Loading

“இன்னைக்கு நீ செஞ்சதை சாப்பிடணும்னு தலையில எழுதி இருக்கு…” சலிப்புடன் யாஷ் பிரஜிதன் டைனிங் டேபிளில் அமர,

“மனுஷ உணவை சாப்பிட போறீங்கன்னு பெருமையா நினைங்க” என்றாள் நாக்கைத் துருக்கி.

“சேட்டை அதிகமாகிடுச்சுடி உனக்கு” என்றபடி பொங்கலையும் சாம்பாரையும் உண்டவனுக்கு, சுவை தேவாமிர்தமாக இருந்ததா இல்லையா என்றெல்லாம் தெரியாது, ஆனால் காரம் கண்ணைச் சிவக்க வைத்தது.

“ஃப்பூ… ஏன்டி இவ்ளோ ஸ்பைசியா பண்ணிருக்க?” எனத் தண்ணீரைப் பருகிக் கொண்டே இருந்தேன்.

“எதே பொங்கல் ஸ்பைசியா? நானே மிளகு கம்மியா போட்டேன்னு பீல் பண்ணிட்டு இருக்கேன். இதுலாம் ஒரு காரமா?” என அசட்டையாகக் கூறிட, அவனது காது மடல்கள் எல்லாம் சிவந்தே விட்டது.

“போடி பைத்தியக்காரி!” எனப் பழச்சாறை வேகமாக அருந்தியவனை மிரட்சியுடன் பார்த்தாள்.

“ஜாமும் பட்டருமா தின்னா இப்டி தான் லேசான காரத்துக்கும் குடல் வெந்து போகும். கல்லைத் தின்னாலும் செரிக்கிற வயசு அரக்கா…” என அவன் தோளைத் தட்டிக்கொடுத்து அறிவுரை கூறினாள்.

ஏற்கனவே காரம் அதிகமானதால் கடுப்பானவனுக்கு அவளது பேச்சு இன்னும் கொஞ்சம் கோபத்தைக் கிளற, “வாட்? வாட்? கல்லை சாப்ட்டாலும் செரிக்கிற வயசா?” என நக்கலுடன் கேட்டு விட்டு, விறுவிறுவென வாசலுக்குச் சென்றான்.

“யோவ் அரக்கா… மழை பேய் மாதிரி பேயுது. எங்க போற?” என்றிட, போன வேகத்திலேயே திரும்பி வந்தான் தொப்பலாக நனைந்து.

கையில் சிறு சிறு கூழாங்கற்கள் இருந்தது.

“இத இன்னாத்துக்கு எடுத்துட்டு வந்த?”

“கல்லை சாப்பிட்டாலும் டைஜிஸ்ட் ஆகிடுமே இந்த ஏஜ்ல. உனக்கு என்னை விட ஏஜ் கம்மி தான கடன்காரி. இதைச் சாப்பிடு செரிக்குதான்னு பாக்கலாம்…” எனக் கொடுத்ததில் அரண்டு விட்டாள்.

“யோவ்! ஆலம்பனா இல்லாம காதல் நோய் உன்னைத் தாக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். அதான் இப்படி வில்லங்கமா யோசிச்சுட்டு வந்துருக்க. போய் தலையை தொவட்டு போ…” என அங்கிருந்து நகர எத்தனித்தவளை விட்டானில்லை.

“இப்ப இதை நீ சாப்பிடாம நான் இங்க இருந்து நகரப்போறது இல்ல…” என்றவன், அவளது அடிபடாத கையின் மணிக்கட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.

“ஆஆ… ஈரத்தோட பிடிச்சுருக்க யாஷ். ஏற்கனவே குளுருது. விடு மொதோ” என அடம்பிடிக்க, “நோ வே” என்பது போல திடமாக நின்றான்.

“பேஜாருயா ஒன்னோட… கல்லைத் தின்னாலும் செரிக்கிற அளவு இந்த வயசுல உடல் பலம், ஆரோக்கியம் இருக்கும்னு முன்னோர்கள் சொல்லிட்டுப் போயிருக்காங்க. அதை செக் பண்ண கல்லைத் தின்ன சொல்றதுலாம் ஆலம்பனாவுக்கே அடுக்காதுயா…” என்றதில்,

“இதை சாப்பிட்டுட்டு என்ன வேணாலும் உளறிக்க” என்ற ரீதியில் அழுத்தமாகப் பார்த்தான் யாஷ்.

‘ஐயோ இந்தக் கிறுக்கு அரக்கன்ட்ட இருந்து யாராவது என்னைக் காப்பாத்துங்களேன்’ என மானசீகமாக அரற்றிக் கொண்டிருந்தவளைக் காப்பாற்றவென்றே அங்கு வந்தார் ஆதிசக்தி.

“யாஷ்? ஏன் இப்படி நனைஞ்சு போயிருக்க?” எனக் கேட்டபடி உள்ளே வந்தவர், இருவரும் அருகருகில் நிற்கும் கோலம் கண்டு சற்றே சங்கடமாய் நின்று விட்டார்.

அப்போதும் அவன் அவளது கையை விடவில்லை.

‘நீங்க ஏன் வந்தீங்க?’ என்ற ரீதியில் ஒரு குற்றப்பார்வை மட்டுமே.

“நீ மழைக்குள்ள எதையோ எடுத்துட்டுப் போற மாதிரி இருந்துச்சு. அதான் என்ன செய்றீங்கன்னு பார்க்க வந்தேன்…” ஆதிசக்தி அவனது பார்வைக்குப் பதில் மொழி கொடுக்க,

“அத்தை அத்தை… தெய்வம் மாறி வந்து என்னைக் காப்பாத்தி விட்டீங்க. இந்தக் கல்லை சாப்பிட சொல்லி, என்னை டார்ச்சர் பண்றாரு அத்தை உங்க புள்ள…” என நீலிக்கண்ணீர் வடித்தாள்.

‘இன்ஸ்டன்ட் கண்ணீரை எங்கடி வச்சிருந்த’ என்பது போல யாஷ் முறைத்து வைக்க, ஆதிசக்தியோ மகனை முறைத்தார்.

“இது என்ன விளையாட்டு யாஷ்? நீங்க ஏன் சமைச்சு கஷ்டப்படுறீங்க. கரண்ட் வர்ற வரை நம்ம வீட்டுல வந்து இருக்கலாம்ல?” என்றான் தாங்கலாக.

அதற்கு யாஷ் பதில் கூறும்முன், நிதர்ஷனா விழி விரித்துக் கேட்டாள், “நம்ம வீடா எது அத்தை?” என்று.

அக்கேள்வியில் ஆதிசக்தி சற்றே விழித்து விட்டு, “இது என்ன கேள்வி ரித்தி?” எனப் படபடத்தார்.

“நீங்களும் எது நம்ம வீடுன்னு ஒரு தியரி ரெடி பண்ணிட்டு வாங்க, நானும் இது என்ன மாதிரியான கேள்வின்னு எக்ஸ்ப்ளெய்ன் பண்றேன்” நிதர்ஷனா நேருக்கு நேராய் குட்டு வைக்க, ஆதிசக்தியின் முகம் களையிழந்து போனது.

“ரித்தி…” என அவர் பேச வர,

“எனக்கு நம்ம வீடுன்னா, என் புருஷன் வளர்ந்த வீடு தான். அது இத்தாலில தான இருக்கு. இந்த மழைக்குள்ள இத்தாலிக்கு போறது சிரமம் அத்தை…” என உதட்டைப் பிதுக்கிட, பேச்சற்று திகைத்துப் போனார் ஆதிசக்தி.

“இப்போ சொல்லுங்க, நம்ம வீட்டுக்கு வரணுமா இல்ல உங்க வீட்டுக்கு வரணுமா?” என மீண்டும் புருவம் உயர்த்தி அமர்த்தலாகக் கேட்டதில், “என்… என் வீட்டுக்கு” என்றார் உணர்வற்று.

“அதுக்கு என்ன வந்துட்டா போச்சு. லன்ச்சுக்கு நாங்க அங்க வர்றோம். ஓகே தான யாஷ்?” எனத் தன் மீதே விழிகளைப் பதித்திருந்தவனிடம் திரும்பி அபிப்ராயம் கேட்டுக்கொண்டாள்.

என்னவோ, இப்போது அங்கு செல்வதில் அவனுக்கு தடையேதும் இருக்கவில்லை. ஏனெனில் அது அவனது தாய்வீடு. அவன் வீடு அல்ல. விருந்தாளியாக ஒருவர் வீட்டிற்குச் செல்வதாக நினைத்துக் கொள்ள எரிச்சல் ஏதுமிருக்கவில்லை.

“யா ஓகே!” தோளைக் குலுக்கிக் கொண்டவனின் விழிகளில் ஏதோ ஒரு வகையில் தாயை வென்று விட்ட மகிழ்ச்சி.

தள்ளி நின்று அவரைத் தண்டிப்பதை விட, அவளைப் போல நன்றாகப் பேசி உறவுமுறையில் தள்ளி வைத்திருப்பது அவனுக்கு சுவாரஸ்யம் கொடுத்தது.

அதிலும் தனது மனைவியாக அவளது மிடுக்கும் திமிர் பேச்சும் சிறு ரசனையையும் கொடுத்தது.

ஆதிசக்திக்கு அதற்குமேல் மகனை எதிர்கொள்ளும் திராணி இல்லாததால் கிளம்பி விட்டார்.

நிதர்ஷனாவும் அவனுக்கு ஆதரவாகப் பேச வேண்டுமென்றெல்லாம் பேசி விடவில்லை. நியாயமாக, மகனை சிறு வயதிலேயே தகப்பனிடம் கொடுத்து தள்ளி இருந்த தாய்க்கு அவரது இடத்தைக் குறித்துக் காட்டினாள் அவ்வளவே!

இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மழையில் நனைந்ததால் அறைக்குச் சென்று உடையை மாற்றியவன் அந்தக் கூழாங்கற்களை காரணமின்றி டிராயரில் போட்டுக்கொண்டான்.

பழக்கதோஷத்தில் “எலிசா” என அழைத்து விட்டவன், “ப்ச் ஆலம்பனா” என அழைத்து விட்டுப் பின், இன்வர்ட்டரின் உதவியால் விளக்கு எரிவது நினைவு வர தன்னை நொந்து கொண்டான்.

மறுநொடி “எஸ் பாஸ்” என்று அவனது நிஜ ஆலம்பனா கையில் காபியுடன் அவன் முன் நின்றாள்.

அவளை முறைத்தவன், “இனி குக் பண்றேன்னு வித்தை காட்டாத ரித்தி. எனக்கு பிரெட் அண்ட் ஜாம் போதும்” எனக் கண்டிப்புடன் காபியை வாங்கி கொண்டான்.

“ம்ம்க்கும் நான் செய்றதையா கிண்டல் பண்றீங்க. வாங்க… உங்க அம்மா வீட்ல, உப்பும் உரைப்பும் இல்லாம தண்ணி சாம்பார் வச்சு தருவாங்க. வந்து சாப்பிடுங்க…” என கழுத்தை வெட்டிக் கொண்டு சென்றாள்.

“பார்த்து… கழுத்து கையோட வந்துட போகுது… இம்சை!” எனத் திட்டியவனின் இதழ்களில் ஒரு குட்டிப்புன்னகை.

ஆதிசக்தியின் வீட்டிலும் இன்வர்ட்டரின் உதவியால், மின்சாரத்தை குறைவாகச் செலவு செய்து கொண்டிருந்தனர். அனைவரும் ஹாலில் ஒரே மின்விசிறிக்கு கீழேயே படுத்துக் கொள்வது இம்மாதிரியான மழை நாள்களில் வாடிக்கை.

ஆனால், சமையல் தடல்புடலாக இருக்கும். மகேந்திரனின் உத்தரவு படி மின்விளக்குகள் இல்லாத நாள்களில் எல்லாம் அதிகப்படியாக சமைத்து பார்சலாக போட்டு இல்லாதோருக்கு பிரித்துக் கொடுத்து விடுவர். அழகேசனும் இளவேந்தனும் இதற்கு பொறுப்பெடுத்து மழையென்றும் பாராது, உணவுகளை முடிந்த அளவு பசியுடன் இருப்பவர்களுக்கு சேர்ப்பித்து விடுவர்.

மதிய உணவிற்காக கணவனும் மனைவியும் ஜோடி போட்டு ஆதிசக்தியின் வீட்டிற்குச் செல்ல, இவர்களைக் கண்டதும் மகேந்திரன் அறைக்குள் சென்று விட்டார்.

கண்மணியும் சிந்தாமணியும் பார்சல் போட்டுக் கொண்டிருக்க, கிருஷ்ணவேணியும் ஆதிசக்தியும் அடுக்களையில் இருந்தனர்.

அழகேசன் இருவரையும் உபசரித்து அமரச் சொல்ல, கண்மணியும் கண்கள் மின்ன “வாங்க அண்ணா… வாங்க அண்ணி” என வரவேற்று நீர் கொடுத்தாள்.

இளவேந்தன் கண்மணியின் சத்தம் கேட்டு வெளியில் வந்து இருவரையும் பார்த்து தலையசைக்க, நிதர்ஷனாவோ “என்ன கண்மணி… பார்சல் எல்லாம் யாருக்கு?” எனக் கேட்டாள்.

கண்மணி விளக்கம் கூறியதும், “செம்ம… ஆனா மழைக்குள்ள போறது பாதுகாப்பு இல்லைல கண்மணி” என்றாள் அக்கறையாக.

“அப்பாவும், மாமாவும் போயிட்டு வந்துடுவாங்க அண்ணி. இது வழக்கம் தான்…” கண்மணி கூறும்போதே ஆதிசக்தி கையைத் துடைத்தபடி வந்தார்.

“வாங்க சாப்பிடலாம்…” என அழைக்க, “இப்ப பசிக்கல அத்தை. வேலையை முடிச்சுட்டே சாப்பிடலாம். பார்சல் எல்லாம் போட்டு முடிச்சாச்சா கண்மணி” எனக் கேட்டுக்கொண்டே இரு பெண்களுடன் அவள் ஐக்கியமாகிக் கொண்டாள்.

‘இவள் வந்த வேலையைப் பார்த்துட்டு கிளம்பாம, சோஷியல் சர்விஸ் பண்ண இறங்கிட்டா’ என எரிச்சலடைந்த யாஷ் பிரஜிதன், “ரித்தி…” எனப் பல்லைக்கடித்துக்கொண்டு அழைக்க,

“அட இருங்க யாஷ். நான் கூட பெத்த பிள்ளையை தனியா விட்டதும் இவங்களை ரொம்ப தப்பா நினைச்சுட்டேன். பட், இவங்க அப்படி இல்ல யாஷ்…” என்றதும் அவன் முகம் இறுகிப்போனது.

“ஊரான் புள்ளையை ஊட்டி வளர்த்தா தான் புள்ள தானா வளரும்னு யாரோ சொல்லிருக்காங்க. அதான், ஊரான் புள்ளைக்கு ஊட்டுனா உங்களுக்கு யாராவது ஊட்டி விடுவாங்கன்னு நினைச்சுருப்பாங்க போல. இந்த சமூக சேவைல பங்கெடுக்க என் அடிமனசு பிராண்டுது. கேன் ஐ?” என வெகு தீவிரமாகப் பேசிட, ஆடவனின் புருவமிரண்டும் வியப்பில் உயர்ந்ததில் நெற்றி மத்தியில் சில கோடுகள் உதயமானது.

அது கூட அவனுக்கு அழகாய்!

“ம்ம்” எனக் கண்ணசைத்து உத்தரவு கொடுக்க, அவளும் ஒரு பொட்டலத்தை எடுத்து அதில் கயிறை சுற்ற ஆரம்பித்தாள், குடும்பம் முழுக்க ஸ்தம்பித்து நின்றதை பொருட்டாகவே மதியாமல்.

இரு பெண்களையும் நிமிர்ந்து பார்த்தவள், “என்ன என் மூஞ்சியைப் பார்த்துட்டு இருக்கீங்க. சீக்கிரம் பொட்டலம் போட்டு முடிங்க. சாப்பிட்டு கிளம்ப வேணாமா?” என்றதில், இருவரும் நிகழ்வுணர்ந்து வேலையைத் தொடர்ந்தனர்.

இளவேந்தனுக்கு கோபம் எழ, ஆதிசக்திக்கோ சுருக்கென இருந்தது.

ஆகினும் அவனைப் பட்டினி போட்டு விட வேண்டுமென்று அவனது தந்தையிடம் கொடுக்கவில்லையே.

மனதினுள் உருப்போட்ட வேதனையை மறைத்துக் கொண்டு, மீண்டும் அடுக்களைக்கே சென்று விட, கிருஷ்ணவேணி அவள் பேசியதைக் காதில் வாங்கியபடி வருத்தத்துடன் உள்ளே நின்று கொண்டார்.

ஆதிசக்தியைக் கண்டதும், “விடு ஆதி. அவனுக்குன்னுப் பேச ஒருத்தி இருக்காளேன்னு சந்தோசப்பட்டுக்கோ…” என சமன்படுத்த

“அவனுக்காக நான் தான் இல்லை. அவளாவது இருக்கான்னு சந்தோசப்படுன்னு சொல்றீங்களா அண்ணி?” என வேதனைப் பெருக்கெடுக்க கேட்டதில், கிருஷ்ணவேணி பதறி விட்டார்.

“அப்படி இல்ல ஆதி. என்ன காரணமோ என்னவோ, இத்தனை வருஷமா உன் பையனைப் பிரிஞ்சு இருந்துட்ட. அது உன் மகனுக்கு மனசுல உறுத்தலா இல்லாமல் இருக்குமா. அந்த உறுத்தல் ஏற்கனவே அவன் நம்மகிட்ட காட்டுற உதாசீனத்துல தெரியுதுன்னாலும், ரித்தி மூலமா வெளில வர்றப்ப, யாஷ் முகத்துல ஒரு வெளிச்சம் வருது ஆதி. அவங்களுக்குள்ள இணக்கமா இருக்காங்க. தான் புருஷனை விட்டதுல ஏற்பட்ட ஆதங்கத்தோட வெளிப்பாடு, என்ன காரணம் சொன்னாலும் இழந்த நாள்களை மீட்க முடியாது தான ஆதி…” என அவர் கையைப் பிடித்துப் பொறுமையாக கூற, ஆதியின் விழிகளில் பளபளப்பாக கண்ணீர் மின்னியது.

உண்மை தானே! அன்னையாய் சீராட்டி வளர்க்க வேண்டிய நாள்களை இழக்கச் செய்ததற்கு, என்ன தான் காரணம் கூறிட இயலும் அவரால்?

“புருஞ்சுடுச்சு அண்ணி. நான் அவனுக்கு அம்மாவா இல்ல. அதனால அவனும் எனக்கு பையனா இருக்கப் போறதில்ல” எனத் தீர்மானமாக கூறி மூக்கை உறிஞ்சியவர், “இன்னும் ஒரு பத்தே நாள் மட்டும் போகட்டும். அதுவரை தினமும் அவனை நம்ம… இல்ல என் வீட்டுக்கு வர வச்சுப் பார்த்துட்டு அப்பறம் அவனுக்குத் தேவையானதை குடுத்து அனுப்பிடுறேன். என்ன… அதைக் கொடுத்துட்டா, பேரளவுல கூட அம்மான்ற உறவை முறிச்சுடுவான். பரவாயில்ல… செஞ்ச தப்புக்கு தண்டனை வேணும்ல!” எனும்போதே குமுறி வந்த அழுகையை கட்டுப்படுத்த இயலாது திணறினார்.

அவரைப் பரிதாபமாக ஏறிட்ட கிருஷ்ணவேணிக்கும் கண்ணீர் மல்கியது. “வேணாம் ஆதி. ரொம்பவே அழுதுட்ட. போதுமே!” எனும்போதே, நிதர்ஷனா அடுக்களைக்குள்ளேயே வந்திருந்தாள்.

“பார்சல் போடும்போதே லெமன் சாதம், புளிக்கொழம்பு வாசனை தூக்கிடுச்சு அத்தை… முதல்ல என் வயித்துக்கு வஞ்சனை வைக்க கூடாதுன்னு உள்ளேயே வந்துட்டேன்” என இளித்து வைத்தவள், தானே தட்டு கரண்டியெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றதில் அவளை இரு பெண்மணிகளும் விசித்திரமாகப் பார்த்தனர்.

பசியென்றால் தான் அவளுக்குப் பத்தும் பறந்து விடுமே! இதில் அவளது மான ரோஷத்துக்கே வழி இல்லாத போது, அவனது மானத்திற்காக தனது வயிறை ஏன் காயப்போட போகிறாள்!

“வெட்கமே இல்ல…” நெற்றியில் கை வைத்து முணுமுணுப்புடன் யாஷ் பிரஜிதன் கேட்க, “எதுக்கு வெட்கங்கிறேன். நானே அந்த பார்சல் வாங்கி சாப்பிடுற ஆளு தான். ஏதோ என்னையும் நாலு பேருக்காக பார்சல் போட வச்ச பெருமை உங்களையே சேரும் யாஷ்!” என மனமார கூறி விட்டே உண்ணத் தொடங்க, அவனது பார்வை அவளை விட்டு வேறெங்கும் நகரும் எண்ணமே இல்லை.

அவன் முன்னே கண்ணாடி குவளையில் நீரை வைத்த சிந்தாமணி, ‘இவரு என்ன எல்லார் முன்னாடியும் உக்காந்து சைட் அடிச்சுட்டு இருக்காரு’ எனக் கடியாகி, “மாமா… இது இத்தாலி இல்ல இந்தியா. இங்க கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் தனியா தான் சைட் அடிக்கணும். அபச்சாரம்…” எனக் கன்னத்தில் போட்டுக்கொண்டு அவனை வாரினாள்.

‘சைட்’ என்றதுமே உள்ளே சென்ற எலுமிச்சை சாதம் தொண்டையில் சிக்கிக்கொண்டது நிதர்ஷனாவிற்கு.

‘இந்த மூஞ்சில எங்க இருந்து சைட் அடிக்கிற லுக்கு தெரிஞ்சுது இவளுக்கு. எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே ரியாக்ஷன் தான் குடுக்கப் போறான்’ எனக் குழம்பிட, அதே போல அவன் சிந்தாமணியைக் காட்டத்துடன் பார்த்தான்.

“நான் என்ன உன்னையவா சைட் அடிச்சேன். மை வைஃப், மை ஐஸ்!” என வேண்டுமென்றே அவளைப் பார்த்து வைத்தான்.

சைட் அடிக்கவில்லை எனக் கூறினால், சந்தேகம் வலுத்துவிடுமென்று எண்ணினானோ என்னவோ!

அவனது பார்வையில் அவளுக்கு தான் உணவு இறங்க வேண்டாமென சதி செய்தது.

“யோவ்… தட்டைப் பார்த்து சாப்புடுயா” அவனுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுக்க,

“உன்னைப் பார்த்தாலே பசி பறந்து போய்டுது ரித்தி” என்றான் காதலாக.

“பறந்து போக, அது என்ன பாராசூட்டாயா?” பற்களை நறநறவெனக் கடிக்க, “யூ ஃபன்னி…” என அவளது கன்னம் கிள்ளி வைத்தான்.

மற்றவர்கள் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டனர்.

சிந்தாமணி தான், “நமக்கு முறைப்பையனா வர வேண்டிய பாக்கியம் யார்க்கு அமையுமோ” எனப் பெருமூச்சு விட்டுக்கொள்ள, கண்மணி “கண்ணு வைக்காத சிந்தா” என முறைத்தாள்.

“இவள் வேற பாசமலர் சாவித்ரின்னு நினைப்பு மனசுல. அவன் தான் உன்னை கடுகளவு கூட மதிக்க மாட்டுறான்ல. போ! போய் ஹாட் பாக்ஸ்ல சாதம் எடுத்துட்டு வா” எனத் துரத்தி விட, அவளை முறைத்துக்கொண்டே உள்ளே சென்றாள் கண்மணி.

ஆதிசக்தி அவர்கள் கிளம்புகையில், “வீட்ல சமைச்சு சிரமப்பட வேணாம் ரித்தி. தினமும் இங்க வந்துடுங்க. ஐ மீன் என் வீட்டுக்கு வந்துடுங்க…” என அழுத்திக் கூற, நிதர்ஷனா யாஷைப் பார்த்தாள்.

அவனோ ஏளனமாக “நீங்க போடுற பார்சல்ல ரெண்டை கட் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களோ? பட், அப்படி தர்மமா கூட அன்புப் பிச்சை போடாதவங்க வீட்ல தினமும் நான் வந்து நிக்கணும். அதான உங்க ஆசை?” என்றான் குத்தலாக.

“யாஷ்…” இம்முறை வார்த்தைக் கனம் தாங்காமல் அவன் முன்னே கலங்கி விட்டார்.

“வரேன். வந்து… உங்களைக் குத்தி கிளறிட்டுத் தான் போவேன். நான் இருக்குற வரை உங்களுக்கு நிம்மதி இருக்காது மம்மா! ஓ சாரி ஆதிசக்தி இளவேந்தன்” என இளக்காரத்துடன் கூறி விட்டுச் செல்ல, ஆதிசக்தியின் கண்ணீர் ஏனோ நிதர்ஷனாவை வருந்த வைத்தது.

அவன் பின்னேயே வேகமாக வந்தவள், “ஏன் யாஷ் அப்படி பேசுனீங்க? பாவம் அழுதுட்டாங்க” என்றதில், “நீ பேசுனதை எல்லாம் விடவா?” என்றான் புருவம் சுருக்கி.

“நான் பேசுனா, அவங்களை வருத்தும். நீங்க பேசுறது அவங்களை உயிரோட கொல்லும் யாஷ். அந்த வேதனை அவங்க முகத்துல தெரியுது. உங்க அம்மாவுக்கு உங்களை மாதிரியே அழுத்தம் போலருக்கு. அந்த வேதனையை கூட அழகா மறைச்சுக்குறாங்க” எனப் பேசியபடி அறையை நோக்கிச் சென்றதில்,

“தென், எனக்காக நீ ஒன்னும் அவங்களை எதிர்த்துப் பேச வேண்டியது இல்ல…” என்றான் அழுத்தத்துடன் யாஷ் பிரஜிதன். ஏதோ ஒரு ஈகோ அவனுக்கு.

“இதோடா… இவருக்காக பேசுனோமாம்ல. நான் என் கேரக்டரை தான் செஞ்சேன்” என்றவளின் கூற்றில் ஆடவனின் அடர்ந்த புருவங்கள் இடுங்கியது.

“இப்ப நான் ரித்தியா இருந்தா, உங்க வைஃபா, உங்களை விட்டுக்கொடுத்த அம்மாவை நாக்கைப் பிடுங்குற மாதிரி கேள்வி கேட்க தான செய்யணும்? அது செய்யாம, அவங்க கூட ஒட்டிட்டு இருந்தா அவங்களுக்கு சந்தேகம் வராது. நம்ம பையனுக்காக ஒரு வார்த்தை கூட பேசாம எப்படி இருக்க முடியுதுன்னு… நாங்கள்லாம் நடிப்புன்னு வந்துட்டா நடிகையர் திலகத்தையே மிஞ்சிடுவோமாக்கும்…” எனச் சுடிதாரில் இல்லாத காலரைத் தூக்கி விட்டுக்கொண்டவள்,

“ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வரேன். குட் ஆப்டர்நூன் அரக்கா…” என்று துள்ளிக் குதித்து மாடி ஏறிட,

யாஷ் பிரஜிதனின் இதயத்தில் பெரியதாய் ஒரு பாரம். விழிகளில் மீண்டும் ஒரு உயிரிழப்பு. ஏமாற்றத்தின் காரணம் அவனுக்கே புரியாத போது, அவள் மீது துளிர்த்த நேசத்தை எங்கனம் விளங்கி கொள்வான்?

அன்பு இனிக்கும்
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
31
+1
128
+1
8
+1
8

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்