
அத்தியாயம் 15
“உள்ள வர வேண்டியது தான கண்ணா? எதுக்கு இப்படி வாசல்ல நிக்கிற?” என்று விமலை வரவேற்றார் ரெங்கநாயகி.
“இல்ல ஆச்சி. இதுக்கு முன்னாடி அவங்களைக் கூப்பிடுறதுக்கு விடுறதுக்குனு வந்திருக்கேன். இப்ப, எல்லாமே மாறிப் போச்சு. உள்ள வந்தா எல்லாருக்கும் சங்கடம் தான.?” என அவன் சமாதானம் சொல்ல, “இந்த வீடு. அவங்களோடது மட்டும் இல்ல. என்னோடதும் தான். சோ, நீ எப்ப வேணும்னாலும் வரலாம். யாரு என்ன கேட்டாலும் சரி, நான் என் அண்ணியைப் பார்க்க வந்தேன்னு சொல்லு!” என்றாள் மௌனிகா.
பெயர்த்தியின் வார்த்தைகளில் மூத்தவர் புன்னகைக்க, இளையவனோ வியப்புடன் நோக்கினான்.
“என்ன? வா..” என அவள் அழைத்திட, தலை அசைத்து வாயிலைக் கடந்து உள்ளே வந்தான்.
ரெங்கநாயகி, “என்ன சாப்பிடுற கண்ணா?” என்று வினவிட, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் ஆச்சி. நேரம் இல்ல. அண்ணா சீக்கிரம் டிரஸ்ஸைக் காட்டி, பேசிட்டு வரச் சொன்னாரு.” என உரைத்து மௌனியிடம் உடை இருக்கும் பையை நீட்டினான்.
“அவனுக்கு காஃபி ஆச்சி! குடிச்சுக்கிட்டே இரு. நான் டிரையல் பார்த்துட்டு வந்துடுறேன்!” என்று அவள் அறைக்குள் செல்ல, பணி செய்பவரிடம் காஃபி தயாரித்துக் கொண்டு வரும்படி உரைத்துவிட்டு விமலிடம், நிச்சயதார்த்த விழா ஏற்பாடுகளைப் பத்தி விசாரித்தார் பெரியவர்.
பத்து நிமிடங்களில் வெளியே வந்த மௌனி, “ஓகேதான். பட் கொஞ்சம் லூஸா இருக்கு.”
“ஸ்டிச் பண்ணிக்கலாம் அண்ணி, நீங்க அளவு மட்டும் சொல்லுங்க.”
“டேப் இல்லயே, எப்படி மெசர்மெண்ட் சொல்லுறது?”
“ஆமா இல்ல..” எனச் சிந்தித்தவன், டிரஸ்ஸை எனக்குப் போட்டுக் காட்டுங்க அண்ணி. நான் அளவைப் பார்த்துட்டுப் போய் சொல்லிக்கிறேன்.”
மெலிதாய் சிரித்தவள், “ஆர் யூ ஸுயர். கரெக்டா சொல்லிடுவியா?”
“நிச்சயமா அண்ணி.”
“பாப்பா, எனக்கு என்னமோ இது சரிவரும்னு தோணல. மாத்தி தைச்சு வாங்கிட்டு வர்றதும், அளவு முன்ன பின்ன இருந்தா என்ன செய்யிவ? பிள்ளைய இங்கேயும் அங்கேயுமா அலைய விடுறது நல்லா இருக்காது. பேசாம, நீ கிளம்பி கூட போ. தைக்கிறவங்கக்கிட்ட நேராவே சொல்லிட்டா, எல்லாருக்குமே வசதி!” என ரெங்கநாயகி வழி சொல்ல, விமலை நோக்கினாள் மௌனி.
“நான் கூட்டிட்டுப் போறேன் அண்ணி.”
“சரி, வெயிட் பண்ணு. ஹேண்ட் பேக் எடுத்துட்டு வந்திடுறேன்!” என்று அவள் திரும்ப, “இல்ல. நீங்க வெயிட் பண்ணுங்க அண்ணி. நான் வீட்டுக்குப் போயி கார் எடுத்துட்டு வந்திடுறேன்.”
அவனை குழப்பத்துடன் நோக்கிய மௌனி, “ஏன், அதான் டூவீலர் இருக்கே?”
“என்கூட எப்படி நீங்க பைக்ல.?”
“ஹேய்.. இதுல என்ன இருக்கு? வா நீ!”
அவன் முகம் மலர்ந்து, “உங்களுக்கு ஓகேனா, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணி. எங்கனாலும் கூட்டிட்டுப் போவேன். விமல் அட் யுவர் சர்வீஸ்!” என்றிட, சிரித்தாள் மௌனி.
இருவரும் ரெங்கநாயகியிடம் சொல்லிக் கொண்டு வெளியேற, நடக்கும் நிகழ்வுகளை முதல் மாடியில் நின்று பார்த்திருந்தாள் லாவண்யா.
கிளம்பும் முன்னரே, தமையனிற்குக் குறுஞ்செய்தியின் வாயிலாக விபரத்தைச் சொல்லி விட்டான் விமல்.
பயணத்தின் பொழுது, “பைக் இருக்கும் போது, ஏன் கார் எடுத்துட்டு வர்றேன்னு கிளம்புன?” என அவள் விசாரிக்க, “இல்ல, அண்ணனை மேரேஜ் பண்ணிக்கப் போறீங்க நீங்க. என்கூட எப்படி வர ஒத்துப்பீங்கனு தான்.”
மெலிதாய்ச் சிரித்தவள், “யார் சொன்னா அப்படி?’
“முதல்ல அண்ணனுக்குப் பேசி முடிச்சிருந்தோம்ல, அவங்க தான்.” என யோசியாமல் உரைத்துவிட்டு, உடனே நாக்கைக் கடித்து கொண்டான் இளையவன்.
வாகனத்தின் முன்பக்க கண்ணாடி வழியே அவனின் முக மாற்றத்தைப் பார்த்த மௌனி, “லாவண்யாவா.?”
“ம்ம்..” என்றவனின் குரல் உள்ளே போயிருந்தது.
“நான், லாவண்யா இல்ல விமல்.”
அவளின் வார்த்தைகளில் வண்டியை நிறுத்தியவன் பின்புறம் திரும்பிப் பார்த்து, “எனக்குத் தெரியுமே அண்ணி!”
“தெரியிது இல்ல. அப்ப, அவக்கிட்ட நீ நடந்துக்கிட்ட முறையை என்கிட்ட அப்ளை பண்ணாத! சரணை எப்ப கல்யாணம் செஞ்சுக்க ஓகே சொல்லிட்டேனோ, அந்த செகண்ட்ல இருந்து நான்தான் உனக்கு அண்ணி. நான் எப்படிப்பட்ட பொண்ணு, என்கிட்ட எப்படி பழகுறதுனு உனக்குக் குழப்பம் இருக்கலாம். எதுனாலும் சரி, டேரெக்டா என்கிட்டயே கேளு. நீயா ஒரு முடிவுக்கு வராத, ஓகே.?”
“புரியிது அண்ணி!” என அவன் சிரித்திட, “என்ன சிரிக்கிற?”
“அண்ணனும் உங்களை மாதிரி தான் பேசுவான். அதான் உங்களைக் கல்யாணம் செஞ்சிக்க சரினு சொல்லிட்டான் போல?”
“ம்ம்.. இருக்கலாம். சரி, கிளம்புவோமா.?”
அவள் தலை அசைத்திட, புன்னகையுடன் வாகனத்தை இயக்கினான் விமல்.
மௌனிகாவின் உடல் அளவிற்குத் தக்கபடி, உடையைச் சரி செய்து கொண்டு இருவரும் திரும்பும் பொழுது மணி இரவு பத்தைக் கடந்து விட்டது.
வீட்டு வாயிலிற்கு முன்பிருந்த வராண்டாவில் இங்கும் அங்கும் நடந்தபடி எவருடனோ கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள் லாவண்யா.
“விமல் டைமாச்சு. இங்கேயே சாப்பிட்டுப் போ!” என மௌனி அழைக்க, “நான் எப்படி அண்ணி?” என்று தயக்கத்துடன் பார்த்தான்.
“எப்படினா? வாயால தான்!” என அவனின் கைப்பற்றி அழைத்து வர, “சரணைக் கல்யாணம் செஞ்சுக்கப் போறதா சொன்னாங்க. ஆனா, அவனோட தம்பிக்கூட ராத்திரி வரைக்கும் இப்படி ஊர் சுத்திக்கிட்டு இருக்க.?” என்று குத்தலாய் வினவினாள் லாவண்யா.
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ். நான் யாரை மேரேஜ் பண்ணிக்கப் போறேன்? யார்க்கூட ஊர் சுத்துறேன்றது எல்லாம் உனக்குத் தேவை இல்லாதது.” எனப் பதில் தந்த மௌனி, வருங்கால துணைவனின் இளவலுடன் உள்ளே செல்ல, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்றிருந்தாள் மற்றவள்.
பெயர்த்தியின் வருகையை அறிந்த ரெங்கநாயகி, “என்ன பாப்பா? துணியைத் தச்சாச்சா.?” என விசாரிக்க, “ம்ம் ஆச்சி!” என்றவள் விமலை உணவு மேஜையில் அமரும் படி உரைத்துவிட்டு தானும் உடன் அமர்ந்தாள்.
“சாப்டீங்களா ஆச்சி?”
“இல்ல பாப்பா, உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்?”
“ஏன் இப்படிச் செய்யிறீங்க? கரெக்ட் டைமுக்கு சாப்பிட்டா தான, டேப்லட் போட முடியும்?”
“நீ வந்து தனியா சாப்பிடுவியே? இன்னைக்கு ஒருநாள் லேட்டானா ஒன்னும் ஆகிடாது.”
மெலிதாய்ச் சிரித்தவள், பரிமாறுவதற்காக உணவு பாத்திரத்தைத் திறக்க, ஒருவர் உண்ணும் அளவிற்கு மட்டுமே உணவு இருந்தது.
சற்றே நிதானித்த மௌனி, “ஆச்சி..’
“என்ன பாப்பா?”
பாத்திரத்தைக் கண்களால் காட்டினாள்.
மூத்தவரின் முகம் சட்டென்று சுருங்கிவிட, “இதெல்லாம் என்ன ஆச்சி.?”
“சமையல்காரி, வழக்கமா சேர்த்துதான் சமைச்சு வைப்பா. மீதி இருந்தா, அவளே எடுத்துட்டுப் போயிக்குவா. இன்னைக்கு ஏன் இப்படிப் பத்தாம செஞ்சிருக்கானு தெரியல?” என மனதில் தோன்றியதை வாய்விட்டு உரைத்தார் ரெங்கநாயகி.
இங்கு தங்கியிருந்த இரண்டு நாட்களில் மௌனிகாவுமே அதை அறிந்து இருந்தாள். அதனால் தான் மறுசிந்தனை இன்றி, விமலை உணவு உண்ண அழைத்து வந்தாள். ஆனால்.?
“நான் வீட்டுக்குப் போயி சாப்பிட்டுக்கிறேன் அண்ணி!” என இளையவன் அச்சூழலை இளகுவாக்க முயல, பணிப் பெண்ணிற்குக் குரல் கொடுத்தாள் மௌனி.
இரண்டு அழைப்பிற்குப் பின்னரும் பதில் வராமல் போக, மூன்றாம் முறை ரெங்கநாயகி அழைத்தார்.
“எதுக்கு ஆச்சி இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க? அவ வீட்டுல இல்ல.” என உரைத்தவாறே வந்தாள் லாவண்யா.
‘இல்லனா என்ன அர்த்தம்?” என்று மூத்தவர் குரலை உயர்த்த, “இன்னைக்குக் கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்னு கேட்டா. நான்தான், சரினு ஆச்சிக்கு மட்டும் சாப்பாடை வச்சிட்டு மீதியை எடுத்துட்டுப் போனு அனுப்பி விட்டேன்!” என அசட்டையாய் மொழிந்தாள் அவள்.
“எனக்கு மட்டுமா? அப்ப, பாப்பா?”
“உங்க பெரிய பேத்தி சாப்பிடாம வருவானு எனக்கு என்ன ஜோசியமா தெரியும்? என்னை வெளிய கூட்டிட்டுப் போகும் போதெல்லாம் சாப்பிட வச்சுதான், வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து விடுவாங்க. ஆனா.. உன்னை இப்படி? அவசர கல்யாணப் பொண்ணுக்கு இதெல்லம் எதுக்குனு கண்டுக்கலயோ?”
மௌனி எந்த எதிர்வினையும் செய்யாது அமைதியாய் அவளைப் பார்க்க, “ஸாரி அண்ணி!” என்றான் விமல்.
“நீ எதுக்கு ஸாரி சொல்லுற?”
“அவங்க சொல்லுறது உண்மை தான். இன்னைக்குக் காலையில இருந்து ஓரே அலைச்சல். அந்த டென்ஷன்ல, எனக்கு இந்த விஷயம் ஞாபகமே இல்ல.”
“இது, உன் தப்பு இல்ல விமல்.”
“நான் கொஞ்சம் இன்னும் பொறுப்பா இருந்திருக்கணும்.”
சின்னதாய்ச் சிரித்த மௌனி, “ஹேய்.. ரொம்ப சீரியஸா எல்லாம் பேசாத. உனக்கு அது செட் ஆகல.”
“ப்ச்ச்.. என்ன அண்ணி? என்னால, நீங்களும் இப்ப சாப்பிடாம இருக்கீங்களே?” என வருந்தியவன், “ஒரு அஞ்சு நிமிஷம். நான் ஹோட்டலுக்குப் போயி வாங்கிட்டு வந்துடுறேன். உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க.”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் சமைச்சிடுவேன். நீ வெயிட் பண்ணி சாப்பிடுறியானு மட்டும் சொல்லு.”
“மணி பத்தரை ஆச்சு அண்ணி. இதுக்கு மேல சமைச்சு சாப்பிடப் போறீங்களா?”
“ஒன்னும் பிரச்சனை இல்ல. உனக்கு ஓகேவா?”
“நோ.. அண்ணனுக்குத் தெரிஞ்சா, என் தோலை உரிச்சிடுவான். சோ, நீங்க வெயிட் பண்ணுங்க. நான் டிஃபனோட வர்றேன்!” என்ற விமல் அவளிற்குப் பேச வாய்ப்பு கொடுக்காது விறுவிறுவென ஓடிப் போனான்.
அடுத்த பத்து நிமிடங்களில், சூடாய் இரண்டு செட் சப்பாத்தியுடன் வந்து சேர்ந்தான். உணவகத்திற்கு சென்ற பின்னர், அவளிற்கு என்ன வேண்டும் என்று கைப்பேசியில் அழைத்து கேட்டுத் தெரிந்து கொண்ட பின்னரே, வாங்கி வந்திருந்தான் விமல்.
ரெங்கநாயகியுடன் இணைந்து மூவரும் ஒன்றாக உணவை முடித்தனர்.
“இடையில, நாளைக்கு ஒருநாள் தான் அண்ணி இருக்கு. பகல்ல நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க. ஈவ்னிங் மேக்கப் டெஸ்ட்டுக்கு பியூட்டிஸியனைக் கூட்டிட்டு வர்றேன். உங்களுக்கு எந்த மாதிரி வேணும்னு சொல்லுங்க. ஒருதடவைப் போட்டுப் பார்த்துடலாம். சண்டே காலையில மெஹந்தி போடுறதுக்கு ஆள் வந்துடுவாங்க. மதியம் ரெண்டு மணிக்கு நான் வர்றேன் உங்களைக் கூட்டிட்டுப் போறதுக்கு. மண்டபத்துல வச்சு ரெடி ஆகிக்கலாம்.” என நிகழ்ச்சியின் அட்டவணையை விமல் உரைத்திட, “பிளானிங் யாரோடது?” என்று சிரித்தாள் மௌனி.
“அண்ணனோடது!”
“முதல்லயே ஏற்பாடு பண்ணது தான இதெல்லாம்.?”
அதுதான் உண்மை என்பதால், “ஸாரி அண்ணி!” என்றான் விமல்.
“ஸாரிக்கு அவசியம் இல்ல. எனக்கு மேக்கப் போட்டுக்கிறதுல இஷ்டம் இல்ல. மெஹந்தியும் வேணாம். நான் சொன்னேனு சரண்கிட்ட சொல்லீடு.”
“ஆனா அண்ணி?” என அவன் தவிப்புடன் பார்க்க, “ஏன், நான் இப்ப இருக்கிற மாதிரியே வந்தா, பிடிக்காதா உங்க எல்லாருக்கும்?”
“சேச்சே.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல அண்ணி.”
“அப்புறம் என்ன? சொல்லு அவர்கிட்ட!” என சற்று அழுத்தமாகவே உரைக்க, தலை அசைத்து விடைபெற்றுச் சென்றான் விமல்.
உடல் தளர்ந்து சோர்ந்த முகத்துடன் வீட்டிற்குள் நுழைந்த தம்பியைப் பார்த்துச் சிரித்த மூத்தவன், “என்னடா, இப்படி வந்திருக்க? வேலை அதிகமோ?”
“என்னென்ன செய்யணும்னு ஆர்டர் போட்டதே நீங்கதான அண்ணா?”
“ம்ம்.. மோனியோட டிரஸ் ரெடியா?”
“ஆகிடுச்சு. அப்புறம் ஒரு விஷயம் அண்ணா.”
“என்னடா?”
மௌனிகாவின் இல்லத்தில் நடந்ததை உரைத்திட, யோசனையில் சுருங்கியது சரணின் முகம்.
