19. கண்களும் காதல் பேசியதே

Loading

காதல் -19

 

கருமேகங்கள் சூழ மதிய பொழுதும் மாலை ஆறு மணியை போல காட்சி அளித்தது.. மிதமான குளிர்காற்று வீச மெத்தையில் துயில் கொண்டிருந்தாள் சாயாலி..

 

மறவனின் அன்னையை பார்த்து மயக்கமடைந்து விழுந்தவள், அவன் தண்ணீர் தெளித்தும் எழவில்லை.. அதிர்ந்து போனவன் மருத்துவரை அழைத்து வந்தான்.

 

அந்த வீட்டில் இருக்கும் மற்றொரு அறையில் அவளை படுக்க வைத்து விட்டு சிகிச்சை மேற்கொள்ள.. அவளை பரிசோதித்த மருத்துவர்.. ” ரொம்ப டீப்பா எதையோ பார்த்து பயந்து இருக்காங்க.. அவங்க மனச பாதிக்கிற அளவுக்கு அந்த விஷயம் இருக்கு, அதான் இவ்வளவு டீப்பான மயக்கம்..இப்ப இன்ஜெக்ஷன் போடுறேன்.. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும்.. அவங்க கண் முழிக்கவும் என்ன விஷயம்ன்னு கேட்டு பாருங்க, ஆனால் கம்பல் பண்ண கூடாது ”

 

” ரொம்ப சீரியஸா டாக்டர் ”

 

” அப்படி சொல்ல முடியாது மிஸ்டர் மறவன்.. ஃபர்ஸ்ட் அவங்க முழிக்கவும் எப்படி ரியாக்ட் பண்ணுறாங்கன்னு பாருங்க.. அவங்களே சொன்னா ஓகே தான் .. நீங்க கம்பள் பண்ணி எதுவும் கேட்க வேணாம்.. உங்கனால முடியாத பட்சத்துக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க.. ”

 

எதையோ ஆழ்ந்து சிந்தித்தவன்.. ” ஓகே டாக்டர் ” என அவருக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து வழியனுப்பி வைத்தான்.

 

உள்ளே வந்தவன் மனம் ஒரு நிலையில் இல்லை.. ‘ அன்னைக்கு ஆபிஸ்ல அம்மா போட்டோ பார்த்து தான் மயங்கி விழுந்தா… இன்னைக்கு அவங்களை நேர்ல பார்த்து மயங்கி விழுகுறா .. சம்திங் ஏதோ பெரிய விஷயம் இருக்கு .. ‘ என அவன் மூளை கன கச்சிதமாக எடை போட்டது..

 

உடனே தனது தொலைபேசியை எடுத்து அன்று இரவு பேசியனுக்கு அழைத்தான்.. ” நான் சொன்ன விஷயம் என்னாச்சு ”

 

” சார் இன்னும் டூ டேஸ்ல தகவல் சொல்லுறோம் சார், ஆல்மோஸ்ட் நெருங்கியாச்சு ”

 

” ஓகே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுங்க ” என்றதோடு தொடர்பை துண்டித்தான்.

 

அமைதியாக துயில் கொள்ளும் சாயாலியை பார்த்தவன்.. ” நீ சொல்லாம மறைக்குற எல்லா விஷயத்தையும் நான் கண்டு பிடிக்கிறேன் யாழி… ஏதோ பெரிய பிரச்சனையில இருக்கன்னு மட்டும் புரியுது.. அதை சீக்கிரம் கண்டுபிடிச்சு அதுல இருந்து உன்ன வெளியே கொண்டு வரேன் ” என்றவனுக்கு தெரியவில்லை பிரச்சனையே அவன் தான் என்று…

 

இப்போது அவளை காக்க நினைப்பவன் , உண்மை தெரியும் பட்சத்தில் அவளுக்கே வில்லனாகி போவான் என்பதை அவனும் அறியவில்லை..

 

தன் அன்னையின் அறைக்கு சென்றவன்.. அவர் காலடியில் அமர்ந்து கொண்டவன்.. ” உனக்கு மட்டும் ஏன் மா இப்படி நடக்கனும், இவ்வளவு நாள் என்ன தவிக்க விட்டது போதாதா… இப்ப நீ ஆசைப்பட்ட மாதிரி நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளை பார்க்க உனக்கு ஆசை இல்லையா மா.. இதுக்கு மேல கண்ண மூடி படுத்து இருக்காத மா.. அப்பா உன்ன நினைச்சு ஒவ்வொரு நாளும் உடைஞ்சு போயிட்டு இருக்காரு.. சீக்கிரம் எங்க கிட்ட பழைய படி நீ வரனும்.. ” என அவள் காலடியில் கண்ணீர் வடித்தார் மறவன்..

 

தாய் என்றால் அத்தனை பிரியம் அவனுக்கு.. நொடி பொழுதிலும் பிரியாமல் அவரை சுற்றி வருவான் மறவன்… அதே போல மகன் மீது எல்லையற்ற அன்பை வைத்திருந்தார்.

 

” உனக்கு ஒரு விஷயம் தெரியுமா மா.. இந்த வருஷம் சிறந்த எழுத்தாளர்க்கான விருது தமிழ் காதலனுக்கு கிடைச்சு இருக்கு ” என கூறும் போதே அவன் உதடுகள் விரக்தியாக விரிந்தது.

 

” இந்த விருது இப்போ கிடைச்சு என்ன பலன் மா… அந்த செய்தி வந்ததுல இருந்து என் ரத்தம் எல்லாம் கொதிக்குது.. என்னால ஜீரணிக்க முடியல மா.. சுயநலமான பூமி மா இது.. இங்க நானும் அப்படி தான் மா வாழ ஆசை படுறேன்.. ஆனால் உன் வளர்ப்பு என்ன அப்படி வாழ விட மாட்டிது.. ” என்றவனது வார்த்தைகளில் தான் அத்தனை வெறுமை..

 

வாழ்க்கையே பறி போனதை போல பேசிக் கொண்டிருந்தான்.. கோமாவில் இருந்தாலும் மகன் பேசியதை எல்லாம் செவி வாயிலில் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.. மறவனின் அன்னை சிந்தாமணி..

 

அதுவரை அவர் காலடியில் குனிந்து அமர்ந்து இருந்தவன்.. கண்களை அழுந்த துடைத்து விட்டு தன் மனைவியின் அறை நோக்கி சென்றான்.

 

அந்த விசாலமான அறையில் அமைதியாக விட்டத்தை வெறித்த வண்ணம் படுத்திருந்தாள் சாயாலி..

 

மயக்கம் தெளிந்து பதினைந்து நிமிடம் இருக்கும்.. காலையில் இருந்து நடந்ததை எல்லாம் மனதிற்குள் உருபோட்டுக் கொண்டிருந்தாள்..

 

காலடி சத்தம் கேட்டு அவள் இமைகள் வாயிலை நோக்கி செல்ல .. அவள் நினைத்ததை போல மறவன் வந்து கொண்டிருந்தான்.

 

“இப்ப எப்படி இருக்கு யாழி” தலையை வருடிக் கொடுத்து அவன் கேட்ட விதத்தில் உருகி போனவள்.. தற்காலிகமாக அதற்கு தடை விதித்து..

நன்றாக இருப்பதாக தலையை ஆட்டினாள்.

 

” எதையும் யோசிக்காத உனக்கு ஒன்னும் இல்ல.. நீ அடிக்கடி இந்த மாதிரி மயங்கி விழுற.. அதுக்கு முதல்ல ட்ரீட்மென்ட் எடுக்கலாம்.. அப்பறம் வந்து அம்மாவை பார்க்கலாம்.. நீ வந்து அவங்களை எழுப்பி விடுவன்னு பார்த்தா , நீ தான் முதல்ல மயங்கி விழுற ” என கேலி பேசியவன் மறந்தும் கூட அவள் மயங்கியதற்கான காரணத்தை கேட்கவில்லை..

 

அதுவே அவளுக்கு சற்று ஆறுதல் தர.. ‘வீட்டுக்கு போவோம் ‘ என சைகையில் கூறினாள்.

 

” ம்ம் போகலாம்.. நீ இப்போ ஓகே தானே.. நடந்து வருவியா ”

 

வேகமாக தலை ஆட்ட அவளை அழைத்து கொண்டு காரில் ஏறினான்.. சற்று தூரம் சென்றதும் தயக்கமாக அவனை பார்ப்பதும் பின் வெளியே பார்ப்பதுமாக இருக்க.. அவளை புரிந்து கொண்டவன்..

 

” என்ன வேணும் யாழி ” என்றதும் திடிக்கிட்டு திரும்பி பார்த்தவள்..

 

பின் மெதுவாக ‘ அம்மா வீட்டிற்கு போகவா ‘ என சைகை செய்ய.. அவளுக்கு பதில் அளிக்காமல் மறவன் நேராக அவள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான்.

 

ஏனோ அவள் வீட்டிற்கு வந்ததும் புத்துணர்ச்சியாக உணர்ந்தாள். வேகமாக கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவள், தேனு செய்து கொண்டிருக்கும் காரியத்தை பார்த்து அப்படியே வாசலில் நின்று விட்டாள்..

 

தன் மனைவி வாசலில் நிற்பதை பார்த்து மறவன் இறங்கி வந்து பார்த்தவன் அவனும் யோசனையாக வீட்டிற்குள் நுழைந்தான்.

 

” நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ” திடீரென கேட்ட மருமகனின் குரலில் செய்த வேலையை அப்படியே விட்டுவிட்டு இருவரையும் உள்ளே வரவேற்றார் தேனு.

 

” வாங்க தம்பி.. வா மா.. உட்காருங்க நான் காபி கொண்டு வரேன் ” என உள்ளே போக போனவரை தடுத்தான்.

 

” இது என்ன ” என பரப்பி கிடக்கும் பொருட்களை எல்லாம் காட்ட.. சங்கட்டமாக தலை கவிழ்ந்தார் தேனு.

 

சாயாலி அருகில் சென்று அவர் கையை பிடிக்க.. ” உன் அப்பா வீட்டு ஆளுங்க நம்ம வீட்டை கேட்கிறாங்க மா.. இன்னும் வீடு உங்க தாத்தா பேருல இருக்காம், அதுனால இப்ப பிரச்சனை பண்ணுறாங்க… அதான் வீட்டை காலி பண்ணி கொடுக்க போறேன்.. ” என்றதும் நெஞ்சே அடைத்து விட்டது அவளுக்கு..

 

சிறு வயதில் இருந்து அவள் வாழ்ந்த வீடு அல்லவா.. சுயநலமாக இருக்கும் சொந்தங்களை அறவே வெறுத்தாள் சாயா.

 

” எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லனும்னு தோணலையா உங்களுக்கு ” மறவன் சற்று கடினமாக கேட்க.. கண்ணீர் பெருகியது அவருக்கு.

 

‘ வீட்டை காலி பண்ணிட்டு எங்க போக போற ‘ என சாயா தவிப்போடு சைகை செய்ய..

 

” வீட்டை பங்கு போட்டு வர காசுல… சின்ன வீடா ஒத்திக்கு பிடிச்சு இருக்கலாம்னு இருக்கேன் ”  என இன்னும் அவர்கள் பிரித்து பணம் தருவார்கள் என நம்பி கொண்டிருக்கும் தேனுவை பார்க்க மனதே பாரமாகி போனது மறவனுக்கு…

 

” நீங்க எங்கையும் போக வேணாம்… இந்த வீட்டு பத்திரம் உங்க பேருக்கு மாறும்.. முதல்ல எல்லாத்தையும் எடுத்து உள்ள வைங்க அத்தை ” என மறவன் கூறவும் இரு பெண்களும் செய்வதறியாது முழிக்க…

 

” என்ன நம்பிக்கை இல்லையா ” என்றதும் சட்டென்று தேனு பாத்திரங்களை அடுக்க தொடங்கினார்.

 

“நீ இங்க இருந்துட்டு வா சாயா.. நான் வேலையை முடிச்சுட்டு வந்து கூட்டிட்டு போறேன் ” என மறவன் வெளியே சென்று விட.. அதன் பின் அம்மா மகள் இருவரும் தனிமையில் வெகு நாட்களுக்கு பின் பேசிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது தான் தமிழ் காதலன் புத்தகம் நினைவிற்கு வர, வேகமாக எழுந்தவள் புத்தகத்தை எடுத்து கொண்டு எப்போதும் அமரும் மேஜையில் அமர்ந்து கொண்டாள்.

 

இதுவரை ஏதோ ஒரு பக்கத்தை திறந்து அவள் வாழ்க்கைக்கான தேடலை தேடி ஆறுதல் அடைந்து கொண்டிருந்தவள்.. முதல் முறையாக தமிழ் காதலனை பற்றி தெரிந்து கொள்ள முதல் பக்கத்தை திறந்து ஆசிரியர் குறிப்பை தேடினாள்.

 

இதோ தமிழ் காதலனின் வரிகள்…

 

தமிழ் காதலன் என்றே உங்களிடம் அறிமுகமாக ஆசை கொள்கிறேன்.. தமிழ் மீது உள்ள எல்லை இல்லா பிரியத்தின் பேரில் எழுதத் தொடங்கி, என்னுடைய கற்பனைகளை எழுத்து வடிவில் உங்களுக்கு கொடுக்கிறேன்.. நானும் உங்களை போல சாதாரண மானிடன் தான்.. இறைவன் எனக்கு கொடுத்த ஒரு பொக்கிஷம் என்னவென்றால் அது  என் பேனா..

 

என்னை பற்றி தெரிந்து கொள்ள உங்களுக்கு விருப்பம் இருந்தாலும்.. என்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்று இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.. வாழ்க்கை அழைத்து செல்லும் பாதையில் அதனுடன் பயணிக்கும் சராசரி மனிதன் நான். என்னுடைய எண்ணங்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..  இந்த பரந்து விரிந்த உலகத்தில் மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டுவதற்கு நான் தேர்ந்தெடுக்கபட்டது வாசகர்கள் ஆகிய நீங்கள் மட்டும் தான்.. நான் வாழும் வரை என் எழுத்துக்கள் உங்களை வந்து சேரும்.. என் மறைவிற்கு பின் என்னுடைய உயிரை என்னுடைய எழுத்துக்களுக்கு அர்பணித்து விட்டு செல்வேன்..

– தமிழ் காதலன்.

 

 

புத்தகத்தை மூடி வைத்தவள் மனதிற்குள் புயல் வீசியது..

 

” வீட்டுக்கு போவோமா யாழி ” கணவனின் குரல் கேட்கவும் அவசரமாக புத்தகத்தை மறைத்தவள் தேனுவிடம் சொல்லி கொண்டு , அருகே நடக்கும் மறவனின் கை விரல்களை பற்றிக் கொண்டாள் இறுக்கமாக…

 

தனது விரலோடு கோர்த்து கொண்டு நடக்கும் மனைவியின் எண்ணங்களை புரிந்து கொள்ள முடியாமல் அவளுடன் பயணித்தான் மறவன்.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்