேஜ் கதையை பேசிட்டு இருந்தோம். சரி லேட்டாச்சு நான் கிளம்புறேன்…” என பூமிகா கிளம்பி விட, “நீயும் கிளம்பு மிது” என்றான் விதுரன்.

“ஹ்ம்ம் கேப் புக் பண்ணிட்டேன் இன்னும் வரல…” என்றபடி அலைபேசியைப் பார்த்தாள்.

“உன் ஸ்கூட்டி எங்க?”

“சர்விஸ்க்கு விட்ருக்கேன்…” என்றபடி முகத்தைச் சுருக்கியவள், “ச்சே! கேப் கேன்சல் ஆகிடுச்சு” என்றாள் மெல்லிய எரிச்சலுடன்.

“நான் உன்ன ஹாஸ்டல்ல டிராப் பண்ணிட்டுப் போறேன் மிது” என்ற விதுரனிடம், “உனக்கு ரொம்ப லேட்டாகிடாதா?” என்றாள்.

“அது பரவாயில்ல… நீ வா” என்று வண்டியை எடுத்தான்.

இரவு நேரமும், பிறை நிலவின் ஒளியும், மென்தென்றலும் இருவரின் மனதிலும் குளிராய் இறங்கியது.

“ஏன் உன் கண்ணு சிவந்துருக்கு?” விதுரனைக் கண்ணாடியின் வழியே பார்த்தபடி மிதுனா வினவ,

ஒரு கணம் தடுமாறியவன், “அது… கண்ல தூசி விழுந்துருச்சு” என்று மழுப்பினான்.

மேலும் சில நிமிட பயணத்தின் முடிவில், அவனது வண்டி ஒரு குலுங்கு குலுங்கி நின்று விட்டது.

அதில் அவன் முதுகில் மோதிக்கொண்டவளின் முகமெங்கும் சிவப்பின் சாயல்.

“என்… என்ன ஆச்சு?” தடுமாற்றத்துடன் வினவிய மிதுனாவில் குரலும், முதுகில் உணர்ந்த பெண்ணவளின் வதனத்தின் பிம்பமும் ஆடவனை கிறங்க வைத்தது.

“தெரியல…” அடிக்குரலில் உரைத்தவன், வண்டியில் இருந்து இறங்கிப் பார்க்க, வண்டி பஞ்சராகி இருந்தது.

அதனைக் கண்டு அசடு வழிந்தபடி மிதுனாவைப் பார்க்க, அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

“அடப்பாவி… லேட்டானாலும் நான் கேப்ல கூட போயிருப்பேன். இப்ப கேப் வராத ஏரியால கொண்டு வந்து நிறுத்திட்டியே. இப்ப நான் ஹாஸ்டல் போக இன்னும் பல கிலோமீட்டர் போகணுமே!” என்று போலியாய் முறைத்தாள்.

“உன்னை யாரு ஹாஸ்டல அவ்ளோ தூரம் தள்ளிப் பார்க்க சொன்னது…” என்றுவிட்டு, “இந்த ஏரியால பகல்லயே ஒரு பஞ்சர் கடையும் இருக்காது. இந்த நேரத்துல சுத்தம்…” எனப் புலம்பிக்கொண்டவன், சட்டென கண்கள் மின்ன அவளைப் பார்த்தான்.

“என்னடா?” மிதுனா வினவ,

“இப்ப கேபும் கிடைக்கல. இனி நீ ஹாஸ்டல் போக ரொம்ப லேட்டாகிடும். என் வீடு இங்க இருந்து பக்கம் தான். பைவ் மினிட்ஸ் நடந்தா வந்துடும்…” என இழுத்தான்.

“சர்ர்ர்ரி…” அவளும் அவனைப் போலவே இழுத்திட,

“உனக்கு அப்ஜெக்ஷன் இல்லன்னா, இன்னைக்கு என் வீட்ல தங்கிட்டு நாளைக்குப் போகலாமே?” எனத் தலைசாய்த்துக் கேட்டதும், அவளுள் ஒரு குறுகுறுப்பு.

“உன் வீட்டுக்கா?” என அதிர்ந்தவள், “டேய்… வண்டி அதுவா நின்னுச்சா, நீயா பஞ்சர் பண்ணுனியா?” கண்ணைச் சுருக்கிச் சந்தேகமாகக் கேட்க,

“உன்னை வீட்டுக்கு வரவைக்க, நான் ஏன் வண்டியை எல்லாம் பஞ்சர் பண்ணனும்…” என்றபடி அவளருகில் நெருங்கியவன், “நான் கூப்பிட்டா நீ வந்துருக்க மாட்டியா” என்றான் கர்வமாக.

அவனது அழுத்தம் நிறைந்த நேசத்தில் திணறி மருகியவளின் இதழ்கள் புன்னகைக்கத் துடித்தது.

வார்த்தைகளும் வர மறுக்க, புது அவஸ்தை அவளிடம்.

“இந்த… இந்த நேரத்துல என்னைக் கூட்டிட்டுப் போனா உன் வீட்ல எதுவும் சொல்ல மாட்டாங்களா?” அவள் கேட்டதும் ஒரு நொடி தியாகுவின் முகம் அவன் நினைவிலாடினாலும், கீர்த்தினாவிற்கு மிதுனா, அகில், பூமிகா மூவரையும் தெரியும் ஆதலால்,

“அதெல்லாம் ஒன்னும் ப்ராபளம் இல்ல” என்றான்.

“ம்ம்!” அவள் தலையை ஆட்டியதும், இன்னுமாய் குளிர்ந்து போனான் ஆடவன்.

முதல்வேலையாக கீர்த்தனாவிற்கு அழைத்து விவரம் கூறியவன், அவளுடன் இணைந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

நான்கு படுக்கையறை கொண்டு பழைய காலத்து வீடு. வாடகை குறைவாக இருப்பதால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வந்து விட்டனர் மன அமைதிக்காகவும் தான்.

அருகிலேயே மளிகைக்கடை வைப்பதற்கும் இடத்தை வாடகைக்குப் பிடித்திருந்தார் தியாகு. இரவு பன்னிரண்டு மணியானாலும் கடையைப் பூட்டுவதில்லை. வீட்டிற்குள் வந்தால் மன அழுத்தம் அவரைக் குலைத்து விடுகிறதென்பதற்காகவே மளிகைக்கடைக்குள் தனது மனவேதனைகளையும் மறைத்து வைத்துக்கொள்கிறார்.

அக்கம் பக்கத்தில் கடைகள் எதுவும் இல்லாததால், வியாபாரம் நன்றாகவே சென்றது. ஆனால், அந்த ஏரியாவின் பிரத்யேகமான அரசியல்வாத ரௌடிகளின் அட்டகாசம் அதிகமாகவே இருந்தது.

வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்த மகனைக் கடையில் அமர்ந்தபடி பார்த்திருந்த தியாகு வெளியில் வந்து விட, அவரைக் கண்டதும் அட்டென்சன் மோடில் நின்றவன் வாயைத் திறந்து எதுவும் பேசினானில்லை.

அவரோ மிதுனாவை ஒரு பார்வை பார்க்க, அந்நேரம் கீர்த்தனா வெளியில் வந்து விட்டார்.

“வாம்மா… நல்லாருக்கியா?” என அன்பாக விசாரித்தவரைக் கண்டு தானாய் புன்னகைத்தவள், “நல்லாருக்கேன் ஆண்ட்டி நீங்க எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டாள் மிதுனா.

“இருக்கேன்மா” என்றவர், தியாகுவைப் பார்த்து “இந்தப் பொண்ணு விதுரா கூட தான் காலேஜுல படிச்சுச்சுங்க. காலேஜ் பங்க்ஷன்க்கு விதுரா என்னைக் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போனப்ப பார்த்தேன். ஆபிஸ்ல வேலை அதிகமாகி நேரானதும் ஹாஸ்டல் போக லேட்டாகிடுச்சாம்” என ஒரு விளக்கம் கொடுத்ததில்,

“சரி சரி புள்ளைய உள்ள கூட்டிட்டு போ!” என்று விட்டு மீண்டும் கடைக்குள் சென்று அமர்ந்து கொண்டார்.

“இவர் உன் அப்பாவா விது?” அறிமுகம் செய்து வைக்காததில் மிதுனா கேட்க, “ம்ம்… வா உள்ள போலாம்” என்று அவளை அழைத்தான்.

நீலாவும் விஷயம் அறிந்து அவளை வரவேற்க, இரவு உணவை இரண்டு வகை சட்னி இட்லியுடன் பரிமாறினார் கீர்த்தனா.

“பெரியம்மா சாப்ட்டாங்களா?” இட்லியில் கை வைக்கும்போதே விதுரன் கேட்டான்.

“சாப்பிட்டாங்க விதுரா. மாத்திரை போட்டுட்டு தூங்குறாங்க” என்றார்.

மிதுனாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியதில், குடும்ப உரையாடல்களிலெல்லாம் கவனம் செலுத்தாமல் இட்லியை பதம் பார்த்து விட்டு, “வாவ் ஆண்ட்டி உங்க சமையல் செம்மயா இருக்கு. இதுக்காகவே அடிக்கடி வரணும்போலயே” என்று கண் சிமிட்டியதும், கீர்த்தனாவிற்கு கண்கள் பனித்தது.

நீலா இட்லியை உண்ணாமல் பிசையத் தொடங்க, விதுரன் உண்ணுவதை நிறுத்தி விட்டான்.

இந்த வாசகத்தை வீட்டினர் யாருமே உபயோகிப்பது இல்லை. அது கீர்த்தனாவிற்கு உடல்நலப் பிரச்சினைகளில் கொண்டு வந்து விடுகிறது, சத்யாவின் மீதுள்ள ஆழமான அன்பின் பிரதிபலிப்பு, பெறாது போனாலும் அவரது மகனல்லவா அவன்!

“நல்லாருக்குன்னு சொன்னதுக்கு ஏன் எல்லாரும் ஷாக் ரியாக்ஷன் குடுக்குறீங்க…” என்றபிறகே அவரவர் முகபாவனைகளை மாற்றிக் கொண்டனர்.

தியாகு கடையை அடைத்து விட்டு உள்ளே நுழைந்ததும், தட்டில் இருந்த அரை இட்லியை அவசரமாய் உண்டு விட்டு எழுந்து கொண்ட மகனை நிமிர்ந்து பாராமலேயே உணர்ந்து கொண்டார் தியாகு.

‘டேபிள் மேனர்ஸ் இருக்கா இவனுக்கு…’ எனத் திட்டிய மிதுனா, பின் ‘தரையில தான உக்காந்து சாப்புடுறோம்… அதுனால மேனர்ஸ் தேவை இல்லன்னு நினைச்சுட்டான் போல. நான் சாப்பிடுற வரை வெய்ட் பண்ண வேண்டியது தான?’ என சிலுப்பினாள்.

“நீங்க வந்து சாப்பிடுங்க அங்கிள்” மிதுனா உரிமையாய் அழைத்ததில், “கை கால் கழுவிட்டு வரேன்மா” என்று விட்டு உள்ளே சென்றார்.

நீலாவோ உர்ரென்ற முகத்துடன் அமர்ந்திருக்க, “நீலா ஆண்ட்டி உங்க பசங்கள்லாம் எங்க?” எனக் கேட்டு பேச்சு கொடுத்தாள்.

“எனக்கு ஒரு பொண்ணுமா. அவ வேலைக்காக வெளில ரூம் எடுத்து தங்கிருக்கா. வீட்ல எங்க இருக்கா…” என சலித்தார்.

“ஓ… என்ன வேலை பாக்குறாங்க?”

“இந்த மாடலிங்ல தான் இருக்கா. விதுரா வேலை பாக்குற கம்பெனி தான்” என்றதும் அவள் விழி விரித்தாள்.

“எங்க கம்பெனில இப்போதைக்கு எங்க மேடம் மட்டும் தான் மாடலிங் பண்றாங்க வேற யாரும் இல்லையே ஆண்ட்டி” என்று தலையைச் சொறிந்ததில், அறை வாயிலில் நின்ற விதுரன் “அவங்க நிவோராவை சொல்றாங்க” என்றதும் “ஓ… நைஸ் நைஸ்! ஆனாலும்…” எனத் திரும்ப ஆரம்பித்தவளை, “நீ முதல்ல சாப்பிட்டு வா. உனக்கு புளி போட்டு விளக்குறேன்” என்று முறைத்து விட்டு மீண்டும் உள்ளே சென்றான்.

‘ஒரு ஜிகே குவெஸ்ட்டின் கேட்டதுக்கு இவன் ஏன் மூஞ்ச காட்டிட்டுப் போறான்…’ என யோசிக்கும்போதே, தியாகு உண்ண அமர்ந்தார்.

“அண்ணி சாப்ட்டாங்களா?” வழக்கமாய் கேட்கும் கேள்வியுடன் அவர் உண்ணத் தொடங்க, உணவும் விஷமாகி கசப்பாய் இறங்கியது.

——

“ஏன் இப்ப வந்த… நிலோ மொத்தமா செத்ததும் வந்துருக்க வேண்டியது தான?” ஷ்யாம் இதயாம்ரிதாவிடம் சீறினான்.

அவளுக்கே சங்கடமாகி விட்டது.

“சாரிடா…”

“உன்னை நம்பி வெய்ட் பண்ணிட்டு இருந்தா, இந்நேரம் அவளை மார்ச்சுவரில தான் கொண்டு போய் சேர்த்துருக்கணும்” ஆதங்கத்தில் பொங்கியவனை தடுக்க இயலாமல் அமைதியாய் நின்றவள், “என்னால வர முடியாதுன்னு தான் வேற அரேஞ்ச் பண்ண சொன்னேன். பட் நான் வந்துருக்கணும். சாரிடா…” என்றவளின் பேச்சைக் காதில் வாங்கவே இல்லை அவன்.

“எப்பவும் அவன்னு வந்துட்டா, எங்களை ரெண்டாம்பட்சமா ஆக்கிடுவல்ல? நாங்க செத்தாலும் உனக்குப் பிரச்சினை இல்லை” என்று பொங்கி விட்டான்.

சில நொடிகள் அமைதியாய் நின்றவள், “இருக்கலாம். அவன்னு வந்துட்டா, எனக்கு நானே முக்கியமா தோண மாட்டேங்குது. இப்ப அவனை நான் லவ் பண்ணலாம் இல்ல. பட், ஆட்டோமேடிக்கா அடிக்ட் ஆகுறதை தடுக்க முடியல. ஹீ இஸ் மை ஒன் அண்ட் ஒன்லி வீக்னஸ் ஃபாரெவர்” என்று தேவையற்ற சமாளிப்புகள் இன்றி ஒப்புக்கொண்டவளைத் திகைத்துப் பார்த்தனர்.

யாமினி அவளைக் கடுமையாய் திருப்பி, “பைத்தியமாடி உனக்கு. அந்த பாஸ்டர்ட் தப்பு செஞ்சா நீ கண்டுக்க மாட்ட. இதே விஷால்னு வந்தப்ப மட்டும் ஏன் இவ்ளோ ஹார்ஸ் டிசீஷன் எடுத்த? உன்கூட உனக்காக 25 வருஷமா இருக்கோம் அம்ரி. ஆனா அவன் உன் வாழ்க்கைக்குள்ள வந்த வெறும் ஆறே மாசத்துல நாங்க உனக்கு தேவையில்லாத ஆணியா மாறிட்டோம். அவன் நல்லவனா இருந்தா கூட பரவாயில்ல. அவன் கெட்ட கேட்டுக்கு நீ அவன் பின்னாடி அலையுறது சகிக்கல. இப்பவரை நீ மாறவே இல்லைல…” எனக் கடிந்ததும்,

“உனக்குப் புரியலடி. இப்ப நிஜமா நான் அவனை லவ் பண்ணல. எனக்கு அவன் மேல பீலிங்ஸ் எல்லாம் இல்ல. இப்ப நான் காலேஜ்ல இருந்த அம்ரியும் இல்ல. இந்த டாபிக்கை விடுங்க. இப்ப நிலோ எப்படி இருக்கா? அவுட் ஆஃப் டேஞ்சர் தான?” என்று கேட்டதும் யாமினி மேலும் திட்ட வர, விஷால் கண்ணைக் காட்டினான்.

அதில் தன்னை அடக்கிக் கொண்டவள், “ம்ம் பெட்டர்…” என்றதில்,

“ம்ம் பத்மா… போலீஸ் கேஸ் என்னாச்சு?” என அத்தனை நேரமும் வேதனையில் உழன்று கொண்டிருந்த பத்மபிரியாவிடம் கேட்க, “ஷ்யாம் சூசைட் அட்டெம்ப் பண்ணி கொஞ்ச நாள்ல நிலோவும் சூசைட் அட்டெம்ப் பண்ணது பெரிய கேசா மாறும்போல… யாரோ வேணும்னே பண்றாங்கனு சஸ்பெக்ட் பண்றாங்க!” என்றாள்.

“உனக்கும் அவளுக்கும் பிரச்சினையா?” ஷ்யாமிடம் கேட்டாள் இதயாம்ரிதா.

“இல்லையே. ஆபிஸ்ல இருந்து நேத்து முகம் எல்லாம் அழுது வீங்கிப் போய் வந்தா, என்ன ஆச்சுன்னு கேட்டேன் எனக்குப் பதிலே சொல்லல. சரி கொஞ்ச நேரத்துல சரியாகவும் விசாரிக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள காரை எடுத்துட்டுப் போய் சம்பவம் பண்ணிட்டா. ஆபிஸ்லயும் விசாரிச்சுட்டேன். என்ன பிரச்சினைன்னு தெரியல…” என்றான் குழப்பமாக.

விஷாலோ, “அவள் கண்ணு முழிச்சாதான் என்ன பிரச்சினைன்னு தெரியும்…” என்றதும், “சரி என்னன்னு விசாரிங்க. யாராவது வேணும்னே இதெல்லாம் செட்டப் பண்ற மாதிரி தெரிஞ்சா, ஹையர் அஃபிஷியல்ஸ்கிட்ட சொல்லி மூவ் பண்ண சொல்லலாம்… பத்மா… நாளைக்கு மினிஸ்டர்கிட்ட ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிடு” என்றதும் அவள் உடனடியாய் மினிஸ்டரின் உதவியாளரைத் தொடர்பு கொண்டாள்.

“மினிஸ்டர் பிஸியாம். ஒன் வீக்குக்கு அவைலபில் இல்லன்னு சொன்னாரு…” விஷால் பட்டும் படாமல் பேசிட,

“ஓ” எனும்போதே பத்மபிரியா அலைபேசியை வேகமாய் இதயாம்ரிதாவிடம் கொடுத்தாள்.

“மினிஸ்டர் லைன்ல…”

“ஹலோ சார்…” இதயாம்ரிதா தனியாய் சென்று விவரத்தைச் சுருக்கமாய் கூறி, அவரை நேரில் சந்திக்க கேட்க, அவர் மறுநாளே வரக்கூறினார்.

“நாளைக்கு சார் மீட் பண்ண சொன்னாரு. எதுக்கும் இதை டீப்பா விசாரிக்க சொல்லலாம்… அவர் மூலமா போறப்ப, ஃபாஸ்ட் மூவ் இருக்கும்” என்றதில் விஷாலுக்கு மெல்ல எரிச்சல் சூழ்ந்தது.

சில நேரத்திற்கு முன்பு அவனும் தான் பேசி இருந்தான். நடந்ததை கூறியும் இருந்தான். ஆனால், அவர் மதித்துப் பேசக்கூட இல்லை.

அவன் அலுவலகத்தைக் கல்லூரியில் படிக்கும்போதே எடுத்து நடத்தும் ஆற்றல் கொண்டிருக்கலாம். ஆனால், அவள் நிவோரா நிறுவனத்தின் நிஜ முதலாளியல்லவா? தந்தையுடன் அரசியல்வாதிகளுடனும் பெரிய தலைவர்களிடமும் நேரடிப் பழக்கம் கொண்டவள். சில நேரங்களில் ராம்குமாருக்குப் பதில் அவளே கூட பெரிய ஆள்களை நேரில் சென்று நேர்த்தியாய் தொழில்முறைகளை விளக்கி விட்டு வருவாள்.

அவர்களின் மூலம் அவள் தொடங்கவிருக்கும் ட்ரஸ்ட்டிற்கு கூட அடித்தளமிட்டு வரும் அளவு கெட்டிக்காரி. அனைத்தும் சரியாக நடந்திருந்தால், அவளது கனவும் காதலும் கைகூடியிருக்கும்!?

அதனாலேயோ என்னவோ, அவள் நிவோராவை விஷாலுக்கு விட்டுக்கொடுத்தது பல அரசியல்தலைவர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தாலும், உடனே மறு உருவாக்கத்துடன் எழுந்து நிற்பவளின் மீது மதிப்பும் கூடியது.

அது மட்டுமின்றி, ராம்குமார் கொடுத்துக்கொண்டிருந்த பல நிதியுதவிகளை அவள் சீராய் தொடர்வதும், அவளது தெளிவான ஆக்கமிகு பேச்சுகளும் அவள் மீது தானாய் ஒரு மதிப்பை இன்னுமே தேக்கி வைத்திருக்கிறது.

அது தான் அவளது வெற்றி! தன்னிடம் இருக்கும் அடையாளமனைத்தும் இழந்து போனாலும், தானே ஒரு அடையாளமாய் மிளிர இயலும் என்ற ஆணவமே ‘நீ என்னிடமிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்’ என்ற எக்களிப்பைத் தந்தது.

—–

மருத்துவமனையில் இருந்து நேராய் வீட்டிற்கு சென்றவளுக்கு ஆயாசமாய் இருந்தது.

தாயின் அரவணைப்பைத் தேடியதோ நெஞ்சம் தெரியவில்லை. திருமணம் நடந்தேறியபிறகு ஓரிரு முறை இங்கு வருவதாய் கூறியவர் பின்பு தன்னைத் தொந்தரவு செய்யவில்லை என்பதே ஆச்சர்யம் தான் அவளுக்கு.

பசித்தது. உண்ணப் பிடிக்கவில்லை. சத்யாவின் அறையில் விளக்கு அணைந்திருந்ததில் அவன் உறங்கி இருப்பான் எனக் கணித்து களைப்புடன் படுக்கையில் சாய்ந்தாள்.

இந்த ஒரு நாளே, பல யுகங்களாய் நடைபெறுவது போலொரு பிரம்மை. உருண்டு பிரண்டு படுத்துப் பார்த்தாள். உறக்கம் வரவில்லை.

ட்ராயரைத் திறந்து மாத்திரையை எடுக்கப் போக மாத்திரையைக் காணவில்லை.

“ப்ச் எங்க போச்சு?” எனத் தேடி சலித்தவளுக்கு உறக்கம் வந்தபாடில்லை.

“நோ அம்ரி… நோ” தனக்குத் தானே சில நிமிடங்கள் பேசிக்கொண்டாள். ஆனால் மனம் அடங்கவில்லை.

தானாய் அவளது கால்கள் தந்தையின் அறைக்குச் சென்றது. அங்கு ஒரு மூலையில் மற்றொரு அறைக்கதவு இருக்க, அதனைத் திறந்தவளின் கண்முன்னே காட்சியாய் விரிந்தது பல வெளிநாட்டு மதுபானங்களைக் கொண்ட பார்.

ஒரு முறை மூச்சை இழுத்துப் பிடித்தவள், மதுபான பாட்டில் ஒன்றை தனதறைக்கு எடுத்துச் சென்று, வேக வேகமாய் வாயில் சரித்தாள்.

தவறென்று புரிகிறது. ஆனால், ஒருமுறை அடிமையாகி விட்டாளே இதற்கு. அவனிடம் அடிமை கொண்டது போல, அவனில்லா நாள்களில் இந்த மதுவிடம் அடிமையான மனதிற்கு என்னவென்று புரியவைப்பாள் இந்தக் காதல் தன் மீது இடியை வாரி இறைக்குமென்று!

இதனைத் தடுக்க, தூக்க மாத்திரையை பழக்கப்படுத்தியவள் முழுதாய் இந்தப் பழக்கத்திலிருந்து வெளியில் வந்திருந்தாள்.

எவனுடைய பிரிவும் தனிமையும் வலித்ததென்று மதுவின் பின்னே செல்ல ஆரம்பித்தாளோ, அவனுடைய அண்மையும் நெருக்கமும் வலிக்கறதென்று மீண்டும் மதுவை நாடுகிறாள். வேடிக்கை தானே இந்த வாழ்க்கையும்!!!

—–

விஷால் எரிச்சல் மண்ட தனது வீட்டிற்கு வந்தான்.

அவனது தாயும் தந்தையும் வெளிநாட்டு ட்ரிப்பிற்காக சென்றிருக்க, அவனது முகமே சிடுசிடுவென இருந்தது.

“என்னாச்சு டியர்?”

தேனாய் ஒலித்த குரலைக் காதில் வாங்கியபடி சோபாவில் சரிந்தவன், “நிலோவுக்கு இப்ப பரவாயில்ல. அவள் கண்ணு முழிக்க இன்னும் 24 ஹவர்ஸ் ஆகுமாம்” என்றதும் அவனது தலையைப் பிடித்து விட்டவள், “கவலைப்படாதீங்க டியர். அவங்களுக்கு சரியாகிடும்” என்று மென்மையாய் உரைக்க, “ம்ம்… செம்ம ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு” என்றான்.

அவளோ சோபாவின் பின்னால் தலைசாய்த்திருந்தவனின் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு, “இப்பவுமா?” எனக் கேட்க, “நொவ் பெட்டர்” என்றவன் இப்போது அவளையே மொத்தமாய் கவர்ந்திருந்தான்.

“சுனைனா!” அவளுக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட தவறான உறவின் காரணமாகவே இதயாம்ரிதாவின் பிரிவும்.

அவள் பிரிந்தபின், இப்போதெல்லாம் இவளை மட்டுமே நாடுகிறான். தேடுகிறான். முதலில் அறியாமல், ஒரு வேகத்தில் ஏற்பட்ட உணர்வுப் பிணைப்பு. இப்போதெல்லாம் இதயாம்ரிதாவின் மீதுள்ள கோபத்தில் தன்னைத் தணிக்க, இவளை மொத்தமாக உபயோகித்துக் கொள்கிறான்.

நிவோராவின் முன்னாடி மாடலாக வலம் வருவதற்காக அவளும் அவளையே தியாகம் செய்து கொள்கிறாள்.

ஆனாலும், அவன் மீது அவளுக்கு இருக்கும் கரிசனமும், நேசமும் உண்மையானது. ஆகினும், அடுத்த பெண்ணின் கணவனின் மீது வரும் நேசத்தை நெறிப்படுத்த முயல்வது நீதியல்லவே!

——

“உன் அத்தை பொண்ணு நிவோரால மாடலா இருக்காளா விதுரா?” மிதுனா வியப்பாய் கேட்டாள். இருவரும் மொட்டை மாடியில் நடைபயின்று கொண்டிருந்தனர்.

“ம்ம்… சப்ஸ்டிட்யூட் மாடல்” விதுரன் இலக்கின்றி பதில் உரைத்தான்.

“ஓஹோ”

“எனக்கும் அவளுக்கு பேச்சு வார்த்த இல்ல”

“ஏன்?”

“எனக்கு அவள் நிவோரால வேலை பாக்குறது பிடிக்கல. வேணாம்னு சொன்னேன். அவள் கேட்கல”

“ஏன்டா நல்ல கம்பெனி தான? அப்படி பார்த்தா நீயே அங்க தான் சேர்ந்துருக்க…” மிதுனா முறைத்தாள்.

அவன் பதிலேதும் கூறவில்லை. அவள் இணைந்தது தனது குடும்பத்தை அழித்த கயவர்களிடம், தான் இணைந்தது அவர்களை ஏதேனும் ஒரு வகையில் வீழ்த்திட அல்லவா?

“நான் நிவோரா ஆட் எல்லாமே பாத்துருக்கேன். எந்த ஆட்ல வருவா உன் அத்த பொண்ணு.” மிதுனா மேலும் கேள்வியெழுப்பியதில்,

“எந்த ஆட்லயும் வரல. மெய்ன் மாடல் இல்ல. ரெண்டு மூணு பேர்ல ஒருத்தியா வருவா. அதுவும் ஃபியூ செகண்ட்ஸ் தான். ஆனா இன்டர்நேஷனல் மேகஸின்ல எல்லாம் அவள் போட்டோஸ் வரும். நல்ல ரீச்னு கூட ஒரு தடவை அத்தைகிட்ட போன்ல சொன்னா…”

“ஓஹோ… அவங்க பேர் என்ன?”

“ஸ்வேதா”

“இந்தப் பேர்ல அங்க யாரும் ஒர்க் பண்றங்களா… இன்டர்நேஷனல் மேகசின்ஸ் நானும் பாத்துருக்கேன். ஆனா இந்தப் பேர் பார்த்தது இல்லையே” குழப்பமாய் அவள் கேட்டதும்,

“பார்த்துருக்க மாட்ட. அவ தான் அஸ்ட்ராலஜி லக்னு பேர மாத்திட்டாளே. அந்தப் பேர் கூட எனக்கு மறந்துடுச்சு… ம்ம் சுனைனா…” என யோசித்துக் கூறியதும் மிதுனாவிடம் கடும் அதிர்வு.

——

மறுநாள் காலையில் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த சத்ய யுகாத்ரனின் விழிகள் மாடி அறையை ஒரு முறை தழுவியது.

பொதுவாய் 8. 30 மணிக்கெல்லாம் தயாராகி வந்திருப்பாள்.

‘ஒருவேளை ஸ்லீப்பிங் டேப்லட்ட காணோம்னு நைட்டு முழுக்க தூங்காம இப்ப தூங்குறாளோ…’ என்றெண்ணியபடி இரண்டிரண்டு படிகளாகத் தாவி மேலே ஏறினான். அந்த மாத்திரைகளை அப்புறப்படுத்தியதும் அவன் தானே!

அவள் அறைக்குச் சென்று பார்த்ததவன் அதிர்ந்து விட்டான்.

காலியான மதுபாட்டில் கீழே கிடைக்க, சோபாவில் சரிந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் இதயாம்ரிதா.

துரிதமாய் அவளருகில் சென்றவனின் எண்ணமெங்கிலும் அவளது வாசகங்களே!

“நம்மளை மறக்க வைக்கிற மாதிரியான குடிபோதை, ட்ரக்ஸ் எல்லாம் இப்ப ஆம்பளை பசங்களுக்கு ஈகுவலா பொண்ணுங்களும் எடுத்துக்குறாங்க. இது வருங்கால சந்ததிகளை தவறான பாதைக்கு கூட்டிட்டுப் போய்டும். ஆண்களுக்கு நிகர் பெண்கள்னு சொல்லலாம். அதுக்காக அவங்க செய்ற தவறான பழக்கத்தைக் கத்துக்கிட்டு நீயும் குடிக்கிறியா நானும் குடிக்கிறேன். நீயும் சோஷியல் ட்ரிங்க் பண்றியா நானும் சோசியல் ட்ரிங்க் பண்றேன், உனக்கு துக்கமா இருக்குன்னு குடிக்கிறியா நானும் துக்கமா இருக்கேன் குடிக்கிறேன்னு சொல்றது ஒரு பேட் எக்ஸ்சாம்பில். பெண்கள் இந்த விஷயத்துல ஆண்களுக்கு முன்னோடியா இருக்கணும். அவங்களுக்கு ஈகுவலா இருக்குறேன்னு அவங்களை கண்டிக்க வேண்டிய நாமளும் இதை செய்றது எல்லா விதமான தப்புக்கு வழி வகுக்கும்…

கல்லூரியில் பெண்கள் தின விழாவில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம உரிமை. ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள்… என்ற தலைப்பில் ஒரு குழுவினரும் இதற்கு எதிர்பதமாக மற்றொரு குழுவினரும் நடத்திய பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட இதயாம்ரிதா,

“ஆண்களும் பெண்களும் சமமல்ல. ஆண்களின் முன்னோடி, வாழ்க்கையை முறையாய் வாழ்வதற்கு ஆண்களை வழிநடத்துபவர்கள் பெண்கள்” என்றும்

“பெண்கள் ஆண்களுக்கு சமமும் அல்ல. கீழேயும் அல்ல. முன்னோடிகள்!” என்று உரையை முடித்து அதற்கு பரிசும் பெற்றாள்.

அவள் பேசி முடித்து மேடையை விட்டுக் கீழே இறங்கியதும், அங்கு நின்றிருந்த சத்ய யுகாத்ரனிடம் இரு புருவத்தையும் தூக்கிக் காட்ட, அவனும் தன்னிச்சையாய் புருவங்களை உயர்த்தி மெச்சுதலாய் பார்த்திருந்தான்.

அப்படிப்பட்டவள் குடித்திருக்கிறாள்! நம்ப இயலவில்லை தான். ஆனால் நம்பித்தானே ஆகவேண்டும்.

அனைத்தும் நடிப்பு! தானொரு புனித ஆத்மா என்ற மாதிரியான தோரணையில் தானே நடித்து நடித்து பேசிப் பேசியே தன்னை ஏமாற்றி வாழ்வை சிதைத்து விட்டாள். அனைத்தும் பொய்யாக இருக்கும்போது, இதில் மட்டும் எங்கிருந்து உண்மை இருக்கப்போகிறது… என்ற சீற்றம் தலைக்கு ஏற, அவள் மீது ப்ரிட்ஜில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து ஊற்றியதில், அவள் சில்லிட்டு பதறி எழுந்தாள்.

புது காதல் மலரும்
மேகா

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 88

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
16
+1
76
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பாவம் அம்ரி. சத்யா புரிந்தால் நல்ல இருக்கும்.