
நண்பர்களை விட்டுத் தனியே படிப்பதில் அவளுக்கும் உடன்பாடில்லை. நண்பர்களின் மீது தனிப்பிரியம் அவளுக்கு எப்போதும் உண்டு.
அவர்களின்றி அவளிடம் அணுவும் அசையாது. அப்படியொரு பிணைப்பு. ஐவரில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக நிற்பது இதயாம்ரிதா தான்.
முந்தைய மாதம், யாமினியின் தந்தைக்கு தொழிலில் சிறு சறுக்கல் ஏற்பட, சற்றும் யோசியாது ராம்குமாரை வைத்து அதனை சரி செய்திருந்தாள்.
ஹை – க்ளாஸ் எனப்படும் உயர் ரக வாழ்க்கை முறைகளை உடைய நண்பர்களைக் கொண்டதால், அவளுக்கும் நைட் பார்ட்டி, பப் என செல்லும் பழக்கம் உண்டு. சில நேரம் ஆண்களும் பெண்களுமாக சோஷியல் ட்ரிங்கிங்கில் ஈடுபடுவதும் வழக்கம்.
குடிப்பதை மட்டும் சாமர்த்தியமாக தவிர்த்து விடுவாள். அவளைப் பார்த்து பத்மபிரியாவும் இதுவரை அவற்றையெல்லாம் தொட்டுப்பார்த்தது கூட இல்லை. அவளுக்கு பல விதத்தில் ரோல் மாடல், இதயாம்ரிதா மட்டுமே.
பத்மப்பிரியாவும் உயர் ரகத்தை சேர்ந்தவள் தான். இரு வருடங்களுக்கு முன்பு திடீரென அவளது தந்தை இறந்து விட, குடும்பமே நிலைகுலைந்து போனது. வியாபாரத்தைப் பற்றி ஆரம்பமே அறியாத அவளது அன்னையும், அத்தனை பொறுப்புகளையும் அவரது தம்பியிடம் கொடுத்து விட, அவரோ இவர்களை ஏமாற்ற தொடங்கினார். இறுதியில் லாப கணக்கை மறைத்து நஷ்ட கணக்கைக் காட்டி வைக்க, இதயாம்ரிதா அதனைக் கண்டுபிடித்து அவரை ஓட ஓடத் துரத்தி விட்டதெல்லாம் தனி கதை.
எப்போதும் அமைதியின் சிகரம் தான். தந்தை இழப்பிற்கு பின், இன்னும் அமைதியாகி விட்டாள். அவளை மீண்டும் அழுத்தத்தில் இருந்து மீட்டது நண்பர் கூட்டம் தான். அவளது தந்தையின் வியாபாரத்தைக் கவனிக்க மேனேஜரை நியமித்து, அதனை ஷ்யாமின் கண்காணிப்பில் விட்டிருந்தாள் இதயாம்ரிதா.
யாமினியும் நிலோபரும், பத்மபிரியாவை தனியே விட்டது கிடையாது. அவளும் தாயும் தனிமையை உணரும் நேரமெல்லாம், நண்பர்கள் பத்மபிரியாவின் வீட்டிற்குப் படையெடுத்து விடுவார்கள்.
பல வார இறுதி நாள்கள் எல்லாம் பத்மபிரியாவின் வீட்டிலேயே தான் நகரும். இன்று அனைவருமாக இதயாம்ரிதாவின் வீட்டினுள் நுழைந்து ரகளை செய்து கொண்டிருந்தனர்.
சில நிமிட அரட்டைக்குப் பிறகு மற்றவர்கள் கிளம்பி விட, ராம்குமாரும் அலுவலகம் சென்று விட்டதில் பத்மபிரியா இதயாம்ரிதாவைத் தனியே பிடித்துக் கொண்டாள்.
“பிஜி படிக்கவே இல்லைன்னு அடம்பிடிச்சவ தான நீ? இப்ப என்ன அந்த காலேஜ்க்கு மட்டும் ஓகே சொல்லிருக்க?” எனச் சந்தேகமாய் வினவினாள்.
வெள்ளிப்பற்கள் மினுக்க புன்னகைத்த இதயாம்ரிதா, அவளது தோள்மீது கையை வைத்து, “அது ஒரு ஷார்ட் ஸ்டோரி பத்தூ” என்றாள் சிலாகித்து.
“என்ன ஸ்டோரியாம் அது?”
“அதுவா…” என சுண்டு விரலைக் கடித்து அங்கும் இங்கும் ஆடியவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள்.
“என்னடி பண்ற?”
“திஸ் இஸ் கால்டு வெட்கம்டி!” இதயாம்ரிதா விளக்கியதில் முறைத்து வைத்தாள்.
அதனை அசட்டை செய்த இதயாம்ரிதா, “நம்ம நேத்து மால்க்குப் போகும்போது ரோட்ல ஒரு ஸ்கூல் பையன் மேல வேன் மோதி ஆக்சிடென்ட் ஆச்சே ஞாபகம் இருக்கா?” எனக் கேட்டதும்,
“ம்ம்… நீ தான ஹாஸ்பிடல்ல சேர்த்த? அம்மா திடீர்னு காய்ச்சல்னு போன் செஞ்சதும் அவசரமா கிளம்பிட்டேன் அம்ரி. இல்லன்னா நானும் உன்கூட வந்துருப்பேன். சரி அந்த ஸ்கூல் பையனுக்கா இந்த வெட்கம்?”
“அடச்சீ! அவனுக்கு இல்லைடி. அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனேனா? அவனுக்கு பிளட் தேவைப்பட்டுச்சுன்னு டாக்டர் சொன்னாங்க. ரேர் பிளட் க்ரூப் வேற. நானும் நம்ம சர்க்கிள்ல விசாரிச்சேன். யாருமே இல்ல. என்ன செய்றதுன்னு தெரியாம, மறுபடியும் ஐசியூ பக்கம் போனேன். அங்க தான் அவனைப் பார்த்தேன். சோ ஹாட்! அவன் அழுகுறது கூட அழகுடி” எனக் கற்பனையில் மிதந்தாள்.
“அழுதானா? அழுதவனையா சைட் அடிச்சுட்டு வந்த?”
“பின்ன, தம்பி உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது அவன் சிரிப்பானா? பிளாஷ்பேக் கேட்கும்போது வாயை மூடிட்டு கேளு” என அவளின் வாயைப் பொத்திக்கொண்டவள் முந்தைய நாளை விவரித்தாள்.
சாலையில் விபத்துக்குள்ளான பள்ளி மாணவனை மருத்துவமனையில் சேர்த்ததோடு கிளம்ப எத்தனித்தவள், அவனுக்கு அவசர தேவை என்றதும் அங்கேயே இருந்து விட்டாள். முயன்ற மட்டும் இரத்தம் தேடி அலைந்தவள், தோல்வியுடன் ஐசியூவிற்குத் திரும்ப அங்கு இடிந்து போய் நின்றிருந்த சத்ய யுகாத்ரனைக் கண்டாள்.
“டாக்டர் ப்ளீஸ்… நான் ப்ளட் குடுக்கத் தயாரா இருக்கேன். என் தம்பிய காப்பாத்துங்க” அவன் கணீர் குரலில் கெஞ்சினான்.
அழுது அழுது முகம் வேறு சிவந்திருந்தது.
“நோ மிஸ்டர் சத்யா. நீங்க இப்ப தான் ஒரு பேஷண்ட்க்கு பிளட் குடுத்து இருக்கீங்க. தேவையான அளவு எடுத்ததுக்கு அப்பறம் உடனே உங்ககிட்ட இருந்து பிளட் எடுக்க முடியாது. நாங்க நிறைய இடத்துல ட்ரை பண்ணிட்டு இருக்கோம்” என்ற மருத்துவரின் கூற்றை அவன் ஏற்கவே இல்லை.
“யார் யாருக்கோ எத்தனையோ தடவை இரத்தம் குடுத்து இருக்கேன். என் தம்பிக்கு தேவையானப்ப அது கிடைக்காம போறது ரொம்ப வலிக்குது டாக்டர். வேற ஆப்ஷனே இல்லன்னா ப்ளீஸ், நான் எவ்ளோ பிளட் வேணாலும் கொடுக்குறேன். அவனுக்கு சர்ஜரி ஸ்டார்ட் பண்ணுங்க…” என உடைந்து அழுதிட, “கிடைச்சுடும் சத்யா. நீங்க அவரோட ஓன் பிரதரா?” என வினவினார்.
“இல்ல… அவன் என் சித்தப்பா பையன்!” எனும்போதே ஒரு தாதியர் அங்கு வந்து விட்டார்.
“டாக்டர் பிளட் கிடைச்சுடுச்சு” என்றதும் பிரகாசமான மருத்துவர், “ஹோப் ஃபார் தி பெஸ்ட் சத்யா” அவனது தோளைத் தட்டிக்கொடுத்து விட்டுச் செல்ல, தளர்ந்து நாற்காலியில் அமர்ந்தான் சத்யா.
இரத்தம் கொடுத்து முடித்த உடனேயே தனது தம்பி அடிபட்டு இதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது அறிந்து துடிதுடித்துப் போனான்.
பழச்சாறும் அருந்தவில்லை. லேசாய் தலையைச் சுற்றியது. ஆகினும் தற்போது ஒரு மிடறு கூட அவன் தொண்டையில் இறங்காது என்று புரிபட, தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனுக்கு நேரம் செல்ல செல்ல கண்கள் இருட்டியது.
ஒரு கட்டத்தில் அவனை மீறியும் மயங்கி விட்டான்.
அவன் விழப்போவது அறிந்து, அத்தனை நேரமும் அவனை பார்வையால் விழுங்கிக்கொண்டிருந்த இதயாம்ரிதா, “ஏய் ஏய்…” எனக் கத்தியபடி அவனருகில் அமர்ந்து அவனின் தலையைத் தன் தோள்மீது சாய்த்துக்கொண்டாள்.
“ஹே… மேன்? ஹே சத்யா…” மருத்துவர் அவனது பெயரை அழைத்ததை அப்போதே குறித்திருந்தாள்.
“சத்யா லுக் அட் மீ! ஓ… வாட் ஆர் யூ மேன்” எனக் கடிந்து விட்டு, அங்கு வந்த தாதியரிடம் நீரை வாங்கி அவனுக்குப் புகட்டினாள்.
அவனுக்கு நீர் புகட்ட வாகாக அவனைத் தன் மடி மீது வைத்துக்கொண்டவள், அவனது கருங்keசம் முதல் சிவந்த இதழ்கள் வரை, பரந்த நெற்றி தொடங்கி ரெட்டை நாடிவரை அளவெடுத்து ரசித்து கண்ணிற்குள் நிரப்பிக்கொண்டாள்.
‘அழகன்! ஸ்மார்ட்னெஸ் ஓவர்லோடட். சம்திங் இருக்கு மேன் உங்கிட்ட’ எனத் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவளுக்கு, உடன்பிறக்காத தம்பிக்காய் ஆணின் இலக்கணங்களை உடைத்தெறிந்து அவன் உகுத்த கண்ணீர் அவள் இதயத்தை ஆழமாய் ஈரப்படுத்தியது.
துளி ஈரம் மெல்ல மெல்ல துளிர்விட்டு அவனை ரசிக்க வைத்தது.
இன்னும் அவன் கண் விழிக்காது இருக்க, தாதியர் அவனை வேறொரு அறைக்கு மாற்றும்படி கூறினார். அதில் அவனை ஒரு அறையில் படுக்க வைத்து விட்டு, தாதியர் க்ளூகோஸ் போட்டு விடத் தொடங்க, அந்நேரம் இதயாம்ரிதாவின் காலடியில் தட்டுப்பட்டது அவனது ஐடி கார்ட்.
“எம். பி. ஏ. ‘ஏ. எஸ்’ காலேஜ்” என்ற தகவலை மனதினுள் பதிய வைத்துக்கொண்டவளுக்கு தந்தை விடாது அழைத்திட, இனி அண்ணன் தம்பி இருவரும் நலம் பெற்று விடுவார்கள் என்ற நம்பிக்கையில் வீடு வந்து சேர்ந்தாள்.
மனதை மருத்துவமையியே விட்டு விட்டு வந்தது அறியாமலேயே!
“ஓஹோ… அப்போ அழுதே உன்னை சைட் அடிக்க விட்டுருக்கான். அவன சைட் அடிக்க தான் காலேஜ்க்கு போறியா?” பத்மபிரியா குறும்பாகக் கேட்க, “எஸ் அஃப்கோர்ஸ்” எனக் கண்சிமிட்டினாள் இதயாம்ரிதா.
அனைத்தையும் சரி செய்து, ஏ. எஸ் கல்லூரியில் காலடி எடுத்து வைத்து, எம். பி. ஏ வகுப்பினுள் நுழைந்தவளுக்கோ பெருத்த ஏமாற்றம். அங்கு சத்யா என்ற பெயரில் வேறு ஒருவன் இருந்தான்.
புஸ்ஸென ஆனது அவளுக்கு. ‘ஐடிகார்டுல அவன் போட்டோ தான இருந்துச்சு. இதே காலேஜ் தான் போட்டுருந்துச்சு… ஒன்னும் புரியலையே!’ என்று யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம்.
ஒரு வாரமாய் கல்லூரியையே அலசி ஆராய்ந்து விட்டாள். அவன் கிடைத்தபாடில்லை. கல்லூரிக்கு வந்து முதல் பீரியடில் மட்டுமே வகுப்பில் இருப்பாள். மீதி நேரமெல்லாம் ஒவ்வொரு வகுப்பறையாய் சென்று தேடவே நேரம் சரியாக இருக்கும்.
ஒரு கட்டத்தில் தேவையில்லாமல் எம். பி. ஏ வில் நுழைந்து விட்டது புரிய, தன்னையே நொந்து கொண்டாள்.
முதலில் நண்பர்களுக்கு அவளது செயல்கள் எதுவும் புரியவில்லை. பத்மபிரியாவை உருட்டி மிரட்டி கேட்டதற்கு பிறகே விவரம் புரிய விஷாலுக்குள் சிறு அதிர்வு. ஆகினும் அதனை மறைத்துக்கொண்டவன், “அவனைத் தேடி தான் நீ இங்க வந்தியா. உன் போதைக்கு நாங்க ஊறுகா” என முறைக்க,
“டேய் நான் மட்டும் வரேன்னு தான சொன்னேன். நீங்களா தான் வந்து என் வலைல விழுந்தீங்க. இட்ஸ் நாட் மை ஃபால்ட். சரி… அதான் என் சைட்டு இங்க இல்லன்னு தெரிஞ்சு போச்சே. வாங்க படத்துக்காவது போயிட்டு மதியத்துக்கு மேல வரலாம்” என்று படையைத் திரட்டிக்கொண்டு படத்தை முடித்துக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்த நேரம் கையும் களவுமாக எச். ஓ. டியிடம் மாட்டி விட்டாள்.
“என்னமா இது? காலேஜ் ஆரம்பிச்சு ஒரு வாரம் கூட ஆகல. ஒரு க்ளாஸ் கூட நீங்க ஒழுங்கா அட்டென்ட் பண்ணல. இப்படியே போனா, உங்களை காலேஜை விட்டுத் துரத்த வேண்டியது தான். இங்க ஸ்டேட்டஸ் வச்சு எல்லாம் நாங்க நடத்த மாட்டோம். எல்லாரையும் ஒரே மாதிரி தான் ட்ரீட் பண்ணுவோம். சோ ஒழுக்கமா நடந்துக்கோங்க” என்று கண்டித்திட, “கண்டவன்கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியதா இருக்கு” எனப் பல்லைக்கடித்தான் விஷால்.
அந்நேரம் எச். ஓ. டி ஆந்தைக்கண்ணன் வேறு புறம் பார்த்து, “இனிமே உங்க க்ளாஸ் கட் அடிக்காம நான் பாத்துக்குறேன் சார்…” என்றதும் “எவன் அவன்…” என்று நிமிர்ந்து பார்த்த இதயாம்ரிதாவின் விழிகள் சாசர் போல விரிந்தது.
அங்கே பீச் நிற சட்டையின் கைப்பகுதியை முழங்கை வரை மடித்து விட்டு வாட்டசாட்டமாக கம்பீரப் பார்வையுடன் நின்றிருந்தான் சத்ய யுகாத்ரன்.
“ஓ மை காட்! இவன் ஸ்டூடண்ட் இல்லையா? ப்ரோபஸரா?” என முணுமுணுத்து அதிர்ந்தது நண்பர்களுக்கும் கேட்க, அவள் புறம் திரும்பிய யாமினி “நீ தேடுனது இவனைத் தானா?” எனக் கேட்டாள் அசட்டையாக.
“மரியாதைடி… நம்ம ப்ரொபஸருக்கு மரியாதை குடுத்து பழகுங்க” என்றதும் அவளை வேற்றுக்கிரகவாசி போல பார்த்து வைத்தாள்.
“ஏன்டி, இருக்குற ப்ரொபஸருக்கு எல்லாம் பட்டப்பேர் வச்சு வம்பிழுத்து வைக்கிறதே நீ தானடி…” நிலோபர் வாயில் கை வைத்துக்கொள்ள,
“அது வேறு… இது வேறுடி! இவனுக்கு ஏதாச்சு பட்டபேர் வச்சது தெரிஞ்சுது. பிச்சுடுவேன்!” என்று விரல் நீட்டி எச்சரித்து வைத்தாள்.
அவளவனாம்! விளையாட்டிற்கு கூட அவனைக் கிண்டல் செய்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை மற்றவர்களுக்கு தானாய் அதிருப்தியை உருவாக்கியது, பத்மபிரியாவைத் தவிர.
சத்யா அழுத்த நடையுடன் அவளருகில் வர, அவளோ கண்ணிமைக்கவும் மறந்து போனாள்.
“இனி கிளாசுக்கு ஒழுங்கா வரணும்! என் க்ளாஸ்ல கட் அடிக்கிறது எல்லாம் எனக்குப் பிடிக்காது.”
“உங்க க்ளாஸ்ன்னு தெரிஞ்சுருந்தா நான் ஏன் சார் கட் அடிக்கப்போறேன்” எச். ஓ. டி அங்கிருந்து சென்றது அறிந்து நேரடியாய் அவள் கூறிவிட, சத்யாவின் விழிகளில் மெல்லத்திர்வு.
“வாட்?” விழி சுருங்க கேட்டவனிடம்,
“உங்களை மாதிரி ஒரு ப்ரொபஸர் இருந்தா, யாருக்காச்சும் கட் அடிக்கணும்னு தோணுமா சார்… என்ன இதை என்கிட்ட நீங்க அன்பா சொல்லிருக்கலாம். எச். ஓ. டியை வச்சு திட்ட வச்சது எல்லாம் டூ பேட்! பட் பரவாயில்ல, ஏதோ உங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். பை தி வே… நீங்க என்ன சப்ஜெக்ட் எடுக்குறீங்க?” எனக் கேட்டுக்கொண்டாள் ஆர்வமாக.
அவளை விசித்திரமாய் ஏறிட்ட சத்யா, “மேனேஜரியல் கமியூனிகேஷன். நான் எலக்டிவ்!” என்றதும்,
“ஓ! வாவ் அப்போ நம்ம தாராளமா நிறைய கமியூனிகேட் பண்ணலாம் அப்படி தான?” எனக் குறும்பாய் வினவியதில், “உனக்கு மூளைக்கோளாறு எதுவும் இல்லையே?” எனக் கேட்டுக்கொண்டான்.
“ப்ச் ப்ச்! இதெல்லாம் உங்களுக்கு புரியாது சார். சரி உங்க க்ளாஸ் எப்போன்னு டைம் டேபிள் குடுத்துடுங்க. கட் அடிக்காம கரெக்ட்டா வந்து என்னோட கடமையை ஆத்துறேன்” என்று தனது கூலர்ஸை போட்டுக்கொண்டவளை, இடுங்கிய விழிகளுடன் பார்த்தவன், “கடமையா?” என வினவிட, “ம்ம்… உங்களை சைட் அடிக்கிறது தான்!” என்று மேலும் அவன் தலையில் இடியை இறக்கி விட்டு துள்ளிக்குதித்து சென்றவளை திகைத்துப் பார்த்திருந்தான் ஆடவன்.
புது காதல் மலரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
68
+1
6
+1
3
⬅ Prev Episode
13 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
Next Episode ➡
15 – புதுக்காதல் புனைந்திடவா (9 to 9 husband)
