சிவா வேலைக்கு வந்ததுமே பிரியாவை பார்க்க முடியாததை நினைத்து வருத்தப்பட்டான். நேற்று முழுவதும் ஏகப்பட்ட குழப்பங்கள் வருத்தங்கள். கைபேசியையும் அணைத்துப் போட்டு விட்டான்.
இப்போது பிரியாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. அவளிடம் மட்டுமே ஆறுதல் கிடைக்கும். அதனால் அவளுக்கு செய்தி ஒன்றை அனுப்பினான்.
அனுப்பி விட்டு அவளது சமூக வலைத்தளங்களை பார்க்க, முதல் நாள் சென்றதும் ஊர் சுற்றிய படங்கள் சிலவற்றை பதிந்திருந்தாள். கூட்டமாக நிறைய பேர் இருப்பதை பார்த்து சிவாவுக்கு திருப்தியாக இருந்தது. அமரோடு தனியாக ஊர் சுற்றவில்லை.
பிறகு அவன் வேலையை பார்க்க, பல மணி நேரங்கள் கழித்து தான் பிரியாவிடமிருந்து பதில் வந்தது. சிவாவே பேசி விட்டதில் சந்தோசப்பட்ட பிரியா எடுத்துக் கொண்ட நிறைய புகைப்படங்களை அனுப்பி வைத்து சந்தோசமாக அந்த கூட்டத்தை பற்றிப் பேசினாள்.
சிவா அவளது சந்தோசத்தை நினைத்து புன்னகை செய்தான். அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஊரை சுற்றப்போவதாக சொல்லி கிளம்பி விட்டாள்.
சிவாவும் வீட்டுக்கு போனதும் பேசிக் கொள்ளலாம் என விட்டு விட்டான்.
✦
குரு காய்ச்சல் தெளிந்து எழுந்து விட்டான். அவனை இனி வீட்டுக்கு அழைத்துச் செல்லாம் என மருத்துவர் சொல்லி விட்டார்.
குரு தாயை ஒட்டிக் கொண்டே இருந்தான். திரும்பவும் விட்டுச் சென்று விடுவாளோ என்று பயம் அவனுக்கு. ஆனால் சண்முகி மகனை உடன் அழைத்துச் செல்ல தயாராக இல்லை.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும் மகனோடு கிடைத்த மேடையில் அமர்ந்தாள்.
“குரு.. அம்மா சொன்னா கேட்பியா?”
உடனே நல்ல பிள்ளையாக தலையாட்டினான்.
“கேட்பேன்மா”
“அப்ப உன் அப்பா கூட போ..”
“நீயும் வாமா?”
“நான் வர மாட்டேன்..”
இதைக்கேட்டு அவன் அழுவது போலாகி விட்டான்.
“அந்த வீட்டுக்கு அம்மா இனி வர மாட்டேன் குரு.”
“அப்ப நானும் உன் கூட வர்ரேன்மா”
“அப்படி நீ வந்துட்டா உன் அப்பா வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்குவான். பரவாயில்லையா?”
குரு அதிர்ந்து பார்த்தான். தன் தந்தைக்கு இன்னொரு திருமணமா? யாரால் ஏற்க முடியும்?
“அவனுக்கு வேற ஒருத்திய பிடிச்சுருச்சாம். நான் வேணாம்னு சொல்லிட்டான். அவ கூட வாழனுமாம். கல்யாணம் பண்ணிக்கனுமாம். அம்மா பாவம் தான குரு? அவன் என்னை ஏமாத்திட்டான்டா.. அவனுக்கு வேற ஒருத்தி தான் வேணுமாம். அதான் நான் கோபமா போயிட்டேன்.”
“அப்ப நான்?”
“நீயும் என் கூட வந்துட்டா அவன் ஜாலியா கல்யாணம் பண்ணிக்குவான்டா.. நீ கூட இருந்தா கல்யாணம் பண்ண விடாம தடுப்பல? அதுக்கு தான் அவன் கூடவே இருக்க சொல்லுறேன்”
குருவிற்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. தேம்பி தேம்பி அழுத மகனை சண்முகி அணைத்துக் கொண்டாள்.
“அப்பா நல்லவரில்லையாமா?”
“இல்லடா ரொம்ப கெட்டவன்”
குரு நிறைய நேரம் அழுது ஓய்ந்தான்.
“இப்ப என்ன சொல்லுற? அவன் கூட போறியா?”
குரு அமைதியாக தரையை பார்த்தான். சண்முகி அவனது முகத்தை நிமிர்த்தி பார்த்தாள்.
“அம்மாவுக்காக செய்வல?”
மேலும் கீழும் தலையாட்டியவன் கண்ணை துடைத்துக் கொண்டான்.
“குட் பாய்.. பயப்படாத.. அம்மா சீக்கிரமா இதுக்கு முடிவு கட்டுறேன்.. என்ன?” என்றவள் அவனை எழுப்பி நடந்தாள்.
சுப்பிரமணி காத்திருந்தான். வந்து மகனை தானே அழைத்துப்போவதாக சண்முகி சொன்னதும் சண்டை போட காத்திருந்தான்.
ஆனால் அவள் குருவின் கையை விட்டு விட, குரு அழுகையோடு அவளுக்கு கையாட்டினான். சண்முகியும் அழுகையோடு கல்யாணியை நோக்கிச் சென்று விட்டாள். சில நிமிடங்கள் இருவரும் கிளம்பி விட, சுப்பிரமணியால் எதையும் நம்ப முடியவில்லை.
மகனை தூக்கப்போக, குரு அவனது கையை தட்டி விட்டான்.
“தொடாத.. நீ நல்லவன் இல்ல” என்று கத்தினான்.
சுப்பிரமணி இதைக்கேட்டு அதிர்ந்து போனான். சுற்றியிருந்தவர்களில் சிலர் பார்க்க, “சரி சரி வா.. வீட்டுக்கு போகலாம்” என்று தணிந்து வந்தான்.
ஆட்டோவில் ஏறியதும் குரு ஓரமாக அமர்ந்து கொண்டான். சுப்பிரமணியை திரும்பிக்கூட பார்க்கவில்லை.
சுப்பிரமணிக்கு நடப்பது எதுவும் புரியவில்லை. சண்முகி பிள்ளையை அழைத்துச் சென்றால் தானே, அவன் நினைத்தது போல் அவளை கட்டுப்படுத்த முடியும்? இப்படி விட்டுச் சென்று விட்டாளே.
வீட்டுக்கு வந்ததும் குரு எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு மெத்தையில் சென்று படுத்துக் கொண்டான்.
சண்முகி கல்யாணியிடம் திட்டு வாங்கினாள். சிறு பிள்ளையிடம் அனைத்தையும் சொல்லியிருக்கிறாளே என்று.
“அவன் சின்ன பையனா இருந்தாலும் அந்த துரோகியோட ரத்தம் அவனுக்குள்ளயும் ஓடுது. அது வேலைய காட்ட கூடாதுல? நாளைக்கு அவன் வளர்ந்து கல்யாணம் பண்ணும் போது பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணிடக்கூடாது”
“அதுக்காக இப்படியா செய்வ? அவன கூட்டிட்டும் வராம இப்படி எல்லாத்தையும் சொல்லி வச்சு.. பச்சை பிள்ளைய தண்டிக்கிற. போடி” என்று திட்டினார்.
சண்முகி பின்னால் ஒரு நாள் இதற்காக வருத்தப்படலாம். குருவின் குழந்தை பருவத்தில் இதை சொல்லியிருப்பது தவறு என்று நினைக்கலாம். ஆனால் இப்போது அவளுக்கு எதுவும் தவறாக தெரியவில்லை.
உலகில் பல பெண்கள் செய்யும் காரியத்தை தான் அவளும் செய்தாள். கணவன் கை விட்டதும் மகனை தங்களது கேடயமாக பயன்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். அந்த காரியத்தை தான் சண்முகியும் செய்தாள்.
அவளது செய்கை மற்றவர்கள் பார்வைக்கு தவறாக இருக்கலாம். ஆனால் அவள் செய்தது பல விதமான மாற்றங்களை உண்டாக்கியது. அதுவும் சுப்பிரமணியின் வாழ்வை புரட்டிப் போட்டது.
✦
சிவா வீட்டுக்கு வந்ததும் கல்யாணியின் புலம்பலை கேட்டு விட்டு சண்முகியை பார்த்தான். பிறகு ஒன்றும் சொல்லவில்லை. அவளது வாழ்வை மீண்டும் எப்படி எல்லோரும் சரி செய்ய போகிறோமோ? என்று கவலையாக இருந்தது.
பாண்டியன் வக்கீலை நாளை பார்க்கச் செல்லலாம் என்று சொல்லி விட, கேட்டு விட்டு அறைக்குள் வந்து படுத்தான். மனதில் இருக்கும் கவலையெல்லாம் பிரியாவிடம் கொட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.
கைபேசியை எடுத்து பிரியாவிற்கு ஒரு குறுஞ்செய்தியை போட்டு விட்டு, சமூகவலைதளங்களுக்குள் சுற்ற அவன் பார்வையில் பிரியாவின் படம் பட்டது.
அவளோடு சென்றவர்கள் அவளையும் டேக் செய்து படங்களை பகிர்ந்திருந்தனர். பிரியா அனுப்பிய எந்த படத்திலும் அமர் இல்லை. ஆனால் இப்போது மற்றவர்கள் பகிர்ந்திருக்கும் படங்களில் அமர் இருந்தான்.
அத்தனை படத்திலும் அவன் பிரியாவின் அருகில் நின்றிருந்தான். ஒன்று அவளருகே நின்று போஸ் கொடுத்தான். அல்லது அவனோடு பேசிக் கொண்டு பிரியா சற்று தள்ளி நின்றிருந்தாள். மற்றவர்களின் தனி படத்திலும் கூட தனியாக பிரியாவும் அமரும் பேசிக் கொண்டு நின்ற காட்சி கலந்திருந்தது.
சிவாவிற்கு கோபம் ஏறி விட்டது. அவனோடு அதிக நேரம் ஒட்டிக் கொண்டு அலைகிறாளே. அவள் மீது சந்தேகம் வர ஆரம்பித்தது.
இப்படித்தானே சுப்பிரமணியும் வேலை வேலை என்று சொல்லி ஊரை சுற்றக் கிளம்பினான். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணோடு கூத்தடித்தான் என்று பிறகல்லவா தெரிந்தது? இப்போது அதே வேலையை பிரியா செய்கிறாளா?
நடக்கும் நிகழ்ச்சி இரண்டுக்கும் எதோ பொருத்தம் இருப்பது போல் தோன்ற, அவனது மனதில் கீறல் விழுந்தது.
இரவு வெகு நேரம் கழித்தே பிரியா பதில் அனுப்பினாள்.
இன்று சுற்றிப் பார்த்த இடங்களை பற்றிப் பேசியவள் மறந்து கூட அமரின் பெயரை எடுக்கவில்லை என்பதை கவனித்தான் சிவா.
அவனது கோபத்தை உணர்ந்து, மேலும் கோபத்தை கிளப்ப வேண்டாம் என்று பிரியா நினைத்து அமரின் பெயரை தவிர்த்தாள். ஆனால் அது சிவாவுக்கு வேறு விதமாக சந்தேகத்தை கொடுத்தது.
குற்றமுள்ளவள் வேண்டுமென்றே அமரின் பெயரை தவிர்த்து தன்னை ஏமாற்றப்பார்க்கிறாளோ? என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை.
அன்று எடுத்த படங்களை எல்லாம் கேட்க, சில படங்களை மட்டுமே அனுப்பினாள். அதில் அமர் இல்லை.
சிவாவின் மனதில் விழுந்த கீறல் வழியாக சந்தேகப்பேய் ராஜபாட்டையோடு நுழைந்து சிம்மாசனத்தில் அமர்ந்தது.
சண்முகி பற்றிய விசயத்தை சொல்ல நினைத்தவன் அதை சொல்லாமலே பேசி முடித்து வைத்து விட்டான்.
அவனால் இரவு வெகுநேரம் வரை தூங்க முடியவில்லை. மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள், பயங்கள் தோன்றி அவனை அலைக்கழித்தது.
இந்த பிரச்சனையோடு சிவாவை விட அமர் தயாராக இல்லை போலும். அவன் சொன்ன அடுத்த பிரச்சனையை கணேஷ் நன்றாக கிளப்பியிருந்தான். அது அடுத்த நாள் வெடித்தது.
அடுத்த நாள் விடிந்ததும் சண்முகியும் பாண்டியனும் வக்கீலை பார்க்கச் சென்றனர். அவர் விசயத்தை எல்லாம் கேட்டு விட்டு, விவாகரத்து வாங்கி விடலாம் என்று உறுதி கூறினார். ஆதாரங்களை மட்டும் சேகரிக்கச் சொன்னார். எல்லாம் சம்மதமாக தான் இருந்தது. அவர் சொன்ன பணச்செலவை கேட்ட போது தான் அதிர்ச்சியாக இருந்தது.
அவர்களுக்கு நிறைய கடன் இருந்தது. சண்முகியின் திருமணத்திற்காக வாங்கிய கடனை கூட இன்னும் முழுதாக அடைக்கவில்லை. சண்முகிக்கு பிள்ளை பேறு செலவு. சீர் அது இது என எக்கச்சக்கமாக செலவு செய்திருந்தனர்.
பத்து வருடங்களாக, மிகவும் குறைந்த வருமானத்தில் குடும்பத்தையும் நடத்தி, மகனையும் படிக்க வைத்து, கடனையும் அடைக்க பாண்டியன் நிறைய போராடி விட்டார்.
சிவா வேலை செய்ய ஆரம்பித்த பிறகு தான், ஓரளவு கடனை சமாளிக்க முடிந்தது. இப்போது இவ்வளவு செலவு செய்ய பணம் இல்லை. மீண்டும் கடன் வாங்கலாம். ஆனால் அனைத்தும் சிவாவின் தலையில் விழும்.
இருவரும் யோசித்துக் கொண்டே வீட்டுக்கு வர, வீட்டில் கடன் கொடுத்தவர் அமர்ந்திருந்தார். அவர் சுற்றி வளைக்கவில்லை. சண்முகியின் விவாகரத்து விசயத்தை பற்றிக் கேள்விப்பட்டிருப்பதாக வருத்தம் சொன்னார்.
பிறகு கடனை உடனே திருப்பி அடைக்கச் சொல்லி கேட்டார். திருமணத்திற்காக வாங்கிய கடன். அவளது திருமணமே இப்போது முறியப்போகிறது. இனி கடனை அடைப்பார்களோ? மாட்டார்களோ? என்று சந்தேகம் வந்து விட்டது என்றார்.
இது வரை வட்டி கட்டிக் கொண்டிருந்ததால் அமைதியாக இருந்தார். இனி முடியாது. மொத்தமாக கணக்கை முடியுங்கள் என்று கேட்டார். அதையும் அடுத்த மாதத்திற்குள் முடியுங்கள் என்று கேட்டு விட்டுச் சென்றார்.
மூன்று பேரும் இந்த புது இடியை தாங்க முடியாமல் துவண்டு விட்டனர். மற்றொருவரிடமும் கடன் வாங்கியிருக்க, அவருக்கும் விவாகரத்து செய்தி சென்று சேர்ந்து விட்டது. அவர் நேராக வராமல் கைபேசியில் அழைத்து விசயத்தை சொல்லி கடனை அடைத்து விடக் கேட்டார்.
குடும்பம் மொத்தமும் இடிந்து போனது. எதையும் அறியாமல் பிரியாவின் மீது இருந்த கோபத்தோடு வேலை செய்து விட்டு சிவா திரும்பி வர, அவனிடம் சொல்லி புலம்பினார் கல்யாணி.
“என்னமா இது? மத்தவங்க கஷ்டத்த புரிஞ்சுக்க மாட்டாங்களா? இப்ப வந்து பணத்த முழுசா கேட்டா எப்படி? வட்டி தான் ஒழுங்கா கட்டுறோமே?”
“இவங்கள்ளாம் எரியுற வீட்டுல புடுங்குற வரை லாபம்னு நினைக்கிறவங்கடா. அவங்கள சொல்ல முடியாது. நமக்கு தேவையா இருந்தப்போ தூக்கி கொடுக்கவும் தான செஞ்சாங்க?”
“அதுக்காக? இருக்க பிரச்சனையில பணத்தையும் கேட்பாங்களா? என்ன மனுசங்க இவனுங்க?”
சிவா கொந்தளித்தாலும் அவனாலும் இதை தீர்க்கவோ தடுக்கவோ முடியாது என்று ஆனது.
அன்று இரவு மீண்டும் பிரியாவின் படங்களை பார்த்தான். எதோ ஒரு வாட்டர் பார்க் சென்றிருப்பார்கள் போலும். பிரியா சொட்ட சொட்ட நனைந்து போயிருக்க, அவளருகே அமரும் மற்றவர்களும் நின்றிருந்தனர்.
அவள் அணிந்திருந்த உடை ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால் இப்படி தண்ணீருக்குள் எல்லோரோடும் அவள் விளையாடி இருக்கிறாள். அதுவும் அமரோடு விளையாடி இருக்கிறாள் என்பது சிவாவின் கோபத்தில் பெட்ரோலை ஊற்றியது.
பிரியா அவனுக்கு மீண்டும் சில படங்களை அனுப்பினாள். அதிலும் அமர் இல்லை. சிவா விரக்தியாக சிரித்துக் கொண்டான்.
‘நீ அவன் ஃபோட்டவ காட்டலனா அவன் உன் கூட என்ன கூத்தடிக்கிறான்னு தெரியாம போயிடுமா?’ என்று நினைத்துக் கொண்டான்.
பிரியா பேசும் போது தூக்கம் வருவதாக சொல்லி பாதியில் சிவா பேச்சை துண்டித்து விட்டான். பிறகு அத்தனை படங்களையும் எடுத்துப் பார்த்தான்.
அமர் ஒன்று பிரியாவின் அருகே நின்றான். அல்லது பிரியாவின் பின்னால் நின்றான். சாதாரணமாக பார்க்கும் யாருக்குமே இது புரியாது. ஆனால் சிவாவின் சந்தேக கண்ணுக்கு அனைத்தும் தெரிந்தது.
தொடரும்.