Loading

அத்தியாயம் 14

 

ஏஎஸ்ஐ ஆவணக்காப்பு மையம்…

 

யுகேந்திரன் கூறியதைக் கேட்ட சுடரொளி அவனது கரத்திலிருந்த சாவியைக் கூர்ந்து பார்த்து, “இது அதுல… இது இங்க இருக்குன்னா, அப்போ சரஸ்வதி மஹால் லைப்ரரில என்ன இருக்கும்?” என்று குழம்பினாள்.

 

“முதல்ல இங்க என்ன இருக்குன்னு தெரிஞ்சுப்போம்.” என்றவன் நடந்து கொண்டே இருக்க, “சாவி கிடைச்சது ஓகே… நீங்க எங்க நடந்துட்டே இருக்கீங்க?” என்று அவள் வினவ, “ரெஸ்டிரக்டட் ஏரியாக்கு.” என்றவன், இடது புறம் திரும்ப, அங்கு அவன் தேடி வந்த இடம் இருந்தது.

 

அதை ஆச்சரியமாகப் பார்த்த சுடரொளி, “இது இங்க இருக்குதுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று அதிர்ச்சி விலகாமலேயே கேட்க, “நேத்து நைட் எல்லாம் இந்த வேலைதான்!” என்றவன், வெளியே இருந்த காவலாளியிடம் இருந்து எடுத்த அடையாள அட்டைக் கொண்டு கதவைத் திறந்தான்.

 

“போலீஸ்கார், இதை எப்போ ஆட்டயப் போட்டீங்க?” என்று திகைப்பு மாறாமல் அவள் கேட்க, “அவனோட மைண்டை கண்ட்ரோல் பண்ண கேப்புலதான்.” என்றவன், கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

 

“ஹ்ம்ம், பார்க்குறது போலீஸ் வேலை, பண்றதெல்லாம் திருட்டு. செம போங்க.” என்றவள் அவனைப் பின்தொடர்ந்தாள்.

 

“‘களவும் கற்று மற’ – கேள்விப்பட்டதில்ல?” என்று அவளிடம் பேசிக் கொண்டே அந்த இடத்தை ஆராய்ந்தான் அவன்.

 

பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தில், அவனிற்குத் தேவையான ரகசியத்தை தேட, “இது ஏன் இவ்ளோ இருட்டா இருக்கு? ஏதோ வேம்பயரோட ஹைட்டவுட்டுக்கு வந்த மாதிரியே இருக்கு.” என்று அவளின் கருத்தைப் பதிவு செய்தாள் சுடரொளி.

 

அதற்கு எந்த மறுமொழியும் கூறாத யுகேந்திரன், மீண்டும் தேடுதலில் இறங்கினான்.

 

சில நிமிடங்கள் கழிய, ஒருவழியாக அவனிடம் கிடைத்த சாவிக்கான துவாரத்தை கண்டுபிடித்தும் விட்டான்.

 

அந்த அறையின் இறுதியில் இருக்கும் பழைய இழுப்பறை அது!

 

அதை அவன் திறக்க, பழைய காகிதங்களின் மணம் அந்த இடத்தை மெல்ல ஆக்கிரமிக்கத் துவங்கியது.

 

அந்த இழுப்பறைக்குள் பல கோப்புகள் இருக்க, யுகேந்திரன் ஒவ்வொன்றாக அதைப் பார்க்க ஆரம்பித்தான்.

 

அங்கு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த சுடரொளி, “இதை இங்க வச்சே படிக்கணுமா என்ன? எடுத்துட்டு வாங்க போயிடுவோம்.” என்று கூற, “அதுக்குப் பேர் திருட்டு!” என்றான் யுகேந்திரன்.

 

“க்கும், இதுவரைக்கும் எதையும் திருடல நீங்க, அப்படித்தான?” என்று குறைப்பட்டவள், தானும் அந்தக் கோப்புகளை பார்வையிட ஆரம்பித்தாள்.

 

அங்கு பூம்புகாரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிக்கான ஒப்புதல் கடிதங்கள், அதில் கிடைக்கப்பெற்ற பொருட்களின் பதிவுகள், அகழ்வாராய்ச்சியை நிறுத்துவதற்கான அரசாணை ஆகியன இருந்தன.

 

அவற்றுள் யுகேந்திரனின் கவனத்தை ஈர்த்தது ஒரு புகைப்படம்.

 

அந்தப் புகைப்படத்தில் இருந்தது, ஆராவமுதன் கையில் இரு பெட்டிகளை வைத்திருக்கும் காட்சி. அவரைச் சுற்றி இன்னும் சிலர் இருந்தனர்.

 

அதைத் தன் அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டான் யுகேந்திரன்.

 

அப்போது சுடரொளியோ, “பார்ட்னர், இங்க பாருங்க… இது ஏதோ மர்டர் இன்வெஸ்டிகேஷன் ஃபைல்ஸ் மாதிரி இருக்கு.” என்று அவளிடம் இருந்த கோப்புகளைக் காட்ட, அதை வாங்கிப் பார்த்தவன், “கரிகாலன் சார் சொன்ன கேஸ் இதுதான் போல. இந்த டீம்ல இருந்த பலர் இறந்து போயிருக்காங்க.” என்றவனின் பார்வை, அவன் அலைபேசியில் எடுத்த புகைப்படத்தில் பதிந்தது.

 

அப்போது அவனின் அலைபேசி ஒலியெழுப்பியது. அழைத்தது அவனின் உயரதிகாரி!

 

புருவச் சுழிப்புடன் அவன் அழைப்பை ஏற்க, மறுமுனையில் பேசியவரோ, “யுகேந்திரன், நீங்க இப்போ எதுக்கு அந்தக் கோல்டு கேஸை விசாரிச்சுட்டு இருக்கீங்க? ஏஎஸ்ஐல உங்களுக்கு என்ன வேலை? அதுவும் என்கிட்ட கூட சொல்லாம போயிருக்கீங்க… அங்க இருக்க செக்யூரிட்டி கால் பண்ணி சொல்றான்.” என்று கூற, ‘இது எப்படி இவருக்குத் தெரிஞ்சது? அந்த செக்யூரிட்டி மைண்ட்டை கண்ட்ரோல் பண்ணதுல எதுவும் மிஸ்டேக்கா? பவர் கொஞ்ச நேரம்தான் வேலை செய்யுமோ?’ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன்.

 

பின்னரே, அழைப்பில் அவர் காத்திருப்பதை உணர்ந்தவன், “சாரி சார்.” என்று கூற, “உடனே, அங்க இருந்து கிளம்பி வாங்க.” என்று அழைப்பைத் துண்டித்தார் அவர்.

 

அதே சமயம், வெளியே ஏதோ சத்தம் கேட்க, “சுடர், நீ மறைஞ்சுக்கோ.” என்றவன், கொலைகளிற்கான விசாரணை சம்பந்தப்பட்ட கோப்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினான், உடன் மறைந்து கொண்ட சுடரொளியையும் அழைத்துக் கொண்டு.

 

“போலீஸ்கார், எனக்கொரு டவுட். நீங்க என்னமோ இது ஹைலி செக்யூர்ட் இடம்னு சொன்னீங்க… இங்கப் பார்த்தா, ஒரே ஒரு செக்யூரிட்டிதான் இருந்தாரு.” என்று முக்கியமான சந்தேகத்தை நேரம் தாழ்ந்து அவள் கேட்க, “வெளிய சத்தம் கேட்கலை? நமக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. வா போவோம்.” என்றான் சுற்றுப்புறத்தை அலசியபடி.

 

அப்போது தூரத்திலிருந்த கதவு திறக்கப்பட, அங்கிருந்த இருளை கிழித்துக் கொண்டு சன்னமாக ஊடுருவியது வெளிச்சம்.

 

அது என்ன என்று பார்க்கும் சமயம், அவனிடமிருந்த நீல நிறக்கல் மிகுதியான வெளிச்சத்தை வெளியிட ஆரம்பித்தது. அத்துடன் சட்டென்று தலைக்குள் இனம்புரியாத வலியும் உருவானது.

 

அவனிற்கு மட்டுமல்ல, அருகிலிருந்த சுடரொளியும் வலியால் துடிக்க ஆரம்பித்தாள். அவளின் மறையும் சக்தியிலும் ஏதோ தடுமாற்றம் ஏற்பட்டது. அவளிடமிருந்த கருநீலக் கல்லும் ஒளிர ஆரம்பித்தது.

 

அப்போது, இருளை விலக்கிய ஒளியின் மத்தியில் இருள் நிழலாக உருவம் ஒன்று தென்பட்டது.

 

அந்த உருவம் தங்களை நோக்கி வர வர, வலி அதிகரிப்பதை உணர்ந்த யுகேந்திரன், அங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று தலைவலியுடனே தேட ஆரம்பித்தவன், அருகிலிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான்.

 

அங்கு திரைசீலை மறைத்த கண்ணாடி ஜன்னல் ஒன்று தென்பட, சுடரொளியையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றவன், தங்களை நெருங்கும் உருவத்தை ஒரு கணம் ஊன்றிப் பார்த்து, மறுகணம் கைக்கு அகப்பட்ட பெரிய பொருளைக் கொண்டு கண்ணாடியை உடைக்க ஆரம்பித்தான்.

 

அப்போது வெளியே பலரின் காலடிச் சத்தம் கேட்டது. அதில், கண்ணாடியை உடைக்கும் முயற்சியைத் தீவிரமாக்கினான்.

 

சற்று நிதானத்திற்கு வந்த சுடரொளி, வெளியே சென்று பார்க்க, அங்கு கிட்டத்தட்ட பத்து நபர்கள் துப்பாக்கி ஏந்தியபடி வந்து கொண்டிருந்ததைக் கண்டு பதற்றத்துடன் யுகேந்திரனிடம் கூற, அவனோ அவனது முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.

 

சுடரொளியோ தன்னால் மறைய முடிகிறதா என்று முயற்சித்துப் பார்த்து, அதில் தோல்வியுற்ற கோபத்தில் கத்த, “இங்க உன் பவர் யூஸாகாது. அதை விட்டுட்டு எனக்கு ஹெல்ப் பண்ணு.” என்றான் அவன்.

 

இப்போது சுடரொளியும் சேர்ந்து கொள்ள, கண்ணாடி லேசாக விரிசல் விட ஆரம்பித்தது. அது முழுதாக உடையப் போகும் சமயம், அங்கு வந்து சேர்ந்தனர் துப்பாக்கி ஏந்தியவர்கள்.

 

அவர்களைக் கண்ட யுகேந்திரனிற்கு, அவர்களிடம் ஏதோ சரியில்லை என்பது மட்டும் தெரிந்தது. அது என்னவென்று யோசிக்கும் அளவிற்கு அவன் தெளிவாக இல்லாததால், அந்த முயற்சியில் இறங்காமல், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் இறங்கினான்.

 

முதலில் சுடரொளியை ஜன்னல் வழியே வெளியே போகச் சொன்னவன், அங்கிருந்தவர்களைப் பார்க்க, அவர்களோ எதுவும் செய்யாமல் அமைதியாக நின்றனர்.

 

எல்லாம், சுடரொளி அங்கிருந்து செல்ல எண்ணி ஜன்னல் விளிம்பில் ஏறி நிற்கும் வரைதான்!

 

அவள் ஏறிய நொடி, இருவரையும் நோக்கி துப்பாக்கியை நீட்டினர். அதில், சுடரொளி யுகேந்திரனை பயத்துடன் பார்க்க, “கோ ஆன்…” என்றான் அவன்.

 

அவள் கீழே குதிக்கும் சமயம், துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்க, திடுக்கிட்டுப் போனவள், யுகேந்திரனை அழைக்க எண்ணி பார்க்க, மறுநொடி அவனும் கீழே விழுந்தான், உடலில் வழியும் குருதியுடன்!

 

*****

 

பூம்புகார் அருங்காட்சியகம்…

 

மேற்பார்வையாளரும் பணியாளரும் பேசியதைக் கேட்ட யாழ்மொழிக்கு அந்த யோசனை உருவாக, வேகமாக கீழே சென்றவள், அந்த மேற்பார்வையாளரை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டாள்.

 

அவர் எதையோ எடுத்துக் கொண்டு அவரின் மகிழுந்தில் செல்வது தெரிந்தது.

 

அதைக் கண்ட யாழ்மொழி பணியாளரை சுட்டிக் காட்டி, “இன்பா, அந்த ஆளை மேல கூப்பிட்டு எதையாவது எக்ஸ்ப்ளெயின் பண்ண சொல்லு. அஞ்சு நிமிஷத்துல, இப்போ வெளிய போனாரே, அவரு திரும்ப வந்து அந்த ஆளுகிட்ட பேசுவாரு. அந்த நேரத்துல, நீ இங்கயிருந்து போயிடு.” என்று அவசரமாகக் கூற, “என்ன சொல்ற? நான் எதுக்கு அவரைக் கூப்பிட்டு பேசணும்? அதுவரை நீ என்ன செய்யப் போற?” என்றான் அவன்.

 

“ம்ச், உனக்கு விளக்கம் குடுக்க இப்போ நேரமில்ல. அவன் எங்கேயோ போறான் பாரு… போ அவனைப் பிடி.” என்று தள்ளி விட்டாள் அவள்.

 

அவளை முறைத்துக் கொண்டே சென்றவன், அந்தப் பணியாளரிடம் பேசுவது தெரிய, ஒரு மர்மச் சிரிப்புடன் அங்கிருந்து நழுவியவள், மேற்பார்வையாளரின் அறைக்குச் சென்றாள்.

 

அவளின் நல்ல நேரமோ என்னவோ, கதவு திறந்தே இருந்தது. உள்ளே சென்றவள், அங்கிருந்த அலமாரிகளைத் திறக்க, அதில் ஒன்றில் மேற்பார்வையாளரின் உடை ஒன்று இருந்தது. கதவை உட்பக்கமாகப் பூட்டிக் கொண்டு, அந்த உடையை மாற்றினாள்.

 

அவளின் உருவத்திற்கு, அந்த உடை தொலதொலவென்று இருந்தது. அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டவள், ஒரு பெருமூச்சுடன், கண்களை மூடி எதையோ சிந்திக்க, அவளின் தோற்றம் மேற்பார்வையாளரைப் போல மாறியது.

 

இப்போது அவளின் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்து, அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு, கதவை மெதுவாகத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டினாள்.

 

அங்கு யாரும் இல்லை. பணியாளரும் இன்பசேகரனுடன் மேலே பேசிக் கொண்டிருப்பதை அறிந்தவள், மெல்ல அடியெடுத்து வைத்து வாசல் வரை சென்று, மீண்டும் உள்ளே நுழைந்தாள்.

 

ஒருமுறை கண்களை மூடி தன்னைத்தானே சமன்படுத்திக் கொண்டவள், அந்தப் பணியாளரின் பெயரைச் சத்தமாக அழைத்தாள்.

 

என்ன, அவளின் குரலிலேயே அழைத்து விட்டாள்!

 

அதில் தலையிலடித்துக் கொண்டவள், தொண்டையை செருமி, கட்டைக் குரலில் மீண்டும் அழைத்தாள்.

 

இம்முறை அவளின் தோற்றத்திற்கு சற்று ஒத்திருந்தது அந்தக் குரல்.

 

அந்த சத்தத்தில் அடித்துப் பிடித்து வந்த அந்தப் பணியாளர், “சார், நீங்க என்ன திரும்பி வந்துருக்கீங்க?” என்றபடி அவளை மேலிருந்து கீழ் வரை பார்க்க, ‘ஹையோ, இவன் கவனிக்க ஆரம்பிச்சுட்டானே!’ என்று அவளின் மனம் எச்சரிக்கை மணியடித்தது.

 

“க்கும், இன்னொரு ஐட்டமும் வேணும். அப்போ மறந்துட்டேன். அதை எடுக்கத்தான் திரும்ப வந்தேன்.” என்று கூறி சமாளித்தாள்.

 

அவனோ வெளியே பார்த்து, “கார்…” என்று இழுக்க, “கொஞ்சம் தள்ளி நிறுத்திட்டு வந்தேன். இது ஒரு கேள்வியா? போ போய், மேல இருக்க அந்தப் பெட்டியை எடுத்துட்டு வா.” என்று கத்தினாள்.

 

“எந்தப் பெட்டி?” என்று சந்தேகமாகக் கேட்டவனிற்கு, அதன் அடையாள எண்ணைக் கூறி அனுப்பி வைத்தவளிற்கு படபடவென்று இருந்தது.

 

ஏதோ ஒரு வேகத்தில் வேடம் தரித்து விட்டவளால், நொடிகள் கடக்க கடக்க அதிகரித்த பதற்றத்தை அடக்கும் வழி தெரியவில்லை.

 

அப்போது மேலிருந்து கீழே வந்த இன்பசேகரன், மேற்பார்வையாளராக நின்று கொண்டிருந்த யாழ்மொழியை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

 

‘அட, இவன் இன்னும் வெளிய போகலையா?’ என்று நினைத்தவள், அவனை வெளியேறுமாறு கண்ஜாடை காட்ட, அதைக் கண்ட இன்பசேகரனோ, ‘இந்த ஆளு எதுக்கு என்னைப் பார்த்து கண்ணடிக்கிறான்?’ என்று குழம்பினான்.

 

அதற்குள் மேலே சென்ற பணியாளர் பெட்டியுடன் வந்துவிட, அதை வாங்கிக் கொண்டவள், “இப்போ எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. சோ, எனக்குக் கால் எதுவும் பண்ணாத.” என்றபடி வெளியேறினாள்.

 

அப்போதும் இன்பசேகரனைப் பார்த்தபடியே சென்றாள்.

 

அவனோ, ‘இந்த இடமே ஒரு மாதிரி இருக்கு… இந்த யாழ் வேற எங்கப் போனான்னு தெரியல.’ என்று எண்ணியவன், அவளின் அலைபேசி எண்ணிற்கு அழைக்க, வெளியே சென்று கொண்டிருந்தவளின் அலைபேசி ஒலியெழுப்பியது.

 

அதில் பதறிய யாழ்மொழி இன்பசேகரனை திரும்பிப் பதற்றத்துடன் பார்த்து விட்டு, அங்கிருந்து ஓட ஆரம்பிக்க, அப்போதுதான் அவனிற்கு அவளின் யோசனை என்னவென்று புரிந்தது.

 

உடனே, அவளைப் பின்தொடர்ந்து அவனும் ஓட, அங்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல் விழித்துக் கொண்டிருந்தது அந்தப் பணியாளரே.

 

அந்த இடத்தை விட்டு வெளியே வந்ததும், தன் உருவத்திற்கு அவள் மாற, “இதை முன்னாடியே சொல்ல வேண்டியதுதான?” என்று மூச்சு வாங்கியபடி கேட்டான் இன்பசேகரன்.

 

“அதுக்கு அப்போ நேரமில்லை. இன்பா, நாம சீக்கிரம் இங்க இருந்து கிளம்புவோம்.” என்று அவள் கூற, அவனும் அதற்கு ஒப்புக்கொண்டு, அவளை அங்கிருந்து அவளின் வீட்டிற்கு அழைத்து வந்தான்.

 

அப்போது, சுடரொளியிடமிருந்து அழைப்பு வர, அதை ஏற்றுப் பேசியவனிற்கு மேலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

 

*****

 

சரஸ்வதி மஹால் நூலகம்…

 

320/G என்று போடப்பட்ட இடத்தில் மென்மொழி கைவைக்க, அதுவோ பட்டென்று உள்ளே சென்றது.

 

பழைய மரத்திலான தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடம் என்பதாலே தொட்டவுடன் உள்ளே சென்று விட்டது என்பதை புரிந்து கொண்டனர் மென்மொழியும் மதுசூதனனும்.

 

உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய, அலைபேசியிலிருந்து கசிந்த வெளிச்சத்தை அதனுள் படற விட்டாள் மென்மொழி.

 

சில வருடங்களாக திறக்கப்படாத இடம் என்பதால் தூசியாக இருந்தது.

 

அந்தத் தூசிக்குள்தான் பல நூற்றாண்டுகளிற்கு முன்னான ரகசியங்கள் மறைந்து இருக்கின்றன என்று அப்போது இருவருக்கும் தெரியாது.

 

அவள் உள்ளே கைவிட்டு பார்க்க, ஒரு பழைய குறிப்பேடும், சில காகித கற்றைகளும் அவள் கரத்தில் சிக்கின.

 

அவற்றை எடுக்க முயற்சிக்கும் போதுதான், மதுசூதனனின் அலைபேசி செய்தி வந்ததன் எதிரொலியாகப் பளிச்சிட்டது.

 

இன்பசேகரனிடமிருந்து வந்த செய்தியைக் கண்ட மதுசூதனன், “மொழி, அங்க ஏதோ பிரச்சனை போல. வா போலாம்.” என்றான்.

 

அதைக் கேட்ட, மென்மொழியும் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டு வேகவேகமாகக் கிளம்பினாள். அவள் எடுத்ததில் ஒரு விரலியும் (பென் டிரைவ்) இருந்ததை அவள் கவனிக்கவில்லை.

 

சில அடி தூரம் நடந்த பிறகே, கையில் எடுத்து வந்த குறிப்பை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று தெரியாமல் அவள் விழிக்க, அதே நேரம் வெளியே ஏதோ சலசலப்பு உண்டானது.

 

என்னவென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்க்க, அங்கு சிலர் கையில் ஆயுதங்களுடன் வந்து கொண்டிருப்பதைக் கண்டு அங்கிருந்த மக்கள் தெறித்து ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.

 

“மொழி, இவங்க நம்மள தேடித்தான் வராங்கன்னு நினைக்கிறேன்.” என்று கூறிய மதுசூதனன், அவளை அழைத்துக் கொண்டு பின்பக்க வழி நோக்கி நடந்தான்.

 

வெளியே துப்பாக்கி சுடும் சத்தம் எல்லாம் கேட்க, உள்ளே இருந்த இருவருக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

 

ஒருவழியாக இருவரும் பின்பக்கக் கதவை நெருங்கும் சமயம், அதைத் திறந்து கொண்டு வந்தனர் அந்த அடியாட்கள்.

 

அவர்களைக் கண்டு இருவரும் ஒருநொடி ஸ்தம்பித்து நின்று விட, அவர்களோ இருவரையும் நோக்கி சரமாரியாகச் சுட்டனர்.

 

நொடிக்குள் நிகழ்விற்கு வந்த மதுசூதனன் அவனின் சக்தி கொண்டு அந்தத் தோட்டாக்களை நிறுத்தியிருந்தான்.

 

அவர்கள் மீண்டும் சுட, மதுசூதனன் அதைத் தடுக்க என்று அந்த இடமே ரணகளமாக இருந்தது.

 

சில நிமிடங்களிற்கு மேல் மதுசூதனனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவனின் கழுத்தோர நரம்புகள் எல்லாம் கருப்பு நிறத்தில் மாறத் துவங்கின. முகமும் வெளிறத் துவங்கியது.

 

அதைக் கண்ட மென்மொழி, “மது…” என்று கத்த, இறுதியாக அவன் உடம்பிலுள்ள சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டியவன், அந்த இரும்புக் கதவையே அந்த ஆட்களின் மீது வீசினான்.

 

அத்துடன் மொத்த சக்தியும் வடிந்ததைப் போல அவன் மயங்கி விழ, மென்மொழி ஓடிச் சென்று அவனைப் பார்த்தாள்.

 

ஆனால், அவனின் இத்தனை முயற்சியும் முழு வெற்றியைப் பெற்றதா என்றால், அதற்கு இல்லை என்றே கூற வேண்டும்.

 

அந்த அடியாட்களில் ஒருவன் மட்டும் அவர்களை நெருங்க, அதை மென்மொழியும் பார்த்து விட்டாள்.

 

என்ன செய்வதென்று தெரியாமல் அவள் குழம்பும் நேரம், அவளைச் சமீபித்தவனின் கவனம், அவள் கரத்தில் வைத்திருந்த குறிப்புகளில் விழ, அதை வேகமாக பின்னே மறைத்துக் கொண்டாள் அவள்.

 

அதைக் கண்டு கொண்டவன் சும்மா விடுவானா என்ன?

 

அவள் தடுக்கத் தடுக்க, குறிப்பேட்டை பிடுங்கும் முயற்சியில் இருந்தான் அவன்.

 

ஒரு கட்டத்திற்கு மேல், கோபப்பட்டவனோ அவளைத் தாக்கும் எண்ணத்தில் ஆயுதத்தை ஓங்க, அதைத் தடுக்கும் விதத்தில் அவளும் அவனது கரத்தைப் பற்றினான்.

 

அடுத்து என்ன நடந்ததென்று அவள் உணரும் முன்னர், எதிரிலிருந்தவன் உயிர் சக்தி மொத்தத்தையும் இழந்ததைப் போல தரையில் விழ, அதனைக் கண்ணிமைக்காமல் திகைப்புடன் பார்த்தாள் மென்மொழி.

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்