Loading

வேலை முடிந்து கலைத்துப்போய் வீட்டுக்கு திரும்பி வந்த சுப்பிரமணி மகனை பார்த்தான். குரு அவன் வரும் வரை பக்கத்து வீட்டில் இருந்து விட்டு பிறகு அவனோடு வீட்டுக்கு வந்தான்.

“ப்பா.. பசிக்குது” என்று ஆரம்பித்தான். சுப்பிரமணிக்கு சலிப்பாக இருந்தாலும், “யூனிஃபார்ம கலட்டி வேற டிரஸ் போடு.. வெளிய போகலாம்” என்றான்.

“அம்மா தான் எனக்கு டிரஸ் மாத்தி விடுவாங்க”

“நீயா செய்ய மாட்டியா?” என்று சுப்பிரமணி அதட்ட, குரு அழ ஆரம்பித்து விட்டான்.

“அம்மாவ கூப்பிடு.. அம்மாவ வர சொல்லு” என்று அவன் சத்தமிட்டு அழ சுப்பிரமணியின் தலைவலி அதிகரித்தது.

ஆனால் குருவை உடனே சமாதானம் செய்தான். அவனுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கித்தருவதாக சொல்லி, இருக்கும் எதோ ஒரு உடையை கொடுத்து அணிய வைத்து வெளியே அழைத்துச் சென்றான்.

வீட்டுக்கு திரும்பி வர பிடிக்கவே இல்லை. மனைவி இல்லாமல் வீட்டை பார்த்தால் அது வீடாகவே தெரியவில்லை.

மனதை மாற்ற வேண்டி மாலை முழுவதும் வெளியே சுற்றி விட்டு, இரவு வீட்டுக்கு வரும் போது குரு உறங்கியிருந்தான்.

அவனை படுக்க வைத்தவனுக்கு வீட்டை சுத்தப்படுத்த கூட மனம் இல்லை. அப்படியே அவனருகே படுத்துக் கொள்ள “அவள்” அழைப்பு விடுத்தாள்.

“என்ன மணி டயர்டா இருக்கியா?”

“ஆமா.. குரு அம்மாவ கேட்டு அழுறான். சமாளிக்க முடியல”

“கொண்டு போய் அவ கிட்ட விட்டுரு.. அவ புள்ளைய பார்க்காம போயிட்டா.. நீ ஏன் கஷ்டப்படுற?”

“குரு என் புள்ளையும் தான்டி.. மறந்துட்டியா?”

“சோ வாட்? பிள்ளைய பார்க்க வேண்டியது பெத்தவ கடமை. அப்பா உன் கடமை சம்பாதிச்சு கொடுக்குறது தான். இத்தனை வருசமா நீ சம்பாதிச்சு கொடுத்தப்போ சந்தோசமா இருந்தா.. இப்ப பிள்ளையையும் விட்டுட்டு போயிட்டா”

“சண்முகி பத்தி இப்படிப்பேசாத.. அவ்வளவு தான் சொல்லுவேன்”

“உனக்கு உன் பொண்டாட்டிய பிடிக்கும்னா எனக்கு மணிய பிடிக்கும்… அவன் இப்படி கஷ்டப்படுறத என்னால ஏத்துக்க முடியாது”

“அதுக்காக குருவ போய் விட முடியாது. சண்முகி குருக்காக வந்து நிக்கனும். அப்ப தான் அவள நான் இங்க தங்க வைக்க முடியும்”

“அப்படி அக்கறை பட்டு அவ வருவானு எனக்கு தோணல..”

“ஏன்?”

“அக்கறை இருந்தா விட்டுட்டே போயிருக்க மாட்டா.. பிள்ளைய பெத்த அம்மாங்க எல்லாரும் பிள்ளை கூட ரொம்ப அட்டாச்ட் ஆகியிருப்பாங்க. இப்படி விட மாட்டாங்க. இவ ரெண்டு நாளா பிள்ளைய கண்டுக்கல. அப்புறம் எப்படி வருவா?”

“அதெல்லாம் வருவா.. அவளுக்கு என் மேல இருக்க பாசத்த விட குரு மேல பாசம் அதிகம். கண்டிப்பா வருவா.”

“அப்படி வந்தா என்ன செய்வ?”

“இவன் என் புள்ளைனு சண்டை போடுவேன். புள்ளைய கேட்டா நீயும் இங்கயே இருந்து வேணா பாரு.. தரலாம் முடியாதுனு சொல்லிடுவேன்”

“கூட்டிட்டு போயிட்டா?”

“கூட்டிட்டு எங்க போவா? அவ அப்பா வீட்டுக்கா? அங்க அவங்கப்பா எவ்வளவு பெரிய டெரர் தெரியுமா? பொண்டாட்டியவே மதிக்க மாட்டாரு. மக வாழா வெட்டியா இருந்தா மானம் போயிடும்னு துரத்துவாரு. அவரு கிட்ட போக பிடிக்காம தான் சண்முகி பல நாள் அந்த வீட்டுக்கே போக மாட்டா.. வருவா பாரு..”

“அப்ப கூட உனக்கு அவ தான் வேணும் இல்ல? நான் வேணாம்?”

“நீ வேணாம்னு எப்ப சொன்னேன்? எனக்கு ரெண்டு பேருமே வேணும்..”

“அவள விட்டுட்டு என் கிட்ட வர மாட்ட.. அவ உனக்கு பிள்ளை கொடுத்துருக்கா.. நான் பிள்ளை பெத்துக்க சம்மதிக்கல.. அதுனால தான என்னை விட அவ பெருசா இருக்கா?”

“மறுபடியும் இப்படி பேசாதனு. எத்தனை தடவ சொல்லுறேன்? நீ பிள்ளை பெத்துக்க மாட்டேன்னு சொன்னதுக்கு நான் எதாவது கேட்டனா? அது உன் இஷ்டம் செல்லம்.. எனக்கு வாரிசு கொடுக்க தான் சண்முகி இருக்காளே.. ஆல்ரெடி கொடுத்துட்டா.. அது போதும். நீ இத பத்தி கவலைப்படாத.. பேசாம தூங்கு.. நாளைக்கு ஆஃபிஸ் வேலைய எல்லாம் பார்க்கனும். நானும் தூங்குறேன். செம்ம டயர்ட்”

“சரி குட் நைட்” என்று விட்டு வைத்து விட்டாள்.

சுப்பிரமணி தூங்கும் மகனை பார்த்தான். அவனுக்காக நிச்சயமாக சண்முகி வந்து விடுவாள் என்று நினைத்தான்.

அதே நேரம் சண்முகி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள். அவளால் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

“பாவம்மா அவன்.. அந்தாளு அவனுக்கு சோறு போட்டானானு கூட தெரியல. பசில துடிப்பான். இவன விட்டுட்டு வப்பாட்டி வீட்டுக்கு போயிட்டா என்னமா செய்யுறது?” என்று சண்முகி அழ கல்யாணிக்கும் அதே பயம் தான்.

“இதுக்கு தான்டி கூப்பிட்டு வரலாம்ங்குறேன்”

“இல்லமா.. அவன் அந்தாளு கூட இருக்க வரை தான் அந்தாள கட்டுப்படுத்த முடியும். பிள்ளையும் பொண்டாட்டியும் போயாச்சு.. அடுத்து தனிக்காட்டு ராஜானு அவ கூட வாழப்போயிடுவான்”

“நீ அந்தாள தண்டிக்கிறத பத்தி யோசிக்கிற.. குருவையும் யோசிடி”

“அந்தாளு மேல இருக்க வெறுப்புக்கு பிள்ளை மேல கோபத்த காட்டிருவேன்மா.. குருவ பட்னி போடுற அளவு அவன் கொடூரமானவன் இல்ல.. ஆனா என்னை ஏமாத்துறதுக்கு தான் மனசு வந்துடுச்சு.. நாலு வருசமா ஒருத்தி கூட குடும்பம் நடத்திருக்கான். அது தெரியாம..”

தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். கல்யாணிக்கு என்ன சொல்லி மகளை தேற்றுவது என்றே விளங்கவில்லை.

மறுநாள் விடிந்ததும் சண்முகியின் கைபேசி அலறியது. திரையில் “ஹஸ்பண்ட்” என்ற பெயர் ஒளிர்ந்தது.

அதை வெறித்துப் பார்த்தாளே தவிர எடுக்கத் தயாராக இல்லை. சிவா வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தான். சண்முகி வெறித்துக் கொண்டிருப்பதை கண்டு அருகே வந்து பார்த்தான்.

“எவ்வளவு தைரியம் இந்தாளுக்கு?” என்று பல்லக்கடித்தவன் உடனே எடுத்து காதில் வைத்தான்.

“இப்ப எதுக்கு கால் பண்ணுற? பண்ணதெல்லாம் போதாதா?” என்று எடுத்த எடுப்பில் எகிற சில நொடிகள் சுப்பிரமணி அமைதியாக இருந்தான்.

பிறகு “குருவுக்கு ஃபீவர்.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேன். அவன் அம்மா வேணும்னு கேட்குறான்” என்றான்.

சிவா குருவுக்காக வருந்தினாலும், “ஏன் அந்த பொம்பளய அம்மானு காட்ட வேண்டியது தான?” என்று கேட்டு வைத்தான்.

சுப்பிரமணி பதில் பேசும் முன்பு சண்முகி கத்தினாள்.

“யாருக்கு யாருடா அம்மா? அந்தாளுக்கு வேணா நூறு பொண்டாட்டி இருக்கட்டும். ஆயிரம் வப்பாட்டி இருக்கட்டும். என் புள்ளைக்கு நான் தான் அம்மா..”

“அதுக்கு தான் இப்ப உன்னை கூப்பிறான்.. போறியா?”

“எந்த ஹாஸ்பிடல்னு கேளு”

சிவா கேட்கும் முன்பே சுப்பிரமணி பதில் சொல்ல, சிவா வேறு எதுவும் பேசாமல் வைத்து விட்டான்.

“நானும் வரவா?”

“எதுக்கு? அந்தாள அடிக்கவா? ஒரு நாள் அடிக்குற காலம் வரும். அப்ப கூட்டிட்டு போறேன். இப்ப நானும் அம்மா மட்டும் போயிட்டு வர்ரோம்”

“நானும் வர்ரேன். குருவ கூட்டிட்டு வந்துடலாம்” என பாண்டியன் சொல்ல, “நாங்க கூப்பிடலாம் போகல. பார்க்க தான் போறோம்.” என்று திட்டவட்டமாக சொல்லி விட்டு எழுந்து கிளம்பினான்.

‘மனுசனா அவன்? பிள்ளைக்கு காய்ச்சல் வர வச்சுருக்கான்.. இவன போய் கல்யாணம் பண்ணதுக்கு எங்கயாச்சும் விழுந்து செத்துருக்கலாம்’ என்று மனதில் பொங்கிக் கொண்டே தயாரானாள்.

“ப்பா.. நீங்க லீவ் போட வேணாம்பா.. நானும் அம்மாவும் போறோம். அந்தாளு எங்கள ஒன்னும் பண்ண முடியாது..”

“இருந்தாலும்..”

“ப்பா.. எதாவது ஒன்னுனா கூப்பிடுறோம் வாங்க.. வேலைய விட வேணாம்” என்று விட பாண்டியனுக்கு அப்போது மகளின் பேச்சு பெரிதாக இருந்தது.

அவளை தனியாக அனுப்ப பிடிக்கவில்லை. அதே நேரம் சுப்பிரமணியை பார்த்தால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடித்து விடுவார். பொது இடத்தில் வைத்து பிரச்சனையை பேசவும் பிடிக்கவில்லை.

அதனால் அவர் வேலைக்கு கிளம்ப சண்முகியும் கல்யாணியும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

“என்ன அவ வர்ராளாமா பிள்ளைய பார்க்க?” என்று “அவள்” கேட்க “ம்ம்..” என்றான் சுப்பிரமணி.

“அப்படியே அவ கிட்ட கொடுத்து அனுப்பிடு.”

“மறுபடியுமா?”

“அப்ப இதுக்கு சீக்கிரமா ஒரு முடிவுகட்டு. இப்படி அடிக்கடி லீவ் போட்டா கம்பெனி வேலைய பார்க்கனும்ல?”

“சரி சரி.. கோவிக்காத.. இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணு.. சண்முகி ஒத்து வரலனா அவ கூடவே அனுப்பிடுறேன். கொஞ்ச நாள் கழிச்சு சமாதானம் பண்ணிக்கலாம்” என்று கூற அதுவே “அவளுக்கும்” சம்மதமாக இருந்தது.

சண்முகியும் கல்யாணியும் வந்து சேர்ந்தனர். சிறிய மருத்துவமனை தான். நான்கைந்து மெத்தைகளில் ஆட்கள் இருக்க நடுவே குரு உறங்கிக் கொண்டிருந்தான். அடிக்கடி அம்மாவை வேறு கேட்டுக் கொண்டே இருந்தான்.

அவனருகே சுப்பிரமணி அமர்ந்திருக்க இருவரும் சென்று நின்றனர். சண்முகியை பார்த்ததும் சுப்பிரமணி எழுந்து நின்றான்.

அவள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை. மகன் காய்ச்சலோடு போராடுவது தான் அவளுக்கு பெரிதாக பட்டது.

“குரு..” என்று அருகே சென்று அழைத்தாள்.

அவன் விழிக்கவில்லை.

“குரு அம்மா வந்துருக்கேன் பாரு.. கண்ண திறடா..” என்று அழைக்கும் போதே கண்கள் கலங்கியது.

குரு தூக்கத்தோடு தாயை பார்த்தான்.

“ம்மா.. வந்துட்டியா?” என்று கேட்டதும் உடனே அவனை தட்டிக் கொடுத்து அருகே அமர்ந்து கொண்டாள். கல்யாணி எதுவும் பேசவில்லை. மருமகன் மீது எல்லையில்லா கோபம் இருந்தது. வாயைத்திறந்தால் வாங்கிக் கட்டுவான் என்று வாயை மூடிக் கொண்டு அருகே நின்றிருந்தார்.

“அம்மா வந்துட்டேன். தூங்கு.. காய்ச்சல் சரியாகிடும்” என்றதும் குரு மீண்டும் தூங்கி விட்டான்.

“சண்முகி..” என்று சுப்பிரமணி அழைக்க “ம்மா.. அவன வெளிய போகச் சொல்லு” என்றாள் கோபமாக.

“நான் பேசுறத கேட்காம அடம்பிடிக்காத” என்று அவன் அப்போதும் பேச, “சிஸ்டர்” என்று அழைத்தாள் சண்முகி.

அங்கே இருந்த நர்ஸ் வேகமாக வந்தாள்.

“சிஸ்டர் இவன வெளிய போகச் சொல்லுங்க” என்க நர்ஸ் புரியாமல் பார்த்தாள்.

“இவரு தான பையனோட அப்பா?”

“ஆமா.. ஆனா அவன் இங்க இருக்க வேணாம் போகச் சொல்லுங்க”

நர்ஸ் என்ன செய்வது என்று புரியாமல் யோசித்தாள்.

“ச…”

“போடா வெளிய.. போய் உன் வப்பாட்டிய கொஞ்சு.. அவள பார்த்துட்டு இருந்து என் புள்ளைக்கு காய்ச்சல் வர வச்சுட்டல.. ரெண்டு நாள் தான் விட்டுட்டு போனேன். இப்படி பெட்ல கொண்டு வந்து போட்ட.. போடா உன் வப்பாட்டி கிட்டயே போ” என்று சண்முகி வெடித்தாள்.

அவளது குரல் அருகே இருந்த அத்தனை பேருக்குமே கேட்டு விட எல்லோருமே அவனை திரும்பிப் பார்த்தனர்.

நர்ஸ் அவனை பார்த்த பார்வையில் அருவெறுப்பு தெரிந்தது.

“சொல்லுறாங்கள்ள? பேஷண்ட் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. வெளிய போங்க” என்று நர்ஸும் சொல்லி விட அனைவரின் பார்வையையும் தாங்க முடியாமல் உடனே அங்கிருந்து சென்று விட்டான்.

கல்யாணி மகளை அதட்டினார்.

“ஏன்டி நம்ம வீட்டு விசயத்த இப்படி ஊர்ல தம்பட்டம் அடிக்கிற?”

“அவன் ஊரறிய தப்பு பண்ணும் போது போகாத மானம் இப்ப போக போகுதா? போமா.. அவனலாம் நடு ரோட்டுல வச்சு அசிங்க படுத்தனும். விட்டேனேனு சந்தோசப்பட சொல்லு. ரெண்டு நாள்ல என் புள்ளைய எப்படியாக்கிட்டான்.. படுபாவி.. இவனும் அவளும் நாசமா தான் போவானுங்க”

பேசிக் கொண்டே இருந்தவள் மகனை நினைத்து கலங்கினாள். சிவாவும் பாண்டியனும் அழைத்து நலம் விசாரித்தனர். பிறகு குரு எழும் வரை அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அவன் எழுந்ததும் தாயை தான் தேடினான்.

“ம்மா.. எங்கமா போன?” என்று கேட்டு தாயை கட்டிக் கொண்டான்.

தொடரும்‌.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்