சிவா வேலை விட்டு வந்ததும் அவனை அமர வைத்து விசயத்தை சொன்னாள் சண்முகி.
“பண்ணலாம்கா.. பண்ணா கண்டிப்பா ஆக்ஷன் எடுப்பாங்க”
“அப்ப அனுப்புடா.. எதாவது பண்ணு.. அவங்க ரெண்டு பேரு வேலையும் போகனும். வேலை பார்க்க போனா அத பார்க்காம இப்படி ஒரு கூத்த பண்ணிருக்குங்க.. அதுங்கள வேலைய விட்டு துரத்தி அடிச்சா தான் புத்தி வரும்”
உடனே சிவா சுப்பிரமணி வேலை செய்யும் நிறுவனத்தின் தலைமையகத்தை அணுக முயற்சி செய்தான். நிறுவனத்தின் விவரத்தை பார்த்ததும் அவனது புருவம் சுருங்கியது.
‘அமரோட கம்பெனியா இது?’ என்று ஆச்சரியப்பட்டான்.
அமரின் கரங்கள் பல இடங்களில் நீண்டிருந்தது. இப்போது கூட பிரியாவின் நிறுவனத்தை வாங்கினாலும் அவன் பெயரை மாற்றவில்லை. பெரிதாக நிர்வாகத்தை மாற்றவில்லை. அவனுக்கு தேவையானதை மாற்றி விட்டு பிரியாவை பார்ட்னராக ஆக்கிக் கொண்டான். அவள் பயிற்சி பெற்றதும் பொறுப்பை அவளிடம் கொடுத்து விட்டு அவன் கிளம்பி விடுவான்.
அது போல அவன் நிறைய வாங்கியிருப்பான் போலிருக்கிறது. அதில் சுப்பிரமணி வேலை செய்த நிறுவனமும் அடக்கம்.
“என்னடா பார்த்துட்டே இருக்க?”
“இதோ பண்ணுறேன்கா” என்றவன் யோசனைகளை விட்டு விட்டு மின்னஞ்சல் தயாரித்தான். சண்முகியை சுப்பிரமணி ஏமாற்றியது அதுவும் அலுவலகத்தில் வைத்து நடந்தது அனைத்தையும் சண்முகி சொல்வது போலவே எழுதி தேவையான ஆதாரங்களை இணைத்து அனுப்பி வைத்தான்.
“பார்த்துட்டா கண்டிப்பா விசாரிப்பாங்க. வேலை போச்சுனா கண்டிப்பா தெரிஞ்சுடும்”
சண்முகிக்கு இதைக்கேட்டு திருப்தியாக இருந்தது. எல்லாம் செய்து வேலைக்கு அனுப்பினால், அங்கே வேறு ஒருத்தியை கொஞ்சுவானா? இனி வீட்டில் இருந்து குருவை நன்றாக கவனிக்கட்டும் என்று நினைத்தாள்.
✦
கூட்டம் முடிந்து அன்று மாலை பிரியா வீடு திரும்பினாள். வந்ததும் சொல்வதற்கு நிறைய கதைகள் வைத்திருந்தாள்.
கயலிடமும் வளவனிடமும் பேசி முடித்து விட்டு இரவு அறைக்குத் திரும்ப அமர் செய்தி அனுப்பினான்.
கூட்டத்தை பற்றிய விவரங்கள் மற்றும் அங்கு பேசியதை பற்றி அறிக்கை எழுதி தர முடியுமா? என்று கேட்க உடனே ஒப்புக் கொண்டாள்.
அமரும் அங்கே ஒரு நாள் கூட்டத்தில் பேசியிருந்தான். அவன் பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த காணொளியை மற்றவர்களிடமிருந்து வாங்கி வைத்துக் கொண்டாள்.
சிவாவுக்கு செய்தி அனுப்பி விட்டு அவள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள். வேலை பாதி சிவாவிடம் பேச்சு பாதியுமாக செல்ல, சிவா இத்தனை நாள் சொல்லாததை இன்று சொல்லி விட்டான்.
சண்முகியின் வாழ்வில் நடந்த பிரச்சனை. கடன் கொடுத்தவர்களின் தொல்லை. எல்லாவற்றையும் ஒப்பித்து விட அதை கேட்டிருந்த பிரியா வேலையை பாதியில் விட்டாள்.
சிவாவின் சோகம் அவளை தாக்க வேலையில் மனம் செல்லவில்லை. அவனுக்கு ஆறுதல் சொன்னாலும் தன்னால் எந்த வகையிலும் உதவ முடியாது என்பது அவளுக்கு வருத்தமாக இருந்தது.
அதே வருத்தத்தோடு தான் காலையில் அலுவலகம் சென்றாள். அவளுக்கு முன்பே வந்து காத்திருந்த அமர் அவளது சோகம் நிறைந்த முகத்தை பார்த்து புருவம் சுருக்கினான்.
‘நேத்து நல்லா தான இருந்தா? ஒரு வேளை சிவா பிரச்சனைய இவ கிட்ட சொல்லிட்டானா?’ என்று கணித்தவனுக்கு கோபம் வந்து விட்டது.
‘இவ கிட்ட சொல்லி இவள கஷ்டப்படுத்தியே ஆகனுமா?’ என்று நினைத்து பல்லைக்கடித்தான்.
அவனை தேடி வந்த பிரியா மன்னிப்பு கேட்டாள்.
“சாரி அமர்.. நேத்து என்னால முடிக்க முடியல” என்று மன்னிப்பு கேட்டதும் அமரின் கோபம் சிவாவின் மீது பலமடங்கு உயர்ந்தது. ஆனால் அவளிடம் அதை காட்டவில்லை.
“இட்ஸ் ஓகே பிரியா.. டேக் யுவர் டைம்”
“தாங்க்யூ. இன்னைக்கு முடிச்சுடுறேன்” என்றவள் திரும்பிச் சென்றாள்.
அவள் முகத்தில் இருந்த சோகமும் அவள் நடையில் இருந்த தளர்ச்சியும் அமருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
வேலை என்று வந்தால் மற்ற அனைத்தும் மறந்து போகும் அவளால், இன்றைய வேலையை முடிக்கவில்லை என்றால் அது யாருடைய தவறு? சிவாவினுடையது அல்லவா?
அதற்கு அவன் தண்டனை அனுபவிக்க வேண்டும். அனுபவிக்கும் வரை அமரும் விட மாட்டான்.
கணேஷை அழைத்தான். அவனது அடுத்த திட்டத்தை பற்றி பேச ஆரம்பித்து விட்டான்.
அமரின் பிடிவாதத்தை அறியாத பிரியா சிவாவுக்காக உருகிக் கொண்டிருந்தாள். அவளால் வேலையை சரிவர செய்ய முடியவில்லை. அவள் ஊர் சுற்றி சந்தோசமாக இருந்த போது சிவா இங்கே பிரச்சனையில் வருந்திக் கொண்டிருந்திருக்கிறான்.
அவளால் இப்போது என்ன உதவி செய்ய முடியும்? சண்முகியின் கணவனின் துரோகம் வெளிவந்தது ஒரு வகையில் நல்லது தான். இன்னும் அதிக காலம் ஏமாந்து போகாமல் சண்முகி தப்பித்து விட்டாள்.
கடன் விசயம் தான் இப்போது பெரிய பிரச்சனை. கடனாக வாங்கியிருக்கும் பணம் பெரிய தொகையே. லட்சக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்திருக்கின்றனர். மொத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கும் அளவு இப்போது பணம் இல்லை.
கொடுத்து உதவ அவளிடமும் பணம் இல்லை. தந்தையிடம் தான் கேட்க வேண்டும். கேட்டால் காதல் விசயத்தை சொல்ல வேண்டும். காதலை சொல்ல இது நிச்சயமாக சரியான நேரமல்ல.
கடன் தொல்லையில் இப்படி பல பிரச்சனைகளும் இருக்கும் நேரம் சிவாவை அவளால் அறிமுகம் செய்ய முடியாது. இப்படி அவனுக்கு உதவ முடியாமல் இருப்பதே அவளை அதிகம் வருத்த வேலையில் தவறுகள் நிறைந்தது.
அதை கவனிக்காமலே அமரிடம் கொடுத்து விட, அவன் படித்து விட்டு புருவம் சுருக்கினான்.
“பிரியா.. நிறைய தப்பிருக்கு” என்று அவன் சுட்டிக் காட்ட, “சாரி..” என்று மன்னிப்பு கேட்டாள்.
எப்போதும் இவள் இப்படி இருந்தது இல்லை. அவளின் சோகமே அமரின் கோபத்துக்கு தூபம் போட்டது. அதை காட்ட முடியாதே.
“சரி நீ போ.. நான் பார்த்துக்கிறேன்”
“இல்ல இல்ல கொடுங்க.. நானே செய்யுறேன்”
“நீ சரியா இல்ல.. டயர்டா தெரியுற.. ரெஸ்ட் எடு நான் பார்த்துக்கிறேன்” என்றதும் அவள் சோகத்துடனே நன்றி சொல்லி கிளம்பி விட்டாள்.
மாலை வேலை முடிந்ததும் மீண்டும் பிரியாவை அழைத்தான் அமர். அதுவரை அவளை அவன் தொந்தரவு செய்யவில்லை.
“நாளைக்கு லீவ் எடுத்துக்கோ பிரியா..”
“ஏன்?”
“ரொம்ப டயர்டா இருக்க.. வீட்டுல இரு.. ஓகே.. புஷ்பா மேடம் கிட்ட நான் சொல்லிடுறேன்”
பிரியா தரையை சில நிமிடங்கள் பார்த்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யாராவது அவளுக்கு உதவினால் நன்றாக இருக்கும் தோன்றியது.
“பிரியா?”
“அமர் நான் ஒரு விசயம் சொன்னா யாரு கிட்டயும் சொல்ல மாட்டீங்களே?”
இதைக்கேட்டு புருவம் சுருக்கினான் அமர். எதை சொல்லப்போகிறாள்? ஒரு வேளை காதல் விசயத்தை சொல்லி விடுவாளோ? கூடவே கூடாது என்று நினைத்தாலும் வாய் “ம்ம் சொல்லு” என்று விட்டது.
“நான் ஒருத்தர லவ் பண்ணுறேன்” என்றதும் அமரின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.
ஆழ மூச்செடுத்தவன் “ஓ.. ரியலி.. சொல்லவே இல்லையே!” என்று போலியாக ஆச்சரியப்பட்டான்.
உள்ளே கொதித்த உலைக்கலத்தை எதை வைத்து அடக்குவது என்று தெரியவில்லை. ஆனால் வெளியே முகம் எதையும் காட்டவில்லை.
“அப்பா கிட்ட சொல்லிடாதீங்க”
“இது உன் பர்ஷ்னல் பிரியா.. நான் ஏன் சொல்ல போறேன்?” என்று வாய் சொன்னாலும் ‘நீயே சொன்னாலும் இத அவர் கிட்ட சொல்லி உங்கள சேர்த்து வைக்கிற ஐடியால நான் இல்ல’ என்று நினைத்துக் கொண்டான்.
“தாங்க்ஸ்”
“சோ.. இப்ப ஏன் சொல்லுற?”
“அது.. அவருக்கு ஒரு பிரச்சனை. நான் என்ன பண்ணுறதுனு புரியல”
“என்ன பிரச்சனை..?”
“பணப்பிரச்சனை”
‘ராஸ்கல்.. பணம் வேணும்னு இவ கிட்ட கேட்டானா?’ என்று பல்லைக்கடித்தாலும் அவளை கேள்வியாகத் தான் பார்த்தான்.
“நான் பணம் கொடுக்கலாம்னு பார்த்தேன். வேணாம்னு சொல்லிட்டாரு. அவ்வளவு பணமும் என் கிட்ட இல்ல.. அப்பா கிட்ட சொல்லலாம். ஆனா இப்படி பிரச்சனையோட என் லவ்வ சொல்லவும் பயமா இருக்கு. என்ன பண்ணனே தெரியல.. அதான்.. காலையில இருந்தே சொதப்பிட்டு இருக்கு.”
‘ஓஹோ.. அப்ப நான் நினைச்சது சரி தான். விசயத்த சொல்லிட்டான். அது இவள இப்ப குழப்பிடுச்சு’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
“அமர்…”
“ம்ம்..?”
“என்ன யோசிக்கிறீங்க?”
“நீ சொன்னத தான் யோசிக்கிறேன். லவ் பண்ணுறவனுக்கு பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணுறது தப்பில்ல.. ஆனா அது நாமலே சம்பாதிச்சதா இருக்கனும். உன் அப்பா கிட்டயோ இல்ல யாரு கிட்டயோ வாங்கிக் கொடுத்தா அது பெரிய கடனா தான் முடியும். முக்கியமா காதல் விசயத்த உன் அப்பா கிட்ட சொல்லவே தயங்கும் போது பணத்த பத்தி பேசுனா.. இதுக்காக தான் உன்னை அவன் லவ் பண்ணுறானோனு கூட உன் அப்பாவுக்கு சந்தேகம் வந்துடும்”
“அது தான் இப்ப என் பிரச்சனையே. அப்பா கிட்ட போனா நானே அவன அசிங்க படுத்துன மாதிரி ஆகிடும். பட் கொடுக்க என் கிட்டயும் இப்ப பணம் இல்ல”
“வெளிய எங்கயாவது கடன் வாங்கலாம்ல? பேங்க்ல பர்ஸ்னல் லோன் மாதிரி…?”
“கடன்ல தான் பிரச்சனையே.. வாங்குனத தான் கட்ட முடியல”
அமர் சில நொடிகள் அமைதியாக பார்க்க பிரியா புரியாமல் பார்த்தாள்.
“என்ன அமர்?”
“உன் லவ்வர குறை சொல்லுறேன்னு நினைக்காத.. யாரா இருந்தாலும் வாங்குன கடன அவங்களே தான் அடைக்கனும். நீ அவனுக்கு உறவா இருந்தா அது வேற. நீ காதலி.. இப்ப கடன அடைக்கலனா.. பின்னாடி உன்னை கட்டி காப்பாத்துவான்னு எப்படி நம்புறது? நான் எனக்கு ஒரு பொண்ணு இருந்தா எப்படி நினைப்பேன்னு சொல்லுறேன். தப்பா எடுத்துக்காத..”
“புரியுது அமர்..” என்று வருத்தப்பட்டாள்.
தொடரும்.