Loading

 

அமருக்கு பிரியாவின் வருத்தத்தை பார்க்க பிடிக்கவில்லை. ஆனால் அதற்காக சிவாவை விட்டு விட முடியுமா?

அவனை பிரியா பிரிந்தே ஆக வேண்டும். அப்போது தான் அவள் அவனுக்கு கிடைப்பாள்.

“பிரியா.. இதுல நீ பண்ணுறதுக்கு எதுவும் இல்ல. பணப்பிரச்சனைய விட வேற எதாவது பிரச்சனை இருந்தா கூட சமாளிக்கலாம்.”

பிரியா சில நிமிடங்கள் யோசித்தாள். சுப்பிரமணி அமருக்கு சம்பந்தமான ஒரு நிறுவனத்தில் தான் வேலை செய்கிறான் என்று சிவா சொல்லி இருந்தான்.

அவனை வேலையை விட்டு தூக்கச் சொல்லி கேட்கலாமா? ஆனால் அதைச் சொன்னால் சிவாவை பற்றி இவனிடம் சொல்ல வேண்டும். காதலை பற்றிச் சொன்னவள் யாரை காதலிக்கிறாள்? என்ற விவரத்தை கொடுக்க யோசித்தாள்.

பிறகு எதையும் சொல்ல வேண்டாமென முடிவு செய்து பெருமூச்சு விட்டாள்.

“பிரியா.. இங்க பாரு.. ரிலாக்ஸா இரு. பிரச்சனைனு வந்தா முடிவும் வரும். பணம் கொடுத்தவங்க கிட்ட காரணம் சொல்லலாம். டைம் கேட்கலாம். இல்லனா வேற எங்கயாவது கடன் வாங்கி இங்க அடைச்சுட்டு அங்க பின்னாடி கட்டலாம். இப்படி நிறைய ஆப்ஷன் இருக்கும். அதெல்லாம் கண்டிப்பா யோசிக்காம இருக்க மாட்டாங்க. நீ குழப்பிக்கிறதாலயும் வருத்தப்படுறதாலயும் எதுவும் மாறாது. நல்லா ரெஸ்ட் எடுத்து வேலைய பாரு.. பின்னாடி நீ நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சதும் உன் இஷ்டத்துக்கு யாருக்கு வேணா ஹெல்ப் பண்ணலாம். ஓகே?”

பிரியாவிற்கு அந்த வார்த்தை ஆறுதல் அளித்தது. அவளால் முடியவில்லையே என்று நினைத்து வருந்திக் கொண்டே இருப்பதில் பயனில்லை என்றான பிறகு விட்டு விடுவது மேல்.

“தாங்க்யூ அமர்..”

“இப்ப ஓகேவா?”

“பெட்டர்”

“லீவ் வேணுமா?”

“வேணாம்.. நான் பார்த்துக்கிறேன்..”

“ஓகே..” என்றதும் விடைபெற்றுக் கிளம்பி விட்டாள்.

அவளை அனுப்பி வைத்ததும் அமரின் முகத்தில் இருந்த போலி அமைதி மொத்தமாக மறைந்தது.

கைபேசியை எடுத்தவன் கணேஷை அழைத்தான்.

“என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லு”

“அவனுக்கு ஒரு ஆக்ஸிடென்ட் ஆகனும்”

“கொல்ல போறியா?”

“கொல்லுறதா இருந்தா எப்பவோ கொன்னுருக்க மாட்டனா? இந்த ஆக்ஸிடென்ட்ல அவனுக்கு பெரிய அடி எதுவும் படக்கூடாது. ஜஸ்ட் உயிர் பயம் மட்டும் காட்டனும்.”

“பண்ணிடலாம்” என்று கணேஷ் வைத்து விட்டான்.

அலுவலகத்திலிருந்து கிளம்பி வக்கீலை பார்க்கச் சென்றிருந்தான் சிவா. பாண்டியனும் வந்து விட்டார். இருவரும் பேசி முடித்து விட்டு கிளம்பி விட்டனர்.

சாலையை கடந்து பைக் இருந்த இடத்திற்கு இருவரும் வந்து சேர, வேகமாக வந்த மினி ஆம்னி வேன் அவர்களது பைக்கில் மோதிச் சென்றது.

பாண்டியன் பைக்கின் அருகே நின்றிருக்க அவர் முதலில் கீழே விழுந்தார். அவரை தாங்கப்போய் சிவாவும் விழுந்தான்.

அருகே இருந்த மற்ற வாகனம் அவன் மீது விழ கையில் காயமானது.

சுற்றியிருந்தவர்கள் அவசரமாக கூடி உதவி செய்தனர். வேனுக்குள் இருந்தவனை வெளியே இழுக்கப்பார்க்க அவன் மயங்கிக் கிடந்தான்.

உடனே அவசர ஊர்தியை அழைத்து மூவரையும் ஒன்றாக அனுப்பி வைக்க, காவல்துறை வந்து அங்கிருந்த கூட்டத்தை விலக்கி வைத்தது.

பாண்டியன் மனதில் பெரும் பயம் வந்து விட்டது. அடுத்தடுத்து இப்படி கெட்டதாகவே நடக்கும் என்று அவர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. சிவாவின் கையிலிருந்த காயத்தில் இரத்தம் வடிய அதை துடைத்து மருந்து போட்டனர்.

பாண்டியனுக்கு பெரிய காயம் எதுவும் இல்லை. எல்லாம் சிராய்ப்பு தான். அதை சுத்தம் செய்தனர். அதற்குள் அருகே இருந்த மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

இருவரும் நடந்து செல்ல மயங்கிக் கிடந்தவனை படுக்க வைத்து தள்ளிச் சென்றனர். அவனுக்கு இருத்த அழுத்தம் அதிகமாகி மயக்கம் வந்து விட்டதாக சொல்ல சிவா பெருமூச்சு விட்டான்.

யார் மீதும் தவறில்லை. அதனால் காவல்துறையினர் வந்த போது வழக்கு தொடுக்க சம்மதிக்கவில்லை. மயக்கம் தெளிந்து எழுந்தவன் மன்னிப்பு கேட்க மன்னித்து விட்டனர்.

பைக்கை நாளை வந்து எடுத்துக் கொள்வதாக காவல்துறையினரிடம் சொல்லி விட்டு கிளம்பி வீடு சென்றனர்.

கட்டோடும் காயத்தோடும் வந்த இருவரையும் பார்த்து கல்யாணி அழ ஆரம்பித்து விட்டார். இப்படி இடிமேல் இடியாக விழ வேண்டுமா? தாங்கவே முடியவில்லை அவரால். சண்முகி கூட கண்கலங்கினாள். எத்தனை கஷ்டத்தை தான் அவளும் தாங்குவாள்?

இரவு சிவா பிரியாவிடம் விசயத்தை சொல்லவில்லை. பெரிய காயம் இல்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு கட்டை பிரித்து விடலாம் என்பதால் இரண்டு நாட்களுமே விடுமுறை எடுத்துக் கொள்ள நினைத்தான். கையில் கட்டோடு சென்று வேலை செய்ய முடியாது.

அதே நேரம் அமருக்கு வேலை முடிந்ததாக செய்தி வர திருப்தியடைந்தான்.

இனி அடுத்த வேலை சிவாவிற்கு திருமணம். அது தான் பிரியாவை அவனிடமிருந்து மொத்தமாக பிரிக்கும். அதற்கு முன்பு சிவா பிரியாவை பிரிய தகுந்த காரணம் ஒன்றையும் கொடுக்க வேண்டும்.

அமர் திட்டமிட்டபடியே அனைத்தும் நடக்க ஆரம்பித்தது. ஒரு வேளை விதியும் அவனுக்கு துணையாக நின்றதோ? என்னவோ?

சிவா வீட்டிலேயே இருக்க அன்று மின்னஞ்சலுக்கு பதில் வந்தது. சுப்பிரமணியை வேலையை விட்டு தூக்கி விடுவதாக சொல்லி விட்டனர்.

பார்த்ததும் ஆச்சரியப்பட்டவன் உடனே சண்முகியை அழைத்து விசயத்தை சொன்னான்.

“க்கா.. அந்தாளு வேலை போயிடுச்சு. அவன் பண்ணதுக்கு அவன வேலைய விட்டு தூக்க போறாங்களாம்”

“உண்மையாவாடா சொல்லுற? அப்ப அவ?”

“அத பத்தி எதுவும் சொல்லல.. அநேகமா அவ வேலையும் போயிடும்..”

“கடவுளுக்கு கண் இருக்குடா.. கண்டிப்பா அவள சும்மா விட மாட்டாரு” என்றாள் சண்முகி.

கடவுளுக்கு கண் இருந்ததோ இல்லையோ அமருக்கு இருந்தது. அவன் பார்வைக்கு மின்னஞ்சல் வந்ததும் இருவரையும் வேலையை விட்டு தூக்கச் சொல்லி விட்டான்.

சுப்பிரமணி தன்னிடம் நீட்டப்பட்ட காகிதத்தை அதிர்ந்து பார்க்க அதே நேரம் “அவளும்” பேரதிர்ச்சியோடு பார்த்தாள்.

“எதுக்கு எங்கள இப்ப வேலைய விட்டு தூக்குறீங்க?”

“உங்க மேல கம்ப்ளைண்ட் வந்துருக்கு..”

“என்ன கம்ப்ளைண்ட்?”

“நீங்க ரெண்டு பேரும் கள்ள தொடர்புல இருக்கீங்கனு”

“அப்படினு யார் சொன்னா?”

“இதோ.. இவன் வொயிஃப் தான் ஆதாரத்தோட நீங்க ரெண்டு பேரும் ஆஃபிஸ்ல வச்சு செஞ்சத மெயில் அனுப்பிருக்காங்க.”

“சார்.. அதுங்க எங்க பர்ஷ்னல்”

“எது உங்க பர்ஷ்னல்? அப்படி உங்க பர்ஷ்னல்னா அத வெளிய வச்சுருந்துருக்கனும். ஆஃபிஸ்க்குள்ள கொண்டு வந்துருக்க கூடாது. எங்களுக்கு எங்க ஆஃபிஸ் டெக்கோரம் தான் முக்கியம். இந்த மாதிரி ஒருத்தர் செஞ்சு அடுத்து மத்தவனும் கத்துக்கிறதுக்கா?”

“சார்..”

“நிறுத்துமா.. உங்க ரெண்டு பேரையும் ப்ளாக் மார்க் பண்ணாம வேலைய விட்டு மட்டுமே அனுப்புறேன்னு சந்தோசப்படனும். மேலிடத்துல சொன்னா ப்ளாக் பண்ண சொல்லிடுவாங்க. செய்யட்டுமா?”

இருவரும் பல்லைக்கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தனர்.

“சைன் பண்ணிட்டு எல்லாத்தையும் ரெண்டு மணி நேரத்துல ஹேன்டோவர் பண்ணிட்டு கிளம்புங்க.” என்று அதட்ட அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

எல்லவற்றையும் ஒப்படைக்க, அலுவலகத்தில் அத்தனை பேரும் அவர்களை பார்த்து சிரித்தனர்.

“கள்ள காதலர்கள் பிடி பட்டனர்.. மனைவியின் வீர தீர செயலினால் கள்ள காதலர்களை கையும் களவுமாக பிடித்தது நிர்வாகம்” என்று வெற்று காகிதத்தில் ஒருவன் செய்தி வாசிக்க, சுற்றியிருந்த அத்தனை பேரும் சத்தமாக சிரித்து விட்டனர்.

“ஹேய்.. என்ன திமிரா?” என்று “அவள்” கத்த “ஏய் அடங்குடி.. அதான் அசிங்கப்பட்டாச்சுல.. அடுத்தவ புருஷன் கூட கூத்தடிச்ச உன்னை இத்தனை நாள் சகிச்சதே பெருசு.. போடி.. போய் வேற வேலையில எவன் கிடைக்கிறான்னு தேடு.. வந்துட்டா பெரிய இவ மாதிரி பேச” என்று ஒருத்தி திட்டினாள்.

“ஏன்டி.. இந்த மேனேஜர் வேலைக்காக தான் அந்தாளு பின்னாடி இவ சுத்துனா.. இப்ப அவனுக்கே வேலை போச்சே.. இனி இவ அவன் கூட இருப்பா?”

“நோ சான்ஸ்.. புது வேலையில கிடைக்கிற மேனேஜர பார்த்துட்டு போயிடுவா”

மற்றவர்கள் கூடி சிரிக்க ஒன்றும் செய்ய முடியாத அவமானத்தோடு இருவரும் கிளம்பி விட்டனர்.

சுப்பிரமணி வீட்டுக்கு வர வீடு வெறுமையாக காட்சியளித்தது. அவனது வாழ்வை போலவே. மகன் இன்னும் பள்ளியில் இருந்து வந்திருக்கவில்லை.

சோர்ந்து போய் விழுந்து கிடந்தவனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை.

மகனை காரணம் காட்டி சண்முகியை அழைத்துக் கொள்ளலாம் என்று பார்க்க சண்முகி அவனது வேலைக்கே உலை வைத்து விட்டாளே. மனைவியின் மீது கோபம் வர உடனே கைபேசியை எடுத்து அவளை அழைத்தான்.

அழைப்பு சென்றதே தவிர அவள் பதிலளிக்கவில்லை. கோபம் தலைக்கேறியது. தேடிச் சென்று அவளை திட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் மின்னஞ்சல் அனுப்பும் அளவுக்கு அவளுக்கு திறமை இல்லை. அவளுக்கு வேறு யாரோ உதவியிருக்க வேண்டும். ஒருவேளை சிவாவே இந்த ஐடியாவை கொடுத்திருக்க வேண்டும்.

இனி வேறு வேலை தான் தேட வேண்டும். ஆனால் மனம் சோர்ந்து கிடக்க எதுவும் செய்ய பிடிக்கவில்லை.

சண்முகி மகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள். ஒரு துணிக்கடையில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் கண்ணில் பட்டது.

‘நாமலும் வேலைக்கு போகனும். அந்த துரோகிக்கும் வேலை போயிடுச்சு. அவன் அதையும் மீறி வேற வேலை தேடுனாலும் நாம சம்பாதிச்சா தான் குருவ படிக்க வைக்க முடியும்..’ என்று யோசனையுடனே வீடு வந்து சேர்ந்தாள்.

“குரு சாப்பிட்டானா?” என்று வந்ததும் கல்யாணி கேட்க தலையாட்டினாள்.

“ம்மா.. நான் வேலைக்கு போகனும்மா”

“வேலைக்கா? ஏன்?”

“குருவுக்கு ஃபீஸ் கட்டனும்ல? அந்தாளு வேலையும் போச்சு. அடுத்த ஃபீஸ் கட்ட பணம் வேணும். இப்பவே வேலைக்கு போனா நல்லா இருக்கும்”

“உனக்கு என்ன வேலை தெரியும்? எங்க போவ?”

“தெரியலமா.. ஆனா போகனும். வக்கீல் ஃபீஸ்.. கடன்.. குரு ஸ்கூல் ஃபீஸ் நிறைய இருக்குமா.. வீட்டுல இருந்து அதெல்லாம் கட்ட முடியாது.. செய்யனும்”

அவள் ஒரு முடிவுக்கு வந்தாலும் என்ன வேலையில் சேர்ந்து சம்பாதிப்பது என்ற குழப்பமும் இருந்தது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்