
அத்தியாயம் 14
கைப்பேசித் திரையில் காணொளி அழைப்பில் தெரிந்த வண்ண உடைகளைப் பார்த்துப் புன்னகைத்தாள் மௌனிகா.
“கால் பண்ணி, பத்து நிமிஷம் ஆச்சு அண்ணி, இன்னும் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?” என மறுபுறம் ரோகிணி வினவ, “நீ முதல்ல அவங்களை சொல்ல விட்டா தான? கேப் விடாம இது நல்லா இருக்கு. அது நல்லா இருக்குனு வரிசையா அடுக்கிக்கிட்டே போற?” என்றான் விமல்.
தம்பியை முறைத்தவள், “நீ பேசுறதுக்கு நான் பர்மிஷன் கொடுக்கலயே? அண்ணி சொல்லுறதைக் கேட்டுச் சொல்லுறதுக்காகத் தான், உன்னை இங்க நிப்பாட்டி வச்சிருக்கேன். வந்த வேலையை மட்டும் பாரு!” என உரைத்திட, சிக்கிக் கொண்ட பலி ஆடு போல் மௌனியை நோக்கினான் அவன்.
“அண்ணி ப்ளீஸ்..”
“ஸ்டோன் ஒர்க் நிறைய இல்லாம, வெய்ட் கம்மியா பார்க்கச் சொல்லு விமல்.”
அவன் தமக்கையிடம் உரைக்க, தான் எடுத்து வைத்ததில் இருந்து மௌனி உரைத்ததை போலான உடைகளைப் பிரித்து எடுத்தாள் ரோகிணி.
ஒவ்வொரு உடையாக தம்பியைப் பிடிக்கச் சொல்லி அதன் முழுத் தோற்றத்தையும் காட்டிக் கொண்டிருக்க, “டிரஸ் செலக்ஷன் எந்த லெவல்ல இருக்கு?” என்றபடி வந்தான் சரண்.
“இப்பதான ஸ்டார்ட் பண்ணி இருக்கோம். அதுக்குள்ள கேட்டு வந்துட்டீங்க அண்ணா? போன தடவை எல்லாம் அரை நாள் ஆச்சு!” என தனது அனுபவத்தை உரைத்தான் விமல்.
“அரை நாளா? சரியா போச்சு. இப்படி டிரஸ் செலக்ட் பண்ணா, எப்ப வேலையை முடிக்கிறது? அடுத்து ஜுவல்ஸ் வாங்க வேற போகணும்!”
“லேடீஸ் கூட வந்துட்டு, இப்படி எல்லாம் அவசரப் படக்கூடாது, தெரியுமா?”
“ஹோ.. அப்ப சும்மா உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கணும்னு சொல்லுறியா?”
“எக்ஸாட்லி! இதுதான் ரூல் நம்பர் ஒன். வேடிக்கை மட்டும் தான் பார்க்கணும். அவங்களை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. ரூல் நம்பர் டூ, பேஸன்ஸ் ரொம்ப முக்கியம். எந்த அளவுக்குப் பேஸன்ஸா இருக்கோமோ, அந்த அளவுக்கு நம்ம மனநிலையும் பீஸ்ஃபுல்லா நல்லா இருக்கும். இல்லேனா, குழாயடி சண்டை மாதிரி ஆகிடும். நெக்ஸ்ட் ரூல் நம்பர் த்ரீ..”
“ஏய் நிப்பாட்டு! எங்க இருந்து பிடிச்ச, இந்த ரூல் எல்லாம்?” என தம்பியை இடைநிறுத்தி தங்கைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்த உடைகளை, ஒவ்வொன்றாய் பார்வையிடத் தொடங்கினான் சரண்.
“ஏது பிடிச்சதா? அண்ணா, பல வருஷமா தீபாவளி பொங்கல்னு அம்மாக்கூட டிரஸ் எடுக்க வந்து, நானே கண்டுபிடிச்தாக்கும்.”
“நல்லா கண்டுபிடிச்ச!” என அவன் உரைத்திட, இரு பெண்களும் அடக்க மாட்டாமல் சிரித்தனர்.
“அண்ணி யூ டூ..” என்று விமல் பாவமாய் கேட்டிட, “சில்!” என சமாதானம் சொன்னாள் மௌனி.
“சரி ஓகே.. அண்ணி சொல்லுறதால, நான் சில் ஆகிக்கிறேன்!” என்று உடனே அவன் நல் பிள்ளையாய் மாறி விட, “பாவி! என்னமா நடிக்கிறான்!” எனத் தம்பியின் முதுகில் வலிக்காமல் அடித்தாள் ரோகிணி.
இதற்கிடையில் இரண்டு உடைகளைத் தேர்வு செய்த சரண், “மோனி, ஓகேவானு பாரு!” என்று திரையில் காட்டினான்.
“அண்ணா அதுக்குள்ளயா?” என விமல் வினவ, “ஃபர்ஸ்ட் டைம் லேடீஸ் செக்ஷனுக்கு வந்து, அஞ்சே நிமிஷத்துல டிரஸ் செலக்ட் பண்ண ஒரே ஆள், நீயா தான் இருப்ப!” என்று தமையனிற்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கினாள் ரோகிணி.
இவர்களைப் பார்த்திருந்த மௌனி, “உங்களுக்கு ப்ளூ கலர்னா பிடிக்குமா சரண்?”
தனது கரத்தில் இருந்த உடைகளை பார்த்தான் ஆடவன். நீல நிறத்தின் இரு வேறு கலவைகளில் இருந்தது, இரண்டு உடைகளும்.
அவன் மெலிதாய்ப் புன்னகைத்திட, “ஃபர்ஸ்ட் ஒன்..” என மயில் கழுத்து நிறத்தில் இருந்ததைத் தேர்ந்தெடுத்து, “அதை ஓரமா வைங்க. வேற எதுவும் இருந்தா பாருங்க.!” என்றாள் பாவை.
“ஏன், அதுவே நல்லா தான இருக்கு மோனி?”
“அதை விட பெட்டரா கிடைச்சா, வாங்கலாமே.?”
“ஹோ.. டிரஸ்ல மட்டும் தான் பெட்டர் ஆப்ஷனா? இல்ல, எல்லாத்துலயுமா?”
“பெட்டர் அப்படிங்கிறதை விட.. எனக்கு ஓகேனு தோணிட்டா, அதைவிட மோர் பெஸ்டா வேற எதைத் தந்தாலும் நான் அக்செப்ட் பண்ணிக்க மாட்டேன்.”
“நைஸ் பிரின்ஸிபில்..” என்றவன் அடுத்த ஏழு நிமிடங்களில் மேலும் இரண்டை தேர்ந்தெடுத்து காட்டினான். ஒன்று ரோஜாவிற்கும் ஆரஞ்சிற்கும் மத்தியிலான நிறத்திலும், மற்றொன்று பாலேடு வண்ணத்திலும் இருந்தது.
அவனிற்கு நீலம் பிடிக்குமா என்று கேட்டதால், இம்முறை கவனமாய் அந்த நிறத்தை தவிர்த்து இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள் பாவை.
“அந்த பிங்க்கை செலக்ட் பண்ணிக்கலாம்!” என மௌனி உரைக்க, “உனக்குப் பிடிச்ச கலர் பிங்கா?” என்றான் சரண்.
“கிரீன்..” என அவள் பதில் அளித்திட, “ஹொய்.. எனக்கும் கிரீன் தான் பிடிக்கும், எந்த சேட் அண்ணி?” என்று குதூகலமாய் தமையனின் வருங்கால துணைவியுடன் பேச ஆரம்பித்து விட்டான் விமல்.
“ஸ்பெஸிஃபிக்கா எதுவும் இல்ல. எல்லா சேடுமே பிடிக்கும்!” என அவள் பதில் தந்திட, “போய் பில்லைப் போடுடா!” என்று அவனிடம் இருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டு அனுப்பினாள் ரோகிணி.
“தேங்க்ஸ் ரோகி!” என மௌனி குறுஞ்செய்தி அனுப்பிட, “தேங்க்ஸை அண்ணாக்குச் சொல்லுங்க. நான் தான் ஒன்னும் பண்ணலேயே.?”
அவள் சிரித்திட, திரையில் தெரிந்தான் சரண்.
“விமல்கிட்ட டிரஸ்ஸைக் கொடுத்து விடுறேன். ஒன் டைம் போட்டுப் பார்த்துடு மோனி. எதுவும் ஆல்ட்டர் பண்ணணும்னா சொல்லு, அவன் பார்த்துக்குவான்.”
“ம்ம்.. தேங்க்ஸ் சரண்.”
தலை அசைத்தவன் பட்டுப்புடவை பிரிவில் விட்டு வந்திருந்த அன்னையையும் சிற்றன்னையையும் காணச் சென்றான்.
பாகீரதியின் குடும்பத்தாருக்கு அன்றைய தினம் முழுவதும், துணி மற்றும் நகைக் கடையிலேயே கழிந்து போனது.
மாப்பிள்ளை என்ற போதிலும் ஓய்வே கிட்டவில்லை சரணிற்கு. தந்தையையும் இழந்து, ஒரு விழாவைப் பொறுப்புடன் எடுத்து செய்வதற்கு மூத்த ஆண் எனக் குடும்பத்தில் எவரும் இல்லாததால், தனது திருமண விழாவின் ஏற்பாடுகள் அனைத்தையும் அவனே கவனிக்க வேண்டியதாய் இருந்தது.
தம்பி தங்கையிடம் பணியைக் கொடுத்தால் செய்வர் தான். எனினும் மூத்தவனாய் தான் இருக்கையில் இளையவர்களை வேலை செய்ய விடுவதில் உடன்பாடு இல்லாது, குடும்பத் தலைவனாய் அனைத்து பொறுப்புகளையும் தனது தோளிலேயே ஏற்றுக் கொண்டான்.
ஒலித்த கைப்பேசியை செவியோடு இணைத்தாள் ரஞ்சனி.
“ஹாய் படி..”
“எப்படி இருக்க ரஞ்சு?”
“என்னப்பா? ஊருக்கு போய் இரண்டு நாள் தான ஆகுது? அதுக்குள்ள எப்படி இருக்கனு நலம் விசாரிக்கிற?”
மௌனி மெலிதாய்ச் சிரிக்க, “ஆல் ஓகே?”
“யா படி!”
“ம்ம்.. அப்புறம் ஏதோ ஷாக்குனு சொன்னியே?”
“சித்தப்பா பொண்ணோட எங்கேஜ்மெண்ட் கேன்சல் ஆகிடுச்சு.”
“ஹேய்.. என்ன படி சொல்லுற?”
“ஆமா.. நான் இங்க வரும் போதே நின்னுடுச்சு.”
“சரி விடு. போனதுக்கு ஆச்சிக்கூட ஹேப்பியா இருந்துட்டு வா.”
“ம்ம்.. அப்புறம் ஒரு விஷயம்.”
“சொல்லு படி.”
“எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு.”
“வாட்..” என்று மறுபுறம் அதிர்ந்த ரஞ்சனி, “ஹேய் மௌனி, என்ன சொல்லுற?”
“பொண்ணு மாறி போச்சு.”
“என்னது.?” என மேலும் திகைத்தவள், “ஹேய்.. வெயிட் வெயிட்.. பொண்ணு மாறிப் போச்சுனா, அப்ப மாப்பிள்ளை?”
“எஸ் படி! நீ நினைக்கிறது தான்.”
“என்னதான் நடக்குது அங்க? என்னமோ கதை சொல்லிக்கிட்டு இருக்க? சினிமால தான் பொண்ணு ஓடிப்போனா, அந்த பொண்ணோட அக்காவையோ தங்கச்சியையோ பிடிச்சு கல்யாணம் செஞ்சு வைப்பாங்க. நிஜத்துலயுமா?”
மெலிதாய் சிரித்த மௌனிகா, “பொண்ணு ஓடிப் போச்சுனு, நான் சொல்லவே இல்லையே?”
“ப்ச்ச்.. அது ஏதோ ஃப்ளோல வாய் பேசிடுச்சு. என்ன நடந்துச்சுனு முதல்ல சொல்லு.”
“அவர், லாவண்யாவை வேண்டாம்னு சொல்லிட்டாரு.” என உரைத்து, நடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்தாள்.
“இவ்வளவு நடந்திருக்கு. நீ இப்ப சொல்லுற என்கிட்ட?”
“நான் ரொம்ப எல்லாம் எதுவும் யோசிக்கல படி. நடக்குறது நடக்கட்டும்னு அப்படியே அக்செப்ட் பண்ணிக்கிட்டேன்.”
“மத்த விஷயத்துக்கு ஓகே மௌனி. ஆனா மேரேஜ்? இட்ஸ் எ லாங் ஜெர்னி. உன்னால முடியுமா?”
“சரண்கிட்ட பேசிப் பார்த்ததுல, இந்த ஜெர்னி அப்படி ஒன்னும் காம்பிளிகேட்டடா இருக்காதுனு தோணுது.”
“என்னமோ போ! ஆனா, நல்லா யோசிச்சு முடிவு எடு. உனக்கு இன்னமும் கூட டைம் இருக்கு.”
“நான் ஆல்ரெடி ஓகே சொல்லிட்டேன். பேக்ல போறதா எந்த ஐடியாவும் இல்ல.”
“ஓகே! உனக்கு சரினு பட்டா, சரிதான். கோ எஹெட். நான் எப்பவும் உன்கூட இருப்பேன்.”
“தேங்க்ஸ் ரஞ்சு.”
“ஸாரி படி, என்னால உன்னோட எங்கேஜ்மெண்டுக்கு வர முடியாது.”
“ஹேய்.. நீ வரணும்னு எல்லாம் நான் நினைக்கல. உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன் அவ்வளவு தான்.”
“யூ ஆர் சோ ஸுவீட் படி.”
மௌனி சிரித்திட, “அப்படியே என் ஃப்ரெண்டை ஒரே நாள்ல தூக்குன அந்த மாப்பிள்ளைப் பையனோட ஃபோட்டோவை அனுப்பு.”
“ஸாரிப்பா. அவரோட ஃபோட்டோ என்கிட்ட இல்ல.”
“இல்லனா, கேளு.”
“ப்ச்ச்.. நோ..”
“என்ன?”
“இல்ல வேணாம், நல்லா இருக்காது.”
“நாளன்னைக்கு எங்கேஜ்மெண்ட், படி. இப்பப் போயி வேணாம் நல்லா இருக்காதுனு சொல்லிக்கிட்டு இருக்க.?”
“ஹேய்.. என்னோட வேர்ட்ஸை டிவிட் பண்ணாத நீ!”
ரஞ்சனி சிரித்திட, “எப்படியும் எங்கேஜ்மெண்டுக்கு ஃபோட்டோஸ் எடுப்போம்ல? அதை செண்ட் பண்ணுறேன்.”
“ஓகே படி. டேக் கேர்.” என பேச்சை முடிக்க, மெலிதான பெருமூச்சு ஒன்றை விட்டு கைப்பேசியை அணைத்தாள் மௌனிகா.
“பாப்பா..” என்ற அழைப்பில் திரும்பிட, கரத்தில் தேநீரோடு வந்தார் ரெங்கநாயகி.
உடனை எழுந்து சென்றவள், “நீங்க எதுக்கு ஆச்சி, இதெல்லாம் எடுத்துட்டு வர்றீங்க?”
“என் பிள்ளைக்கு நான் செய்யாம, வேற யாரு செய்யிவா?”
“செய்யக்கூடிய வயசு இல்ல, உங்களுக்கு. புரிஞ்சிச்சா?”
அவர் சிரித்து, “யார்கிட்ட பேசிட்டு இருந்த?”
தேநீரை அருந்தியவள், “ரஞ்சனி ஆச்சி. எங்கேஜ்மெண்ட் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்.”
“ம்ம்.. உனக்கு சந்தோஷம் தான பாப்பா?”
“ஏன் ஆச்சி இப்படிக் கேட்கிறீங்க?”
“பிடிச்சிருக்கா மாப்பிள்ளைய, எனக்காக ஒன்னும் ஒத்துக்கலயே?”
“உங்களுக்காகத்தான் ஒத்துக்கிட்டேன். இல்லேனா, இப்ப எனக்குக் கல்யாணம் செஞ்சுக்கிற எண்ணமே இல்ல.”
“என்ன பாப்பா நீ?” என ரெங்கநாயகி பாவமாய் பார்க்க, மூத்தவரின் கைகளைப் பற்றி சிரித்தாள் மௌனிகா.
‘ஆச்சி ஹேப்பினா, நானும் ஹேப்பி. எனக்கு, சரண் ஓகே தான்.”
“இது போதும் பாப்பா!” என அவர் நிம்மதி மூச்சுவிட, அவளின் கைப்பேசி ஒலித்தது.
மறுபுறம் விமல், “அண்ணி டிரஸ் கொண்டு வந்திருக்கேன். வாசல்ல இருக்கேன்.” என்று உரைத்திட, மூத்தவரின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு வெளியில் வந்தாள் அவள்.
