Loading

திமிர் 18

 

நல்ல உறக்கத்தில் இருந்தான் அகம்பன் திவஜ். தூக்கக் கலக்கத்தில் கண் திறந்தவள், அவன் முகத்தில் தென்படும் அமைதியில் தூக்கத்தைக் கைவிட்டு ரசிக்கத் தொடங்கினாள். அவள் மீது போட்ட கையை எடுக்கவில்லை. இறுக்கிப் பிடித்திருந்தவன் மூச்சுக் காற்று அவள் முகத்தை மோதியது. அவன் சுவாசம் பெற்று அவனவளாக மாறினாள்‌.

 

லேசாகப் புன்னகைத்து, ‘காட்டுமிராண்டி! எப்படிப் பிடிச்சிருக்கான் பாரு.’ சிலாகித்துக் கொண்டவளைச் சேர்த்துப் பிடித்து, “அப்படிப் பார்க்காதடி!” என்றான்.

 

“கேடி!”

 

“உன் அளவுக்கு இல்ல டி”

 

“ப்ச்! தள்ளு.”

 

“போடி!” அவள் உடலை இறுக்க, சிரிப்பை மறைத்துக் கொண்டு, “தூங்கிட்டிங்களா சார். தூங்காத இரவுக்குத் துணை போதுமா?” கேட்க, “ம்ம்” என மட்டும் ஓசை கொடுத்தான்.

 

“இனிக் குடிக்காத.”

 

“குடிப்பேன்!”

 

“சொன்னா கேளு.”

 

“முடியாது!”

 

“அகா…”

 

“நீ யாருடி சொல்ல?”

 

“அம்மு!” என்றதும் ஒரு விழியை மட்டும் திறந்து, “சாவடிச்சிடுவேன்!” என்றான்.

 

புன்னகை அதிகமாக, “ஆர்மி…” என்றாள்.

 

அவன் கைகள் இறுகியது. வலியில் முகம் சுழித்தாள். வலிக்கிறது என்றதும் பிடியை அதிகரித்தவன், “நடிக்காதடி!” எனப் பல்லைக் கடித்தான்.

 

“அனாதைப் பிள்ளைய இவ்ளோ கஷ்டப்படுத்துறியே, மனசாட்சி இல்லயா உனக்கு.”

 

“விளையாட்டுக்கும் அப்படிச் சொல்லாத.” அவளை விட்டவன் கன்னம் தாங்கி, “எப்பத் தெரியும்?” கேட்டான்.

 

அகம்பன் அன்பில் மனம் நிறைந்து, “பிளஸ் டூ முடிச்ச சமயம்.” என்றவளை அதிர்வோடு ஏறிட்டான்.

 

விரக்தியான புன்னகையோடு, “டாக்டர் ஆகணும்னு ஆசை. அம்மா எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டாங்க. அப்பா வேண்டாம்னு தடுத்தார். என்னென்னமோ காரணம் சொன்னாங்க. அது எல்லாத்தையும் மீறி, அம்மா என்னைக் காலேஜ்ல சேர்த்தாங்க. ஃபர்ஸ்ட் இயர் கம்ப்ளீட் பண்ணதோட சரி. அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் ரொம்ப டவுன் ஆயிடுச்சு, அப்பாக்கு உடம்பு முடியாமல் போயிடுச்சு. அவரைப் பார்க்க ஹாஸ்பிடல் போனேன். நான் பெத்த பொண்ணா இருந்திருந்தா, இந்நேரம் தன்னோட வாழ்க்கை முக்கியம் இல்ல. அப்பாவோட லட்சியம் தான் முக்கியம்னு அந்த ஹாஸ்பிடலை நடத்த ஆரம்பிச்சிருப்பான்னு சொல்லிட்டு இருந்தாரு.

 

என் காதை என்னால நம்ப முடியல அகா… இந்த உலகமே இருட்டான மாதிரி இருந்துச்சு. ஆனாலும், எனக்கு வலி கொஞ்சம் கம்மிதான். ஏன்னு தெரியுமா?” என அவன் முகம் பார்த்தவள் கலங்கிய கண்களோடு,

 

“நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து, கிஷோருக்குக் கிடைக்கிற எதுவும் எனக்குக் கிடைச்சதில்ல. விவரம் புரியாத வயசுல எனக்காக சப்போர்ட் பண்ற அம்மாவோட ஆதங்கமும், அப்பாவோட உதாசீனமும் புரியல. மெல்ல மெல்ல எனக்குள்ள கேள்வி எழ ஆரம்பிச்சது. அப்பா என்கிட்ட ரொம்பப் பாசமா இருப்பாரு. பதிலுக்கு என்னால அவர்கிட்டப் பாசம் காட்ட முடியாது. எனக்கும் அவருக்கும் நடுவுல ஏதோ ஒன்னு தடுக்கும். அதேதான் அம்மாகிட்டயும். என்கிட்ட எவ்ளோ பாசமா பேசினாலும், எனக்குள்ள அந்த உணர்வு வரல. நீதான் எல்லாம்னு சொல்லுவாரே தவிர, தனிமை என்னைச் சூழ்ந்து இருக்கும். எனக்கு என்ன தேவைன்னு தெரியல.‌ நிறைய நாள் என்னமோ இல்லைன்னு மட்டும் யோசிப்பேன். நீ வந்ததுக்கு அப்புறம் தான், என்னை நேசிக்கிற ஒரு உயிர் கூட என் பக்கத்துல இல்லன்னு புரிஞ்சுது.

 

எடுத்து வளர்த்த பாசம் கூட உன் பொண்ணுக்கு இல்லன்னு அவர் சொன்ன வார்த்தை, குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துச்சு. கடைசில டிஸ்கன்டினியூ பண்ணிட்டு அடுத்த வருஷம் அக்கவுண்ட்ஸ் எடுத்துப் படிச்சேன். காலேஜுக்குப் போகாம எக்ஸாம் மட்டும் எழுதினேன். என்னோட வாழ்க்கை அந்த ஹாஸ்பிடல்லயே முடிஞ்சிடுச்சு.” என்றவளைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.

 

தெளிவாகப் புரியவில்லை என்றாலும், அவள் நிலை புரிந்து அமைதி காக்க, தன்னவனுக்குத் தன் காலத்தை விரிவாக விவரித்தாள்.

 

பன்னிரண்டாம் வகுப்பை முடித்த கையோடு மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு நின்றவளை, எவ்வளவோ தடுத்துப் பார்த்தார் முரளி. சுமந்து பெறவில்லை என்றாலும், அவள் மீது பேரன்பு கொண்ட அஞ்சலை முட்டி மோதிக் கல்லூரியில் சேர்த்தார். காரணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தவர், இரண்டாம் ஆண்டு நுழையும்போது தன் வேலைகளை ஆரம்பித்தார். எந்நேரமும் குடித்துவிட்டு, மருத்துவமனை நஷ்டத்தில் செல்கிறது எனப் புலம்பினார்.

 

சரியான பாதையை நோக்கிச் செல்ல முடியாத இரண்டும் கெட்டான் வயதில் இருந்தவள், கண் முன்னே உடல்நிலை மோசமாகிப் படுத்தார் முரளி. தன்னைவிட ஒரு வயது குறைவானவன் மீது சுமத்தாத பாரத்தைத் தன் மீது ஏன் சுமத்துகிறார்கள் என்பதைச் சிறிதும் யோசிக்காதவள், பதினேழு வயதில் சிஇஒ பதவியை ஏற்றுக் கொண்டாள். கேள்விப்பட்ட அனைவரும் முரளியின் செயலைக் கண்டபடி விமர்சிக்க,

 

“என் பொண்ணு மேல முழு நம்பிக்கை இருக்கு. அவள் திறமை தெரிஞ்சதனாலதான், இந்தச் சின்ன வயசுல இவ்ளோ பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கேன். இந்த உலகமே திரும்பிப் பார்க்கற அளவுக்கு இந்த ஹாஸ்பிடலை வளர்த்துக் காட்டுவா…” என அவளை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.

 

அன்றிலிருந்து அந்த மருத்துவமனை தான் அவளுக்குச் சகலமும். மகளை முன்னிறுத்திப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார் முரளி. எல்லாம் அவள் கண் அசைவில் நடப்பதாக நம்ப வைத்தார். அவளை நம்பித்தான் குடும்பத்தில் இருக்கும் மூவரும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தினார். பள்ளி வரை பெண்கள் பள்ளிக்கூடத்தில் படித்தவள், கல்லூரி சென்றுத் தனக்கான எதையும் யோசித்து விடக்கூடாது என்ற குருட்டுப் புத்தியைச் சரியாக நிறைவேற்றிக் கொண்டார்.

 

குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல், வேலை வேலை என்று ஓடத் தொடங்கினாள். தன்னைப் பற்றிய தேடுதலை, யோசிக்கக்கூட நேரம் கொடுக்கவில்லை முரளி. அடிக்கடி அவள் உள்ளம் பாதிக்கும் அளவிற்கு, “கிஷோரை விட நீ தாம்மா எனக்கு முக்கியம். நீதான் இந்த அப்பாவக் கடைசிக் காலத்துல தாங்கணும். உனக்குன்னு ஒரு வாழ்க்கைய யோசிச்சு, இந்த அப்பாவைக் கை விட்டுடாத. நீ இல்லனா அடுத்த செகண்ட் என் உயிர் பிரிஞ்சிடும்.” போன்ற வார்த்தைகளை எல்லாம் விதைப்பார்.

 

குற்ற உணர்ச்சிக்கும், நன்றிக் கடனுக்கும் தன்னை அர்ப்பணிப்பதாக எண்ணி இத்தனைத் தூரம் வந்தவளுக்கு, அகம்பன் எதிர்பாராத திருப்பம்…‌ அகம்பன் அவள் வாழ்வில் வந்ததற்குப் பின்னாலும், பல்வேறு சதித்திட்டங்கள் இருப்பதை அறியாது மனத்தில் இருப்பதை எல்லாம் கொட்டினாள்.‌ தன்னவள் கடந்து வந்த பாதையைக் கேட்டவன் அமைதியாகப் படுத்திருக்க,

 

“இதெல்லாம் கேட்டுட்டு அப்பா, அம்மாவைத் தப்பா நினைக்காத. அவங்களுக்கு என்னை உண்மையாவே ரொம்பப் பிடிக்கும். பெத்த பிள்ளை கையில ஹாஸ்பிடலைக் கொடுக்காம என்னை நம்பிக் கொடுத்தாங்க. அப்பவே அவங்க மனசு எனக்குப் புரிஞ்சிடுச்சு. நான்தான் உண்மை தெரிஞ்சதுல இருந்து அவங்களை விட்டு விலகி இருக்கேன்னு தோணுது. இப்பக் கூட என் வாழ்க்கைக்காகத் தான், இவ்ளோ தூரம் வந்து உன்கிட்ட வாங்கக் கூடாத அடியை வாங்கிட்டுப் போயிருக்காங்க.” என்றவளைப் பொருள் அடக்க முடியாத முகபாவனையில் பார்த்தான்.

 

“என்ன?”

 

அமைதியாகத் தலையசைத்தவன் நெஞ்சில் முகம் புதைத்து, “நான் எப்பக் கிளம்பட்டும்?” கேட்டாள்.

 

“எங்க?”

 

“சென்னைக்கு!”

 

“எதுக்கு?”

 

அவனை விட்டு விலகியவள், “சென்னைக்கு எதுக்குப் போவாங்க?” எதிர் கேள்வி கேட்டாள்.

 

“அதான் எதுக்கு?”

 

“என் வீட்டுக்குப் போக வேண்டாமா?”

 

“எது உன் வீடு?”

 

“ஹே… அகா…”

 

“சீரியஸா கேட்கிறேன், எது உன் வீடு?”

 

“இவ்ளோ நாள் நான் எங்க இருந்தனோ, அதுதான் என்னோட வீடு!”

 

“அப்படின்னு நீ நினைச்சுட்டு இருந்திருக்க!”

 

“ஐயோ! நான் சொன்ன மாதிரி நீ அவங்களைத் தப்பாதான் புரிஞ்சிக்கிட்ட.” என்றவள் உதட்டில் விரல் வைத்துப் பேச்சை நிறுத்திய அகம்பன்,

 

“இனி உனக்கும், அவங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதுதான் உன்னோட வீடு! நான்தான் உன்னோட சொந்தம்!” என்றவனை அதிர்வோடு பார்த்தாள்.

 

“அது இல்ல… ஹாஸ்பிடல்…”

 

“ஹாஸ்பிடல் எப்படி நடக்கணுமோ, அப்படிச் சரியா நடக்கும். நீ அங்கப் போகணும்னு எந்த அவசியமும் இல்லை.”

 

“நான் எப்படி இங்க இருக்க முடியும்?”

 

“இதுதான் உனக்கான நிரந்தரம்!”

 

“விளையாடாத அகா… அப்பாவும், கிஷோரும் என்னோட நல்லதுக்காகத் தான் இங்க வந்தாங்க.” என்றதும் கோபம் வந்துவிட்டது அகம்பன் திவஜ்க்கு.

 

“சும்மா என்னடி உன்னோட நல்லது? அவனுங்க பிளான் பண்ணி எல்லாத்தையும் பண்ணி இருக்காங்க. அதுக்கு நீ ஒரு சாக்கு, மத்தபடி அவனுங்களுக்கு உன் மேல எந்தப் பாச மண்ணாங்கட்டியும் இல்ல.”

 

“பாசம் இல்லாமதான், உனக்கும் அனுவுக்கும் நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்துனாங்களா? அவங்க மட்டும் நிறுத்தலனா, இந்நேரம் அவ உனக்குப் பாதிப் பொண்டாட்டி ஆகி இருப்பா.”

 

“அவங்க வரலைன்னாலும், இந்த நிச்சயதார்த்தம் நடந்திருக்காது!”

 

“சும்மா சொல்லாத, போ…” என அவனைத் தள்ளிவிட்டு எழுந்தவள் கைப்பிடித்துத் தன் மீது சாய்த்துக் கொண்டவன், “நிஜமாவே நடந்திருக்காதுடி!” என்றான்.

 

“அப்போ இது என்ன?” என அவன் விரலில் இருக்கும் மோதிரத்தைக் காட்ட, “இதுவா…” என அலட்சியமாக அதைக் கழற்றி வீசினான்.

 

புசுபுசுவென்று கோபம் துளிர்விட்டு, அவன் மார்பைப் பதம் பார்க்க ஆரம்பித்தாள். சுள் என்று விழுந்தது ஒவ்வொரு அடியும். ஆத்திரம் தாங்காது கை நோக அடித்தவளைத் தடுக்காது, பதக்கம் வாங்கியது போல் மார்பை விரித்துக் காட்டினான். அதைக் கண்டு இன்னும் கோபம் கூடி வர,

 

“என்ன திமிரு இருந்தா, என்னை எதிர்ல வச்சுக்கிட்டு அவள் கூட ஜோடி போட்டு நிப்ப. என்ன சொன்ன? இந்த ரிங்கைக் காட்டி, அனு கூட எப்படி இருக்கணும்னு நினைச்சியோ, அப்படி என்கூட இருந்தியா… இந்த விரலைத் தான அவள் பிடிச்சா…” மோதிர விரலை முதலைப் பற்களால் கடித்தாள்.

 

அசையாத அந்த இரும்புப் பாறை, “ஆஆஹா… அடியேய்ய்ய் வலிக்குதுடி!” கத்திக் கதறினான்.

 

“அவள் உன் கையப் பிடிக்கும் போது எனக்கும் இப்படித்தான் வலிச்சது.”

 

“சத்தியமா இந்த எங்கேஜ்மென்ட் நடந்திருக்காதுடி!”

 

“நின்ன அதப்புல பேசுறியா?”

 

“உன் மேல சத்தியமா!” என்றதும், அடிப்பதை நிறுத்தியவள் அவனை முறைக்க, முறுக்கிக் கொண்டிருக்கும் தன்னவளை இழுத்து மார்பில் போட்டான்.

 

வீம்புக்காக எழுந்தவள் முதுகைக் கை கொண்டு தடுத்தவன், அனுவுடன் நடந்த பேச்சு வார்த்தைகளைக் கூறினான். எங்கிருந்துதான், அத்தனைக் கோபம் வந்ததோ, ‘விர்ரென’ எழுந்தாள்.

 

“எங்கடி போற?”

 

“அவளுக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கனும்? பிடிக்கலைன்னா, மூடிக்கிட்டு வீட்ல இருக்க வேண்டியதுதான. அதை விட்டுட்டுப் பெரிய இவ மாதிரிப் பேசி இருக்கா… நீ ஏன்டா கேட்டுட்டுச் சும்மா இருந்த. என்கிட்ட எவ்ளோ சீன் போடுற. அங்கயே கழுத்தைப் பிடிச்சுக் கொன்னுருக்க வேண்டாம். அவ்ளோ பேச்சுப் பேசுனவளுக்கு என் கையால டிரஸ் எடுத்துட்டுப் போய் கொடுக்க வச்சிருக்க. நான் கூட நிச்சயம் நின்னுடுச்சுன்னு அவள் மேல பாவப்பட்டேன். சரியான கெட்ட புத்தி. சாகப் போறவனாவே இருந்தாலும், மூஞ்சிக்கு நேரா அப்படிப் பேசலாமா? உண்மையா அந்த நிலைமையில இருக்கறவங்க மனசு எவ்ளோ காயப்பட்டிருக்கும்…” என மூச்சு முட்டப் பேசிக் கொண்டிருக்கும் காதலியைத் தலை சாய்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

 

 

“எதுக்குச் சிரிக்கிற?”

 

“படபடன்னு வெடிக்கிற.”

 

“உனக்குக் கோபமே வரலையா?”

 

“ம்ஹூம்!”

 

“அவளை அவ்ளோ பிடிக்குமோ?”

 

“ஹா ஹா…”

 

“எனக்குச் செம கடுப்பா இருக்கு ஆர்மி. அவ எப்படி உன்னை அப்படிப் பேசலாம். நல்லா கேட்டா தான் என் மனசு ஆறும். வா, அவளைச் சம்பவம் பண்ணிட்டு வருவோம்.”

 

“சம்பவமா…”

 

“ம்ம்!”

 

“என்னடி இப்படிக் கிளம்பிட்ட?”

 

“எனக்குப் பிடிக்கல.”

 

“எது?”

 

“கேவலமாப் பேசுனதைக் கேட்டும் அமைதியா இருக்கறது.”

 

“அவகிட்ட நான் ஏன் கோபப்படனும்? எனக்குச் சம்பந்தப்படாத ஒருத்திகிட்ட என் கோபத்தைக் காட்ட மாட்டேன்.”

 

“இருந்தாலும் அனு பேசுனது தப்பு தான?”

 

“எனக்கு நல்லது தான!”

 

“அந்த நேரம் உனக்குக் கஷ்டமா இருந்திருக்கும்ல.”

 

“கொஞ்சம் கூட இல்லை. ஓரளவுக்கு கெஸ் பண்ணிதான் அவள்கிட்டப் பேசினேன். அதுவும் இல்லாம அனு மேல எனக்கு எந்த இன்ட்ரஸ்டும் இல்ல. எப்படி நிறுத்துறதுன்னு தெரியாம இருந்த எனக்கு லட்டு மாதிரி வழியைக் காட்டி விட்டுட்டா.”

 

“சாரி…”

 

புன்னகை முகமாக அவளைத் தழுவிக் கொண்டவன், “ஏன்டி செல்லம்?” கேட்டவன் சட்டை பட்டனைத் திருகி, “என்னாலதான, அந்த மாதிரியான வார்த்தைய எல்லாம் நீ கேட்ட.” சோகமாகக் கூறினாள்.

 

“லூசு! ரிப்போர்ட் மாறுனதுக்கும், உனக்கும் என்ன சம்பந்தம்? எவனோ ஒருத்தன் பண்ண தப்பை உன் தலையில போட்டுக்காத.”

 

“அது இல்ல…” எனத் திருகிய பட்டனை இன்னும் திருகி, “நீ இல்லாத நேரம் போன்ல அப்பாகிட்டப் பேசினேன். உடனே அன்னைக்கு நைட்டே கிளம்பி வரச் சொன்னாரு. உன்னை விட்டுப் போக முடியல அகா… அவர் பேச்சையும் மீறி உன் கூட இருந்தேன். அந்தக் கோபத்துல அப்பா தான்…” என அவன் முகம் பார்த்தவள் பட்டனில் இருந்து கையை எடுத்தாள்.

 

சிவந்த முகம் கண்டு அஞ்சியவளிடம், “இனி அவனை அப்பான்னு சொல்லி என்கிட்டப் பேசாத.” என்றதும், பயத்தில் மதுணிகாவின் தலை மெதுவாக ஆடியது.‌

 

அனைத்தையும் செய்து விட்டுத் தன் கையில் இருந்து தப்பி ஓடிய முரளியை எண்ணிப் பல்லைக் கடித்தவனுக்குக் கமலிடமிருந்து அழைப்பு வந்தது. ஏற்றுக் காதில் வைத்து, “வரேன்னு சொல்லு.” என்றான்.

 

“அம்மா வந்திருக்காங்க, போய் பார்த்துட்டு வரலாம்.”

 

“நீ மட்டும் போ…”

 

“ஏன்?”

 

“பயமா இருக்கு!”

 

கோபத்தை விடுத்துத் தன்னவளின் கையை உள்ளங்கையில் வைத்தவன், “சூழ்நிலை மாறக் கொஞ்சம் டைம் எடுக்கும். என்ன ஆனாலும், இனி இதுதான் உன்னோட வீடு. இங்க இருக்கற எல்லாருக்கும் என் மேல பாசம் அதிகம். எனக்கு இப்படி நடந்த கோபத்தை உங்கிட்டத் தான் காட்டுவாங்க. எது நடந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.” என்றதும் அவள் பயம் இன்னும் அதிகரித்தது.

 

“எல்லாம் சரியாகுற வரைக்குமாவது நான் எங்க வீட்ல…”

 

“ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு? சும்மா பேசுனதையே பேசிக்கிட்டு இருக்க. உன் அப்பாதான் வேணும்னா கிளம்பிப் போடி.”

 

சட்டென்று கண்கள் கலங்கிவிட்டது. அழுகையின் இடையே அவனிடம் மன்னிப்பைக் கேட்க, கோபத்தில் மூச்சை இழுத்து விட்டான்.

 

“சாரி…”

 

அவளைப் பார்க்காது திரும்பிக் கொண்டான். அவனது உதாசீனத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தோள் மீது தலை சாய்த்தவள், தன்னோடு அவன் கையை இறுக்கிக் கொண்டு, “நீ இருக்கும் போது, யாரும் என்னை எதுவும் பண்ணிட முடியாதுன்னு எனக்கும் தெரியும். என்னோட பயம் எல்லாம் என்னால உனக்கு ஏதாச்சும் பிரச்சினை வந்துடுமோன்னு தான். ஒரு வார்த்தைக்கே, நீ என் மேல எவ்ளோ கோபப்படுற. நாளைக்கே நடந்ததை வச்சு ஏதாச்சும் பிரச்சினை வந்து நீ என்னை மொத்தமா வெறுத்துட்டா… அதுக்குத் தள்ளி இருந்து இப்பவே பழகிப்பேன்ல.” எனும் வார்த்தைகள் அவன் கோபத்தைக் குறைத்தது.

 

தோள் சாய்ந்திருந்தவள் கன்னத்தை இதமாகப் பிடித்து, “அனுகிட்டக் கோபப்படாததுக்கும், உன்கிட்டக் கோபப்படுறதுக்கும் ஒரே ஒரு காரணம் தான். நீ எனக்கானவள்! உன்கிட்ட எனக்கு எவ்ளோ மனஸ்தாபம் இருந்தாலும், காதல் குறையாது. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். மத்தவங்களைப் பத்தி யோசிக்காம, நம்பளைப் பத்தி மட்டும் இனி யோசி. மத்தவங்களுக்காக வாழ்ந்தது போதும்!” என்றவன் பேச்சுக்குப் பெருமூச்சோடு தலையாட்டினாள்.

 

***

 

மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்டார் கற்பகம். அவர் வீட்டிற்கு வருவதற்கு முன்னரே மதுணிகா வந்த செய்தி மூவருக்கும் சென்றிருந்தது. கற்பகத்தோடு இருந்த அனுவிற்கு அத்தனைப் பதைபதைப்பு. அவசர அவசரமாக, அவரை அழைத்துக்கொண்டு இல்லம் வந்தவள் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறாள்.

 

கற்பகத்திற்கோ ஆத்திரம். அவர் பெற்ற மூத்த மகனுக்கு பிபி எகிறியது. நவரத்தினத்தின் நிலை சொல்லவே வேண்டாம். வந்ததும் வராததுமாகத் தன் வீட்டு ஆள்கள் அனைவரையும் விளாசி விட்டார். இத்தனைக்கும் காரணமானவன் மீது, அதை நேரடியாகக் காட்ட முடியாது கமலை வைத்துத் தூது விட்டனர்.

 

எதற்கு என்று தெரிந்தே அவளோடு வந்தான். தன் வீட்டு மகனை முறைப்பதற்குப் பதில், அனைவரின் பார்வையும் அவனோடு வந்தவளைச் சுட்டெரித்தது. அதை அறிந்த மதுணி, காதலனின் கைப்பிடிக்கத் தன்னவளின் பயம் அறிந்து தோள் மீது கை போட்டான். அனுவின் முகம் இருண்டு போனது. அவளைக் கண்டதும், அகம்பன் சொன்ன அனைத்தும் நினைவுக்கு வர, பயம் மறந்து விழியால் பஸ்பம் ஆக்கினாள்.

 

“இன்னும் ஒரு நாள் ஹாஸ்பிடல்ல இருந்துட்டு வரலாமேமா…”

 

“இவ எதுக்குடா இங்க இருக்கா?”

 

“நீ எதுக்குடா ஆதி, இப்ப இவ்ளோ டென்ஷனாப் பேசுற?”

 

“அகம்பா…”

 

“என்னப்பா?”

 

“ஒண்ணுமே நடக்காத மாதிரிப் பேசாதடா. இவ எதுக்கு இங்க இருக்கா? இவளையும், அவனுங்களையும் சும்மா விட்டதுக்கே ஆத்திரத்தை அடக்க முடியாம இருக்கேன். நீ பாட்டுக்கு வீட்ல கூட்டிட்டு வந்து வச்சிருக்க. முதல்ல அவளை இங்கிருந்து அனுப்பு.”

 

தன் வீட்டு ஆள்களுக்குப் பதில் சொல்லாமல், பார்வையைச் சுழற்றினான். வேலையாள்கள் பட்டிமன்றத்தைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்க, “இது என்ன புதுப் பழக்கம், உங்க யாருக்கும் வேலை இல்லையா?” என்ற கர்ஜனையில் அந்தக் கூட்டம் கலைந்து செல்ல,

 

“உனக்கு இங்க என்ன வேலை” கேட்டான் அனுசியாவிடம்.

 

“நாங்க என்ன பேசிட்டு இருக்கோம், நீ என்னடா பேசுற?”

 

“நம்ம வீட்டு விஷயத்தை நமக்குள்ள தான் முடிக்கணும். உங்களை மாதிரிப் புத்தி கெட்டு எல்லாரும் பார்க்கப் பேச முடியாது என்னால.”

 

“எவன்னே தெரியாதவனுங்க, ஊரு பார்க்க உன்னைப் பேசிட்டுப் போனது தப்பாத் தெரியல. அனு இங்க இருக்கிறது தப்பாத் தெரியுதா?”

 

“இங்கப் பாரு ஆதி…” எனப் பேச வந்தவனை இடைநிறுத்தியது அனுவின் குரல.

 

“நீ பண்றது சரி இல்ல அகம்பா… ஆன்ட்டி உடம்பு முடியாமல் ஹாஸ்பிடல்ல இருக்கும்போது, அவங்களைப் பத்தி யோசிக்காம இவ கூட இருக்க. ஆன்ட்டியோட நிலைமைக்கு இவதான் காரணம்.” என்றதும் சீற்றம் பொங்கியது.

 

இருக்கையில் இருந்து எழுந்தவன், “என் எதிர்ல நின்னுப் பேசுற அளவுக்கு இவளுக்கு இடம் இருக்குன்னா, எனக்கு இங்க எந்த மரியாதையும் இல்லன்னு அர்த்தம். மரியாதை இல்லாத இடத்துல அகம்பன் திவஜ் இருக்க மாட்டான்.” விருவிருவென அங்கிருந்து வெளியேற, அகம்பனின் இந்தப் புது அவதாரத்தை வாய்ப் பிளந்து பார்த்தாள் மதுணிகா.

 

உடன்பிறந்தவனும், தந்தையும் மாற்றி மாற்றி அழைக்க, கட்டுக்கடங்காத காளை யாரையும் மதிக்காமல் படியேறியது.

 

“அகம்பா!” அன்னையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட ஆறடிக் கன்று அமைதியாக நிற்க, “நான் உன்கிட்டப் பேசணும்.” என்றார் கற்பகம்.

 

அலட்டிக் கொள்ளாமல் திரும்பியவன் முகத்தில் குறையவில்லை கோபம். ஆண்கள் இருவரும் அவனுக்குக் கட்டுப்பட்டு வாயை மூடிக்கொள்ள, இரண்டு முறை அனுவை நோக்கிச் சொடக்கிட்டான். அஞ்சி அவள் பார்க்க, ஆள்காட்டி விரலை நீட்டிக் கிளம்பச் சைகை செய்தான். அரண்டவள் கற்பகத்தைக் காண, “நீ வீட்டுக்குக் கிளம்பு அனு, நான் அப்புறம் வந்து அங்கிள்கிட்டப் பேசுறேன்.” என்றான் ஆதி.

 

மதுணிகா முன்பு தன்னை அவமானப்படுத்திய அகம்பனை, முறைக்க முடியாததால் பக்கத்தில் இருந்த அவளை முறைத்து விட்டு வெளியேறினாள். அவள் உருவம் மறையும் வரை அதே இடத்தில் நின்றிருந்தவன், மூர்க்கத்தனமான பார்வையோடு படியிறங்கப் பார்க்கப் பயமாக இருந்தது அவன் காதலிக்கு.

 

“உட்காரு!”

 

“என்னன்னு சொல்லுங்கம்மா?”

 

“உட்காருடா பேசலாம்.”

 

“எதுக்கு நான் உட்காரனும்? எவளோ ஒருத்தி முன்னாடி என்னைக் கூட்டா சேர்ந்து அசிங்கப்படுத்துறீங்க. இந்த வீட்ல எந்தப் பேச்சு வார்த்தை வந்தாலும், சம்பந்தப்பட்டவங்களைத் தவிர வேற யாரும் இருக்கக் கூடாதுன்னு தெரியும்ல. அப்புறம் எதுக்கு எல்லாரும் இருக்கும்போது பேசுறீங்க. கொஞ்ச நாள் நான் இங்க இல்லன்னா எல்லாம் மறந்து போயிடும், அப்படித்தான…” என அன்னையிடம் எகிறியவன் தந்தை புறம் திரும்பினான்.

 

அதுவரை முறைத்துக் கொண்டிருந்தவர் கமுக்கமாகத் தலை குனிய, “நான், உங்க கட்சி ஆள் இல்ல, என்ன பேசினாலும் அமைதியா இருக்கணும்னு நினைக்காதீங்க.” என்றான்.

 

அடுத்துத் தன்னிடம் தான் என்று ஆதி தயாராக இருக்க, அண்ணன் பக்கம் திரும்பவே இல்லை அகம்பன். பெற்றவர்களையே இந்தக் காட்டுக் காட்டும் அவன், தன்னிடம் காட்டியதெல்லாம் ஒன்றுமே இல்லை என்ற பாவனையில் அவள் நிற்க,

 

“எப்படி?” அவளுக்கு மட்டும் கேட்குமாறு பேசினான் கமல்.

 

“இது யாருடா, புதுசா இருக்கு?”

 

“இதுதான் ஒரிஜினல் பீஸ்! இந்தப் பீஸைத் தான் உங்க இஷ்டத்திற்கு மாத்தி வச்சிருக்கீங்க.”

 

“நெருப்பு மாதிரி இருக்கான்டா!”

 

“எரிமலை மாதிரி இருப்பாரு. இன்னைக்கு ஏதோ நீங்க இருக்கறதால அனல் காத்து கம்மியா அடிக்குது.”

 

“எப்படித்தான் இவன் கூட, இத்தனை வருஷம் இவங்க மூணு பேரும் குடும்பம் நடத்துனாங்களோ?”

 

“ஐயோ பாவம்!”

 

“அவங்க தான?”

 

“சாரி மேடம். அந்தப் பாவத்துக்குச் சம்பந்தப்பட்ட ஆள் நீங்கதான்.”

 

“ஹான்!” எனப் பேய் முழி முழிப்பவளைக் கண்டு கமுக்கமாகச் சிரித்தவன், “அவங்களாவது பாவம் மட்டும்தான். அவரோட குடும்பம் நடத்தப் போற நீங்கதான் ஐயோ பாவம்!” என்றான்.

 

“வாய மூடுடா…”

 

“உங்க வாழ்க்கையக் குழி தோண்டி மூடிட்டீங்க.”

 

“சாவடிச்சிடுவேன்!”

 

“இது அவரோட ஃபேவரிட் டயலாக்!”

 

“செத்தச் சும்மாதான் இருடா.”

 

“ஆனாலும், ரொம்பத் தில்லு மேடம் உங்களுக்கு. ஆனானப்பட்ட அகம்பன் திவஜையே சாச்சிட்டீங்களே…” என இருவரும் ரகசியமாகச் சலசலத்துக் கொள்ள, “வெளில போய் பேசுடா…” என‌ அம்பை அவன் பக்கம் திருப்ப, இருவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

 

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்