
ஒன்பது மணி வரை, இதயாம்ரிதாவை எங்கும் நகர விட்டானில்லை சத்ய யுகாத்ரன்.
ஐம்பது மிஸ்ட் கால் தாங்கிய அலைபேசியை பரிதாபமாக ஏறிட்ட இதயாம்ரிதாவின் உதட்டுச் சாயம் சத்யாவின் இதழ்களில் நிரம்பியிருக்க, டிஸ்ஸியூ கொண்டு அதனைத் துடைத்து வழித்தவன், அவளைத் தாபமாய் ஏறிட்டான்.
“உன் பார்வையை மாத்து மேன். உன் டியூட்டி ஓவர்!” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு வேக நடையுடன் வெளியேறினாள்.
சட்டென நிகழ்வுணர்ந்தவனுக்கு தன் மீதே எரிச்சல் தோன்றியது. சற்று பிசகினாலும் அவள் புறம் மனம் சறுக்கி விடும் அபாயம்!
இதற்கு தானே, ரசிப்பையெல்லாம் மன ஆழத்தில் மூட்டைக் கட்டி விட்டு, முழுக்க முழுக்க சினத்தில் மட்டுமே அவளை நாடுகிறான். அந்த சினத்தின் சின்னமாய் அவளுடன் முழுதாய் கூடிட, உணர்வுகள் துடித்தாலும் கோபத்தின் வெளிப்பாடாய் அந்தக் கூடல் நிச்சயம் இருக்காதென்பது மட்டும் அவனுக்கு உறுதி.
இத்தனை நடந்த பிறகும், ஒட்டு மொத்த வாழ்க்கையையும் இழந்த பிறகும், அவள் தன்னைத் துச்சமென மறந்து இன்னொருவனைத் திருமணம் செய்த பிறகும் கூட ஏனிந்த மனம் தான் அலைபாய்ந்து அலைக்கழிக்கிறதோ!
அந்நேரம் அவனது அலைபேசி அதிர, எதிர்முனையில் ஸ்ரீராம் தான் பேசினான்.
“என்னடா… முழு நேர மாடல் ஆகிட்டியா என்ன?” அவனிடம் நக்கல் தெறித்தது.
“ம்ம்! ஆகுறாங்க… நல்லா வாயில வந்துட போகுது. சரி பிசினஸ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு? உன் வாய்ஸ் ஏன் டல்லா இருக்கு?” என சடுதியில் நண்பனின் மனதை அறிந்து கொண்டவனை எப்போதும் போல வியப்பாகவே எண்ணினான் ஸ்ரீராம்.
அவனது சிவந்த இதழ்கள் மென்மையாய் புன்னகைக்க, “இன்னைக்கு ஒரு டீலிங் சொதப்பிடுச்சுடா…” என்றான் சோகமாக.
“அப்பாட்ட திட்டு வாங்குனியா?” கனிவாய் சத்யா கேட்க,
“அவர் திட்டுனா திட்டிட்டுப் போகட்டும். மிஸ் யு பேட்லி மச்சி. கூடவே இருந்து பழக்கி விட்டுட்டடா. இப்ப தனியா இருக்க என்னவோ மாதிரி இருக்கு” என உள்ளார்ந்த அன்புடன் வருந்தினான்.
“டேய்… மொட்டையா பேசாதடா. வெளில யாராவது கேட்டா, தப்பா நினைச்சுக்கப் போறாங்க” சத்யா கிளுக்கென சிரிக்க,
“உனக்கு என்னப்பா, உன் எக்ஸ் ஆளோட சரசம் பண்ணுவ. நானோ ஒரு முரட்டு சிங்கிள். ஹ்ம்ம்! நமக்கு எக்ஸும் இல்ல. எதிர்கால சிக்கலும் இல்ல. வாழ்க்கை ஒரே பிளாட்டா போகுது மச்சி…” என்று வெகுவாய் பீல் செய்தான்.
“குடிச்சுருக்கியா?”
“ச்சே! நான் குடியை நிறுத்தி பல மாசம் ஆச்சுடா” என்றபடி கையில் இருந்த பீரை ஒரு மிடறு விழுங்கினான்.
“டேய்ய்ய்… அடி வெளுக்கப் போறேன் உன்ன” சத்யா அதட்டியதில்,
“நீ இல்லாத சோகத்தை பீரால ஆத்திட்டு இருக்கேன் மச்சி. உனக்கு என்மேல பாசம் நேசமே இல்லைல…” உதட்டைப் பிதுக்கி குடிபோதையில் உளறியவனை எண்ணி சிரிக்கவே தோன்றியது சத்யாவிற்கு.
“அப்பாகிட்ட திட்டு வாங்கிட்டு இருக்காத. நான் வர்ற வரைக்கும் அமைதியா இருந்து தொலைடா…” என்றதற்கு,
“மிஸ் யூ மச்சி” என்று வாய் உளற கூற, “ம்ம் மிஸ் யூ மிஸ் யூ! தலையெழுத்து காலா காலத்துல கல்யாணம் பண்ணுடான்னா கேட்குறானா…” என்று சலித்துக் கொண்டவனுக்கு வாழ்வில் இருக்கும் ஒரே பிடிப்பு ஸ்ரீராமின் நட்பு மட்டுமே!
அவன் மட்டும் இல்லையென்றால், எப்போதோ எங்கோ ஒரு மூலையில் அனாதைப் பிணமாக்கப்பட்டிருப்பான்!
பழைய நிகழ்வில் கண்கள் பனித்தது. சாதி, மதம், அந்தஸ்து, படிப்பு, வேலை, பின்புலம் என எதையும் பாராமல் கிடைத்ததல்லவோ அவன் நட்பு.
கிட்டத்தட்ட நடைப்பிணமாக இருந்தவனுக்கு மறு உயிர் கொடுத்ததும் அவனது அன்பு தான்.
கண்ணைச் சிமிட்டித் தன்னை நிதானித்துக் கொண்டவன், பின் ஸ்ரீராமின் உதவியாளருக்கு அழைத்து நடந்ததை அறிந்து கொண்டான்.
எப்போதும் போல வாடிக்கையாளரிடம் ஸ்ரீராம் லூஸ் டாக் விட, அதில் கோடிக்கணக்கில் அவனது ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்திடம் டீலர்ஷிப் வைத்திருக்கும் வாடிக்கையாளர் டீலை கேன்சல் செய்து விட்டதில், சத்யாவே அவருக்கு போன் செய்து பேசி சமாதானம் செய்தான்.
அடுத்த நிமிடம் ஸ்ரீராமின் தந்தை ரவிச்சந்திரனிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ப்பா…”
“உன்னை அடிக்க போறேன் படவா… அவன் செய்ற தப்ப அவனே தான் சரி பண்ணனும். நீ எதுக்கு செய்ற?” உரிமையாய் கடிந்து கொண்டார்.
“விடுங்கப்பா. இவ்ளோ வருஷம் கரெக்ட்டா தான ஹேண்டில் பண்ணுனான். நான் இல்லைன்னதும் கொஞ்சம் கொலாப்ஸ் ஆகிட்டான் போல…” என்றதும், சற்றே நிதானித்தார்.
“உண்மை தான் சத்யா. நீ இல்லாம வீடே நல்லாயில்ல. உன்னை அனுப்புனது தப்போன்னு அப்ப அப்ப தோணுது. ஸ்ரீராம்கும் நீ போனது பிடிக்கலை தான். என் சுயநலத்துக்கு உன்னை யூஸ் பண்ணிக்கிறேன்னு சொல்றான்…” என்றான் வருத்தமாக.
“ப்பா… என்ன பேசுறீங்க. ராம்குமாரோட பிராண்டை அழிக்கணும்ன்றது உங்க ஆசை. அவரோட ஆசை பொண்ணுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கணும்னு என் ஆசை. சோ இதுல என்னோட சுயநலமும் இருக்கு…” என அழுத்தமாய் உரைத்தான்.
“ஆனா ராம்குமாரோட ஒரிஜினல் ப்ராண்ட் விஷால்ட்ட தான இருக்கு?”
“ம்ம்… விஷால்ட்ட தான் இருக்கு. அவனும் நல்லாவே ரன் பண்ணிட்டு இருக்கான். டாப் ப்ராண்ட் ஆச்சே. பட் பிரான்ஸ்ல நடக்குற காஸ்மெட்டிக் எக்சிபிஷன்க்கு அவனோட ப்ராடக்ட் இருக்காது. இருக்க விட மாட்டேன்…
அண்ட் மோர் ஓவர், விஷால் நிவோரான்ற பிராண்டை அவனுக்கு சொந்தமாக்கிக்கிட்டான். அஃப்கோர்ஸ் ராம்குமாரோட ஐடியாவோட அதுல அவனோட ஐடியாவை இன்ஃபியூஸ் செஞ்சு தான், சில வருஷங்களா பிசினஸ் ரன் பண்ணிருக்கான். ராம்குமாரோட ஒரிஜினல் குவாலிட்டியை விட அவன் ஐடியால இன்ஃபியூஸ் செஞ்சது கம்மி குரோத் தான். ஆனாலும் அந்த நம்பர் ஒன் பொசிஷன் கிடைச்சது அந்த ப்ராண்ட்க்கு தான். இப்ப ராம்குமாரோட ப்ராண்டா இல்லாம விஷாலோட ப்ராண்டா அது முழுக்க மாறுனதே அவனோட பலவீனம்னு அவனுக்குப் புரியல. சீக்கிரம் புருஞ்சுக்குவான்.
ராம்குமாரோட ஒரிஜினல் ஐடியா, அதாவது உங்ககிட்ட இருந்து ஒரு காலத்துல திருடப்பட்ட ஐடியால முழுக்க முழுக்க குவாலிட்டியா உருவாக்குறது, இதயா தான். அவளுக்கு அதுல எக்ஸ்டரா இன்ஃபியூஸ் பண்றதுல விருப்பமில்ல. மே பி அது கூட அந்த விஷாலுக்கும் இவளுக்குமான ப்ராப்ளமா இருந்துருக்கலாம். அது அவங்க பிரச்சினை…
இப்ப நம்ம இந்த ப்ராண்டை உங்களுக்காகவும், அவளை எனக்காகவும் ஒரு அடி அடிச்சு எழ முடியாம செஞ்சுட்டு, அங்க ஓடி வந்துடுறேன். அப்பறம், முதல் வேலையா அந்தப் பையனுக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்கப்பா. முரட்டு சிங்கிள்னு சொல்லி என்னை வெறுப்பேத்துறான்…” எனத் தீவிரத்துடன் ஆரம்பித்து, குறும்பாய் முடித்து வைத்தான்.
இந்தச் சில நாள்களில் யாரை எப்படி அடிக்க வேண்டுமென தெளிவாய் அவன் போட்ட திட்டத்தையும் சேகரித்த விஷயங்களையும் எண்ணும்போது எப்போதும் போல சபாஷ் போடவேண்டுமென்றே தோன்றியது அவருக்கு.
“உன் பிளானிங்ல எனக்கு டவுட்டே இல்ல. நீ வா… உனக்கும் சேர்த்து பொண்ணு பார்த்து ரெண்டு பேருக்கும் ஒண்ணா தான் கல்யாணம் நடத்துவேன்” என்று உறுதியாய் கூறியதில் அதற்கு மட்டும் இலாவகமாக பதில் கூறாது அழைப்பைத் துண்டித்து விட்டான்.
ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்து விட்டவனின் பின்னால் நிழலாடியது. விதுரன் தான் நின்றிருந்தான்.
அவனைத் திரும்பி பாராது எங்கோ வெறித்த சத்யாவிடம், “ஒரு தடவை வீட்டுக்கு வாங்கண்ணா” என்றான் தவிப்பாய்.
“எந்த வீடு விது… அங்க இருக்குறவங்களைப் பொறுத்தவரை நான் என்னைக்கோ செத்துட்டேன். செத்தவன் திரும்பி வரப்போறதில்லை…” அத்தனை வலி அவனது வார்த்தைகளில்.
விதுரனுக்கு கண்ணீர் கன்னங்களை நனைத்தது. “ப்ளீஸ் அண்ணா, அவங்க மேல தான கோபம். நான் என்ன செஞ்சேன்?” அழுகுரலில் அவன் கேட்க,
“என் சாபம் உன்னையும் தொடர வேணாம் விதுரா…” என்ற சத்யாவின் விழிகள் இப்போது கலங்கிப் போயிற்று.
“அண்ணா…” அவனைப் பின்னிருந்து அணைத்து தோளில் சாய்ந்து கொண்டவன், “உங்ககூட இருக்குறது சாபமா இருந்தாலும் பரவாயில்ல. எனக்கு திரும்ப நீங்க வேணும்ண்ணா என் அண்ணனா… சரி என்னை விடுங்க. பெரியம்மா பத்தி எதுவும் கேட்க மாட்டீங்களா?” என்றான் ஆற்றாமையாக.
“அம்மாவுக்கு முட்டி வலிக்கு, நீங்க ரெகுலரா போற டாக்டர்கிட்ட சொல்லி, சர்ஜரி பண்ண ரெகமெண்ட் பண்ணிருக்கேன். அது ரொம்ப பயப்படுற மாதிரி சர்ஜரியும் இல்ல. மூட்டு தேய்மானம்னால, மூட்டுல ஒரு ஊசி போடுவாங்க. அது அவங்களுக்கு வலியை கண்ட்ரோல் பண்ணும். நீ அவங்களை ஒத்துக்க வச்சு, எப்படியாவது அதை பண்ண வச்சுடு. இப்போ எல்லாம் கோவிலுக்கும் வீட்டுக்கும் போக கூட நடக்க கஷ்டப்படுறாங்க.”
“சித்தப்பாவை ரொம்ப நேரம் கடைல இருக்க விடாத. இப்போல்லாம் மளிகை கடையை நைட்டு 11 மணி வரை திறந்து வச்சிருக்காரு. அந்த ஏரியால, ரவுடிசம் வேற அதிகமா இருக்கு. யார்கிட்டயும் வம்பு வளர்க்க வேணாம். அவருக்கு வேற சட்டுன்னு கோபம் வரும்”
“சித்திக்கு நாளைக்கு சுகர் செக் பண்ணனும். கூடவே பிபியும் செக் பண்ணிக்க. இப்போல்லாம் அடிக்கடி மயக்கம் வர்ற மாதிரி பீல் பண்றாங்க போல… கோவில்ல கூட தலையைப் பிடிச்சுட்டே உக்காருறாங்க.”
“அத்தைக்கு ஸ்வேதா பத்துன கவலை தான். அவள் அவளோட மாடலிங் பீல்டை விட்டுட்டு திரும்பி வர மாட்டான்னு அவங்களுக்குப் புரியாது. புரிய வைக்கவும் முடியாது. அவங்க கூட யாராவது இருந்துட்டே இருங்க. முகமே சரி இல்ல” என அவர்கள் வீட்டு நடப்பினை அப்படியே கூறியவனைத் திகைப்பு மாறாது பார்த்தான் விதுரன்.
தளும்பும் அன்பின் எதிரொலியாக இந்தப் பிரிவின் வலி அவனை ஊசியாய் குத்தியது.
“எங்களை வாட்ச் பண்ணிட்டே தான் இருக்கீங்களா அண்ணா…?”
“நான் தான் அந்த வீட்டுப் பையன் இல்லன்னு ஒதுக்கி வச்சாச்சு. நான் அப்படி ஒதுக்கி வைக்க முடியாதே விதுரா. அது என் குடும்பமாச்சே!” தழுதழுத்த குரலில் உடைந்த தமையனைக் கண்டு உள்ளம் ஊமையாய் அழுதது.
மேலும் அங்கு நிற்க இயலாமல் சத்யா கிளம்பி விட, விதுரன் தங்களது மகிழ்வான தருணங்களை நினைவில் மீட்டினான்.
——
“சித்தி… லேட் ஆச்சு!” சட்டையின் கைப்பகுதி பட்டனை போட்டபடி தரையில் பாயை விரித்த சத்ய யுகாத்ரனிடம் ஹாட் பாக்ஸை கொடுத்தார் கீர்த்தனா. விதுரனின் தாய்.
பொங்கல் மணம் அவன் நாசியை நிறைக்க, “உங்க கை வண்ணமே வேற லெவல் சித்தி” என உண்ணாமலேயே பாராட்டைத் தெரிவிக்க, அழகாய் புன்னகைத்தவர், “ஐஸ் வைக்காத சத்யா” என சிணுங்கினார்.
அந்நேரம் மகனை முறைத்தபடி தட்டை எடுத்து வந்த மாலதியைக் கண்டு “அட அம்மா நீங்க செஞ்ச தட்டும் நல்லாருக்கே” என்று கேலி செய்ய கீர்த்தனா வாய்பொத்தி சிரித்தார்.
“உன் சித்தி செஞ்சா மட்டும் எவ்ளோ லேட்டானாலும் சாப்பிட்டுப் போறது. நான் செஞ்சா எஸ்கேப் ஆகுறது” எனப் போலியாய் கோபம் கொண்டார்.
“அச்சோ நீங்க செஞ்சா நான் என்னைக்காவது சாப்டாம இருந்திருக்கேனா. ஒரே ஒரு தடவ எக்ஸாம்கு லேட் ஆச்சுன்னு போயிட்டேன்.”
“நல்லா சமாளி.” அவன் தலையில் குட்டு வைத்தவர், “சரி நீஉக்காந்து சாப்பிடு…” என்றதும், “அப்பா சித்தப்பாலாம் எங்கமா?” எனக் கேட்டபடி பாயில் அமர்ந்தான்.
“மளிகை கடைய பெருசாக்க அப்பா லோன் வாங்கி தரேன்னு உன் சித்தப்பாவை கூட்டிட்டுப் போயிருக்காரு” என்றபடி அவனது தட்டில் பொங்கலை வைக்க, கீர்த்தனா சாம்பாரை ஊற்றினார்.
“விதுரா… சாப்பிட வா!” என்றதும் படித்துக் கொண்டிருந்த விதுரன் ஓடி வந்து விட்டான்.
கீர்த்தனா அவனை முறைத்து, “இவ்ளோ நேரம் சாப்பிட சொன்னப்ப, படிக்கணும்னு சொன்ன?” என்றிட,
“அண்ணா கூட சாப்பிடலாம்னு வெய்ட் பண்ணேன்மா…” என்றவன் பள்ளி பயின்று கொண்டிருந்தான்.
சத்யாவின் அருகில் அமர்ந்ததும், முதல் விள்ளலை எடுத்து தம்பிக்கு ஊட்டி விட்டான்.
கூடவே, “அத்தை ஸ்வேதா எல்லாம் எங்க?” எனக் கேட்க,
மாலதி “அதை ஏன் கேக்குற. ஸ்வேதாவுக்கும் அண்ணிக்கும் காலைலயே சண்டை… அவள் ஏதோ மாடலிங் பண்ண போறேன்னு சொன்னாளாம். அதுக்கு அண்ணி அடிச்சுட்டாங்க… அவள் ரூமுக்குள்ள உக்காந்து அழுதுட்டு இருக்கா. கூப்பிட்டாலும் வர மாட்டுறா. அண்ணி மனசு சரி இல்லன்னு கோவிலுக்குப் போயிருக்காங்க” என்றார் பெருமூச்சுடன்.
“இதுல என்னமா இருக்கு. அவளுக்குப் பிடிச்சதை அவ செஞ்சுட்டுப் போகட்டுமே! இதை முன்னாடியே சொல்லிருக்கலாம்ல…” எனக் கடிந்தவன், “ஸ்வே” என சத்தம் கொடுக்க, புயலாய் கதவைத் திறந்து வெளியில் வந்தவளின் முகம் அழுது அழுது வீங்கிப் போயிருந்தது.
மஞ்சள் நிற சுடிதாரில் இன்னுமாக மின்னியது அவளது பொன்னிறம். பத்தொன்பது வயது பருவச்சிட்டு. மாடலிங் துறையில் சாதித்தே தீர வேண்டுமென்ற வெறி, அவளது நடுத்தர நிலையை எல்லாம் புறந்தள்ளியது.
“ஏன் இப்படி அழுதுருக்கமா…” கீர்த்தனா வருத்தத்துடன் கேட்க, “நான் யார்கிட்டயும் பேச மாட்டேன்” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“எங்களுக்கு தெரியாது. நீயாவது உன் மாமன்காரனாவது…” என்று இருவரும் உள்ளே நகர,
“நீ இங்க வந்து உக்காரு ஸ்வே” எனக் கனிவாய் அழைத்தான் சத்யா.
முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு அவனுக்கு மறுபுறம் அமர்ந்து கொண்டவள், “மாமா… நான் மாடலிங் பண்ணனும்” என்றாள் அடமாக.
“நீ முதல்ல சாப்பிடு” என்று அவளுக்கும் ஒரு வாய் கொடுக்க, அதனை மறுக்காமல் வாங்கி கொண்டவள்,
“ப்ளீஸ் மாமா… ஸ்கூல் காலேஜ்ல எல்லாம் நான் என்ன ட்ரெஸ் போட்டாலும் அழகா இருக்கேன்னு சொல்லிருக்காங்க தெரியுமா. மாடலிங் காம்பெடிஷன்ல எல்லாம் பார்ட்டிசிபேட் செஞ்சு எத்தனை ப்ரைஸ் வாங்கிருக்கேன்னு உங்களுக்கே தெரியும்ல. இப்ப இதை என் கேரியரா சூஸ் பண்ண கூடாதுன்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன்” என அழுகும் குரலில் கூறினாள்.
“நீ சூஸ் பண்ணிருக்குற பீல்டு அப்படி ஸ்வே. அதான் அத்தைக்கு பயம் வந்துருக்கும்” சத்யா சமாதானம் செய்ய,
“ஏன் இந்த பீல்டுலாம் பணக்காரங்களுக்கு மட்டும் தானா?” மூக்கை உறிஞ்சியபடி அடுத்த விள்ளலைக் கேட்டு வாங்கினாள்.
மறுபுறம் அவளை முறைத்த விதுரன், “அண்ணா எனக்கு குடுங்க” என்று வாயைத் திறக்க, புன்னகையுடன் இருவருக்கும் கொடுத்தவன், “பணக்காரங்களுக்கு மட்டும்னு எந்த பீல்டும் இல்லடா. உன்னோட சேஃப்டி முக்கியம்ல. மீடியான்னு போய்ட்டா, நிறைய பிரஷரை ஹேண்டில் பண்ணனும். சிலர் வேணும்னே பாலிடிக்ஸ் பண்ணுவாங்க. சிலர் தப்பா நடந்துக்க முயற்சி பண்ணலாம். உன்னால எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண முடியுமா?” என்று பொறுமையாய் விளக்கினான்.
“அதெல்லாம் நான் ஹேண்டில் பண்ணிப்பேன். அப்படியே ஏதாவது பிரச்சினைன்னா உங்ககிட்ட வந்து சொல்லப்போறேன்” என்றவள் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையில் கர்வம் மிளிர்ந்தது ஆடவனுக்கு.
“சரி… முதல்ல சின்ன சின்னதா ட்ரை பண்ணு. அதுல உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் பிளஸ் பீல்டை அனலைஸ் பண்ணிட்டு அடுத்து பெரிய லெவல்ல ட்ரை பண்ணலாம். சரியா” என்றதுமே அவளது முகம் பளிச்சிட்டது.
“நிஜமாவா மாமா. ஐயோ தேங்க்ஸ் தேங்க்ஸ்…” என்றவள் சட்டென இருண்டு, “ஆனா அம்மாவும் சின்ன மாமாவும் என்னைத் திட்டுவாங்களே” என்றாள் பாவமாக.
“அவங்ககிட்ட நான் பேசிக்கிறேன். ஓகேவா” என்றதும், “ஹை… என் செல்ல மாமா” என அவன் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் துள்ளிக் குதித்திட,
விதுரனோ ஏதோ யோசனையுடன், “அண்ணா மாடலிங்னா, நல்லாருக்குற ட்ரெஸ கிழிச்சு விட்டுட்டு நடப்பாங்களே அதுவா?” என சந்தேகம் கேட்டதும், “டேய் அதிகப்பிரசங்கி…” என்று ஸ்வேதா முறைத்ததில் சத்ய யுகாத்ரன் வாய்விட்டு நகைத்தான்.
ஆனால், அதன்பிறகு அவனது அத்தை நீலாவையும் சித்தப்பா தியாகுவையும் சமன்செய்ய தான் சிரமமாகிப் போனது.
“என்ன தம்பி நீ… இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருமா. அது தான் சின்ன புள்ள எதுவோ சொல்லுதுன்னா நீயும் சப்போர்ட் பண்ணிட்டு இருக்க” அதிருப்தியாக உரைத்தார் தியாகு. விதுரனின் தந்தை. சற்றே முன்கோபக்காரர். அதனால் அவரது பிரியம் கூட சில நேரம் மற்றவர்கள் பார்வைக்கு கண்டிப்பாகவே தெரியும்.
சத்யாவின் தந்தை சீனிவாசன் தான் வெகு அமைதியானவர். எதையும் நிதானமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர். அவரது பண்பு அப்படியே சத்யாவிற்கும் வந்திருந்தது.
“அவள் ஆசைப்படுறாள்ல சித்தப்பா. ஒருதடவை ட்ரை பண்ணட்டுமே” என மெதுவாக சமாதானம் செய்ய, நீலாவோ “போ சத்யா. நீ நல்லா நாலு அடி அடிச்சு அவளுக்கு புத்தி சொல்லுவன்னு பார்த்தா… எங்களை சரிக்கட்டிட்டு இருக்கியேயா” என வருத்தம் கொண்டார்.
“இல்ல அத்த. நீங்க பயப்படுற அளவு அதுல ஒன்னும் இல்ல. டீசண்ட்டா மாடலிங் பண்ற எத்தனையோ பொண்ணுங்க இந்த பீல்டுல நல்லா வந்துருக்காங்க. அவளும் இதுல கரெக்ட்டா இருப்ப. அப்படித்தான ஸ்வே” எனக் கேட்டவனின் பார்வையிலும் குரலிலும் கண்டிப்பும் கட்டளையும் ஒருங்கே தெறித்தது.
‘எல்லை மீறி உடை உடுத்தி மாடலிங் செய்யக்கூடாது’ என்பதே அவனது கட்டளை எனப் புரிய, “நான் கரெக்ட்டா இருப்பேன் மாமா. பெரிய மாமா மேல ப்ராமிஸ்” என்று குறும்பாய் சீனிவாசனை கோர்த்து விட, “ஏய் வாலு” என்று சீனிவாசன் போலியாய் முறைத்தார்.
மாலதி சிரிப்பை அடக்கிக்கொண்டு, மகனைப் பார்க்க அவன் இரு பெரியவர்களையும் சமன்செய்ய இயலாமல் திணறுவதைக் கண்டு, “தம்பி…” என்று தியாகுவை அழைத்தார்.
“விடுப்பா. அவளுக்குப் பிடிச்சதை அவள் செய்யட்டும். இதுல நல்லா வந்தா நமக்கும் பெருமை தான. அவளுக்கு எந்த பிரச்சினையும் வராம சத்யா பாத்துப்பான். அப்படியே இது சரி வராதுன்னு தோணுனா, அவளே வந்துடுவா” என்று மருமகளின் மீதிருக்கும் நம்பிக்கையில் மொழிய, அவள் ஆர்வமாக தலையாட்டினாள்.
அண்ணியின் சொல்லுக்கு உடனே கட்டுப்படுபவர் போல, “சரிங்க அண்ணி. நீங்க பார்த்துக்கங்க…” என்று உடனே ஒப்புக்கொண்டார்.
பொதுவாய் அவரது கூற்றுக்கு மறுப்பு கூறுவதில்லை மாலதி. வெகு சில விஷயங்களில் மட்டுமே அபிப்ராயம் கூறுவார். தான் கூறினால் தியாகு உடனே ஒப்புக்கொள்வார் என்று அவருக்குத் தெரியும். ஆனால், தியாகுவின் மீதிருக்கும் மரியாதையில் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவதில்லை.
அவர் எடுக்கும் எந்த முடிவானாலும் குடும்பமே கட்டுப்படும். அன்பும் மரியாதையும் கலந்த கட்டுப்பாடு அது!
“ஹே ஸ்வே! அப்போ ஃபர்ஸ்ட் போட்டோ உன்னை நான் எடுக்குறேன்…” என்று அவனுக்காக சத்யா வாங்கி கொடுத்த கேமராவை எடுத்து வந்தான்.
இந்த ஹை டெக் கேமராவின் விலை பல ஆயிரங்கள். இதனை வாங்கும்போது கீர்த்தனா சத்யாவைக் கடிந்து கொண்டார்.
“சொல்ல சொல்ல கேட்காம, காலேஜுக்குப் போயிட்டு பார்ட் டைமா வேலையும் பார்த்து நம்ம கடையையும் பார்த்து சேர்த்து வச்ச காசுல உனக்கு ஏதாவது உருப்படியா வாங்கிக்கலாம்ல. இவனுக்கு இந்த கேமரா அவசியமா?” என்று.
“அவன் அழகா போட்டோ எடுக்குறான் சித்தி. அவனோட கலெக்ஷன்ஸ் எல்லாம் ரொம்ப யூனிக்கா இருக்கு. இது அவனுக்கு பேஷனா இருக்கட்டும். இதுக்காக படிப்பை விட மாட்டான்…” என்று சமாதானம் செய்திருந்தான்.
தமையனின் பேச்சைத் தட்டாது விடுமுறை நாள்களில் புகைப்படங்கள் மீது காதல் கொள்பவள், மற்ற நாள்களில் சிரத்தையாகப் படிப்பான். அதனால், வீட்டாருக்கும் மறுக்க இயலவில்லை.
அதிலும் தமையனை புகைப்படம் எடுப்பதென்றால், அவனுக்கு கொள்ளைப்பிரியம்.
“நீங்க செம்ம ஹேண்ட்ஸம் அண்ணா. என் ஸ்கூல்ல எல்லாரும் உங்களுக்கு ஃபேன் தெரியுமா?” என தலையை ஆட்டி பெருமையடித்துக் கொள்வான்.
அதற்கு கண்ணோரம் சுருங்கப் புன்னகைக்கும் சத்ய யுகாத்ரன், “என்னை வச்சு நீ பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கியா” எனத் தலையைக் கோதி விட்டுச் செல்வான்.
அன்பால் நிறைந்த கூடு. அந்தக் கூட்டைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்களின் மீது ஆத்திரமும், தான் இழந்த குடும்ப நிம்மதியை எண்ணி கண்ணீரும் மட்டுமே விட முடிந்தது விதுரனால்.
எண்ணத்திற்கு கடிவாளமிட்டு கண்ணைத் துடைத்தபடி வெளியில் வந்தவனை கையைக் கட்டிக்கொண்டு முறைத்திருந்தாள் பூமிகா.
அவளைக் கண்டு சன்னமாக அதிர்ந்தவன், தலையைக் குனிந்து கொள்ள, இருவரும் அலுவலகத்திற்கு வெளியில் இருந்த சின்னப் பூங்காவினோரம் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தனர்.
“சத்யா சார் உன் அண்ணாவா? காட்டத்துடன் பூமிகா வினவ, அவன் கண்கள் மீண்டும் கலங்கிற்று.
“ஏண்டா எங்ககிட்ட சொல்லல?” ஆதங்கம் மிக கேட்டவளிடம்,
“ப்ச்… அண்ணா இங்க வருவாங்கன்னு எனக்கே தெரியாது பூமி. அவரைப் பார்த்ததும் அவர் கூடவே இருந்தா போதும்னு தோணுச்சு. எதையும் ஷேர் பண்ற மனநிலைல நான் இல்ல பூமி” என்றவனை வருத்தமாகப் பார்த்தாள்.
“என்ன ஆச்சுடா?”
“எல்லாம் அந்த இதயாம்ரிதா தான். காலேஜ்ல என் அண்ணன் பின்னாடி சுத்தி சுத்தி வந்து, அவன் வாழ்க்கையை நாசமாக்கிட்டா. அண்ணா அவளை சும்மா விட மாட்டாங்க பூமி” எனக் கறுவியவனை என்ன சொல்லித் தேற்றுவதென்று தெரியவில்லை.
“மேடமா அப்படி?” அவளுக்கே சந்தேகமாக இருந்தது. இத்தனை இனிமையான முதலாளியை அவள் எங்கும் பார்த்ததில்லையே.
“எல்லாம் விஷம் பூமி…” வெறுப்பாய் மொழிந்தவனின் முகத்தில் தீராத ஏக்கம்.
“எப்படி இருந்த குடும்பம் தெரியுமா… என் பெரியம்மா அழுது நான் பார்த்ததே இல்ல. இப்ப ஒரு ரூமுக்குள்ள அடைஞ்சே இருக்காங்க. வீட்ல எப்பவும் ஒரு இறுக்கம். வலிக்குது பூமி” என தளர்ந்து உடைந்தவனின் தோள்மீது கை வைத்தவளின் முகமும் கசங்கியது.
“சரி ஆகிடும் விது!” நண்பனைத் தேற்றியவளுக்கு அவனது கண்ணீர் அதிக வேதனையைக் கொடுத்தது.
எதையும் முழுதாய் விளக்க இயலாமல் அவன் திணறி விட்டு, “இப்போதைக்கு அகிலுக்கும் மிதுனாவுக்கும் இது தெரிய வேணாம் பூமி. மனசுல இருக்கறதை சொல்லக்கூட எனக்குத் தெம்பு இல்ல நிஜமா…” என்றான் யாசக தொனியில்.
அது சகிக்காதவளாய், “இப்ப என்ன உடனே நீ எல்லாத்தையும் ஒப்பிக்கணுமா… தேவ இல்லடா. நீ எப்ப சொல்லணும்னு நினைக்கிறியோ சொல்லு. நானா எதுவும் அவங்ககிட்ட சொல்ல மாட்டேன். ஓகேவா” என்ற தோழியை ஆதூரமாய் பார்த்தான்.
“தேங்க்ஸ் பூமி” என்றவனை மீண்டுமொரு முறை முறைத்தவள், “அடி வாங்குவ… பட், எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான்” என்றாள் பாவமாக.
“என்ன?”
“நானே சத்யா சாரை சைட் அடிச்சுட்டு ஜாலியா சுத்திட்டு இருந்தேன். இப்ப உனக்கு அண்ணாவானதுனால நானும் அண்ணான்னு கூப்பிடணுமா?” என சோகத்தை டஜன் கணக்கில் பிழிய, விதுரன் வாயைப் பொத்தி நகைத்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
85
+1
3
+1
4
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Apudi yena than achooo therila ah ritha va ah palivanga ah thudikiranga
Ama sis seekirame solren 🥰
சத்யா பாவம் தான் இதயா நட்பினால் வந்த வினை.
Thank you soooo much ka 🥰😍
நைஸ் அப்டேட் ❤️
அழகான குடும்பம்…. சத்யா மேல விழுந்த வீண் பழியால எல்லாம் மாறிடுச்சு போல…. 😐
ஊரை விட்டு போன சத்யா ஸ்ரீராம் கூட தான் இருந்தானா…. நல்ல பிரண்ட்….
ஆனா அவனோட அப்பா தான் நல்லவரா தெரியல 🤔 சத்யாவை யூஸ் பண்ணிக்கிறாரோ….
நிஜமாவே பார்முலா அவரோடது தானா….
ராம்குமார் பெரிய கேடியா இருந்திருக்காரு 😠
Thank you sooooo much for ur lovely comment sis 😍🥰