
திமிர் 17
“சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது அகா… நான் எதுவும் பண்ணல. தெரிஞ்சிருந்தா விட்டிருக்க மாட்டேன். உன்னை அசிங்கப்படுத்தணும்னு…” மூச்சிரைக்கப் பேசிக் கொண்டிருந்தவள் பேச்சு நின்றது அவன் செயலில்.
இருக்கையில் அமர வைத்து இறுக்கமாகக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டான். பட்டையாகச் சிவந்திருந்த கைத்தழும்பில் விரல் வைத்து வருடியவன், “வலிக்குதா” ஆழ்ந்த குரலில் கேட்டான்.
ஆனந்தக் கண்ணீர் ஊற்றெடுத்தது அவள் முகத்தில். அதிர்ச்சி தாங்காது கண் விரித்தனர் அவன் தந்தையும், அண்ணனும்.
“ம்ஹூம்!”
“ஒன்னும் இல்ல… ம்ம்”
“ம்ம்!”
“கண்ணைத் துடைச்சுக்க.”
சிறுபிள்ளைபோல் கண் துடைத்துவிட்டு, மீண்டும் அழுதவளைக் கனிவாகப் பார்த்தவன், “அழக்கூடாது!” என்றிடச் சமத்தாகத் தலையசைத்தாள்.
பார்வையைக் கமலிடம் திருப்பினான். அதற்குக் கட்டுப்பட்டு வந்து நின்றவனிடம், “கூட்டிட்டுப் போ…” என்க, “என்னடா பண்ற?” சத்தமிட்டார் நவரத்தினம்.
தந்தையின் பேச்சைக் காதில் வாங்காது, தன்னவளின் கைப்பிடித்து கமல் பக்கம் நகர்த்திட, “அவங்களை எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லு அகா… அவங்க இனிமே உன் பக்கம் வர மாட்டாங்க. எனக்காக அவங்களை விட்டுடச் சொல்லு.” கெஞ்சினாள்.
கனிந்தவன் முகம் பாறையானது. அதை அறிந்த கமல், மதுணியை அழைத்துச் செல்ல முயல, தன்னவனிடம் ஓடிவந்து கெஞ்சினாள். நடப்பதை எல்லாம் அவன் அண்ணனும், தந்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பொறுமை காற்றில் பறந்தது.
அவளுக்காகத் தன் உடன் பிறந்தவனையே பகைத்துக் கொண்டு நிற்க, தன்னைத் தாண்டித் தன்னவளின் தேவை வேறாக இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை அகம்பனால். அவளிடம் காட்ட முடியாத கோபத்தை அங்கு இருந்த இருவரிடமும் காட்டினான்.
காட்டுச் சிங்கத்திடம் சிக்கிக் கொண்ட நிலையானது முரளிக்கும், கிஷோருக்கும். அடித்துத் துவைக்க ஆரம்பித்தான். ஈவு இரக்கம் பார்க்காமல் ரத்தம் பீறிட்டது. கண்மூடித்தனமாகத் தாக்கினான். அவன் தாக்குதலைக் கண்டு அங்கிருந்த அனைவரும் திகைத்தனர். இத்தனை நாள் சேர்த்து வைத்த அத்தனைக் கோபத்தையும் மொத்தமாக அவிழ்த்து விட, தாங்க முடியவில்லை அவ்விருவரால்.
கத்திக் கூச்சலிட்டு, உயிர்ப் பிச்சைக்கு மன்றாடினார்கள். முகம் முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. அதைக் கண்டும் ஆத்திரம் அடங்காது ஓங்கிக் குத்த, மயங்கிச் சரிந்தான் கிஷோர். மகன் நிலையைக் கண்டு கூச்சலிட்ட முரளியின் சட்டையைப் பிடித்து இழுத்து,
“என்னடா குதிக்கிற? என் இடத்துக்கு வந்து என்னைச் சீண்டிப் பார்க்குற அளவுக்குத் தைரியமா? அந்தத் தைரியம், எத்தனைப் பிறவி எடுத்தாலும் இனி உனக்கு வரக்கூடாது.” என இடைநிறுத்தாமல் முகத்தில் குத்திக் கொண்டிருந்தவன்,
“அவ என்ன உன்னோட பொண்ணா? அவளுக்கு என்ன நடந்தா உனக்கு எங்கடா வலிக்குது.” என்றதில் அந்த இடம் ஸ்தம்பித்தது.
அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவள் சிலையாக, அங்கிருந்த அனைவருக்கும் தலை சுற்ற ஆரம்பித்தது. அன்று கமல் இவனிடம் கூறியது இதைத்தான். நேரம் பார்த்து மதுணியைக் காயப்படுத்தலாம் என்று இதுவரை வெளியில் செல்லாமல் இருந்தான். எல்லாம் அவன் கை மீறிச் செல்ல, அவனையும் மீறி உண்மை வந்துவிட்டது.
“அவ்ளோ பாசமா உன் பொண்ணு மேல. அப்புறம் ஏன்டா, சட்ட விரோதமா வாங்கின எல்லா எக்யூப்மெண்ட்ஸும் அவள் பேருல வாங்கி இருக்க. அந்த ஹாஸ்பிட்டல்ல நடக்கிற எல்லாத் திருட்டுத் தனத்தையும், அவளுக்கே தெரியாம அவள் பேர்ல பண்ணி இருக்க.”
நெஞ்சு அடைத்தது அகம்பன் வார்த்தையைக் கேட்டு. பேசத் திராணி இன்றி, ரத்தம் வழிய நின்றிருந்தவர் மீது அவள் பார்வை திரும்பியது. பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணித் தனக்குள் மறுகியவள், “அவரை அடிக்காத அகா, இதுக்கு மேல அடிச்சா செத்துடுவாரு.” என்றாள் திக்கித் திணறி.
கோபம் மொத்தமும் அவள் பக்கம் திரும்பியது. முரளியைத் தொப்பென்று தரையில் வீசிவிட்டு, அவள் கழுத்தைப் பற்றித் தள்ளிக் கொண்டே சென்று இருக்கையில் விழ வைத்தான். கோபம் சூழ ஆழமான பார்வையை வீசியவன்,
“இவ்ளோ சொல்லியும், அவனுக்கு சப்போர்ட் பண்ற. அப்படி என்னடி அவன் உனக்குப் பண்ணிட்டான். அவன் இன்னைக்கு உயிரோட இங்க இருந்து போக மாட்டான்.” கர்ஜித்தான்.
“எனக்காக அவர விட்டுடு.”
“முடியாது!”
“ப்ளீஸ் அகா, அவர் என்னோட அப்பா…” என்றதும் பிடித்த கழுத்தை நசுக்கி, “அவன் உனக்கு அப்பா இல்லை.” கத்திட, பெற்ற மகனைப் பார்க்க உடல் பதறியது நவரத்தினத்திற்கு.
“யார் இல்லைன்னு சொன்னாலும், அவர் என்னோட அப்பா தான். என் கண்ணு முன்னாடி கஷ்டப்படுறதைப் பார்க்க முடியல. அவர் மேல இருக்க கோபத்தை என்கிட்டக் காட்டிடு, தயவுசெஞ்சு அவரை விட்டுடு.”
மண்டை சூடானது அகம்பனுக்கு. அவளைத் தள்ளிவிட்டு நகர்ந்து வந்தவன், பைத்தியம் பிடித்தவன் போல் பின்னந்தலையைத் தட்டிக் கோபத்தை அடக்க முயன்றான். அவனுக்குக் கட்டுப்படவில்லை அவன் கோபம். ஆத்திரம் அடங்காது, தாவி அவள் முடியை உள்ளங்கையில் சுழற்றியவன்,
“அவ்ளோ பிடிக்குமா உன் அப்பாவ…” கேட்க, மௌனமாகத் தலையசைத்தாள்.
சற்றுத் தொலைவில் இருந்த இருக்கையைக் காலால் எட்டி இழுத்து அவள் முன் போட்டான். தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவள் தாடையில் விரல் வைத்து நிமிர்த்திட, குற்ற உணர்வில் தன் நிலை மறுக அமர்ந்திருந்தாள். அவள் கண்களை இமை சிமிட்டாது ஆழமாக நோக்கி, “என்னை விடவா?” கேட்டான்.
இந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காதவள், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தத்தளிக்க, “சொல்லுடி! என்னை விட அவனை உனக்குப் பிடிக்குமா?” பற்களுக்கு இடையே வார்த்தையை உமிழ்ந்தான்.
“ஆமான்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா அவனை விட்டிடுவேன்.” என்றதும் மதுணியின் விழி அவன் விழியை மொய்க்க இகழ்வாகச் சிரித்தவன், “நான் செத்துடுவேன்!” எனக் கதி கலங்க வைத்தான்.
கண்ணீர் வற்றியது மதுணிகாவின் முகத்தில். சொல்ல முடியாத உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டு, வாய் மூடி அமர்ந்திருந்தவளைப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது. இரு கைகளைத் தன் தொடையில் தட்டி இருக்கையை விட்டு எழுந்தவன், சத்தத்தில் அரண்டவளைக் காணச் சகிக்காது, தள்ளி வந்தவன் பின்னங்கழுத்தில் கை வைத்துத் தலைவலியைக் குறைக்க முயன்றான்.
எத்தனைப் போராட்டங்கள் நடத்தியும், அவை அவனை விட்டு விலகுவதாக இல்லை. உச்சி மண்டைக்கு மேல் ஏறிய கோபம் நாட்டியம் ஆட, அவன் அவனாக இல்லை. அவள் பேச்சைக் கேட்கும் வரை.
“என் வாழ்க்கையில எந்தக் கட்டுப்பாடும் இல்லாம உரிமையா அன்பு வச்ச ஒரே ஜீவன் நீதான். இந்த உலகத்துலயே உன் அளவுக்குப் பிடிச்சவங்க யாரும் இல்ல அகா… கடவுள் எனக்குன்னு கொடுத்த ஒரே ஒரு உறவு நீ மட்டும் தான்!”
எரிமலையில் அமர்ந்திருந்தவன் தலையில், பனிக்கட்டி விழுந்தது போல் இருந்தது. மண்டைக்கு மேல் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்த கோபம், இருந்த தடம் தெரியாமல் காணாமல் போனது. தலைவலி, மழைச்சாரலாக மனத்தைக் குளிர்வித்தது. காட்டுமிராண்டிக்குள் காதலன் புகுந்துவிட, அவளிடம் சென்றான்.
தன்னவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவள் காதலோடு, “என்ன பாவம் பண்ணேன்னு தெரியல. கடவுள் கொடுத்த ஒரே ஒரு உறவும் என்னால கஷ்டப்படுது. என்னை அடிச்சுச் சித்திரவதை பண்ணப்போ கூட அவ்ளோ வலிக்காது. உன்னால தான்டி என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சுன்னு சொல்லும்போது தான் எதுக்கு இந்த உயிர்னு தோணும். கொஞ்ச நாளா இருந்தாலும், உன் கூட வாழ்ந்துட்டேன். எனக்கு அதுவே போதும் அகா… நான் உன் கூட இருந்தா, நீ சந்தோஷமா இருக்க மாட்ட. நான் உன்னை விட்டுப் போகனும். எனக்காக, முதலும் கடைசியுமா அவங்களை மட்டும் விட்டுடு.” என்றவளைப் பார்த்துக்கொண்டு தரையில் விழுந்த இருக்கையை எடுத்துப் போட்டு அமர்ந்தான்.
“அன்னைக்கு உங்கிட்ட நான் அனாதைன்னு சொன்னது பொய்யில்லை. எனக்கு முன்னாடியே தெரியும், இவரு என்னோட அப்பா இல்லன்னு. ஆசிரமத்துக்குப் பதிலா ஒரு வீடு. தாய்க்குப் பதிலா வளர்க்க ஒரு அம்மா. உரிமையே இல்லனாலும் அவர் என்னோட அப்பா. என்னைக் கொஞ்சம் கூடப் பிடிக்காதுன்னு தெரிஞ்சாலும், கிஷோரை என்னோட தம்பியா தான் பார்க்க முடியுது. அவங்களுக்கு நான் அந்நியமா இருந்தாலும், நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அவங்க மூணு பேரைச் சுத்திதான் என் வாழ்க்கை இருந்திருக்கு. தேவைன்னு ஒன்னு இருந்ததில்ல. அவங்களுக்கு என்ன தேவையோ அதுதான் என்னோட தேவை.
என் அப்பா நல்லவரோ, கெட்டவரோ அது எனக்குத் தெரியாது. ஆனா, என்னை இத்தனை வருஷம் வளர்த்திருக்காரு. அந்த உதவி எனக்குக் கிடைக்கலன்னா, இப்ப நான் எப்படி இருந்திருப்பனோ? காலம் முழுக்க அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன். இன்னைக்குச் சுயநலமா எனக்குன்னு ஒரு வாழ்க்கை வந்துடுச்சுன்னு அவங்களை எப்படியோ போன்னு விட முடியல.
நான் ரொம்பத் துரதிருஷ்டசாலி. வளர்த்த அவங்களுக்கும் உண்மையா இருக்க முடியல. நேசிச்ச உனக்கும் சந்தோஷத்தைத் தர முடியல. இத்தனைப் பேருக்கும் ஒரே பிரச்சினை நான் தான். யாருக்கும் கஷ்டம் தராம…” என்ற மதுணியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
தேம்பி அழ ஆரம்பித்தாள். பல வருடங்களாக மனத்தில் அழுத்தி வைத்த பாரம் வெடித்ததில், அழுகை வரையறையின்றி வெளியேறியது. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத நிலையில் இத்தனை வருடங்களாக வாழ்ந்தவள் வாழ்வில், வந்த ஒருவனும் வெறுப்பைக் கொட்டுகிறான். பதிலுக்கு அவனிடம் வெறுப்பைக் கொட்ட முடியாது, அத்தனையும் தாங்கிக் கொண்டவள் மனத்தில் அத்தனைக் காயங்கள்.
தன்னவள் மீதான பார்வையைச் சிறு துளி மாற்றாமல், “கமல்!” என்றழைக்க, மதுணிகாவின் வார்த்தையில் மனம் உருகி நின்றிருந்தவன் முதலாளி பக்கத்தில் சென்றான்.
“அவனுங்க ரெண்டு பேரையும் அனுப்பி விடு!”
“அகம்பா…” என்ற அண்ணன் ஆதிகேஷ் திவஜ் பக்கம் பார்வையைத் திருப்பிய அகம்பன் திவஜ்,
“இவளோட கண்ணீர், எனக்காகவும், என்னாலயும் மட்டும் தான் சிந்தனும். அதுல பங்கு எடுத்துக்கற உரிமை யாருக்கும் இல்லை.” என்றான்.
காதலன் வார்த்தையைக் கேட்டவள், அழுகையை நிறுத்திவிட்டு ஆழப் பார்க்க, மெல்லியதாக இதழ் வளைத்தான். அதில் இருக்கும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது குழம்பியவளை விட்டு எழுந்தவன்,
“உங்களுக்கு நான் தர கடைசி சான்ஸ். இதுக்கு அப்புறமும் எங்க விஷயத்துக்குள்ள வந்தீங்கன்னா, அவளே நினைச்சாலும் காப்பாத்த முடியாது.” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
சென்றவனைத்தான் அத்தனைப் பேரும் பார்த்துக் கொண்டிருந்தனர். விஷயம் அறிந்து சில நிமிடங்களுக்கு முன்னர்தான் சங்கரன் அங்கு வந்திருந்தார்.
அரைகுறையாகப் பார்த்தவர் ஒன்றும் புரியாமல் நின்றிருக்க, நடந்து கொண்டிருந்தவன் நின்றான்.
அனைவரின் பார்வையும் மாறாமல் அவன் முதுகைப் பின் தொடர்ந்தது. அவசரம் இல்லாமல் திரும்பியவன், தன்னவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் பக்கத்தில் இருக்கும் அண்ணனிடம்,
“ஷீ இஸ் மை கேர்ள்!” என ரகசியப் புன்னகை வீசிவிட்டு நடையைத் தொடர்ந்தான்.
சங்கரனுக்கு உள்ளம் கொதித்தது. அமைதியாக வந்த வழியே வெளியேறினார். ரத்தம் சொட்டப் பாதி உயிரோடு இருந்த இருவரையும் துரத்திவிட்டான் கமல்.
ஒன்றும் செய்ய முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு ஆதிகேஷ் திவஜ் வெளியேற, மதுணிகாவை முறைத்து விட்டுச் சென்றார் நவரத்தினம்.
***
“என்னை எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த கமல்?”
“சாரோட ஆர்டர்!”
“என்ன நடந்துச்சுன்னு எல்லாத்தையும் பார்த்த தான… எல்லாமே முடிஞ்சிருச்சு, இட்ஸ் ஓவர்!”
“எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை மேடம். சார் என்ன சொல்றாரோ அதை கரெக்டா செஞ்சுடுவேன்.”
“உஃப்! உன்னை எங்க இருந்து பிடிச்சான்னு தெரியல.”
“உங்களை மாதிரிக் காட்டுல இருந்து பிடிக்கல மேடம்.”
“நக்கலு…”
“நான் கூட்டிட்டு வரலைனாலும், திருச்சியை விட்டு உங்களால எங்கயும் போக முடியாது. அடம் பிடிக்காம உள்ள போங்க.”
“முடியாது. இங்க இருந்து எப்படிப் போகணும்னு எனக்குத் தெரியும்.” எனக் காரை விட்டு இறங்கியவள், அவன் கத்துவதைக் காதில் வாங்கிக் கொள்ளாது வீர நடை போட்டாள்.
“பட்டால் தான் திருந்துவாங்க.” புலம்பலோடு கமல் நின்றுகொள்ள, அவளை வழி மறைத்து நின்றது இரண்டு கார்.
தன்னை உரசிக்கொண்டு வந்து நின்றதில், பயந்து கண்ணை மூடியவள் தடதடவென்ற சத்தத்தில் விழி திறக்க, கருப்பு நிற உடையில் பாடிகார்ட்ஸ் வட்டமிட்டிருந்தனர். தன்னைச் சுற்றி நிற்கும் அனைவரையும் பயம் கவ்வப் பார்த்திட, “ப்ளீஸ் மேடம்!” கார் கதவைத் திறந்துவிட்டு உள்ளே செல்லக் கை காட்டினார்கள்.
“வழிய விடுங்க நான் போகணும்.”
“சாரி மேடம், அதுக்கு சார் பர்மிஷன் தரல.”
“உங்க சார் எதுக்கு பர்மிஷன் தரணும். பிரச்சினை பண்ணாம வழிய விடுங்க.”
வழி விடவும் இல்லை, பதில் கொடுக்கவும் இல்லை. அப்படியே சிலை போல் நின்றிருந்தார்கள். பற்கள் நரநரக்க காரில் ஏறி அமர்ந்தாள். அடுத்த நொடி சுற்றி நின்ற அனைத்துச் சிலைகளுக்கும் உயிர் வந்தது. தார்ச்சாலை அதிர, அவளை அள்ளிக்கொண்டு அகம்பன் திவஜ் வீட்டு முன்பு நிறுத்தினார்கள். வாய்பொத்திச் சிரித்துக் கொண்டிருக்கும் கமலைப் பார்த்தபடி இறங்கினாள்.
“அகம்பன் திவஜ் தீவு மேடம்.”
எகத்தாளமாகக் கூறியவனைப் பார்வையால் சுட்டெரித்து நகர, அந்த சென்சார் பொருந்திய கதவு அவளை வரவேற்கத் திறந்தது. உள்ளே நுழைந்த மதுணி, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க,
“உள்ள போய் செகண்ட் ஃப்ளோர்ல நாலாவது ரூம்.” விசில் அடித்தபடி அவளைக் கடந்து உள்ளே சென்றான் கமல்.
பார்க்கும் இடமெல்லாம் வேலை ஆள்கள். அவர்களுக்கு மத்தியில் காட்சிப் பொருளாக உள்ளே நுழைந்தவள், இரண்டாவது தளத்திற்குச் சென்றாள். அவன் அறை முன்பு நின்றவள் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளப் பலத்த மூச்சை வெளியிட்டாள். அவனிடம் அசைந்து விடக்கூடாது என்ற முடிவோடு கதவைத் திறக்க, வாய் பிளந்தாள்.
ஒரு விழாவே நடத்தலாம் அவன் அறையில். அத்தனைப் பெரிய அறையில் சகல வசதியும் நிரம்பி இருந்தது. அவளுக்கு நேராகக் கண்ணாடி பொருத்தப்பட்டு உடற்பயிற்சிக் கூடம் இருக்க, அதற்கு நேர் எதிராக அவன் இன்பத்திற்குச் சிறிய பார் அமைத்திருந்தான். கழுத்தை வளைத்து அங்கும் இங்கும் தேடியும் மெத்தை மட்டும் தென்படவில்லை. நான்கு அடி எடுத்து வைத்தாள். இடதுபுறமாகப் பால்கனியும், அதை ஒட்டி ஊஞ்சலுக்காகச் சிறு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. இன்னும் அடியெடுத்து வைத்தவளுக்கு அந்தப் பெரிய மெத்தை பளிச்சென்று காட்சி கொடுத்தது.
முலாம் பூசப்பட்ட தங்கம் போல் ஜொலி ஜொலித்தது அவன் அறை. அவளும் வசதியான வீட்டில் வாழ்ந்தவள்தான். ஆனால், அகம்பன் அளவிற்கு இல்லை. அரசியல்வாதியின் செல்வாக்கு, கண் முன் காட்சியானது. அவளது மொத்த வீட்டுச் சொகுசும் இவன் ஒரு அறையில் தென்பட்டது. இப்படியானவன், அந்தக் காட்டில் வாழ்ந்ததை நம்ப முடியவில்லை.
அந்தப் பெரிய அறைக்கு அழகோவியமாக இருந்தது ஆள் உயரப் புகைப்படம். அன்னையோடு கட்டி அணைத்து நின்றிருந்தான் அகம்பன். அதை ரசித்தவாறு நின்றிருந்தவள் செவியில், “ம்க்கும்!” என்ற முணுமுணுப்பு.
அகம்பன் என்றறிந்துத் திரும்பாதவளை உரசிக்கொண்டு உள்ளே நுழைந்தவன், மெத்தையில் அமர்ந்து கால் மீது கால் போட்டான். தலை குனிந்து கொண்டாள் மதுணிகா. அங்கமங்கமாக ரசித்துக் கொண்டிருந்தவன்,
“இங்க நிக்கிறது அம்முவா, மதுணியா?” மிடுக்கான குரலில் கேட்டான்.
அவள் அமைதியாக இருக்க, “ஐ நீட் அன் ஆன்சர்!” என்றான்.
அப்போதும் அவள் மௌனத்தையே கடைப்பிடிக்க, தோள் குலுக்கிக் கொண்டு எழுந்தான். தன்னிடம் தான் வருவான் என்ற அச்சத்தில் நின்றிருந்தவளைக் கடந்து பாருக்குள் நுழைந்தான். மூக்கு விடைத்தது மதுணிக்கு. அதைத் துச்சமென உதறித் தள்ளி, ஒரு சிப் மது ஊற்றிக் கோப்பையை அவளிடம் நீட்டினான். கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“அகா…”
“எஸ்!”
“எதுக்கு இப்பக் குடிக்கிற?”
“என் முன்னாடி நிக்கிறது மதுணிகா. அவளை எனக்குச் சுத்தமா பிடிக்கல. ரொம்பக் கோவம் வருது. ஏடாகூடமா ஏதாச்சும் பண்ணிடக் கூடாதுல.”
“அவ்ளோ கோவம் இருக்கிறவன் எதுக்காகக் கூட்டிட்டு வரச் சொன்ன?”
“வான்ட் அம்மு!”
கோபத்தைக் குறைத்து, “இதுக்கு மேலயும் அம்மு உனக்கு வேணுமா? அவளால உனக்கு எந்தச் சந்தோஷமும் கிடைக்காது. நீ வாழற வாழ்க்கைக்கு அவ என்னைக்கும் ஒரு கருப்புப் புள்ளி. இத்தோட போதுமே…” என்றவளைத்தான் ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளைப் பார்க்கச் சகிக்காது திரும்பிக் கொண்டவன், ஒரு சிப் என்றதை ஒரு கோப்பையாக மாற்றிக் குடித்தான். அதைப் பார்த்தவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போதும் என்றவரைத் தன் போதையை ஏற்றிக் கொண்டவன்,
“போ!” என்றான்.
“அகா…”
“கிளம்பலாம்!”
உடனே சம்மதிப்பான் என்பதை எதிர்பார்க்காதவள், ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு, “நடந்த எல்லாத்தையும் மறந்துடு. என்னால நீ பட்ட கஷ்டம் எல்லாத்துக்கும் சாரி. இந்த மாதிரிக் குடிச்சிட்டு இருக்காத அகா…” என அந்த அறையை விட்டு வெளியேற, ஏளனச் சிரிப்பு மறையவில்லை அவன் உதட்டை விட்டு.
கனத்த மனத்தோடு அறையை விட்டு வெளிவந்தவள் கண்ணில் குளமாகத் தேங்கியது கண்ணீர். தேங்கிய அனைத்துக் கண்ணீரையும் வெளியேற்றி, கண்மூடித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து வெளியேறினாள்.
திடீரென்று ஒரு சத்தம் கேட்டது. நடையை நிறுத்திக் கண் மூடினாள். என்ன நடந்தாலும் திரும்பக் கூடாது என்ற முடிவோடு அடி எடுத்து வைத்தவள் செவியில், முன்பை விடப் பெரும் சத்தம் கேட்டது. மனம் ஆட்டம் கண்டது. எந்தப் பக்கம் செல்வதென்று தெரியாமல் தடுமாறியவள் செவியில் தொடர்ந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க, அடக்கப்பட்ட கோபத்தோடு உள்ளே நுழைந்தவள் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
காதலியின் அன்புப் பரிசை வாங்கிக் கொண்டவன் கையில், மிச்சம் இருந்த மதுக் கோப்பையைத் தட்டி விட, அடித்த கன்னத்திலேயே மீண்டும் அடித்தாள். அடுத்துத் தட்டி விட ஏதாவது கிடைக்குமா என்று தேடியவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டவள், “அவ்ளோதான்!” விரல் நீட்டி எச்சரித்தாள்.
பிடிவாதக்காரன்! கேட்காமல் சுவரில் ஓங்கிக் குத்தினான். கட்டுப்படுத்தி வைத்த கோபம் கட்டுப்பாடு இல்லாமல் வெளிவர, சட்டைக் காலரைப் பிடித்துத் தள்ளிவிட்டாள்.
“எல்லா நேரமும் நீ பண்றதைப் பார்த்துட்டுப் பொறுமையா இருக்க மாட்டேன். இனி ஒரு சத்தம் உன் ரூம்ல இருந்து வரக்கூடாது. எமோஷனல் பிளாக்மெயில் பண்ணாத அகா… நான் உன் கூட இருந்தா என்ன பிரச்சினை வரும்னு உனக்கும் தெரியும். தெரிஞ்சும் ஏன்டா அடம் பிடிக்கிற.”
அழுத்தமாகப் பார்த்தான் அவளை. கோபத்தில் கொந்தளித்தவள் அவன் பார்வைக்கு அஞ்சி வாய்க்குப் பூட்டுப் போட்டாள்.
“எப்பவும் சுயநலமா மட்டும்தான் யோசிப்பியா? உன் அப்பாக்காக என் கூடப் பழகுன. இன்னைக்கு என் வீட்டு ஆளுங்களுக்காக விட்டுட்டுப் போற. என்னைப் பத்தி யோசிக்கவே மாட்டல்ல. இப்படி ஒருத்தியை இனி நானும் யோசிக்க மாட்டேன். முடிவா சொல்றேன், நீ இங்க இருந்து போகலாம்.”
நெருக்கப்பட்ட சூழ்நிலையை விவரிக்க முடியாது, தன்னிலை மறுகிக் கிளம்பினாள். உள்ளத்தில் ஓராயிரம் ஊசி குத்தியது. ஆதிகேஷ் திவஜ் முகம் கண் முன்னால் வந்து சென்றது. எப்படித் தன் மனத்தை உரைப்பது என்று தெரியாமல், முட்டிக்கொண்டு வரும் கண்ணீரை அடக்கிக் கொண்டு படி இறங்கியவள் அந்தரத்தில் தொங்கினாள்.
தன்னவனின் கைகளில் தவழ்ந்தவள், உதடு பிதுக்கி அழுதாள். எத்தனை அழுத்தங்களைத் தான் அந்த மனம் தாங்கும். கைகளை அவன் தோள்களுக்கு மாலையாக்கியவள், அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு வர, சிறிதும் பார்வையை மாற்றாது ஜடமாகத் தூக்கி வந்து மெத்தையில் வீசினான்.
அவள் பக்கத்தில் விழுந்தவன், சேர்த்தணைத்துக் கொண்டுப் போர்வையைப் போற்றி விட, ஒன்றும் புரியவில்லை மதுணிக்கு.
“கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன். சாகப் போறன்னு தெரிஞ்சப்ப வந்த தூக்கம் கூட, நீ இல்லன்னு தெரிஞ்சதுல இருந்து வரல. என் கூட இருக்குறது கஷ்டமாத்தான் இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மேடம். இப்பத் தூங்கப் போற இந்த நிம்மதியான தூக்கம் தான், தூங்காம இருக்கப் போற என் இரவுகளுக்கு ஒரே துணை!” என்றவன் மீதான பார்வையை அகற்ற முடியவில்லை அவளால்.
அவள் முகம் பார்க்காமல் பேசியவன், எல்லாம் முடிந்தது என்று அமைதியாகக் கண்மூடிக் கொள்ள, அவன் சொல்லிய வார்த்தைகள் அவளுக்குள் ரீங்காரம் போட்டது. எத்தகைய தண்டனையைத் தன்னை நேசித்தவனுக்குக் கொடுத்திருக்கிறோம் என்று உணர்ந்து தன்னையே வெறுத்தவள்,
“அகா…” என்றழைத்தாள்.
“கட்டாயப்படுத்தி, எந்த உறவையும் நிலைக்க வைக்க முடியாது. போகணும்னு முடிவு பண்ணிட்டவ போயிடு. அன்னைக்கு மாதிரி நான் தூங்கிட்டு இருக்கும்போதே… எந்திரிச்சித் தேடுவேன். உனக்கு என்னமோ ஆகிடுச்சுன்னு பயப்படுவேன். நிச்சயம் என்கிட்ட வந்துடுவன்னு வெயிட் பண்ணுவேன். அப்படியே அகம்பன் வாழ்க்கை முடிஞ்சிடும்.”
வெடித்துச் சிதறியது மதுணியின் உணர்வுகள். அவனை இழுத்துத் தன் மார்புக்குள் அடைத்துக் கொண்டாள். இந்தச் சுகத்திற்காக ஏங்கியவன், அவள் ஆடையைத் தாண்டி உடலை உரசிக் கைகளை இறுக்கிக் கொண்டான். சத்தமிட்டு அழுதவள், அவன் முகத்தை விலக்கிப் பரபரப்பாக முத்தமிட்டாள். அனைத்தையும் மறுக்காது வாங்கிக் கொண்டவன் மார்புக்குள் முகம் புதைக்க, வேறு எதுவும் இவனுக்கு முன்னால் தெரியவில்லை.
எதுவாகினும், தன்னவனுக்காகப் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு, அவனைச் சேர்த்தணைத்துக் கொண்டு கண் மூடினாள். காயம் பட்ட இதயத்திற்கு அவள் அணைப்பு மருந்தானது. வெளிக்காட்ட முடியாத காயங்களுக்கு, அவனும் மருந்தாகினான். ஒருவரை ஒருவர் தாங்கிக் கொண்டு துயில் கொள்ள ஆரம்பித்தனர்.
அளவு கடந்த காதலைக் காட்டியவன், அளவில்லாத வெறுப்பைக் கொட்டினால், சேர்த்தணைத்தவள் என்னாவாளோ! இருக்கும் ஒரே ஆதரவும் கைவிடப்பட்டு நிர்கதியாக நிற்கப் போவதற்கு முன்னால், இருப்பதை அனுபவித்துக் கொள்கிறாள் மதுணிகா.

