Loading

அத்தியாயம் 16

விழா நாள் எவ்வித பரபரப்பும் இன்றி இயல்பாய் புலர்ந்தது. முக ஒப்பனைக்கும் மெஹந்திக்கும் மறுப்பு உரைத்த மௌனிகா, தானே அதைப் பார்த்துக் கொள்வதாய் சொல்லி விட்டாள்.

சரணிற்கு பாவையின் சொற்கள் சற்று மனவருத்தத்தைக் கொடுத்திருந்தாலும், பெண்ணிற்கு விருப்பம் இல்லாததைச் செய்யச் சொல்வதில் நியாயம் இல்லை என அமைதியாய் இருந்து கொண்டான்.

ரெங்கநாயகி முதல்நாள் மாலையில் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து, பெயர்த்தியை வற்புறுத்தி இரு கரங்களிலும் வைத்து விட்டிருந்தார்.

அதிகபட்சமாய் இரண்டு மணி நேரம் மட்டுமே பொறுமை காத்தாள் பாவை. பின்னர் நள்ளிரவிலேயே கைகளைச் சுத்தம் செய்து கொண்டாள்.

காலையில் குளித்துத் தயாராகி குழலை உலர வைத்திருந்தவளின் கவனத்தை வெளிப்பக்கம் கேட்ட பேச்சுக்குரல் கலைக்க, கூடத்திற்கு வந்தாள்.

கையில் பையோடு நின்றிருந்தான் விமல். சேகரனின் மனைவி அவனிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தார்.

“நீ பாட்டுக்கு வர்ற? உள்ள வரவானு எதுவும் கேட்க மாட்டியா? என்ன மரியாதை பழகி இருக்க?” என அர்ச்சனா வினவ, “இல்ல அத்தை, நேத்தி அண்ணி தான்.” என்று மேலும் சொல்லத் தோன்றாது அமைதியாய் நோக்கினான்.

அடுத்த நொடி கூர் வார்த்தைகளாய், “யாருடா  உனக்கு அத்தை.?” எனக் கேட்டிட, “ஸாரி, ஏதோ பழக்க தோஷத்துல சொல்லிட்டேன். அப்படிப் பார்த்தாலும் அண்ணியோட சித்தி, எனக்கு அத்தை முறை தான?” என்று சமாதானம் மொழிந்தான்.

“இந்தமாதிரி முறை பறைனு பேசிட்டு இருந்த, அவ்வளவு தான்.”

அவன் அமைதியாய் இருக்க,  “விமல்..”

மௌனின் குரலில் திரும்பியவன் முகம் மலர்ந்து, “அண்ணி..”

இளையவனை விடுத்து அர்ச்சனாவை நோக்கியவள், “அவன் என்னைப் பார்க்க வந்திருக்கான். என்னோட கெஸ்டை கொஸ்டின் பண்ணுற ரைட்ஸை உங்களுக்கு யாரு கொடுத்தது?”

“யாரு, இவன் உன்னோட கெஸ்ட்டா? நீயே இங்க கெஸ்ட் மாதிரி தான் வந்துட்டுப் போற. இதுல ரைட்ஸாம் ரைட்ஸ், பேச்சைப் பாரு.”

“இதுக்கு என்னால பதில் சொல்ல முடியும். ஆனா அதை உங்களால அக்செப்ட் பண்ணிக்க முடியாது. என்னை பேசுறதுக்கு ஃபோர்ஸ் பண்ணாதீங்க. அது நல்லது இல்ல.” என்றவள் அவர்களுடனான தனது பேச்சு வார்த்தை அவ்வளவு தான் என்பது போல், விமலின் பக்கம் திரும்பினாள்.

“என்ன, இவ்வளவு காலையில வந்திருக்க?”

“உங்களுக்கு பிரேக்ஃபாஸ்ட் கொண்டு வந்தேன் அண்ணி.”

சற்றே திகைத்த பாவை, “என்ன சொல்லுற.?”

கூடத்தில் இருந்த சேகரனும் அர்ச்சனாவும் அவன் உரைத்ததில் அதிர்ந்து பார்க்க, “அண்ணா தான் கொடுத்துட்டு வரச் சொன்னாரு. மதியத்துக்கு உங்களுக்கு லஞ்சும் வரும்!”

அவனது மறுமொழி அவளை இன்னதென்று பிரித்தறிய இயலாத ஒருவித உணர்வு சுழலிற்குள் தள்ள, உடனேயே சரணிற்கு அழைத்து விட்டாள்.

மறுபுறம் அவன் தொடர்புக்கு வர, “ஹலோ.”

“சொல்லு மோனி.”

“விமல் ஃபுட் கொண்டு வந்திருக்கான். இது என்ன திடீர்னு, புதுசா?”

“நான்தான் அனுப்பினேன். நேத்து நைட் நடந்ததை அவன் சொன்னான். நீ சாப்பிடுறதைப் பத்தி முடிவெடுக்க அவங்க யாரு?”

“சரண், திஸ் இஸ் நாட் ரைட்!”

“மோனி, நான் செய்யிறது தப்புனு சொல்லுறியா?”

“ஸுயரா தப்பு இல்ல. நீங்க நடந்துக்கிட்ட விதம், என்மேல இருக்கிற கன்சர்னைக் காட்டுது. ஐம் சோ ஹேப்பி. அண்ட் தேங்க்ஸ். ஆனா, தப்பில்லாதது எல்லாம் சரினு அர்த்தம் ஆகாது. நான் என்ன செய்யணும்னு நீங்க முடிவெடுக்காதீங்க, ஓகே?”

எதிர்புறம் அவன் மெலிதான மூச்சை வெளிவிட்டு, “ம்ம்..” என்றிட, “ஹார்சா பேசிட்டேனா சரண்?”

“இட்ஸ் ஓகே!”

சின்னதாய் சிரித்தவள், “எனக்கு இப்பப் புரியிது, ஏன் லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஸிப்பை நீங்க பிரிஃபர் பண்ணீங்கனு.”

பாவையின் வார்த்தைகளில் அவனும் இயல்பிற்குத் திரும்பி புன்னகைக்க, “வீடு, எங்க தாத்தா பேர்ல இருக்கு. சோ, இதுல முழு அதிகாரமும் உரிமையும் எனக்கும் உண்டு. இங்க நான் என்ன செய்யணும், எப்படி நடந்துக்கணும்னு யாரும் ஆர்டர் போட முடியாது!” எனக் கூடத்தில் இருந்த அர்ச்சனாவைப் பார்த்தபடி உரைத்தாள்.

குடும்பத்தின் இரண்டாவது மருமகளின் முகம் கடுகடுக்க, “நேத்து நடந்தது, அப்படி ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. ஐ வில் டேக் கேர் ஆஃப் இட். இவ்வளவு இன்டெண்டா நீங்க ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல சரண். இப்ப பிரேக்ஃபாஸ்ட்டை நான் சாப்பிடுறேன். ஆனா, இதுக்கு அடுத்து எதுவும் செண்ட் பண்ணாதீங்க.”

“ஓகே மோனி, ஐ அண்டர்ஸ்டேண்ட்.”

“அப்புறம் ஒரு விஷயம்.”

“சொல்லு.”

“ஃபங்ஷன் எப்ப முடியும்?”

“ஸ்டாராட் பண்ணவே இல்ல. அதுக்குள்ள எப்ப முடியும்னு கேட்கிற?”

“நைட், நயன் ஃபிஃப்டி ஃப்வைக்கு டிரெயின் எனக்கு.”

சரண் திகைத்து, “மோனி?”

“உங்களுக்கு தெரியும், நான் இங்க வந்தது எதுக்காகனு. இந்த எங்கேஜ்மெண்டும், மேரேஜும் அன்எக்ஸ்பெட்டட். உடனே பிளானை சேஞ்ச் பண்ண முடியாது.”

“ஓகே, நான் உன்னை கரெக்ட் டைமுக்கு ஸ்டேஷன்ல விட்டுடுறேன்.”

“நான் நடந்துக்கிற விதம் பிடிக்கலனா, ஜஸ்ட் ஸ்பில் இட் அவுட்.”

“பேசிக்கலாம். பட் இப்ப வேண்டாம். இந்த எங்கேஜ்மெண்ட் டேயை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணலாம்?”

“ஓகே!” என அவள் புன்னகைக்க, “ஃபங்ஷன் ஆறு மணிக்கு. எத்தனை மணிக்கு உன்னைப் பிக்கப் பண்ண வர்ற.?”

“ஃபைவ் கிளாக் ஓகே.”

“ம்ம்.. அவன்கிட்ட நீயே சொல்லீடு. ஈவ்னிங் மீட் பண்ணலாம்!” என்றவன் பேச்சை முடிக்க, விமலைப் புன்னகையுடன் நோக்கினாள் மௌனி.

“என்ன அண்ணி.?”

“நேத்து நடந்ததை உன்னோட அண்ணன்கிட்ட சொன்னியாக்கும்?”

“சொல்லணும்னு நினைக்கல. பட், அவர் என்னன்னு கேட்கவும் எதையும் மறைக்க தோணல. ஸாரி அண்ணி.”

“நேத்து இருந்து என்கிட்ட எத்தனை ஸாரி சொல்லி இருக்கனு தெரியுமா?”

“நான் கணக்குப் பார்க்கலயே அண்ணி?”

அவள் சிரித்திட, உணவை நீட்டினான். வாங்கிக் கொண்ட மௌனி வயிற்றிற்கு உண்ண தொடங்க, அருகே சென்று அமர்ந்தான் விமலும்.

“ஆச்சி எங்க அண்ணி? “

“கோவிலுக்குப் போயிருக்காங்க.”

“தனியாவா.?”

“நான் சொன்னேன், கூட வர்றேன்னு. ‘பக்கத்துல தான, போயிட்டு வந்திடுறேன். நிச்சயம் நடக்கப் போகுது உனக்கு. இந்நேரத்துல வெளியில கூட்டிட்டுப் போறது சரியா இருக்காது’னு மறுத்துட்டாங்க.”

அவன் சிரித்திட, பேச்சிற்கு நடுவே உணவை முடித்து இருந்தாள் மௌனிகா. மேலும் சிறிது நேரம் உரையாடி எதுவும் தேவை இருக்கிறதா எனக் கேட்டுக் கொண்டு கிளம்பிச் சென்றான்.

நடக்கும் நிகழ்வுகளிற்குச் சாட்சியாய், பார்வையாளர்களின் இடத்தில் நின்று இருந்தனர் சேகரனும், அவரின் மனைவி அர்ச்சனாவும்.

அருகே இருந்த கோவிலில் இறைவனை தரிசித்து, ‘மூத்த மகன் வயிற்றுப் பெயர்த்தி நலமுடன் வாழ வேண்டும்’ என்ற வேண்டுதலை வைத்து விட்டு சிறிது நேரத்தில் இல்லம் வந்து சேர்ந்தார் ரெங்கநாயகி.

நண்பகலிலேயே தேவையான அனைத்தையும் தயார் செய்து விட்டனர் ஆச்சியும் பெயர்த்தியும்.

ஆளிற்கு ஒரு பக்கமாய் கைப்பேசியுடன் அமர்ந்து இருந்த இளையமகனின் குடும்பத்தைக் கண்ட மூத்தவர், “சேகரா, இப்படியே எனக்கு என்னனு இருந்தா எப்படி? கிளம்புங்க எல்லாரும் நிச்சயத்துக்கு.”

குடும்பத் தலைவர் மனைவியைப் பார்க்க, “யாரோட நிச்சயத்துக்கு அத்தை?, என்றார் அர்ச்சனா.

“என்ன தெரியாத மாதிரி கேட்கிற? மௌனிக்குத் தான விசேஷம் இன்னைக்கு.?”

“நியாயத்துக்கு என் பொண்ணுக்கு இல்ல, இன்னைக்கு நிச்சயம் நடக்கணும். அவ இடத்துல உங்க பெரிய பேத்தி நிக்கப் போறா. அதுக்கு நாங்க வேற வரணுமாக்கும்.?”

“ஓ.. நியாயத்துக்கு மூத்தவளுக்குக் கல்யாணத்த முடிச்சிட்டு இல்ல, இளையவளுக்கு மாப்பிள்ள பார்த்திருக்கணும். ஆனா, நீயும் உன் புருஷனும் என்ன செஞ்சீங்க? இப்ப என்கிட்ட வந்து நியாயத்தைப் பத்திப் பேசுற.?”

“ஏன், நாங்க உங்க பெரிய பேத்திக்கு மாப்பிள்ள பார்க்காமலா இருந்தோம்? நீங்களும் அவளும் தான, அந்த வரன் வேண்டாம் இந்த சம்மந்தம் வேண்டாம்னு எல்லாத்தையும் தட்டி விட்டீங்க?”

“ஆமாமா.. தப்பு எல்லாம் எங்க மேலதான். முப்பத்தஞ்சு வயசு மாப்பிள்ள, தலையில முடி இல்லாதவன், ஸ்கூல் கூட படிச்சு முடிக்காதவன், வேலைக்குப் போகாம ஊர் சுத்துறவன்னு நீ பார்த்துட்டு வருவ, அதுக்கு நாங்க சரின்னு தலையை ஆட்டணுமா?

உன் பொண்ணுக்கு மட்டும்.. முப்பது வயசுக்கு உள்ள, சொந்தத் தொழில் செய்யிறவன், கவர்மெண்ட் வேலை பார்க்கிறவன்னு மாப்பிள்ள பார்ப்ப. எப்படி உன்னால இப்படி நடந்துக்க முடியிது?”

“ஏன் அத்தை, நான் என்னமோ வேணுமே செஞ்ச மாதிரி பேசுறீங்க? தாய் தகப்பன் இல்லாத பொண்ணுனு தெரிஞ்சாலே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க யோசிக்கிறாங்க, சீர் எல்லாம் செய்வாங்களோ மாட்டாங்களோனு.”

ஓ.. பெத்தவங்க இல்லேனா என்ன? நீயும் உன்னோட புருஷனும் அந்த இடத்துல நின்று செய்யலாம் இல்ல? மௌனி உன்னோட மச்சான் மகதான? மச்சானோட பிள்ள, தன் பிள்ள மாதிரி இல்லையா? உனக்குச் செய்ய மனசு இல்லனு வேணும்னா சொல்லு! தன்னோட மக மட்டும் நல்லா இருக்கணும், அடுத்தவங்க பிள்ள எப்படி போனா என்ன? எப்படியாப்பட்ட ஒரு மனசு உனக்கு?”

“எப்பவோ போய் சேர்ந்த மூத்த மகனும் மருமகளும் தான் பெருசு. இத்தனை வருஷமா கூட வச்சு உங்களைப் பார்த்துக்கிற நாங்க எல்லாம் மனுஷங்களே இல்ல.. அப்படித்தான அத்தை? இதுல நாங்க.. என் பிள்ளைக்கிட்ட ஒரு மாதிரியும் அவகிட்ட வேற மாதிரி நடந்துக்குறோம்னு புகார் வாசிக்கிறீங்க? எல்லாம் உங்களைப் பார்த்து, உங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டது தான் அத்தை..”

“உசுரோட இருக்கிறவனையும் இல்லாதவனையும் ஒப்பீடு செஞ்சு பேசுற பார்த்தியா? ரொம்ப நல்ல எண்ணம் உனக்கு. சரி, இந்தப் பேச்சை இதோட நிறுத்துறது தான் நல்லதுனு நினைக்கிறேன். விசேஷ நாள் அதுவுமா, இதுக்கு மேலயும் பேச வேணாம்.

அப்புறம் சேகரா, எல்லா நேரமும் பொண்டாட்டிக்குப் பின்னாடியே ஒளிஞ்சு நிக்காத. அது ஆம்பளைக்கு அழகு இல்ல. மௌனி உன்னோட அண்ணன் மக. அவளுக்குத் தான் நிச்சயம். நீ வரலனா, சொந்தக்காரங்களும் தெரிஞ்சவங்களும் என்ன ஏதுனு ஆயிரம் கேள்விக் கேட்பாங்க. அதுக்குப் பதில் சொல்ல உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் திடம் இருக்கான்னு பார்த்துக்கோங்க.” என்றவர் அறைக்குள் செல்ல, சேகரனும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மாலை ஐந்து மணிக்கு சரியாய் விழா நாயகியை அழைத்துச் செல்வதற்காக விமல் வர, மௌனி தயாராகி காத்திருந்தாள்.

“வாவ் அண்ணி, சூப்பர்!” என இளையவன் அவளின் தோற்றத்திற்கு மனமகிழ் சான்றிதழ் தந்திட, அதனை புன்னகையில் ஏற்றுக் கொண்டாள்.

“சரி கிளம்புவோமா?” என்று வாகனத்தின் பின்பக்க கதவை அவன் திறந்து விட மௌனிகாவும் ரெங்கநாயகியும் ஏறிக் கொண்டனர்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்