Loading

இரவு உணவு வேளையைத் தாண்டியும் அலுவல் அறையை விட்டு நகரவே இல்லை யாஷ் பிரஜிதன்.

யார் மீது கோபமென்று தெரியவில்லை. ஆனால், நெஞ்சம் முழுக்க தகித்துக் கொண்டிருந்தது.

“எப்படியும் அவன் ஆதிவாசி மாதிரி பழத்தை சாப்பிட்டு தான தூங்கப் போறான்…” என எண்ணி அவனுக்காக பழங்களை நறுக்கி வைத்த நிதர்ஷனா, காலையில் செய்த பொங்கலே மீதமிருக்க, சாம்பாரை சூடு செய்து விட்டு மாடியையே பார்த்திருந்தாள்.

‘என்ன இவன காணோம்… ஏற்கனவே கரண்ட் கம்மியா இருக்கு. வேலை பார்த்துட்டே இருந்தா கரண்ட் வர்ற வரைக்கும் இருட்டுக்குள்ள தான் உக்காந்துருக்கணும்’ என்றபடி அவனைத் தேடித் சென்றாள்.

இதுவரை அலுவல் அறைக்குள் அவள் சென்றதில்லை. உள்ளே சென்றதும் தங்கமும் வைரமும் கொட்டிக்கிடப்பது போல வெடுக்கென கதவை அடைத்து விடுவான் யாஷ் பிரஜிதன்.

கதவைத் தட்டியவள், “யாஷ்” எனச் சத்தம் கொடுக்க, சிடுசிடுவென்ற முகத்துடன் கதவைத் திறந்தவன் “வாட்?” என்றான்.

“டைம் ஆகிடுச்சே. சாப்பிட வரல?” அவளது கேள்வியில், “என் அம்மா பேமிலிட்ட மட்டும் ஆக்ட் பண்ணுனா போதும். என்கிட்ட பண்ண தேவை இல்ல. ஸ்டே இன் யுவர் லிமிட்!” என எரிந்து விழுந்து விட்டு கதவைச் சடாரென அடைத்தான்.

‘சாப்பிட வரலைன்னு கேட்டதுக்கு எதுக்கு இப்படி குதிக்கிறான். கிறுக்கு அரக்கா…’ எனத் தலையில் அடித்துக் கொண்டவள், யாருக்கு வந்த கேடோ என பொங்கலையும் சாம்பாரையும் காலி செய்து விட்டு பாத்திரத்தையும் கழுவி வைத்தாள்.

அறைக்குச் சென்றவளுக்கோ ஏற்கனவே யாஷ் இருக்கும் அறையில் ஏசி முதற்கொண்டு ஓடுவது அவன் கதவைத் திறக்கையில் தெரிந்தது.

இங்கும் மின்விசிறியை ஓட விட்டால், திண்டாட்டமாகிவிடும் என்ற எண்ணத்தில் அனைத்தையும் அணைத்து வைத்தவள், புழுக்கம் தாளாமல் பால்கனி கதவை எல்லாம் திறந்தாள்.

‘ச்சோ’ வென மழை வேறு பொழிந்தபடி இருந்தது. பால்கனி கதவைத் திறந்ததும் ஊசியாக குளிர் பாவையின் உடலை ஊடுருவ, கையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டாள்.

அந்நேரம் அவள் மீது மெல்லிய லேசர் ஒளி தெரிவது போல இருக்கு, ‘இந்த கொட்டுற மழைல யாரு நம்ம மேல லைட் அடிச்சு விளையாடுறா? என சற்றே நகன்று எட்டிப் பார்க்கும்போதே, அவளுக்கு அருகில் இருந்த பூந்தொட்டி உடைந்து சிதறியதில் அலறி விட்டாள்.

இன்னும் அவள் மீது விளக்கு எரிய, அவசரமாக உள்ளே சென்ற நிதர்ஷனாவின் தலைக்கு மேலே இருந்த மிகப்பெரிய கிரிஸ்டல் சீலிங் விளக்கு பொத்தென உடைந்து அவள் மேலே விழுகப் போக, அவள் உணரும் முன்னே அவளைத் தன்னருகே இழுத்திருந்தான் யாஷ் பிரஜிதன்.

ஏதோ சத்தம் கேட்டு அறைக்கு வந்தவன், அறை முழுதும் இருட்டாய் இருப்பது உணர்ந்து விளக்கை எரிய விடும் நேரம், நடப்பதை உள்வாங்கி கொண்டு அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்திருந்தான்.

அவளது மேனி பயத்தில் நடுங்கி கொண்டிருந்தது. “இம்மாம்பெரிய லைட்டு என் தலைல வுழுந்துருந்தா, மழைக்குள்ள டெட் பாடியா அலைஞ்சுருப்பேன் யாஷ்” என அச்சம் மிளிர கூறியதில், அவள் முதுகை நீவி விட்ட யாஷிற்கும் இதயம் அதிவேகத்தில் துடித்தது.

முகத்தில் அதிர்ச்சியும் கோபமும் ஒருங்கே தோன்ற, பால்கனிக்குச் செல்ல அடியெடுத்து வைத்தவனை நிறுத்தினாள்.

“யாஷ் வேணாம். ஏதோ லைட்டடிச்சு பொருளை எல்லாம் ஓடைக்கிறாங்க. உங்க மேல பட்டுட போகுது” என்று தடுக்க, “லைட் அடிக்கலடி. துப்பாக்கியால் சுடுறானுங்க. வெய்ட்…” என்று அவளைக் கட்டிலுக்கு அடியில் மறைவாய் அமர வைத்து விட்டு, பால்கனிக்குச் சென்று தனது கூர்விழிகளால் இருளை ஆராய்ந்தவனுக்கு, ஒன்று மட்டும் புலப்பட்டது.

யாரோ ஆதிசக்தியின் மொட்டை மாடியில் இருந்து ஓடுவதும், தெப்பமாய் தெருவில் நிறைந்திருந்த நீரில் குதிப்பதும்.

சற்றும் யோசியாது, பால்கனி வழியே குதித்து ஆதிசக்தியின் வீட்டுப் பின்பக்கம் இறங்கி, மீண்டும் பைப் மீது ஏறி மொட்டைமாடியை அடைந்து அந்த மர்ம நபர் ஓடிய திசையில் தானும் ஓடத் தொடங்கினான் யாஷ்.

இவன் சடாரென பால்கனியில் இருந்து குதித்தும் பதறிப் போன நிதர்ஷனா, “யாஷ் யாஷ் நில்லுங்க…” என்று கத்தியவள், நடுங்கிய நெஞ்சத்துடன் அவசரமாக ஆதிசக்தியின் வீட்டுக்கதவை தட்டினாள்.

பக்கத்து வீட்டிற்கு செல்லும்முன்னே முழுதாய் நனைந்து விட்டாள். அந்த அளவு மழைப்பொழிவு அதிகம் இருந்தது.

இதற்கு சற்று நேரம் முன்பு, தனது அறையில் இளவேந்தன் கோபத்தில் காய்ந்துகொண்டிருந்தார்.

“அந்தப் பொண்ணு உன்னை ஹர்ட் பண்றது எனக்குப் பிடிக்கல ஆதி” ஜன்னல் வழியே மழையை வெறித்திருந்தார்.

பதில் கூற தெம்பற்று ஆதிசக்தி தனது விரல்களை ஆராய்ச்சி செய்தபடி, “அவ புருஷனுக்கு சப்போர்ட் பண்றா… என்ன சொல்ல?” என இயல்பாய் பேச முயல, “அவன் உங்கிட்ட நேரடியா பேசிக்கட்டும். அவள் பேசுறது தான் பிடிக்கல. என்னால அவளை வரதராஜன் பொண்ணுன்னு மட்டும் தான் பார்க்க முடியுது ஆதி…” சொல்லும்போதே குரல் கரகரத்தது அவருக்கு.

கணவனின் வேதனைப் புரிய, “நிஜமா ரித்தியை கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தா நான் கண்டிப்பா வர சொல்லிருக்க மாட்டேன் இளா” எனத் தவிப்பாகக் கூற,

“அது எனக்குத் தெரியாதா ஆதி? அவள் அப்பனே ஒழுங்கு கிடையாது முதல்ல. அவனோட வண்டவாளமெல்லாம் தெரியாம இங்க வந்து நியாயம் பேசுறது தான் எனக்கு ஒப்பல” சொல்லும்போதே அவரது கண் கலங்கி இருக்க, ஆதியின் வருத்தத்தை உணர்ந்தவர் பின் தன்னை சமன்படுத்திக் கொண்டு, “அந்தப் பொண்ணை உன் பையனோட பொண்டாட்டியா பார்க்க முயற்சி பண்றேன். அப்படினா எனக்கு ஒன்னும் தெரியாது…” என்று தன்னைத் தானே நிதானப்படுத்தினார்.

“எனக்காக நீ இன்னும் எவ்ளோ தான் சாக்ரிஃபைஸ் பண்ணுவ இளா? எனக்கு உங்களை எல்லாம் ஃபேஸ் பண்ணவே குற்ற உணர்ச்சியா இருக்கு” ஆதிசக்தி கலங்கிப் போனார்.

“உனக்காக நான் எதையும் சாக்ரிபைஸ் பண்ணல ஆதி. உன்னைக் காதலிச்சேன். அப்பவும் இப்பவும் எப்பவும் அவ்ளோதான்” என்றவரின் கூற்றில் அதிகப்படியான அன்பே தெரிந்தது.

அதற்கு, தான் என்றும் தகுதியாளவளாய் இருந்ததில்லை என்ற உண்மை உள்ளுக்குள் குத்திக் கொண்டே இருக்க, கடந்த காலத்தில் இழைத்த பிழை வாழ்நாள் முழுமைக்கும் துரத்தி வருத்தியது.

அந்நேரம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டதில், இளவேந்தன் தான் விழித்தார்.

“என்ன உன் பையன் இன்னைக்கும் அம்மிக்கல்லு கேட்க வர்றானோ?” அவர் ஒரு மார்க்கமாகக் கேட்டதில், கண்ணீரை மீறியும் சிறிதாய் புன்னகைத்தார் ஆதிசக்தி.

இளவேந்தனே கதவைத் திறக்க, அங்கு பதற்றத்துடன் நின்றிருந்த நிதர்ஷனாவைக் கண்டு புருவம் சுருக்கினார். குடும்பத்தினர் அனைவரும் வரவேற்பறையில் உறங்கி கொண்டிருந்தனர்.

அத்தனை நேரமும் இருந்த மனவருத்தத்தை ஒதுக்கி வைத்தவர், “என்னமா இப்படி நனைஞ்சுருக்க? என்ன ஆச்சு? உள்ள வா முதல்ல” என அழைக்க,

“யாஷ் மழைக்குள்ள யாரையோ தேடி ஓடுறாரு மாமா. அவர் எங்க போனாருன்னு தெரியல” என்றவள் அழுகுரலில் நடந்ததைக் கூற அவருடன் சேர்ந்து அவர் பின்னே வந்த ஆதிசக்தியும் அதிர்ந்து போனார்.

“என்னமா சொல்ற…” எனப் பதறிய இளவேந்தன், “முதல்ல ஈரத்தை துடை. ஆதி பாரு…” என்று உத்தரவிட்டுவிட்டு வேகமாக மழைக்குள் அவரும் சென்றார்.

ஆதிசக்தி அவசரமாக துவாலையை எடுத்து வந்து, “ரித்தி… உனக்கு எதுவும் அடிபடலல” எனக் கேட்டபடி கொடுக்க, அவளுக்கோ பதில் அளிக்க கவனம் அங்கில்லை.

“தண்ணிக்குள்ள இறங்கி ஓடுனாரு அத்தை… கரண்ட் வயர் எதுவும் இருக்காது தான? ஏதோ அலர்ஜி வேற இருக்கு. அன்னைக்குலாம் மூக்குல இருந்து ரத்தம் வந்துச்சு. மழைத் தண்ணியோட சாக்கடைத் தண்ணி வேற கலந்துருக்கும்ல…” என ஏதேதோ பிதற்றியவளைக் கண்டு அவருக்கும் யாஷை எண்ணிப் பயம் வந்தது.

“எங்கயும் பவர் இல்ல ரித்தி. வந்துடுவான்” எனத் தனக்கும் சேர்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டவாறு, “ஈரத்தோட இருக்காத…” என அவரே அவளது முகத்தையும் தலையையும் துடைத்து விட எத்தனித்து “சிந்தா” என சத்தமாக அழைக்க, பேச்சு சத்தம் கேட்டு சிந்தாமணியுடன் கண்மணியும் வந்து விட்டாள்.

“என்ன அண்ணி ஆச்சு?” கண்மணி கேட்டும் நிதர்ஷனா வாசலையே தான் பார்த்திருந்தாள்.

“சிந்தா இவளுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு வா…” ஆதிசக்தி உத்தரவிட்டதும், சிந்தாமணி குடையை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்கு ஓடி, நொடிப்பொழுதில் உடையை எடுத்து வந்தவள்,

“அத்த… ரூம்ல லைட்டெல்லாம் உடைஞ்சுருக்கு!” எனப் பதற்றமாய் கூறினாள்.

கண்ணெல்லாம் கலங்கி விட்டது நிதர்ஷனாவிற்கு. அவர் வரட்டும் என்று ஆதிசக்தி தலையைத் துவட்டக் கூட தடை போட்டவளை செய்வதறியாமல் பார்த்தார்.

அந்த மர்ம நபரைத் தேடி ஓடிய யாஷ் பிரஜிதனிடம் பிடிபடாமல் ஓடினான் அவன்.

ஒரு கட்டத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் அவன் விழுந்து விட, புயலென அவனைச் சுற்றி வளைத்திருந்தான் யாஷ் பிரஜிதன்.

சுற்றிலும் இருள் கவ்வியிருந்தது ஆகினும் யாஷ் நெருங்கியதில் பயம் கொண்டு அவன் துப்பாக்கியை நீட்டினான்.

“தள்ளிப்போய்டு. இல்லைன்னா சுட்டுடுவேன்” என மிரட்ட, “தைரியம் இருந்தா ஷூட் பண்ணு மேன்!” என நெஞ்சை நிமிர்த்தி நின்றதில் எதிராளியின் கரங்கள் நடுங்கியது.

“சுட்டுருவேன் தள்ளிப்போ” தன்னை நோக்கி வந்த யாஷ் பிரஜிதனை மிரட்டினான் அந்தப் புதியவன்.

அவனை சட்டை செய்யாமல் முன்னோக்கி சென்ற யாஷ், அவன் கண்ணசரும் நேரம் துப்பாக்கி வைத்திருந்த கையைப் பிடித்து வளைத்து தனது கைக்கு துப்பாக்கியை இடமாற்றம் செய்திருந்தான்.

அதனைத் திகைத்துப் பார்த்த புதியவன், பயத்தில் மீண்டும் ஓட முயல, அவனது தலைமுடியைக் கொத்தாகப் பற்றிய யாஷ் பிரஜிதன், “யாருடா நீ? எதுக்காக ரித்தியைக் கொலை பண்ண பாக்குற?” எனக் கோபத்துடன் வினவ,

“அது… ரித்திகா இல்லைன்னு தெரியும் யாஷ். அந்தப் பொண்ணை இன்னைக்கு நீ காப்பாத்திடலாம். ஆனா எப்பவும் காப்பாத்திட்டே இருக்க முடியாது…” என்றதில் யாஷின் முகத்தில் திகைப்பு பரவியது.

அவளைப் பற்றிய அடையாளம் இவனுக்கு எப்படி தெரிந்தது? யாரிவன் என்ற சிந்தனை ஒரு பக்கம் ஓடினாலும், “யார் உன்னை அனுப்புனது?” எனக் கேட்டான்.

“எனக்குத் தெரியாது. விடுடா” என்றவன் தலைமுடியை விடுவித்துக் கொள்ள முயல, பிடியைத் தளர்த்தியது போல விட்டவன், மீண்டும் அவனது கையை வளைத்து முதுகோடு இறுக்கிப் பிடித்தான்.

வலியில் அலறிய புதியவன், யாஷிடம் இருந்து விடுபட போராடி, மற்றொரு கையால் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த பாக்கெட் கத்தியை எடுக்க முயல, அதனை உணர்ந்த யாஷ் அந்தக் கையையும் தனது பூட்ஸ் காலால் ஓங்கி எத்தினான்.

இந்தக் கலவரம் நடைபெறும் போதே இவர்கள் சென்ற திசையை நிதர்ஷனா மூலம் கேட்டுக் கொண்டு அந்தப் பக்கமே தேடி வந்தார் இளவேந்தன்.

யாஷ் யாருடனோ சண்டையிடுவதைக் கண்டு அதி வேகத்தில் அருகில் சென்றார்.

“யாருப்பா இவன்…” யாஷிடம் கேட்க, இருட்டில் அவரது குரலை வைத்து அடையாளம் கண்டுகொண்டவன், “இவன் தான் நி…” என ஆரம்பித்து “ரித்தியை மர்டர் பண்ண பார்த்தான்” என்றபோதே அவன் ‘ரித்தி இல்லை’ என்று ஏதோ கூற வர வாயிலேயே ஓங்கி குத்தினான் யாஷ்.

“உன்னை யார் அனுப்புனதுன்னு சொல்லப் போறியா. இல்ல இங்கயே சாகுறியா?” எனத் துப்பாக்கியை அவனது நெற்றிப்பொட்டில் வைத்தான்.

“எனக்குத் தெரியாது…” என்ற வார்த்தையை மட்டும் பல வித மாடுலேஷனில் கூறியவனைத் தலையிலேயே ஓங்கி அடித்து மயக்கம் அடையச் செய்தவனிடம், “இவனைப் போலீஸ்ல ஒப்படைக்கலாமா?” எனக் கேட்டார் இளவேந்தன்.

“வேஸ்ட். எந்தத் தகவலும் கிடைக்காது. இவனைப் பத்தி என் ஆளுங்களை வச்சு விசாரிக்கச் சொல்றேன்: என்றபடி தனது அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்க, சில நிமிடத்தில் ஆள்கள் அங்கு வந்தனர்.

“இவனைத் தூக்கிட்டுப் போய் நம்ம இடத்துல லாக் பண்ணுங்க” என்று அவனை அனுப்பி வைத்திட, இளவேந்தன் யாஷை திகிலாகப் பார்த்தார்.

‘இத்தாலில இருந்து வந்தவன், ஏதோ லோக்கல் ஏரியா ரௌடி போல அல்லவா நடந்து கொள்கிறான்’ அந்த இருளிலும் அவரது பார்வை தன் மீது படிவதை உணர்ந்தவன், விறுவிறுவென முன்னே நடந்தான்.

சில நொடிகளில் சரட்டென நின்ற யாஷ், “உங்க வீட்டு டெரஸ்ல இருந்து தான் அவன் ஷூட் பண்ணிருக்கான்? அங்க எப்படி அவன் வந்துருக்க முடியும்? அண்ட், இவனைத் துரத்திட்டு இந்த வழியா தான் போயிருப்பேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவனின் பச்சையும் மஞ்சளும் கலந்த விழி வீச்சு அந்த இருளிலும் கூர்மையாய் அவரைத் தாக்கியது.

சுண்டிப்போன முகத்துடன், “என்னைச் சந்தேகப்படுறியா யாஷ்?” என நேரடியாகக் கேட்டார் இளவேந்தன்.

“நான் உங்க யாரையுமே நம்பல. சோ என் சந்தேகவட்டத்துக்குள்ள எல்லாருமே தான் இருக்கீங்க. இன்க்ளூடிங் மை மாம்!” என்றவனை இறுகிய முகத்துடன் ஏறிட்டார்.

“அண்ட், உங்களுக்கு ரித்தியைப் பிடிக்கல ரைட்? வந்ததுல இருந்து நான் நோட் பண்ணேன்” என்றவனை திகைப்பாய் பார்த்தவர்,

“சுத்தியும் இருட்டு, மழைக்குள்ள பக்கத்து மொட்டை மாடில இருந்து குதிச்சு வந்துருந்தா கூட எங்களுக்கு தெரிஞ்சுருக்காது தான? நீ எந்த வழியா போனன்னு ரித்திட்ட கேட்டுட்டு தான் ஓடி வந்தேன். எனக்கு ரித்தியையும் அவ அப்பனையும் பிடிக்கலை தான். அதுக்காக யாரையும் கொலை செய்ய நினைக்கற அளவு நான் தரம் கெட்டு போய்டல யாஷ். அது உன் அப்பாவுக்கும், உன் மாமனாருக்கும் தான் கை வந்த கலை. இப்போ உனக்கும் நல்லா வருதே!” அவரது பார்வை அவனைக் குற்றம் சாட்டியது.

தோள் குலுக்களைப் பதிலாகக் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடந்தான் யாஷ் பிரஜிதன்.

இங்கு, மொத்த குடும்பமும் தூக்கம் கலைந்து எழுந்து விட்டது. நிதர்ஷனாவிற்கு நேரம் செல்ல செல்ல பயம் ஆட்டிப்படைத்தது.

“நான் போய் பாக்குறேன் அத்தை” என்றவளை வீட்டினுள் நிறுத்தி வைப்பதே பெரும் பாடாகிப்போனது ஆதிசக்திக்கு.

“தெரியாத ஊர்ல இருட்டுக்குள்ள எப்படிம்மா போவ? இளா அண்ணா போயிருக்காருல கூட்டிட்டு வந்துருவாரு” கிருஷ்ணவேணி சமன்செய்ய, “நான் போய் பாக்குறேன்” என அழகேசன் சட்டையை மாட்டினார்.

“நானும் வரேன் பெரியப்பா” நிதர்ஷனாவிற்கு கண்ணில் நீர் வழிந்தது.

அவளது தவிப்பு புரிய, அத்தனை நேரமும் அமைதியாய் இருந்த மகேந்திரனும் “துப்பாக்கி வச்சு சுட்டான்னு சொல்லிட்டு திரும்ப வெளில போறேன்னு சொல்ற. திரும்ப சுட்டா என்னாகுறது. அமைதியா இருமா. உன் புருஷன் போயிருக்கான்ல. ஆளைப் பிடிச்சுட்டு வரட்டும்” என்றதில், “ஒருவேளை அவரை சுட்டுட்டா?” நடுங்கிய குரல் அதில் அத்தனை கேவல்.

அதில் பதிலற்று அனைவரும் அமைதியாகி விட, சில நொடிகளில் தொப்பலாக நனைந்தபடி இரு ஆண்களும் வீட்டிற்கு வந்து விட்டனர்.

யாஷ் பிரஜிதனைக் கண்டதும் தான் நிதர்ஷனா மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினாள்.

ஓடிச் சென்று கட்டி அணைக்க உந்திய மனத்தினைக் கண்டு ஒரே கணம் அதிர்ந்தவள், அவனை எப்படி தான் அணைக்க இயலும்? என்ற நிதர்சனம் புரிய, அப்படியே நின்றாள்.

அவளைப் புருவம் இடுங்க பார்த்தபடி உள்ளே நுழைந்த யாஷ், “இன்னும் ஏன் ஈரத்தோட நிக்கிற ரித்தி?” என அதட்டிட, “நீ வராம அவள் கொஞ்ச நேரமா ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா யாஷ்” என்றார் ஆதிசக்தி.

அவளது சமைந்த பார்வை கண்டு அவனது விழிகளும் அவள் மீதே செயல்நிறுத்தம் செய்திருந்தது. அதில் தனது ஈரத்தை துடைக்க அவனும் மறந்து போனான்.

“நீ ஓகே தான?” அவன் கேட்டதும், தன்னிச்சையாய் தலையாட்டியவள் “இவ்ளோ நேரம் எங்க போன அரக்கா? நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா… யார் அவன்னு தெரிஞ்சுதா?” என்றவளின் கமறிய வார்த்தைகளின் வழியே அவளது படபடப்பும் புரிந்திட, அந்தப் புது பதற்றம் அவனுக்கும் புது இனிமையாய்!

அவள் கண்கள் கலங்கி நிற்பதை உணர்ந்து அவளை இலகுவாக்க, “இவ்ளோ நேரம் மழைக்குள்ள டான்ஸ் ஆடிட்டு இருந்தேன் கடன்காரி… கேள்வியைப் பாரு! அவன் ரன்னிங் ரேஸ்ல ஓடுற மாதிரி ஓடுனான். பிடிச்சு என் ஆளுங்ககிட்ட ஒப்படைச்சுட்டு வந்துருக்கேன்! வில் ஸ்ஸீ” என்றவனுக்கு இனியும் எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற எச்சரிக்கை உணரவு அதிகமாய் இருந்தது.

அவனை முறைத்து வைத்தவள், ஆதிசக்தியின் கையில் இருந்த துவாலையை வாங்கி, “முதல்ல தலையை துவட்டுங்க” எனக் கொடுக்க, அதனை வாங்கி அவள் முகத்தை துடைத்து விட்டான்.

இருவருக்கும் சுற்றி நிற்பவர்களின் மீது சிறு கவனமும் இருக்கவில்லை. இவர்களை அமைதியாய் பார்த்து விட்டு மகேந்திரன் தனது அறைக்குச் சென்று விட, ஆதிசக்தி அவசரமாக உள்ளே சென்று இரு துவாலைகளை எடுத்து வந்து இளவேந்தனிடம் ஒன்றை கொடுத்து விட்டு, “யாஷ் ஈரத்தோட நிக்காத” என அவன் தலையைத் துவட்ட வந்தார்.

அதனை உணர்ந்து கையால் துவாலையைப் பிடித்துக் கொண்டவன், அதனை வெடுக்கென பருங்கி நிதர்ஷனாவிடம் கொடுத்து, அவள் முன் குனிந்து நின்றான்.

தனது உடல்மொழி கொண்டே அவளைப் பணித்த ஆடவனின் செயலில் விழித்தாலும் தானாய் அவன் தலையைத் துவட்ட கரங்கள் உயர்ந்தது பாவைக்கு.

அவளது உயரத்திற்கு குனிந்திருந்தவனின் மூச்சுக்காற்று வெப்பமாய் அவளது நெற்றியைச் சுட, நிமிரத் தயக்கம் மேலிட விழிகளை முதன்முறையாக தாழ்த்திக் கொண்டாள்.

அவனது கலப்படக் கண்களை காணவே என்னவோ தடுத்தது.

ஆதிசக்தியின் வதனம் வாடிப் போனாலும், அவர்களது அன்னியோன்யத்தை ரசித்தார்.

கண்மணியும் சிந்தாமணியும் நமுட்டு நகைப் புரிந்தபடி உள்ளே சென்று விட, யாஷின் தலையைத் துவட்டிக் கொண்டிருந்த நிதர்ஷனாவிற்கு கண்ணை இருட்டியது.

“யா… யாஷ் கால் வலிக்குது” என முணுமுணுத்தபடியே அவன் மீது மயங்கிச் சரிய, அவளது கூற்று புரிந்து காலைப் உற்றுப் பார்த்தவனுக்கு திடுக்கிட்டது. உள்ளங்காலில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் குத்தி குருதி வழிந்திருந்தது.

இன்வெர்ட்டரில் சார்ஜும் குறைவாக இருக்க, விளக்கைக் குறைத்து ஒரே ஒரு சார்ஜர் எல். இ. டி விளக்கை மட்டும் எரிய வைத்திருந்தனர். அத்தனை பெரிய வரவேற்பறைக்கு அந்த வெளிச்சம் குறைவென்றாலும் முகம் பார்த்து பேச இயலும். அதனால் அந்த அரை வெளிச்சத்தில் அவள் காலில் இருந்து வந்த இரத்தத்தை யாரும் கவனிக்கவில்லை.

“ஓ ஷிட்!” எனத் தன் மீது சரிந்தவளைக் கையில் அள்ளிக்கொண்ட யாஷ் பிரஜிதன், “நிதா… லுக் அட் மீ!” என அவளது உண்மைப்பெயரைக் கூறிட, இளவேந்தனைத் தவிர யாரும் அவனது அழைப்பைக் கவனிக்கவில்லை.

ஆதிசக்தி, “அடக்கடவுளே! ரத்தம் நிறைய வருது யாஷ். அவளை உள்ள பெட்ல படுக்க வை. சீக்கிரம்” என்றதும் அவனும் உதறிய உடலை சமன்படுத்திக் கொண்டு அவளைக் கட்டிலில் கிடத்தினான்.

“கண்மணி” கிருஷ்ணவேணி பதற்றமாக அழைக்க, உள்ளே சென்ற இரு பெண்களும் அவசரமாக அங்கு வந்து நின்றனர். கண்மணி உடனடியாக முதலுதவிப்பெட்டியையும் அவளுக்கு ஒரு உடையையும் எடுத்து வந்து யாஷிடம் கொடுக்க, யாஷ் பிரஜிதன் அவளது உள்ளங்காலைப் பதம் பார்த்த கண்ணாடித் துண்டை, மெல்லமாக எடுத்தான்.

நல்லவேளையாக ஆழமாகப் பதியவில்லை என்றாலும் குருதி வீணாகி இருந்தது. இவனைக் காணாத பதற்றத்தில் அந்த வலியைக் கூட அவள் உணர்ந்திருக்கவில்லை எனப் புரிய, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் மென்முகத்தில் தனது பார்வையை ஆழப்பதித்திருந்தான் யாஷ் பிரஜிதன்.

காலுக்கு கட்டிட்டு முடித்தவனின் கரங்களும் நடுக்கம் கொண்டது. போன முறை அவளது கையில் அடிபட்ட போது அன்பை அதட்டலாக காட்டியவன், இப்போது தனது ஆழ்ந்த மௌனத்தில் காண்பித்தான். அவள் கொண்ட காயம் அவனது இதயத்தில் பெரும் பாரத்தை உருவாக்கியது.

கூடவே மற்றொரு யோசனையும், வரதராஜனின் எதிரிகளுக்கு இன்னுமே இவள் இங்கிருக்கிறது தெரியாது போக, பிறகெப்படி அவளைத் தாக்க இயலும்? அவர்களன்றி இவளைக் கொலை செய்யத் துணிவது யாராக இருக்க இயலும்? சேரியில் வளர்ந்த பெண்ணிவளுக்கு எதிரிகள் யார் இருக்கக்கூடும்? பெரும் குழப்பம் சூழ்ந்திருந்தது அவனுக்கு.

ஆதிசக்தியோ, “யாஷ் அவள் ட்ரெஸ்ஸ மாத்தி விடு. ஈரத்தோட இருக்குறது சேஃப் இல்ல. நம்ம டாக்டரை வர சொல்லிப் பாக்கலாம். இந்த மழைக்குள்ள அவரை முதல்ல எப்படி காண்டாக்ட் பண்றதுன்னும் தெரியல…” என வருந்தினார்.

அழகேசனோ, “நான் போய் கூட்டிட்டு வரேன் சக்தி… ஜீப்பை எடுத்துட்டு போறேன்” என வேகமாக வெளியேற, “நீ ட்ரெஸ் மாத்தி விடு” என்ற கூற்றில் லேசாய் திகைத்தான் யாஷ்.

அதுவும் ஒரே நொடி தான். பின் சட்டென இயல்பாகிக்கொண்டவனின் மாற்றத்தை அவனையே பார்த்திருந்த இளவேந்தன் கணித்து விட்டார்.

“கண்மணி” யாஷ் அழைத்ததும் வேகமாக முன்னே வந்தவளிடம், “இவளுக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணி விடு. நானும் போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்” என வேகமாக தனது வீட்டிற்குச் செல்ல, தமையன் தன்னிடம் பேசியதில் குதூகலமான கண்மணியும் சரி ஆதிசக்தியும் சரி அவன் நாசுக்காக தனது மனையாளுக்கு ஆடை மாற்றும் வேலையை தவிர்த்து விட்டு சென்றதை உணரவில்லை. ஆனால் இளவேந்தனின் நெற்றி மத்தி சுருக்கம் கண்டது.

உடையை மாற்றி விட்டு வந்தவன் கையோடு முடி காய வைக்கும் கருவியையும் கொண்டு வந்திருந்தான்.

இந்த மழைக்குள் மயங்கி இருப்பவளை தனது இருப்பிடத்திற்கு தூக்கிச் செல்வது பாதுகாப்பானதாக தோன்றவில்லை. தனது அறை முழுக்க கண்ணாடித் துண்டுகள் வேறு கொட்டிக் கிடக்கிறது.

நிதர்ஷனாவின் முடியைக் காய வைத்த யாஷ் பிரஜிதன், “எப்ப தான் இங்க பவர் வரும்?” என எரிச்சலுடன் கேட்டான்.

“மழை கொஞ்சம் நின்னுட்டாலும் சரி ஆகிடும் யாஷ். ரெண்டு நாளைக்குள்ள நின்னுடும்னு சொல்றாங்க…” என்ற ஆதிசக்திக்கும் அவன் வந்த நேரத்திலா இப்படி ஆகவேண்டுமென்று ஆயாசமாக இருந்தது.

சிறிது நேரத்தில் அழகேசனும் மருத்துவரை அழைத்து வந்திருந்தார்.

அவரும் அவளை சோதித்து விட்டு பயப்பட ஏதுமில்லை என வலி ஊசியையும் மாத்திரைகளையும் கொடுத்து விட்டுச் சென்றார்.

ஊசியின் விளைவால் மறுநாள் காலையிலேயே கண் விழித்த நிதர்ஷனாவிற்கு கால் வலி முகத்தைச் சுருக்க வைத்தது.

இரவு முழுக்க தூக்கமிழந்து நாற்காலியில் அமர்ந்து கட்டிலின் மீது காலை வைத்தபடி இரு விரலில் நெற்றியைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த யாஷ் பிரஜிதனுக்கு மனது ஏனோ நிம்மதியின்றி தவித்தது.

அவள் கண் விழித்ததும் தான் தனது நிலையை மாற்றியவன், “ஆர் யூ ஓகேடி?” எனக் கேட்க, தலையை உருட்டியவள் “நீங்க ஏன் உட்காந்துட்டே தூங்குறீங்க?” என்றபடி தனது காலில் கட்டிட்டு இருப்பதை பார்த்தாள்.

“இன்னும் கை காயமே முழுசா சரி ஆகல. இதுல அடுத்து ஒண்ணா… இப்படியே போனா உடம்பு முழுக்க கட்டு போட்டு தான் என் வீட்டுக்குப் போவேன் போல” எனப் பரிதாபமாகக் கூற, அவன் முகமே பாறையாய் இறுகிப் போனது.

குற்ற உணர்வா? குறுகுறுப்பா? அவனே அறியான்.

“என் மூலமா உனக்கு எந்தப் பிரச்சினையும் வரல நிதா. ஐ ஆம் சியூர். பட், இங்க உனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு பொறுப்பு நான் தான். இனி இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்” என்றவனின் குரலில் இரு முறையும் அவளைக் காயப்பட வைத்த இயலாமை வெடித்தது.

அவளோ வேகமாக அவனது வாயை மூடினாள்.

இரு விழிகளும் ஒன்றொன்று உரசிச் செல்லும் நேரம் வானத்தில் தோன்றிய மின்னல் சாளரம் வழியே பயணிக்க, இரு உள்ளங்களின் இடையேயும் சிறு மின்னல்.

வேகமாக கையைப் பின்னிழுத்துக் கொண்டவள், “என்னை ரித்தின்னு கூப்பிடுங்க யாஷ்… சந்தேகம் வந்துடப் போகுது” என்று கண்களை உருட்டி எச்சரிக்க, “ம்ம்” என்றவனின் நெஞ்சமும் அவளது அசைவுகளைக் களவாடிக் கொண்டிருந்தது.

“உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? அர்த்த ராத்திரியில எவனையோ தேடி இருட்டுக்குள்ள ஓடுறீங்களே… உங்களுக்கு ஏதாவது ஆகிருந்தா என்ன ஆகியிருக்கும். தெரு முழுக்க தண்ணி வேற தேங்கி இருக்கு, பாம்பு எதுவும் வந்துருந்தா…” பயம் அகலாது வினவினாள் நிதர்ஷனா.

“அதுக்குன்னு உன்னை ஷூட் பண்ண வந்தவனை தப்பிக்க விட சொல்றியா?” காட்டமாக வெளிவந்த வார்த்தைகளினூடே இருவரும் உணரா நேசத்தின் சாயல்.

அதில் அமைதி கொண்டவள், “எனக்காகவா அவனைப் பிடிக்க போனீங்க…” என விழி விரித்து ஆர்வமாகக் கேட்க, ஓர் கணம் அவன் அமைதி கொண்டான்.

“உனக்காக யார் அவனைப் பிடிக்க போனா? என் கேரக்டரை நான் மெயின்டெயின் பண்ணுனேன்” என்றான் ஏளனத்துடன்.

அவள் புரியாது விழிக்க, “ஆஸ் அ ஹஸ்பண்டா உன்னை ஷூட் பண்ண வந்தவனை அப்படியே விட்டுருந்தா இங்க எல்லாருக்கும் சந்தேகம் வந்துருக்கும் தான? அவனைப் பிடிச்சு அடி வெளுத்து, உன் காயத்துக்கு கட்டுப் போட்டு பதட்டமா இருந்தா தான நான் உன் ஹஸ்பண்ட் ரோலை சிறப்பா செய்ய முடியும். எப்படி உன்னை விட நல்லாவே நடிச்சேனா?” என அவளைப் போல தனது டி-ஷர்ட் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவன், முந்தைய நாள் அவள் பேசியதற்கு பழி தீர்த்துக் கொண்டான்.

அவனது பதிலில் இதுவரை எதற்கும் நொறுங்காத உள்ளமேனோ சில்லு சில்லாய் சிதறியது.

முணுக்கென கண்ணில் நீர் கோர்த்தது. ஏன்? எதற்கு என்ற காரணமறியாத பெரும் வலி ஒன்று நிதர்ஷனாவை ஆட்டிப்படைக்க, “உங்களுக்கு நடிக்கவா சொல்லித் தரணும்…” என அவனைப் பாராமல் கூறி விட்டு அங்கிருக்க இயலாமல் காயத்தை மறந்து விருட்டென எழ, உள்ளங்காலில் சுருக்கென வலி எழுந்தது.

அவள் மீண்டும் விழும் முன் அவளது இடையை சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்ட யாஷ் பிரஜிதன், “உன்னை விட நடிக்கல!” என்றான் குத்தலாக.

‘நான் ஒன்னும் நடிக்கல…’ என சொல்ல வந்தவள் வார்த்தைகளை தனக்குள் விழுங்கிக் கொண்டாள்.

நடிக்கவில்லை என்றால், அவன் மீது காட்டும் அன்பும் பரிவும் நிஜமென்று ஆகி விடுமே? அது நிஜமென்றால் ஏனிந்த அன்புப் பரிமாற்றமென்று மனசாட்சி கேள்வி எழுப்ப, எதற்கும் விடையளிக்க இயலா நிலையில் தொய்ந்து போனவளை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவன் மெல்லிடையில் சிறு அழுத்தம் கொடுக்க, அவ்வழுத்தம் தந்த இதத்தில் அவன் கைகளில் துவண்டாள் அவள்.

அன்பு இனிக்கும்
மேகா

Hi drs… ஊருக்கு வந்துட்டேன் இங்க எனக்கு நெட்வொர்க் பிராப்ளம் அதான் அப்டேட் குடுக்க முடியல. கமெண்ட் எதுக்கும் ரிப்ளை பண்ண முடியல சாரி drs. Next Monday chennai return anathum uds regular aa poduren next ud Nalaiku varum 🥳

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
27
+1
116
+1
3
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. pleaseஅரக்கனின் அன்பிலே update podunka please please